Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 3

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் - 3
அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தரதர்மா அன்று விடுமுறை. பண்டிகை காலங்களில் வரும் ஞாயிறு மட்டுமே அக்கடை திறந்திருக்கும். மற்ற ஞாயிறு எல்லாம் விடுமுறை.

அன்னையைப் பார்க்க சென்றிருந்த தமயந்தி, “அம்மா, உங்க உடம்பு எப்படி இருக்கு?”

“அதுக்கென்ன நல்லாத்தான் இருக்கு. ஆனா நீ வாரத்தில ஒரு நாள் தான் என்னைப் பார்க்கறதுனால, என் மனசு தான் நல்லா இல்லை.. இன்னும் நடந்ததையே நினைச்சுட்டு இருக்காம அதிலிருந்து கொஞ்சம் வெளிய வா, தமும்மா. இன்னும் நிறைய வாழ்க்கை உனக்கு இருக்கு.”

“வெளிய வரணும்னு நினைச்சு தான்மா, உங்களை வாரத்துக்கு ஒரு முறை வந்து பார்க்கிறேன். உங்களைப் பார்க்கும் போதேல்லாம் உங்களின் இந்த நிலைமைக்கு நானே காரணமாயிட்டேனேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. இதில தினமும் வந்து பார்த்தா, நானும் வருந்தி உங்களையும் வருத்தப்பட வச்சிருப்பேன்.”

“தமு, இந்த மாதிரி பேசறதை நிறுத்து, என்னோட இந்த நிலைக்கு நீ நிச்சயமா காரணம் இல்லை. நான் செஞ்ச பாவம் தான் என்னையும் படுக்கையில் கிடத்தி, உன்னோட வாழ்க்கையையும் பாதிச்சிருக்கு.”

“அ.ம்.மா “ என்று சிறிய கேவலுடன் அன்னையின் மடி சாய்ந்தாள் தமயந்தி.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்திற்கும் கண்களில் நீர் பெருகியது.

“ம்மா.!!, உங்களால எனக்கு கெடுதல் நிகழுமாம்மா?, இப்படியெல்லாம் பேசாதீங்க..”

“அப்போ உன்னால மட்டும் எனக்கு கெடுதல் நடந்துடுமா? நடந்த எதுக்கும் நீ பொறுப்பு இல்ல தமும்மா, நாங்க விசாரிக்காம செஞ்ச தப்பு தான். அதுக்கு தண்டனை கண்டிப்பா எங்களுக்கு வேணும்மா. அதான் எனக்கு இப்படி ஒரு தண்டனைன்னா, அப்பாவுக்கு என்னை இப்படிப் பார்ப்பதே தண்டனை தானே. இப்படி இருப்பதற்கு நான் இல்லாமலேயே போயிருக்கலாம். தர்மாண்ணா கொடுத்துவைத்தவர்.”

“மீ..மீ..னு..!!, ஏன் இப்படி பேசற?”

“ம்..மா..!!, ப்ளீஸ்.” என்ற தமயந்தி தன் கையால் அன்னையின் வாயை மூடினாள்.

“மீனு..!! தமு பாவம், இனிமே இப்படி பேசாதே.”

“நீங்க பேசாம இருங்க.. தமு இனிமே நான் இப்படியெல்லாம் பேசல.. ஆனா தினமும் உன்னைப் பார்க்காம நான் படற பாட்டை வேற எப்படி சொல்லி புரியவைக்கறது? நீ எப்பவுமே அமைதி தான் தமு.. ஆனா இவ்வளவு அமைதி கிடையாது.. எவ்வளவு மெலிஞ்சு போயிட்ட.. என் மனசு கிடந்து அடிச்சுக்குது..”

அம்மாவின் சில பல புலம்பல்களுக்குப் பின், “சரிம்மா, தினமும் சாயங்காலம் வந்து உன்னைப் பார்க்கிறேன்.. போதுமா? தயவு செஞ்சு நீங்க இப்படியெல்லாம் பேசாதீங்க.” என்றாள் தமயந்தி.

“ம்ம் சரி. சரி. ஆனா, ஒரு கன்டிஷன்.” – மீனாட்சி.

“சொல்லுங்கம்மா.”

“நைட் என்னோட தான் சாப்பிடணும்.. ரொம்பவே இளைச்சுட்டடா குட்டிமா.”

தமயந்திக்கு எப்படி சரி என்று சொல்வதென தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே சாப்பிட தொடங்க கையில் முதல் கவளம் எடுக்கும்போதே குமட்டிக் கொண்டு வந்து விடுகிறது அவளுக்கு. அதனால் மிகுந்த பசி எடுக்கும் போது மட்டுமே கண்களை மூடிக்கொண்டு கட கடவென சாப்பிடுவாள். பாதி வயிறு நிறைந்ததுமே மறுபடியும் குமட்ட தொடங்கிவிடும். உடனே கை அலம்பிவிடுவாள். ஒரு வேளை உணவு மட்டுமே அதுவும் பாதி வயிறு தான். இதற்காகவே அன்னையைப் பார்ப்பதை தவிர்க்க ஆரம்பித்திருந்தாள். இப்பொழுது என்ன சொல்லி அன்னையை சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ஒரு வேளை அன்னையுடன் சேர்ந்து உணவருந்தினாலாவது உணவின் மீது இருக்கும் வெறுப்பு குறைகிறதா என்று பார்க்கலாம் என யோசித்து முடிவெடுத்தாள்.

“சரிம்மா, உன் இஷ்டம்.”

“இதை சொல்ல, உனக்கு இவ்ளோ நேரமா?”

அவருக்கு பதிலாக சிறு முறுவலை அளித்தவள், “அப்பா, நளனை தேடும் படலம் எவ்வளவு தூரத்தில் இருக்கு?” என்றாள்.

“அது ஆரம்பிச்ச இடத்துல தான் இருக்கு. நளன் அம்மாவோட சொந்த ஊர்ல விசாரிச்ச வரைக்கும் யாரும் அங்க இல்லைன்னு தெரியுது. வேற எங்க போனாங்கன்னும் ஒரு தகவலும் இல்லை. தெரிஞ்சவங்ககிட்ட சொல்லிவச்சு இருக்கேன். இந்த வாரம் ஏதாவது தகவல் வருதான்னு பார்க்கலாம்.”

“நம்ம கடைக்கு பக்கத்துல இருக்கிற ஹோட்டலை யாரோ வாங்கிட்டாங்க. அடுத்த வாரத்துலேர்ந்து புதுப்பிக்கிற வேலை தொடங்க போகுது போல கடையில இருக்கிறவங்க பேசிக்கிட்டாங்க.”

“அப்படியா குட்டிமா, நம்ம கடைக்கு பட்டுப்புடவை ஆர்டர்ஸ் வேற ஆளுங்க கிட்ட கொடுத்திட்டியா? ஏன்மா? பழைய ஆளுங்க காஞ்சிபுரத்துல இருந்து போன் செஞ்சிருந்தாங்க.”

“ஆமாம்ப்பா..!! அவங்க கிட்ட புது கலர்ஸ் எதுவும் இல்லை.. அதுமட்டுமில்லாம தரமும் ரொம்பவே குறைஞ்சிடுச்சு. அதான்ப்பா மாத்திட்டேன். இவங்ககிட்ட தரமும் நிறமும் நல்லா இருக்குப்பா.” என்ற தமயந்தியை முறைத்துப் பார்த்தார் மீனாட்சி.

“ம்மா, என்னாச்சு? கோபமா இருக்கீங்க? பழைய இடத்துலேர்ந்து சரக்கும் சரியா வரதில்லைமா, முன் பணமும் நிறய வாங்கிக்கறாங்க.. நமக்கு இதுனால கொஞ்சம் நஷ்டம்.. நான் கடைய மாத்தினது உங்களுக்கு பிடிக்கலையாம்மா?”

“தமும்மா, எனக்கு அதுக்கெல்லாம் கோபம் இல்லைமா, உங்க வியாபாரத்துல நான் என்னிக்குமே தலையிட்டதில்லை. ஒரு வாரம் கழிச்சு தான் உன்னைப் பார்க்கிறேன் இப்பவும் உங்களுக்கு பிஸ்னஸ் தானா? அதான் கோபம் எனக்கு.”

“ம்மா..!! நான் அப்பாவையும் பார்த்து ஒரு வாரம் ஆச்சும்மா.. தினமும் நான் பார்க்கிற ஒரே ஆள் நம்ம அன்னம்மா தான்.”

“ஏங்க அப்போ என் கிட்ட பொய் சொன்னீங்களா?”

“அப்பா மேல தப்பு இல்லம்மா. காலைலே ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பி போய் ராத்திரி பதினொரு மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன்.”

“நம்ம கடை ஒன்பது மணிக்கு தானே திறப்பாங்க. அதுக்கும் ஆளுங்க இருகிறதுனால அப்பாவும் மாமாவும் பத்து மணிக்கு தானே போவாங்க. நீ எதுக்கு இவ்ளோ சீக்கிரம் போற.?”

“இப்போ எல்லாம் நான் தான் கடையை திறக்கிறேன்.”

“சரிம்மா, கடையை திறக்க எதுக்கு ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பற?”

“அ..து அது வந்தும்மா, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு போகறதுனால தான் சீக்கிரம் கிளம்பறேன்.”

“ஓ! அப்போ நீ காலையில சாப்பாடு சாப்பிடறது இல்லை அப்படி தானே?”

“அம்மா நான்.” என்ற தமயந்தியை கையை காட்டி நிறுத்திவிட்டு “அன்னம் இங்க வா.” என்று அழைத்தார் மீனாட்சி.

உள்ளே வந்த அன்னத்திடம், “அப்போ நீயும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட.!!.”

“இல்லைங்கம்மா, உங்க உடம்புக்காகத்தான் மா, நம்ம கண்ணு சாப்பிடாம கிளம்புச்சுன்னு தெரிஞ்சா, ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் ம்மா சொல்லலை.”

“நான் கை கால் விளங்காம விழுந்தது உங்களுக்கு எல்லாம் வசதியா போச்சு இல்லை.” என்று நிறுத்திய மீனாட்சி கணவர் சுந்தரத்தைப் பார்த்து, “இனிமே நீங்க காலையில போய் கடையைப் பாருங்க, என்னை கவனிக்கறதை மதியம் வந்து வச்சுக்கலாம். தமு உன்னை கோவிலுக்கு போகவேண்டாம்ன்னு சொல்லமாட்டேன். மலை ஏறிட்டு நேரா வீட்டுக்கு வந்து என் கூட பேசிட்டே சாப்பிடணும். மதியம் அப்பா வந்ததும் நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும். அதுக்கு அப்பறம் தான் நீ கடைக்கு கிளம்பற. என்ன சரியா? ராத்திரி சாப்பாடும் எங்களோட தான் இனிமே உனக்கு. இதுக்கு நீ முன்னாடியே சரின்னு சொல்லிட்ட.”

“சரிம்மா உங்க இஷ்டம். என்னைப் பத்தி ரொம்ப யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க.”

“அன்னம் நீ போய் சாப்பாடு எல்லாம் இங்க கொண்டு வா. நீயும் சாப்பிடறது இல்லை போல இருக்கு. நீயும் என் முன்னாடி தான் இனிமே சாப்பிடணும்.”
“சரிங்கம்மா, இதோ ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் இங்க கொண்டு வரேன்மா.”

அங்கிருந்த சிறு மேஜையில் பதார்த்தங்களை நேர்த்தியுடன் அடுக்கினார் அன்னம். அதைப்பார்த்த தாயும் மகளும் ஒருவரையொருவர் பார்த்து லேசாக சிரித்துக்கொண்டனர்.

“அன்னம் உன்னோட கை பக்குவம் சமைப்பதில் மட்டுமில்லாம எல்லாத்திலேயும் இருப்பதால் தான், நான் படுக்கையில் விழுந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறேன்.” என்ற மீனாட்சியைப் பார்த்து சிரித்தார் அன்னம்.

ஓட்சில் சிறிதளவு பாலை விட்டு கலக்கி சர்க்கரைப் போடாமல் சுந்தரத்திற்கு எடுத்துவைத்துவிட்டு, மீதியிருந்த ஒட்சில் மோரை விட்டு கலக்கி அதில் அரிந்து வைத்திருந்த சின்ன வெங்காயத்தை போட்டு லேசாக உப்பு போட்டு மீனாட்சிக்கு கொடுத்தார் அன்னம்.

“அன்னம்மா எனக்கும் ஓட்ஸ் கொடுங்க.” என்ற தமயந்திக்கு பதிலாக மறுத்து தலை அசைத்து, பொங்கலை சட்னி சாம்பாருடன் நீட்டினார் அன்னம்.

அதைப் பார்த்ததுமே குமட்டி கொண்டு வந்தது. முகத்தை மூடிக்கொண்டு அன்னைக்கு காட்டாமல் மறைத்தாள் தமயந்தி.

“தமு சாப்பிடுமா. அன்னம் நீயும் தட்டுல போட்டு சாப்பிடு.” என்றார் மீனாட்சி.

அன்னம் தன் தட்டிலே போட்டுக்கொண்டு சாப்பிட தொடங்கினார். அவர் மனது நீண்ட நாட்களுக்கு பின் குளிர்ந்து இருந்ததால் சந்தோஷமாக உண்ண தொடங்கினார்.

இங்கே தமயந்திக்கோ அன்னைக்காக சாப்பிடுவோம் என்று எண்ணி, ஒரு வாய் பொங்கலை உள்ளே போட்டதுமே குமட்டியதால் வேகமாக அருகே இருந்த குளியலறையில் புகுந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

பின்னாலேயே சென்ற அன்னம் அவள் தலையை தாங்கிப் பிடித்துக்கொண்டார். வயிற்றிலிருந்த நீர் எல்லாம் வந்தும் கூட அவளது குமட்டல் நிற்கவில்லை.

“என்னங்க போய் அவளை கூட்டிட்டு இங்க வந்து உக்கார வைங்க. வைத்துல ஒண்ணுமே இல்லை வெறும் சத்தம் தான் வருது.” என்று மீனாட்சி சொல்லும்போதே அவர்கள் வெளியே வந்தனர்.

அன்னத்தின் கைபிடியில் நடந்து அருகே வந்து அமர்ந்த தமயந்தியைப் பார்த்த மீனாட்சி, “என்னாச்சு குட்டிமா, நைட் சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா?”

“இல்லைமா நான் நேத்து முழுவதுமே சாப்பிடவே இல்லை. இப்போ எல்லாம் எனக்கு சாப்பாடைப் பார்த்தாலே குமட்டல் வந்து விடுகிறது. ஆரம்பத்துல அப்படி இருக்கும் போது, ரொம்ப நல்லா பசிச்சவுடனே, கண்ணை இருக்க மூடிட்டு தான் சாப்பிடுவேன் அறை வயிறு நிரம்பியவுடனேயே திருப்பியும் குமட்ட ஆரம்பிச்சுடும்.. உடனே கை அலம்பிடுவேன். இப்போ ரெண்டு நாளா எவ்வளவு பசிச்சு சாப்பிட கை வச்சாலும் உடனே குமட்டுது. அதான் ரெண்டு நாளா நான் சாப்பிடவே இல்லை. உங்களுக்காக இன்னிக்கு கைல சாப்பாட்டை எடுத்தேன். ஆனா என்னால முடியலை. எனக்கு இதை எல்லாம் பார்க்கும்போது வாந்தியும் அருவெருப்பும் தான் வருது. அன்னம்மா ப்ளீஸ் இதையெல்லாம் எடுத்துடுங்க.” என்று அன்னத்திடம் கண் காட்டியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

மயங்கி சரிந்தவளை கீழே விழாமல் பிடித்த அன்னம், சுந்தரத்தின் உதவியுடன் மீனாட்சிக்கு அருகிலேயே படுக்கையில் படுக்க வைத்தார்.

“ஏங்க தமுக்கு என்னாச்சு? நாம சரியா கவனிக்கலையோ?” என்றார் பதட்டம் நிறைந்த குரலுடன்.

“பதட்டப்படாதே மீனு, நான் பக்கத்துல இருக்கிற டாக்டரை கூட்டிட்டு வரேன்.” என்றார்.

“அன்னம் எப்படி துவண்டு படுத்திருக்கா பாரு? இந்த நிலையில இவளைப் பார்க்கவா நான் தவமிருந்து பெத்தேன்.”

“மீனு! பேசாம இருன்னு சொன்னேன்.” என்று அதட்டியபடியே சுந்தரம் தமயந்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விரைந்தார்.
 
Top