Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 6

Advertisement

praveenraj

Well-known member
Member

"ஐயோ அத்த. என்னாச்சுனு இப்போ நீங்க அழறீங்க? எல்லோரும் கோவத்துல ஒன்னு ரெண்டு வார்த்தையைச் சேர்த்து விடுறது தான். அதும் போக நீங்களும் கொஞ்சம் அனுசரிச்சு போங்க அத்தை..." என்று முடித்தவளை விந்தையாகப் பார்த்தார் கிரிஜா.
பின்னே கிரிஜாவின் சுபாவத்தை அறியாதவளா தூரிகா. கிரிஜாவுக்கு நேர்மை என்பது அவர் உடலின் ஒரு அங்கம் போன்றது. மிகவும் தைரியமானவர். ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் ஆனவர். ஜெயசீலனின் இறப்பிற்கு முன்பே இத்தனை குணங்களையும் தனக்குள் வைத்திருந்தவர் அவரின் மறைவுக்குப் பிறகு கிடைக்கும் வேளையில் எல்லாம் அதை வெளிப்படுத்தியும் விடுவார். கிரிஜாவிடம் சிறுவயதில் கூட வண்ணனுக்கு சலுகைகள் எதுவும் கிடைக்காது. எல்லாப் பிள்ளைகளைப் போல் விடைத்தாள் கொடுக்கும் அன்றோ இல்லை கொடுத்த வீட்டுப் பாடத்தை முடிக்காத அன்றோ விடுமுறை எடுக்க எண்ணி காலையிலிருந்து ஜெயசீலனை தாஜா செய்து சம்மதமும் வாங்கிவிடுவான். ஆனால் அது கிரிஜா என்னும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் முன்பாகவே தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

"ஏன் கிரிஜா இப்படிப் பண்ண? புள்ள இன்னைக்குத் தான் என்னவோ லீவ் போடுறேன்னு என்கிட்டச் சொன்னான். அவன் நல்லாத்தான் படிக்கிறானில்ல. ஏன் இவ்வளவு கண்டிப்பு?" என்று வண்ணனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு கிரிஜாவிடம் கேள்வியாவும் சில நேரம் சண்டையாகவும் கூடக் கேட்பார் ஜெயசீலன்.

"என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? அவன் தான் சின்ன பையன் ஏதோ விவரம் தெரியாம பேசுறான்னா நீங்களும் அவனுக்கு ஒத்திசைப்பிங்களா? நமக்கு என்ன லட்சத்துல சொத்து கிடக்கா இல்ல நாம ஏதாவது பிசினெஸ் பண்றோமா? நமக்கு இருக்குறதெல்லாம் அந்த விவசாய நிலமும் இந்த வீடும் தான். காலங்காலமா விவசாயம் செய்யுற நம்மாலே ஒரு சீரான வாழ்க்கையை வாழ முடியல. இதுல இவன் வளர்ந்து ஆளாகி அடுத்த பத்து பதினஞ்சு வருஷத்துல இந்த விவசாய நிலமெல்லாம் இருக்கோ இல்லையோ. யாரு கண்டா? அப்படியே விவசாயம் செய்யணும்னாலும் வத்தாத தண்ணீருக்கு எங்க போறது? வானம் பார்த்த பூமி. இப்போ மழையும் முன்ன மாதிரி பெய்யுறதில்லை. நாம தான் படிக்காம இந்தக் கிராமத்துல இருக்குறோம். இவனாச்சும் நல்லாப் படிச்சு நல்ல உத்தியோகத்துக்குப் போகட்டும். உங்க செல்லத்தை எல்லாம் அவனோட நிறுத்திக்கோங்க. அவனை எப்போப்பாரு நான் கண்டிக்கிறேங்கறது உங்களுக்கு வருத்தமா கூட இருக்கலாம். ஆனா நாளைக்கு யாரும் அவனைக் கண்டிக்கும் படியான சூழல் வந்திடக்கூடாதுனு தான் நான் இப்படி இருக்கேன். அவனுக்கு பதினோரு வயசாகுது. இதுவரை நீங்க அவனை எப்போவது அடிச்சிருக்கீங்களா? அடிக்கிறது போகட்டும். அவனைக் கண்டிக்கவாச்சும் செஞ்சிருக்கீங்களா?" என்றவருக்கு,

"ஏன் என் புள்ளையை நீ ஓயாம வைய்யுறது போதாதுன்னு நானும் வேற வையணுமா? போடி..." என்று அவர் சாப்பிட அமர,

"நீங்க இப்படி எதிலும் தலையிடாம மேம்போக்கா இருக்குறத பார்த்து பார்த்தே தான் அவனும் இப்படி இருக்கான். கொஞ்சம் கூட அவன் வயசுக்கு தகுந்த பொறுப்பே இல்ல..." என்று கிரிஜா எப்போதும் போல் மகனை ஒரு மேம்பட்ட வாழ்க்கை முறைக்குள் கொண்டுவர முயற்சிக்க ஜெயசீலனோ பாசம் என்னும் அன்புச் சிறையில் அவனை ஒரு கூண்டுக் கிளியாகவே மாற்றிவிட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் கிரிஜா பேசுவதை எல்லாம் அவன் காதிலே வாங்கிக்கொள்ள மாட்டான். அதையும் மீறி கிரிஜா அவனுக்கு ஏதேனும் சொல்ல முயன்றால் ஜெயசீலன் மகனுக்கு ரட்சகனாக வந்து நிற்பார்.

இதனால் வண்ணனுக்கு கிரிஜாவின் மீது பாசமே இல்லையா என்று நினைத்துவிட வேண்டாம். அவனைப் பொறுத்தவரை அவன் அன்னை எப்போதும் அவனுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே இருப்பார். அது போக அவன் படிப்பில் சிறந்து விளங்கியதால் அவனை மேற்கொண்டு தன் பிடிக்குள் கொண்டுவர முடியாமலே கிரிஜா திணறிப்போனார்.

இப்படியே சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் ஜெயசீலனின் எதிர்பாரா மரணம் கடன் சுமை, வேலைகிடைக்காமல் இருந்த வண்ணன் என்று அவரைத் தாக்கிய அடுத்தடுத்த உளிகள் கிரிஜாவை ஒரு கடினமாக சிலையாகவே மாற்றிவிட்டது. இந்த நேரத்தில் தான் நிஹாரிகாவுடனான காதல் அவரை வந்தடைய அதன் பின் நிகழ்ந்த சம்பவங்கள் அவரை மனதளவில் அதிகம் சோர்வுக்குள்ளாகி கொண்டே இருக்கிறது. இத்துடன் இன்றைய வண்ணனின் வார்த்தையும் இணைந்துகொள்ள எங்கே வாழ்வில் யாருமில்லாமல் தனித்து விடப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவருள் அழையா விருந்தாளியாகவே எழுந்து விட்டது.

ஒருபக்கம் தூரிகா அவரிடம் ஏதேதோ வினவ கிரிஜாவோ தன் வாழ்க்கையின் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை யோசித்தவர் எதிர் காலம் எப்படி இருக்குமோ என்று நினைக்கையில் மீண்டும் கண்ணீர் வழிய,

"அத்தை அழாதீங்க அத்தை. நீங்க தான் அத்தை என்னோட ரோல் மாடல். உங்களைப் பார்த்தும் நீங்க இருக்கீங்கங்கற தைரியத்துலயும் தான் நான் இன்னும் தைரியமா வாழ்ந்துட்டு இருக்கேன். நீங்க அழுதா என்னோட கான்பிடென்சும் உடையது அத்த. ப்ளீஸ் அத்தை என்கூட வாங்க..." என்றவள் அவரைச் சமாதானம் செய்து தன்னுடன் தன் உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே இத்தனை களேபரங்களுக்கும் காரணமானவனோ தன்னுடைய அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான். அவன் பெரியப்பா சொன்ன வார்த்தைகள் யாவும் அவன் காதில் அசரீரித்துக்கொண்டிருக்க உடனே தன் செல்போனை எடுத்து சுதாகரனைத் தொடர்புகொண்டான். சுதாகரன் பொன்வண்ணனின் கொலீக் மற்றும் அறைத்தோழன்.

இரண்டு மூன்று முறை அழைப்பு போயும் அது ஏற்கப்படாமல் இருக்க ஏனோ வண்ணனுக்கு இன்னும் இன்னும் கோவம் கூடியது. பின்னே இது அவர்கள் அலுவலகத்தின் பிரேக் நேரம் என்று வண்ணன் அறியாததா என்ன?

ஏனோ தான் தற்போது வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் தான் தன் நெருங்கிய தோழன் கூட தன்னை மதிக்கவில்லையோ என்று அவன் மனதில் சாத்தன் வேதம் ஓதியது. வீட்டிலும் மதிப்பு இல்லை. வேலை செய்த இடத்திலும் மதிப்பு இல்லை. நண்பனும் மதிக்கவில்லை என்று அவன் மூளை குதர்க்கமாகவே யோசிக்க இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் தன் அன்னையின் பிடிவாதமும் ஈகோவும் தான் என்று அவன் பெரியப்பா போட்ட தூபம் சரிவர வேலை செய்தது. ஸ்ட்ரெஸாக உணர்ந்தவனுக்கு மூளை மதுவை ஞாபகப்படுத்த அங்கிருந்து கோவமாக வெளியேறினான்.

அங்கே சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த கிரிஜா வண்ணனைப் பார்க்காவிட்டாலும் உணவகத்தை ஒட்டியிருந்த பாய்லர் மறைவில் நின்ற தூரிகா அவனைப் பார்த்துவிட்டாள். அவனது நடையும் பாவனையும் அவளுக்கு ஏதோ தவறாக உணர்த்த ஒருகணம் திரும்பி கிரிஜாவைப் பார்த்தவள் யாரிடமும் சொல்லாமல் அவனைப் பின்தொடர்ந்தாள்.

வெள்ளிமலை கிராமத்தில் முன்பு இயங்கிவந்த டாஸ்மாக் கடையை நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ஊர் எல்லை தாண்டி மாற்றி அமைத்தனர். ஊர் எல்லை தாண்டி அவன் சென்றதும் தன் யூகம் சரியென்று புரிந்தவளுக்கு இதை எப்படிக் கையாள வேண்டும் என்று புரியவில்லை. இங்கே வந்த முதல் நாளே அவளை அவன் ஜாடையாகப் பேசியதோடு சரி. அதன்பின் இருவருக்கும் நேரிடையாக எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் போக என்ன செய்வதென்று குழம்பினாள் தூரிகா. கிரிஜாவையே எடுத்தெறிந்து பேசுபவனுக்கு தானெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று தெரிந்தாலும் கிரிஜாவின் அழுகை அவளை முன்னேற வைத்தது.

அப்போது தான் அந்த டாஸ்மாக் ஊழியனின் மனைவியைத் தொடர்புகொண்டு அவர் எண்ணை வாங்கி அழைப்பதற்குள் அங்கே வண்ணன் ஒரு சிறப்பான சம்பவத்தை அரங்கேற்றி இருந்தான்.

வண்ணன் அங்கே சென்றதுமே அவன் கிரிஜாவின் மகன் என்று கண்டுகொண்டவர் பட்டப்பகலிலே கடைக்கு வந்திருப்பவனை எண்ணி அவனுக்கு அறிவுரை வழங்க அவனை உதாசீனப்படுத்திவிட்டு பீரை வாங்கி குடித்ததும் நாட்டு மருந்து எடுத்துக்கொண்டிருப்பதால் குமட்டி வாந்தி எடுத்திருக்க அங்கிருந்தவருக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்ற இவனை அங்கிருந்து அவர்கள் வெளியேற்றியிருந்தனர்.

அவன் கோலத்தைக் கண்டவள் தன்னுடைய ஒரே பார்வை மற்றும் முகபாவனையில் அவன் மீது தனக்கிருக்கும் அபிமானத்தை சொல்லாமல் சொல்லிவிட்டாள். அவளிடமிருந்து வெளிப்பட்ட அருவருக்கத்தக்க பார்வையே வண்ணனுக்குள் சொல்லமுடியாத உணர்வுகளைக் கடத்தியது.
அவனை நெருங்கியவள்,

"படிச்சவன் தானே நீ? அறிவில்லை? ஏற்கனவே காமாலை வந்து தானே உடம்பு முடியாம போய் இங்க வந்து நாட்டு மருந்து குடிச்சிட்டு இருக்க? இப்போ போய் தண்ணி அடிக்குற. இப்படி கொஞ்சம் கொஞ்சமா அவங்களை நீ சாவடிக்குறதுக்கு அவங்களை ஒரே அடியாச் சாவடிச்சிடு..." என்றதும் வண்ணனுக்கு இவ்வளவு தான் என்று இல்லாமல் கோவம் வந்தது. சம்மந்தமே இல்லாத ஒருத்தி தன்னை இவ்வாறு திட்டுகிறாளே என்று அவன் ஆத்திரமடைய தூரிகாவோ தான் சற்று அவசரப்பட்டுவிட்டோமோ என்று யோசித்தாள்.
கோவமாக அவன் கரத்தைப் பிடித்து இழுத்துச் சென்றவள் தங்களுடைய தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கிணற்றருகில் நிறுத்தியவள் துளியும் யோசிக்காது அவனை அக்கிணற்றில் தள்ளி விட்டாள். கிணற்றில் விழுந்தவன் சுதாரித்து நீந்தி அவளைப் பார்த்து முறைக்க,

"மேல ஏறி ஈரம் காஞ்சதும் வீட்டுப் பக்கம் வாங்க..." என்று சொல்லும் முன் அவள் செல்போன் அலறியது.

"தூரி, நீ எங்கடா போன? இங்க நாங்க உன்னைத் தேடிட்டு இருக்கோம்" என்ற கிரிஜாவுக்கு,

"ஒரு வேலையா தோட்டம் வரை வந்தேன் த்தை. இருங்க வரேன்" என்றவள் மேலேறியவனை முறைத்தவாறே சென்றாள்.

சிறிது நேரம் கிணற்றின் அருகேயே அமர்ந்திருந்த வண்ணன் ஒரு வித விரக்தி நிலையிலே காணப்பட்டான். வேலையுமில்லை வீட்டிலும் மதிப்புயில்லை பணிபுரிந்த அலுவலகமும் அவன் உடல்நிலையைப் பற்றி ஒரு பேச்சுக்குக் கூட இதுவரை விசாரிக்கவில்லை. அவனது நெருங்கிய நண்பர்கள் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட இதுவரை அவனை அழைக்கவில்லை. ஒரு வாரத்தில் வெறும் ஒரே வாரத்தில் அவன் வாழ்க்கை இப்படித் தலைகீழாக மாறும் என்று கனவிலும் அவன் நினைத்ததில்லை. இப்போது ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில் இந்த வாழ்க்கையில் இந்த நிமிடம் அவன் மனம் விட்டுப் பேசக்கூட ஒருவரையும் அவன் சம்பாதிக்கவில்லையே என்ற வெறுமை அவனைச் சூழ்ந்துகொண்டது.

சில எட்டப்படாத முடிவுகளுடன் இறுதியாக நிஹாரிகாவுடனான அவனது உரையாடல் ஏனோ அவன் சிந்தையில் தோன்றி மறைந்தது. அது நடந்து இந்த நான்கைந்து மாதங்களில் அவன் வாழ்க்கையில் எல்லாம் சறுக்கலாகவே நிகழ்வதாய் அவனுக்குள் ஒரு பிரக்ஞை உண்டானது. அவனது லக்கி சார்ம் அவனை விட்டுச் சென்றதால் நிகழ்ந்த ராசியோ என்று அவனுக்கு நம்பிக்கையே இல்லாத ஜோசியத்தின் மீதும் நம்பிக்கை ஏற்பட, ச்சீ என்று ஒரே நொடியில் அதை எல்லாம் தூரம் ஒதுக்கியவன் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான்.

அவன் நினைத்தால் இந்த நிமிடமே கூட அவனால் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட முடியும் தான். அதும் இப்போது அவன் அன்னை மீது அவனுக்கு இருக்கும் கோவத்தைக் காரணம் காட்டியே நாளை கிரிஜாவுக்கும் அவனுக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டால் கூட அதைச் சமாளித்து விடுவான் தான். இருந்தும் கடந்த சில வாரங்களாகவே அவனுக்கும் கிரிஜாவுக்குமான உரையாடல்கள் ஒருபோதும் சுமூகமாகவே இருந்ததில்லை என்னும் வேளையில் மேற்கொண்டு அவரை வருத்தத்திற்கு உள்ளாக்க அவன் விரும்பவில்லை. என்ன தான் கிரிஜாவை அவன் முழுமையாகப் புரிந்துகொள்ளா விடினும் அவன் அன்னை மீதான பாசம் அவனுள் 'ஹைட் அண்ட் சீக்' விளையாடிக்கொண்டிருக்கிறது தான். பின்னே அவன் தந்தை இருந்தவரை அவன் அன்னையை அவர் எப்படிப் பார்த்துக்கொண்டார் என்று வண்ணன் மட்டும் அறியாமலா இருப்பான்? அவர்களுக்குள்ளே ஒரு அழகான மற்றும் ஆழமான புரிதல் இருந்ததென்று வண்ணன் நன்கு அறிவான். ஜெயசீலன் கிரிஜாவிடம் எதையுமே மறைக்க மாட்டார். சில சமயம் வண்ணன் ஏதேனும் தவறு செய்து அதை தன் அன்னையிடம் இருந்து எப்படியாவது மறைக்க எண்ணி ஜெயசீலனிடம் அப்ரூவர் ஆகிவிடுவான். அவரும் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவே வாக்குக்கொடுப்பார். ஆனால் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் கிரிஜாவுக்கு அவரே அதைத் தெரியப்படுத்தியும் விடுவார்.
இதை யோசிக்கும் போதே அவன் தந்தையின் நினைவுகள் அவனைத் தாக்க ஒருவேளை இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் அவனுக்கும் நிஹாரிகாவுக்குமான திருமணம் அரங்கேறியிருக்கும் என்று அவன் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு எண்ணம் உதிர்ந்தது என்னவோ உண்மை. இதையெல்லாம் யோசித்தவனுக்கு சட்டென தூரிகாவின் முகம் மனதில் தோன்ற அதுவரை இருந்த அமைதி நிலை மாறி அவள் மேல் ஒரு வெறுப்பு தானாகவே எழுந்தது. அவள் தன் அன்னைக்காகவே யோசிக்கிறாள் என்றாலும் ஏதோ ஒரு ஓரத்தில் 'என் அம்மா மேல எனக்கிருக்கும் பாசத்தை விட இவளுக்கு அப்படி என்ன அதிக பாசம் வேண்டியிருக்கு?' என்று பால்வாடி சிறுவனைப்போல் ஒரு பொசெசிவ் எண்ணம் எழாமல் இல்லை. அதன் கூடவே காலையில் அந்த டாஸ்மாக்கின் முன்பு அவள் அவனைப் பார்த்த அந்தப் பார்வை அவனுக்குள் அவள் மீது ஒரு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு செய்தது என்றால் அது மிகையில்லை.
அப்படியே அமர்ந்திருத்தவனுக்கு அந்த ஊரில் இருந்த பள்ளிக்கூடத்தின் உணவு வேளைக்கான மணி அடிக்கப்பட்டதும் சுயம் பெற்று எழுந்தவன் வீடு நோக்கி நடந்தான். வீட்டைக் கடக்கும் வேளையில் அனிச்சையாக அவன் கண்கள் எதிரில் இருக்கும் அந்த உணவகத்தை நோட்டமிட அங்கிருந்த தூரிகா அவனை ஒரு பார்வை சாரி முறைத்தாள். அப்போது தான் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த கிரிஜா அவன் வெளியே சென்று வீடு திரும்புகிறான் என்றே அறிந்துகொண்டார்.

"சரிமா நீ போய் பையன் கிட்ட பொறுமையாப் பேசு. மணியாச்சு பாரு போய் சாப்பாடு போடு" என்று சரவணன் சொன்னதைக் கேட்ட தூரிக்கு வண்ணன் மீது ஒரு வெறுப்பு உண்டான போதும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தாள்.
உள்ளே சென்று தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் மிஸ்ஸட் கால் கொடுத்திருந்த சுதாவுக்கு அழைத்தான்.

"என்ன மச்சான் ஊருக்குப் போனதும் எங்களையெல்லாம் கண்டுக்கவே இல்ல? என்ன விஷேஷம்?" என்று எப்போதும் போல் அவன் சாதரணமாகவே வண்ணனை கிண்டல் செய்ய இவனுக்கோ வாய் வரை வந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி பேசவே சில நொடிகள் பிடித்தது.

"யாரு சார் இங்க பிசி? பிரேக் டைம்ல கூப்பிட்டும் எடுத்துப் பேசாம இருந்த நீ பிசியா இல்லை நான் பிசியா?" என்று எப்போதும் நண்பர்களுக்குள் வாரிக் கொள்வதைப்போலே பேச முயன்றவனுக்கு தன்னையும் மீறி அதிருப்தியை வெளிப்படுத்திவிட,

"டேய் நிஜமா பிஸிடா. ரெண்டு ப்ராஜெக்ட் கமிட் பண்ணியிருந்தோம். திடீர்னு நீயும் போயிட்ட. இங்க நம்ம அல்போன்சும் மூணு நாளா வரல. சோ இளிச்ச வாயனா நான் தான் சிக்கிட்டேன்..." என்று சொன்ன சுதாவின் டோன் உண்மையிலும் சீரியசாக மாறியிருந்தது. பின்னே வண்ணன் தன் மீது கோவித்துக்கொண்டான் என்று கூடவா அவனால் புரிந்துகொள்ள முடியாது?

"சரிடா சும்மா தான் கூப்பிட்டேன்.வெட்டியாவே இருக்கேனா ஒரு மாதிரி இருந்தது அதான்..." என்று வண்ணன் முடிக்கும் முன்னே,

"டேய் இப்போ எப்படி இருக்கு உடம்பு? இன்னும் ஒரு வாரம் கூட ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் வந்து ஜாயின் பண்ணு மச்சான். நிழலோட அருமை வெயில்ல தான் தெரியுது. உன் பிலேசை இங்க யாராலயும் ரீபிளேஸ் செய்ய முடியல. முடியவும் முடியாது. மேனேஜர் கூட உன்னை விசாரிச்சார் டா..." என்று தன் அலுவலகத்தின் உண்மை நிலையை சுதா உரைத்தாலும் இந்த ஒருவாரத்தில் தங்கள் அலுவலகத்தில் இருந்து யாரும் தன்னை அழைக்கவில்லை என்ற உண்மை அவனைச் சுட்டது.

"பாக்கறேன் டா..." என்றவனுக்கு,

"பாக்கறதெல்லாம் இல்ல. அடுத்த வாரத்துல இங்க வந்து சேருற. சரி நான் அப்பறோம் கூப்பிடுறேன்..." என்று அவன் அழைப்பைத் துண்டிக்க இதுவரை ஒரு தெளிந்த நீரோடையாகவே இருந்த அவன் மனதில் முதல் கல்லானது விழுந்தது.

அவனுக்குள்ளே சில குழப்பங்கள் இருக்கும் இந்தச் சமயத்தில் கிரிஜாவிடம் ஏதும் பேசி பிரச்சனையை மேலும் பெரிதாக்க விரும்பாமல் அவன் அமைதி காக்க நினைத்தான்.
அதன் பின் மதிய உணவை முடித்து ஒரு குட்டித்தூக்கத்தைப் போட்டவன் வெளியே திண்ணையில் பேசிக்கொண்டிருந்த அரசி தேனு கிரிஜா ஆகியோரின் பேச்சரவத்தில் விழித்தவன் முகம் கழுவி வெளியேற அங்கே பேசிக்கொண்டிருந்தவர்கள் அமைதியாக, இவனோ ஏதும் பேசாமல் நடைபயின்றான். இவன் நகர்ந்ததும் அங்கே கிசுகிசுவென பெண்கள் தங்கள் பழமையைத் தொடர்ந்தனர். பொறுக்கமாட்டாமல் காலையில் நிகழ்ந்ததை கிரிஜா சொல்லும் வேளையில் அங்கே வந்த தூரிகா கிரிஜாவின் கண்ணீரை பார்க்கப்பிடிக்காமல் ஒரே ஒரு முறை வண்ணனிடம் பொறுமையாகப் பேசிப்பார்க்க முடிவெடுத்தாள்.

தூங்கி எழுந்த பின்னும் அவன் மனக்கடல் ஓயாமல் அலைபாய்ந்துக்கொண்டிருக்க அவனோ கால்போன போக்கில் நடந்துகொண்டிருந்தான். ஜெயசீலன் மறைந்த அன்று அவர் சடலத்தின் முன்பு அழுது அழுது கிரிஜா ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க வண்ணனோ கைகளைக் கட்டியபடி அவர் முகத்தைப் பார்த்தவாறு நின்றவன் தான். அவன் தந்தை அவனை விட்டுச் சென்றுவிட்டார் என்ற நிதர்சனத்தை அவர் சடலத்தைப் பார்த்தும் கூட அவனால் நம்ப முடியாமல் போனது தான் நிஜம். ஏனோ அந்தக் கணம் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிவரவில்லை. ஜெயசீலன் அவனுக்கொரு தந்தை மட்டும் கிடையாதே. அவர் தான் அவனது முதல் விசிறி. முதல் விமர்சகர். முதல் நண்பன். அதன் பின்னர் அவனது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தியவன் பி.ஜி முடித்து நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியில் சேர்ந்தான். இவன் வாழ்க்கையில் இவனே எதிர்பார்க்காமல் நுழைந்த வசந்தம் தான் நிஹாரிகா. அவளே இவனைத் தேடி வந்து அவளே இவனுக்கு ப்ரபோஸ் செய்து இறுதியாக அவளே தான் பிரேக் அப்பும் சொன்னாள். ஒருவேளை இன்று இவன் தந்தை உயிரோடு இருந்திருந்தால் இவனுக்கு இந்தப் பிரிவையும் இந்த வலியையும் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுத்திருக்க மாட்டார் என்ற எண்ணம் தான் அவனுக்கு கிரிஜாவின் மீதான ஒதுக்கத்திற்கு வித்திட்டது என்றால் அதுவே உண்மை.

இன்று கிரிஜாவிடம் அவன் சொன்ன வார்த்தைகள் மீது அவனுக்கே விருப்பமில்லை தான். இருந்தும் இவனை இந்த எல்லைக்குப் பேச வைத்ததும் அவர் தானே என்ற ஆதங்கம் அவனுக்குள் அதிகம் இருக்கிறது. அந்த ஊரில் இருக்கும் ஒரு தலைவரின் சிலைக்கு அருகே அமர்ந்து யோசனையில் இருந்தவனின் கண்ணில் அவள் தென்படவும் விருட்டென எழுந்தவன் அவளுக்கு முன் சென்று நின்றதும் அவளோ அரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வை புரிந்ததும்,"சரிதா, நான் வாழ்க்கையில நிறைய தப்பு பண்ணியிருக்கேன். பலதை தெரியாமலும் சிலதை தெரிஞ்சும். ஆனா நான் பண்ண எந்தத் தப்புக்கும் நான் இதுவரை பெருசா ஃபீல் பண்ணதில்லை. ஆனா இன்னைக்கு முழுக்க என் வாழ்க்கையில இதுவரை நான் செஞ்ச எல்லா முக்கியமானத் தவறுகளுக்கும் சேர்த்து ரொம்பவே ஃபீல் பண்றேன். ஆமா, நான் என் வாழ்க்கையில நிறைய மனிதர்கள் கிட்ட ரொம்பவே ரூடா பிஹேவ் பண்ணியிருக்கேன். ஆனா அவங்க எல்லாம் என்னுடைய அந்த பிஹேவியருக்கு நேரடியாவோ இல்ல மறைமுகமாவோ ஒரு காரணமா இருந்திருக்காங்க. ஆனா நேத்து நான் உங்களை ஜட்ஜ் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. பதிலுக்கு நீங்க என்னைத் திட்டி இருந்தா கூட எனக்கு ஒன்னும் பெருசா நடந்திருக்காது. ஆனா நீங்க என்கிட்ட கேட்ட அந்த மன்னிப்பு என்னை ரொம்பவும் ஹர்ட் பண்ணிட்டே இருக்கு. பேசுன வார்த்தையை யாரும் திரும்ப வாங்கிக்க முடியாது தான். ஆனா நீங்க நெனச்சா கட்டாயம் என் குற்றயுணர்ச்சியைப் போக்க முடியும். எனக்காக அதைச் செய்விங்களா சரிதா?" என்று வண்ணன் கேட்ட தொனி சரிதாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. பின்னே நேற்று அவன் பேசிய தொனிக்கும் இன்று அவன் பேசும் தொனிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை அவள் உணர்கிறாளே. வார்த்தையில் தெரியும் உண்மையை விட அவன் கண்களில் தெரியும் குற்றயுணர்ச்சி அவன் மனதை அவளுக்குத் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டியது.

"ஐ வாஸ் ஹர்ட் சோ பேட்(நான் மோசமாகக் காயப்பட்டுள்ளேன்). யோசிச்சு சொல்லுங்க சரிதா" என்றவன் அவளை விட்டு விலகி நடக்க அவனது சோர்ந்த நடை வேறு அவளை மேலும் பாதித்தது.

"சார், கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ். நானும் நேத்து இருந்த வேற ஒரு டென்ஷன்ல உங்க கிட்ட கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். அது உங்களை இப்படி பாதிக்கும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல. என்னையும் மன்னிச்சிடுங்க சார். அண்ட் யுவர் அப்பாலஜி இஸ் அக்செப்ட்ட்..." என்று அவள் கரம் நீட்ட வண்ணனின் மனதில் இருக்கும் புயலிலும் ஒரு தோணி நிமிர்வாகவே மிதந்தது.

"அப்போ ஃப்ரண்ட்ஸ்?" என்ற வண்ணனுக்கு,

"கண்டிப்பா சார்" என்றாள் சரிதா.

"நான் என்ன ஸ்கூல் டீச்சரா? சார் மோர் எல்லாம் வேணாம். கால் மீ வண்ணன் ஆர் வேன்..."

"வேன்? அப்போ என்னை டிராப் பண்ணுவிங்களா?" என்றவள் எங்கே அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று நாக்கைக் கடிக்க,

"அவ்வளவு தானே? மேடமை டிராப் பண்ணிட்டாப் போச்சு. வாங்க என் பின்னால ஏறுங்க" என்று அவனும் அவளைச் சீண்ட,

"நான் ஸ்கூல் டீச்சர் தான். ஆனா நீங்க என் ஸ்டுடென்ட் இல்லையே? சோ என்னை நீங்க சரிதானே கூப்பிடலாம்" என்று அவள் சொல்ல அவளுடனே பேசியவாறு நடந்து வந்தவனை கிரிஜாவே ஆச்சர்யமாகப் பார்க்க அவனோ அவளை உள்ளே அழைத்ததும்,

"இன்னைக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு. வீட்ல அப்பாவும் தம்பியும் எனக்காக வெய்ட் பண்ணுவாங்க. இன்னொரு நாள் கண்டிப்பா வரேன். அது போக நாம சென்னை வேற போகணுமில்ல?" என்று அவள் சொல்ல,

"ஓகே பார்க்கலாம்" என்று வண்ணன் சிரிக்க அவளும் சிரித்து விடைபெற்றாள். இதை எல்லாம் நம்ப முடியாமல் கிரிஜாவும் அவர் தோழிகளும் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த சூர்யா இன்றும் கணக்கில் சந்தேகம் கேட்க வண்ணனை அழைக்க அப்போது கோவிலில் கடை சாற்றி வீடு திரும்பிய தூரிகா,

"டேய் சூர்யா, இங்க வா அம்மாவே சொல்லித் தரேன்" என்று அழைக்க அவளை ஒருவாறு முறைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான் பொன்வண்ணன்.
(மழை வருமோ?)
 
மோதலுக்குப் பின் காதல்ங்கிற பார்முலாவ அப்ளை பண்ணா மூணு பேர்ட்டயும் மோதிருக்கிறான் அதுல ரெண்டு சமாதானம் ஒண்ணு இன்னும் மொறச்சுக்கிட்டு இருக்குது.... இதுல யாரா இருக்கும் ???
 
மோதலுக்குப் பின் காதல்ங்கிற பார்முலாவ அப்ளை பண்ணா மூணு பேர்ட்டயும் மோதிருக்கிறான் அதுல ரெண்டு சமாதானம் ஒண்ணு இன்னும் மொறச்சுக்கிட்டு இருக்குது.... இதுல யாரா இருக்கும் ???
அதுக்கு நீங்க இருபது episodes உம் படிக்கணும் ? நேரா கடைசி எபிசோட் போய் படிச்சிடா திங்க. அப்பறம் கதை சுவாரஸ்யம் இல்லாம போயிடும்
 
Top