Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 4

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 4

இரு மாதங்கள் கழித்து:

மயங்கி விழுந்ததும் அருகில் இருந்த மருத்துவரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட தமயந்தி ஒரு வாரம் கழித்து தான் வீடு திரும்பினாள்.

மருத்துவமனையில் இருந்த ஓவ்வொரு நாளும் கழிவது ஒரு யுகம் கழிவது போல் இருந்தது சுந்தரத்திற்கு. வீட்டில் மீனுவை கவனிக்க அன்னம் இருந்ததால் அவரே முழுவதுமாக தமயந்தியைப் பார்த்துக்கொண்டார் சுந்தரம்.

அங்கிருந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரு வாரம் கழித்து தமயந்தியின் உடல்நலம் சிறிது தேறிய பின், அவளை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார் சுந்தரம்.

அந்த மருத்துவரும் தமயந்தியின் வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்து அதற்கேற்றார் போல் சிகிச்சை இப்பொழுதும் அளித்து வருகிறார்.
அன்றிலிருந்து சுந்தரதர்மாவிற்கு தமயந்தி வருவதில்லை. அதற்கு மீனாட்சி அனுமதி அளிக்கவும் இல்லை.

மகளின் மனநிலையை அறிந்தவுடன் முதலில் அவளின் தனிமையைப் போக்க அவளின் படுக்கையை தன்னறைக்கே மாற்றினார்.

அவரின் உடல் நிலை சற்றே முன்னேறியிருந்தது. மனதில் தைரியத்துடனும், வைராக்கியத்துடனும் மற்றும் பிசியோதெரப்பிஸ்டின் உதவியுடனும் அவர் மேற்கொண்டிருந்த சிகிச்சை முறையால், கைப்பிடி உதவியுடன் இரண்டு மூன்று அடி நடக்க தொடங்கியிருந்தார்.

இன்னும் சில காலம் இதே மாதிரி சிகிச்சைக்கு ஒத்துழைத்தால் சீக்கிரமே அவரால் முன்போல் நடமாட முடியும் என்று மருத்துவர் சொல்லியது மீனாட்சிக்கு தெம்பாக இருந்தது. அதை சொல்லி சொல்லியே தமயந்தியை தேற்ற தொடங்கினார்.

தமயந்தி இரு மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அவளுக்கு உணவின் மேல் இருக்கும் வெறுப்பு, சிறிதளவே குறைந்திருந்தது. மருத்துவரும் சிறிது சிறிதாக தான் குறையும் என்று சொல்லிவிட்டார்.

அன்று தமயந்தியை மருத்துவரிடம் அழைத்து சென்று திரும்பியிருந்தார் சுந்தரம். மீனாட்சியிடம் மருத்துவர் சொன்னதை பகிர்ந்துக் கொண்ட தமயந்தி, அப்படியே அன்னையின் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

அவள் உண்ணும் மாத்திரைகளின் விளைவால் இப்பொழுதெல்லாம் நிறைய உறங்கினாள் தமயந்தி.

தமயந்தி கண் அயர்ந்ததுமே மீனாட்சியிடம் பேச தொடங்கினார் சுந்தரம்.

“சொல்லு மீனு, என்ன செய்யலாம்? டாக்டர் அவளின் மனதுக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்க சொல்றாங்களே!! திரும்ப அவளை நான் கடைக்கே கூட்டிட்டே போகட்டுமா?”

“கடைக்கா!!..” என்று சிறிது யோசித்தவர் “ஏங்க, அவளை நளனை தேட சொல்லலாமா?” என்றார் மீனாட்சி.

“நானும் யோசிச்சேன் மீனு, ஆனா, அது சரி வராதுன்னு தோணுது.”

“ஏங்க அப்படி சொல்றீங்க?”

“இல்லை மீனு, இவ தேடற சாக்குல அவளோட தனிமையை அதிகரிச்சுக்கிட்டு நம்மளை விட்டு தள்ளி போக ஆரம்பிச்சுடுவா. அது அவ உடம்புக்கும் மனசுக்கும் நல்லதில்லை.”

“சரிதாங்க நீங்க சொல்றது. ஆனா கடைக்கு அனுப்பிச்சாலும் இப்படி தானே இவ செய்வா.”

“இல்லை மீனு, இனிமே அவளை நான் தனியா கடைக்கு அனுப்ப மாட்டேன்.”

இருவரும் நிறைய கலந்து பேசி தமயந்தியின் மனதிற்கு நிறைய வேலை கொடுப்பது என்று முடிவெடுத்தது அந்த தெய்வங்களின் செவிகளுக்கு எட்டியது போல் அடுத்தடுத்து நடந்தவைகள் நிரூபித்தன.

நளனின் நீண்ட நாள் ஆசை, கனவு எல்லாம் கடவுளின் கிருபையால் நிறைவேறியது.

புது ஹோட்டலில் அனைத்து வேலைகளும் முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் திறப்புவிழா. அதற்கு அழைப்பிதழ்கள் அடித்து உற்றார், உறவினர் அனைவருக்கும் கொடுத்திருந்தான்.

இன்னும் ஹோட்டலின் அருகில் இருக்கும் கடைகளுக்கு மட்டுமே அழைப்பிதழ்கள் கொடுக்கவேண்டும். இன்று அதற்காக தான் சென்னையில் இருந்து இங்கு(திருச்சி) வந்திருக்கிறான்
.
திருச்சியில் இன்னும் சரியாக வீடு அமையவில்லை. அதனால் அன்னையை இன்னும் அழைத்து வரவில்லை. திறப்பு விழாவிற்கு தான் அவனின் அன்னை வருவதாக இருக்கிறார். அன்னையுடன் சென்று தான் வாடகை வீடு தேடும் படலத்தை திரும்பவும் தொடங்க வேண்டும் என்று இருக்கிறான் நளன்.

சில கடைகளுக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு அடுத்ததாக சுந்தரதர்மாவிற்குள் நுழைந்தான். நுழையும் போதே, “தமயந்திம்மா இப்போ தான் கடை நல்லா இருக்கு.“ என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“செல்வம், அங்கப் பாருங்க கஸ்டமர் வராங்க, அவங்களை கவனிங்க..” என்றவாறே தமயந்தி கடையின் உள்ளே சென்றுவிட்டாள். சுந்தரம் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்றிருந்தார். நளன் அங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தான்.

ஹோட்டலில் வேலை நடைபெறும் போது அவ்வப்போது வந்து கொண்டிருந்ததால் அங்கிருந்த சில கடைகளில் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டிருந்தான் நளன்.. அதில் சுந்தரதர்மாவும் அடக்கம்.

அதனால் அங்கிருந்தவர்களின் வரவேற்பை ஏற்றவன், “என்ன செல்வம் அண்ணே! நல்லா இருக்கீங்களா?” என்று பேசத் தொடங்கினான்.

“வாங்க தம்பி, கடவுள் புண்ணியத்துல ரொம்பவே சுகமா இருக்கேன் தம்பி.”

“அண்ணே அடுத்தவாரம் நம்ம ஹோட்டலை திறக்கப்போறோம். அதுக்கு பத்திரிக்கை வைக்கத்தான் வந்தேன்.”

“முதலாளி வெளிய போயிருக்கிறார். எங்க தமயந்திம்மா உள்ள தான் இருக்குது. வாங்க கூட்டிட்டு போறேன்.” என்று உள் அறையை நோக்கி போகும்போதே சுந்தரம் உள்ளே நுழைந்தார்.

“செல்வம் அது யாருப்பா?” நளன் அங்கிருந்தவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும் இன்னும் சுந்தரத்தை சந்தித்திருக்கவில்லை. மகளின் தொடர் சிகிச்சைக்காக அவ்வப்போது வெளியே செல்ல நேர்ந்ததால் அவரால் நளனை சந்திக்க முடியாமல் போனது..

“அய்யா! இவரு தானுங்க அந்த ஹோட்டலை வாங்கியிருக்கார். அடுத்த வாரம் திறப்பு விழா.. அதுக்கு தான் பத்திரிக்கை வைக்க வந்திருக்கார். அதான் உள்ளார கூட்டிக்கிட்டு போறேன்.”

“நீ போ செல்வம், நாங்க பார்த்துக்கிறோம்.” என்று அவனையும் அழைத்துக்கொண்டு அறையினுள் நுழைந்தார்.

அவர் வருதை கண்டதும் “என்னப்பா, போன வேலை முடிஞ்சதா?” என்று ஆரம்பித்தவள் பின்னே வந்தவனைக் கண்டதும் பேச சற்றே தயங்கினாள். அவள் இவ்வாறு தயங்கும் ரகம் இல்லை.

வியாபார விஷயமாக நிறைய பேரை சந்தித்திருக்கிறாள். அதில் நளனைப் போல் இருக்கும் இளைஞர்களும் அடக்கம். அப்பொழுதெல்லாம் இருந்த மன தைரியம், அவள் வாழ்வில் நடந்த சம்பவத்தால் சிறிது சிறிதாக குறைந்திருந்தது.

அதனால் “அப்பா, நீங்க பேசிக்கொண்டிருங்க.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

அதுவரை அவளையேப் பார்த்துக்கொண்டிருந்த நளனுக்கு அவளின் தயக்கமும், கண்களில் ஒரு வித மயக்கமும் இருந்ததைப் பார்த்தான்.
அவள் மன அழுத்தத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கும் மாத்திரையின் விளைவு தான் அந்த மயக்கம் என்று அவனுக்கு எப்படி தெரியும்?
“வணக்கம் சார், நான் நளன்.” என்று பேச ஆரம்பித்தான்.

நளன் என்று பேரைக் கேட்டதும் அவனை ஒரு முறை நன்றாகப் பார்த்தார் சுந்தரம்.

அவர் பார்வையின் வீச்சை சாதாரணமாகவே எதிர் கொண்டாலும் மனதினுள், ‘என்னடா இது, இவரு என்ன இப்படி பார்த்து வைக்கறாரு? நம்ம போட்டுட்டு இருக்கிற ட்ரெஸ் ஏதாவது கிழிஞ்சிருச்சா?’ அய்யோ! என்று தனக்கு தானே பேசிக்கொண்டான். ஆனால் எதையுமே முகத்தில் காட்டாமல் புன்னகையுடனேயே நின்றிருந்தான்.

“நல்லது தம்பி, உக்காருங்க.”

இயல்பாக அமர்ந்தவனை மறுபடியும் பார்க்க தொடங்கினார் சுந்தரம்.

அதை கவனித்திருந்த நளன் மனதினுள், நூறு முறை ‘அய்யோ..!!’அய்யோ..!!’ என்று சொல்லிக்கொண்டே பத்திரிக்கையை எடுத்து கடையின் பெயரை எழுதி அவரிடம் நீட்டி, “கண்டிப்பா திறப்புவிழாவுக்கு வரணும்.” என்று அழைத்தான்.

பத்திரிகையை வாங்கி படித்ததுமே அதிலிருந்த பெயர்களைப் பார்த்து தான் தேடிய நளன், இவன் தான் என்று அறிந்துகொண்டார்.
அதற்காக மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். அதிலிருந்து அவனின் குடும்பத்தை முழுவதுமாக தெரிந்துக்கொண்டார். அதில் ஒன்று விட்ட சித்தப்பா தர்மா உட்பட அனைவரும் அடக்கம்.

நளனும் முதல் சில நிமிடங்கள் ஓரிரு வார்த்தைகளில் பதில் தந்துக்கொண்டிருந்தவன், சுந்தரத்தின் வெளிப்படையான பேச்சால் கவரப்பட்டு, அவருக்கேற்றார் போல் பதிலளிக்க ஆரம்பித்தான்.

சுந்தரம் பேச்சுவாக்கிலேயே எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தார். தர்மாவுடன் இணைந்து தொழில் தொடங்கியது முதல் தர்மாவின் இறப்பு (தமயந்தியின் வாழ்க்கையில் நடந்தது தவிர) வரை என்று அனைத்தையும் சொன்னவர், கடைசியில் தான் தர்மா அவனின் சித்தப்பா என்று சொன்னார். அப்பொழுதும் அவர் சொத்து பற்றி வாயே திறக்கவில்லை.

“இந்த சித்தப்பாவை தான் அம்மா தேட சொல்லியிருந்தாங்க, அம்மாட்ட சொன்னா ரொம்ப வருத்தப்படுவாங்க.” என்று சொன்னவன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான்.

போகும்போது தமயந்தியிடமும் சொல்லிவிட்டு அவளையும் திறப்பு விழாவிற்கு அழைத்து விட்டு தான் கிளம்பிச் சென்றான் நளன்..

“தமயந்தி நீங்களும் அவசியம் திறப்பு விழால கலந்துக்கணும். வீட்டுல அம்மாகிட்டயும் சொல்லுங்க.. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.” என்று சொன்னவன் அவளிடம் விடைப் பெற்று, மற்றவர்களையும் திறப்புவிழாவிற்கு அழைத்துவிட்டு கிளம்பினான்.
 
Top