Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 6

Advertisement

parvathi

Active member
Member

HAI READERS NEXT UDS WILLBE POSTED ON TUESDAYS N FRIDAYS. AS I AM FREQUENTLY GOING OUT OF STATION TO VILLAGE I AM NOT ABLE TO GIVE UD IN ALTERNATE DAYS. KINDLY BEAR WITH ME FOR THE INCONVENIENCE N HERE WE GO WITH THE 6TH EPISODE. I WELCOME U ALL FOR A COMFORTABLE READING JOURNEY.​

அத்தியாயம் 6

"மாமீ........"​

வாசலில் நின்று குரல் கொடுத்த மதுரா உள்ளிருந்து எந்த விதமான எதிரொலியும் வராததால் திரும்ப எத்தனிக்கையில், அவசரமாய் கதவு திறந்து வெளிப்பட்டான் ராஜீவ்.​

குளித்துக் கொண்டிருந்தான் போலும். வெற்று மார்பில் ஆங்காங்கே நீர்துளிகள் வட்டமாய் பூத்திருக்க, ஈரத்தலையைத் துவாலையால் துடைத்தபடி கதவைத் திறந்த ராஜீவ், எதிரே நின்ற தன் காதல் தேவதையைக் கண்டு ஆச்சரியத்தில் மலைத்துப் போனான்.​

மாம்பழக்கலர் பட்டில் சிவப்பு கரையிட்ட பட்டுப் பாவாடை..சிவப்பு தாவணி, கழுத்தைத் தழுவியிருந்த மெல்லிய தங்கச் சங்கிலி, காது மடல்களைக் குசலம் விசாரித்துக் கொஞ்சிய ஜிமிக்கிகள், நெற்றியில் வந்து விழுந்து கண்ணை மறைத்த முடிச்சுருளை சற்று மேலே ஒதுக்கிய வண்ணம் அவள் நிமிர்ந்த பொழுது, அப்படியே அவளை உள்ளே இழுத்து அணைத்துக் கொள்ள​

வேண்டும் போல் பரபரத்த தன் மனதை அடக்க வெகு பாடுபட்டான் ராஜீவ்.​

"மாமி இல்லையா?"​

மதுராவும் அவனைக் கண்ட அதிர்ச்சியில் சற்று நிலை குலைந்திருந்தாள்.​

"அம்மாவும் விதயாவும் கோவிலுக்கு போயிருக்காங்க........"​

அவள் மீது நிலைத்த பார்வையை அகற்றாமல் பதில் சொன்னவன் குரலை மேலும் தழைத்தான்.​

"ஆமா அம்மாவைப் பார்க்கவா மது இவ்வளவு தூரம் தேடி வந்தே?"​

உடம்பின் மொத்த ரத்தமும் கன்னத்தில் வந்து பாய்ந்து விட்டதோ என்று எண்ணி வியக்கும்படியாக மதுராவின் கன்னங்கள் சிவந்து போனதை ஆர்வத்துடன் பார்த்த ராஜீவின் முன் தன் கையிலிருந்த சுவாமி பிரசாத பொட்டலத்தை நீட்டினாள் மதுரா.​

"திருப்பதி கோவில் பிரசாதம். அம்மா குடுத்துட்டு வரச் சொன்னாங்க....."​

"எனக்கு பெருமாள் பிரசாதமெல்லாம் வேண்டாம். மதுராதேவியின் அருள் கிடைக்குமா?"​

குறும்பாய் விசாரித்தவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், சிரிக்கும் அவன் விழிகளைச் சந்திக்கும் தெம்பின்றி வெட்கத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகுனிந்தாள்.​

"அதான் கவிதையாலயே அவளை வளைச்சுட்டிங்களே அப்புறமும் என்ன கேள்வி வேண்டியிருக்கு?"​

மனம் நினைத்ததை வாயும் வழி மொழிந்து விட, அவ்வளவு தான் அடுத்த நிமிடமே பிரசாதத்துடன் நீண்டிருந்த மதுராவின் கை பற்றி ராஜீவ் இழுத்த வேகத்தில். அவள் அவனுடைய வெற்று மார்பில் வந்து சரிந்தாள். அவள் இடையைச் சுற்றிப் பதிந்த அவனுடைய விரல்களின் அழுத்தத்தில் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தாற் போல் ஒரு சிலிர்ப்பு பரவி ஓடியது. ஹார்மோன்களின் உபயத்தில் அவர்கள் இருவருக்குமே இதயத்துடிப்பு அசுரகதியில் எகிறத்​

தொடங்கியது.​

முதன்முதலாய் ஏற்பட்ட அந்நிய ஆணின் ஸ்பரிசத்தில் மதுரா தன்னை மறந்து நிற்க, ராஜீவ் அவள் காதோரம் மெதுவாய் கிசுகிசுத்தான்.​

"எத்தனை முறை எங்க வீட்டுக்கு வித்யாவோட பேச வந்திருக்கே ஒரு முறையாவது என்னை நிமிர்ந்து பார்த்திருந்தேன்னா என் மனசு புரிஞ்சிருக்கும். ஆனால் நீ தான் பச்சை மண்ணாய் இருந்தாயே தவிர உன் தங்கை படு விவரம். என் கையெழுத்தை வைத்தே என்னைக் கண்டுபிடிச்சுட்டா பாரேன்.....புத்திசாலி"​

"வனி புத்திசாலின்னா அவளையே காதலிக்கறது தானே?"​

பொய்கோபத்துடன் சிணுங்கியவளின் கன்னத்தில் கிள்ளினான் அவன்.​

"என்ன பண்ணச் சொல்ற? விவரமான பார்ட்டியை விட எனக்கு பச்சை மண்ணுக்குப் பாடம் சொல்லித் தர்றது தானே பிடிச்சிருக்கு...."​

"பாடமா? என்ன பாடம்?"​

நிஜமாகவே புரியாமல் விழித்தவளின் கன்னத்தில் ராஜீவ்வின் உதடுகள் உரசின,​

"காதல் அரிச்சுவடியில் இது பாலபாடம். இன்னும் கொஞ்சம் அடுத்த பாடத்துக்கு முன்னேறட்டுமா? "​

அவளுடைய கிறக்கத்தை தனக்கு சாதகமாய் எடுத்துக் கொண்டு ராஜீவ்வின் உதடுகள். அவள் முகமெங்கும் சஞ்சாரம் செய்து இதழ்களை ஆர்வத்துடன் தேடிய நாழிகையில் விழித்துக் கொண்ட மதுரா சட்டென்று அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ளிவிட்டாள்.​

மதுரா தள்ளிய வேகத்தில் தடுமாறினாலும் விழாமல் சமாளித்துக் கொண்டான் ராஜீவ்.​

"அடேயப்பா பார்க்கறதுக்கு பயந்த முயல் மாதிரி இருந்தாலும், வேகத்தில் சிறுத்தைப்புலி தான் .எதிர்காலத்தில் நான் கவசம் மாட்டிகிட்டு பாதுகாப்பாய் தான் உன்னை நெருங்கனும் போல........."​

ராஜீவின் வார்த்தைகளில் இளமைக் குறும்பு கொப்பளிக்க, மதுரா வெட்கத்தில் முகம் சிவந்தாள்.​

"கவசத்தை நீங்க ஏன் மாட்டிக்கனும்? அதையே என் கழுத்தில் தாலியாய் கட்டினால் போதாதா?"​

சொன்ன கையோடு நாலு கால் பாய்ச்சலில் புள்ளி மானாய் மதுரா துள்ளியோட, இளஞ்சாரலாய் ராஜீவின் சிரிப்பு அவளைத் தொடர்ந்து வந்தது.​

ராஜீவ் மதுரா காதல் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர, பெரிதும் உதவியவர்கள் வனிதாவும் வித்யாவும் மட்டுமில்லை. மதுரை மாநகரத்தின் மூத்த குடிமகளும் மதுரையம்பதியின் தலைவியுமான அந்த மீனாட்சி அம்மனும் தான்.​

வீட்டிலிருந்து அண்ணனும் தங்கையுமாக கோவிலுக்கு புறப்படும் அதே நேரத்தில் அடுத்த வீட்டில் சகோதரிகள் இருவருமாய் கிளம்புவார்கள். பொற்றாமரைக்குளத்தின் படிக்கட்டுகளில் தன் அண்ணனை மதுராவுடன் ஜோடி சேர்த்துவிட்டு வித்யா வனிதாவுடன் ஆயிரங்கால் மண்டபத்தைச் சுற்றி வருவாள்.​

இந்தக காதலைப் போன்ற ஒரு பொல்லாத உணர்வு உலகில் வேறு எதுவும் இல்லை.​

வருந்தி வருந்திக கூப்பிட்டாலும் கோவில் பக்கமாய் தலை வைத்தும் கூட படுக்காத பிள்ளை இப்பொழுதெல்லாம் விடுமுறைக்கு வரும் பொழுதெல்லாம் அந்த மீனாட்சி அம்மனுக்குத் தவறாமல் அட்டென்டன்ஸ் கொடுக்கும் அதிசயத்தை லலிதா பிரமிப்புடன் பார்க்கிறாள்.​

பாவம் தன் பிள்ளை தரிசனம் செய்யப் போவது அந்த அம்மனையில்லை மதுராவை என்ற உண்மை அவளுக்குத் தெரியுமா?​

ஆசாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த ராஜீவையும் வேற்று இனத்தில் பிறந்த மதுராவையும் ஒருங்கிணைத்த காதல் ராஜீவை மட்டுமா மாற்றியது? மதுராவையும் தான்.​

முன்னெல்லாம் அசைவம் இல்லாமல் ஒரு பிடி சாதம் கூட உள்ளே இறங்காது மதுராவிற்கு.​

கார்த்திகை அமாவாசை என்று விரத நாட்களில் அம்மா அசைவம் சமைக்காமல் விட்டால், 'நீ விரதம் இருக்கறதுக்கு எங்களை ஏன்மா பட்டினி போடறே?' என்று சிணுங்கும் மதுரா, இப்பொழுதெல்லாம் அசைவத்தைத் தொடுவதேயில்லை. அந்த வாசனைக்கே முகத்தை சுளித்துக் கொண்டு மூன்று காத தூரம் ஓடும் மகளைப் பார்க்கையில் கமலத்திற்கு அதிசயமாய் தானிருக்கிறது.​

"என்னடி இவ முன்னெல்லாம் மாய்ஞ்சு மாய்ஞ்சு மீனையும் கோழியையும் முழுசாய் முழுங்கறவ இப்பல்லாம் மசக்கைக்காரியாட்டம் முஞ்சியை சுளிச்சுகிட்டு அந்த வாசனையே கூட ஆகாதுன்றா. என்ன எழவுடி ஆச்சு உங்கக்காவுக்கு?"​

அம்மாவின் கேள்விக்கு வனிதா குறும்பாய் விழிகளைச் சுழற்றி மதுராவைப் பார்ப்பாள்.​

' உனக்கு என்னாச்சுன்னு சொல்லிடட்டுமா?.......'பார்வையால் மிரட்டுவாள்.​

"மாமி வீட்டுக்கு மருமகளாப் போக உன் பொண்ணு ப்ளான் பண்றாம்மான்னு நான் சொல்லாமலிருக்கனும்னா அம்மணி எனக்கு அப்பப்போ லஞ்சம் கொடுக்கனும். சரியா?"​

அடிக்க கை ஓங்கும் தமக்கையின் கை பற்றி தடுக்கும் வனிதா சலித்துக் கொள்வாள்.​

"என்னை என்ன பண்ணச் சொல்றே? வர வர அப்பா கொடுக்கற பாக்கெட் மணி பத்த மாட்டேன்குது. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மலை முழுங்கி மகாதேவிகளாயிருக்காங்க. எடுத்ததுக்கெல்லாம் ட்ரீட் கேட்டு என்னைக் கொல்றாளுங்க........"​

பொய்யையும் நிஜம் பொல் பாவனையுடன் சொல்ல வனிதாவால் மட்டுமே முடியும் என்று மதுராவிற்குத் தெரியாதா? தங்கை தன்னை விளையாட்டுக்கு சீண்டுகிறாள் என்ற விஷயம் அவளுக்குப் புரியாதா?​

பொய்கோபத்துடன் கைகளை ஒங்கிக் கொண்டு தங்கையை அடிக்க கிளம்புபவளின் பிடியிலிருந்து தப்பிக்க லாகவமாய் விலகி ஓடுவாள் வனிதா.​

வனிதா தான் இப்படியென்றால் ராஜீவ்வின் தங்கை வித்யா வேறு ரகம். அண்ணனின் தூதுப் புறாவாக தகவல் கொண்டு வருபவள் சாமானியத்தில் தான் வந்த விவரம் சொல்ல மாட்டாள்.​

மதுராவைக் கிண்டிக் கிளறி கிழங்கெடுத்து வெறுப்பேற்றி பின் தான் வந்த விஷயத்தையே சொல்வாள்.​

"நான் உங்க செல்ல நாத்தனாராக்கும். என்னையும் அப்பப்போ கவனிச்சாகனும் தெரியுமா?" என்று செல்லமாய் மிரட்டல் வேறு.​

மதுராவை விட இரண்டு வயது பெரியவளானாலும் அழகாய் முறை வைத்து வித்யா அவளை அண்ணி என்று கூப்பிடும் அழகிருக்கிறதே........அதற்காகவே அவள் சீண்டல்களைப் பொறுத்துக் கொள்வாள் மதுரா​

"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்டும்? எனக்கும் நேரம் வரும். அப்ப வெச்சுக்கறேன் உங்க ரெண்டு பேருக்கும் கச்சேரியை...."​

சமயங்களில் மதுரா தாள மாட்டாமல் பொருமுவதுமுண்டு.​

"சான்ஸே இல்லண்ணி. உங்களுக்கு இளிச்சவாயா எங்கண்ணா மாட்டினான். எங்களுக்கு அப்படியரு அதிர்ஷ்டம் அடிக்கும்ன்றிங்க? ஏன் வனி இப்படியரு இளிச்சவாய் நமக்கு மாட்டுவான்றே?"​

"அதானே அவனவன் ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு ஆள் தேடறானே தவிர நம்மை எல்லாம் எவன் சீண்டறான்?"​

வனிதா பிரமாதமாய் ஒத்து ஊதுவாள். இன்னும் மோசமாய் வெறுப்பேற்றுவாள்.​

வனிதா வித்யாவின் மறைமுக சீண்டல்களைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இன்றி ராஜீவ் மதுரா காதல் கலகலப்பாகவே களை கட்டியது, ராகவனின் கவனத்திற்கு வரும் வரை.​

ராகவன் கட்டிட கட்டுமானப் பொருட்கள் விற்கும் ஹார்ட்வேர் கடையன்றை வைத்திருந்தார். டவுன் ஹால் ரோடில் மத்தியில் அமைந்திருந்த அந்த கடை ஒரளவு மக்களிடையே பிரபலமானதும் கூட.​

அன்று கடைக்கு வந்திருந்த உறவின நண்பர் ஒருவர் புறநகர் பகுதியில் தான் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கான இரும்பு சாமான்களுக்கு மொத்தமாய் ஆர்டர் கொடுத்தவர் அலுத்துக் கொண்டார்.​

"வீட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தை பண்ணிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? நாளுக்கு நாள் விஷமாய் ஏர்ற விலைவாசியில் ரெண்டையும் நெனச்சுப் பார்க்கவே பயமாயிருக்கு."​

ராகவன் பதிலே சொல்லாமல் அசட்டுச் சிரிப்பொன்றை சிரித்து வைத்தார்.​

ஆமாம் என்று சொன்னால் அது தான் சாக்கு என்று மனிதர் கட்டுப்படியாகாத விலையில் ஏகப்பட்ட டிஸ்கவுன்ட் கேட்பார். வாயைத் திறந்து வம்பை விலைக்கு வாங்குவானேன் என்ற ஜாக்கிரதை உணர்ச்சியில் ராகவன் பேசாமல் இருக்க, வந்தவரோ தானே வம்பை ஆரம்பித்தார்.​

"கல்யாணம்னதும் ஞாபகத்திற்கு வருது. உம்ம பெரிய பொண்ணுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை நீ சொல்லவே இல்லையே ராகவா..... ஒரு வேளை காதல் கல்யாணம்ன்றதால சொல்லாமல் மறைச்சுட்டியோ? நம்ம சாதி சனத்தில் டாக்டர் மாப்பிள்ளை பார்த்தால் ஜாஸ்தியா செலவாகும்னு தான் அசல்ல பார்த்து முடிச்சுட்டியா ராகவா? அய்யர் வூட்டுப் பையனாம்ல?​

சென்னையில ஹவுஸ் சர்ஜனாயிருக்கானாம். பையன் பார்க்க ஷோக்காத் தானிருக்கான். அன்னிக்கு உன் பொண்ணுங்களையும் மாப்பிள்ளையையும் மீனாட்சி கோவில் வாசல்ல வெச்சுப் பார்த்தேன். கிட்டப் போய் பார்த்துப் பேசறதுக்குள்ளே சிட்டாப் பறந்துட்டாங்க அவங்க........"​

இதற்குப் பெயர் தான் குசும்பு என்பது. இப்படி விலாவாரியாய் ராஜீவ்வைப் பற்றி விபரம் சொல்பவருக்கு அவன் இன்னும் ராகவனின் மாப்பிள்ளை ஆகவில்லை என்ற விஷயம் மட்டும் தெரியாமலா இருக்கும்?​

இது ஒரு விதமான ஆசை. அடுத்தவன் வீட்டு விவகாரத்தை சீண்டிப் பார்க்கும், நக்கல், நையாண்டியுடன் வம்பு பேசும். இந்த ஆர்வம் நாலில் ஒரு மனிதனுக்கு நிச்சயமாய் இருக்கும் குணம் இது. இந்த குணத்திற்கு விதிவிலக்காய் இருப்பவர்கள் வெகு சிலரே.​

கடைப் பையன்கள் எதிரில் வம்பை சிண்டு முடிந்து விட்டு வந்தவர் கிளம்பி விட, இங்கே ராகவனுக்கு மூச்சடைத்தது.​

 
Last edited by a moderator:
ராஜிவ் ❤மது காதல் அவர்கள் தங்கைகள் சேர்த்து வைக்க யாருரோ புரம்பெசுபவரால் மது அப்பாவிடம் போட்டு கொடுத்துடார் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Top