Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்! - 13

Advertisement

praveenraj

Well-known member
Member

மழைக்கால மேகங்கள்! - 13

வண்ணன் அவ்வாறு நடந்துகொண்டதால் தூரிகா மட்டும் அதிர்ச்சியடைய வில்லை. தூரிகாவுக்கு அருகில் இருந்த கிரிஜா அரசி தேனு ஆகியோரும் சேர்ந்தே அதிர்ச்சியடைந்தனர். பின்னே இவர்களின் உட்கட்சி பூசலை அவர்கள் மட்டும் அறிய மாட்டார்களா என்ன?

"ம்மா நான் இப்போ சைக்கிள் ஓட்டிப் பார்க்கவா?" என்று ராகமாய் இழுத்த சூர்யாவின் குரலில் தான் அவர்கள் எல்லோரும் நிகழ்வுக்குத் திரும்பினர்.

"கண்ணு இப்போ வெயிலா இருக்கு. சாயந்தரமா ஓட்டு..." என்று அரசி சொல்ல சூர்யாவின் முகம் ஏமாற்றத்தில் வாடிப்போனது.

"நீ தனியா ஓட்டுனா விழுந்திடுவ கண்ணா..." என்று கிரிஜா சொல்லும் போதே அந்தத் தெருவில் இருக்கும் சிறுவர்கள் எல்லாம் சூர்யாவின் சைக்கிளை பார்க்க அங்கே கூடிவிட்டனர். தூரிகாவுக்கு இப்போது எவ்வாறு நடந்துகொள்வது என்றே விளங்கவில்லை. அதே நேரம் வாழ்க்கையில் இதுவரை சூர்யாவுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கும் தூரிகாவுக்கு இன்று போல் என்றும் அவனை ஏமாற்றாமல் வாழவைக்க முடியுமா என்ற கேள்வியும் அவள் முன் இருந்தது. சில காலம் வரை அவன் தந்தையைப் பற்றி அவனிடம் அவள் ஏதும் சொல்லாமலே தான் வளர்த்தாள். ஒரு கட்டத்தில் தந்தையைப் பற்றித் தெரிந்தே தீரவேண்டும் என்று அவன் அழுது அடம்பிடிக்க அப்போது தான் மணிகண்டனின் இறப்பையே அவனிடம் தெரிவித்தாள். தன்னை அன்னை என்றும் தன் அண்ணனை அப்பா என்றும் அவனுக்கு அறிமுகப்படுத்த அவளுக்குத் துளியும் விருப்பமில்லை தான். இது அவளுக்கும் ஒரு உறவுச் சிக்கலாகவே விரிந்தது. இன்றில்லை என்றாலும் கண்டிப்பாக ஒருநாள் அவன் பெற்றோரைப் பற்றி அவன் அறிந்தே தீரவேண்டும். ஆனால் இதன் காரணமாக அவள் அண்ணியின் வாழ்க்கையும் பாதிக்கப்படுமா என்று அவளுக்குள் பயம் இருந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் யோசிக்கையில் அன்று சூர்யாவை அவன் தாத்தா பாட்டி அவளிடம் ஒப்படைத்த போது சரவணன் மற்றும் அவர் மனைவியின் பார்வையில் வெளிப்பட்ட உணர்வுகளுக்கான அர்த்தத்தை இப்போது தான் தூரிகா நன்கு உணர்கிறாள்.

இப்போதெல்லாம் சூர்யா அடிக்கடி அவன் தந்தையைப் பற்றி விசாரிக்கிறான்.

"ம்மா அப்பா எப்படிம்மா இறந்தாரு? அவர் என்னைப் பார்த்திருக்காரா ம்மா? அவருடைய வீடியோ ஏதாவது உன்கிட்ட இருக்கா ம்மா?" போன்ற கேள்விகளை அடிக்கடி அவள் எதிர்கொள்ள நேர்கிறது. இருபத்தி ஏழு வயதான அவளே இன்னும் தன் தந்தை தன்னுடன் இருக்கிறார் என்ற தைரியத்தில் தானே வாழ்க்கையை ஓட்டுகிறாள். அப்படியிருக்கையில் சூர்யாவின் நியாயமான கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்து தானே தீரவேண்டும்? அந்தக் கடமை அவளுக்கு இருக்கிறது என்பதை அவளும் உணர்வாள். மூன்றாம் நபரின் மூலம் அரைகுறையாக தன்னைப் பற்றி சூர்யா தெரிந்துகொள்வதைக் காட்டிலும் அவனுக்கு அவளே விடையளிக்க எண்ணியவன் அவனது எட்டாவது பிறந்தநாளை ஒரு கெடுவாக தனக்குத் தானே வைத்துக்கொண்டுள்ளாள்.

அதற்குள் குளித்து முடித்து வெளியேறியவன் தான் வாங்கிவந்த உடைகளை எல்லாம் வெளியே எடுத்து வந்தான்.

"ராசா சாப்பிட்டியா இல்லையா?" என்ற தேனுவை இமைகொட்டாமல் பார்த்தவன் அவருக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டு,

"ஏன் பெரியம்மா நீ இப்படி இருக்க? நான் இங்க வந்ததுல இருந்து ஒரு நாள் கூட உன்கிட்ட முகம் கொடுத்துப் பேசுனதில்லை. அப்படியிருந்தும் நீ ஏன் எப்பயும் என்கிட்ட இப்படி அன்பாவே இருக்க?" என்று வண்ணன் கேட்ட தொனியில் கிரிஜா முதல் அனைவரும் மீண்டும் இன்பமாய் அதிர்ந்தனர். எவ்வித தயக்கமும் இன்றி மிக இலகுவாகவே அவன் வார்த்தைகள் இருந்தது.

"ஏன்யா இப்படிக் கேக்குற? நீங்க எல்லாம் மெத்த படிச்சவங்க. உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். எல்லாத்துக்கும் மேல நீயும் என் பிள்ளை தானே?" என்றதும் வண்ணனின் முகம் சொல்லமுடியாத வேதனையில் உழன்றது. இங்கே வந்ததும் இப்படிப் பட்டவரையா அவன் தொல்லையாக கருதினான் என்ற கேள்வி அவனைச் சுட்டது.

உடனே அவருக்காக வாங்கிவந்த சேலையை எடுத்து அவரிடம் நீட்டி,"பிடிச்சிருக்கா பெரிம்மா? உனக்காக தான் எடுத்தேன். எனக்கு சேலை பத்தி எதுவும் தெரியாது. இருந்தாலும் இதைப் பார்த்ததும் உன் ஞாபகம் தான் வந்தது" என்று கொடுக்க கணவர் இறந்ததும் மகன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, 'யாரை நம்பி நான் பிறந்தேன்? போங்கடா போங்க' என்று அதே வீம்புடன் தனியாளாக வசிக்கும் தன்னை நினைவில் வைத்து சேலை வாங்கிவந்தவனைக் கண்டதும் அவருக்கு கண்ணீரே வந்தது.

அவனது கரத்தைப் பிடித்துக்கொண்டவர் அவரையும் அறியாமல் கண்கலங்க,

"அழாத பெரிம்மா. உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன்னோட சிரிப்பு தான். எப்பயும் உன் முகத்துல இருக்கும் அந்தச் சிரிப்பை எனக்கு நீ எழுதிக் கொடுக்கணும்..." என்றதும் அதேபோல் வெள்ளேந்தியாய்ச் சிரித்தார் தேனு.
பிறகு அரசிக்கும் சேலை கொடுக்க அதை எதிர்பார்க்காத அவரும் ஆனந்த அதிர்ச்சியடைய கிரிஜாவிடம் திரும்பியவன்,

"ம்மா உனக்கு இது பிடிக்குமான்னு எனக்குத் தெரியாது..." என்று அவருக்கு எடுத்துக் கொடுத்தவன் மீதிருந்த ஒரு பையைக் கண்டவருக்கு,

"சூர்யாவுக்கு பர்த் டேனு சொன்னயில்ல அதான் அவனுக்கும்..." என்றவன் அதில் தூரிகாவுக்கும் உடை இருக்கிறதென்று எவ்வாறு சொல்வதென்று புரியாமல் தவித்தான்.

அதை எடுத்த கிரிஜா அதில் அவர்கள் மூவருக்கும் இருக்கும் உடையைக் கண்டவர் தன் மகனின் இந்தத் திடீர் மாற்றத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று புரியாமல் இருந்தார்.

"சரி நான் போய்த் தூங்குறேன்..." என்றவன் உள்ளே சென்றுவிட இதையெல்லாம் செய்த தன் மகன் தன் விருப்பப்படி தூரிகாவைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்வானா என்ற எண்ணம் அனிச்சையாய் அவர் மனதில் வந்து போனது. அதே நேரம் அவனுக்கு அவன் ஆசைப்பட்ட நிஹாரிகாவை தான் தன்னால் திருமணம் செய்துவைக்க முடியவில்லை குறைந்தது அவன் மனதிற்குப் பிடித்த வேறு ஒரு பெண்ணையாவது(சரிதா) அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று எண்ணினார்.

எல்லோரும் சென்றுவிட வண்ணனின் எதிர்காலத்தை எண்ணி யோசனையில் இருந்த கிரிஜா யாரோ தன்னருகில் இருப்பதைக் கண்டு திரும்ப அங்கே தூரிகா தான் நின்று கொண்டிருந்தாள்.

"என்ன டா?" என்றவருக்கு,

"நீங்க என்னை மேலும் மேலும் கடன்காரியவே ஆக்கிட்டு இருக்கீங்க அத்த. இப்போ எதுக்கு இந்த சைக்கிள் டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னிங்க? ஏற்கனவே உங்களுக்கு நான் நிறைய பணம் கொடுக்கணும். இதுல இது வேற?" என்றவளை தன்னருகே அழைத்த கிரிஜா,

"தூரி நீ சொன்னது உண்மை தான் டா. வண்ணன் நிறைய மாறிட்டான். நானா அவன்கிட்ட எதையுமே வாங்கிட்டு வரச் சொல்லல. அவனா தான் என்ன வேணும்னு கேட்டான்" என்று நேற்று அவன் அழைத்துப் பேசியதைத் தெரிவித்தவர்,

"இப்போ இப்போ தான் அவன் என் விருப்பப்படி வாழ ஆரமிச்சிருக்கான். நீ அன்னைக்கு அவன் ஸ்நேகிதங்க கூடப் பேசுனதைச் சொன்னியே அப்போவே எனக்கு அவனை அவன் விருப்பம் போல வாழ விடணும்னு தான் முடிவெடுத்தேன். ஆனாலும் எங்க திரும்ப கோவை போனா பழையபடி மாறிடுவானோனு ஒரு பயம் இருக்குது. அதுக்காக அவனை இங்கேயே இருக்கும்படி சொல்ல முடியுமா என்ன? இங்க இருந்து இந்தத் தோட்டம் தொறவையா பார்ப்பான்? அவன் போகட்டும். நானே இன்னைக்கு அவன்கிட்ட இதைச் சொல்லிடுறேன். ஆனா என்ன? அவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிட்டா சரியாகிடும்னு எனக்குப் படுது..." என்றவருக்கு அவரையும் அறியாமல் முகம் வாடியது.

"நீங்க ஏன் அத்த அவர் காதலிச்ச பெண்ணை வேண்டாம்னு சொன்னிங்க?"

"அப்போ ஒரு சமயம் திடீர்னு அவன் ஊருக்கு வந்திருந்தான். ஒரு எட்டு மாசம் இருக்கும். வந்தவன் அவன் ஒரு பெண்ணை விரும்புறதாவும் அந்தப் பொண்ணோட வீட்ல இதுக்கு சம்மதம் சொன்னதாவும் என்னை அவங்க கிட்டப் பேசணும்னு சொன்னான். அதைக் கேட்டதும் எனக்கு உடம்பே ஆடிப்போயிடுச்சு. ஒத்த பையனை வெச்சி அவன் அப்பா போனதுக்குப் பிறகு அவனை நல்ல படியாப் படிக்க வெச்சு வேலைக்கு அனுப்புன எனக்கு அவன் கல்யாணத்தைப் பத்தி கனவிருக்காதா என்ன? நான் ஆசைப்பட்டதுல என்ன தப்பா? நீயே சொல்லு தூரி?" என்று அவளைப் பார்த்தார் கிரிஜா.

மணிகண்டன் மோனிகாவை வீட்டிற்கு அழைத்து வந்த போது வைதேகியும் இதைத்தானே சொல்லிப் புலம்பினார்.

"உங்க விருப்பம் தப்பில்லை தான் அத்த. ஆனா அவரோட விருப்பத்துக்கும் மதிப்பளிக்கணும் தானே? நீங்க சொன்னிங்கனு உங்களுக்காக அவருக்குப் பிடிக்காத பெண்ணைத் திருமணம் செஞ்சா அவரோட சேர்ந்து அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் தானே பாதிக்கும். அவங்க ரெண்டுப் பேரும் அப்படி இணக்கமில்லாம இருந்தா நீங்க மட்டும் நிம்மதியவா இருப்பிங்க?" என்று நிறுத்தினாள் தூரிகா.

"இந்தக் காலத்துப் பிள்ளைங்க எல்லாம் ஒரே மாதிரி தான் யோசிக்கறீங்க. நீ சொல்றது சரி தான். ஆனா இதே நிலை நாளைக்கு அவன் விருப்பட்ட பொண்ணோட நடந்தா எங்களைத் திட்டக் கூடிய அந்த உரிமை கூடக் கிடைக்காதுனு ஏன் யோசிக்க மாட்டேங்குறீங்க? அந்தப் பொண்ணு ரொம்ப வசதியான இடம் தூரி. அம்மா இல்லாம அப்பா வளர்த்தப் பொண்ணு. அந்தப் பொண்ணு கிட்ட நான் அதிகம் பேசுனதில்லை. ஆனா அவங்க அப்பா கிட்ட நான் நிறையவே பேசியிருக்கேன். வண்ணனும் அந்தப் பொண்ணும் கூட இருந்த வரை ஒருமாதிரி பேசுன அந்த மனுஷன் அவங்களை வெளிய அனுப்பிட்டு வேற மாதிரி பேசுனாரு தூரி..." என்ற கிரிஜாவுக்கு இப்போது நினைத்தாலும் அந்த நாளின் நினைவு ஒரு அசௌகரியத்தைக் கொடுத்தது.

தூரிகா அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்க ஆவலானாள்.

"ஏம்மா ஒரே பொண்ணு. இவ்வளவு சொத்துக்கும் வாரிசுனு தெரிஞ்சு தான் உங்க பையன் என் பொண்ணை விரும்புனானானு கேட்டார் அந்தப் பெரிய மனுஷன். ஒரே நிமிஷத்துல அவரோட பேச்சு பாவனை எல்லாமே மாறுச்சு. அதைக் கேட்டதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்? உங்க மாமா போனதுக்குப் பிறகு ஒத்த ஆளா நான் எப்படிக் கஷ்டப்பட்டேன். என்னமோ அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு நான் தான் வண்ணனை அந்தப் பொண்ணை காதலிக்க சொன்ன மாதிரி சொன்னாரு. எனக்கு வந்துச்சு கோவம். இப்படி ஒரு பணக்கார குடும்பத்துப் பெண்ணை தான் என் பையன் விரும்பினானு தெரிஞ்சிருந்தா எப்போவோ என் பையனை நான் கண்டிச்சிருப்பேன். எனக்கு பணங்காசை விட ஒழுக்கமும் மரியாதையும் தான் ரொம்ப முக்கியம். அதைத்தான் நான் விரும்புவேன். அப்படிப்பட்ட குடும்பத்து பொண்ணுக்கு தான் என் வீட்டு மருமகளாகும் தகுதி இருக்கு. உங்க பொண்ணு எப்படினு எனக்குத் தெரியாது. ஆனா அவ உங்க பொண்ணுங்கறதுக்காகவே அந்தத் தகுதியை எப்போவோ இழந்துட்டானு சொன்னதும் அந்த மனுஷனுக்கு வேத்து கொட்டி கோவத்துல உடம்பெல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. அதோட நிறுத்தியிருக்கணும். என்னை அந்த ஆள் தூண்டி விட்டுட்டார். எனக்கு அப்போ வண்ணனோ இல்லை அவன் விருப்பமோ எதுவும் ஞாபகத்துல இல்ல தூரி. உங்களை மாதிரி உங்க பொண்ணு இருந்தா ஒரு மாதிரியும் இல்லைனா ஒரு மாதிரியும் என்னால நடிக்க முடியாது. எனக்கு அது தெரியவும் தெரியாதுன்னு சொல்லி உடனே வண்ணனை உள்ள கூப்பிட்டேன். அவனோட அந்தப் பொண்ணும் வந்தது..." என்றவர் நிறுத்தி,

"எனக்கென்னவோ இந்தச் சம்மந்தம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரும்னு தோணல. இதையும் மீறி இந்தத் திருமணம் நடக்கணும்னு நீ நெனச்சா அதுக்கு இவர் நிறைய இறங்கி வரணும். அதை உண்மைன்னு நான் நம்பனும். வா கிளம்பலாம்னு அவனைக் கூட்டிட்டு நான் வந்துட்டேன் தூரி..."
"அவ்வளவு தானா அத்த? இதுக்கப்புறோம் அந்த மனுஷன் உங்ககிட்டப் பேசலையா? இதனால தான் இந்தக் கல்யாணம் நடக்காம போய் அவர் உங்க மேல கோவப்பட்டாரா?" என்று தூரி அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவலை வெளிக்காட்டினாள்.

"இதுக்குப் பிறகும் சில விஷயங்கள் நடந்தது தூரி..." என்னும் வேளையில் வண்ணன் கிரிஜாவை அழைக்க அவர் எழும் முன்னே அங்கே வந்தவன்,

"அம்மா எனக்கு தலை வலியா இருக்கு. கொஞ்சம் காஃபி கொடேன்" என்றான்.

கிரிஜாவும் தூரிகாவும் திடீரென்று தங்கள் பேச்சை நிறுத்தி திருதிருவென விழிக்க இருவரையும் மாறிமாறிப் பார்த்தவன்,

"என்ன திருட்டுத்தனம் பண்ணீங்க ரெண்டுப் பேரும்? இப்படி கையும் களவுமா மாட்டுன மாதிரி முழிக்கறிங்க?" என்று கேட்டு புன்னகைக்க அவனது இந்த 'மென்மொழியான்' அவதாரத்தைக் கண்டு கிரிஜாவைக் காட்டிலும் தூரிகா அதிகம் குழம்பினாள்.

(மழை வருமோ?)

 
அந்த ஆளுக்கு தைரியம் இருந்தா மக முன்னாடி பேச வேண்டியது தான ??
 
அந்த ஆளுக்கு தைரியம் இருந்தா மக முன்னாடி பேச வேண்டியது தான ??
அவுக எல்லாம் பெரிய இடம். அப்படித் தான் நடந்துகொள்வார்கள்
 
Top