Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 2 1

Advertisement

Admin

Admin
Member



பகுதி – 2


அனிதா சென்ற பிறகும் ‘அப்பா இல்லையே...’ என்ற அவளின் குரலே ஹரிஹரனின் காதில் கேட்டுக்கொண்டிருந்தது. அதிலிருந்து வெளிவரவே அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது.

அத்தையின் வீட்டிற்குச் சென்றவன் வழக்கத்தை விட மிகவும் அமைதியாக இருக்க.... “என்ன ஹரி?” என்று கேட்ட பிறகும் சிறிது நேரம் மெளனமாக இருந்தவன் “அனிதாவை தெரியும் இல்ல அத்தை....”

“தெரியுமே.... நம்ம ஸ்கூல்ல தான் படிக்கிறா.... ஏன் அவளுக்கு என்ன?”

“அவளுக்கு அப்பா இல்லையாமே..... பாவம் இல்லையா அத்தை இந்த வயசுலேயே அப்பாவை இழந்த அந்தக் குழந்தை..”

அவன் அனிதாவின் தந்தை இறந்துவிட்டதாக நினைத்துப் பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டவர் “அவன் செத்து போயிட்டான்னு நினைச்சியா.... இல்ல உயிரோட தான் இருக்கான்....” என்றார் வெறுப்பாக.

அவர் சொன்னதைக் கேட்டு இன்னும் அதிர்ந்தவன் “அப்ப ஏன் அனிதா அப்படிச் சொன்னா?” என்றான் இன்னும் குழப்பமாக.

“அவளுக்குத்தான் அப்படி ஒரு அப்பா இருக்கிறதே தெரியாதே.... பின்ன வேற எப்படிச் சொல்வா?”

ஹரிஹரனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மேற்கொண்டு அடுத்தவர் வீட்டு விஷயத்தைப் பற்றிக் கேட்கவும் ஒருமாதிரியாக இருக்க... அவன் அமைதியாக இருந்தான். ஆனால் அவன் அத்தை அவராகவே சொல்லத் தொடக்கி விட்டார்.

“அழகா பொறக்கிறது கூடச் சில நேரத்தில ஆபத்துல முடிஞ்சிடுது. இதே இந்த மீனா மட்டும் அழகா இல்லாம சுமாரா இருந்திருந்தான்னு வை, அவளுக்கு இவ்வளவு கஷ்ட்டம் வந்திருக்காது.” என்றவர், மேற்கொண்டு அவளைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.



அங்கே வீட்டிற்குச் சென்ற அனிதாவிற்கு முகம் கைகால் கழுவி மீனா உணவு கொடுக்க “அம்மா ! அஸ்வதுக்கு அப்புறம் என் ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் அப்பா இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இல்லை....” என்று கேட்ட மகளிடம், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்.... அவளுக்குப் பிடித்த ஹரிஹரனை பற்றிப் பேசினால் விட்டுவிடுவாள் என்று நினைத்து “அப்புறம் உங்க சார் என்ன சொல்லி தந்தாங்க.” எனப் பேச்சை மாற்ற.... அது வேலை செய்தது. அனிதா வாய் ஓயாமல் ஹரிஹரனை பத்தி பேசிக்கொண்டு இருந்தாள்.

மகள் பேசப்பேச அவளுக்குப் பருப்பும் நெய்யும் கலந்த சாதத்தோடு ஒரு அவித்த முட்டையும் வைத்து ஊட்டி விட்டவள், தனக்கு வெறும் பருப்பை மட்டும் போட்டு பிசைந்து சாப்பிட்டு முடித்து, அடுக்களையை ஒதுங்க வைத்துவிட்டு மகளுடன் சென்று படுத்தாள்.

படுத்ததும் தூக்கம் வருவது மிகவும் அரிது. அதுவும் இன்று மகள் தந்தையைப் பற்றிக் கேட்டதால்..... நினைக்காதே என்று அறிவு சொன்னாலும் மனம் முன்பு நடந்ததை அசைபோட்டது.

மீனாவின் குடும்பம் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று கீழே தான். தாய் தந்தை அண்ணன் என்று நிறைவான குடும்பம். அண்ணன் மனோஜூக்குப் படிப்பு அவ்வளவாக வரவில்லை.... அதனால் பத்தாவது வரை படித்தவன், தொழில் கல்வி முடித்து ஒரு சிறிய வேலையில் சேர்ந்து விட்டான்.

மீனா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது… அங்கே சந்தித்தவன் தான் ஆகாஷ். பெருமைக்காக மட்டுமே படிக்க வந்தவன். அதாவது பெயருக்குப் பின் போட பட்டம் தேவை என்ற காரணத்திற்காக மட்டும் படிக்க வந்தவன். அவன் தந்தை நிறையச் சொத்து சேர்த்து வைத்திருந்ததால்.... எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பயம் இல்லாமல் சுத்திக் கொண்டிருந்தான்.

கல்லூரியில் படிப்பதை தவிர மற்ற அனைத்தும் செய்வான். அவன் கெடுவது மட்டும் இல்லாமல்.... அவனோடு சேர்ந்து ஜால்ரா போட ஒரு கூட்டத்தையும் சேர்த்து வைத்துக் கெடுத்துக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது மீனா அவன் கண்ணில் பட்டுவிட... அவள் அழகில் மயங்கியவன், அவள் பின்னே சுற்ற ஆரம்பித்தான்.

மீனா அவனை அலட்சியபடுத்த... கூட இருந்த ஜால்ராக்கள் ஆகாஷை உசுப்பி விட.... அவன் வெறி நாயாக அவள் பின்னே அலைந்தான்.

மனதிற்குள் தீய எண்ணம் இருந்த போதும், ஆகஷ்க்கு அழகான முகம். அதோடு இனிமையாகப் பேசவும் கூடியவன். மீனா எவ்வளவு கோபப்பட்டுப் பேசினாலும், பதிலுக்குக் கோபபடாமல் புன்னகை முகத்துடனே வளைய வருவான். அதோடு அவளிடம் அவன் எல்லை மீறவும் முயலவில்லை.

“ஆகாஷ், நான் தான் சொல்றேன் இல்ல.... எனக்கு உங்க மேல லவ் எதுவும் இல்லைன்னு... அப்புறம் ஏன் என் பின்னாடியே சுத்துறீங்க?”

“ஏன் என்னைப் பிடிக்கலை? நான் அழகா இல்லையா.... இல்ல வசதி தான் இல்லையா....”

“இதெல்லாம் இருந்தா கண்டிப்பா லவ் பண்ணனுமா.... எனக்குக் காதல் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை... நான் வீட்ல சொல்றவங்களைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன். ப்ளீஸ் என்னைத் தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க.”

எவ்வளவு முயன்றும் ஆகாஷால் மீனாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. கூட இருந்த ஜால்ராக்கள் “ஆகாஷ், உன்னால முடியாம போனது இது ஒன்னு தான்டா... பரவாயில்லை விடு.”
என்ற போது.... இல்லை எப்படியும் முடித்தே தீருவேன் என மனதிற்குள் நினைத்தவன், அதற்குத் திட்டமும் போட்டான்.

மீனா கடைசி ஆண்டுக் கல்லூரியில் இருந்த போது.... ஆகாஷ் வீட்டினர் அவளைப் பெண் கேட்டு வந்தனர். ஒரு வருடம் முன்பு தான் மனோஜுக்கும் திருமணம் முடிந்திருந்தது. அவன் மனைவி ரதியும் வேலை பார்ப்பதால்... எதோ குடும்ப வண்டி சென்று கொண்டிருந்தது.

“எங்க பையன் உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான். அவன் ஆசை பட்ட எதுவும் நாங்க செய்யாம இருந்தது இல்லை... அதனால தான் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்.” என்று ஆகாஷின் பெற்றோர் பல்லை காட்ட....

தங்கள் பெண் பெரிய இடத்தில் கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எல்லாப் பெற்றோரும் நினைப்பது போலவே தான் மீனாவின் பெற்றோரும் நினைத்தனர். ஆனால் ஆகாஷின் குடும்பம் நல்ல குடும்பமா என்பதை விசாரிக்க மறந்தனர்.

அவர்களே விரும்பி வந்து கேட்கும் போது... அதுவும் பையன் கண்ணுக்கு லட்சனமாக மகளுக்குப் பொருத்தமாக வேறு இருந்ததும் மறுக்க மனம் வரவில்லை.... அதனால் திருமணத்திற்குச் சம்மதித்தனர்.

அவர்கள் சென்றதும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் போது மீனா தன் மனதிலிருப்பதைச் சொன்னாள்.

“அப்பா, ஆகாஷ் காலேஜ் முடிச்சிட்டார் தான். ஆனா... கோர்ஸ் முடிக்கலை....எனக்கும் இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு, அது முடியட்டுமே.... அதுக்குள்ள எதுக்குக் கல்யாணம்? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே....”

“ஆகாஷ் படிப்பை முடிக்களைனாலும் ஒன்னும் இல்லை.... அவங்க அப்பா வியாபாரத்தில கொடி கட்டி பறக்கிறார். அதைத் தான் மகனும் பார்க்க போறார். அதோட பெரிய இடம் அவங்களைக் காத்திருக்கச் சொல்ல முடியுமா.... அப்புறம் அவங்க வேற சம்பந்தம் தேடி போய்டா.... இது போல இடம் அமையுமா....”

தன் மாமனார் சொன்னதைக் கேட்ட ரதி “மாமா நம்மை விட ரொம்பப் பெரிய இடம் எதுக்கும் யோசிச்சுக்கோங்க.” என்ற போது விஸ்வம் எதோ சொல்லி சமாளிக்க....

“அவளுக்கு நீ பெரிய இடத்தில கல்யாணம் செஞ்சு போறது பொறாமை.” என்று மீனாவின் காதில அவள் அம்மா கிசுக்சுத்தார்.

மீனாவுக்கு அண்ணி ரதியை பற்றித் தெரியும். மனோஜ் ரொம்ப ஊதாரி எனபதால்... ரதி கொஞ்சம் அவனை இறுக்கி பிடிப்பாள். அதோடு வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல் மனதில் நினைப்பதை மறையாமல் சொல்லிவிடுவாள். மற்றபடி மற்றவர்களுக்குக் கெடுதல் நினைக்கும் குணம் இல்லை.

பெற்றோருக்கு விருப்பம் என்பதால் மீனாவும் அதற்கு மேல் மறுக்கவில்லை.... திருமணம் கோவிலில் நடந்தது. ஒரே மகனின் திருமணத்தை ஏன் கோவிலில் வைத்தீர்கள் என்று மீனாவின் உறவினர்கள் கேட்டதற்கு....

“வேண்டுதல்...” என்று சொல்லி ஆகாஷின் பெற்றோர் சமாளித்தனர். அதோடு அவர்கள் பக்கம் இருந்து வந்த உறவினர்களும் சிலர் தான். அதற்கும் உறவினர்களுக்கு இவர்கள் வீட்டில் பெண் எடுப்பது பிடிக்கவில்லை... அதனால் வரவில்லை என்றனர்.

புகுந்த வீட்டில் முதல் மூன்று மாதங்கள் மீனா சொர்கத்தில் இருந்தது போல் உணர்ந்தாள். அவளுக்கு அங்கே செய்ய ஒரு வேலையும் இல்லை.... மாமனாரும் மாமியாரும் அவர்கள் விஷயத்தில் தலையிடுவது இல்லை.... வேறு எந்தத் தொந்தரவும் இல்லை.

ஆகாஷ் நினைத்த நேரம் எல்லாம் அவளுடன் கூடி மகிழ்ந்தான். அது ஒன்று தான் மீனாவுக்கு எரிச்சலாக இருக்கும். “வேற எதாவது வேலை இருந்தா பாருங்களேன். வீட்லயே இருக்கப் போர் அடிக்கவில்லையா...”

“இப்போதைக்கு இது தான் வேலை.... மத்த வேலை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றவன், அவளைத் தழுவிக்கொண்டான்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழி ஆகாஷின் விஷயத்தில் உண்மை ஆனது. மூன்று மாதத்தில் அவனுக்கு மீனா மீது இருந்த மோகம் குறைந்து விட்டது. வெளியில் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தான். இரவு வீட்டிற்கு நேரம் கழித்து வருவது. குடித்து விட்டு வந்து ரகளைச் செய்வது என்று ஆரம்பித்து மீனா எதாவது கேட்டாள், அவளை அடித்துத் துன்புறுத்துவதில் வந்து நின்றது.

அவன் என்ன செய்தாலும் அவனின் பெற்றோர் கேட்பதே இல்லை.... ஒரு நாள் எல்லோரும் இருக்கும் போதே மீனா வெடித்து விட்டாள்.

“இவ்வளவு நாள் நல்லா தானே இருந்தீங்க. இப்ப என்ன வந்தது?”

“இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணதுனால என்னோட சுதந்திரம் போய்டுச்சு... எப்ப பாரு கேள்வி கேட்டு உயிரை எடுக்கிற? நீயெல்லாம் ஒரு ஆளு உன்னைப் போய் நான் கல்யாணம் பண்ணேன் பாரு.... உன் குடும்பத்துக்கு எங்க வீட்ல சம்பந்தம் பண்ண என்ன யோகிதை இருக்கு?”

ஆகாஷ் பேசப்பேச அவனை முறைத்து பார்த்த மீனா “நான் உங்களைக் காதலிகிறேன்னு சொன்னேன்னா.... இல்லைன்னா கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னேனா..... நீங்க தான என் பின்னாடி சுத்துனீங்க.... எங்க வீட்ல வந்து பொண்ணு கேட்டீங்க. இப்ப என்னைச் சொல்றீங்க.”

அவள் சொன்னதற்கு ஆகாஷ் பதில் சொல்லாமல் இருக்க.... “கேட்கிறேன் இல்ல சொல்லுங்க.... நீங்க தான வந்தீங்க...” மீனா கேட்க....

“ஆமாம் நான் தான் வந்தேன். நீ மட்டும் என்னைக் காதலிகிறேன்னு சொல்லி இருந்தா.... கொஞ்ச நாள் உன்னோட ஜாலியா இருந்திட்டு அப்பவே உன்னைக் கைகழுவி இருப்பேன். இப்படிக் கல்யாணம் வரை வந்திருக்காது.... இப்ப என் கழுத்தில தொங்கிற கல்லு மாதிரி நீ இருக்க.... என்னால சுதந்திரமா இருக்க முடியலை.... அதனால நீ போய்டு....”

 
மீனாவின் அம்மாவுக்கு ஏன் இந்த கெட்ட புத்தி?
மீனாவின் அண்ணி அவளுடைய நல்லதுக்குத்தான் சொல்றாள்ன்னு
கூடவா புரியலை?
விரலுக்கேத்த வீக்கம் வேண்டும்
மீனாவின் பெற்றோருக்கு பேராசை கண்ணை மறைத்து விட்டது
ரதி நல்ல மருமகள்தான்
 
Last edited:
???

டேய் உன்னையெல்லாம் நிக்கவச்சி சுடனும்......
3 வருஷ படிப்பை 4 வது வருஷம் படிக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணிவச்ச உன் அம்மா அப்பாவையும்......

பொண்ணுங்க அப்பா அம்மாக்கு கொஞ்சம் பெரிய இடத்தில் இருந்து சம்பந்தம் வந்துவிட்டால் கால் தரையில் நிற்காது......
பலநேரம் ஆசை60 நாள்னு பொண்ணு வாழ்க்கையே முடிஞ்சு போகுது.......
 
Last edited:
நல்ல பதிவு. ஆகாஷ் மாதிரியான ஆண்களைவிட அவங்கள பெத்தவங்களை தான் தண்டிக்க வேண்டும்
 

Advertisement

Top