Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 7

eanandhi

Well-known member
Member
அத்தியாயம்- 7

அதிகாலை காலை பொழுதே அழகு தான், இன்னும் அழகாய் புலர்ந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் எழிலரசனுக்கு இன்னும் ரம்யமாய் விடிந்தது அவன் மனைவியோடு.

மதுஸ்ரீ என்னவோ அழ்ந்த உறக்கத்தில் இருக்க, கண்ணிமைக்காமல் அவளை ரசித்து அமர்ந்திருந்தான் எழிலரசன். என்ன தான் மனைவி மீது கோவமிருந்தாலும், அவனது ரசிக மனம் அதை கேட்குமா என்ன??மதுஸ்ரீ வந்து ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஏனோ மனம் இன்னும் அரித்துக்கொண்டே இருந்தது. சில விசயங்களை நினைத்து மனம் குழம்பியது.
ஆனாலும் அவளை பிடிக்காமல் போகுமா என்ன??

போர்வைக்குள்ளே தன்னை மறைத்து படுத்திருந்தவளின் முகமும் கால்களும் மட்டும் வெளியே தெரிய, கலைந்த கூந்தலும், உறக்கத்தில் விரிந்த இதழ்களுமாய் அவள் முகம் அவனை வசீகரித்தால், மதுஸ்ரீயின் வெண்பாதங்களோ அவனிட்ட மெட்டியில் கட்டி இழுத்தது.

நிசப்பதமாய் இருக்கும் அவனது வீட்டில் இந்த ஒரு வாரமாய் ஜல் ஜல்லென கொலுசொலி கேட்க வளைய வருபவள் இவள் தானே. மனமே ஆனந்த நர்த்தனம் புரிந்தது.

கோவம் ஒருபுறம் இருந்தாலும் மதுவின் அருக்காமையை ரசித்திட தவறவில்லை.

அது வேறு இது வேறு..

என்னதான் பார்த்த முதல் நாளே பிடித்து, பிடிவாதம் செய்து மணந்திருந்தாலும் தங்களுக்கான புரிதலின் ஆழம் இன்னுமில்லை என்றே தோன்றியது அவனுக்கு. இது இப்படியிருக்க, மது செய்த காரியம் வேறு அவனை ஒரு எல்லைக்குள் நிறுத்த, காதல் கொண்ட மனம் வேறு ஒருபுறம் அவளை ரசிக்க, விலகி நிற்கவும் முடியாமல், சேர்ந்து உருகவும் முடியாமல் திண்டாடித்தான் போனான் எழிலரசன்.

போர்களத்தில் வரதா பதற்றம் பொண்டாடியிடமா?? என்று அவனது உள்ளம் கேட்ட கேள்வியில் தானாய் சிரித்துக்கொண்டான்.
திருமணதிற்கு முன்னே எப்போதாவது அவனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால், தவறாமல் பேசிவிடுவாள் மதுஸ்ரீ. அப்படி ஒருநாள் பேசும் போது சலிப்பாய் அவள் கூறிய வார்த்தைகள் இன்னும் அவன் மனதில் வந்து போனது.

“காலைல எந்திருக்கும் போதே அம்மா ஒரு வேலை சொல்லிட்டே தான் எழுப்புவாங்க.. அஞ்சு மணிக்கு எந்திருச்சு அடுப்படியில நின்னா எட்டு மணி வரைக்கு வெளிய வரவே முடியாது. அப்புறம் மதிய வேலை வந்திடும்... ஒருநாளாவாது கொஞ்சம் உருண்டு பெரண்டு படுத்து சாவகாசமா எந்திருக்க முடியுதா...” என்று அவள் சகஜமாய் சொன்னது தான்.

ஆனாலும் அவன் மனதில் அது பதிந்து போனது.

அவனது வழக்கம் காலை ஐந்து மணிக்கு எழுந்து ஒருமுறை ஹோட்டலுக்கு சென்று வருவான். பால்காரர், காய்கறிக்காரர் என்று அனைவர்க்கும் பட்டுவாடா செய்து என்று ஹோட்டலின் ஆரம்ப வேலைகள் சிலது செய்தும் வருவான். வரும் போதே அவன் தாத்தாவுக்கு காப்பியும் வாங்கி வந்துவிடுவான்.

ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தால், வேதாச்சலம் எழுந்திருப்பார், அவரோடு சேர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் இருவரும் ஹோட்டலுக்கு கிளம்பினால், மாலை ஒருமுறை வீடு திரும்புவர். பிறகு எழில் மட்டும் மீண்டும் செல்வான்.
இது தான் அவர்களது வழக்கம். வீட்டில் சமைப்பது என்பது இல்லை. அவனுக்கும் தெரியும் தினமும் கடை சாப்பாடு என்பது கூடாது என்று ஆனாலும் மனதில் ஒரு சலிப்பு, என்ன சமைத்து என்ன செய்வது என்று.

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில், மூன்று நாள் மறுவீடு அது இதென்று செல்ல, வீட்டில் சமைக்க வேண்டிய ஏற்பாடு இல்லாமல் போனது. அது மதுஸ்ரீக்கும் வித்தியாசமாய் படவில்லை.இன்னதென்று கேட்கும் முன்னமே கடையில் இருந்து தருவித்து விடுவான்.

புது மாப்பிள்ளை அப்படி இப்படியென்று சொல்லி இந்த ஒரு வாரமும் கடைக்கு செல்லாமல் இருக்க வைத்துவிட்டார்கள் ஆனால் எத்தனை நாள் அப்படி இருக்க முடியும்??

இதோ சற்று நேரத்தில் கிளம்பிட வேண்டும். அதற்கு எழுந்தவன் தான் மனைவியை ரசித்து அமர்ந்துவிட்டான்.
மதுவை எழுப்புவோமா?? வேண்டாமா?? என்ற கேள்விகள் தோன்ற, வேண்டாம் என்று தனக்கே பதில் கூறிக்கொண்டவன், அவள் உறக்கம் கெடாமல் கிளம்பிச் சென்றான்.

இதெல்லாம் மதுவிற்கு தெரியுமா என்ன??

பொழுது விடிந்து சில நேரம் கழித்தே கண் விழிதவளுக்கு, அருகில் அவனில்லை என்று தெரிந்ததும் சற்று ஏமாற்றமாய் தான் இருந்தது.

இந்த ஒருவார பழக்கம் அப்படி. பொதுவாய் எழுப்பிட மாட்டான். வீட்டில் மற்றவர்கள் எழுப்பவும் வழியில்லை. ஆனாலும் இவள் கண் விழிக்கும் நேரம் அறையில் தான் இருப்பான்.

“ரொம்ப லேட்டா எழுந்திட்டோமா??” என்ற யோசனையோடு சற்றே தன்னை சீர் படுத்திக்கொண்டு வெளியே வந்தால், வேதாச்சலம் தான் தினசரி படித்துக்கொண்டு இருந்தார்.

அவரிடம் என்ன கேட்பது என்று கூட தெரியாமல், திருதிருவென முழித்து, வீட்டை ஒருமுறை தன் பார்வையால் அளந்தவளை அந்த பெரிய மனிதருக்கு புரியாமல் போகுமா.

“எழில் கடைக்கு போயிருக்கான் மா.. இப்போ வர நேரம் தான்..” என்றார் சிரித்தபடி..

“ஓ.. சரி தாத்தா.. அது.. நான் தூங்கிட்டேன் போல.. அதான்..” என்றவளுக்கு மேற்கொண்டு என்ன சொல்லி மழுப்புவது என்று தெரியவில்லை.

“ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்ன...??” என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. இப்படி யோசித்தபடியே அடுப்படிக்குள் சென்றால் அதுவோ துடைத்து வைத்தது போல் இருந்தது.

இத்தனை நாட்கள கடையில் இருந்து அனைத்தும் வந்தது தெரியும், ஆனாலும் இங்கே சமையலே நடந்திராதது போலல்லவா இருக்கிறது என்று யோசித்தபடி பிரிட்ஜை திறந்து பார்த்தாள், தண்ணீர் பாட்டில் தவிர வேறெதுவம் இல்லை.

“என்ன டா இது???!!!” என்று ஆச்சரியமாய் ஆனது.

அவள் வீட்டு பிரிட்ஜ் தானாய் வந்து கண் முன்னே நின்றது. சில நேரம் கதவை கூட அடைக்க முடியாமல் உள்ளே இருப்பதை இடம் மாற்றி மேலொன்றும் கீழொன்றுமாய் அடுக்கி வைத்து அதுவே அவளுக்கு சில நேரம் கடுப்பாய் இருக்கும்.
அப்படியிருக்க இங்கே அடுப்படியும், அங்கிருந்த பொருட்களும் தாங்களை புழங்கி வெகு நாட்கள் ஆயின என்று பல்லிளித்து சொல்ல, “சரி காப்பிக்காது எதா செய்யலாம்..” என்று ஒவ்வொரு டப்பாவாய் திறந்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே..
அக மொத்தம் ஒன்றுமே இல்லை. இது புரியவே அவளுக்கு சற்று நேரம் பிடிக்க, அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் முடிவெடுத்துக்கொண்டாள்.

எழிலிடம் பேசலாம் என்றால் அவன் எப்போது வருவது?? இவள் எப்போது சமைக்க தொடங்குவது என்று தோன்ற நேராய் வேதாச்சலதிடம் சென்றாள்.

“தாத்தா.... ”

“என்னமா.. இப்போ எழில் வர நேரம் தான்..”

“அதில்ல தாத்தா வீட்ல ஒரு சாமான் இல்லை.. எல்லாம் வாங்கணும்..”

இதற்கு அவள் பதில் சொல்ல வாய் திறக்கும் போதே எழில் வந்துவிட்டான் கையில் ஒரு தூக்கு வாலி வேறு. அதிலிருந்து வந்த மனமே காப்பி என்று தெரிந்துவிட்டது.

ஆனாலும் அவன் சொல்லிவிட்டு செல்லாத கோவம் அவளுக்கு லேசாய் எழ, அவனை கண்டுகொள்ளாமல்,

“தாத்தா, காலையில எந்திருச்சா ஒரு காப்பி போட கூட இங்க ஒண்ணுமில்ல. லிஸ்ட் போட்டு எல்லாம் வாங்கணும்...” என்றவள் அவன் கொண்டு வந்ததை டம்ப்ளரில் ஊற்றி அவருக்கு கொடுத்து, அவளும் எடுத்துக்கொண்டாள்.

எழிலிடம் ஒரு பேச்சுக்கு கூட கேட்கவில்லை வேண்டுமா வேண்டாமா என்று.

வேண்டுமென்றே முகம் திருப்புகிறாள் என்று புரிந்தது அவனுக்கு ஆனால் ஏன் என்று தான் தெரியவில்லை.

“நம்ம தான கோவமா இருந்தோம்... இவ எதுக்கு முகத்தை திருப்புரா...” என்று யோசித்தபடி,

“என்ன வாங்கணும்..??” என்றான்.

மதுஸ்ரீ என்ன சொல்ல வருகிறாள் என்பது பெரியவருக்கு புரிந்தது. ஆனாலும் கணவன் மனைவி இருவரும் பேசி சரி செய்துகொள்ளட்டும் என்று அமைதியாய் வேடிக்கை பார்த்தார்.

கணவனை ஒரு பார்வை பார்த்தவள் “எல்லாமே வாங்கணும், பலசரக்கு, காய்கறி, எல்லாமே..” என்றால் வேறெங்கோ பார்வை பதித்து..

“அது எதுக்கு...???”

இப்படியொரு கேள்வி கேட்டால் அவளுக்கு ஆச்சரியமாகாதா...

“பின்ன புவ்வாக்கு என்ன செய்ய???”

“அதெல்லாம் ஹோட்டல்ல சொல்லிக்கலாம். நேரத்துக்கு வந்திடும்.. நீ ரிலாக்ஸ்டாக இரு போதும்...” என்று கூறியவனுக்கு நிச்சயம் இதில் மது உடன்பட மாட்டாள் என்று தெரியும். ஆனாலும் அவள் என்னதான் சொல்கிறாள் என்று பார்க்க ஆசை
தோன்றியது.

“ஓ.. அப்போ பெட்டு பீரோ டிவி எல்லாம் தூக்கிட்டு போயி நம்ம ஹோட்டல்ல இருந்துக்கலாமா??” என்று மது படக்கென்று கேட்க, வேதாச்சலதிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.சிரித்துவிட்டார்.

அடுத்தும் எழிலை மது பேசவே விடவில்லை. “இந்த ஒரு வாரமா கடை சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு...” என்று வேண்டுமென்றே முகம் சுளித்து சொன்னவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

இப்படியெல்லாம் தங்களிடம் பேசவும், வீட்டு பொறுப்பை எடுத்து செய்யவும் ஆள் இல்லாமல் தானே இந்த இரு ஆண்களும் அவதி பட்டது.வேண்டுமென்றே அவளை அதிகாரம் செய்ய வைத்தான் எழிலரசன். அதில் ஒரு அல்ப சந்தோசம் அவனுக்கு.

“சரி லிஸ்ட் போடு.. இன்னிக்கு ஒருநாள் மட்டும் கடைல இருந்து வரட்டும்..” என்று கூறியவன் அறைக்கு எழுந்து செல்ல, சிறிது நேரத்தில் பின்னோடே அவளும் சென்றாள்.

அவனோ, கால்களுக்கு எண்ணெய் தடவி உறுவிக்கொண்டு இருந்தான்.

“நான் செய்துவிடவா?? ” என்று கேட்க தூண்டிய நாவையும், மனதையும் அடக்கி, வேண்டுமென்றே அறையில் இருந்த பொருட்களை உருட்டினாள்.

சாதாரணமாய் ஒரு வாழ்வு, கணவன் மனைவியாய் அவர்கள் தொடங்கியிருந்தால் அவளுக்கு இந்த தயக்கம் இருந்திருக்காதோ என்னவோ, ஆனால் எழில் தான் அவள் பக்கமே வருவதில்லையே. இவளும் மனுசி தானே, ஏக்கமாய் இருக்காதா என்ன??
அவனை ஒருமுறை பார்ப்பதும், இருக்கும் பொருட்களை இடம் மாற்றி வைப்பதுமாய் இருப்பவளை பார்க்க பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது.

இவள் வந்ததும், பார்த்ததும், முறைத்ததும் எல்லாம் அவனுக்கு தெரியும்.. ஆனாலும் அவளே சொல்லட்டுமே என்ற எண்ணம் முளைக்க, அவள் செய்கைகளை பார்த்தபடி தன் வேலையை தொடர்ந்தான்.

அவளும் அங்கே இருந்து நகராமல் இருக்க, இவன் தான் பொருத்தது போதும் என்று, “என்ன மது??” என்று கேட்டான்.

“என்ன???”

“இல்ல எதுக்கு இப்ப எல்லாத்தையும் போட்டு உருட்டிட்டு இருக்க..”

“ஏன் உங்களுக்கு என்ன வந்துச்சு???”

“ஆகா மறுபடியும் ஆரம்பிச்சுட்டா டா, பதிலுக்கு கேள்வி கேட்க..” என்று எண்ணியவன்,

“இல்லை கடைக்கு போகணுமே, இன்னும் கிளம்பலையான்னு கேட்டேன்..” என்றான் சற்றே உள்ளடக்கிய குரலில்.

“நீங்க கிளம்பலையா??”

‘மறுபடியுமா....’ என்று நொந்துக்கொண்டவன், போகிற போக்கில் எங்கே அவன் கோவம் போய், அவளை சமாதானம் செய்யும் சூழ்நிலை வந்துவிடும் என்றே தோன்றியது.

“ம்ம்ச் இப்போ என்ன கோவம் மது..??” என்றான் அவளருகே வந்தபடி, பார்வையும் சிந்தையும் அவள் மீதிருக்க, அவன் காலில் தெய்திருந்த எண்ணையோ லேசாய் வழுக்கியது.

அவ்வளவு தான் நொடி பொழுதில் வேகமாய் சென்று அவனை தாங்கிக்கொண்டாள்.

“என்னங்க நீங்க, பாத்து வரக் கூடாதா??” என்றவளின் குரலும் உள்ளமும் பதற, அவனுக்குமே சற்று நடுங்கித்தான் போனது,

ஏனெனில் இப்பொழுது தான் அவனது கால் சற்று முன்னேற்றத்திற்கு வருகிறது, இந்த நேரத்தில் விழுந்து வைத்தால் முழுவதும் கெட்டு விடும். இந்தளவு நடக்கவே அவன் எத்தனை முயற்சிகள் எடுத்தான், அதையெல்லாம் ஒரு சில நொடிகளில் தவற விடுவதா??

நல்லவேளை மது வந்து பிடித்தாள் என்று நினைக்கும் பொழுதே அவளது கலங்கிய முகம் கண்ணில் பட, “ஷ்ஷ் ஒண்ணுமில்ல மது...” என்று அவளுக்கும் கூறி தன்னையும் சமாதானம் செய்துகொள்ள முயன்றான்.

“நீங்க முதல்ல உக்காருங்க.. சின்ன பிள்ளையா நீங்க,பெறாக்கு பார்த்துட்டு நடந்து வரீங்க..” என்றவள் பேச்சு வாக்கில் அவனை அமரவும் வைத்து, அவன் எடுத்து வைத்திருந்த எண்ணெய்யை மீண்டும் அவனது கால்களுக்கு தேய்க்க ஆரம்பித்திருந்தாள்.

அவனுக்குமே முதலில் இருந்த பதற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை, சில வினாடிகள் கடக்க, இருவருக்குமே இதய துடிப்பு சற்று சீராய் வர, அப்பொழுதுதான் அவர்கள் இருக்கும் நிலை உரைத்தது. பெர்முடாஸ் போட்டு அவன் அமர்ந்திருக்க, அவன் காலை தூக்கி தன் மடியில் வைத்து அவள் அமர்ந்திருந்தாள்.

இருக்கும் நிலை உணர்ந்த பிறகு இருவருக்குமே கூச்சமாய் போனது. எழில் இதுவரை தன் தாத்தாவிடம் கூட அவன் அடிபட்ட இடத்தை காட்டியதில்லை. அவளுக்கோ முதல் முறையாய் கணவனிடம் இப்படி இருப்பதும் ஒரு மாதிரி இருக்க, பட்டென்று விலகவும் முடியாமல் அவன் முகம் பார்க்கவும் முடியாமல் திணறினாள்.

அவனுக்கோ அவனது தழும்புகளை அவள் கண்டால் என்ன நினைப்பாளோ என்று சங்கடமாய் இருந்தது, முதல் முறையாய் ஒரு பெண்ணின் கரங்களில் தன் அடிபட்ட கால்கள் தொட படும் பொழுது என்னமாதிரி உணர்கிறோம் என்றே அவனுக்கு தெரியவில்லை.

அவனது பார்வையை தவிர்க்க தலை குனிந்தவளுக்கோ கண்கள் அவன் கால் தழும்புகள் மீது படிந்தது. அடுத்த நொடி விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தால்.

எத்தனை பெரிய அடியாய் இருந்தால், அவனது கால்களில் இத்தனை தையல்களும், வடுக்களும் இருந்திட வேண்டும், என்று எண்ணும் பொழுதே எவ்வளவு வேதனையை இவன் தாங்கினானோ என்று உள்ளம் கலங்கியது.
விரல்கள் நடுங்க அவளையும் அறியாது அவன் வடுக்களை அவள் தடவ, விழிகளோ அவள் கணவன் இமைகளுக்குள் பயணம் செய்தது.

தடவலும் நிற்கவில்லை, பயணமும் முடியவில்லை அவளது ஸ்பரிசமும் பார்வையும் எழிலை என்ன மாதிரி உணர்வுகளுக்கு ஆட்படுதியதோ அவனே அறிவான். சிறிது நேரத்திற்கு மேல் அவள் கரங்களை தன் கரங்கள் கொண்டு பிண்ணிக்கொண்டான்.
பார்வை மட்டும் விலகாமல் இருக்க, அவளது கண்களோ கண்ணீரை சொரிய தயாராய் இருந்தது.

“ரொம்ப வலிச்சதாங்க..??” என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், அவள் கண்களில் வழியும் கண்ணீரை தன் இதழ்களால் துடைத்தான் எழிலரசன்.

இருவர் உள்ளத்திலும் இப்பொழுது இந்த நிமிஷம் கோவமில்லை. இருந்தாலும் அதை உணரும் நிலையில் இருவரும் இல்லை.
அவன் அன்று பட்ட காயத்திற்கு இன்று அவளும், அவள் இப்பொழுது படும் வேதனைக்கு அவனும் மருந்தாக, இடைவெளி குறைந்தது, நேரமும் கரைந்தது.

ஆனாலும் விதி நீங்கள் ஒன்று கூடும் நேரம் இதுவல்ல என்று உரைக்க லேசாய் தன் சதி வேலையைக் காட்ட, மது படக்கென்று அவன் கரங்களில் இருந்து விலகினால்.

காரணம் அவன் இத்தனை நாள் அவள் மீது கோவமாய் இருந்தது. இன்று மட்டும் என்னவாம் மனைவி என்று மனமுருகியதா என்ன?? இத்தனை நாளில் தன்னருகே வந்தது கூட இல்லை, ஒரே மெத்தையில் படுத்தாலும் உறக்கத்தில் கூட அவன் கை அவள் மேல் பட்டதில்லை, அப்படியிருக்க இன்று மட்டும் என்னவாம்??

நான் தானே முதலில் அவனை நெருங்கியது, அப்போ இவனுக்காக ஒன்றும் தோன்றவில்லையா, ஒன்றும் வேண்டாம் என்று அவள் மனம் சுனங்க, அவள் அருகாமையில் கரைந்திருந்தவனோ,

“என்ன மது???” என்றான் அசையும் அன்புமாய்.

“நீங்க இன்னும் உங்க கோவத்துக்கான காரணத்த சொல்லவே இல்லையே..??” என்று அவள் கேட்ட அடுத்த நொடி அவன் முகம் மாறியது.

[/QUOT
Superb ud sis
 
Sasikalasrinivasan

Well-known member
Member
இதுக ரெண்டும் அதுக்கு செட்டாகாகதுங்க (நான் சொல்றது ரொமன்ஸ் யாரும் தப்பா நினைச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை ப்ரண்ட்ஸ்) எந்த நேரத்துல போய் கோபத்தை இழுத்து பிடிச்சுகிட்டு இருக்குதுங்க
 
Advertisement

Advertisement

Top