Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 8

Advertisement

praveenraj

Well-known member
Member

தங்கள் வீட்டின் திண்ணையில் ஒரு பக்கம் அமர்ந்திருந்த கிரிஜாவுக்கும் எதிரில் இருக்கும் தங்கள் உணவகத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சரவணனுக்கும் வண்ணன் மற்றும் தூரி ஆகியோரின் இந்தக் கோபம் நிறைந்த பேச்சு சிறிது கலக்கத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.

"டேய் சூர்யா கிளம்பு வீட்டுக்கு" என்ற தூரியின் பேச்சில் சூர்யா சற்று மிரண்டு தான் போயிருந்தான். பின்னே தன் அன்னையைப் பற்றி அவன் அறியாததா? அவன் மீதான பாசத்தையும் அன்பையும் எப்படி வெளிப்படையாகக் காட்டுவாளோ அதே விகிதத்தில் கண்டிப்பையும் காட்டிவிடுவாள். சமயங்களில் அவனை அடிக்கவும் யோசிக்கமாட்டாள். இதனால் தூரிக்கும் சரவணனுக்கும் கூட வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவள் ஒருநாளும் யோசிக்க மாட்டாள்.
சூர்யாவின் மிரட்சி நிறைந்த பார்வையிலே அடுத்து அவனுக்கு என்ன நிகழும் என்று புரிந்துகொண்ட வண்ணன்,

"இப்போ உன் வீட்டுக்குப் போய் அவனை எதாவது பண்ணணு வெச்சிக்கோ இதுக்கான பின்விளைவை எண்ணி நீ காலத்துக்கும் கஷ்டப்படுற மாதிரி செஞ்சிடுவேன். இது வெறும் வாய் சவடால் இல்ல. என் பிடிவாத குணத்தைப் பத்தி வேணுனா என் அம்மாகிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கோ. ஐ அம் நாட் ஜோக்கிங். டேம் சீரியஸ். மைண்ட் இட்" என்று அவளை நெருங்கி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக உரைத்த வண்ணனை பயம் கலந்த அதிர்ச்சியில் பார்த்தாள் தூரிகா.

'இதுக்கான பின்விளைவை எண்ணி நீ காலத்துக்கும் கஷ்டப்படுற மாதிரி செஞ்சிடுவேன்' என்ற வண்ணனின் வார்த்தை தான் தூரியின் மூளையில் டைம் லூப் போல ஒரு வோர்ட் லூப் (word loop) உண்டு செய்தது. இந்த அதிர்வில் இருந்தவள் சூர்யாவை எதுவும் சொல்லாமல் சாப்பிடவைத்து அவனைப் படுக்கைக்கு அனுப்பி உறக்கம் வராமல் யோசனையில் மூழ்கினாள்.

வண்ணன் எதை மனதில் வைத்து அந்த வார்த்தையை உதிர்த்தான் என்று தூரிகாவால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனது. இங்கே வந்ததிலிருந்து ஆத்திரத்திலும் கோவத்திலும் பேசிக்கொண்டிருந்தவன் அன்று தன் அலுவலக நண்பர்களுடன் பேசிய தொனியே அவளுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்த அதை சூர்யா விஷயத்திலும் செய்து அவளுக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திவிட்டான் வண்ணன்.

பல சமயங்களில் அவனது பிடிவாத குணத்தை கிரிஜாவின் மூலமாகவே கேள்விப்பட்ட தூரிகா நிஹாரிகாவுடனான அவனது காதல் விஷயத்திலே அதைக் கண்டும் விட்டாளே. அது போக இங்கே வந்ததிலிருந்தே அவனுடன் தனக்கிருக்கும் ஒரு தவறான புரிதல் வேறு அவனை ஏதேனும் விபரீத முடிவை எடுக்க வைத்துவிட்டால் என்று நினைக்கையிலே தூரியின் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது. அவளுக்கு என்றும் அழுவது பிடிக்காது. சிறுவயதில் இருந்தே அந்தக் குணத்தைக் கடைப்பிடித்தவளை அவள் வாழ்வில் சில சம்பவங்கள் இன்னும் மனதளவில் வலிமை ஆக்கியது. ஆனால் வண்ணன் அதை உடைத்து விடுவானோ என்று எண்ணி அஞ்சினாள்.

உடனே உள்ளே விரைந்தவள் அங்கு உறங்கிக்கொண்டிருந்த சூர்யாவை தன்னுடன் அணைத்துக்கொண்டாள் தூரிகா.

'அம்மாக்கு நீ மட்டும் தான் இருக்க சூர்யா. உன்கிட்ட நான் சமயங்கள்ல காட்டுற கடுமை கூட நாளைக்கு என்னை மாதிரி நீயும் கஷ்டபட்டுடக் கூடாதுனு தான் செல்லம். நீ அந்த வண்ணன் கூட நெருங்கி பழகாத சூர்யா. எங்க அவனைப் போலவே நீயும் உன் அம்மாவைப் புரிஞ்சிக்காம போயிடுவியோன்னு தான் எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் டா கண்ணா...' என்றவள் அவன் நெற்றியில் முத்தம் ஒன்று வைத்து அவனை அணைத்தவாறே உறங்கிப்போனாள்.

அதன் பின் இரண்டு நாட்கள் வழக்கம் போல் கடந்தது. அன்று மாலை வண்ணனின் இல்லம் தேடி வந்தாள் சரிதா.

"ம்மா, ம்மா... வண்ணன் வண்ணா..." என்ற அழைப்பில் ஆச்சர்யத்துடன் வெளியே வந்தார் கிரிஜா. பின்னே இவளின் இந்த அழைப்பே அவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறார்கள் என்று அவருக்குப் புரியவைத்தது. அன்றைய சண்டைக்குப் பிறகு கிரிஜாவுக்கு வண்ணனும் நேரிடையாகப் பேசிக்கொள்ளவே இல்லை. சூர்யா மூலமோ இல்லை தேனுவின் மூலமோ தான் இருவரும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள்.

"வா மா. உட்காரு. அவன் வெளிய போயிருக்கான் போல... வந்திடுவான். இல்லாட்டி போன் பண்ணிப்பாரு. இரு டீ போடுறேன்" என்று கிரிஜா அவளை அமரவைத்து உள்ளே செல்ல அவனில்லை என்றதும் இது தான் சமயம் என்று நினைத்தவள் கிரிஜாவைத் தேடி கிச்சனுக்குள் சென்றாள்.

பல மாதங்களாகவே சரிதாவை கிரிஜாவுக்குத் தெரியும். சூர்யா படிக்கும் பள்ளியில் தான் பணிபுரிகிறாள் என்றும் சமூக சேவை செய்யும் சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தச் சின்ன வயதிலே நிறைய நல்ல காரியங்களை முன்னெடுத்து செய்கிறாள் என்ற வகையில் அவள் மீது கிரிஜாவுக்கு ஒரு நல்ல மதிப்புண்டு. அதை அவர் நேரடியாக வெளிக்காட்டாவிட்டாலும் அவளுக்கு அடிக்கடி பண உதவி செய்து அவளுக்கு உறுதுணையாகவே இருக்கிறார் கிரிஜா. முன்பே அவள் மீது இருக்கும் நன்மதிப்புகளுடன் தற்போது வண்ணனின் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்குச் சொந்தக்காரி என்பதால் அவள் மீது கூடுதல் அன்பு உண்டானது. இன்றைய தேதியில் இந்த வெள்ளிமலையில் வண்ணனுக்கு இருக்கும் ஒரே நட்பு சரிதா தான் என்று கிரிஜாவும் அறிவார். என்ன தான் வண்ணனிடம் பேசாவிட்டாலும் ஒரு தாய்க்கு மகனின் மாற்றங்கள் புரியாதா என்ன? இருந்தும் நாளுக்குநாள் தூரிகாவுடன் வளர்ந்துகொண்டிருக்கும் மோதல் போக்கு தான் கிரிஜாவுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது கூட சூர்யாவின் மீது அவன் காட்டும் உண்மையானப் பாசத்தையும் அக்கறையையும் காண்கையில் சற்று ஆறுதல் அளிக்கிறது.

"நான் உள்ள வரலாமா மா?" என்று சமையலறையின் முன்பு நின்று அவள் கேட்டதன் பொருள் கிரிஜாவுக்கும் விளங்கியது. கிராமங்களின் எவ்வளவு அந்யோனியமாகப் பழகினாலும் வேற்று வகுப்பைச் சேர்ந்தவர்களை வீட்டின் ஹாலை தாண்டி அனுமதிக்க மாட்டார்களே!

"தாராளமா வரலாம். நானெல்லாம் ஒன்னும் நெனச்சிக்க மாட்டேன். அப்பறோம் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?"

"என்கிட்ட என்ன தயக்கம்? கேளுங்க"

"என்ன முடிவெடுத்திருக்கான் உன் ஃப்ரண்டு?"

"நீங்க எதைப்பத்திக் கேக்கறீங்கன்னு எனக்குப் புரியல?"

"இல்ல ரெண்டு நாள்ல ஊரைவிட்டுப் போயிடுவேன்னு சொன்னான். ஒரு மாசம் கடந்திடுச்சு. எப்போ கிளம்புறானாம்?"

இதைக் கேட்டதும் அன்று தன்னிடம் வண்ணன் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

இனி தான் சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சனில் பணிபுரிய போவதில்லை என்று தன் சகாக்களுக்குத் தெரிவித்தவன் மறுநாளே சரிதாவிடம் எல்லாவற்றையும் புலம்பித் தீர்த்தவன் இறுதியில் மனம் பொறுக்காமல் அழுதும் விட்டான். அவனது அழுகை சரிதாவை அதிகம் பாதித்து விட்டது. இந்த இருபத்தி ஒன்பது வருட வாழ்க்கையில் தனக்கென்று ஒரு உண்மையான நண்பனைக் கூட தன்னால் பெறமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டவன்,

"என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச ரெண்டே ரெண்டு பொக்கிஷங்களையும் நான் தொலைச்சிட்டேன் சரிதா. ஒன்னு என் அப்பா. இன்னொன்னு என் நிஹா. இப்போ என் வாழ்க்கையில எனக்கிருக்கும் ஒரே சொந்தம் என் அம்மா தான். ஆனா சின்ன வயசுல இருந்தே என் அம்மா என்னைத் திட்டிட்டே இருப்பாங்க. இப்பயும் திட்டிட்டே இருக்காங்க. அவங்க விருப்பப்படி நான் இருக்கணும்னு அவங்க விரும்பறாங்களே ஒழிய என் விருப்பம் என்னனோ நான் விரும்புறது என்னனோ நான் ஏன் அதை விரும்பறேன்னோ அவங்க ஒரு நாளும் தெரிஞ்சிக்க விருப்பப்பட்டதே இல்ல. என்னால அவங்களைச் சமாளிக்கவே முடியல சரிதா. நானும் எவ்வளவு தான் பொறுத்து போறது சொல்லு? மீறி நான் ஏதாவது பேசிட்டா அவங்களை நான் எதிர்த்துப் பேசிட்டேனு அழுது ஒப்பாரி வெச்சிடறாங்க. நியாயப்படி நான் தான் அவங்க மேல கோவப்படணும்..." என்று எதையோ சொல்ல வந்தவன் இப்போது அது வேண்டாமென்று கருதி அமைதியானான்.

"என்னால இப்போ நெனச்சா கூட இங்கேயிருந்து கிளம்பி போயிட்டே இருக்க முடியும். ஆனா நான் ஏன் அதைச் செய்யல தெரியுமா? எனக்கு அவங்களை கஷ்டப்படுத்திப் பார்க்க விருப்பமில்லை. ஆனா அவங்க மட்டும் என்னை ஏன் இப்படிக் கஷ்டப்படுத்துறாங்க? என் அப்பா சாகுறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு சத்தியம் வாங்குனாங்க. 'எந்தச் சூழ்நிலையிலும் உன் அம்மாவை நீ கைவிடக்கூடாது. என் கூட இருந்த வரை எப்படி உன் அம்மா தைரியமா சுதந்திரமா இருந்தாளோ கடைசி வரை அவ அப்படியே இருக்கனும். உன்னை நம்பி தான் விட்டுட்டுப் போறேன்னு' சொல்லி என்கிட்ட ஒரு ப்ராமிஸ் வாங்குனாரு. இன்னைக்கு வரை அந்தச் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு தான் பல சூழ்நிலையில என்னை வருத்திகிட்டுக் கூட அவங்களை வருத்தப்படாம இருக்க வச்சிருக்கேன். ஏன் நீ என்ன பண்ணாலும் நான் நிஹாவைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு என்னால சொல்லியிருக்க முடியாதா? கை நிறைய சம்பளம் வாங்கி என் ஆபிஸ்ல ராஜா மாதிரி இருந்தேன். அந்த வேலையையும் இன்னைக்கு நான் விட்டுட்டு இங்க இருக்கேன்னா அதுக்கும் என் அப்பா தான் காரணம். என்னால உன்கூட வர முடியாதுனு அன்னைக்கு என்னால சொல்லியிருக்க முடியாதா சரு? இன்னைக்கு இருபத்தி ஒன்பது வயசுல பார்த்திட்டு இருந்த வேலையை விட்டுட்டு இங்க இப்படி வெட்டியா பொழுதைக் கழிக்கிறேன்னா அதுக்கும் என் அப்பா தான் காரணம். அவருக்கு நான் செஞ்சுகொடுத்த சத்தியம் தான் காரணம். இதுக்கும் மேல ஒரு பையன் என்ன செய்ய முடியும்? இல்ல நான் இன்னும் என்ன தான் செய்யணும்னு அவங்க எதிர்பார்க்கறாங்க? எப்போ பாரு நான் சொல்ற பேச்சைக் கேக்குறதில்லை அவங்களை மதிக்கிறதில்லைனு சொல்லிட்டு இருக்காங்க. ஆமா நான் குடிப்பேன் தான். நான் ஒன்னும் குடிச்சிட்டு ரோட்ல சுயநினைவே இல்லாம விழுந்து கிடக்குறவன் இல்ல. எனக்கு என் லிமிட்ஸ் தெரியும். ஆனா இங்க வந்ததும் ஒன்னு புரிஞ்சது சரிதா. என் அம்மா இப்படி இருக்குறதுக்கு முக்கிய காரணமே அந்த தூரிகா தான். அவ யாரு என் லைஃப்ல தலையிட? நான் அவ பேச்சுல தலையிடுறேனா? என் பெரியப்பா அன்னைக்கு என்ன சொன்னாரு தெரியுமா? நான் என் அம்மாவோட கைப்பாவையாம். ஆனா யோசிச்சுப் பார்த்தா அவர் சொல்றதும் ஒரு வகையில சரி தான். என்னால என் அம்மாவை எதிர்த்துப் பேசவும் முடியல தானே? என்னை நல்லாப் புரிஞ்சு வெச்சிருந்த நிஹா கூட இன்னைக்கு என்னைப் புரிஞ்சிக்காம போனதுக்கு இவங்க தானே காரணம்? இதெல்லாம் தான் எனக்குள்ள இருக்க டென்ஷன். அன்னைக்கு கூட என் அம்மாவை நோஸ் கட் பண்ண நெனச்சு தான் உன்னைப் பத்தி நான் தப்பாப் பேசும்படி போனது. அதான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்த முறை எப்படியாச்சும் என் அம்மாக்கு இதெல்லாம் நான் புரிய வெச்சு அவங்க சம்மதத்தோட இங்க இருந்து நான் கிளம்பனும். ஆனா எப்படினு தான் எனக்குப் புரியில..." என்று புலம்பினான் வண்ணன்.

"நான் கூப்பிட்டே இருக்கேன் நீ என்ன யோசனை பண்ணிட்டு இருக்க?" என்ற கிரிஜாவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள்,

"என்னம்மா கேட்டிங்க?"

"இல்ல ரெண்டு நாள்ல ஊரைவிட்டுப் போயிடுவேன்னு சொன்னான். ஒரு மாசம் கடந்திடுச்சு. எப்போ கிளம்புறானாம்?"


"அதுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லைனு தான் தோணுது" என்று சரிதா முடிக்கும் முன்னே வண்ணன் உள்ளே வந்துவிட கிரிஜாவும் இதைப்பற்றி மேற்கொண்டு பேசாது வெளியேறினார்.

(மழை வருமோ?)

இன்டெர்வல் பாயிண்டுக்கு கதை வந்துவிட்டது. முன்னாடி சொன்ன மாதிரி இந்தக் கதை எனக்கு முற்றிலும் புதிய முயற்சி. ரொம்ப நாளா கதையே இல்லாத ஒரு கதை எழுதணும்னு எனக்கு ஆசை. அதாவது ரொம்ப சிம்பிளான ஒருவரியை வெச்சு எழுத நெனச்சேன். அது தான் இந்த மழைக்கால மேகங்கள். இந்த நிமிஷம் வரை வண்ணனுக்கு யாரு ஜோடின்னு நான் முடிவு பண்ணவே இல்லை. எப்படி யோசிச்சாலும் மூணு கிளைமேக்ஸ் வருது??? பேசாம மூணு க்ளைமேக்ஸ் கொடுத்து ரீடர்ஸ் கிட்டயே முடிவை விட்டுடலாம்னு தோணுது? பயப்படாதீங்க சும்மா சொன்னேன். எப்படியாச்சும் ஒரு கிளைமேக்ஸ ஓகே பண்ணுறேன். அதான் இன்னொரு பாதி இருக்கே.


 
முடிவு உங்கள் கையில் ன்னு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ப்ரோக்ராம் வந்தது டிவில..... எனக்கு அது ஞாபகம் வந்துருச்சு நீங்க சொன்னதைப் பார்த்ததும் ??
 
Top