மனைவி 23

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 23


கலை தன் மகனை மிகத் தீர்க்கமாக, அவன் உள்ளத்தை ஊடுருவுவது போலப் பார்த்தார்.

"என்ன ஸ்ரீராம், இப்போ உன் தங்கச்சிங்களுக்குச் செய்யறதை எல்லாம் இப்படி கணக்குப் போட்டு சொல்லிக் காட்டுறியா? இதோ பாரு, இந்த வார்த்தை மட்டும் மாப்பிள்ளை காதுல விழுந்துச்சு... அப்புறம் அவர் மனசு எவ்வளவு வலிக்கும் தெரியுமா? அவங்க நம்மகிட்ட காசு வாங்கித்தான் வாழணும்ங்கிற அவசியம் அவங்களுக்கு என்னைக்குமே கிடையாதுடா. எப்பயாவது கையில காசு புழங்காத நேரத்துல, ஒரு உரிமையில் தான் இப்படி வந்து கேட்பாங்க. உன் கூடப் பிறந்த தங்கச்சிங்க அவங்க!

அவங்களுக்கு நீதானே எல்லாத்தையும் முன்னாடி நின்னு எடுத்துச் செய்யணும்? அவங்களை ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது உன் கடமை இல்லையா? ஒரு பொம்பள புள்ள கண்ணீர் விட்டா அந்த குடும்பம் உருப்படாதுடா, விளங்கவே விளங்காது. இனிமேல் இந்த மாதிரி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது, புரியுதா?" என்று அடிக்குரலில் எச்சரித்தவர்,
மகனைக் கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென வெளியே சென்றார்.

ஸ்ரீராம் சொல்லொண்ணா வேதனையோடும், ஆற்றாமையோடும் அந்த அறைக்குள் சென்று தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டான்.

இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே இந்த நான்கு சுவர்களுக்குள்ளும், இந்தத் தனிமையிலும் தான் அவன் வாழ்வு கரைந்து கொண்டிருக்கிறது.

அவனைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், அவன் காதுகளில் விழும் செய்திகளும் அவன் இதுவரை எதை உண்மையென்று நம்பினானோ, அதற்கு நேர்மாறாக, முரணாக இருப்பதை எண்ணி அவன் மனம் குழம்பியது.

என்றுமில்லாத ஒரு அதிசயமாக, பிரபாகரன் அன்று மாலை வழக்கத்தை விட மிக விரைவாகவே வீடு வந்து சேர்ந்தார்.

வாசலில் வண்டி சத்தம் கேட்டதுமே, அலர் ஒருவித எதிர்பார்ப்போடு ஆசையாக தன் கணவனைத் தேடி ஓடி வந்தாள்.

"என்னங்க, இன்னைக்கு என்ன விசேஷம்? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?" என்று முகம் மலரக் கேட்டாள்.

"இன்னைக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சு போச்சு, அதான் வந்தேன்," என்று முகத்தில் அடித்து பேசினால் போல, படபடவென்று ஒற்றை வரியில் பதிலை உதிர்த்துவிட்டு அவர் உள்ளே சென்றார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த அந்தச் சுருக்கமான உரையாடல், அறைக்குள் முடங்கிக் கிடந்த ஸ்ரீராமின் காதுகளைக் கூர்மையாக எட்டியது.

"சீக்கிரம் வந்துட்டீங்கல்ல... அப்படியே எங்கேயாவது வெளியில போயிட்டு வரலாமா?" என்று அலர் கெஞ்சலாகக் கேட்டாள்.

"உனக்கு வெளியில போகணும்னு ஆசை இருந்தா நீயே போயிட்டு வா, என்னை மட்டும் கூப்பிடாதே," என்று கறாராகச் சொன்னார் பிரபாகரன்.

"எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்லிட்டு இருந்தா நான் யார் கூடத்தான் வெளியே போறது? எனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா? நானும் மத்தவங்க மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கக்கூடாதா?" என்று ஆத்திரத்தில் கத்தினாள் அலர்.

"உனக்குன்னு ஒரு வாழ்க்கையா? உனக்குன்னு ஒரு சந்தோஷமா? அடி அறிவு கெட்டவளே... உன் பிள்ளைங்க உன்னை விட்டு பிரிந்து போய் எத்தனை நாள் ஆகுது? அவங்க எப்படி இருக்காங்க, ஏது இருக்காங்க, நேரத்துக்கு சாப்பிட்டீங்களா ன்னு ஒரு நாளாவது பெத்த மனசோட நீ கேட்டிருப்பியா?

பிள்ளைகளைப் பார்க்க முடியலையேன்னு ஒரு நிமிஷமாவது அந்தப் பக்கம் ஓடி இருப்பியா? என்னை வீணாவே டென்ஷன் பண்ணி என்கிட்ட எதையாவது வாங்கி கட்டிக்காதே!" என்று அவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றார்.

பிரபாகரன் கோபத்தில் கத்த, அலர் அப்படியே பேச்சற்று அடங்கிப் போனாள். இவர்கள் இருவரின் சத்தமும் சண்டையும் கேட்டு, கலை பதற்றத்தோடு வீட்டிற்குள் ஓடி வந்தார்.

"அலர், என்ன மாப்பிள்ளைக்கிட்ட இப்படி சண்டை போட்டுட்டு இருக்க? வந்ததும் வராததுமா என்ன ஒரு போர்க்களம் இது?" என்று மகளை அதட்டி அடக்கியவர்,

"மாப்பிள்ளை, கோபப்படாதீங்க... உட்காருங்க, சூடா டீ ஏதாவது போட்டு எடுத்துட்டு வரவா?" என்றார் பவ்யமாக.

"எனக்கு இப்ப ஒன்னும் வேணாம், நான் வழியிலயே குடிச்சிட்டுத்தான் வந்தேன். ஸ்ரீராம் எங்கே? முதல்ல ஸ்ரீராமை இங்க கூப்பிடுங்க," என்றார் பிரபாகரன்.

வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாத மாப்பிள்ளை, இப்போது தன்னைத் தேடிப் பேச விரும்புவதை அறிந்ததும், ஸ்ரீராம் தயக்கத்துடன் தானாகவே வெளியே வந்தான்.

பிரபாகரன் ஸ்ரீராமை ஒரு கழுகைப் போல் கூர்மையாகப் பார்த்தான். ஸ்ரீராமை விடப் பிரபாகரன் இரண்டு வயது மூத்தவர் என்பதால், மனதின் ஏதோ ஒரு மூலையில் பிரபாகரன் மீது ஸ்ரீராமுக்கு ஒரு தனி மரியாதை எப்போதும் இருந்தது.

"நாளைக்கு ஹியரிங் இருக்குல்ல... ஞாபகம் இருக்கா உனக்கு?"

"ம்... ஞாபகம் இருக்கு," என்றான் ஸ்ரீராம் மெதுவான குரலில்.

"நேரத்துக்குக் கோர்ட்டுக்கு வந்துரணும். அங்க வந்து எதையும் இழுத்தடிச்சு டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது, பார்த்துக்கோ."

"நான் வந்துடுவேன்... ஆனா அவ வருவாளா?" என்று சந்தேகமாகக் கேட்டான் ஸ்ரீராம்.

"ராதை கண்டிப்பா நேரத்துக்கு வந்துருவா. ஆனா உன்னால அவங்களுக்கு அங்க எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. முக்கியமா உன் அம்மா, உன் தங்கச்சிங்களால அங்க தேவையில்லாத கூச்சல் குழப்பம் எதுவும் நடக்கக்கூடாது, புரியுதா?" என்று எச்சரித்தார்.

"நாங்க ஏன் அங்க சண்டை போடப் போறோம்? எங்களுக்கு என்ன சண்டை போடணும்னு ஆசையா? ராதையும் என் பிள்ளையும் என் கூடச் சேர்ந்து வாழணும்னுதான் நானும் துடிச்சிட்டு இருக்கேன். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன். நேற்றுகூட ராதாகிட்டப் போய்ப் பேசிட்டுத்தான் வந்தேன். ஆனா அவ ஒரு நாயைத் துரத்துற மாதிரி என்னை அடிச்சுத் துரத்தி விட்டுட்டா! என் புள்ளை இங்க வந்ததுல இருந்து அனாதையா நிக்கிறான். அந்தச் சின்ன ரூமுக்குள்ள அடைஞ்சு கிடக்குறான்.

அவனும் மனுஷன் தானே? அவனுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் தானே? அவன் இப்படிப் புழுங்கிக் கிடக்கணுமா? என் புள்ள இப்படி நிக்கிறதைப் பார்க்கும்போது பெத்த இந்த மனசு எப்படித் துடிக்கும் தெரியுமா?" என்று கலை, தன் சேலை முந்தானையை எடுத்து முகத்தில் வழியும் கண்ணீரைத் துடைப்பது போல் பிரபாகரன் முன்னால் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

ஆனால், இவருடைய இந்த நடிப்பு ஒரு சதவீதம் கூட பிரபாகரனிடம் எடுபடாது என்று தெரிந்தும், அவர் ஆற்றிய அந்த வெட்டி நடிப்பு, அவர்கள் குடும்பத்தின் மீதான வெறுப்பைப் பிரபாகரனுக்கு இன்னும் பல மடங்கு அதிகப்படுத்தியது.

"என்னங்க நீங்களே இப்படிப் பேசினா எங்களுக்கு வேற யாரு துணையா இருப்பா? என் அண்ணன் மாதிரி ஒருத்தன் வேற யாருக்கும் கிடைக்க மாட்டான். அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படிப் பேசுறீங்க... நாள் பூரா என் அம்மா மாடா உழைக்கிறாங்க. அவளை உட்கார வச்சுச் சோறு போட்டாங்க. ஆனா அதையெல்லாம் சாப்பிட்டுட்டு, நம்ம குடும்பத்துக்கே துரோகம் பண்ணணும்னு நினைக்கிற அந்தச் சிறுக்கி..." அலர் பேசி முடிக்கவில்லை,

அதற்குள் பிரபாகரனின் கைவிரல்கள் ஆணித்தரமாக அவள் கன்னத்தில் பாய்ந்தன. 'பளார்' என்ற சத்தத்தோடு அவள் உதடு கிழிந்து ரத்தம் கசிந்தது.

அந்த அடியில் நிலைகுலைந்த அலர் தரையில் சுருண்டு விழ, ஸ்ரீராம் ஆத்திரத்தில் பிரபாகரனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான்.

அங்கு நடக்கும் எதையுமே நம்ப முடியாமல் கலை திகைத்துப் போய் நின்றார்.

"நீங்க என்னை விட வயசுல மூத்தவர்னு தான் இவ்வளவு நேரம் நான் பொறுமையா இருந்தேன். அதுக்காக என் கண்ணு முன்னாடியே என் தங்கச்சியை அடிப்பீங்களா? கட்டுன பொண்டாட்டியை கைநீட்டி அடிக்கிற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?" என்று ஸ்ரீராம் கொதிப்போடு கேள்வி கேட்டான்.

ஆனால், பிரபாகரன் அவனை ஒரு மச்சானாகவே பார்க்கவில்லை. அடுத்த நொடியே 'பளார்' என்று ஸ்ரீராமின் கன்னம் சிவக்கும்படி ஒரு அறை விழுந்தது.

"ஆம்பளையான்னு என்னைப் பார்த்து நீ கேட்கிறியா? நீ என்ன அவ்வளவு பெரிய உத்தமனா? உன் பொண்டாட்டியை அடிச்சுத் துன்புறுத்தி, சித்ரவதை செஞ்சு, அவளைத் தரதரன்னு இழுத்துட்டுப் போய் வீட்டை விட்டு வெளியில தள்ளின நீயெல்லாம் என்னை ஆம்பளையான்னு கேட்கத் தகுதியே இல்லாதவன்! இந்த உலகத்திலேயே ஒரு வடிகட்டின முட்டாள் இருக்கான்னா அது நீ மட்டும்தான்.

உன்ன மாதிரி ஒரு முட்டாளைத் தேடி அலைந்தாலும் எங்கேயும் பார்க்க முடியாது. ஒரு பைத்தியத்துக்கு கூடத் தனக்கு வலிக்குது, தன்னைச் சார்ந்தவங்களுக்கு வலிக்குதுங்கிற உணர்வு இருக்கும். ஆனா நீ எப்படி இருக்க? உன்னை நம்பி வந்தவளை வீட்டை விட்டுத் துரத்தினது இல்லாம, அவளை ஒரு நாளாவது நிம்மதியா வாழ வச்சிருக்கியா?

எதுவா இருந்தாலும் நாளைக்குக் கோர்ட்ல பார்த்துக்கலாம்," என்று விரல் நீட்டி எச்சரித்தவர், கலை பக்கம் திரும்பினார்.

"நீ ஆரம்பிச்ச இந்த நாடகம் உனக்கு எதிராவே வந்து முடியப்போகுது. நாடகத்தை ஆரம்பிக்கிறது முக்கியம் இல்லை, அதைச் சரியா நடத்தி முடிக்கத் தெரியணும்," என்று ஸ்ரீராம் முன்னிலையிலேயே கலையையும் அலரையும் எச்சரித்துவிட்டு அவர் அறைக்குள் சென்று கதவை தாளித்துக் கொண்டார்.

அந்த இடமே ஒரு பெரிய புயல் அடித்து ஓய்ந்தது போல நிசப்தமாக இருந்தது. ஸ்ரீராம் தன் கன்னத்தில் கைவைத்தபடி அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.

கலை தன் மகளை தூக்கி நிறுத்தி விட்டு, தன் மகனை முறைத்தபடி பேசத் தொடங்கினார்.

"உன் பொண்டாட்டி இந்த வீட்ல இருந்த வரைக்கும் தான் யாரையும் நிம்மதியா இருக்க விடலைன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு வீட்டை விட்டுப் போனதுக்கு அப்புறமும் அங்க இருந்துட்டே இந்தக் குடும்பத்தைச் சீரழிக்கிறாளே!

மாப்பிள்ளைக்கு என்ன மந்திரம் போட்டு வச்சிருக்காளோ தெரியல... இன்னைக்கு அவர் அவளுக்காகப் பரிந்து பேசுறாரு. கட்டுன பொண்டாட்டியை இப்படிப் போட்டு அடிக்கிறாரு. நம்ம மேல இவ்வளவு பாசமா இருந்த மனுஷனை அவ எப்படி மாத்தி வச்சிருக்கா பாரு! அவளெல்லாம் மனுஷப் பிறவியே கிடையாது," என்று கலை அந்தச் சூழலையும் தனக்குச் சாதகமாக மாற்ற பார்த்தார்.

"மயக்கிட்டா அம்மா! என் புருஷனை அந்தச் சிறுக்கி மயக்கிட்டா! அண்ணன் முறையில இருக்க வேண்டியவனையே தன் பக்கம் இழுத்துட்டா! அவ எவ்வளவு கேவலமானவளா இருப்பா? நான் அன்னைக்கே படிச்சுப் படிச்சுச் சொன்னேன்...

அவ தப்பு பண்ண ஆரம்பிக்கும்போதே வீட்டை விட்டுத் துரத்திடுன்னு! கேட்டியா நீ? இன்னைக்குப் பார்த்தியா என் வாழ்க்கை எப்படி வந்து நிக்குதுன்னு? என் புருஷன் அவகிட்ட மயங்கிக் கிடக்கிறார், என் வாழ்க்கையே போச்சு," என்று தலையில் அடித்துக் கொண்டு அலறினாள் அலர்.

அப்போது பிரபாகரன் மீண்டும் கதவை வேகமாக திறந்து புயலென அவர்கள் முன் வந்து நின்றார்.

அந்த வேகம் கண்ட அலர் பயந்துபோய் தன் தாய்க்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.

"இன்னொரு வார்த்தை... ராதை பத்தி தப்பாப் பேசினேன்னா அப்புறம் மரியாதை இருக்காது! நீ யாரைப் பத்திப் பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? உன் புருஷனைப் பத்தி நீயே இப்படிப் பேசுறது எவ்வளவு கேவலம்? நாளுக்கு நாள் உன்னோட பேச்சும் செயலும் எனக்கு உன் மேல ஒரு பெரிய வெறுப்பைத்தான் உண்டாக்குது அலர்!"

"இப்போ நான் உங்களுக்கு வெறுப்பா தான் தெரிவேன். ஏன்னா நீங்க இப்போ அவ பக்கம் சாய்ஞ்சுட்டீங்க! அவ முந்தானையில் இருக்கீங்க. என் சாபம் உங்களைச் சும்மாவே விடாது!" என்று விஷத்தைக் கக்குவது போல் சீறினாள் அலர்.

தொடரும்.....
 

Advertisement

Advertisement

Back
Top