Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 3

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 3

சென்னையில் இருந்த கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரும்படி ராஜ்மோகனிற்கு அழைப்பு வர.... என்னென்ன கேள்விகள் வரப்போகிறதோ என்று மனதிற்குள் பயந்து கொண்டே அவர் சென்னைக்குக் கிளம்பி செல்ல... அங்கே அவர் எதிர்ப்பார்க்காத விஷயம் நடந்தது.

சென்னை சென்றுவிட்டு வந்ததில் இருந்தே.... எதோ யோசனையாக நடமாடிக்கொண்டு இருந்த தன் கணவரை கவனித்த ஜோதிக்கு மனதிற்குள் கவலையாக இருந்தது.

“என்னங்க ஆச்சு? உங்களை ரொம்பப் பேசிட்டாங்களா....”

“இல்ல ஜோதி.... நானும் எதாவது சொல்லப் போறாங்கன்னு பயந்திட்டு தான் போனேன். ஆனா அங்க நடந்த கதையே வேற.....”

“அப்படி என்னதாங்க நடந்துச்சு?”

“இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வரப் போகுது இல்லையா.... அதுல இப்ப ஆட்சியில இருக்கிற அந்தப் பெரிய கட்சியை எதிர்த்து நிற்க.... மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி சேரப் போறாங்க.”

“அதுல எங்க கட்சியும் ஒன்னு. ஆனா சந்தானம் இருக்கிற கட்சி கூட்டணி வச்சுக்க யோசிக்கிறாங்க. அதனால எங்க கட்சியில என்ன நினைக்கிறாங்கன்னா... நானும் சந்தானமும் சம்பந்தி ஆகிட்டா.... இன்னும் கூட்டணி வலுப்படும்னு நினைக்கிறாங்க.”

“அதனால ரிஷிக்கும் சாதனாவிற்கு ம் கல்யாண ஏற்பாடு செய்யச் சொல்றாங்க. அவங்க எல்லாம் ரிஷியும் சாதனாவும் காதலிக்கிறதா தான் நினைச்சிட்டு இருக்காங்க. அவங்க கட்சியில இதைச் சந்தானம் கிட்டயும் பேசி இருப்பாங்க.”


“நல்ல விஷயம் தான.... ஏன் யோசிக்றீங்க? சட்டுபுட்டுன்னு கல்யாண வேலையை ஆரம்பிங்க. எனக்கு அந்தப் பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்ற தன் மனைவியை ராஜ்மோகன் ஆச்சரியமாகப் பார்த்தார்.

“நீ எப்ப அந்தப் பொண்ணைப் பார்த்த?”

“நீங்க சென்னைக்குப் போய் இருந்த போது.... திடிர்ன்னு எனக்கு உடம்பு சரியில்லை.... அப்ப ரிஷி தான் என்னை ஆஸ்பத்ரிக்கு கூடிட்டுப் போனான். அப்ப என்ன நடந்துச்சு தெரியுமா....” என்றவர், இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றதும், ரிஷி முதலில் மருத்துவரை வீட்டிற்குத் தான் வரவழைத்தான். ஆனால் மருத்துவர் இன்னும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றதால்...... அவர் சொன்ன மருத்துவமனைக்குத் தன் அம்மாவை அழைத்துச் சென்றான்.

மருத்துவமனைக்கு அவர்கள் சென்ற போது.... அந்த மருத்துவக் கல்லூரியில் தான் சாதனாவும் மேல்படிப்பு படிக்கிறாள் என ரிஷிக்குத் தெரியாது.

ரிஷி மருத்துவருக்காகக் காத்திருந்த நேரத்தில்... அவன் பார்வையைச் சுழலவிட.... அவன் பார்வை வட்டத்திற்குள் சாதனா அவள் தோழியுடன் எதோ சிரித்துப் பேசியபடி வந்தாள்.

அந்த நேரம் பார்த்து ரிஷியிடம் ஜோதி எதோ கேட்க..... அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும், மகனின் பார்வையைத் தொடர்ந்தவருக்கு, அங்கிருந்த சாதனா கண்ணில் பட்டாள்.

“யாருடா அந்தப் பொண்ணு?” திடிரென்று அவர் கேட்டதும், ரிஷிக்கு சட்டென்று பேச்சை மாற்ற வரவில்லை..... “சாதனா...” எனச் சொல்லிவிட்டான்.

சாதனா யார் என்று ஜோதிக்கு உடனே நினைவு வரவில்லை.... அவர் திரும்ப அவளைப் பார்க்க... இப்போது அவள் இவர்கள் அருகில் வந்திருந்தாள். அதனால் ஜோதிக்கு அவளை அடையாளம் தெரிந்தது.

அதற்குள் இவர்களைக் கவனித்திருந்த சாதனாவிற்கு ப் போய்ப் பேசுவோமா வேண்டாமா என்ற குழப்பம். அவர்களை மீண்டும் பார்த்தவள், ஜோதியின் முகத்தில் தெரிந்த கனிவில் துணிந்து அவர்களை நோக்கி சென்றாள்.

ஜோதிக்கு தன் மகனை காப்பாற்றியவள் என்ற முறையில் சாதனாவின் மீது நல்ல மதிப்பு இருந்தது.

“ஹாய் ரிஷி.... என்ன இந்தப் பக்கம்?” ரொம்பத் தெரிந்தவன் மாதிரி சாதனா பேசிவைக்க.... ரிஷி அவளை முறைத்தான்.

ஐயோ ! ரொம்பக் கோபமா இருக்கானோ என நினைத்தவள், அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஜோதியை பார்த்து ஈ... என்று சிரித்து வைக்க....

“நீ தான் சாதனாவா.... அன்னைக்குப் பேப்பர்ல பார்த்தேன். அதைவிட நேர்ல ரொம்ப நல்லா இருக்க.....” என ஜோதி உளறி கொட்ட.... ரிஷி இப்போது திரும்பி அவரை முறைத்தான்.

“இப்ப இது ரொம்ப முக்கியம்.” என்றவன், மருத்துவர் வருவதைப் பார்த்து எழுந்து நிற்க....

“சாரி ரிஷி, ஒரு எமர்ஜன்சி கேஸ் அது தான் லேட். நீங்க இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்திட்டு வந்திடுங்க.” என அவர் ஒரு தாளை ரிஷியிடம் கொடுத்துவிட்டு, அங்கு யாரவது நர்ஸ் இருகிறார்களா எனப் பார்க்க....

அவர் எண்ணம் புரிந்து “நான் பார்த்துகிறேன் சார்...” எனச் சாதனா சொல்ல....

“சரிமா பார்த்துக்கோ....” என்றுவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் ரிஷியின் அருகில் வந்த சாதனா “யாருக்கு டெஸ்ட்...” என்றபடி அந்தத் தாளை கையில் வாங்கினாள்.

“எனக்குத் தான் மா... நேத்து திடிர்ன்னு தலை சுத்தி கீழ விழுந்துட்டேன், அதுதான்.” என ஜோதி சொன்னதும்,

“வாங்க... நான் உங்களை எல்லா இடத்துக்கும் கூடிட்டு போறேன்.” என்றவள், தன் தோழியைப் போகச் சொல்லிவிட்டு, ஜோதியை அழைத்துக்கொண்டு செல்ல...

இங்க நான் ஒருத்தன் இருக்கிறதை மதிக்கிறாளா பாரு.... இவ இஷ்ட்டத்துக்கு எதாவது பண்ணி வச்சு, என்னைச் சிக்கல்ல மாட்டி விட்டுடுறா.... இதை எவனாவது பார்த்தா.... அவ்வளவு தான் என நினைத்த ரிஷி, வேகமாக அவர்களைப் பின் தொடர்ந்தான்.

அவன் சாதனாவின் உதவியை மறுக்கவே நினைத்தான். ஆனால் ஜோதி மருத்துவமனைக்குச் செல்வது என்றாலே ரொம்பப் பயப்படுவார். அவரைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்ட்டம். ஆனால் அப்படிப்பட்டவரை சாதனா எளிதாகச் சமாளித்தாள்.

இது ரொம்ப ஈஸி ஆன்டி.. பயமே இல்லை... எனப் பேசியபடியே அவரை ஒவ்வொரு பரிசோதனையும் செய்ய வைத்தாள். இதே ரிஷி மட்டும் என்றால்.... அவரைச் சமாளித்துப் பரிசோதனையை முடிக்க மிகவும் தாமதம் ஆகி இருக்கும். ஆனால் சாதனா இருந்ததால்.... எல்லாம் வேகமாக முடிந்தது.

எல்லாப் பரிசோதனைகளையும் முடித்துக் கிளம்பும் போது.... “நீ ஒருநாள் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் சாதனா....” ஜோதி அழைக்க....

“நானா....” சாதனா ஆச்சர்யப்பட....

“ஆம்பளைங்க அவங்களுக்குள்ள என்னவோ பண்ணிக்கட்டும். நாம நமக்குள்ள பேசி பழகுவோம். நீ வீட்டுக்கு வா.... உன்னைப் பார்த்தா ப்ரீதா சந்தோஷபடுவா...”

“ரிஷி தங்கை தான ப்ரீதா... நான் பார்த்திருக்கேன்.”

“ஆமாம். கண்டிப்பா வரணும்.” என்றபடி ஜோதி விடைபெற..... சாதனா ரிஷியை பார்த்தாள்.

அவன் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை... அதனால் இப்போதும் பேச மாட்டான் என நினைத்து அவள் திரும்பி நடக்க....

“சாதனா...” என அழைத்த ரிஷி, அவள் திரும்பி பார்த்ததும் “தேங்க்ஸ்....” என்றவன், மறுநொடி விரைந்து அங்கிருந்து சென்று விட.... சாதனாவிற்கு அவன் அவளிடம் பேசியது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

“எஸ்...” என்றபடி சந்தோஷமாகத் துள்ளி குதித்தவள், சத்யாவை தேடி சென்றாள்.

சாதனாவை சந்தித்ததைப் பற்றிச் சொன்ன ஜோதி “ரொம்ப நல்ல பொண்ணுங்க. நம்ம ரிஷிக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பா.... பேசாம இவளையே நம்ம ரிஷிக்கு பேசி முடிச்சிடுங்க.” என்றார் ஆவலாக.

“எல்லாம் சரிதான். ஆனா உன் பையன் இதுக்கு ஒத்துக்கணுமே.... அவன் தான் அந்த நடிகை நேகா பின்னாடி சுத்திட்டு இருக்கானே....” ராஜ்மோகன் கடுப்புடன் சொல்ல....

“அதனால தான் சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிங்கன்னு சொல்றேன். அந்தப் பொண்ணு எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. நீங்க பேசுற விதமா பேசி.... அவனை ஒத்துக்கு வைங்க.” என்ற ஜோதி எழுந்து உள்ளே சென்றுவிட.... ரிஷியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று ராஜ்மோகன் யோசிக்க ஆரம்பித்தார்.

அவர் நினைத்தால் நேகாவை ஒரு நிமிடத்தில ரிஷியின் வாழ்க்கையில் இருந்து விலக்கி விட முடியும். ஆனால் அவர் எதாவது தடாலடியாகச் செய்தால்... ரிஷி இன்னும் அதிரடியாக எதாவது செய்து வைப்பான்.

ரிஷியை வற்புறுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. அதனால் தான் இவ்வளவு யோசிக்க வேண்டியதாக இருந்தது.

சந்தானம் இரவு உணவின் போது... வெற்றியிடமும் சாதனாவிடமும் இந்த விஷயத்தைச் சொல்ல... சாதனாவிற்குத் தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை....

அவளுக்கு ரிஷியை பிடிக்காமல் இல்லை.... ரொம்பவே பிடித்தது. அவளுக்கு அவனின் காதலும் தெரியுமென்பதால் முழுதாகச் சந்தோஷப்படவும் முடியவில்லை.... அவள் அமைதியாக இருந்தாள்.

“அந்த ரிஷிக்கு பொண்ணு குடுக்கிறதுக்குப் பதில், தெருவுல போற எவனோ ஒருத்தனுக்குக் குடுக்கலாம்.” வெற்றி சொல்ல....

“சத்தமா சொல்லாதா டா.... எவனாவது தெருவுல போறவன் நிஜமாவே பொண்ணு கேட்டு வந்திட போறான்.” சந்தானம் இலகுவாகப் பேசிவைக்க... அதைக் கேட்ட சாதனாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் வெற்றியோ கோபமாக இருந்தான்.

“நீங்க ஒன்னும் கூட்டணி வச்சிட வேண்டாம். இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடுங்க. மந்திரி பதவிக்காக ஆசைப்பட்டு அந்த ரிஷிக்கு பொண்ணு குடுபீங்களா....”

வெற்றி பேசிய விதம் சந்தானத்தின் கோபத்தைத் தூண்டியது. அவர் ஒன்னும் பதவிக்காக மகளை ரிஷிக்கு கொடுக்க நினைக்கவில்லை... அவருக்குச் சாதனாவின் விருப்பமே முக்கியம். அவள் நள்ளிரவில் ரிஷியை தேடி சென்ற போதே.... அவளுக்கு அவன் மீது உள்ள விருப்பம் அவருக்குப் புரிந்து விட்டது.

அதோடு இப்பொது இருக்கும் அரசியல் வாதிகளில் ராஜ்மோகன் மிகவும் நேர்மையானவர். அவர் குடும்பத்தில் பெண் கொடுக்கச் சந்தானதிற்கு விருப்பமே....

“உனக்குத் தான் பேச தெரியும்னு பேசக்கூடாது. நமக்கும் அவங்களுக்கும் என்ன குடும்பப் பகையா, இல்லை... சொத்து தகறாரா.... வேற வேற கட்சிகிறதுனால வந்த போட்டி... அவ்வளவுதான்.”

“இப்ப ரெண்டு காட்சியும் கூட்டணியில் சேரப்போகுது. நம்ம கட்சியிலும் இந்தக் கல்யாணத்தை ஆதரிக்கிறாங்க. பிறகு வேறு என்ன வேண்டும்?”

தன் தந்தையின் பேச்சு வெற்றியின் கோபத்தை மேலும் அதிகமாக்க....

“வேற எதுவும் வேண்டாமா.... அவன் ஏற்கனவே ஒரு பொண்ணோட சுத்திட்டு இருக்கான். அவனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுக்கப் போறீங்களா...”

“அவனாவது ஒரு பொண்ணோட சுத்துறான். ஆனா நீ மாசம் ஒரு பொண்ணோட சுத்துற.... உனக்கு அவன் எவ்வளவோ பரவாயில்லை....”

“கல்யாணத்திற்கு முன்னாடி எல்லாம் அப்படி இப்படி இருக்கிறது தான். அப்படி ஆராய்ந்து பார்த்தா எவனுக்குமே பொண்ணு குடுக்க முடியாது. முதல்ல உனக்கு எவனாவது பொண்ணு குடுகிறானா பாரு....”

சந்தானம் வெற்றியை மட்டம் தட்டி பேச... அவன் மெளனமாகத் தலை குனிந்தான்.

தன்னையிட்டு தந்தைக்கும் அண்ணனுக்கும் சண்டை வருவது பிடிக்காத சாதனா “அண்ணனுக்குப் பிடிக்கலைனா விட்டுட்டுங்க பா.... நான் கூட இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை... நான் இன்னும் மேல படிக்கணும்.” என்றாள்.

“இவன் சொல்றான்னு நீ எதுவும் குழப்பிக்காத சாது மா... உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா ரிஷி நல்லபடியா மாறிடுவான் டா.... போ... நீ போய்த் தூங்கு....” சந்தானம் சொல்ல.... சாதனா அங்கிருந்து எழுந்து சென்றாள்.

அவள் அறைக்குள் செல்லும் வரை காத்திருந்த சந்தானம் “பார்த்தியா அவ என்ன சொல்றான்னு? மேல படிகிறேன்னுதான் சொல்றா... அப்பவும் வேற மாப்பிள்ளை பாருங்கன்னு அவ சொல்லலை....”

“அவளுக்கு அந்த ரிஷி மேல தான் விருப்பம். இல்லைனா அவனைத் தேடி நைட் நேரம் தனியா கிளம்புவாளா.... அதோட அவங்க ரெண்டு பேர் பேரும் சேர்ந்து பேப்பர்ல வந்துடுச்சு... இனி ஒவ்வொருத்தனுக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. அவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்.”

தன் தந்தைக்கு எப்படிப் புரியவைப்பது என்றே வெற்றிக்கு தெரியவில்லை.... அவன் பல பெண்களோடு சுத்துகிறான் தான். ஆனால் அவன் எந்தப் பெண்ணிடமும் காதல் சொன்னது இல்லை.... அவர்களும் அவனிடம் காதலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரிஷி அப்படி இல்லை.... அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது... அவன் எப்படி முழுமனதுடன் சாதனாவை திருமணம் செய்யச் சம்மதிப்பான்.

அப்படியே இந்தத் திருமணம் நடந்தாலும். பரஸ்பர ஒப்பந்தம் போல் நடக்கும் இந்தத் திருமணத்தில் ரிஷியால் தன் தங்கைக்கு எதுவும் மன வேதனை வந்தால்.... அதைத் தங்களால் தாங்க முடியுமா.... இதையெல்லாம் யோசிக்காமல் தன் தந்தை அவசரப்பட்டு முடிவு எடுப்பதாக வெற்றிக்கு தோன்றியது.

இப்போது என்ன பேசினாலும் தன் தந்தை கேட்கப்போவது இல்லை என்பதை உணர்ந்தவன், அங்கிருந்து மெளனமாகச் சென்றுவிட.... மகனின் நிலையைப் பார்த்த சந்தானம் யோசிக்க ஆரம்பித்தார்.

அங்கே ராஜ்மோகன் தன் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் நேகாவை அப்புறபடுத்த நினைத்தால்... ரிஷி இன்னும் தீவிரமாக அவளைத் திருமணம் செய்ய நினைப்பான் என்பதால்.... நேகாவின் வாயில் இருந்தே ரிஷியை திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனச் சொல்ல வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அவளுக்கு நிறையப் படவாய்ப்புக்கள் வருவது போல மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

வெற்றி பேசியதை வைத்து யோசிக்கும் போது.... இப்போது சந்தானதிற்கே சாதனாவை ரிஷிக்குத் திருமணம் செய்வது குறித்து யோசனையாக இருந்தது. அவர் மனதில் வேறு ஒரு திட்டம் உருவாகியது.

மறுநாள் ஒரு தனிமையான இடத்தில் ராஜ்மோகனும் சந்தானமும் சந்தித்துப் பேசினார்கள்.

“நீ என்ன சொல்ற சந்தானம்? உனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பமா....”

“எனக்கு விருப்பம் தான். ஆனா என் பையன் பயப்படுறான். நமக்குள்ள இதுவரை பகை தான் இருந்திருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு என் பெண்ணை நீங்க நல்லா வச்சுக்கலைன்னா....”

“இப்படிச் சொன்னா எப்படிச் சந்தானம். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சாதனாவை ரொம்பப் பிடிச்சிருக்கு.... நாங்களே விருப்பப்பட்டுக் கேட்கும் போது.... உன் பொண்ணை நல்லா பார்த்துக்க மாட்டோமா....”

“நீங்க நல்லா பார்த்துபீங்க தான். ஆனா ரிஷி.... எனக்கு எல்லாம் தெரியும் ராஜ்மோகன். நாளைக்குக் கல்யாணத்துக்குப் பிறகு அவன் என் பொண்ணை விட்டுட்டா....”

“அப்படி எல்லாம் நடக்காது. ரிஷி ஒரு விஷயத்துல இறங்கிட்டா.... மாற மாட்டான்.”

“நான் இதை எப்படி நம்புறது ராஜ்மோகன்?”

“அப்ப நீ வேற என்ன தான் எதிர்பார்க்கிற?”

“நான் என் பெண்ணை உன் பையனுக்குத் தர மாதிரி, நீ உன் பெண்ணை என் பையனுக்குத் தா.... நாம பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கலாம். அப்படின்னா நம்ம ரெண்டு குடும்பமும் ஒத்துமையா இருக்கும். நீ என்ன சொல்ற?”

சந்தானம் இப்படிக் கேட்பார் என்று ராஜ்மோகன் எதிர்பார்க்கவே இல்லை.... அவர் வெற்றியை தன் மாப்பிள்ளை ஆக்கிக்கொண்டால் உண்டாகும் சாதகங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.

ரிஷி அளவிற்கு இல்லையென்றாலும் வெற்றியும் திறமையாணவனே.... இருந்தாலும் தன் மனைவியிடம் கலந்து ஆலோசிக்காமல் சொல்ல முடியாது. ப்ரீதா இப்போது தான் கல்லூரி இறுதி ஆண்டுப் படித்துக் கொண்டிருகிறாள். அவளையும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும்.

“நான் வீட்ல பேசிட்டு சொல்றேன் சந்தானம்.”

“சரி ஆனா ரிஷி...”

“அவன் ககல்யாணத்துக்கு ஒத்துப்பான். நான் அதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணிட்டேன்.”

வீட்டிற்கு வந்த ராஜ்மோகன் ஜோதியிடம் விஷயத்தைச் சொல்ல...

“கண்டிப்பா அவங்களுக்கு நம்ம வீட்ல பொண்ணு கொடுக்கப் பயமா தான் இருக்கும். அவர் சொல்றதும் நல்ல யோசனை தான். பையன் எப்படி?”

“அவனும் நம்ம ரிஷி மாதிரிதான். என்ன கொஞ்சம் அடாவடி.... எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவாங்க. நான் மாறலையா...”

“நீங்க சொன்னா சரிதான். ரெண்டு கல்யாணத்தையும் பேசி முடிச்சிடுங்க.”

இங்கே அவன் திருமணதிற்கு ஏற்பாடுகள் நடக்க.... இது எதுவும் தெரியாத ரிஷி அங்கே தன் நண்பர்களுடன் சந்தோஷமாக உல்லாச பயணம் சென்று இருந்தான்.

இருபக்க பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்து, திருமண அறிவிப்பை செய்தி தாளில் வெளியிட்டனர். ராஜ்மோகன் சந்தானம் இருவரும் பெண் கொடுத்து, பெண் எடுத்து சம்பந்தி ஆகப்போகிறார்கள் என்ற செய்தி இரு ஜோடிகளின் புகைப்படங்களோடு வெளிவர... அதைப் படித்த ரிஷி கொதி நிலையில் இருந்தான்.
 
Top