Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 11

Advertisement

parvathi

Active member
Member

SORRY FOR THE DELAY FRIENDS SOME HEALTH ISSUES IN ME IS THE REASON.HOPE U UNDERSTAND. HERE WE GO WITH THE 11TH EPISODE. THANKS TO ALL READERS FOR UR GENUINE SUPPORT.





அத்தியாயம் 11


"நீ மாயமானைத் துரத்திக் கொண்டிருக்கிறாய் ராஜீவ். அது என்றுமே உன் கைக்கு அகப்படாது என்பதோடு உன் இளமைப்பருவத்தை வீணே தொலைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை எப்பொழுது நீ உணரப் போகிறாய்?"

என்றுமில்லாத அதிசயமாய் அன்று தந்தை அவனை அறைக்கு அழைத்தபொழுது. இப்படித்தான் எதையாவது கேட்பார் என்று ராஜீவ்வும் எதிர்பார்த்தான். அதனாலேயே பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றான்.

பெற்றவர்களிருவரும் ஒரே பையனான அவனுடைய திருமணத்தை எவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ராஜீவ் அறிவான்.

ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாய் அவனுடைய காதல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாய் மாற்றியிருப்பதும் மதுராவின் மனசு மாறினால் தான் அவன் வாழ்க்கைக்கே ஒரு வழி பிறக்கும் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்த உண்மை.

காதலிக்காக அவன் காத்திருக்கலாம் .ஆனால் அவனுடைய பெற்றோர்களும் காத்திருக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமுமில்லையே. காலத்தே பயிர் செய்ய வேண்டும் என்று தானே அவர்கள் ஆசைப்படுவார்கள். ஆயிரங்காலத்துப் பயிரான கல்யாணத்தைக் காலந்தவறாமல் நடத்தி தங்கள் மகனைக் கல்யாணகோலத்தில் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவதில் என்ன தவறிருக்க முடியும்?

பெற்றவர்களின் ஆசை புரிந்தாலும், அதை நிறைவேற்ற முடியாத தன் நிலைமையை எண்ணி வருத்தத்துடன் ராஜீவ் நின்ற நாழிகையில், சுந்தரமே பேச்சைத் தொடர்ந்தார்.

"என்னப்பா பதிலையே காணும்? எதாவது பேசுப்பா......."

"நான் என்னப்பா பேசறது? உங்களோட ஆசை நியாயமானது தான்.. ஆனால் அதை இப்போ உடனடியாய் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை எனக்கு. நான் மதுவை எவ்வளவு தூரம் விரும்பறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருந்தும் நீங்க இப்படிக் கேட்டால் நான் என்னப்பா பண்ண முடியும்?"

"நீ மதுராவை விரும்பறேன்றதில் எங்களுக்கு எந்த சந்தேகமுமில்லை ராஜீவ். ஆனால் அவ உன்னை விரும்பறாளான்றது தான் இப்போ மில்லியன் டாலர் கேள்வி. உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணுக்காக நீ உன் இளமையையும் எதிர்காலத்தையும் வீணாக்குவதில் எதாவது அர்த்தமிருக்கா சொல்லு?"

"நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான்ப்பா. மதுவிற்கு என்மீதிருக்கும் காதலை விடவும் அவ அப்பா மேல இருக்கற பாசமும் மரியாதையும் அதிகம் தான். ஆனால் அதற்காக என் மனதிலிருக்கும் காதலைத் தூக்கியெறிய என்னால் முடியாதுப்பா. என்னிக்கிருந்தாலும் மது மட்டும் தான் என் மனைவியாக முடியும்ங்கறதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது...அது தான் என்னுடைய உறுதியான முடிவு."

மகனுடைய உறுதியான முடிவில் பெற்றவர் மலைத்துப் போனார்.

அப்பாவைத் தான் ராஜீவ்வால் வாயடைத்துப் போக வைக்க முடிந்ததே தவிர, அம்மாவை சமாதானப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இல்லை.

"ஏண்டா கண்ணா இருபத்தஞ்சு வருஷமா உன்னை மார்லயும் தோள்லயும் போட்டு வளர்த்த இந்த அம்மாவை விட இடையில வந்த அந்த மதுரா உனக்கு முக்கியமாப் போய்ட்டா இல்லையா?"

தான் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் பெண்ணின் கழுத்தில் மகன் தாலி கட்டுவான் என்ற நினைப்பில் மண்ணையள்ளிப் போட்ட மகனின் காதலில் லலிதாவிற்குக் கொஞ்சமென்ன நிறையவே குறை தான்.

ஆனாலும் மகனின் மீதிருந்த அதீதமான பாசத்தில் அவன் சந்தோஷம் மட்டுமே மிகவும் முக்கியம் என்று அந்த தாய் நினைத்ததால், மதுராவை மாட்டுப் பெண்ணாக்கிக் கொள்ளவும் ல்லிதா தயாராய் தானிருந்தாள்.

ஆனால் அஸ்திவாரமே இன்றி ஆகாசக் கோட்டை கட்டுவது போல், மதுராவின் விருப்பம் என்ற அடிப்படை விஷயமே அல்லாட்டத்திலிருக்கையில், மகன் வீணே காத்திருப்பதில் லலிதாவிற்கும் சம்மதமில்லை.

"ராஜூக் கண்ணா அழகும் அறிவுமாய் ராஜா மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்துட்டு, சீரும் சிறப்புமா பொண்ணு தரக் காத்திருக்கறவங்களை விட்டுட்டு, எவளோ ஒருத்திக்காக, அதுவும் எம்பிள்ளையோட அன்பைப் புரிஞ்சுக்காமல் உதாசீனப்படுத்தறவளுக்காகக் காத்திருக்கனும்னு எனக்கென்ன தலையெழுத்தா? போடா.... உன் மது எப்ப கல்யாணத்துக்கு சரின்னு சொல்றது நான் எப்போ பாட்டியாகறது?"

சின்னக் குழந்தையைப் போல் முறுக்கிக் கொண்டு அடம் பிடித்த அம்மாவைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான் ராஜீவ்.

" இப்போ உன் கவலை என்னம்மா? நீ பாட்டியாகனும் அவ்வளவு தானே? கவலையை விடு நம்ம வித்தி கிட்ட உன் ஆசையைச் சொன்னால் அவ அடுத்த நிமிஷமே அதை நிறைவேற்றிவிடுவாள் "

"க்கும்.....அது எனக்குத் தெரியாதாக்கும்? பெரிசா சொல்ல வந்துட்டான்....நீ வித்தியைப் பற்றி சொன்ன உடன் தான் ஞாபகம் வர்றது. அவ பெரிய நாத்தனார் பொண்ணு ஜாதகமும் போட்டோவும் அனுப்பியதை நாம இன்னும் திருப்பி அனுப்பவேயில்லை. கொரியர்ல திருப்பி அனுப்பிட்டு அவளுக்கு போன் பண்ணி தகவல் சொல்லனும். குழந்தை குளிச்சிண்டிருக்காளா

இல்லையான்னு விசாரிக்கனும்.....ம் அவளாவது சட்டுன்னு ஒரு நல்ல சேதி சொன்னால் தேவலை..."

ஆற்றாமையுடனே எழுந்து போன அம்மாவை அனுதாபத்துடன் பார்த்தான் ராஜீவ்.

அம்மா பாவம் தான். அவள் வயசுக்கு அவள் இவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்துப் போவதே அதிகம் தான். ஓரொருத்தர் பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்றால் எப்படியெல்லாம் வானத்திற்கும் பூமிக்குமாய் குதிக்கிறார்கள்?

ஏன் முன்னே மதுராவின் அப்பா குதிக்கவில்லை? பெண்ணுக்குக் கால்கட்டு போட்டுவிட்டுத் தான் மறுவேலை என்று உடனடியாய் வரன் தேடவில்லை? ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் மதுராவிற்கு நிச்சயம் செய்த கல்யாணம் நின்று போனது அவனுடைய அதிர்ஷ்டம் தான்.

உண்மையில் தன் ஜாதகத்தில் ஏதும் தோஷம் இருக்குமோ என்று மதுராவைக் கலவரப்படுத்திய அந்த சம்பவம் தான் ராஜீவ்வின் மனதை தைரியப்படுத்தி இழந்திருந்த நம்பிக்கையையும் மீட்டுக் கொடுத்தது. அதிர்ஷ்டம் என்று ஒன்று இருப்பதை ராஜீவ் அன்று தான் நம்பினான்.

அதே அதிர்ஷ்டம் மதுராவின் மூடிக் கிடக்கும் மனக்கதவைத் திறக்கவும் உதவி செய்யுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ராஜீவ் பெருமூச்செறிந்தான்

முன்னே காதலித்த காலத்தில் கூட மதுரா அவனை அத்து மீற விட்டதில்லை. அவனும் வரைமுறை தாண்டிப் பழகியதில்லை. ஆனால் இப்பொழுது காதலியின் ஒரு புன்னகைக்குக் கூட பஞ்சமாகிப் போன தன் நிலைமையை எண்ணி வருந்தினான் ராஜீவ்.

'அட!... கல்யாணத்திற்கு அவசரப்படவேண்டாம். ஆனால் அவள் மனதில் அவன் இன்னும் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஓரவிழிப் பார்வை, இதமான புன்சிரிப்பு, அவன் பார்க்கும் பொழுது தலைகுனிந்து வெட்கப்பட்டு, அவன் பார்க்காத பொழுது பார்த்து ரசித்து, எண்ணி எண்ணி ரசிக்கும் படியாய் எத்தனை விஷயங்கள் இல்லை காதலில்?'

மதுராவின் இன்றைய மனநிலையில் இதில் ஒன்று கூட சாத்தியமில்லையே என்று நினைக்கிறபொழுது மனசு விட்டுத் தான் போகிறது. கஷ்டப்பட்டுக் காத்து வந்திருக்கும் பொறுமையும் சமயங்களில் பறந்து போகிறது,.

அன்றைக்கு லைப்ரரியில் அவன் காட்டிய மூர்க்கத்தனம் கூட பொறுமையை இழந்ததால் தான்

'மது இன்னும் எத்தனை காலத்திற்கு என்னை இப்படித் தவிக்க வைப்பாய்?'

ராஜீவ் பெருமூச்செறிந்த அதே நேரத்தில் , அங்கே மதுராவை வனிதா வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

" மனசுக்குள்ளே என்ன பெரிய எலிசபெத் மகாராணின்னு நெனப்போ? டாக்டருக்கு உன்னை விட்டால் வேறு ஆளே கிடைக்கமாட்டாங்க பாரூ...அவர் அழகுக்கும் அறிவுக்கும் நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வருவாளுங்க. ஏன் உன் க்ளாஸ்லயே நெறைய பேர் அவர் மேல கிறுக்குப் பிடிச்சுப் போய் அலையறதா சொல்லுவியே. அப்படியிருக்கறப்போ நீ மட்டும் எப்படி அவரை அலட்சியப்படுத்தலாம்? கொழுப்புடி உனக்கு....என்னமோ அப்பாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டாளாம். பொல்லாத சத்தியம் உன் சத்தியத்தைத் தூக்கி உடைப்பிலே போடு. அப்பாவுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது தான் நான் வேணாங்கலே.ஆனால் உன் வாழ்க்கையை பலி கொடுத்தாவது அப்பாவுக்கு மரியாதை செய்யனும்னு நெனச்சேன்னா அதை விட முட்டாள்தனம் வேற எதுவும் இல்லை...."

நாக்கென்னும் சவுக்கைச் சுழற்றி அவளை வார்த்தைகளால் அடித்த வனிதாவிற்கு பதில் கூறும் திராணியற்றுப் போனவளாய். தவித்துப் போய் உட்கார்ந்திருந்தாள் மதுரா.





 
அருமை 👌👌👌👌 ராஜிவ் காதல்லை மது வனி பேச்சுக்கு பிறகு ஏற்பாலா 🤔🤔🤔🌺🌺🌺
 
Top