Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 16

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 16
நெடு நேரமாக அருணை அவனது இருக்கையில் காணாமல், அபி அமைதிகொள்ளாமல் தவித்திருந்தாள்,நொடிக்கொரு முறை அவன் வருகிறானா என்று ஆர்வமாக வாயிலை பார்த்துவிட்டு அவன் வராமல் போகவே ஏமாற்றத்தில் உதட்டை பிதுக்கினாள்..
“எங்க போய் தொலைஞ்சான்..? இன்னிக்கு அவன் கூட பைக்ல போலாம்னு நினைச்சா இப்படி சொதப்பறானே.. ஆபீஸ் டைம் கூட முடியப்போகுது, இவ்ளோ நேரம் சீட்ல இல்லாம எங்கயும் போகமாட்டானே,எங்க போய்இருப்பான்..?”என்று அதே யோசனையாக இருந்தாள்.
அவனது எண்ணுக்கு முயன்று பார்த்தாலும் சுவிட்ச் ஆப் என்று வரவே, அவளது சஞ்சலம் மேலும் அதிகரித்தது.. யாரோ கதவை திறக்கும் சத்தத்தில் கூட அவன் தானோ என்று ஆர்வமாக பார்த்து ஏமாந்து போனாள்..
ஒவ்வொருவராக எல்லாரும் வேலை முடிந்து வெளியேறிய போதும், இவள் மட்டும் அவனது வருகைக்காக வழி மேல் விழிவைத்து காத்திருந்தாள்..
அவளுக்கே அவளது செய்கை முட்டாள்தனமாக பட்டது..
“அபி.. என்ன ஆச்சு உனக்கு..? நீ ஏன் அவனை சார்ந்திருக்கற? ஒரு மாசத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தன்னு நெனைச்சி பாரு, எவ்வளவு திடமான பொண்ணா, யாரையும் எதுக்கும் எதிர்பார்க்காமல், தனித்துவத்தோடு இருந்த, ஆனா இப்போ வீட்டுக்கு போக கூட இன்னொருத்தர் துணை தேடுற அளவுக்கு பலவீனம் ஆகிட்டியா?
ஏன் இப்படி உன்னோட அடையாளத்தையும்,தனித்துவதையும்விட்டுட்ட ?
யாரையும் கண்மூடித்தனமான நம்பாத, உன்னோட சுயத்தையும் ,சுய மரியாதையையும் விட்டுடாத..”என்று அவளது மனசாட்சி அறிவுறுத்தியது.
ஆனால் “அவனோடு இருக்கும்போது நான் ரொம்ப பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் உணருறேன்..” என்று அவளது ஆசை கொண்ட மனம் அவளுக்காக வாதாடியது..
“அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கறது தப்பு இல்லை, ஆனா அதுக்கு அடிமை ஆகுறது ஆபத்துலமுடியலாம், நினைச்சி பாரு, இந்த பாசமும் அக்கறையும் இல்லாத நாள் வரும்போது அதை உன்னால தாங்க முடியுமா..?”அவன் உன்னை விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ? மறந்துட்டியா அவனும் இந்த சுயநல ஆண்கள் கூட்டத்தில் ஒருத்தன் தான் என்று..?” மனசாட்சி மீண்டும் எச்சரித்தது..
“இல்லை… அருண் அப்படி பட்டவன் கிடையாது.. நான் அவனை முழுசா நம்புறேன், நீ இந்த மாதிரி உளறலை மொதல்ல நிறுத்து..”என்று அவளது மனது எதிர்வாதம் செய்யவும்,
அதற்குமேல் தனக்குள்ளேயே நிகழும் இந்த உள்போராட்டத்தை தாங்கமுடியாமல் எழுந்து விட்டாள்.
காஃபிடீரியாவிற்கு சென்று ஒரு காபி ஆர்டர் செய்துவிட்டு உட்கார இடம் தேடியவளின் கண்களில், அடக்கமுடியாமல் அழும் நித்தியை அருண் கையை பிடித்து சமாதானப்படுத்தும் காட்சி பட்டது.. கிட்டத்தட்ட காலியாக இருந்த அந்த காஃபிடீரியாவில் இருந்த ஒரு சிலரும் அந்த நாடகத்தை ஆர்வமாக கவனித்தனர்.
அபிக்கு ஒருகணம் உலகம் சுழலாமல் நின்றது போலவும், அதற்கு பதிலாக இவள் மட்டும் சுற்றி சுழன்று ஏதோ சுழலில் சிக்கியதுபோலவும் தோன்றியது.
அருண் அவ்வளவு கரிசனத்தோடும் அன்போடும் அந்த நித்யாவின் கையை பற்றிக்கொண்டிருந்ததை அதற்குமேல் ஒரு கணம் கூட காண சகிக்காமல் அவள் கண்கள் குளமாகி பார்வையை மறைக்க, சட்டென்று அந்த இடத்தை விட்டு வெளியேறிய போதும் அருணின் “ஐ லவ் யூ டூ நித்தி..” காதில் விழுந்து மனதில் இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை..
உயிரற்ற வெறும் உடலாக நடந்து எப்படி வீட்டுக்கு வந்தோம் என்று கூட உணராமல் ஒருவாறு வீடு வந்து சேர்ந்தாள், வரும் வழியெல்லாம், அருண் நித்தியின் கையை பற்றி கூறிய வார்த்தைகளே காதில் எதிரொலித்துக்கொண்டிருக்க ,
உணர்வுமரத்து போய், உடல் கூடாவது போல் உணர்ந்தாள்…
வீட்டுக்குள் நுழைந்து நேராக குளியலறையிக்கு சென்று ஷவரை திறந்துவிட்டு அதன் அடியில் நின்றாள், ஜில்லென்ற நீர் அவள் உடலில் ஊசியாக குத்தியது ஆனால் அதை கூட உணராமல், மனம் ஒரே விஷயத்திலேயே உழன்று கொண்டிருந்தது..
அந்த மூணு வார்த்தைகள், அவன் எப்போது சொல்லுவான் என்று அபி ஏங்கி போய் இருந்த அந்த மந்திர வார்த்தைகள் ,கடைசியாக கேட்டுவிட்டாள், ஆனால் அது அவளுக்காக சொல்லப்படவில்லை வேறு யாருக்கோ சொல்லப்பட்டது..
"எப்படி முடிந்தது அவனால்? இவ்வளவு நாள் என்னோடு பழகியதெல்லாம் பொய்யா? இல்லை அதெல்லாம் அவனுக்கு ஒண்ணுமே இல்லையா? நான் வெறும் டைம் பாஸ்ஆ?" கோபம் வெறுப்பு ,வலி எதுவுமே தோன்றாமல் ஐயோ என்று ஏதோ பெரிதாக இழந்தது போன்ற வெறுமை மட்டுமே எஞ்சி இருந்தது..
அவனுடைய குரல் அவள் காதில் எதிரொலித்து அவளை எள்ளி நகையாடுவதை போன்ற பிரம்மையை தாங்க முடியாமல், அதிலிருந்து தன்னை காத்துக்கொள்பவள் போல் சுருண்டு அமர்ந்து தன் கைகளால் காதை அடைத்துக்கொண்டு முகத்தை முழங்கால்களுக்கிடையில் புதைத்துக்கொண்டாள்..
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியாது, எங்கோ தூரத்தில் தெளிவில்லாமல் கேட்ட அருணின் குரலும் அதை தொடர்ந்து கதவை பலமாக தட்டும் சத்தமும் ஒருவாறு அவளது செயலிழந்து போன காதுகளை எட்ட ,சிறிது உணர்வு பெற்றவளாக தன் மரத்துப்போன கைகால்களை மிகுந்த சிரமத்துடன் அசைத்து மெதுவாக எழுந்து கதவை திறந்தவள் அதற்குமேல் முடியாமல் அவன் மேலேயே மயங்கி விழுந்தாள், அவள் கீழே விழுந்து விடாமல் அவசரமாக தன் வலிய கரங்களில் தாங்கினான் அருண்.
மறுபடியும் அபிக்கு நினைவு வந்தபோது அவள் அவளது படுக்கையில் இருந்தாள் ,தலை விண்விண்ணென்று வலித்தது,உடல் முழுவதும் வெப்பம் தகித்தது. , சிரமத்துடன் கனத்த இமைகளை பிரித்து சுற்றும் முற்றும் பார்த்த போது அருண் தன் படுக்கையின் அருகில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அபிக்கு சுய நினைவு வந்ததை அறிந்ததும் அருண் அவள் அருகில்வந்து பரிவுடன் நெற்றியை தொட்டு சூடு குறைந்திருக்கிறதா என்று பார்த்தான்.
“என்ன ஆச்சு அபி? எதுக்காக இப்படி கோல்ட் வாட்டர்ல குளிச்சி ஃபீவர இழுத்துவிட்டுக்கற? என்ன ஏதாவது பிரச்சனையா..?வீட்டு நியாபகம் வந்துடுச்சா? அதுக்காக உன்னை போட்டு இப்படி கஷ்ட படுத்தணுமா? எவ்வளவு நேரம் ஷவர்ல இருந்தியோ தெரியலை
நல்லவேளை நான் உன்னை பார்க்க வந்தேன்… டோர் ஓபன்ஆ இருந்தது… பாத்ரூம்ல ஷவர் சத்தம்கேட்டது ..சோ நீ வெளிய வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பட் நீ வரவே இல்லை எனக்கு ரொம்ப கவலையாகிடுச்சி அதான் கதவை தட்டினேன், தாங்க் காட் நீ கதவை தொறந்த ,ஆனா நீ இருந்த கோலம் இருக்கே, அதுக்கும் மேல நீ மயங்கி விழவும் எனக்கு உயிரே போச்சி.. ப்ளீஸ் அபி இனிமேல் எந்த காரணத்துக்காகவும் இந்த மாதிரி பைத்தியக்கார தானம் பண்ணாத..
என்ன பிரச்சனையா இருந்தாலும் பார்த்துக்கலாம், உன்னை மட்டும் கஷ்டப்படுத்திக்காத..”
என்று உண்மையான வலியுடன் கூறவும்
அவனுடைய குரலில் அவளுக்கு கண்களின் ஓரம் கரித்தது ,
“கடவுளே இதெல்லாம் பொய்ன்னு நம்பகூட முடியலையே..”
அருண் அவளது கண்களில் வழிந்த கண்ணீரை மென்மையாக துடைத்துவிட்டு,
“எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, உன்னை பெட்ல படுக்கவச்சிட்டு டாக்டர கூட்டிட்டு வர வரைக்கும் என் உயிர் என்கிட்ட இல்லை தெரியுமா?”
என்று அவன் பாட்டில் பேசிக்கொண்டேபோக ,அபிக்கு கோபம் மெல்ல ஏறத்தொடங்கியது..
“என்ன தைரியம் இருந்தால், அந்த நித்யாவை தொட்ட கையால் என்னை தொட்டு தூக்கி இருப்பான்..?”
என்று எண்ணியவள்,சட்டென்று தான் நனைந்த உடையில் இல்லாமல் , உலர்ந்த இரவு உடையில் இருப்பது உறைக்க, கலவரமடைந்தவளாக
"என்னோட டிரஸ்..” என்று அதுக்கு மேல கூற முடியாமல் தயங்கவும் அவளது சங்கடத்தை உணர்ந்து
“நீ தொப்பலா நனைஞ்சி இருந்த உன்னோட ஃப்ரெண்ட் காவ்யாவும் இல்லை..அதனால வேற வழி இல்லாம.. என்று இழுத்தவன் சிறு அமைதியின் பின் , “ஆனால் நான் லைட் ஆப் பண்ணிட்டு தான் சேஞ்ச் பண்ணினேன்..”
அவனும் இந்த விளக்கமெல்லாம் கூறும் போது தர்மசங்கடமாக உணர்ந்தான் ,அந்த நேர அவசரத்தில் அபியை சுயவுணர்விற்கு கொண்டுவருவதும் அவளது நடுக்கத்தை நிறுத்துவதும் மட்டுமே அவனது முதல் கடமையாக பட்டது அதற்குமேல் அவன் எதுவும் யோசிக்கும் நிலைமையில் இல்லை,எனவே இந்த அவ்விளக்கமே அவனுக்கு தேவை இல்லாததாக பட்டது …
“சரி இப்ப எதுவும் பேச வேண்டாம் மொதல்ல இந்த சூப்ப குடி…”என்று பேச்சை மாற்றினான்.
“எனக்கு வேணாம்..” என்று மறுத்த அவளது குரல் அவளுக்கே காற்றாக தான் கேட்டது.
“டாக்டர் மெடிசின் சாப்பிடுறதுக்கு முன்னாடி ஏதாவது சாப்பிட சொல்லி இருக்காரு அபி, ப்ளீஸ் சாப்பிடு…” என்றான் மன்றாடும் குரலில்..
அபிக்கும் பசி வயிற்றை கிள்ளியது, ஆனால் எழுந்து அமர்ந்து சாப்பிடக் கூட தெம்பு இருப்பதாக தெரியவில்லை, கையை கூட அசைக்க முடியாதளவுக்கு உடல் முழுவதும் வலி வாட்டியது, அபி எழமுடியாமல் சிரமப்படுவதை கண்டு அவள் எழுந்து சாய்வாக அமர உதவினான் அருண், பிறகு பக்கத்தில் அமர்ந்து அவனே ஊட்டத்தொடங்கவும் ,அபி வேறு வழியில்லாமல் விழுங்கி வைத்தாள்..
அவள் சாப்பிட்டு முடித்ததும், மருந்து சாப்பிடவைத்து ,அவளை மீண்டும் படுக்கவைத்து ,கழுத்துவரை நன்றாக போர்த்திவிட்டான் ,பிறகு அருகில்ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அதில் அமர்ந்து கொண்டு, கால் நீட்ட வசதியாக ஒரு டீ பாயை இழுத்துபோட்டுக்கொண்டு அவன் அங்கேயே உறங்க ஆயுதமாகவும் அபி அதிர்ந்து போனாள், அதிர்ந்து விழித்த அவளை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு,
"உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு நான் எப்படி போவேன்? காவ்யா கூட ஊர்ல இல்லை, இன்னிக்கு நைட் நான் இங்கதான் இருக்க போறேன், நீ நிம்மதியா தூங்கு, நடுவுல ஏதாவது வேணும்னா என்னை எழுப்பு..” என்று அதிகார தொனியில் கூறிவிட்டு, அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. நல்லவன் வேஷம் போடுறதுல இவனை அடிச்சிக்க ஆள் கெடையாது..” என்று ஏளனமாக உதட்டை சுளித்தாள்,
"என் வீட்டுக்குவந்து என்னையே அதிகாரம் பண்ண இவன் யாரு?” என்று அவனை ஆத்திரமாக முறைத்து பார்க்க,
"முறைச்சு பார்த்தது போதும் தூங்கு..”என்று கண்ணை மூடியவாறே கட்டளையிட்டான் அருண்.. அவனுக்கு முகம் காட்டாமல் மறைத்தவாறு தலை வரை இழுத்துபோர்த்திக்கொண்டு கண்களை இறுக்கமூடிக்கொண்டாள் அபி, சிறிது நேரத்தில் மருந்து வேகத்தில் அப்படியே உறங்கியும் போனாள்.
ஆனால் அருண் தூக்கம் பிடிக்காமல் அன்றைய நிகழ்வுகளை மனதில் அசைபோட்டு கொண்டிருந்தான்.
எப்படியோ இந்த நித்யா பிரச்சனை ஒருவழியாக தீர்ந்தது என்று பார்த்தால் அதற்குள் அபி இப்படி உடம்பை கெடுத்துக்கொண்டு படுத்திருக்கிறாள்..
என்ன ஆச்சு இவளுக்கு ஏன் இப்படி பண்ணினா? அவ்ளோ ஃபீவர் இருந்தது, “கடவுளே அபிக்கு சீக்கிரம் உடம்பு குணமாகனும்” என்று வேண்டிக்கொண்டான்.
அலுத்து களைத்து போய்,முகம் வெளுத்து அயர்ந்து உறங்கும் அபியையே வெகுநேரம் யோசனையுடன் பார்த்துக்கொண்டு இரவுமுழுதும் விழித்திருந்தான் அருண்..
மறுநாள் காலையில், அபிக்கு படுக்கையை விட்டு எழவே மனமில்லை, ஆபீஸ்க்கு போகவும் விருப்பமில்லை, உடலும் மனதும் மிகவும் சோர்ந்து களைத்திருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக அருணின் கேள்வியால் துளைக்கும் பார்வையை சந்திக்க அவள் இப்போதைக்கு தயாராக இல்லை, அவனிடம் பேசினால் ஒன்று கோபத்தில் வெடித்துவிடுவாள், அல்லது உடைந்து அழுதுவிடுவாள் என்று தோன்றியது, இது இரண்டையுமே செய்ய மனமில்லாமல் அவனை தவிர்ப்பதே சிறந்தது என்று தீர்மானித்தாள்.
சுற்றியும் கண்களால் அலசினாள், அருண் எங்கும் அகப்படவில்லை, “போய் தொலையறான்..” என்று அலட்சியமாக நினைக்கும் போதே, அவனை அப்படி நினைக்கிறோமே என்று அதற்காகவும் மனதில் ஒருபுறம் வலித்தது..
அதே சமயம் அருண் கிட்சனுள் இருந்து காலை காபி உடன் அவளை நோக்கி வந்தான்..
"குட் மார்னிங்..”என்று புன்னகைத்துவிட்டு, “எப்படி இருக்க அபி?”என்று அக்கறையாக விசாரித்தான்.
“ஆஹா என்ன நடிப்பு.. நேத்து இதே கரிசனத்தோட அந்த நித்யாகிட்ட பேசினவன் இவன்தான்னு சொன்ன கூட யாரும் நம்ப மாட்டாங்க, இப்ப கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியே இல்லாம என் கிட்டையும் அதே ஃபீலிங்ஸ்ஐ கொட்றான், நல்ல நடிகன்டா நீ..” என்று கசப்புடன் நினைத்தாள்..
அபி ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பதை கண்டவன், அருகில் வந்து அவளது தோளைத்தொட்டு லேசாக அசைத்தான், அபி தீச்சுட்டாற்போல் உடனே அவனது கையை தட்டி விடவும், ஆச்சர்யமாக அவளை பார்த்தான்அருண்..
இருப்பினும் உடனேயே இயல்பிற்கு திரும்பி, “நேத்து ரொம்ப டெம்பரேச்சர் இருந்தது இப்ப எப்படி இருக்கு?” என்று சகஜமாக அவளது நெற்றியை தொட கையை நீட்டவும், அபி வேகமாக பின்னடைந்தாள்.
முகத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தான் அருண்,உடனே கையை முஷ்டியாக்கி கீழிறக்கினான்.
“நான் இன்னிக்கு ஆபீஸ்க்கு வரலை..”என்றாள் அபி, தரையிலேயே பார்வையை பதித்தபடி.
“இட்ஸ் ஓகே, நீ ரெஸ்ட் எடு, நான்வேனா ஹெல்ப்க்கு கூட இருக்கட்டுமா..?” என்றவனை அவசரமாக இடை மறித்து
"நோ தாங்ஸ், ரெஸ்ட்எடுத்தா சரியாபோய்டும், நான் இப்போ தூங்க போறேன், சோ ப்ளீஸ்..” என்று வாயிலை பார்த்து ஜாடையாக கூறவும்
அதற்குமேல் கணமும் தாமதிக்காமல்
“ஓஹ் சாரி, டேக் கேர்..” என்றுவிட்டு, வேகமாக வெளியேறினான்..
“என்ன ஆச்சு, ஏன் இப்படி நடந்துக்கறா?”என்று எதுவும் புரியாமல் குழம்பிப்போனான் அருண்.


இப்படியே நான்கைந்து நாட்கள் கடந்துவிட ,அன்று அருண் ஆபீஸ் வராண்டாவில் நின்று கொண்டு சாலையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.. மனம் மட்டும் அபியின் சமீபகால மாற்றத்திலேயே சுற்றி சுழன்றுகொண்டிருந்தது, சந்தேகத்திற்கு இடமில்லாமல் அபி அவனை தவிர்க்கிறாள் என்பது புரிந்தது, ஆனால்அதன் காரணம் அறியாமல் மண்டை காய்ந்தது அவனுக்கு.. அருணை கண்ட விக்கி அவனிடம் வந்து,
“ஹாய் டா மச்சான்..” என்றான் தன்னுடைய உற்சாக குரலில், ஆனால் அருணிடம் எந்த எதிரொலியும் இல்லாமல் போகவே, அவனது தோளை தொட்டு தன்புறமாக திருப்பி, “டேய் என்னடா பகல் கனவா?”என்றான் விக்கி..
“ஒன்னும் இல்லைடா..” என்றுவிட்டு ,மறுபடியும் முகத்தை திருப்பி கொண்டான் அருண்.
“ஒன்னு இல்லை, அதான் ஒன்பது இருக்குன்னு முகம் சொல்லுதே என்னடா ப்ராபளம்..” விக்கி விடாமல் கேட்கவும்..
“அபி..” என்றான் அருண் ஒற்றைவார்த்தையில்
“அபியா..? ஏன் ஏதாவது சண்டை போட்டியா..?”
“இல்லைடா..எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது திடீர்ன்னு என்னனு தெரியலை அவ என்னை அவாய்ட் பண்ணுறா..”
“டேய் அன்னிக்கு நைட் ஆபீஸ்ல ஒண்ணா இருந்தீங்கன்னு சொன்னியே அப்போ ஏதாவது பண்ணிட்டியா..?”
என்றான் பொய்யான அதிர்ச்சியை காட்டி..
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன கேக்குற? அதெல்லாம் ஒன்னும் இல்லை..அந்த இன்சிடெண்ட்க்கு அப்புறம் கூட அவ நல்லாதான் பேசிட்டு இருந்தா..”
“டேய்.. அதெல்லாம் ஒன்னும் இருக்காது, அபியாவது உன்கிட்ட பேசாம இருக்கறதாவது நான் நம்ப மாட்டேன்
..”
“நிஜமா டா..நாலு நாளா அவ என்கிட்ட முழுசா நாலு வார்த்தைகூட பேசலை..”
“உடம்பு சரி இல்லாம இருந்தாங்க இல்லடா.. அதான் ஒரு மாதிரி இருக்காங்க போல, சரியாகிடும் விடுடா..”
என்று அவனை சமாதானம் செய்ய முயன்றான் விக்கி..
“இல்லைடா இது வேற, அவ என்கிட்ட முகம் குடுத்து பேசமாட்டேங்குறா நானா போய் பேசினாலும் ஒரு வார்தைக்குமேல பதில் சொல்றதில்லை அன்னிக்கு அவளுக்கு உடம்பு சரி இல்லாம போச்சே அப்போ இருந்து தான் இப்படி நடந்துக்குற ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சான் அவளுக்கு என்ன பிரச்சனைன்னே தெரியலை..” என்று மனதில் அடக்கிவைத்திருக்கும் அழுத்தத்தையெல்லாம் விக்கியிடம் கொட்டினான்..
திடீரென்று விக்கி "தோ அபியே வராங்க அவங்ககிட்டையே கேட்டுடலாம்..” என்று, தூரத்தில் இந்த பக்கமாக வந்த அபியை சுட்டி காட்டினான்..
"டேய் வேணாம் டா..”
அருண் அவனை எச்சரித்ததையும் கண்டுகொள்ளாமல் விக்கி ,சத்தமாக அபியை அழைத்தான்..
“அபி..” சிறிது தயங்கியபடி இவர்களிடம் வந்தாள்..
“குட் மார்னிங் அபி..”
“குட் மார்னிங் விக்கி..”
என்றாள், அருணை அறவே ஏறெடுத்தும் பாராமல்,
“என்ன விக்கி எதுக்கு கூப்பிட்டிங்க?”
"அது ஒண்ணுமில்லை அபி இந்த அருண்என்ன சொல்றான்..”

என்றவனை கோபமாக இடைமறித்து
“சும்மா வெட்டிக்கதை பேசத்தான் என்னைக் கூப்பிட்டிங்களா?எனக்கு நெறைய வேலை இருக்கு, ஊர் கதை பேச எனக்கு நேரம் இல்லை..”என்று முகத்தில் அடித்தாற்போல் பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றாள்..
“இப்ப என்ன சொல்ற?”என்பது போல் அருண் விக்கியை பார்க்க..
அவனோ "டேய் பழைய அபியை பார்க்கற மாதிரியே இருக்குடா வரலாறு திரும்பும்ன்னு சொல்லுவாங்களே அது இது தானா?”என்றான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்..
“டேய்..அவ பேசாதது ஒரு விதத்துல கஷ்டம்னா, என்ன காரணம்ன்னு தெரியாம இருக்கறது அதைவிட டார்ச்சரா இருக்குடா அவ இப்படி என்னை அவாய்ட் பண்றது எனக்கு வலிக்குதுடா..”என்றான் உடைந்துவிடும் குரலில்
“டேய் மச்சான் அருண்..என்னடா நீ இந்த மாதிரி எமோஷனல் ஆகறவன் கிடையாதே டா..என்ன ஆச்சு? அபி பேசுவாங்கடா, எல்லாம் சரி ஆகிடும்” என்று அவனை தோளோடு அணைத்து ஆறுதல் கூறி தேற்றினான் விக்கி..
ஆனால் அருணுக்கு தெரியும் இது அவ்வளவு சீக்கிரம் சரியாகாது என்று..எங்கோயோ ஏதோ மிகவும் தப்பாகிவிட்டது என்று அவனது உள்ளுணர்வு கூறியது….
தொடரும்
 
Top