Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 6

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 6

“அம்பாள வேண்டிட்டு, தாலி எடுத்து கட்டுங்கோ....” என்று அய்யர் கூறியதும், கோவிலின் மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றி இருந்த சொந்த பந்தமெல்லாம் அட்சதைத் தூவ, எழிலரசன் மதுஸ்ரீயை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான்.

இந்த நாளுக்காக, இந்த தருணத்திற்காக, இப்படியொரு உறவுக்காகத் தானே இருவரும் காத்திருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சியோ, நிம்மதியோ மணமக்கள் முகத்தில் துளியும் இல்லை. எழிலின் முகமோ இறுகி பாறையாய் இருந்தது என்றால், மதுஸ்ரீயின் முகமோ கலக்கமாய் இருந்தது.

ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு நிம்மதி பரவியதை இருவரும் உணர்ந்தாலும் எழிலோ அதை வெளிக்காட்டவில்லை. எப்படியோ இந்த திருமணம் நடந்தேறி விட்டது என்ற நிலையில் அவள் இருக்க, இப்படியா இத்திருமணம் நடக்கவேண்டும் என்றெண்ணியது அவன் மனம்.

இருக்காதாபின்னே, அவனோ அனைத்தையும் நல்ல முறையில், அனைவரின் சம்மதத்தில் திருமணம் நடந்திடவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு படியாய் முன்னேற, இவளோ அனைவரையும் சட்டென்று வேறு வழியே இல்லாமல் இத்திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தாள்.

அவள் பக்கம் பார்த்தால் அது சரி, இவன் பக்கம் பார்த்தால் இது தவறு.

காதலில் சரி, தவறு என்பது ஏது??

அவனை பொறுத்தவரையில் இதது இப்படித்தான் நடக்கவேண்டும். அவளுக்கோ, எப்படி இருந்தால் என்ன முடிவில் நான் எழிலை சென்றடைய வேண்டும் அவ்வளவே.

சுபஸ்ரீயின் மாமியார் வந்து, கந்தவேலுவிடம் பேச, அவரோ கழுவும் மீனில் நழுவும் மீனாய் நழுவினார். பொறுத்து பார்த்த அப்பெண்மணியோ நான் மதுவிடமே நேரடியாய் கேட்கிறேன் என்று இவள் அறைக்கு வரக் கிளம்ப, கூடவே அவளது பெற்றோரும் வர, இவளுக்கு எப்படி இச்சூழலில் இருந்து தப்புவது என்று தெரியவில்லை. நிச்சயம் அப்பெண்மணி பேசியே ஒருவழி செய்துவிடுவார்.அவர் வாய் திறமை அப்படி.

என்ன செய்வது??? என்ன செய்வது?? இது மட்டுமே அவள் மனதில் ஓட, “நீ ஏதாவது செஞ்சு இதுல இருந்து தப்பிச்சுடு..” என்ற சுபஸ்ரீயின் வார்த்தைகள் நினைவில் வந்து ஆட, இவளது மனமும் உடன் சேர்ந்து ஆடியது.

சட்டென்று ஒரு சேலையை எடுத்து மேலே பேனில் போட்டவள், ஒரு ஸ்டூலில் ஏறி வேகமாய் தன் கழுத்தில் முடிச்சிடும் அவ்வேளை கதவு திறக்க, அனைவரும் இவளை பார்க்க, அடுத்த நொடி “மது....” என்ற அலறலில் அவ்வீடே அதிர்ந்தது.
கந்தவேலு வேகமாய் ஓடிச்சென்று மகளை கீழிறக்கினார். இந்த சத்தத்தில் லட்சுமி வந்து என்னவென்று பார்க்க அவளுக்குமே கண்ட காட்சி ஒரு நொடி மனதில் திக்கென்றானது.

வேகமாய் கணவனுக்கு அழைத்து விசயத்தை கூறவும் தவறவில்லை.
சுபஸ்ரீயின் மாமியாரோ இதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, பாக்கியம் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.

“ஐயோ...பாவி மகளே... இப்படியா செய்வ..?? அவ்வளோ துணிச்சல் எங்கயிருந்துடி வந்துச்சு... எங்களை எல்லாம் விட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு...” என்று கண்ணீர் வடிக்க,

அவளோ தான் நினைத்தது செவ்வனே நிறைவேறிய நிம்மதியில் நின்றிருந்தாள். ஆனாலும் அன்னை தந்தையின் கலக்கமான முகங்கள் உள்ளுக்குள்ளே வேதனையைக் குடுத்தது. அவ்வளவே சுபஸ்ரீயின் மாமியார் வந்த இடம் தெரியாமல் திரும்ப, மணிகண்டனுக்கு தான் இதை இப்படியே விட்டுச் செல்வதா என்ற எண்ணம்.

“அம்மா அவ சும்மா நடிக்கிறா... நீங்க மேற்கொண்டு பேசுங்க...”என்று தாயின் காதை கடிக்க,

அவரோ “எதுக்குடா... இப்போவே இப்படி செய்றவ, நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வேணும்னே எதையாவது பண்ணி நம்மள ஜெயிலுக்கு அனுப்பவா... வேணாம்டா சாமி.. இந்த வீட்டுலருந்து ஒருத்தி வந்து என் கழுத்த அறுக்கிறது போதும்...” என்று மகனையும் இழுத்துக்கொண்டே சென்றுவிட்டார்.

கந்தவேலு எதுவுமே பேசவில்லை, ஏன் இப்படி செய்தாய் என்று மகளிடம் கேட்கவில்லை. அமைதியாய் அமர்ந்திருந்தார். ஆனால் இந்த அமைதி ஸ்ரீதரன் வரும் வரை தான்.

“அப்பா என்னப்பா ஆச்சு... லட்சுமி சொல்றதெல்லாம் உண்மையா...??” என்று வேகமாய் வந்தவனுக்கு அவரது இறுகிய முகமே பதிலாய் கிடைக்க, பாக்கியமோ இன்னும் அழுகையை முடித்த பாடில்லை.

லட்சுமிக்கு இதெல்லாம் நல்ல வேடிக்கை. அடுத்தது என்ன என்பது போல பார்த்திருந்தாள். நிச்சயம் இச்சூழலில் வாய் திறந்தால் அவள் கன்னம் பழுக்கும் என்று அவளுக்கு தெரியாதா என்ன??

ஆனால் இது அனைத்திற்கும் காரணகர்த்தாவோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள்.

“மது.. என்ன இது?? ஏன் இப்படி பண்ற?? ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்ன ஆகுறது...” என்று தங்கையிடம் எகிறினான்.
அவனது கோவத்தின் காரணம் அனைவர்க்கும் புரிந்தது. ஏதாவது ஒன்று அனர்த்தமாய் நேர்ந்திருந்தால் என்னாகும் என்ற ஆதங்கத்தில் தான் ஸ்ரீதரன் கத்தினான்.

“ஸ்ரீதரா....”

கந்தவேலுவின் குரல் அழுத்தம் திருத்தாமாய் ஒலிக்க, அக்குரலே கூறியது அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று.

“அப்பா.. எதுனாலும் யோசிச்சு தான் செய்யணும்.. ஆனா மது இப்படி பண்ணது தப்புப்பா.. நம்ம மேல அவளுக்கு நம்பிக்கை இல்லையா என்ன??”

“இல்லடா... மது பண்ணது தப்போ சரியோ ஆனா மதுவ இப்படி செய்ய தூண்டினது நம்மதான்.. அவ தெளிவா தான் இருந்தா ஆனா நம்மதான் கொஞ்சம் கூட அவளை புரிஞ்சுக்கல...”

“நம்ம என்னப்பா பண்ணோம்....??”

“மது மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சும் நம்ம இப்படி அமைதியா இருந்தது முதல் தப்பு.. அடுத்து வாழ போறது அவ, அவளுக்கே பிடிக்காத ஒரு வாழ்கைய கட்டாயமா அமைச்சுக்குடுக்கிறது பெரிய தப்பு....”

“அதுக்கு.. அதுக்கு அந்த....”

“போதும் ஸ்ரீதரா... இதுக்கு மேல நம்ம கையில ஒண்ணுமில்ல.. எழிலோட குறைய விட நிறைகள் ஜாஸ்தி. நான் எழிலோட தாத்தா கிட்ட பேசுறேன்...” என்றவர் வேதாச்சலத்திற்கு அழைத்தார்.

ஸ்ரீதரனுக்கும் உண்மை நிலை புரிய, இதற்கு முழு மனதாய் சம்மதிக்கவும் முடியாமல், ஆனாலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தங்கையை முறைத்தபடி நின்றிருந்தான்.

கந்தவேலு அழைத்து பேசியது தான் தாமதம், வேதாச்சலத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இதற்காகத்தானே காத்திருந்தார். எழில் வீட்டிற்கு வரவும் பேசிவிட்டு சொல்வதாய் சொன்னவருக்கு அவன் எப்போதடா வருவான் என்று இருந்தது.
இதற்கு இடையில் நூறுமுறையாவது மது அவனது எண்ணுக்கு அழைத்து பார்த்துவிட்டாள். உடனே அவனிடம் இதை கூறிட வேண்டும் என்ற ஆவல், உள்ளே தோன்றும் பட படப்பையும், மகிழ்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இறுதியாக அவளது எண்ணம் ஈடேற போகிறது. சந்தோஷத்தில் கண்ணில் நீர் வழிய அன்று முதல் நாள் நிச்சயத்தன்று கண்ணாடி முன்னே அமர்ந்தது போலே இன்றும் சென்று அமர்ந்துகொண்டாள். மனதில் அத்தனை பெரும் நிம்மதி. இதழ்கள் சிரிப்பில் உறைந்திருக்க, இமைகளோ ஆனந்தத்தில் நனைந்துகொண்டு இருந்தது.

“அண்ணி ஒருவழியா நினைச்சத சாதிச்சுட்டீங்க போல....” என்று நக்கலாய் கேட்டபடி வந்தாள் லட்சுமி.

இத்தனை நாள் பொறுத்திருந்த பொறுமை எல்லாம் இன்று தன் சிறைவாசம் முடிந்து விடுதலையானது. பதிலுக்கு நக்கலாய் ஒரு பார்வை பார்த்தபடி,

“பின்ன இருக்காதா லட்சுமி, என்னைய விட சின்ன பொண்ணு, நீயே உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்கைய அமைச்சுக்கிட்ட, அப்போ நான் பண்ண மாட்டேனா..எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்...” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து பேச, அவளது பார்வையும், பேச்சையும் கண்டு லட்சுமி அதிர்ந்து தான் போனாள். நக்கலடிக்க வந்தவள் அமைதியாய் வெளியேற, இவளோ எழிலுக்காய் காத்திருந்தாள்.

ஆனால் அதற்குள்ளே எழிலரசனுக்கு விஷயம் அவனது தாத்தா மூலமாய் தெரியவர, இதயம் மகிழ்ச்சியில் திளைத்தாலும், இதெல்லாம் உண்மைதானா என்றே தோன்றியது.

முதலில் நம்ப முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. அடுத்த நொடி மதுஸ்ரீக்கு தான் அழைத்தான். எப்போதடா அவனோடு பேசுவோம் என்று இருந்தவளுக்கு அவனே அழைக்கவும், மனம் திக்குமுக்காடித்தான் போனது.

என்ன சொல்வது என்று கூட முதலில் தெரியவில்லை அவளுக்கு, ஆனாலும் தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொண்டாள்.
எழிலரசனுக்கோ பொறுமையாய் அவளோடு பேசிட நேரமில்லை. வேதாச்சலம் இப்பொழுதே மதுஸ்ரீ வீட்டிற்கு கிளம்பி நின்றிருந்தார். அவரை அடக்கி வைக்கவே அவனுக்கு பேரும் பாடாய் ஆனது.

“டேய் நேர்ல போய் பேசிக்கலாம். கிளம்பு..” என்று கூறியவருக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்,

“வந்து பேசுகிறேன்..” என்று மட்டும் மதுவிடம் கூறிவிட்டு, “என்ன தாத்தா.. இவ்வளோ அவசரம்.. கொஞ்சமா பொறுமையா இருங்க... ” என்று சமாளித்தான்.

“இதுக்கு மேல என்ன டா பொறுமை... அவங்க மனசு மாருறதுக்குள்ள நம்ம போயி பேசி முடிச்சிட்டு வந்திடலாம்..”

“இப்போதானே தாத்தா நான் வந்தேன்.. கொஞ்சம் பொறுங்க, மது அப்பாகிட்ட என்ன எதுன்னு நான் தெளிவா பேசிக்கிறேன்...” என்று மீண்டும் அமர்ந்தவனை,

“அதெல்லாம் வேணாம்.. இப்போ நேரா ஜோசியர் வீட்டுக்கு போறோம், கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறோம், மது வீட்டுக்கு போறோம் பேசி முடிக்கிறோம்..” என்று அவனை கிளப்பினார்.

“அட என்ன தாத்தா நீங்க....” என்றவனும் மகிழ்வாய் சலித்துக்கொண்டான்.

இத்தனை சீக்கிரத்தில் மதுவின் வீட்டில் சம்மதிப்பர் என்று எழிலரசன் எதிர்பார்க்கவில்லை. மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், எதுவோ நடந்திருக்கிறது என்ற எண்ணமும் சேர்ந்தே இருந்தது.

எதுவாக இருந்தாலும் சரி மதுவிற்கு எவ்வித நோகுதலும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனதுடன் வேதாச்சலத்தோடு கிளம்பிச்சென்றான்.

அங்கே மதுவின் வீட்டிற்கு போனாலோ நிலைமை தலைகீழ். அப்படி ஒரு அமைதி சூழ்ந்திருந்தது. முதலில் ஸ்ரீதரன் தான் பார்த்தது இவர்களை.

வேண்டா வெறுப்பாய் வரவேற்றான்.

எழிலரசன் உள்ளத்தில் எதுவோ நடந்துள்ளது என்ற எண்ணம் இன்னும் ஆழ பதிய, கந்தவேலுவும் கூட லேசாய் இறுகிய முகத்துடனே வரவேற்றார்.பாக்கியத்தின் முகத்திலும் அழுத தடம் இருக்க, அவன் எண்ணம் மேலும் மேலும் வலுப்பெற்றது.

“என்னாச்சு...???” என்று எழில் கேட்க, கந்தவேலுவோ வேறெதுவும் சொல்லாமல்,

“மது மனசை நாங்க இத்தனை நாளா புரிஞ்சுக்காம இருந்தது தப்புன்னு இப்போதான் புரிஞ்சது.. அதான் உங்களை வர சொன்னோம்..” என்று மட்டும் கூற, மேற்கொண்டு திருமணம் பத்தி பெரியவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்க, எழிலுக்கு எந்த விவரமும் தெரியமுடியாமல் போனது.

ஆனாலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்க முடியவில்லை. சரி இவர்கள் பேசட்டும், நாம் மதுவிடம் பேசுவோம் என்றெண்ணி,
“நான் மதுகிட்ட கொஞ்சம் பேசணுமே...” என்று தயங்கி கந்தவேலு முகம் பார்த்தான்.

அவரும் ஒப்புதலாய் தலையசைக்க, ஸ்ரீதரன் பார்வையோ இவனை எரித்தே விடும் போல் இருந்தது. வீட்டிற்கு மாப்பிள்ளையாய் வரப்போகிறவனுக்கு நல்ல மரியாதை என்று எண்ணியவனுக்கு சிரிப்பும் ஒருபுறம் வந்தது. இனி அடுத்த சமாளிப்பு ஸ்ரீதரன் என்று முடிவு செய்துக்கொண்டான்.

ஸ்ரீதரனை ஒரு பார்வை பார்த்தபடியே மதுவோடு சென்றவன், “என்ன மது எப்படி இதெல்லாம்??? எப்படி சம்மதம் சொன்னாங்க...??” என்று மகிழ்வாகவே கேட்க,

அவளுக்கோ அவனைவிட மகிழ்ச்சிக் கும்மாளம் போட்டது. ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடிக்க, கேட்டுக்கொண்டிருந்தவனின் முகமோ பாறையாய் இறுகியது.

“சோ எல்லாரையும் இமோசனல் ப்ளாக் மெயில் பண்ணிருக்க...????” என்று இறுகிய குரலில் கேட்டவனின் பார்வையும், குரலும் அவளுக்கு முற்றிலும் புதிது.

எழிலின் அன்பான வார்த்தைகளை கேட்டிருக்கிறாள் தான். ஆதரவான, நம்பிக்கையான பேச்சை எல்லாம் நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறாள் தான். அவன் காதலாய் பேசும் பொழுது ரசித்திருக்கிறாள் தான். ஆனால் அவனது இந்தக் கோவ முகம் முற்றிலும் புதிது.

ரோஜாவில் இதழ்கள் மட்டும் தான் இருக்குமா ??? முட்களும் இருக்கும் தானே..

அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தால். ஆனால் அவனோ இலகுவதாய் இல்லை.

“சொல்லு மது... ஏன் இப்படி பண்ண???”

“இல்லங்க.. என்.. எனக்கு அந்த சூழ்நிலைல என்ன செய்றதுன்னு தெரியலை.. உங்களுக்கு போன் போட்டேன்.. லைனே கிடைக்கல.. கொஞ்சம் பயந்துட்டேன்.. அதான்..”

“அதுக்கு தூக்குல தொங்க போவியா...????”

“தொங்க எல்லாம் போகல.... சும்மா...” என்று சொல்லி முடிக்கவில்லை அவள் கன்னம் எரிந்தது.
அடித்திருந்தான்..

கன்னத்தில் கை வைத்து, கண்ணீர் துளிகள் மலர்ந்த விழிகளோடு அதிர்ச்சியாய் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“நீ பண்ணது தப்பு...” என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

மதுஸ்ரீக்கோ ஒன்றுமே புரியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு மகிழ்ச்சியில் அழுதது என்ன?? ஆனந்தத்தில், எழிலோடு வாழ போகும் வாழ்வை எண்ணி முகம் சிவந்தது என்ன?? இப்பொழுது அடி வாங்கி சிவந்திருப்பது என்ன??

இது என்ன குணம் இவனுக்கு?? நன்றாய் தானே பேசினான் திடீரென்று ஏன் இப்படி ஆனான். குழப்பத்துடனேயே வெகு நேரம் நின்றிருந்தாள்.

“மது அவங்க கிளம்ப போறாங்க... ” என்று பாக்கியம் அழைத்த பிறகே, “அய்யயோ.. என்ன சொல்லிருக்கானோ...” என்ற பதற்றத்தோடு விரைந்து வந்தாள்.

கந்தவேலுவோ சிரித்த முகமாய் அவர்களை வழியனுப்ப, ஸ்ரீதரன் முகம் கூட சற்று தெளிந்திருந்தது.ஆனால் மறந்தும் கூட எழிலரசன் இவள் முகம் பார்க்கவில்லை.

அப்படி என்ன கோவம் அவனுக்கு ??

பார்ப்பானா ?? போய்வருகிறேன் என்று சொல்வானா ?? சொல்ல கூட வேண்டாம் ஒரு தலையசைப்பு.. இல்லை கண்ணசைவு... ஏதாவது ஒன்றிருக்குமா என்ன ஆவலில் அவன் அடித்ததும் மறந்து அவன் முகத்தை நோக்க, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..
சரி அவன் வீட்டிற்கு சென்றபிறகு பேசலாம் என்று எண்ணினால், இவளது அழைப்பையும் ஏற்கவில்லை, அவனும் அழைக்கவில்லை. ஆனால் திருமண ஏற்பாடுகளோ துரிதமாய் நடந்தது.

எளிமையான முறையில் திருமணம் நடந்தால் போதுமென்று எழில் கூற, கந்தவேலுவுக்கும் கூட அதுவே சரியென பட்டது. எதற்கு ஆட்களை கூட்டி கூட்டம் சேர்த்து, ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாய் பேச, அதுவேறு தேவையில்லாத மனக்கசப்பு என்று எண்ணினார்.

ஆகையால் மிக நெருங்கிய உறவினர்கள், பழகியவர்கள், நண்பர்கள் என்று அளவான ஆட்களோடு அம்பாள் சந்நிதானத்தில் எளிமையாய் திருமணம் நடந்தேறியது.

திருமணம் முடிந்துவிட்டால் எழில் சமாதானம் ஆகிவிடுவான் என்று எண்ணியிருந்த மதுஸ்ரீக்கு ஏமாற்றம் தான். திருமணம் முடிந்து, அவன் மனைவியாய் அவனது வீட்டில் வாழத்தொடங்கிய பின்னரும் கூட எழில் ஒரு குழப்ப முகத்துடனேயே அலைந்துக்கொண்டு இருந்தான்.

மதுவின் பொறுமையும் இதோ போகிறேன், போக போகிறேன், போய் விட்டேன் என்று கூறி பறக்க, இடுப்பில் கை வைத்தபடி அவன் முன்னே போய் நின்றாள்.

“என்னங்க...”

அவள் நின்றிருந்த விதமும், காட்டிய பாவனையும், அவனுக்கு சிரிப்பை தந்தன. தன் மனைவியாய், தனக்கென்று இருக்கும் உற்ற உறவாய் மதுவை அவன் ஏற்றுக்கொண்டாலும், அவள் இப்படி செய்து அனைவரையும் சம்மதிக்க வைத்தது அவனுக்கு பிடிக்கவில்லை.

இது என்ன பழக்கம்?? அந்த கோவம் தான் இப்போது சற்று இருவருக்கும் இடையே ஒரு இடைவெளிக்கு காரணம்.
திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆனது, அவள் கேட்பதற்கு பதில் சொல்வான், அவள் கேட்காததையும் வாங்கி வந்து கொடுப்பான். மறுவீட்டிற்கு சென்று வந்த பொழுது கூட அவன் நன்றாய் இருப்பதாய் தான் தோன்றியது. ஆனால் எல்லாமே ஒரு கோட்டுக்கு அந்த பக்கம் நின்று கொண்டு தான்.

இவனையே கரம் பிடிக்கவேண்டும் என்று பிடிவாதமாய் இருந்து தாலி வங்கிக்கொண்டவளுக்கு இவன் இப்படி செய்தால் எப்படி இருக்கும்??

மனதளவில் முதலில் வருத்தம் தோன்றினாலும், இவன் என் கணவன், இவன் மட்டுமே என் கணவனாய் வரவேண்டும் என்று காத்திருந்து கரம் பிடித்தேன், அதற்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்ய தயார். எழிலுக்காக நான் செய்ததெல்லாம் சரிதான் என்ற மனோபாவத்தில் அவள் இருந்தாள்.

அவளுக்கு அவள் நியாயம், அவனுக்கு அவனது..

“சொல்லுங்க...” என்றான் அவளை போலவே..

“ம்ம்ச் ஏன் இப்படி இருக்கீங்க....???!!!” என்றால் லேசான சலிப்புடன்..

“எப்படியிருக்கேன்...??”

இப்படித்தான் ஒரு வார்த்தையில் பேச்சை முடிப்பான்.. இல்லை பதிலுக்கு கேள்வி கேட்பான்..

“அப்படி நான் என்ன செய்ய கூடாத தப்பு பண்ணிட்டேன். எனக்கு நிஜமாவே அந்த நேரத்துல எப்படி இதுல இருந்து தப்பிக்கன்னு தெரியல, அதான் அப்படி...” என்றால் பாவமாய்.

அவளும் தான் என்ன செய்வாள்.

ஆனால் எழிலின் இந்த கோவத்துக்கு காரணமும் இருந்தது.
 
Top