Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 5

Advertisement

கஸ்தூரி சூப்பர்... கண்ணன் உண்மையா நாரதர் தான் கலகம் வந்தாச்சு நியாயம் கிடைத்தா சரி
 
பூவாசம் மேனி வீசுதம்மா – 5

“ம்மா நில்லும்மா.... ம்மோய்...” என்று கமலக்கண்ணன் கத்தியபடி முருகேஸ்வரி பின்னேயே போக, அவரோ வேக வேகமாய் நடைபோட்டார்.

போகும் வழியில் இருக்கும் பெண்களிடம் வேறு “எம்மவன் நல்லது சொல்லப் போக, அது இப்படி விடிஞ்சிருக்கு..” என்று சொல்லியபடிச் செல்ல, எல்லாம் வேடிக்கைப் பார்க்க,

“எல்லாம் உன்னாலத்தான்டா.. அங்கன அந்த புள்ளைய மட்டும் உங்கம்மா எதுவுஞ் சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு சேதி...” என்று மரிக்கொழுந்தும் கண்ணனைத் திட்டியபடி வர,

“டேய் நீ வேற சும்மாவா டா..” என்ற கமலக்கண்ணன் முருகேஸ்வரியை எட்டிப் பிடிப்பதற்குள், முருகேஸ்வரி, கஸ்தூரியின் வீட்டின் வெளி கேட்டினை திறந்திருந்தார்.

“யாரது.. யார்றி அது உள்ள.. வெளிய வா..” என்று குரல் கொடுக்க, அங்கே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எட்டிப் பார்க்க,

“ம்மா என்னம்மா இதெல்லாம்..” என்று வந்து நின்றான் கமலக்கண்ணன்.

“சும்மா இரு சாமி.. நீ என்ன அவள கைய பிடிச்சா இழுத்த.. பார்த்துப்போன்னு சொல்லிருக்க.. அதுக்கு முறைச்சான்னா அப்போ உனக்கு ரோசம் வரத்தானே செய்யும்.. நாலு கேள்வி அவள கேக்காம வரமாட்டேன்..” என்றவர்,

“ஏய் வெளிய வா..” என்று சத்தமிட,

“இந்தாக்கா.. அந்த புள்ள வீட்ல இல்ல.. பின்னாடி தோட்டத்துல இருக்கு.. பேசாம வா போவோம்..” என்று மரிக்கொழுந்து முருகேஸ்வரியை கிளப்பிட எண்ண,

“தோட்டத்துல போயி ஒளிஞ்சு உக்காந்திருக்காளா???” என்றபடி முருகேஸ்வரி அங்கே சென்றார்.

“ஏலேய்.. தோட்டத்துல இருக்கான்னு உன்ன சொல்லச் சொன்னாங்களா..” என்று கமலக்கண்ணன், மரிக்கொழுந்தை கடிந்தபடி,

“ம்மா அப்பாக்கு தெரிஞ்சா பெரிய பஞ்சயாத்து ஆகும்.. வாம்மா..” என,

“இருடா.. எம்மனசு ஆறல.. என்னைய ஜாடை பேசுறா.. எம்மவன முறைச்சிருக்கா.. என்ன நெனப்புல இருக்கா இவ.. பெரிய ரதின்னு நெனப்போ...” என்றவர்,

“ஏய் கஸ்தூரி...” என்று சத்தம் போட்டு அழைக்க, அப்போது தான் ஷேர் ஆட்டோ வெண்டை மூட்டைகளை லோட் ஏற்றிச் செல்ல வந்திருக்க, கணக்குப் பார்த்து அவள் அங்கே நிற்க, முருகேஸ்வரியின் குரல் கொஞ்சம் திடுக்கிட வைத்தது தான்.

வேலையில் சென்று நின்றபின்னே, கஸ்தூரியின் மனது கொஞ்சம் சமன் பட்டிருந்தது. என்னவோ அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும் என்று. எதுவாக இருந்தாலும், தான் போய் அங்கே நின்று அது தேவை இல்லாத பேச்சுக்களுக்கு இடம் கொடுத்திட கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தாள்.

‘யாராக இருந்தாலும் தேடி வரட்டும்..’ என்று நினைத்தாள் தான், ஆனால் இப்படி முருகேஸ்வரியே வந்து நிர்ப்பார் என்று அவள் நினைக்கவில்லை.

“ஆத்தி..!!! என்ன இது.. இந்தக்கா வந்திருக்கு...” என்று வேலையில் இருந்தவர் சொல்ல,

அங்கிருந்தவர்கள் எல்லாம் வாய் பிளந்து பார்க்க, அனைவருக்குமே என்ன நடக்கப் போகிறதோ என்று இருந்தது.
முருகேஸ்வரி சும்மா ஒரு இடத்தினில் இருந்தாலே அங்கே சத்தத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போது சத்தம் போடவே வந்திருக்கிறார் என்கையில் கேட்கவா வேண்டும்.

கஸ்தூரி, முருகேஸ்வரியைப் பார்த்தவள், அவளின் பார்வை அப்படியே கமலக்கண்ணன் பக்கம் சென்றுவர, மரிக்கொழுந்து வேகமாய் அவளிடம் வந்து “நீ எதுவும் பேசாதப்பா..” என,

“இந்தா இத கணக்கு பாத்து எவ்வளோன்னு சொல்லி அனுப்பி வையி..” என்று பொறுப்பினை அவனிடம் கொடுத்தவள், இழுத்துச் செருகியிருந்த சேலையை கீழே இழுத்து விட்டபடி, முன்னே நடந்தாள் கஸ்தூரி.

“வேணாம் கஸ்தூரி..” என்று மரிக்கொழுந்து சொல்ல,

“நா பாத்துக்கிறேண்ணே.. நான் சொன்னத மட்டும் செய்யி..” என்றவள், முன்னேறிப் போனாள்.

சந்தன நிற தேகம், வெயிலில் நின்றிருந்ததால் சற்றே சிவந்து இருக்க, அதை காட்டிலும், இவர்களைப் பார்த்து, அவள் முகம் காட்டிய பாவனை அவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய் இருந்தது.

முருகேஸ்வரியின் பின்னே நின்று கண்ணனோ “எதுவும் பேசிடாதே..” என்று சைகை செய்ய,

அவளோ அவனை சட்டைக் கூட செய்யவில்ல, முருகேஸ்வரி “வா டி வா..” என்று தயாராக,

கஸ்தூரியோ “வாங்க.. உள்ள வாங்க..” என்று வரவேற்பாய் சொல்ல,

‘எதுக்கு வந்தீங்க..’ என்று கேட்பாளோ என்று பார்த்திருந்த அம்மாவிற்கும், மகனுக்கும் அதிர்ச்சியாய் போனது.

“உள்ள வாங்க..” என்றவள், வீட்டிற்கும், தோட்டத்திற்கும் நடுவினில் இருக்கும் சிறு கேட்டினை திறந்து விட்டு, மீண்டும் “வாங்க..” என,

‘என்ன இந்தப்புள்ள இப்புடி செய்யுது...’ என்று பார்த்திருந்தனர் அனைவரும்.

கமலக்கண்ணனோ “என்ன செய்யப் போறா இவ??!!” என்று பார்த்து நிற்க,

முருகேஸ்வரியோ “நா ஒன்னும் உன் வீட்டுக்கு விருந்துக்கு வரல..” என்று அப்படியே நிற்க,

“வராதவங்க வந்திருக்கீங்க.. வெளிய நின்னு பேசி அனுப்பினா அது மரியாதையா இருக்காது. என்னைவிட வயசுல பெரியவங்க.. தேடி வந்திருக்கீங்க.. உள்ள வாங்க...” என்று கஸ்தூரி தன்மையாய் அழைக்க, முருகேஸ்வரியே ‘என்னடா இது!!!!!’ என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.

மகனின் முகம் பார்க்க “ம்மா வாம்மா அப்படியே போயிடலாம்..” என, கஸ்தூரிக்கு மனதிற்குள் அப்படியொரு சிரிப்பு.

‘இப்போ நீ பேசுடா... பேசு.. என்ன செய்றேன்னு நானும் பாக்குறேன்..’ என்றெண்ணியவள்,

முருகேஸ்வரி தயங்கி நிற்பது கண்டு, அவளும் அவரைப் பார்க்க, “இல்ல நாங்க கெளம்புறோம்...” என்று திரும்பினார் முருகேஸ்வரி.
சண்டை போட வந்த வேகமெல்லாம், கஸ்தூரி ‘வாங்க..’ என்று வரவேற்றதில் அப்படியே அடங்கிப்போயிருக்க,
‘இப்படி பேசுறவக்கிட்ட என்னத்த சண்டை போடுறது..’ என்ற எண்ணம் அவருக்கு.

“வா போவோம்மா...” என்று கமலக்கண்ணன் இதான் சாக்கு என்று அம்மாவின் கையைப் பிடிக்க,

கஸ்தூரியோ “உள்ள வர்றதும், வராததும், உங்க விருப்பம். ஆனா இம்புட்டு தூரம் வந்துட்டு என்ன விசயம்னு சொல்லாம போனா,
நானா உங்க வீட்ல வந்து கேட்க முடியும் என்ன சோலியா வந்தீங்கன்னு.. அது மரியாதையாவும் இருக்காதே..” என,

‘அம்மாடியோ..!! இவ எங்கம்மாக்கு மேல வருவா போலவே...’ என்று கண்ணன் நினைக்க,

முருகேஸ்வரி வீடு செல்வோம் என்று நினைத்தவர் கூட ‘என்னது இவ எவ்வீட்டுகு வருவாளா..??’ என்று எண்ணியவருக்கு ‘வந்தாலும் வருவா..’ என்று தோன்றிட, திரும்பவும் கஸ்தூரி பக்கம் திரும்பிவிட்டார்.

“யம்மா.. வாம்மா..!!” என்று கமலக்கண்ணன் பல்லைக் கடிக்க,

“இருடா.. இம்புட்டு தூரம் வந்து, சும்மா அப்படியே போறதா.. அவளைக் கேட்காம விடக் கூடாது..” என்றவர், அவள் திறந்து வைத்த கேட்டின் வழியே நுழைந்து வீட்டின் அருகே போக,

“உள்ள வாங்க..” என்றாள் திரும்பவும்.

அவளுக்குமே ‘வா வா... வராம எங்க போயிட போறீங்க..’ என்ற எண்ணம்தான்.. வெளிக்காட்டிக்கொள்ளாது நிற்க,

“உள்ள எல்லாம் வரமுடியாது..” என்றவர், திண்ணையில் அமர, வேகமாய் உள்ளே போய் நீர் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிப் பருகவே முருகேஸ்வரி அத்துனை யோசனை.

‘வந்திருக்கவே கூடாதோ.. வசியக்காரி பேச்சுல என்னவோ வச்சிருக்கா..’ என்றுதான் அவரின் உள்ளம் போக,

“வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணி கொடுக்கணும் தானுங்களே...” என்று கஸ்தூரி இழுத்த இழுப்பில், தலை தானாக ஆடியது. கை தானாக வாங்கியது.

ஆனால் இந்த உபசரிப்பு எல்லாம் முருகேஸ்வரிக்கு மட்டுமே. கண்ணனுக்கு இல்லை. அவன்பக்கம் அவள் பார்வை கூட போகவில்லை. முருகேஸ்வரியும் இதனைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். கோபம் இருக்கிறதா என்றால் தெரியவில்லை. இப்படி பதவீசாக பேசுபவளிடம் என்ன சொல்லி சத்தமிட??!!

‘ஒருவேள பாசாங்கு செய்றாளோ...’ என்று அவளின் முகத்தினைப் பார்த்தாள், அவளின் அந்த நிமிர்வும், முகத்தில் தெரிந்த தெளிவும்
‘ஆத்தாடி இவ என்ன இம்புட்டு அழகா இருக்கா...’ என்றுதான் நினைக்க வைத்தது.

மகன் நினைக்க வேண்டியத்தை எல்லாம், இப்போது அம்மா நினைக்க, பாய்ந்து வந்த புலி மியாவ் சொன்ன கதையாகிப் போனது நொடியில் அங்கே.

கஸ்தூரிக்கு சண்டையிடத் தெரியாது என்றில்லை. சண்டை போட்டால், அதை பெரிதாக்கும் வித்தை முருகேஸ்வரிக்குத் தெரியும். இன்னும் இன்னும் என்று இழுத்துக்கொண்டே போவார். அதிலும் இல்லாது இவளைப் பற்றி ஊருக்குள் தேவையில்லாத பேச்சுக்கள் உலா வரும்.

அதெல்லாம் தவிர்க்கவே இப்படியானதொரு உபசரிப்பு..

அது கண்ணனுக்குப் புரிந்தது, ஆனால் அவனின் அம்மாவிற்குப் புரியவில்லை.

‘இவ எதுக்கு இப்படி பதுங்குறா..’ என்றெண்ணியவர் ‘முருகேஸ்வரியா கொக்கா.. வந்து நின்னதுமே பயந்துட்டா போல..’ என்று முடிவிற்கு வர, தானாக அவரின் முகத்தினில் ஒரு மிடுக்கு.

கமலக்கண்ணன் தனக்கும் நீர் வந்து கொடுப்பாளோ என்று குரலை செருமி செருமிப் பார்க்க, ம்ம்ஹும் கஸ்தூரியின் பார்வை முருகேஸ்வரியை விட்டு அகலவில்லை. அவர் திண்ணையில் அமர்ந்திருக்க, அவளோ சற்று தள்ளி வாசல்படி அருகே நிற்க,

“டீ போடவா??!!” என்றாள் அடுத்து.

‘இவ என்ன எங்கம்மா விருந்தே வச்சிடுவா போல...’ என்று கண்ணன் பார்க்க,

“வேணாம் வேணாம்..” என்று அவசரமாய் மறுத்தவர் “எம்மவன் உன்னோட பெரியவன்.. கொஞ்சமாச்சும் மரியாதையா நடந்துக்க பாரு..” என, அப்போது தான் கமலக்கண்ணன் பக்கம் பார்வையை திருப்பினாள்.

பார்த்துவிட்டு பட்டென்று திருப்பிக்கொள்ள, அவளின் ஒவ்வொரு செயலும் கமலக்கண்ணனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது.

‘ஆனானப்பட்ட எங்கம்மாவையே கோழிய அமுக்குன மாதிரி அமுக்கி உக்கார வச்சுட்டாளே...’ என்று வியப்பாய் பார்க்க,

கஸ்தூரி சொன்ன வேலையை முடித்து, என்ன நடந்துகொண்டு இருக்கிறதோ என்று மரிக்கொழுந்து அடித்துப் பிடித்து வர,
முருகேஸ்வரி அமைதியாய் இருப்பது கண்டு “என்னடா என்ன நடக்குது இங்க???!!!” என்று கண்ணனிடம் கேட்க,

“அதான்டா எனக்கும் புரியலை..” என்றான் அதிர்ச்சி விலகாது..

“ஆட்டோ போயிடுச்சா...” என்று கஸ்தூரி கேட்க, “ம்ம்..” என்றவன், “நீ சொன்ன கணக்கு, கூலி கொடுத்தது போக இம்புட்டு இருக்கு..”
என்று பாக்கி பணம் மரிக்கொழுந்து கொடுக்க, அதனை வாங்கியவள், எண்ணிப்பார்த்து உள் சென்று வைத்தவள்,

“அண்ணே.. கடைல பாட்டி இந்நேரம் சூடா போண்டா போடும்.. வாங்கிட்டு வா..” என்று சொல்ல,

“அதெல்லாம் வேணாம்...” என்றார் முருகேஸ்வரி பட்டென்று..

‘என்னாது போண்டாவா??!!’ என்று மரிக்கொழுந்து பார்க்க,

“டீயும் வேணாம் சொல்லிட்டீங்க...” என்று கஸ்தூரி சொல்ல,

“டேய் சத்தியமா சொல்றேன்டா அதிர்ச்சியாகி அதிர்ச்சியாகியே என் நெஞ்சு வெடிச்சிரும்டா..” என்று மரிக்கொழுந்து கண்ணனிடம் சொல்ல,

“மாமியா மருமக எம்புட்டு ஒத்துமை பாரேன்...” என்று கண்ணன் சிலாகிக்க,

“அப்படியே மெச்சிக்க.. வேண்டிக்கிறேன்.. ரெண்டுபேரும் சேந்து உன்னைய பொலந்து கட்டணும்னு...” என்றான் மரிக்கொழுந்து கடுப்பாய்.

முருகேஸ்வரிக்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்பதுகூட மறந்துபோகும் போல இருந்தது.

‘இவக்கிட்ட என்னவோ இருக்கு..’ என்றெண்ணியபடி எழுந்தவர், அவளைக் கண்டிப்பது போல் “நான் சொல்றது புரிஞ்சதா.. இனிமே இப்புடி முறைக்கிற வேலை, ஜாடை பேசுறது எல்லாம் இருக்கக் கூடாது.. வயசுக்கு மரியாதைக் கொடுக்கணும்.. என்ன..”

“ம்ம்..” என்று அவளும் சொல்ல,

அத்தோடு விட்டிருக்கலாம், “பார்த்து போன்னு சொன்னதுக்கு முறைப்பியா நீ..” என்று முருகேஸ்வரி கேட்க,

“பார்த்து போன்னு சொல்லிருந்தா நானும் நன்றின்னு சொல்லிருப்பேன்.. பார்த்துட்டு போ, பார்த்துட்டு போன்னு வம்பு வளத்தா என்ன செய்ய.. உங்க மவன நான் பாக்கவா??!!” என்று கஸ்தூரி போட்ட போட்டில், முருகேஸ்வரி ஆடிப்போனார் என்றால்,

கமலக்கண்ணன் ‘அய்யோ..!!!’ என்று தலையில் கை வைத்தவன், ‘இவ என்னைய எங்கம்மாவிட்டு தள்ளி வைக்காம விடமாட்டா...’ என்று முனங்க,

“சிக்கினடி மாப்புள நீ..” என்று சந்தோசமாய் பார்த்தான் மரிக்கொழுந்து.

“என்ன சொல்லுறவ??!!” என்று முருகேஸ்வரி, நெற்றியை சுருக்கிக் கேட்க,

“ம்மா... ம்மா போதும்.. வா.. அப்பாக்கு இந்நேரம் விஷயம் போயிருக்கும்.. வீட்ல உனக்கும் எனக்கும் செமத்தியா இருக்கு.. இன்னிக்கு சீட்டு நாள் வேற.. உனக்காக எல்லாம் காத்துட்டு இருப்பாங்க...” என்று கமலக்கண்ணன் அவரைக் கிளம்ப முயல, கஸ்தூரி முகத்தினில் அடக்க முயன்றும் புன்னகை தவழ்ந்தது.

“நீ என்னவோ இவக்கிட்ட சொல்லிருக்க...” என்று முருகேஸ்வரி கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... நீ வா போவோம்..” என்றவன், கஸ்தூரியைப் பார்த்து ‘நல்லா பண்றம்மா நீ...’ என்று முனுமுனுக்க, அவள் அப்போதும் அப்படித்தான் நின்றிருந்தாள்.

“எலேய் மரிக்கொழுந்து.. என்னத்த பாத்துட்டு நிக்கிற்.. அம்மாவ கூட்டிட்டு போ..” என,

அவனும் “யக்கா வாக்கா.. மாமா வந்தா எல்லாரும் பேச்சு வாங்கணும்..” என, முருகேஸ்வரியும் கிளம்பிவிட்டார்.

‘நீ முன்னாடி கூட்டிட்டு போ..’ என்று மரிக்கொழுந்துவிடம் சொன்னவன், திரும்பி கஸ்தூரியிடம் வந்து “கலக்கிட்ட கஸ்தூரி...” என,

“இம்புட்டு நேரம் உன் வாயில கொழுக்கட்டை வச்சிருந்தியா...” என்றாள், முகத்தினை சுருக்கி.

“என்ன பாக்குற.. உங்கம்மா முன்னாடி வாயே தொறக்காம தான நின்ன.. இப்போ என்னத்துக்கு வந்து பேசுற.. சண்டை போடத் தெரியாதுன்னு இல்லை.. ஆனா அதுக்குக் கூட உங்களோட எல்லாம் நான் பேச விரும்பலை.. அதான் இதெல்லாம்.. இனியொருவாட்டி நீ எதுவும் திருகுதாளம் செஞ்ச, பார்த்துக்கோ..” என்று கஸ்தூரியும், மனதில் இருந்ததை கொட்ட,

“பாத்துக்கிறேன்...” என்றான் புன்னகை முகமாய் கமலக்கண்ணன்.

“ம்ம்ச்...”

“நீவேனா பாரு.. இன்னிக்கு நீ நடந்துக்கிட்டதே போதும், நீதான் எங்க வீட்டுக்கன்னும், நீ எனக்கு மட்டும் தான்னு சொல்றதுக்கும்.. நீமட்டும் தான் எனக்குன்னும் சொல்றதுக்கும்...”

கமலக்கண்ணன், நேரடியாய் இவ்வார்த்தைகள் சொல்லவும், சடுதியில் கஸ்தூரிக்கு சுவாசிக்கவே திணறல் எடுத்தது போலிருந்தது. இத்தனை நாளும் பேசு பேசு என்பான், இருந்தும் அவன் காணும் பார்வைகள் வைத்தே மனதினில் ஒரு யூகம் வைத்திருந்தாள்.

ஆனால் இப்போதோ அவன் முகம் பார்த்து, அதுவும் அவளின் வீட்டினில் வைத்து நேரடியாய் இப்படிச் சொல்ல, உடனே அவளால் பதில் கொடுக்க முடியவில்லை. பார்வையை வம்படியாய் அவனை விட்டு தவிர்த்தவள், “போயிடு...” என்றுசொல்ல,

“திரும்ப கூடிய சீக்கிரம் வருவேன்.. நம்ம கல்யாணம் பேச..” என்றவன்,

“பழசு எல்லாம் மறந்திடு கஸ்தூரி.. அப்படி முடியலன்னா, என்னோட வாழ்ந்து பாரு.. எல்லாமே மறந்திடும்..” என, கஸ்தூரி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

எதற்காகவும், அவள் மனதினில் ஆசைகளோ, கனவுகளோ யார் மீதான பிடித்தங்களோ வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதெல்லாம் தன்னை பலவீனப் படுத்தும் சங்கதிகள் என்று நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

இப்போது கண்ணன் இப்படி பேச, அவளுள் என்னவோ செய்தது..!!

இதெல்லாம் புதிது..!!

நன்றாய்த்தான் இருந்தது.. இருந்தும் அவளுக்கு அதெல்லாம் வேண்டாம்..!!

எத்தனை பேச்சுக்கள்..!! அப்பப்பா..!! வேண்டவே வேண்டாம்...!! அவளின் அறிவு உறுதியாய் சொல்ல, வேகமாய் வீட்டினுள் நுழைந்து கஸ்தூரி கதவினை அடைத்துக்கொண்டாள்.

கண்ணனுக்கும் ஒரே நாளில் ரொம்பவும் செய்யக் கூடாது என்று மௌனமாய் அவன் வீடு செல்ல, அங்கே சந்திரப் பாண்டியோ, முருகேஸ்வரியிடம் கடுகடுத்துக்கொண்டு இருந்தார்.

“அப்போவே கெளம்புன்னு சொன்னது ஆத்தாளுக்கும் மவனுக்கும் கேட்கலையோ..” என்றது இவன் காதினில் தெள்ளத் தெளிவாக விழ,

முருகேஸ்வரியோ “நாங்கொன்னும் போயி சண்ட போடல...” என,

“என்னத்துக்கு போகணும்.. இத்தன வருஷம் இல்லாம இப்போ எதுக்கு போகணும்..” என்று அவர் கேட்க,

“ஒருவேகத்துல போயிட்டேன்.. அதான் எந்த வம்பும் ஆகலையே...” என்ற முருகேஸ்வரி “அவக்கூட இம்புட்டு பேசல.. அம்புட்டு ஏன் இப்படி பேசவேயில்ல.. நீங்கத்தான் ரொம்ப என்னைய பேசுறீங்க..” என்றுவிட, சந்திரபாண்டியே ‘ஆ!!’ என்று திகைத்துப் பார்த்தார்.

கமலக்கண்ணன் வருவதற்காகவே காத்திருந்த மரிக்கொழுந்து, முருகேஸ்வரியின் இந்த வார்த்தைகளை கேட்டு “டேய்.. உனக்கு கண்ணன்னு பேரு வெச்சிருக்கக் கூடாது.. நாரதர்னு வெச்சிருக்கணும்.. இந்தா ஒரு நிமிசத்துல அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்ட வர வெச்சிட்டல்ல..” என,

“டேய் மாப்புள... ஹஸ்பன்ட் அண்ட் வொய்ப் குள்ள ஆயிரம் என்ன லட்சம் கூட இருக்கும். அதுக்கெல்லாம் நம்ம நடுவில போகக் கூடாது...” என்று சொல்ல,

“அப்போ, அங்க என்னத்துக்கு வாய மூடிட்டு நின்னிருந்த..” என,

“அது மாமியா மருமக பேச்சு. எப்பவுமே ஜென்ட்ஸ் உள்ள போகக்கூடாது..” என்று கமலக்கண்ணன், கூலாகச் சொல்ல,

“நாராயண.. நாராயண...” என்று மரிக்கொழுந்து சொல்லவும், சற்று சத்தமாய் சிரித்த கமலக்கண்ணன் மனதினில் கல்யாண கனவுகள்..









super sis
 
நாரதர் கலகம் நல்லதா முடுஞ்சா சந்தோஷம் தான்...
 
கஸ்தூரி சூப்பரு.... கலக்கிட்டா.... நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்.....
 

Advertisement

Top