Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்! - 12

Advertisement

praveenraj

Well-known member
Member

மழைக்கால மேகங்கள்! - 12

பேருந்து நள்ளிரவில் ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட அதில் விழித்த வண்ணன் அனிச்சையாக நிஹாரிகாவுடனான அவனது பேருந்துப் பயணத்தை அசைபோட்டான்.
நிஹாரிகாவுடன் பணிபுரியும் ஒரு தோழிக்கு திருவனந்தபுரத்திற்கு அருகில் திருமணம் நடைபெற இருந்தது. நிஹாவும் வண்ணனும் காதல் செய்ய ஆரமித்து சுமார் எட்டு மாதங்கள் கடந்திருந்தது. இன்னும் இரு வீட்டிற்கும் அவர்கள் காதல் விஷயம் தெரியப்படுத்தாமல் இருந்த வேளையில் தான் அவள் தோழிக்கு திருமணம் முடிவாகியிருக்க ஏனோ வண்ணனுடன் அந்தத் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்று நிஹா அதிகம் விரும்பினாள். மழைக்குப் பின் வரும் புது வெள்ளம் போல் காதலுக்குப் பின் அவர்கள் மேனியெங்கும் புது ரத்தம் பாய்ந்துகொண்டிருக்க அதே களிப்புடன் அடுத்தடுத்த நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு அந்தத் திருமணம் இன்னுமொரு புது அனுபவத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.

அந்தப் பேருந்து முழுக்க நிஹாவின் கொலீக்குகளால் நிரம்பியிருக்க இதே போலொரு செமிஸ்லீபர் பேருந்தில் அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். இரவு பயணம் என்பதே அலாதி இன்பம் என்னும் போது நமக்குப் பிடித்தவரின் அருகாமையில் அவர்கள் கரத்தைக் கோர்த்து தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தைப் பேசிக்கொண்டு பயணிப்பது போலொரு கிளர்ச்சி தரும் செயல் வேறுண்டோ?

"நிஹா நாளைக்கு நம்ம மேரேஜுக்கும் நம்ம ஃப்ரண்ட்ஸ் இப்படித்தானே வருவாங்க?" என்று வண்ணன் கேட்டதும் அந்த நாளின் மயக்கத்திற்குச் சென்றவளின் வதனம் நாணத்தில் குங்குமமாகச் சிவக்க அதைத் தன் கண்கள் என்னும் கேமராவில் அழகாகப் படம்பிடித்து அவன் இதயக்கூட்டில் பொக்கிஷமாகச் சேமித்து வைத்தான் வண்ணன்.

"நம்ம மேரேஜ் கோவைல தானே நடக்கபோகுது? அப்பறோம் எப்படி அவங்க இப்படி ட்ராவல் பண்ணி வருவாங்க?" என்று கேட்டு தன் புருவத்தை உயர்த்தினாள் நிஹாரிகா.

"யாரு சொன்னா? எங்க சைட் மேரேஜ் எல்லாம் மாப்பிள்ளை வீட்ல தான். சோ நம்ம மேரேஜ் வெள்ளிமலையிலயோ இல்லை கள்ளக்குறிச்சியிலையோ தான் நடக்கும். வேணுனா இங்க ஒரு ரிசெப்சன் வெச்சுக்கலாம்?" என்று வண்ணன் சொன்னதும் அவன் ஊரைப் பற்றிக் கேட்டாள் நிஹா. என்ன தான் பலமுறை வண்ணன் வாயாலே வெள்ளிமலையின் எழிலைக் கேட்டிருந்தாலும் அவன் அதை ஒவ்வொரு முறை வர்ணிக்கும் அழகே ஒவ்வொருமுறையும் அதைப் புதுமையாக அவளுக்குக் காட்டும்.

"நானும் உன்னை அங்க கூட்டிட்டுப் போனு பலமுறை கேட்டுட்டேன் ஜேபி. நீ தான் அப்பறோம் அப்பறோம்னு தள்ளிப் போட்டுட்டே போற" என்று உண்மையான ஆற்றாமையில் சிணுங்கினாள் நிஹா.

"ஏய் நிஹு அது ஒன்னும் கோவை மாதிரி ஒரு மெட்ரோ பொலிட்டன் சிட்டி இல்ல. கிராமம். அங்கலாம் இப்படி திடீர்னு ஒரு பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. அக்கம் பக்கம் இருக்கவங்க எல்லாம் விநோதமா பார்ப்பாங்க. அதை விட என் அம்மாவைப் பத்திச் சொல்லவே வேண்டாம். நாம ஏற்கனவே பேசியபடி முதல உன் அப்பாகிட்ட நம்ம லவ்வை பத்திச் சொல்லிட்டு அவர் மூலமா என் அம்மாவை அப்ரோச் பண்ணலாம்..." என்று தைரியமாகவே உரைத்தவன் ஒருகணம் தயங்கி,

"உன் அப்பா நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லிடுவார் தானே?" என்று ஐயத்துடன் வினவினான்.

"அதெல்லாம் நோ ப்ராப்ளம். என் அப்பாக்கு என் சந்தோசம் தான் முக்கியம். அம்மா இருக்கும் போதே எனக்கு எதுக்கும் நோ சொல்ல மாட்டார். அம்மா போனதுக்குப் பிறகு நான் தான் அவரோட உலகம். ஏற்கனவே எனக்கு வரப் போற மாப்பிள்ளை எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு கனவுக்கோட்டையே கட்டியிருப்பார். ஆனா அதைப் பத்தி எல்லாம் நீ பயப்பட வேண்டாம். நீ ஊம் சொன்னா நாளைக்கே கூட என் அப்பாகிட்ட நம்ம லவ்வை சொல்லிடலாம். நீ தான் உன் அம்மாவை கன்வின்ஸ் செய்ய டைம் வேண்டும்னு கேட்ட..."

"நான் சின்ன வயசுல இருந்தே அப்பா செல்லம். அவர் இருந்திருந்தா இந்நேரம் உன்னை என் வீட்டுக்கு மருமகளாவே கூட்டிட்டுப் போயிருப்பேன். ஆனா இப்போ என் அம்மா மட்டும் தான் இருக்காங்களா. அவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கனு எனக்குப் புரியல. இருந்தாலும் இந்த முறை ஊருக்குப் போகபோறதே நம்ம லவ்வை பத்தி என் அம்மாகிட்ட ஓபன் பண்ண தான். கண்டிப்பா எடுத்ததும் என் அம்மா நோ தான் சொல்லுவாங்க. நிறைய போராடனும். பார்த்துக்கலாம்..."

"ஹே சூப்பர் ஜேபி. அப்போ இந்த வீக் எண்ட் என் அப்பாவை மீட் பண்ணி எல்லாம் சொல்லிடலாம். அப்பறோம் உன் அம்மாகிட்ட நீ பேசு. ஏதாவது சிக்கல் வந்தாலும் என் அப்பா பார்த்துப்பாரு. டோன்ட் ஒர்ரி டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி..." என்று அவன் கரம் கோர்த்தாள் நிஹாரிகா.

இரவில் ஓரிடத்தில் பேருந்து நிறுத்தப்பட அதில் விழித்தவன் அவன் மீது சாய்ந்து உறங்கும் நிஹாவை வாஞ்சையாகப் பார்த்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான். அதன் பின் அந்த இரவு பயணம் முழுவதும் அவனுக்குத் தூக்கம் எங்கே வந்தது? தன் கரத்தைக் கொண்டு அவளைச் சுற்றியவன் பேருந்தின் ஸ்க்ரீனை விலக்கி வெளியில் வேடிக்கை பார்த்தவாறு திருவனந்தபுரத்தை வந்தடைந்தான்.

காதல் ஒரு சிவபானம். ஒரு கையில் அதை வைத்துப் புகைக்கையில் நமக்கு ஏற்படும் பரவசநிலைக்கு எல்லையே கிடையாது என்பதுபோல் காதலில் மூழ்கியிருக்கும் மனிதருக்கு மட்டும் நிதர்சனம் எவ்வாறு புரியும்?

கேரளத்தின் பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெற தன்னுடன் பணிபுரியும் எல்லோருடன் இணைந்து ஒரு கேரள புடவையில் அங்கும் இங்கும் வலம் வந்தவளைக் கண்டு சொக்கியவன் அவள் அழகென்னும் 'கீ'க்கு கட்டுப்படும் பொம்மை ஆனான்.
அவனது மையல் கலந்த பார்வையே பாவைக்குள் பரவசமூட்டியது. திருமணம் நடைபெறும் நேரம் அவளை சமிக்ஞையால் அழைத்தவன் இதுபோல் நாமும் செய்வோமா என்று வினவ வண்ணனின் காதலவதாரத்தைக் கண்டு ஆடித்தான் போனாள் நிஹாரிகா.
கேரளாவை நன்கு சுற்றிப் பார்த்தவர்கள் அதே போல் ஒரு இரவு பேருந்துப் பயணத்தையே மேற்கொண்டனர். இம்முறை ஆதரவாக அவன் தோள் சாய்ந்து வந்த நிஹாரிகாவுடனான அந்த நிமிடங்களை நினைக்கையில் வாழ்க்கை அந்தப் புள்ளியிலே உறைந்திருக்கலாமோ காலம் அந்த இடத்திலே நின்றிருக்கலாமோ என்ற விசித்திர எண்ணங்கள் அவனுள் எழுந்து அடங்கியது.

பழைய நினைவுகளில் வண்ணன் மூழ்கியிருக்க அருகிலிருந்த பேருந்தின் ஹாரன் சப்தத்தில் கண் விழித்தவள் அப்போது தான் தன் நிலை அறிந்து அவசரமாக அவனை விட்டு விலகினாள் சரிதா. அதில் சுயம் பெற்றவன்,

"ரெஸ்ட் ரூம் போறதுனா போய்ட்டு வா சரு. பஸ் எடுத்திடப் போறாங்க" என்றதும் அவள் கீழே இறங்கினாள். மணி நள்ளிரவு இரண்டை நெருங்கியிருந்தது. எந்த இடம் என்று அவனுக்குத் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் ஆவலும் அவனிடம் இல்லை. அவளுக்காக ஒரு காஃபி வாங்கி தன்னுடையதை உறிந்து கொண்டிருந்தான்.
அவளையும் அறியாமல் வண்ணனின் மீது சாய்ந்து உறங்கிய நொடிகளை எண்ணியவளுக்கு முதன்முறையாக அவன் மீது ஒரு குறுகுறுப்பு உண்டானது. இருந்தும் அதைப் புறந்தள்ளி காஃபி பருகியவள்,

"எந்த இடம் வண்ணா?"

"திண்டிவனமா இருக்கும்" என்றவன் அருகிலிருந்த பெயர்ப் பலகையைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

அதன் பின் பேருந்தில் எறியவர்களை சிங்கராச் சென்னை அன்புடன் வரவேற்றது. கோயம்பேட்டில் இறங்கியவர்கள் கிண்டி அருகில் அவர்களுக்கு ஒதுங்கியிருந்த அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து பதினோரு மணிவாக்கில் தயாராகி விழா நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

அங்கே அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஆயிரக்கணக்கான நபர்கள் கூடியிருக்க அந்த என்.ஜி.ஓவிற்கு வருடக்கணக்காக உதவிசெய்துவரும் நபர்களைப் பற்றிப் பட்டியலிட்டவர் தங்கள் என்.ஜி.ஓவின் சேவைகளைப் பற்றிப் பேசினார் மஞ்சுளா.

சரிதாவையும் சேர்த்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு பச்சை வண்ண டீ ஷர்ட் அணிந்திருக்க அவர்களின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிருக்கும் ஒரு கடமை இருக்கு. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் கூட தனக்கு விதிக்கப்பட்ட கடமையை சரியாச் செய்யுது. உறைமோர்ல இருக்குற லேக்ட்டோ பேசிலஸ் என்னும் பேக்டீரியா தான் நமக்கு பாலைத் தயிரா மாத்திக் கொடுக்குது. நாம வாழுற வாழ்க்கை குறைஞ்சது ஒரு நாலு பேருக்காவது உபயோகமா இருக்கனும். மகிழ்வித்து மகிழ்னு ஒரு வாசகம் இருக்கு. இருக்கறதிலே ரொம்ப சந்தோஷமான விஷயம் அடுத்தவங்களை சந்தோச படுத்திப் பார்க்குறது தான். இன்னைக்கு இந்த அமைப்பு இவ்வளவு பெருசா வளர்ந்திருக்குனா அதுக்கு இதுல பணிபுரியும் தன்னார்வலர்கள் தான் முக்கிய காரணம். இப்போ தான் நம்ம 'காக்க காக்க' அமைப்பைப் பத்தி இந்த உலகத்துக்கு நல்லாத் தெரிய ஆரமிச்சிருக்கு. நமக்கெல்லாம் என்ன வேணுமோ அதை நம்ம அப்பா அம்மா செஞ்சு கொடுக்குறாங்க. ஆனா அப்பா அம்மாவே இல்லாம இங்க பல ஜீவன்கள் இருக்கு. அவங்களுக்கு வேண்டியத்தைச் செய்ய தான் நாம இருக்கோம். ரொம்ப வருஷமா நம்ம இயக்கத்துக்கு நன்கொடை வழக்கிட்டு வரவங்களை சிறப்பா கௌரவிக்கணும்னு நான் ஆசைபட்டுட்டே இருந்தேன். இன்னைக்குத்தான் அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..." என்று தன்னுடைய உரையைத் தொடங்கிய மஞ்சுளா அனைவரையும் பாராட்டி கௌரவிக்க வண்ணனுக்கும் ஒரு பொன்னாடை கிடைத்தது. விழா முடிந்ததும் உணவருந்த சென்றவர்கள் அங்கிருந்தவர்களுடன் சிறிது பேசிச் சிரித்தனர். இறுதியாக அங்கிருந்து புறப்படும் போது

சரிதாவை தனியே அழைத்தவன் அவனுக்கு வழக்கப்பட்ட அந்தப் பொன்னாடையை அவளுக்குப் போர்த்தி தனக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டியவளுக்கு நன்றி பாராட்டினான்.

அன்று இரவு தான் அவர்களுக்கு பேருந்து இருக்க தன் வீட்டினருக்காக ஷாப்பிங் சென்ற சரிதாவைக் கண்டவனுக்கு முதன்முதலாக அவன் அன்னைக்கு எதையாவது வாங்க வேண்டும் என்று தோன்றியது.
அவருக்கு அழைக்க அந்த அழைப்பை சூர்யா தான் ஏற்றான். தாயும் மகனும் இதுவரை நேராகப் பேசிக்கொள்ளவில்லை.

"சொல்லுங்க மாமா..." என்றவனிடம்,

"பாட்டி கிட்ட போன் கொடு சூர்யா" என்றதும் அழைப்பை ஏற்றார் கிரிஜா. நீண்ட மௌனம் ஆட்சி செய்ய,

"சொல்லு..." என்றார் கிரிஜா.

"அம்மா, என்னை மன்னிச்சுடு. நான் அன்னைக்கு அப்படிப் பேசியிருக்க கூடாது. நான் எந்தக் காரணமும் கொடுக்க விரும்பல. நிஹாரிகா விஷயத்துல இருக்குற கோவத்தோடு என்னை இங்க வம்படியா நீ இழுத்துட்டு வந்ததும் சேர்ந்து நான் அன்னைக்கு அப்படிப் பேசிட்டேன். உன் மேல எனக்கு நிறைய வருத்தம் இருக்கு. ஆனாலும் நான் அன்னைக்கு அப்படிப் பேசியிருக்க கூடாது. அப்பா போயிட்டார் அப்பா போயிட்டார்னு நெனச்சே இருக்குற உன்னை நான் கண்டுக்காம விட்டுட்டேன். நீயும் என்னை ஏன் கண்ட்ரோல் பண்ணுறதுலயே குறியா இருக்க? அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கிறதுக்கு காரணமே அவர் என்னைப் பேச விடுவார். என் ஆசை நிறைவேறும் நிறைவேறாது அதெல்லாம் ரெண்டாம் பட்சம். குறைஞ்சது அதை வெளிப்படுத்தவாது அவர் விடுவார். என்கிட்ட எதையும் பொறுமையா அன்பா சொல்லு. நீ என்னை உடனே மன்னிக்கனும்னு நான் எதிர்பார்கல. ஆனா அதுக்கான முதல் படியாவது எடு. உன்னை நான் இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்க ஆரமிச்சிருக்கேன். நானாச்சு அந்த முயற்சி எடுத்துட்டேன். ஆனா நீ? இதுவரை உனக்கு ஏதாவது வேணுமான்னு கூட நான் கேட்டதில்லை. இப்போ கேக்குறேன், உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்? எதையாவது கேளு. இப்பயும் என்னை வருத்தப்பட வெச்சிடாத ப்ளீஸ்..." என்ற வண்ணனின் வார்த்தையிலும் தொனியிலும் அப்படியொரு மாற்றத்தைக் கண்டார் கிரிஜா.

"நீ பார்த்து என்ன வாங்கிட்டு வந்தாலும் எனக்கு ஓகே" என்று கிரிஜாவுக்கு அவனைப் போலவே மென்மையாகப் பேசினார்.
"சரி நான் வாங்கிட்டு வரேன். நீ நைட்டுக்குள்ள எதுனாலும் யோசிச்சு வெய். பதினோரு மணிக்குத்தான் பஸ். ஓகே வா?" என்னும் போது அவர் கண்ணில் சூர்யா தென்பட்டான்.

"வண்ணா, வெச்சிடாத..."

"சொல்லும்மா"

"அது வந்து..."

"என்ன வேணும்?"
"சூர்யாவுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருது. அவன் ஒரு சைக்கிள் வேணும்னு கேட்டுட்டே இருக்கான். நீ முடிஞ்சா..." என்றவருக்கு தயக்கமே மேலோங்கியது. என்ன தான் சூர்யா மீது அவனுக்கு அன்பிருந்தாலும் தூரிகாவுக்கும் அவனுக்கும் தான் இன்னும் முட்டிக்கொண்டே இருக்கிறது என்று அவரும் அறிவாரே!
"நான் கடைக்குப் போய்ட்டு போட்டோ அனுப்புறேன். நீயே பார்த்துச் சொல்லு"

"அதைப்பத்தி எனக்கு என்னடா தெரியும். நீயே பார்த்து நல்லதா ஒன்னு வாங்கிட்டு வா... பணம் இருக்குதா உன்கிட்ட?"

"அதெல்லாம் இருக்குமா. நான் வெக்குறேன்..." என்று அழைப்பை வைத்தவனுக்கு ஒரு வித விரக்தி நிலையே உண்டானது. தூரிகாவுக்காக இவ்வளவு யோசிக்கும் தன் அன்னை ஏன் நிஹாரிகா விஷயத்தில் அப்படியொரு முடிவெடுத்தார் என்ற கேள்வி அவனுக்குள் வீறுகொண்டது.

அதற்குள் சரிதா தன் தம்பிக்கு வேண்டியதை வாங்கி முடிக்க அவளை நெருங்கியவன்,

"சரு நான் ஒன்னு கேப்பேன் ஒத்துக்கணும்..."

"என்ன சார் பீடிகை எல்லாம் பயங்கரமா இருக்கு?"

"நான் உனக்கேதாவது வாங்கித் தரணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ் மறுக்காத. எனக்காக ஏதாவது வாங்கிக்கோ. டிரஸ் ஜுவல்ஸ் ஏதாவது. ப்ளீஸ்..." என்று அவன் முகத்தைச் சுளிக்க அதை மறுக்க முடியாமல் தவித்தாள் சரிதா.

பிறகு அங்கிருந்து பஜாருக்குச் சென்றவர்கள் தங்களுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொண்டனர். சரிதாவுடன் முதலில் ஒரு ஜவுளிக்கடைக்குள் நுழைந்தவன் கிரிஜாவுக்கு ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்தான். வீட்டில் எத்தனை உடைகள் இருந்தாலும் புதியதாக ஒரு புடவை என்றால் ஐஸ்க்ரீமை கண்ட சிறுவன் போல் கிரிஜாவும் மாறிவிடுவார். பலமுறை கிரிஜாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜெயசீலன் புடவை வாங்க அழைத்துச் செல்வதை அவனே கண்டிருக்கிறானே? புடவையின் மீது அத்தனை மோகம் கொண்டவர் ஜெயசீலன் இறந்த பின்னர் எந்த விஷேஷத்திற்கும் புத்தாடை அணிந்து அவன் பார்த்ததாக நினைவில்லை. வண்ணன் அவ்வளவு கூர்ந்து எல்லாம் கிரிஜாவை ஒருநாளும் கவனித்ததில்லை. எப்போதும் ஒரு காட்டன் புடவை தான் அவர் உடை. இருந்தாலும் இந்த விஷயத்தில் வண்ணனின் கணிப்பு சரியே! அவருக்காக ஆசையாக ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்தான். அவன் எடுத்த அதே உடையைத் தான் கிரிஜாவுக்கு சரிதாவும் தேர்ந்தெடுக்க எண்ணினாள். அதன் பின்னர் சரிதாவும் அவளுக்கென்று ஒரு புடவை எடுத்துக்கொண்டாள். பெரிய அலங்காரங்கள் இன்றி சிம்பிளாக இருந்தது. வண்ணனுக்கு அவள் உடையின் மீது பெரிய விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் எதையும் கூறவில்லை. தங்களுக்குள்ளான வேறுபாடுகளை அவன் மதிக்கக்கற்றுக்கொண்டான். இதை கிரிஜா விஷயத்திலும் செயல்படுத்த தான் அவன் முனைகிறான். ஆனால் அது சரிதா உடனான உறவைப் போல் எளியதாக அமையவே இல்லை.

பிறகு கிரிஜாவுக்கு எடுத்ததைப் போல் இன்னும் இரண்டு புடவைகளை எடுக்க சரிதா தான் புரியாமல் விழித்தாள்.

"தேனு பெரியம்மாவுக்கும் அரசி அக்காவுக்கும். நான் இங்க வந்து ஒரு நாள் கூட அவங்க கிட்ட சிரிச்சே பேசுனதில்லை சரு. ஏன் பேசணும்னு நெனச்சது கூட இல்ல. ஆனா தினமும் என்னைப் பார்த்தா ஒரு சிரிப்போட சாப்பிட்டியா ராசானு தேனு பெரியம்மா கேக்கும். அதுல துளியும் போலித்தனத்தை நான் பார்த்ததே இல்ல. அரசி அக்காவும் அப்படித்தான். இத்தனை வருஷம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம அம்மாவுக்குத் துணையா இருக்காங்களே! அவங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்சது. மஞ்சுளா மேடம் சொன்னார்களே, மகிழ்வித்து மகிழ். அது தான்..." என்ற வண்ணனின் புதிய பரிணாமத்தைப் பார்த்தாள் சரிதா.

"அப்போ இன்னொரு புடவை எடு..." என்று சரிதா சொன்னதும் வண்ணனுக்கு அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் என்று புரியவே இல்லை.

"யாருக்கு?"

"இவங்க எல்லாத்தையும் விட உன் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச தூரிகாவுக்குத் தான்..."

"அவளுக்கு நான் எப்படி எடுத்துத் தர முடியும்?" என்ற கேள்வியின் சாராம்சம் இப்போது சரிதாவுக்கு விளங்கவில்லை.

"ஏன் எடுத்துத் தந்தா என்ன? எனக்கே எடுத்துத் தர... அவங்களுக்கு எடுக்க என்ன?"
"ஏற்கனவே நான் எப்போடா தப்பு பண்ணுவேன் என்னைக் குறை சொல்லலாம்னு பூதக்கண்ணாடி போட்டு தேடிட்டு இருக்கா. இதுல நான் இந்த ட்ரெஸ கொடுத்தேன் அவ்வளவு தான்..." என்றவன் எதையோ சொல்ல வந்து நிறுத்தினான்.

"அவங்க தப்பா எடுத்துப்பாங்கனு உன் கவலையா இல்லை உன் ஈகோ உடைஞ்சிடும்னு கவலையா?" என்ற சரிதாவை எதிர்கொள்ள தயங்கினான் வண்ணன்.

"எனக்கு எல்லாம் தெரியும். அவங்க அன்னைக்கு உன்னை அடிச்சது தானே உன் பிரச்சனை?"

"காரணம் தேவையில்லை ஆனா எனக்கு அவ மேல மட்டும் எந்த ஃபீலிங்கும் வரவே மாட்டேங்குது. உண்மையைச் சொல்லனும்னா அவளை மாதிரி ஒருத்தி கூட சூர்யா வளர்றானேனு எனக்குக் கவலையா இருக்கு..." என்று முடிக்கும் முன்னே சரிதாவுக்கு கோவம் வந்தது.

"நீ மாறிட்டேனு நெனச்சேன் வண்ணா. ஆனா நீ மாறவேயில்லைனு எனக்கு உணர்த்திட்ட..." என்றவளை புரியாமல் பார்த்தான் வண்ணன்.

"தூரிகா பத்தி உனக்கு என்ன தெரியும்? அன்னைக்கு பெர்முடா ட்ரைஏங்கில் பத்திப் பேசும் போது நான் ஒன்னு சொன்னேன் உனக்கு நியாபகமிருக்கானு தெரியில. தூரிகாவை என் அம்மா கூட கம்பேர் பண்ணதானு சொன்னேன். ஏன் தெரியுமா? தூரிகா ஒரு கன்னித்தாய்..." என்றவள் சுருக்கமாக சூர்யாவின் பிறப்பைப் பற்றி தான் அறிந்ததை எல்லாம் அவனிடம் சொன்னாள்.

அதைக் கேட்டவனுக்கு சப்தநாடியும் அடங்கியதைப்போல் ஒரு உணர்வு. தொப்புள்கொடி உறவான தன் அன்னையையே இப்போது தான் அவன் விளங்கிக்கொள்ள முயற்சிக்கிறான். இதில் தான் பெறாத ஒரு குழந்தைக்காக தன்னுடைய ஏழு வருட வாழ்க்கையை ஒருத்தி தியாகம் செய்திருக்கிறாள் என்று நினைக்கவே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அதற்குள் அங்கிருந்த சேல்ஸ் மேன் இவர்களை ஒரு மாதிரி பார்க்க இன்னொரு சேலையை எடுத்தவன் எல்லாவற்றுக்கும் பணம் செலுத்திவிட்டு சூர்யாவுக்கான சைக்கிளை தேர்ந்தெடுக்க சென்றான். ஆனால் அவன் நினைவுகள் அடிக்கடி தூரிகாவுடனான அவனது உரையாடல்களையே நினைவு படுத்தியது. அன்று அவளை தான் எச்சரித்த போது அவள் ஏன் அவ்வாறு பயந்தாள் என்ற காரணம் இப்போது தான் அவனுக்குப் புரிய இதுவரை அவள் மீதிருந்த தன்னுடைய அபிப்ராயத்தை எல்லாம் மறுபரிசீலனை செய்யும் முயற்சியில் இறங்கினான். இங்கே வந்தது முதல் இதுநாள் வரை அவளுக்கும் தனக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள்? (வாக்குவாதங்கள்!) எல்லாம் அவன் மூளையில் உதித்தது.

"வண்ணா டைம் ஆகுது. சாப்பிடணும் வேற. சீக்கிரம் சூஸ் பண்ணு" என்று சரிதா சொன்னதும் இன்றைய நிலையில் அப்டேட்டாக இருக்கும் ஒரு சைக்கிளை தேர்ந்தெடுத்தவன் அதை பேக் செய்ய சொல்லி பணம் செலுத்தினான்.
அவன் முகத்தை வைத்தே அவன் நிலையை அறிந்தவள்,"வண்ணா ஒரே ஒரு விஷயம் உனக்கு நான் சொல்றேன். நல்லாக் கேட்டுக்கோ. எதையுமே ஒரு தேர்ட் பெர்சன் பாயிண்ட்ல இருந்து மட்டுமே யோசிக்காத. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். இதை தூரிகா விஷயத்துக்கு மட்டுமில்ல உன் அம்மா விஷயத்துக்கும் பொருந்தும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். நிஹாவை உன் அம்மா வேணாம்னு சொன்னதுக்கும்..." என்று சரிதா முடிக்க வண்ணன் தான் அதிக குழப்பத்திற்கு ஆளானான்.

நிஹா என்ற பெயரைக் கேட்டதும் வண்ணனுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து போனது. அதை யோசிக்கும் முன்னே அவனைத் தட்டியவள்,

"எனக்கு ரொம்ப பசிக்குது வண்ணா. வா சாப்பிட்டு பஸ் ஸ்டேண்ட் போக கரெக்ட்டா இருக்கும்" என்றதும் உணவருந்த சென்றவர்கள் பேருந்து நிலையம் வந்து பஸ் ஏறினார்கள்.
வண்ணனுக்கு ஒரு கலவையான மனோநிலை வியாபித்தது. ஒரு மாதத்திற்கு அறுபது ஆயிரத்துக்கு மேல் சம்பாதித்து அதை தண்ணீர் போல் செலவு செய்து பழகியவனுக்கு சரிதா மற்றும் தூரிகா ஆகியோரின் வாழ்க்கையை நினைக்கையில் தான் வாழ்ந்த கம்போர்ட் ஜோன் வாழ்க்கை மொத்தமும் தேவையில்லாத ஆணியாகவே அவன் முன் சிதறி விழுந்தது. இத்தனை ஆண்டுகளில் அவன் சேமித்த பணம் என்றால் அது நான்கைந்து லட்சம் கூடச் சேராது. இப்படி திடீரென வேலை விடும் சூழல் வருமென்று முன்னே அவன் உணர்ந்திருந்தால் ஒருவேளை இன்னும் கொஞ்சம் சேமித்திருப்பானோ என்னவோ?

அவன் இப்போது குடிப்பதில்லை. இப்போதென்றால் கடந்த முப்பது சொச்சம் நாட்களாக. இங்கே வந்து இதுவரை எந்தப் படத்தையும் பார்க்கவில்லை. எந்த ட்ரீட்டுக்கும் செல்லவுமில்லை செலவு செய்யவுமில்லை. அவனது இந்தப் பழக்கங்களால் அவன் உடலின் பாரம் சற்று குறைந்ததைப்போல் உணருகிறான். அது உடலிலிருந்து கரைக்கப்பட்ட கலோரிகளால் மட்டுமின்றி மனதிலிருந்து களையப்பட்ட கவலைகளாலுமே சாத்தியமானது என்று அவனும் உணர்வான் தான்.

கிரிஜாவின் மீதிருந்த சஞ்சலங்கள் எல்லாம் ஹீலியம் கேஸ் பலூன்கள் போல் அவனை விட்டு விலகிக்கொண்டிருக்க நிஹாவை ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி மட்டும் அவனுள் அநுபந்தமாய் (appendix, connection) ஒட்டிக்கொண்டிருந்தது. அதையும் இம்முறை வெட்டி வீசிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

ஏதேதோ யோசனையில் இருந்தவனின் தோளில் வாகாக சாய்ந்து உறங்கிய சரிதாவை நன்றியுடன் பார்த்தவன்,

"ரொம்ப தேங்க்ஸ் டி சரு. நீ என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச இன்னொரு புதையல். எப்படி வேணுனாலும் வாழலாம்னு இருந்த எனக்கு இப்படியும் வாழலாம்னு நீ உணர்த்திட்டு இருக்க. அண்ட் இதுல அந்த தூரிகாவுக்கும் கொஞ்சம் பங்கிருக்கு. நீ என் சமூக வாழ்க்கைக்கான பாதை அமைச்சுக் கொடுத்ததைப்போல் அவ என் பெர்சனல் வாழ்க்கைக்கான கோடு போட்டிருக்கா..." என்று நினைக்கையில் மீண்டும் தூரிகாவைப் பற்றிய சிந்தனைகளுக்கு அவன் சென்றான்.

இப்போது நினைக்கையில் இதற்காகத் தான் கிரிஜா அவளுக்கு அனைத்தையும் செய்து கொடுக்கிறார் என்று புரிந்தது. அவளும் ஒன்றும் அடுத்தவர்களின் பணத்தை அனுபவிக்கும் ரகமில்லை என்பது அன்றொரு நாள் சூர்யா ஆசைப்பட்டான் என்பதற்காக அவனுக்கு ஒரு புது மாடல் 'பென்சில் பாக்ஸ்' வாங்கிக் கொடுத்ததும் அவனை முறைத்தவள் அப்போதே அதற்கான பணத்தை அவனிடம் கொடுத்ததை நினைக்கையிலே புரிந்தது. அந்தமானுக்கு அருகில் ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகியுள்ளது என்ற வானிலை அறிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக காற்றில் ஈரப்பதமானது கூடிக்கொண்டே இருந்தது. அதை ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருவானால் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட அவன் மனமோ குழப்பங்கள் நீங்கி தெளிவுற ஆரமித்தது.

மறுநாள் காலை ஞாயிறு என்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அன்கொன்றும் இங்கொன்றுமாக தூறல் விழுந்துகொண்டிருக்க வெள்ளிமலைக்கான பேருந்தில் ஏறி அமர்ந்தவர்கள் வீட்டிற்கு வர பத்து மணியானது. அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி விளையாடிக்கொண்டிருந்த சூர்யா வண்ணன் தள்ளிக்கொண்டு வந்த சைக்கிளைக் கண்டு ஆரவாரத்துடன் கிரிஜாவைத் தேடி வந்தான். அங்கே கிரிஜாவுடன் தன் அன்னையையும் கண்டவன் திருதிருவென விழிக்க,

"என்னடா?" என்றவளுக்கு,

ஒன்றுமில்லை என்று தலையாட்ட வண்ணனும் சரிதாவும் அங்கே பிரவேஷித்தனர்.
அந்த சைக்கிளை பார்த்தவள் ஒருகணம் திரும்பி கிரிஜாவை அதிர்ச்சியுடன் பார்க்க,

"சூர்யா இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?" என்ற வண்ணனுக்கு,

"எனக்கா மாமா இது?" என்று உணர்ச்சிப் பொங்க பேசியவன் மறுபடியும் தூரிகாவைப் பார்க்க,

"நீங்க சொன்ன மாதிரியே சைக்கிள் வாங்கிட்டு வந்துட்டேன். பிடிச்சிருக்கு தானே?" என்று தூரிகாவைப் பார்த்து பவ்யமாகக் கேப்பதைப் போலொரு பாசாங்கு செய்ய சரிதா தான் தன்னையும் மீறிச் சிரித்து வைத்தாள்.

"பர்த் டேக்கு இன்னும் நாலு நாள் இருக்கே? அதுக்குள்ள வாங்கிக் கொடுத்துட்டே ம்மா..." என்றவன் அவளை நெருங்கி அணைத்துக்கொள்ள வேறேதும் பேசாமல் வண்ணன் தன் வீட்டிற்குள் விரைந்தான்.

"கேடி கேடி! எப்படி ஷாக் ஆகி நிக்குறாங்க பாரு" என்று தனக்குள்ளே முணுமுணுத்த சரிதாவும் தன் இல்லத்திற்குச் சென்றுவிட எப்போதும் தன்னை டென்ஷன் செய்து திக்குமுக்காட செய்யும் தூரிகாவை தான் டென்ஷன் செய்ததை எண்ணி ஸ்வீட் ரிவெஞ் செய்த திருப்தியில் குளியலறைக்குள் புகுந்தான் வண்ணன்.
(மழை வருமோ?)
 
ஓஓஓ..... இதுக்குப் பேரு ஸ்வீட் ரிவெஞ்சோ ????
 
Top