Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 4

Advertisement

அத்தியாயம் – 4

ஆயிற்று இன்றோடு ஒரு மாதம், கிணற்றில் போட்ட கல் போலானது மதுஸ்ரீ, எழிலரசன் திருமண விஷயம். இப்போதைக்கு இதை பற்றி பேசவேண்டாம் என்று கந்தவேலு ஒரேடியாய் கூறிவிட, மதுவின் வீட்டில் யாரும் இதை பற்றி பேசவேயில்லை.

அன்று அவளை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து எழிலுக்கு மனம் ஒருநிலையாய் இல்லை.அவன் வாழ்வில் இப்படியெல்லாம் ஒரு சூழல் உருவாகும் என்று கனவு கண்டானா, இல்லையே. மதுஸ்ரீக்கு எப்படி எழிலை புகைப்படத்தில் கண்டதும் பிடித்ததோ, அதுபோலவே அவளை நேரில் கண்டதும் அவனுக்கு பிடித்து போனது.

இதுவரை பார்த்த பெண்களில் யாரும் அவன் மனம் கவரவில்லை. ஒருவேளை இவள் தான் அவனுக்கானவளோ.
பிடித்தம் என்று ஆன பிறகு வேறு எந்த காரணங்களும் எடுபடுமா என்ன?? ஆனாலும் மதுஸ்ரீ வீட்டு பிரச்சனைகள் அவனை ஒரு தடுப்பணை போட்டு வைத்திருந்தது உண்மையே.

“என்ன எழில், ஒருமாசம் ஆச்சு அவங்க வீட்ல இருந்து எந்த தகவலும் வரலையே..” என்றார் வேதாச்சலம் மிகக் கவலையாய்.

பேரனுக்கும் பெண்ணை பிடித்துவிட்ட பிறகு அவர் வேறு பெண் பார்ப்பாரா என்ன??

“ஹ்ம்ம் பார்ப்போம் தாத்தா, கண்டிப்பா நல்லதே நடக்கும். அங்க பார்த்தோம் தானே ஒவ்வொருத்தர் ஒரு மாதிரி, எல்லாரையும் சரி செய்யணுமே. அதுக்கு நாள் ஆகும். சிலநேரம் இப்படி ரொம்ப சொந்தமில்லாம இருக்கிறது கூட நல்லது தான் போல, நம்ம முடிவை நம்ம எடுக்கலாம்...” என்று லேசாய் சிரித்தான்.

“அப்படி இல்ல டா.. நாளைக்கு நல்லது கேட்டதுனா, கூட நிக்க நாலு பேரு வேணாமா?? சில நேரம் பிரச்சனை வரும் தான். ஆனா அதுக்காக நம்ம யாரையும் ஒதுக்கிட கூடாது..” என்று பெரியவராய் அறிவுரை கூறிச் சென்றார்.

எழிலரசனுக்கோ ஒருமுறை மதுவை நேரில் கண்டு பேசவேண்டும் போல இருந்தது. மதுவை அவள் வீட்டில் எப்படி நடத்துகிறார்களோ என்று வேறு மனம் கலங்கியது. அத்தனை பேர் இருக்கும் போதே அப்படி பேசினார்கள், இப்பொழுது எப்படியோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இவன் மனம் யோசித்துக்கொண்டே இருக்க. மதுவின் மனமோ நெருப்பில் இட்ட புழுவாய் துடித்தது. முன்பே லட்சுமி ஜாடை மாடையாய் பேசுவாள். இப்பொழுது கேட்கவும் வேண்டாம். இவள் காதுபடவே ஒருநாள்,

“என்னங்க உங்ககிட்ட சிரிச்சு கூட பேச பயமா இருக்கு...” என்று ஸ்ரீதரனிடம் சொல்ல, அவனோ என்ன கதை இது என்பது போல பார்த்தான்.

“ஆமாங்க ஏதாது ஒன்னுனா, கல்யாணம் ஆகாத பொண்ணு வீட்டுல இருக்கா பாத்து நடன்னு உங்கம்மா என்னைய திட்டுறாங்க.. அதுக்காக நான் உங்கட்ட பேசாம இருக்க முடியுமா, இல்ல உங்களை கவனிக்காம இருக்க முடியுமா??” என்று வராத கண்ணீரை வரவழைத்தாள்.

ஆனால் இதை கேட்ட ஸ்ரீதரனுக்கோ மனம் வேறாய் சிந்தித்து.

“உண்மை தான் லட்சுமி, வீட்டில மது இருக்கும்போது நம்ம அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிருக்க கூடாது. இப்போ பார் எவ்வளோ பிரச்சனைன்னு..” என்று வருத்தமாய் சொல்ல, லட்சுமிக்கோ திக்கென்றானது.

“என்ன டா இது, விட்டா விஷயம் வேற மாதிரி போகும் போலவே..” என்றெண்ணியவள், உடனே அழத்தொடங்கிவிட்டாள்.

“ரொம்ப சந்தோசம்ங்க... இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, அப்போ நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுனால தான் உங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆகலன்னு சொல்றீங்களா...???” என்று அவன் நினைக்காத ஒன்றையும் எடுத்துக்கட்டி கூறியவளை விநோதமாய் பார்த்தான் ஸ்ரீதரன்.

சொல்லப்போனால் அவன் லட்சுமியை அப்படி திருமணம் செய்ததே அவள் பாடாய் படுத்தியதால் தான். பேசி பேசியே அவனை ஒருவழி செய்ததால் தான் வீட்டை விட்டு வந்து திருமணம் செய்தான். ஆனாலும் மனதில் ஒரு உறுத்தல் அவனுக்கு இருந்துக்கொண்டே தான் இருந்தது.

அதன் காரணமே, மதுஸ்ரீக்கு தாமதம் ஆனாலும் சரி, நல்ல மாப்பிள்ளை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினான். இத்தனை நாள் வீட்டில் வைத்துவிட்டு சரியாய் நடக்க முடியாதவனுக்கு குடுத்தால் எப்படி என்று அவன் மனம் கேள்வி கேட்க, அதன் பொருட்டே அவன் அப்படி நடந்துக்கொண்டது.

ஆனால் அவன் மனைவியோ பிரச்சனைக்கு வேறு வண்ணம் பூச, எரிச்சல் ஆனது அவனுக்கு.

“ம்ம்ச் லட்சுமி.. நான் என்ன சொல்றேன், நீயென்ன சொல்ற..” என்று எரிந்து விழுந்தான்.

“பாத்தீங்களா, என்னைய நீங்களும் திட்றீங்க.. அப்படி நான் என்னத்தை சொல்லிட்டேன். தங்கச்சி மேல இவ்வளோ பாசம் இருக்கிறவரு ஏன் என்னைய காதலிக்கணும்.. சுத்தி வரணும்...” என்று இன்னும் குரலை உயர்த்த,

இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த மதுஸ்ரீக்கோ “ச்சே... ” என்றானது.

பார் பார் உன்னால் தான் எனக்கும் என் கணவனுக்கும் சண்டை என்று கூறாமல் கூறியது லட்சுமியின் பார்வை. உண்மை தான் பாக்கியம் லேசாய் மருமகளை கண்டித்தார் தான்.எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் ஸ்ரீதரன் இருக்கும் நேரம் அவனை ஓட்டிக்கொண்டே இருந்தால், வீட்டில் இருப்பவர் என்ன நினைப்பார்கள்.

“வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, அவளே எவ்வளோ வேலை தான் பாக்குறது. நீயும் கூடமாட கொஞ்சம் ஒத்தாசை செஞ்சா என்ன லட்சுமி. எப்போ பார் அவனையே சுத்திகிட்டு...” என்று லேசாய் முகம் சுளித்தார் தான்.

அதற்கு தான் இத்தனை நாடகமும். இதை சாக்காய் வைத்தே தனியே போக நினைத்திருந்தாள். போதாத குறைக்கு ஒருகடையை வேறு அவன் பார்த்துக்கொள்கிறானே. ஆனால் ஸ்ரீதரன் மனமோ வேறு எண்ணவும், உடனே சுதரித்துவிட்டாள் லட்சுமி.
இந்த மதுவால் தானே பாக்கியம் அவளை திட்டியது, என்று தோன்ற உடனே தங்கள் சண்டைக்கு மதுஸ்ரீயை காரணம் ஆக்கினாள்.

“ஏய் லட்சுமி என்ன பேசுற.. வீட்ல பொறுப்பா இருக்க பழகு.. இன்னும் நீ ஒன்னும் சின்னபுள்ள இல்ல...” என்று மனைவியை கடிந்தவன் வேகமாய் எழுந்தும் சென்றுவிட்டான்.

“பாருங்கண்ணி, உங்க அண்ணனுக்கு உங்களை நினைச்சு ரொம்ப வருத்தம்.. சாப்பிடாம கூட போறார். என் முகத்தை பார்த்து சந்தோசமா சிரிச்சு கூட பேசுறது இல்லை...” என்று சொல்பவளை பார்த்து,

நன்றாய் கேட்கவேண்டும் போல் வந்தது. ஆனால் மதுஸ்ரீ வாய் திறவாமல் இருக்கும் போதே வீட்டில் இத்தனை களேபரம். இதில் அவளும் பதிலுக்கு பதில் பேசினால் அவ்வளோதான் முடிந்தது கதை.

மாமியாரும், நாத்தனாரும் சேர்ந்து கொடுமை செய்கிறார்கள் என்று ஊரு முழுவதும் கூட சொல்லிவிடுவாள் லட்சுமி. இவளை போய் எப்படித்தான் அண்ணன் காதலித்து கல்யாணம் செய்தானோ என்று இருந்தது மதுஸ்ரீக்கு.

லட்சுமி அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க, மதுவோ காதே கேட்காதது போல வேலை செய்துக்கொண்டிருந்தாள். பாக்கியதிற்கோ மகளிடம் என்ன சொல்வது என்ன கேட்பது என்றே தெரியவில்லை.

அந்த நேரத்துக் குழப்பத்தில் மதுஸ்ரீ அப்படியெல்லாம் பேசிவிட்டாள் என்றே நினைத்தனர் பாக்கியமும், கந்தவேலுவும். சிறிது நாள் விஷயத்தை ஆறப்போட்டால் அனைத்தும் சரியாகும் என்று எண்ணி இத்தனை நாள் காத்திருக்க, கந்தவேலுவோ மகளிடம் பேசும்படி கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

“மது உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றபடி பாக்கியம் மகளிடம் அமர,

“ம்ம் என்னம்மா...” என்றாள் பார்வையை திருப்பாமல்.

“இல்ல டி இத்தனை நாள் ஆச்சு.. நாங்களும் உன் மனசு சரியாகட்டும்னு இருந்தோம்...” என்று இழுக்க,

“ஏன் என் மனசுக்கு என்னாச்சு மா.. நான் நல்லாதான இருக்கேன்..” என்றாள் பட்டென்று.

“அப்.. அப்போ அப்பாவ இன்னிக்கே தரகர் கிட்ட பேச சொல்லட்டுமா டி...”

பாக்கியத்தின் முகத்தில் தெரிந்த மகிழ்வான உணர்வு அவளுக்கு வருத்தம் கொடுத்தாலும், தன் மனதை மாற்றும் எண்ணத்தில் மதுஸ்ரீ இல்லை.ஏனோ அவளுள் இப்படி ஒரு பிடிவாதம்.

ஒருவரை மனதார பிடித்துவிட்டால் இப்படியான பிடிவாதமும் சொந்தமாகுமா என்ன??

ஆம் என்றது மதுவின் மனது.

“ம்மா.. நான் தான் அன்னிக்கே தெளிவா சொல்லிட்டேனே.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அவர் கூட மட்டும் தான். இது நானா தேடி போனது இல்லை. நீங்களா கொண்டு வந்தது தான். எனக்கு பிடிச்சது தான் தப்புனா, அப்புறம் எந்த மாதிரி வாழ்கை மா எனக்கு அமைச்சு குடுக்கணும்னு இவ்வளோ வருசமா நினைக்கிறீங்க..???”

மகளது இக்கேள்விக்கு பாக்கியத்தினால் எந்த ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லை. அவள் கூறுவதில் தவறுதல் இருந்தால் தானே மறுத்தோ எதிர்த்தோ பேசிட முடியும். ஆனால் மதுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையானது ஆகிற்றே.

திகைத்து போய் மதுஸ்ரீ முகம் பார்த்தார் பாக்கியம்.

“என்.. என்ன டி.. நீ அன்னிக்கு இருந்த சூழ்நிலைல அப்படி பேசுறன்னு நாங்க நினைச்சோம். ஆனா...”

“நீங்களா அப்படி நினைச்சா நான் என்னமா பண்றது?? ம்மா நினைச்சு பாருங்க, நீங்க பார்த்த எல்லா மாப்பிளைக்கும் நான் சரின்னு தானே சொன்னேன். இவரும் நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே. ஆனா எல்லாரையும் விட எனக்கு இவரை பிடிச்சிருக்கே மா. எதோ லேசா சாஞ்சு நடக்குறார். அது கூட சரியாகிடும்னு தானே சொல்றாங்க...”

“அதெல்லாம் சரி டி, ஆனா இத்தனை வருஷம் வீட்டில வச்சிருந்துட்டு, இப்படி குடுத்தா நாளைக்கு ஊரு உலகம் என்ன பேசும் தெரியுமா???” என்று கலக்கமாய் கேட்ட அன்னையை திடமாய் பார்த்தாள் மதுஸ்ரீ.

“ஊரு உலகத்தை எல்லாம் தூக்கி போடு மா. நம்ம நல்லா இருந்தாலும் பேசும் இல்லைனாலும் பேசும். நீங்க எல்லாம் என் நல்லதுக்கு தான் சொல்றீங்கனு எனக்கும் தெரியும் ஆனா இதை கொஞ்சம் நினைச்சு பாருங்க, இத்தனை வருஷம் ஆனாலும் எங்க பொண்ணுக்கு மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை அமைச்சு கொடுத்தோம்னு நினைங்களேன்....” என்றாள் அவளுமே கெஞ்சலாய்.

பிள்ளைகள் மிஞ்சினால் கண்டிக்கலாம், கெஞ்சினால்?? பெற்ற உள்ளம் உருகத்தானே செய்யும்.ஆனாலும் இது பாக்கியம் மட்டும் எடுக்கும் முடிவல்லவே. கந்தவேலுவே இதற்கு சம்மதித்தாலும், மணிகண்டனும், ஸ்ரீதரனும் இதற்கு ஒப்பமாட்டார்களே.
இரு பெண்களின் உள்ளமுமே கலங்கித்தான் போனது.

இதற்கிடையில் ஒருநாள் கந்தவேலுவை எழிலரசன் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பை அவனாகவே ஏற்படுத்திக்கொண்டான்.

ஆனாலும் வெளியில் காட்டாமல் எதார்ச்சையாய் பார்ப்பது போல பார்த்து, “ஹலோ சார், எப்படி இருக்கீங்க??” என்று தன்மையாய் கேட்டவனை ஒருநொடி வியந்து தான் பார்த்தார் பெண்ணை பெற்றவர்.

“ஆ...நா... நான் நல்லா இருக்கேன் தம்பி.. நீ,.. நீங்க எங்க இவ்வளோ தூரம்...??” என்று திக்கி திணறியவரை,

“அட என்ன சார் நீங்க, என்னை பார்த்தா அவ்வளோ கொடூரமாவா இருக்கு?? இவ்வளோ டென்சன் ஆகுறீங்க?? சாதாரணமா பேசலாமே. நமக்கு என்ன தனிப்பட்ட விரோதம் இருக்கா ?? இல்லை பங்காளி பகையா??” என்று மெல்ல பேசியே சமநிலைக்கு கொண்டு வந்தான்.

எழிலின் பேச்சும், அவனது அணுகுமுறையும் அவருக்கு பிடித்துத்தான் போனது. ஆனாலும் சூழ்நிலை அல்லவா அவரை கட்டிப்போட்டு இருக்கிறது.

“எங்க ஹோட்டலுக்கு சரக்கு சப்பளை பண்றவரு கொஞ்சம் சரியில்ல, தரமில்லாத சாமான் எல்லாம் போட்டு போயிடுறார். அதான் வேற ஆள் பாக்கணும். நானுமே பொறுப்பேத்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. தாத்தானால முன்ன மாதிரி அலைய முடியலை. அதான் உங்க உதவிக்கேட்டு வந்திருக்கேன்..”

“அட என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க, முதல்ல உள்ள வாங்க.. டேய் குமாரு அந்த சேர எடுத்து போடு.. உக்காருங்க...” என்று தங்கள் கடைக்குள் அவனை அமர வைத்தவர், மேற்கொண்டு தொழில் விஷயம் பேசம் நேரம் போனது தெரியவில்லை.
இந்த கொஞ்ச நேரத்தில் கந்தவேலுவின் மனதிலும் இடம் பிடித்துவிட்டான் எழிலரசன்.

இதுதான் அவனது இயல்பு. தேவையில்லாத கவர்ச்சி பேச்சுக்கள் அவனிடம் இருக்காது. முடியும் என்றால் முடியும். முடியாது என்றால் முடியாது. மதுவின் விசயத்தில் முடியும் என்றே அவன் மனம் கூறியது. ஆகையால் தான் அன்று அவளுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை கூறிவிட்டு வந்தான்.

எதுவுமே உடனே கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு தெரியாது. இதேது இவர்களது திருமணம் சாதாரண திருமணம் போல் நடந்திருந்தால் வாழ்வில் அத்தனை சுவாரசியம் இருந்திருக்காதோ என்றே தோன்றியது அவனக்கு.

ஆனால் இப்போதோ, ஒவ்வொரு நொடியும், நிமிடமும் ஒருவர் மனதில் மற்றவர் எண்ணம் தான். பேசுவோமா?? பார்ப்போமா?? ஒன்று சேர்வோமா?? என்ற தவிப்பு, இந்த தவிப்பே அவர்களது காத்திருப்பிற்கு ஒரு சுவையை தந்தது.

தானாய் கனியுமென்று காத்திருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றெண்ணி தான் இன்று எழிலரசன் மதுவின் தந்தையை காண வந்திருப்பது.

வந்த வேலை முடிந்தது போல பேசிவிட்டு “அப்போ சரிங்க சார் நான் கிளம்பறேன்..” என்று அவன் எழ, அவருக்கோ மனதில் ஏமாற்றமாய் தோன்றியது.

ஒருவேளை நிஜமாகவே எழிலரசன் மனதில் எதுவும் இல்லையோ. அப்படியானால் மது தான் மனதில் தேவையில்லாத நினைப்பில் இருக்கிறாளா ?? என்றெல்லாம் அந்த தந்தையின் உள்ளம் நொடியில் சுனங்கிப்போனது.

அவரின் உள்ளத்தை சரியாய் யூகித்தவன், மெல்ல நிதானித்து, “அப்புறம் சார் மது விசயத்துல என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??? ” என்று கேட்டான்.

கேட்கமாட்டானா என்று எதிர்பார்த்த அவர் மனம், அவன் கேட்ட பிறகோ ஐயோ ஏன் கேட்டான், இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று மருகியது.

இது மனித மனதின் வழக்கம் தானே.

“அது... வீட்ல இன்னும் பிரச்சனை ஒன்னும் சரியான மாதிரி இல்லை.. அதான்...”

“ஹ்ம்ம் ஒன்னும் கவலை படாதீங்க. எல்லாம் சரியாகும். உங்க அனுபவத்துக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்லை. ஆனா வாழ போறது மது. சோ கொஞ்சம் அவங்க உணர்வுக்கும் மதிப்பு குடுங்க. பொண்ணுங்க மனசுக்கு மதிப்பு குடுத்தா நம்ம குறைஞ்சிட மாட்டோம் சார். என்னிக்கா இருந்தாலும் மது தான் எங்க வீட்டுக்கு மருமகள்.... நல்ல சேதி சொல்லுங்க..” என்று அவர் கரங்களை நம்பிக்கையாய் அழுத்திவிட்டு போனவனை இமைக்காமல் பார்த்தார் கந்தவேலு.

இப்படியான ஒரு மாப்பிள்ளை அவர் எங்கு தேடினாலும் கிடைக்காதே. ஆனாலும் கைக்கு எட்டியது சொந்தமாகவில்லையே.. எந்த ஒரு முடிவையும் திடமாய் அவரால் எடுக்க முடியவில்லை. ஒருப்பக்கம் மகன், இன்னொரு பக்கம் மருமகன்.
ஆனால் கண் முன்னே இருப்பது அவரது மகளின் வாழ்க்கை அல்லவா.

“கடவுளே ஒரு நல்ல வழியை காட்டப்பா...” என்று வேண்டிக்கொண்டார்.

எழிலரசனுக்கு கந்தவேலுவை சந்தித்துவிட்டு வந்த பிறகு மனதில் ஒரு சிறு நம்பிக்கை பிறந்தது. தான் பேசியதற்கு அவரொன்றும் எதிர்த்து பேசவில்லையே. அவருக்கும் இதில் சம்மதம் இருப்பது போலவே தெரிந்தது. ஆனாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் சுற்றி நின்று தாக்கினால் பாவம் அவரும் தான் என்ன செய்வார் என்று எண்ணினான்.

ஆனாலும் அவனது மனம் மதுவை காண ஏங்கியது. அவளது போன் நம்பர் கூட தெரியவில்லை என்று தன்னை தானே திட்டிக்கொண்டான். எப்படி பார்ப்பது?? நேராக வீட்டிற்கே போனால் என்ன?? நிச்சயம் விரட்டி எல்லாம் விட மாட்டார்கள், ஆனாலும் தேவையில்லாத பேச்சு வரும். பார்ப்போம் அதற்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்தான்.அந்த சந்தர்ப்பமும் வந்தது.

வேதாச்சலத்திற்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட மருத்துவமனையில் சேர்த்திருந்தான். ஒருவனாய் கிடந்தது மருத்துவமனைக்கும், வீட்டிற்கும், ஹோட்டலுக்கும் அல்லாட அத்தனை கஷ்டமாய் இருந்தது. அவனது கால் வேறு அவ்வப்போது வலி குடுக்க மனதளவில் நொந்து போனான் எழிலரசன்.

இதேது வீட்டில் ஒரு பெண் இருந்தால், எத்தனை உறுதுணையாய் உதவியாய் இருந்திருக்கும். அவனுக்கு இருக்கும் ஒரே உறவும் அவனை விட்டு போய்விடுமோ என்று பயம் வேறு ஏற்பட அவனது மனமோ மதுஸ்ரீயின் அருகாமைக்கு ஏங்கியது.

“மது சீக்கிரம் வந்துடேன்.. என்னால தனியா எதையும் சமாளிக்க முடியல...” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

அவன் கூறியது மதுவிற்கு கெட்டுவிட்டதோ என்னவோ, அவளும் அதே மருத்துவமனைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
சோபனாவின் பிள்ளைக்கு காய்ச்சல், மருத்துவமனைக்கு உடன் வரவும் யாருமில்லை என்று அவள் அழைக்க, வேறு வழியில்லாமல் மதுஸ்ரீ தான் உடன் வந்தாள். மருத்துவரை பார்த்துவிட்டு வந்துக்கொண்டிருந்தவர்களுக்கு
சோர்ந்து போய், சாய்ந்து, காலை நீட்டி, கண்கள் மூடி இருக்கையில் அமர்ந்திருந்த எழிலரசனே கண்ணில் பட்டான். அவ்வளவு தான் உடன் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் மதுஸ்ரீ நினைக்கவில்லை.

“ஐயோ.. இவருக்கு என்னாச்சு...” என்று கூறியபடி சோபனாவை மறந்து, நேராய் எழிலிடம் சென்று நின்றாள்.

“என்.. என்னாச்சுங்க உங்களுக்கு..” என்று பதற்றமாய் ஒரு பெண் குரல் தன்னருகே கேட்க, அதிர்ந்து கண் விழித்து பார்த்தான் எழிலரசன்.

பார்த்தவனுக்கு முதலில் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. இப்பொழுது தான் மதுவை நினைத்தான், அவளே கண் முன் நிற்கிறாளே. ஆச்சரியமாய் பார்த்துவைத்தான். அவளோ அஞ்சி போய் பார்த்தாள்.

“ம.. மது... நிஜமா நீ தானா.. தேங்க் காட்...” என்று கூறியவனை கேள்வியாய் நோக்கினாள் மதுஸ்ரீ.

“தாத்தாக்கு உடம்பு சரியில்ல. அதான் அட்மிட் பண்ணிருக்கேன்.. இப்.. இப்போதான் நினைச்சேன், நீ கூட இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்னு, பார்த்தா நீயே என் கண் முன்னாடி நிக்கிற மது...” என்றவன் மகிழ்ச்சியில் அவளது கரங்களை பற்றிக்கொண்டான்.

நீங்கள் நீயாகி இருந்தது.
Super
 
Top