மனைவி - 5

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 5

பிரபாகரன் தன் மனக் குமுறல்களையும் மீறி பலமாக வாய்விட்டுச் சிரித்தான். தன் சொந்த மகன்களுக்கே இந்தச் சிறிய வயதில் இந்த அளவுக்குப் பெரிய மனுஷ யோசனை வந்துவிட்டதே என்று நினைக்கும் போது, ஒரு பக்கம் நெஞ்சில் வேதனையாக இருந்தாலும், அந்தச் சிரிப்பைத் தவிர அவனால் வேறொன்றையும் வெளிப்படுத்த முடியவில்லை.

"ஸ்ரீராம்னு அந்தப் பேரை அவனுக்கு வச்சதுனாலதான் அவன் இப்படிப் பிடிவாதமா இருக்கிறானான்னு எனக்குப் புரியல. ஆனா ஒண்ணு மட்டும் நிஜம், அவன் மனசளவுல ரொம்பச் சுத்தமானவன். அவன் எப்போதுமே எந்தத் தப்பையும் தெரிஞ்சு பண்ணிருக்க மாட்டான், இனியும் பண்ண மாட்டான்"னு பிரபாகரன் தன் கையைச் சூடம் வச்சுக்கூடச் சத்தியம் செய்வான். அந்த அளவுக்குத் மச்சான் மேல அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

சத்யாவைப் பார்த்துப் பிரபாகரன் மெல்லத் தொடர்ந்தான், "அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை சத்யா. உன் மாமன் ரொம்ப நல்லவன்தான், அதுல மாற்றுக்கருத்தே இல்லை. ஆனா, வெறும் நல்லவனா மட்டும் இருந்தா இந்த உலகத்துல வாழ்க்கையில நிம்மதியா வாழ முடியாது. எல்லா வீட்லயும் அம்மாக்கள் கஷ்டப்பட்டுத்தான் புள்ளைங்கள வளர்க்குறாங்க, அது உண்மைதான். அதுக்காக அம்மா 'நில்லு'ன்னா நிக்கணும், 'சாப்பிடு'ன்னா சாப்பிடணும், கடைசியில 'பொண்டாட்டி கூட வாழாதே'ன்னு சொன்னா அதையும் கேட்டுட்டு வாழாம இருக்கணும்னு நினைக்கிறவன், ஒரு மனுஷனா இருக்கவே தகுதி இல்லாதவன். இவன் தன்னைத்தானே ஒரு நல்லவன்னு ஒரு மாயையில் நினைச்சுட்டு இருக்கான். ஆனா, நிஜத்துல ஒரு பொண்ணை நாம எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்படுத்துறோம்னு தெரியாம, தன் வாழ்க்கையில என்னதான் நடக்குதுன்னு கூடப் புரியாம இருக்கான். ஒருநாள் அவன் ஊருக்கு வந்து இதையெல்லாம் நேர்ல பார்க்கும்போது நிஜமாவே ரொம்ப வருத்தப்படுவான்."

"அப்பா, உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா? அத்தையை எப்படியாவது இந்த வீட்டை விட்டுத் துரத்துறதுக்கு அம்மாவும், சித்தியும், அந்த ராட்சசி பாட்டி கூட சேர்ந்து ஏதோ பெரிய பிளான் பண்ணிட்டு இருக்காங்கப்பா" என்று மகன் சொன்னான்.

"நிஜமாவா சொல்ற? சத்தியமா சொல்றியா சத்யா?" என்று பிரபாகரன் மிகுந்த அதிர்ச்சியுடன் கேட்டான்.

"ஆமாப்பா, அவங்க ரூமுக்குள்ள யாரோ வர்றாங்களான்னு பார்த்துட்டு ரொம்ப ரகசியமா குசுகுசுன்னு பேசிட்டு இருந்தாங்க. நான் அம்மாவை ஏதோ கேக்குறதுக்காக அங்கே போகும்போது, அவங்க பேசினது கொஞ்சமா என் காதுல விழுந்தது. எனக்கு அவங்க பேசினது முழுசாப் புரியலனாலும், மாமா ஊர்ல இருந்து வந்த உடனே எப்படியாவது அத்தையை வீட்டை விட்டு வெளிய அனுப்பணும்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்கன்னு மட்டும் நல்லாத் தெரிஞ்சுது. நீங்கதான் ஏதாவது பண்ணனும்ப்பா!"

பிரபாகரன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான், "சத்யா, இப்போதைக்கு நான் எதுவுமே பண்ணாம வேடிக்கை பார்க்கிறதுதான் எல்லாருக்கும் நல்லது. ஏன்னா, நான் போய் ஏதாவது நியாயம் பேசப்போனா, எனக்கும் அத்தைக்கும் இடையில ஏதோ தப்பான தொடர்பு இருக்குன்னு ஒரு பட்டத்தைக் கட்டி விட்டுடுவாங்க. அது ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிற அந்த ராதைக்கு இன்னும் பெரிய அசிங்கமா போயிடும். ஒரு விதத்துல சொல்லப்போனா, அவ ஸ்ரீராமை விட்டுப் பிரிஞ்சு போறதுதான் அவளோட எதிர்காலத்துக்கு நல்லது."

"அவளுக்காக உண்மையா வாழ நினைக்கிறவங்களுக்கும் அதுவே நல்லது. அவ நல்லா படிச்ச பொண்ணு, முன்னாடி வேலைக்குப் போயிட்டு இருந்தவ, மனசளவுல ரொம்பத் தைரியமானவ. அவளைப் பெத்தவங்களும், கூடப் பிறந்தவங்களும் சரியில்லாம போனதுனாலதான், இந்தத் துன்பக் குழிக்குள்ள மாட்டிக்கிட்டு இவ்வளவு கஷ்டப்படுறா. 'நான் உனக்குத் துணையா இருக்கேன், நான் பாத்துக்கிறேன்'னு ஆதரவா ஒரு குரலோ இல்ல பிடிச்சுக்க ஒரு கையோ இருந்தா போதும்; அவ தன் வாழ்க்கையைத் தைரியமாத் தானே பாத்துப்பா.

ஸ்ரீராமை அவ மனப்பூர்வமா விரும்புறா, அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனா அதுக்காக இப்படியே காலம் முழுசும் ஒரு கொத்தடிமையா அவகிட்டயும் அவங்க குடும்பத்துகிட்டயும் கிடக்கணும்னு அவளுக்கு எந்த ஆசையும் இல்லை. ஸ்ரீராம் வந்ததும் அவன் ராதையைப் பிரியணும்னு நினைச்சா பிரிஞ்சு போகட்டும். அப்படி அவன் பிரிஞ்சா, அவன் இழக்கப்போறது ஒரு விலைமதிப்பற்ற வைரத்தை! ஆனா இழந்த பிறகுதான் அவன் அதோட அருமை தெரிஞ்சு ரொம்ப வருத்தப்படுவான். உண்மையைச் சொல்லப்போனா ஸ்ரீராமை விட்டுப் பிரிஞ்சாதான் ராதை ரொம்ப நல்லா இருப்பா."

அரவிந்த் தன் மனதிலிருந்த பாரத்தை ஆற்றாமையோடு கேட்டான், "அப்போ அவங்க பிரிவது தான் நல்லதுன்னு சொல்றீங்களாப்பா?"

"ஆமாண்டா, ராதை நிம்மதியா இருக்கணும் அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் பிரியணும். அப்படி ஒரு விஷயம் நடந்தா அது எனக்கு ரொம்பச் சந்தோஷமான விஷயமாத்தான் இருக்கும்."

அரவிந்த் அதற்கு மேல் பேசாமல் அமைதியாக இருந்தான். அரவிந்த் மனசுக்குள்ள இருக்கிற அந்த ஆசை என்னன்னு தந்தை பிரபாகரனுக்கு நல்லாவே தெரியும்.

"அரவிந்த், அப்பா ஒண்ணு சொல்லுவேன், அதைக் கேக்குறியா?"

"ம்ம்..." என்றவனுக்குத் தொண்டை அடைத்தது, குரல் கூட வெளியே வரவில்லை.

"உன் மனசுல இருக்கிற அந்த ஆசையை அப்படியே தூக்கிப் போட்டுடு. ராதை ஒருத்தி இங்கே இவ்வளவு கஷ்டப்படுறது போதும். என்னதான் நீ நல்லவனா இருந்தாலும், காலம் போகப்போக வாழ்க்கை எப்படி மாறும்னு எனக்குத் தெரியாது. தயவுசெஞ்சு இனி இந்த ஆசையை உனக்குள்ள வளர விடாதே. அது உனக்கு ஆறாத வலியை மட்டும்தான் கொடுக்கும். நீ நினைக்கிறது ஒருபோதும் நடக்காதுன்னு உனக்கும் தெரியும், அதுக்கு நான் ஒருக்காலும் ஒத்துக்க மாட்டேன்."

"சரிப்பா, நான் அந்த எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமா மறக்க முயற்சி பண்றேன். ஆனா நாங்க சொன்னதை மட்டும் நீங்க மறந்துடாதீங்கப்பா. எங்களை எப்படியாவது ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுருங்க. எனக்கு இங்கே இருக்கவே பயமா இருக்கு. நான் இங்கேயே இருந்தா, போகப்போக அவங்களைப் போலவே நானும் மாறிடுவேனோன்னு தோணுது. ஒருவேளை மாமா மாதிரி நானும் ஆயிட்டா என்ன பண்றது?"

பிள்ளைகளா இருந்தாலும் இவங்களுக்கு இருக்கிற இந்த அறிவு கூட ஸ்ரீராமுக்கு இல்லையேன்னு நினைச்சு அவர் ரொம்ப வருந்தினார்.

"உங்களை என்னால இப்போ ஹாஸ்டல்ல சேர்க்க முடியாதுடா. ஏன்னா நீங்க ஒண்ணும் விவரம் தெரியாத சின்னக் குழந்தைங்க கிடையாது; 15 வயசு, 13 வயசு ஆகுது. நான் உங்களை ஒரு பாதுகாப்பான வீட்டுல விடுறேன். நம்ம மேல் வீடு காலியாத்தான் இருக்கு, நீங்க அங்கே போய் தங்கிக்கோங்க. உங்களுக்கு நேரத்துக்குச் சாப்பாடுல இருந்து எல்லாமே அங்கே கிடைக்கும்."

மகன்கள் இருவரும் குழப்பத்தோடு தந்தையைப் பார்க்க, அவர் விளக்கினார், "அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் அரவிந்த். உன்னைத் தனியா ஹாஸ்டல்ல விட்டா மத்தப் பசங்க கூடச் சேர்ந்து நீ கெட்டுப் போயிட வாய்ப்பிருக்கு. உனக்கு இப்போ அந்த வயசு. உனக்குப் பின்னாடி உன் தம்பி உன்னைப் பார்த்துதான் வளர்றான். எந்த வீட்டுல இருந்து, யாரைப் போல மாறிடுவோமோன்னு பயந்து நீங்க வெளியே போகத் துடிக்கிறீங்களோ, அதைவிட மோசமா வெளியே போனா மாறிடுவீங்க. காலம் ரொம்பக் கெட்டுப் போயிருக்கு. அதனால எனக்கு நம்பிக்கையான, பாதுகாப்பான இடத்துலதான் உங்களை விட முடியும். அந்த வீட்டுல இருக்கிறவங்க உங்களை நல்லபடியா பாத்துக்குவாங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு."

தந்தை அவ்வளவு உறுதியாச் சொன்னதுனால, இருவராலும் மறுத்துப் பேச முடியல. ஆனா இருவர் மனசுலேயும் அந்த வீட்டை விட்டு உடனே வெளியே போகணும்ங்கிற எண்ணம் மட்டும்தான் இருந்தது.

"சரிப்பா, நீங்க இன்னைக்கே இது பத்தி வீட்டுல பேசிடுங்க."

"நான் இன்னைக்கு நைட்டே எல்லார்கிட்டயும் பேசுறேன்டா. இப்போ நீங்க ஸ்கூல் போங்க." மகன்களை அனுப்பி வைத்த பிரபாகரனுக்கு மனசு ரொம்பக் கனத்துப் போச்சு.

பொதுவாப் பெத்தவங்களை விட்டுப் பிரியணும்னு எந்தப் பிள்ளைகளும் நினைக்கிறது இல்லை. அதுவும் ஆண் பிள்ளைகளுக்குத் தாய்ன்னா உயிர். ஆனா என் மகன்களோ தாயே வேண்டாம்னு கதறுறாங்க. அண்ணன் சந்தோஷமா இருக்கக்கூடாது, அண்ணன் வருமானம் தங்களுக்கு மட்டுமே கிடைக்கணும்னு சுயநலமா நினைக்கிற அந்தத் தங்கைகளுக்குத் தெரியல, அவங்க பெத்த மகன்களே அவங்களை எவ்வளவு வெறுக்குறாங்கன்னு.

மறுபுறம், ராதை தன் திருமணப் புகைப்படத்தைக் கையில் வச்சுக்கிட்டு அதைப் பார்த்து விவரிச்சுப் பேசிட்டு இருந்தா.

"உங்களுக்கும் எனக்கும் இடையில பசுமையான நினைவுகள்னு சொல்லிக்க ஒரு நினைவுகூடக் கிடையாது. கல்யாணமாகி ரெண்டு நாள் மட்டும்தான் என்கூட இருந்தீங்க. அப்போ கூட 'நீ என்ன பண்ற? எப்படி இருக்க?'ன்னு நீங்க என்கிட்ட அன்பா ஒரு வார்த்தை பேசுனதே கிடையாது. நினைச்சுப் பார்த்தா எவ்வளவு வெறுப்பா இருக்கு! நீங்க எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னே எனக்குத் தெரியல. ஒருவேளை உங்க வீட்டுல உங்க அம்மா கட்டாயப்படுத்தினதுனால கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களான்னு புரியல. பதிமூணு வருஷம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உங்களுக்காக மட்டுமே காத்திருந்தேன். ஆனா ஏனோ இப்போ எனக்குள்ள கொஞ்சம் பயமா இருக்கு.

ஊருக்கு வந்த உடனே எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? இல்ல இப்பவும் உங்க அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு ஊமையாவே இருப்பீங்களா? உங்களுக்கு இங்கே நடக்கிற நிறைய விஷயம் தெரியல. ஒருவேளை தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களான்னு எனக்குத் தெரியல"னு சொல்லும்போதே, அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் ஸ்ரீராம் போட்டோ மேல தெறிச்சு விழுந்தது.

கண்ணனைப் போல அழகான கார்மேக நிறம், அடர்த்தியான தலைமுடி, நேர்த்தியான பார்வை, மிதமான மீசைன்னு அவன் ஒரு கருப்பு அழகனா இருந்தான். அவனைப் பார்த்த முதல் தடவையே பிடிச்சுப்போய், ஆசைப்பட்டு, விரும்பியே அவனைத் திருமணம் செஞ்சுக்கிட்டா. ஆனா ஏமாற்றம்தான் அவ வாழ்க்கையில மிஞ்சியது. அதைவிடக் கொடூரமான ஒரு வலியை அவ சுமந்துட்டு இருந்தா. அந்த வலிக்கு ஒரு பதில் தேடித்தான் இத்தனை வருஷங்களாக் காத்துட்டு இருக்கா.

வெளியே திடீர்னு பலமாச் சத்தம் கேட்கவும், அவசரமா கதவைத் திறந்துட்டு வெளியே ஓடி வந்தா. அவளைப் பார்த்ததும் அங்கே சண்டை போட்டுட்டு இருந்த எல்லாரும் பேச்சை நிறுத்திட்டு மௌனமானாங்க.

"இங்கே உனக்கு என்ன வேலை? முதல்ல வெளிய போ!"னு மலர் அவ முகத்துல அடிச்ச மாதிரி துரத்தினாள். ராதை எதையும் பேசாம அவங்களைக் கடந்து வெளியே போனா.

வெளியே கிடந்த சேர்ல அரவிந்தும் சத்யாவும் உட்கார்ந்து இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் அத்தையைப் பார்த்ததும் மரியாதையா எழுந்து நிற்க, "பரவாயில்லை, நீங்க உட்காருங்க"ன்னா ராதை.

தொடரும்.......
 
Last edited:
ஸ்ரீராமா போதும் உன் வனவாசம்🤦‍♀️. சீக்கிரமாக கதைக்குள்ள வா🙋‍♀️

ராதைக்கு இனி வரும் காலம் நல்ல காலமாக அமையனும்.
 
Last edited:
அந்த குடும்பத்துல மனசாட்சி உள்ளவங்களும் இருக்காங்க 😏
 

Advertisement

Advertisement

Back
Top