Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாயகனோ நானறியேன் - நாயகன்2

Advertisement

Kokilavaniarjunan

Well-known member
Member
கோல மணிச்சலங்கை..
மணியில் ஒருமணியாய்ப் பிறந்தால்
உன் பாதம் பிடிப்பேன்..
நீ குடத்தை உருட்டிவிட்டுக் குழைத்த
நவநீதகக் கூத்தைக்
கண்டு மெய் சிலிர்ப்பேன்..
கேளவார்க் குழற்கு சுகந்தப் பூவானால்
உச்சந்தலையில் இடம் பிடிப்பேன்..
கொடும் ஆல விடம் உமிழும்
அரவம் ஆனாலும்..
கொண்டை மேல் குடை பிடிப்பேன்..
மனிதனாக எனைப் பிறக்க வைத்தாயே
மாயை என்ன சொல்வேன்..
பாழ் மறதியைத் தந்து
என்னை ஒதுக்காதே..
மன்றாடி வேண்டுகிறேன்..
எங்கும் உந்தம் முகம்
கண்ணா எல்லாம் உன் வதனம்..
எம்மால் ஆவதெதும் உண்டோ?
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

குழலாகப் பிறப்பேனோ கண்ணா..
உந்தன் விரல் தீண்டக்
கனி வாயில் இசை பாடுவேன்..
மயிலாகப் பிறப்பேனோ கண்ணா
உந்தன் மயிர்க்காலில்
மயிலிறகாய் நடமாடுவேன்..
குயிலாகப் பிறப்பேனோ கண்ணா..
உந்தன் குழல் ஓசைக்கிசைவாக
தினம் கூவுவேன்..
குறை ஏதும் எனக்கில்லை கண்ணா..
எந்த பிறவியிலும்
உன்னை எண்ணி உயிர் வாழ்வேன்..


அந்த அதிகாலைப் பொழுதில் மகளின் கிருஷ்ண கானம் கேட்டு கண்விழித்தார் ராகவன்.. மகளும் தன்னோடு இந்த வீட்டில்.. இனி வரும் பொழுதுகள் அவளோடு தான் என்ற எண்ணமே மனமகிழ்வைக் கொடுக்க.. உற்சாகமாகத் தன் காலைப் பொழுதைத் துவங்கினார்.

அவர் குளித்து ஆசாரத்திற்கு (ஹால்) வரும்போதே காலை நேரத்திய போர் துவங்கிவிட்டது.. மகிழினி கீழே அமர்ந்து நியூஸ் பேப்பரை தரையில் வைத்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்க.. முகிலன் அவளைத் தொல்லை செய்தபடி.. அந்த நியூஸ் பேப்பரின் நடுப்பக்கத்தை வெடுக்கென இழுக்க.. அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

மகிழினி.. வீட்டில் உள்ளவர்களுக்கு கண்ணா.. வயது இருபத்து நான்கு.. துறுதுறுப்பான பெண்.. டேட்'ஸ் லிட்டில் பிரின்செஸ்களுக்கு நடுவில் இவள் மாம்'ஸ் டெவில்.. பாட்டியின் குட்டி மாமியார்.. தாத்தாவின் குட்டிக் கண்ணன்.. முகிலனின் இடிதாங்கி.

சில காரணங்களுக்காக.. இவ்வளவு நாள் தன் தாய் மாமாவின் வீட்டில் தங்கி தன் முதுகலைப் படிப்பையும்.. ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருந்தாள்.. அங்கேயே வேலை தேடத் துவங்கியவளை.. அமிர்தவதி அவ்வா (பாட்டி) அம்பானி கொடுக்கும் ஒன்றரை ஜிபிக்கும் வீடியோ கால் பேசி.. ஒப்பாரி வைத்து இங்கோ வரவழைத்தார்.

நேற்றுத் தான் முதுகலைப் படிப்பிற்கான.. ப்ராஜெக்ட் வைவா முடிந்திருக்க.. அவ்வாவின் நச்சரிப்பு தாங்காமல்.. மூன்று பேருந்து மாறி இரவு வந்து சேர்ந்தாள்.

"சென்டர் பேஜ் குடு எருமை.. நான் எடிட்டோரியல் படிக்கனும்" என அவள் எருமை சாரி அருமை அண்ணனைப் பார்த்துக் கத்த.. சற்றுத் தள்ளி.. தரையில் அமர்ந்து வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த அவ்வா "ஏன்டி இப்படி ஊரே கேளு நாடே கேளுன்னு இந்தக் கத்து கத்தற.. இத்தனை நாள் ஊடு அமைதியா இருந்துச்சு.. மகராசி வந்தா சந்தக்கடை வாசி" என பேரனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

திரும்பி அவரை முறைத்தவள் "ஏன் சொல்ல மாட்ட.. ஆன்ட்ராய்டு ஃபோன்.. வாட்டர் ப்ரூஃப் போனா மாறுர வரை அழுது கண்ணுல தண்ணிய உட்டு.. இங்க என்னை வர சொல்லிட்டு.. இப்ப ஊடு சந்தக்கடை வாசியா.. உம்பட பேரனைக் கேளு.. எதுக்கு என் பேப்பரை எடுக்கறான்னு" என சாட

அமர்து பாட்டி "ஏன் அவனுக்கென்ன.. எம்பட தங்கம் பொட்டாட்ட உக்காந்துட்டு இருக்கு.. அவனை குறை சொல்லாத" என அலட்டிக் கொள்ளாமல் கூற.. அவள் எதிர்த்து வாயைத் திறக்கப் போக.. ராகவன் வருகையில் அமைதியாகி வாயை மூடிக் கொண்டாள்.

அவளுக்கு தன் நைனா (அப்பா)விடம் சற்று பயம் கலந்த மரியாதை.. அவர் இவளைப் பார்த்து 'என்ன' எனக் கேட்டாலே கண்ணில் நீர் தேங்கிவிடும்.. அதற்காக பேசாமலும் இல்லை.. தேவைக்குப் பேச்சு உண்டு.. இத்தனைக்கும் அவர் அவளை பெயர் சொல்லிக் கூட அழைத்தது இல்லை.. ராகவன் அவளிடம் எத்தனை வார்த்தை பேசினாலும் முடியும் வார்த்தை 'சாமி' தான்.
நைனாவைப் பார்த்ததும் சிரித்துவிட்டு பேப்பரை அவர் கையில் கொடுக்க.. முகிலனும் வேறு வழியின்றி நடுப்பக்கத்தை தந்தையிடம் கொடுத்தான்.. அவனைப் பார்த்து பலிப்புக் காட்டியவள்.. உள்ளே சென்று அம்மாவிடம் அவருக்கு வரக்காப்பி வாங்கி வந்து தந்தாள்.. பின் முகிலனை முறைத்தவாறே.. சப்ளிமென்ட்ரி பகுதியில் கண்ணை ஓட்டினாள்.

ராகவன் அப்போது தான் நினைவு வந்தவராக "நைனா எங்கம்மா.. இன்னும் பாக்கலையே" என அமிர்து பாட்டியிடம் கேட்க.. "சவரம் பண்ணப் போயிருக்காரப்பா.. பேத்தி ஆடரு.. நேத்து ராத்திரியே உத்தரவு போட்டுட்டா.. அதான் விடியாலையே எந்திருச்சுப் போயிட்டாரு" என பதில் கொடுத்தார்.

"சரிம்மா.. தேங்கா போட மதியானம் ஆள் வராங்க.. இப்ப நான் நெல்லங்காட்டுக்கு ஒரு எட்டுப் போயிட்டு வரேன்" என்றவர்.. தன் புல்லட்டில் வெளியே வர.. அந்த அதிகாலைப் பொழுது அப்போது தான் மெது மெதுவாக புலர்ந்து கொண்டிருந்தது.

இவர் வெளியே வரவும்.. பக்கத்து வீட்டு வாயிலில் ஏதோ அரவம் கேட்க.. திரும்பிப் பார்த்தார் ராகவன்.. அங்கே முடிக்கப்படாத கோலமும்.. கோலமாவு கிண்ணமும் இருக்க.. பெருமூச்சுடன் வண்டியைக் கிளப்பினார்.

எதை எதையோ எண்ணியவாறே.. வண்டியில் சென்றவருக்கு.. அந்த மண்சாலையில் ஓரத்தில்.. யாரோ ஒருவன் குப்புற விழுந்து கிடக்க.. வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று பார்க்க.. அது அவர் சித்தப்பா பையன் ரகுவரன்.

முப்பத்து ஏழு வயதில் மனைவி குழந்தைகள் என மகிழ்வான வாழ்வை வாழாமல்.. தனிமரமாக நின்று.. குடித்துக் குடித்து இப்படி வாழ்க்கையை அழித்துக் கொள்கிறானே என ஆதங்கம் பொங்க.. அவனை எழுப்பியவர்.. அங்கிருந்த சிலாக்கல்லில் அமர வைத்துவிட்டு.. கொப்பில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் முகம் கழுவி விட.. லேசாக கண்களைத் திறந்தவன்.. அண்ணனைக் கண்டதும் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.
அவனை கவலையுடன் பார்த்த ராகவன்.. அங்கே வந்த மினி ஆட்டோவை நிறுத்தி.. தெரிந்த பையன் தான்.. அவனிடம் ரகுவை தங்கள் தோப்பு வீட்டில் விடச் சொல்லி.. அவனை வண்டியில் ஏற்றி விட்டார்.

காட்டிற்குச் சென்று ஒரு பார்வை பார்த்தவர்.. வீடு திரும்பும் வழி எங்கும் ரகுவின் நினைவு தான்.. சிறு வயதிலேயே தாயை இழந்து.. தந்தையின்
மறுமணத்தை ஏற்று.. காதலில் தோல்வி கண்டு.. அப்பப்பா.. அவனுக்கு மட்டும் ஏன் தான் இத்தனை கஷ்டங்களோ.. என எண்ணியவாறே வீட்டுக்குள் நுழைந்தார்.

அவரது அப்பா நாராயண சாமி.. முடி திருத்தப்பட்டு.. இத்தனை நாட்களில் இல்லாத அளவு வெளிச்சம் சுமந்த முகத்துடன் பேத்தியின் ஃபோனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.. முகிலன் எங்கேயோ வெளியில் சென்றிருக்க.. சமையலறையைக் கடக்கும் வேளை உள்ளே மகள் மற்றும் மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது.

அனைவரையும் விட அவர் மனைவி தனம் தான் மகளுக்காக மிகவும் ஏங்கினார்.. இருவரும் சில நேரம் அம்மா-மகள், சில நேரம் அக்கா-தங்கை.. பல நேரங்களில் தோழிகள்.. அப்படியொரு பிணைப்பு.. அமிர்து பாட்டி கூட முதல் எல்லாம் நொடிப்பார் "பெருமைக்கு புள்ளை வளக்கறா.. பொட்டப்புள்ளையை இப்படியா வளப்பாங்க.. கண்டிச்சு வள" என விதம் விதமாகத் திட்டுவார்.. ஆனால் அவர்களின் பாசத்தைக் கண்டு அவரே சில வருடங்களில் தன்னை மாற்றிக் கொண்டார்.

யூடிபில் தாத்தா பார்த்த பாடல் முடிந்திருக்க "கண்ணா.. பாட்டு முடிஞ்சு போச்சு.. வந்து மாத்திக் குடு" என அழைக்க.. மகிழ் வெளியே வர.. அதற்குள் ராகவன் "நைனா.. வர வழியில ரகுவைப் பாத்தேன்.. குடிச்சுட்டு ரோட்ல உழுந்து கிடக்கறான்.. பாக்கவே சங்கடமா இருக்கு.. நம்ம மோகனோட ஆட்டோல ஏத்தி தோட்டத்தில விடச் சொன்னேன்" என்றார்.

ஃபோனை பேத்தியின் கையில் கொடுத்தவர் "அவனுக்குப் புடிச்சிருக்கு கிறுக்கு.. அவனைச் சொல்லி என்ன பண்றது அவங்கப்பனைச் சொல்லோனும்" என்றார் வெறுப்பாக.

அதுவரை பேசாமல் இருந்த அமிர்து பாட்டி "இந்தப் பையன் தான் ஆகட்டும்.. இங்க வரலாம்ல.. என்னைக்காவது நான் அவனை கொழுந்தன் பையனாப் பாத்தனா.. உன்னையை கூட அத்தைங்க வளத்தாங்க.. நான் தானே அவனைப் பாத்துகிட்டேன்.. இன்னைக்கு அவனுக்கு என்னைய வந்து பாக்கக் கூட தோணலை" என்றார் கண்களில் நீர் வடிய.

"சின்ன நைனா மேல தப்பு இல்லைம்மா.. எல்லாம் அந்தம்மா பண்றது தான்.. பெத்த பையன் இப்படி சீரழியறதை பாத்துட்டு எப்படித்தான் சும்மா இருக்காரோ" என்றார் ராகவனும்.

"அதச் சொன்னதுக்குத் தானே அவனுக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துச்சு.. அவனவன் விதிப்படி நடக்கட்டும்.. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்.. என் கண்ணு முன்னாடியே எம்பட வம்சம் படற பாட்டைப் பாக்கனும்னு" என துண்டை உதறித் தோளில் போட்டபடி பின்வாசல் பக்கம் நகர்ந்து சென்றுவிட்டார்.

பாட்டி சமையலறைக்குள் சென்று மறைய.. ஃபோனை சார்ஜில் போட்டபடியே அத்தனையும் கேட்டவளுக்கு மனம் பாரமாகிப் போனது.. இதையெல்லாம் பார்க்கப் பிடிக்காமல் தானே அவள் வெளியூர் சென்றது.. சித்தப்பா இப்படி இருக்க தானும் ஒரு காரணம் தானே.. என மனதிற்குள்ளேயே அழுதவள்.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேர யோசனைக்குப் பின் ஏதோ முடிவெடுத்தவள்.. அம்மா
பாட்டியிடம் பேசிவிட்டு.. சாப்பாட்டை கேரியரில் எடுத்துக் கொண்டவள்.. பாட்டி சிலுப்பி வைத்திருந்த மோரையும் ஒரு தூக்குபோசியில் ஊற்றியவள்.. தங்கள் தோப்பு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு கிலோமீட்டர் தூரம்.. அவளது சைக்கிள் இன்னும் ரெடி பண்ணாமல் இருப்பதால்.. நடந்தே சென்றாள்.. அங்கே சுத்தம் செய்து கொண்டிருந்த மணி அண்ணனிடம் ஓரிரு வார்த்தை பேசியவள்.. தன் சைக்கிளை ரெடி பண்ணித் தரச் சொல்லிவிட்டு.. மெதுவாக வீட்டை நோக்கி நடந்தாள்.
திண்ணையில் தான் கொண்டு வந்த பையை வைத்தவள்.. நாதாங்கி (தாழ்) போடாமல் வெறுமனே சாற்றியிருந்த கதவைத் திறக்க.. ரகு சுவற்றின் ஓரமாய் நல்ல தூக்கத்தில் இருந்தான்.

வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்ட.. அது ஒரு சமையலறை, ஒரு ஆசாரம்.. ஒரு பெட்ரூம்.. பின்பக்கம் இடம் விட்டுக் கட்டப்பட்டிருந்த சாதாரண ஓட்டு வீடு தான்.. மகிழுக்கு மிகவும் பிடித்த இடம்.. இங்கு தான் அவள் சிறுவயதுப் பொழுதுகள் மகிழ்வாகக் கழிந்திருந்தது.

அது மட்டுமா.. என பின்னொட்டாக வந்த நியாபகங்களைத் துரத்தி.. வீட்டின் உள்ளே சென்றவள்.. அழுக்கு உடையில்.. பரட்டைத் தலையுடன் இருந்த சித்தப்பாவை எழுப்ப.. சோம்பலாக கண்ணைத் திறந்தவன் எதிரில்.. முகத்தில் கவலை ரேகைகள் ஓட.. முட்டி போட்டு அமர்ந்தபடி இருந்த மகளைக் கண்டதும்.. அவனது விழிகளில் வெளிச்சம் பரவியது.

"டேய் கண்ணா.. எப்ப வந்த.. எப்படி இருக்க" என அவள் கைகளைப் பிடித்துக் கேட்க.. அவ்வளவு சந்தோஷம் அவன் முகத்தில்.
ஆனால் அவள் அதை கருத்தில் கொள்ளாமல் "நா வரது இருக்கட்டும்.. இதென்ன கோலம்.. ஏன் சித்தப்பா இப்படி இருக்க" என மிரட்டலாகக் கேட்க.. இத்தகைய பேச்சிற்கு கூட ஆள் இல்லாமல் இத்தனை நாள் தவிப்புடன் இருந்தவன் "நான் நல்லாத்தானே இருக்கேன் கண்ணா.. என்னைப் பத்தி யாருக்கு என்ன கவலை சொல்லு" என இறங்கிய குரலில் கேட்டான்.

அவனை முறைத்தவள் "இதை மட்டும் அவ்வா கேட்கனும்.. உன்னை கொன்னே போட்ரும்.. காலையில நைனா உன்ன காலையில அந்தக் கோலத்துல பாத்தேன்னு சொன்னப்ப இருந்து ஒரே அழுகை தான்.. அங்கயாவது வரலாம் இல்ல சித்தப்பா" என வினவியபடியே அவன் அருகில் அமர்ந்தாள்.

அவள் இரண்டு கைகளையும் இறுகப் பற்றியவன் "என்னால தான இன்னைக்கு நீ இப்படி இருக்க.. எந்த மூஞ்சியை வச்சிட்டு பெரிய நைனா வீட்டுக்கு வரது" என தலையை குனிந்து கொண்டான்.

"அதுக்கு தினமும் இப்படி குடிச்சு குடல் வெந்து சாகப் போறியா.. நீ உன் கவலைக்குக் குடிக்கறைன்னு சொன்ன.. உம்மவளுக்கும் கவலை தான்.. நாளைக்கு எனக்கும் ஒரு பாட்டில் சேர்த்தி வாங்கிட்டு வா.. இப்ப போய் குளிச்சுட்டு.. இந்த துணியை போட்டு வா" என வீட்டில் இருந்து புதிதாக எடுத்து வந்திருந்த வெள்ளைச் சட்டையும்.. வேட்டியும் அவன் கையில் திணித்தாள்.

அவள் கூறியதில் அதிர்ந்து விழித்த ரகு.. பின் வேறு வழியில்லாமல் நகர "சித்தப்பா" என்ற குரலில் திரும்பிப் பார்க்க.. இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள்.. வெளியே சென்று வேப்பங்குச்சியை ஒடித்து வந்து அவன் கையில் கொடுத்துட்டு வெளியே வந்தாள்.

பதினொரு மணி தான் என்றாலும் வெயில் நன்றாக உரைத்தது.. ஆனாலும் அதை தோப்பின் குளுமை பெருமளவு விரட்டியடிக்க.. உடலோடு மனமும் சேர்ந்து குளிர்ந்தது அவளுக்கு.

ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீடு.. பின்புறம் நெல் வேக வைத்து காயப் போடுவதற்காக வாசல் வைத்து கட்டப்பட்டிருக்க.. முன்புறம் தான் இடம் இருந்தது.. அங்கு பூச்செடிகளுக்கு மட்டுமே அனுமதி.. காய்ச்சுத் தொங்கும் மரங்கள் வீட்டின் முன்பு வைக்கக் கூடாது என அவ்வா கூறுவதால்.
அதனால் இந்த வீட்டில் தான் பூச்செடிகளுடன் மாதுளை, நெல்லி, மருதாணி, ராமர் சீதாப்பழம் என வைத்திருந்தனர்.. இது தோப்பின் கடை கோடியில் இருந்ததால் நல்ல வசதியாகப் போயிற்று.

சுற்றிச் சுற்றிப் பார்த்தவளின் கண்களில்.. மூலையில் தலையசைத்து இவளை வாவென அழைத்தபடி நின்றிருந்தது அந்த மாமரம்.. அவள் இங்கிருந்து செல்லும் போது.. இளங்கன்றாய் இருந்த மரம்.. இன்று நான்கு வயதில்.. அடி பெருத்து.. கோடை என்பதால் பூ வைத்து இருக்க.. ஆச்சரியமாய் அதை நெருங்கினாள்.

நற்றிணையில் ஒரு பாடல் வரும்.. நெய்தல் நிலத் தலைவி ஒருத்தி சிறுவயதில் புன்னை மரக் கொட்டையை ஒளித்து வைத்து விளையாடி.. அதை மறந்து செல்வாள்.. பருவத்தில் பெய்த மழையின் தகையால்.. புன்னை விதையானது அம்மணற் பரப்பில் வளரத் துவங்கும்.. இவளும் ஆசை ஆசையாக அதற்கு பால் நெய் என ஊற்றி வளர்ப்பாள்.. அவளோடு புன்னை மரமும் வளரும்.. அந்த மரத்தின் மீது கொண்ட பற்றைக் கண்ட அவள் அன்னையும் 'நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்பார்.. அதாவது அந்தப் புன்னை மரத்தை இவள் தங்கை எனக் கூறுவார்.

அம்மரத்தடியில் தலைவனோடு விளையாடும் போது.. தங்கை பார்க்கிறாள் என நாணம் கொண்டு தலைவனின் அணைப்பைத் தடை செய்வாள்.. சங்கம் தொட்டு மண்ணையும்.. மண்ணோடு உறவாடி வளரும் மரங்களையும் சொந்தமாக எண்ணும் குணம் தமிழர்களின் தனி இயல்பாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்த மரத்திற்கும் அவளிற்கும் கூட அப்படி ஒரு தொடர்பு உண்டு.. இது அவள் சும்மா வீசி எறிந்ததில் இருந்து முளைத்து வந்திருந்தாலும்.. ஏதோ தான் பார்க்க வளர்ந்த குழந்தையின் வளர்ச்சி போல.. மனதிற்கு மகிழ்வு அளித்தது.
அதைச் சுற்றிச் சுற்றி வந்து அவள் பார்க்க.. யாரோ அவள் சுடிதார் டாப்பை இழுப்பது போல இருக்க.. மரத்தில் இருந்து தன் பார்வையைத் திருப்ப.. அவள் முட்டி உயரத்திற்கு ஜெர்மன் ஷெப்பர்டு ஒன்று வாலை ஆட்டிக் கொண்டு நின்றிருக்க.. அவளால் நம்பவே முடியவில்லை.

ஆச்சரியமாக அதன் அருகில் குனிந்து தலையை தடவ "டேய்.. சீசு குண்டா.. எப்படிடா இருக்க" என பாசமாகக் கேட்க.. அவனும் தன் வாலை ஆட்டி அவள் மேல் உராய்ந்து தன் பாசத்தை வெளிப்படுத்தியது.. 'தோப்பைச் சுற்றி கம்பி வேலி போட்டிருக்கும் நிலையில் எப்படி இவன் உள்ளே வந்தான்' என யோசித்தவள்.. அவன் காதை திருகி "எப்படி டா வந்த.. அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் வந்து கையை காலை கிழிச்சுகிட்டியா" என அவனை ஆராய.. சீசர் அவளிடம் தன் முன்னங்கலைத் தூக்கி கொடுத்தான்.

"கொழுப்புடா உனக்கு" என திட்டியவளைத் தொடர்ந்து.. "சீசர்" என்ற கணீர்க்குரல் காதைத் துளைக்க.. ஒரு நிமிடம் ஆணி அடித்தாற் போல நின்றாள்.

'அவன் குரல் தானே இது' என மூளை வேகவேகமாக சொல்ல.. இதயம் 'கரண்டுக்குப் பொறந்தவளே.. உன்னால எனக்கு எப்பவும் திக்கு திக்குனு இருக்கு' என அவளைத் திட்டியது.. அவன் காலடியோசை கூட அவளுக்குப் பரிச்சயம்.. அவன் நெருங்குவதை உணர்ந்தவள் "நீ போ சீசர்" என்றுவிட்டு வேகமாக வீட்டை நோக்கிச் சென்றுவிட்டாள்.

போகும் அவளை ஏக்கப் பார்வை பார்த்த சீசரை அவன் இன்னொரு அதட்டல் போட.. வெகு வேகமாக கம்பியை எகிறி குதித்து அவன் அருகில் சென்றது.
வீட்டின் உள்ளே ஓடியவள் கால்கள் தள்ளாட சுவற்றில் சாய்ந்து.. கண்களை மூடி.. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள.. ரகு குளித்து முடித்து வரவும் சரியாக இருந்தது.

அவளது பயந்த தோற்றம் கண்டவன் "கண்ணா.. என்ன ஆச்சு" என வினவ.. ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து விட்டு.. பின்புறம் சென்று கையை கழுவிவிட்டு வந்தாள்.

ரகுவை அமர வைத்தவள்.. கொண்டு வந்த சாதத்தைப் பறிமாறினாள்.. பிசைந்தவன் முதல் வாயை.. அவளுக்குக் கொடுக்க.. அவளும் வாங்கிக் கொண்டாள்.

"படிப்பு முடிஞ்சுது தானே.. மேல என்ன செய்யப்போற" என்றான் ரகு சாப்பிட்டபடியே.. மகிழும் "வேலைக்குத் தான்.. ஆனா காலேஜா இல்லை ஸ்கூலானு கன்ஃபியூஸனா இருக்கு சித்தப்பா" என்றாள் யோசனையுடன்.
"உனக்கு சௌகரியப்பட்டது செய்.. கொஞ்ச நேரம் முன்னாடி இங்க ராஜா வந்தானா.. அவனுக்கு பயந்து தான் நீ உள்ள ஓடி வந்தியா" என சலனமின்றி கேட்க.. இதற்கு என்ன பதில் சொல்வது என விழித்தவள்.. அமைதியாகிவிட்டாள்.

அவள் அமைதி என்ன உணர்த்தியதோ அவனுக்கு "நான் வேணா.. அவன்கிட்ட பேசவா.. எல்லாத் தப்பும் என்மேல தான்.. என் பொண்ணு" என்றவனை இடைவெட்டியவள் "பேசாம சாப்பிடு சித்தப்பா.. முடிஞ்சதைப் பேசி எதுக்கு ஆகப் போகுது.. அவனைக் கண்டு நான் ஏன் பயப்படனும்.. என்னைப் பத்தி யோசிக்கறதை விடு.. முதல்ல நீ என்ன பண்ணலாம்னு யோசி.. இப்படியே இருக்கப் போறியா" என கேட்க

"எனக்கென்ன கண்ணா.. இன்னும் நாலு வருஷமோ அஞ்சு வருஷமோ.. என் விதி அவ்வளவு தான்.. என்னை இப்படியே விடு.. நீ வாழ வேண்டிய பொண்ணு.. உன் வாழ்க்கை தான் முக்கியம்" என்றவன் எழுந்து கை கழுவச் சென்றுவிட்டான்.

போகும் அவனையே பார்த்தவள்.. 'ஒரே நாள்ல எல்லாம் மாறாது.. கொஞ்சம் பொறுமையா இரு' என்ற மனசாட்சியின் அறிவுரைப்படி அவளும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.. ஆனால் மனதில் சின்னத் தாத்தாவைப் பார்த்துப் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

அதன்பின் அவள் படிப்பைப் பற்றியும்.. மாமா வீட்டைப் பற்றியும் ரகு விசாரிக்க.. அவளும் ஆர்வமாக நான்கு வருடக் கதையைச் சொன்னாள்.. அவள் அம்மாவின் ஃபோன் வரும் வரை அவனோடு பேசியவள் "நைட்டு முகிட்ட சாப்பாடு கொடுத்து விடறேன்.. எங்கயும் போய்டாதே சித்தப்பா" என கட்டளையுடன் விடை பெற்றுச் சென்றுவிட்டாள்.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை.. ராஜாவின் குடும்பத்தார் அவன் அப்பாரின் சமாதிக்குச் சென்று விளக்குப் ஏற்றி.. பூ வைத்து வழிபடுவர்.. ஊர் சுடுகாட்டில் புதைத்தால் பத்தோடு பதினொன்றாகப் போய்விடும் என்பதால்.. அவர்கள் இடமே ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்க.. அங்கேயே புதைத்து.. அவரின் நினைவாக மண்டபமும் எழுப்பியிருந்தனர்.

இன்று வெள்ளி என்பதால் அனைவரும் வந்திருந்தனர்.. அப்பத்தாவிற்கு கால்வலி என்பதால்.. ராஜா காரில் அழைத்து வந்திருந்தான்.. அனைவரும் உள்ளே செல்ல.. வெளியே நின்றிருந்த சைக்கிளைப் பார்த்தபடி.. யோசனையாய் புருவம் சுருக்கியபடி அவனும் உள்ளே சென்றான்.

மழை வெயிலில் இருந்து காக்க.. நான்கு தூண்களும்.. மேற்கூரையும் கொண்ட.. பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இருந்த மண்டபம் அது.. மீதி அனைத்து இடமும் மண் தரை தான்.. உட்கார மட்டும் செங்கற்களும்.. கடப்பா கல்லும் உபயோகப்படுத்தி இரண்டு மேடை அவ்வளவே.

இவர்கள் உள்ளே செல்லும் வேளை.. தரையில் மண்டியிட்டு.. கண்களில் நீர் வழிய.. எதையோ முனுமுனுத்தபடி.. விழி மூடி இருந்தாள் மகிழினி.
ராஜா, அவன் அம்மா, அப்பா, அத்தை மற்றும் அப்பத்தா என அனைவரும் அவளை வேடிக்கை பார்த்தபடி நிற்க.. ஏதோ உள்ளுணர்வில் நிமிரந்தவள்.. இவர்களைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்து எழுந்து நின்றாள்.

அவளை நோக்கி ஒரு எட்டு வைத்த ராஜாவின் அம்மா சகுந்தலாவை கண்டு கொள்ளாமல்.. யாரையும் நிமிர்ந்தும் பாராமல்.. கண்ணீரைத் துடைத்து வீசியபடி அவள் வெளியேறிவிட.. அனைவரின் பார்வையும் ராஜாவை குற்றவாளியாக்க.. அவனோ வாயிற்படியில் அவள் வைத்துவிட்டுச் சென்றிருந்த பன்னீர் ரோஜாவைப் பார்த்தபடி இருந்தான்.

இரவு அவளைப் பற்றியே யோசித்தபடி மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருந்தவனின் கவனத்தை எங்கிருந்தோ வந்த பாடல்
ஒன்று ஈர்த்தது..

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்


வாலியின் வைர வரிகள்.. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.. என்றவனது மனம் எதை எதையோ எண்ணித் தவித்தது.. கண்களை இறுக மூடி யோசித்தான்.. இறுதியில் ஏதோ முடிவெடுத்தவன் முகத்தில் அப்படியொரு மந்தகாசமான புன்னகை.

நாயகன் வருவான்..
 
மிகவும் அருமையான பதிவு,
கோகிலவாணிஅர்ஜுனன் டியர்
 
Last edited:
நம்ம ஊர் ஈரோடு தமிழ் பேசும் நடை சூப்பர்
 
Top