Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 11

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hi dear ladies and girliesssssssss..thanks alottttttttttt..

here comes the next update of ??

-----------------------------------------------------------------------------

காதல் 11

வீட்டிற்கு வந்த மதுரவசனியின் உள்ளம் கொதித்தது. என்ன ஆணவம் அவனுக்கு? எல்லாமே அவன் இஷ்டம் தானா? அவன் மேல கட்டுங்காடாத ஆத்திரத்தில் இருந்தவளுக்கு அழுகை தான் வந்தது. என்ன வார்த்தை சொல்லிவிட்டான் அவன்?

‘டைம்ண்ட் குரூப்ஸ் மருமக ஆகனும்னுதான உன் ஆசை...’ இது அவள் காதில் ஒலிக்க இன்னும் அழுகைப் பீறிட்டது. அவனைப் பற்றி எதுவுமே அறியாத போதிலும் அவன் கண்ணில் தெரிந்த உண்மையை மட்டுமே நம்பி அவனது காதலை ஏற்றவளைப் போய் என்ன வார்த்தைச் சொல்லிவிட்டான். கோபம் இருப்பதால் என்ன வார்த்தை வேண்டுமானாலும் பேசுவானா அவன்.. நீ வேண்டாம் என்று சொல்ல எப்படி முடிகிறது அவனால்.?இப்படி ஒரு பிடிவாதம் கொண்டவனை ஏன் அவளுக்குப் பிடிக்கிறது என்ற சுயபச்சாதாபத்திலேயே அவள் மேலும் அழுதாள்.

அவளால் அவனைத் தவிர யாரையும் நேசிக்க முடியாது என்று தெரிந்தும் அதைப் பயன்படுத்தி இவளைக் கட்டுப்படுத்த நினைக்கிறானே ஒழிய அவளுக்காகக் கூட அவனது நிலையில் இருந்து இறங்காமல் இருக்கிறானே அப்புறம் என்ன ஈர வெங்காய காதல் என்று அவனைப் போலவே நினைத்தாள்.
மனதில் இருப்பதை யாரிடமும் சொல்ல முடியாத வேதனையை அழுது தீர்த்தாள். ஹம்சா வேலைக்குப் போயிருந்ததால் தப்பித்தாள் இல்லாவிடில் அவள் இவள் அழுவதைப் பார்த்து கேள்விக் கேட்டுத் துளைத்தெடுத்திருப்பாள். ஏற்கனவே ராஜாவுடனான சம்மந்தம் ஹம்சாவுக்குப் பிடிக்கவில்லை. மதுவிடம் வந்து ,

“அந்த மனுசன் தான் அப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டாரே டி… நீ வீட்ல சொல்ல வேண்டியது தானே… வீட்டை எப்போவும் எதிர்ப்ப... இதுக்கு அவங்களை கேக்கலயா..? அவங்க சொன்னா மண்டையை ஆட்டுவியா…? அந்தாள் குணம் தான் தெரியும்ல… எனக்குப் பிடிக்கலன்னு சொல்ல என்ன உனக்கு…?” எனக் கடிய

“இல்லடி… அவர் ரொம்ப நல்லவர்… பெரியப்பா விசாரிச்சிட்டாரு… அவங்க வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லவங்க.. அதான் ஒத்துக்கிட்டேன்..” என்றாள் மதுரவசனி. மதுவுக்கு உள்ளே குற்றவுணர்ச்சி. இப்படி உற்ற தோழியிடம் பொய்யுரைக்கிறோமே என. ஹம்சாவிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால் செவிட்டிலேயே நாலு அறை விடுவாள். அதுவும் நந்தனை என்றால் சொல்லவே வேண்டாம். எப்படியோ ஹம்சாவை சமாதானப்படுத்தினாள் மது. பெரியவர்கள் பேசிய சம்மந்தம் என்ற போதிலே இவளுக்கு ராஜாவை பிடிக்கவில்லை இதில் காதல் என்று தெரிந்தால் ஒரேடியாக போய் வீட்டில் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுவாள்.

அவனது கடந்தகாலம் தெரிந்தவுடன் மதுவுக்குமே வேதனைதான் வருத்தம் தான். ஆனால் இவனது இன்றையை பிடிவாதத்தை அவள் மனம் ரசிக்கவில்லை. அவனையும் விட முடியாது அவள் குடும்பத்தையும் விட முடியாது. காதலிக்கும் ஒரு சராசரியானப் பெண்ணாக தான் இருந்தாள் மது. ஒரு கண்ணைக் காக்க இன்னொரு கண்ணை யாரும் குத்திக் கொள்வது இல்லையே.

இப்படியே பலவித உணர்வுகளால் கட்டுண்டவள் வைரத்தின் செல்பேசி அழைப்பு வரவும் தான் நிலைப்பெற்றாள்.

மகன் கோபமாகப் பேசிச் சென்றதை நினைத்து வருந்தியவர் என்னவாயிற்றோ எனப் பதறி ரகுவுக்குப் போன் செய்ய, அவனுக்குமே இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் தெரியாத காரணத்தால் வைரம் வேறு வழியின்றி மருமகளுக்கே அழைத்தார்.

“சொல்லுங்க அத்த”

“மதும்மா…. ராஜாவைப் பார்க்க போனியாமா…?” எனத் தயக்கத்தோடு கேட்க

“ஆமா.. அத்த….பார்த்தேன்…”

“என்ன சொன்னான்மா அவன்….?” என அவர் பயத்தோடு கேட்க

“கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொன்னாரு..”

“அய்யோ….” என்றவர் பதறிப் போய் அழ

மதுவோ அமைதியாகவே இருந்தாள். அவளது அமைதி மேலும் அவரை வருந்தச் செய்ய

“நீ..என்னமா சொன்ன….?”

“நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டனும்னு சொன்னேன்..”
“அவன் ஒத்துக்கிட்டானா மா?”

“இல்ல அத்த… ஆனா அவரை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்…” என்றவளின் மனம் புரிந்தவர் மேலும் தன்னால் தனது மகனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என அழ,

“ப்ச்… இப்படி எல்லாத்துக்கும் அழதுட்டே இருக்காதீங்க... இப்படி அழாம அன்னிக்கே உங்க புள்ளப் பின்னாடிப் போயிருந்தா உங்க புள்ளை இன்னிக்கு இப்படி என் உயிர வாங்க மாட்டாரு..” என இவள் கடிய

மதுரவசனிக்கு பெரியவரிடம் இப்படி பேசுகிறோமே என்றெல்லாம் இல்லை. அவள் பொறுமைசாலியெல்லாம் கிடையாது. இப்படி எதாவது எதிர்த்துப் பேசி தான் வீட்டில் திட்டு வாங்குவாள். வீட்டில் பேசுவது போல் பட்டென்று பேசிவிட்டவள் பின்னர் தான் தனது தவறை உணர்ந்தாள்.

“சாரி அத்த… நான் ஏதோ கோவம்.. அதான்…”

“உன்ட்ட எல்லாத்தையும் சொல்லிட்டானமா?” என்றார் வைரம் வலி மட்டுமே மிகுந்த குரலில்.

“ஹ்ம்ம்”

“உனக்கும் என் மேல கோவமாடா? என் புள்ளையை நான் என்னிக்குமே விடனும்னு நினைச்சதில்லமா… அவன் இல்லாம நான் நிம்மதியா தூங்கவே இல்ல தெரியுமா…? இங்க சின்னவனையும் சரி கீர்த்தியையும் சரி நான் கவனிக்கறதே இல்ல… அவன் நினைப்புதான் எப்போதுமே… அவன் என்னைக்காவது ஒரு நாள் பேசிட மாட்டானா அப்படினு தான் ஒவ்வொரு நாளும் நினைச்சிட்டே எழுந்திருக்கிறேன்…” என அவர் சொல்லி அழ

“அய்யோ…அத்த...விடுங்க.. ஏதோ நடந்து போச்சு…… இப்ப ஆக வேண்டியது பேசலாம்… அழாதீங்க ப்ளீஸ்……” என மதுரவசனி மாமியாரை சமாதானம் செய்ய ,

“நான் உங்கிட்ட பேசனும் மது… வீட்டிற்கு… இல்ல... சாய் பாபா கோவில் இங்க பக்கமா இருக்கு வரியாம்மா..” எனக் கேட்க மதுவும் சம்மதித்தாள். ஒரு நாலு மணியளவில் வீட்டை விட்டு கிளம்பினாள் மது. போகும் முன் ஹம்சாவுக்கு போன் செய்து சொல்லியும் விட்டாள்.

கோவிலில் இவளுக்கு முன்பே வந்து வைரம் காத்திருந்தார். அவரது சோர்ந்த கண்களையும் களைந்தத் தோற்றத்தையும் கண்டவளுக்கு தன்னால் தானோ எனக் குற்றவுணர்வு தலை தூக்கியது. அவரருகே அவள் செல்ல, அவளைக் கண்டவர்

“எப்படிம்மா இருக்க…?” என நலம் விசாரிக்க

“நல்லாயிருக்கேன் அத்த” என்று சொன்ன மதுவின் குரலும் உள்ளே போயிருந்தது. கோவிலைச் சுற்றி விட்டு அமர்ந்தவர்களிடையே அமைதியே நிலவியது.

பின்னர் நடந்த அனைத்தையும் மது வைரத்திடம் சொன்னாள். அதைக் கேட்டவருக்கு மகன் எவ்வளவு காயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்தது. அது புரியவும் கண்ணிலிருந்து நீரும் சேர்ந்து வழிய ஆரம்பித்தது.
“அத்த ப்ளீஸ் அழாதீங்க அத்த…” என்ற மதுவுமே அழுதாள்.

மருமகள் அழுவதைக் கண்ட வைரம், “மது.. நீ அழாதடா.. என் பையனுக்கு ஒரு பழக்கம்… எதாவது ஒரு விசயம் பிடிச்சாச்சா.. அதை விடவே மாட்டான்… உன்னை அவன் விட மாட்டான் டா” என கையைப் பிடித்து சமாதானம் சொல்ல

“உங்களையும் தானே பிடிக்கும். இப்போ உங்களை விடலயா?அப்புறம் என்னை மட்டும் எப்படி?” எனக் கலக்கமான குரலில் மது வினவ

“இல்லடா… உன்னை அவன் எங்களை விட விரும்புறான்… எங்க மேல அவனுக்குக் கோபம் இருக்கு.. உன் மேல அவனுக்கு என்ன கோபமிருக்கபோவுது சொல்லு… நீ எந்த தப்பும் செய்யலடா”

“இல்லத்த… ஏற்கனவே வீட்ல சொல்லலனு குற்றவுணர்ச்சியா இருக்கு… எப்போவாது தெரிஞ்சுடுமோன்னு பயம் வேற… இதுல இவர் வேற… எனக்கு பயமா இருக்குத்த… அவரை என்னால விட முடியாதுன்னு தெரிஞ்சே என்னைக் கார்னர் செய்றார் அத்த… என்னைப் புரிஞ்சிக்கவே மாட்றார்… கல்யாணத்துக்கு ஒத்துக்காம என்னை டார்ச்சர் செய்றார்” என சிறுப் பிள்ளையாய் அழ
 
அவளை ஆதரவாக வருடிக் கொடுத்தவர், “என் புள்ளச் சட்டையை தைரியமா பிடிச்சப் பொண்ணு மாதிரியா பேசுற நீ.... விடு.. அழாத மது… நீ எப்படி அவனை விட முடியாதோ.. அவனால உன்னை விட முடியாது……” என்றவர் தன் நிலையை விளக்க,

“உனக்கும் என் மேல கோவம் இருக்குதானே… ஏன் நான் அவனை பார்க்கலனு..?” என்றவரை விழிகள் உயர்த்திப் பார்த்தவள் ,

“ஆமா அத்த… அவருக்கு இப்போ கூட உங்க மேல பாசம் தான் தெரியுமா…? பேச்சு வாக்கில அம்மா அப்பான்னு தான் சொல்றாரு… ஆனா நீங்க அவரை விட்டுடீங்கன்னு ரொம்ப கோவம்… பாவம்.. இன்னிக்கு சொன்னப்போ கூட அழுதாரு…” என மது சொல்ல மகனது பாசம் கண்டு வைரத்தின் கண்ணில் துளிகள்.

“அன்னிக்கு அவன் வீட்டை விட்டுப் போய் கொஞ்ச நேரத்திலேயே என் மாமனாருக்கு ப்ரஷர் ஏறி மயங்கி விழுந்தார்மா…வயசான காலத்துல மூச்சைப் பிடிச்சிட்டு கத்தின விளைவு. ஹாஸ்பிட்டல்ல வைச்சு பார்த்தோம்.. எனக்கும் ராஜாவை நினைச்சு நினைச்சு மயக்கம் வந்துடுச்சு… இரண்டு நாள் நான் சுய நினைவே இல்லாம இருந்தேன்… நான் முழிச்சப் பின்னாடியும் கூட என் மாமனாருக்கு சரியாகல.. அவருக்கு ஆஞ்சியோ செஞ்சப் பின்னாடி தான் நார்மலானாரு… டாக்டரும் வயசானவரு.. கோவப்படுத்திப் பிபியை எகிற வைக்காதீங்கனு சொல்லிட்டார்… நாலு நாள் ஹாஸ்பிட்டல்ல எங்க இரண்டு பேரையும் பார்த்துட்டு தான் ராஜாவோட அப்பாவும் தீபனும் இருந்தாங்க… அவன் போனையும் எடுத்துட்டு போகல… அவனோட ப்ர்ண்ட்ஸ்ட்டையும் தீபன் விசாரிக்க ஒரு தகவலும் இல்ல.. இதுல என் மாமனார் அவனைத் தேடக் கூடாது வீட்டுக்கு வரக் கூடாதுன்னு உத்தரவு. அதை மீறிதான் ராஜாவை கண்டுபிடிச்சாங்க… அவங்க ராஜாவைப் பத்தி தெரிஞ்சவுடனேயே அவனைப் பார்க்க வந்துட்டாங்க.. என்ட்ட சொல்லக்கூட இல்ல… அவனைப் பார்க்கனும்னு அவசரத்துல வந்தாங்க… ஆனா அவன் வர மாட்டேனு சொல்லிட்டான்..” என்றார் வேதனையான குரலில்.


“ஆனாலும் மாமா அவரை கெஸ்ட் ஹவுஸ்ல இருந்துக்கோ..தாத்தா கோவம் போனதும் வீட்டுக்கு வரலாம்னு சொன்னாராம் அத்த.. இதே உரிமையுள்ள புள்ளையா இருந்திருந்தா அப்படி சொல்லியிருப்பாரா.. வீட்டுக்கு வான்னு சொல்லியிருக்கனும்ல… அப்படினு கோவம் அத்த… அவருக்கு யாருமில்லங்கற விசயம் அவர் மனசை ரொம்பப் பாதிச்சிடுச்சுத்த... அதுவும் இப்படி ஒரு பாசமான குடும்பத்தில இருந்துட்டு இனி நீ அநாதைன்னு சொன்னா யாருக்கா இருந்தாலும் கஷ்டமாதானே இருக்கும்…”


“அப்படி ஒரு வார்த்தையை நான் உயிரோட இருக்கவரைக்கும் சொல்லாத மது… அவனை இந்த ஏழு வருசத்துல நான் எத்தனையோ முறை என் மாமனார் இருந்தப்போ திருட்டுத்தனமாவும் அவர் இறந்தப் பின்னாடியும் அடிக்கடி அவன்ட்ட பேச முயற்சி பண்ணுவேன்… அவன் பாடுற கச்சேரிக்கு அவனைப் பார்க்கறதுக்காகவே முதல் வரிசையில உட்காருவேன்… ஆனா அவன் பாட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி என்னைப் பார்த்திட்டா… ரகுவை விட்டு என்னைப் போக சொல்லுவான்... இல்லனா பாட மாட்டேன்னு மிரட்டுவான் மது… கீதுட்ட போன் பேசும்போது வாங்கிப் பேசினா… அவகிட்ட உன்னோட பேச மாட்டேன்னு சத்தம் போட அவளும் போனை தர மாட்டா.. என் புள்ளையை நான் தினமும் டீவியில அவன் குரல் மூலமா தான் பார்க்கிறேன் மது… அவன் மாறுவாங்கற நம்பிக்கையில தான்… நான் வாழறேன் மது…..” என்றவரின் குரலில் அப்பட்டமான வேதனை தெரிய, மகனை காணாத ஏக்கம் வெளிப்பட்டது.

மகனைப் பிரிந்த தசரத சக்கரவர்த்தியைப் போல் அப்படிப்பட்ட புத்திர சோகத்தை அவர் அனுபவித்தார்.

“இந்த கல்யாணத்த சாக்கா வைச்சு அவனோட சேர நினைச்சா அதுவும் முடியாது போல…”

“நீங்க அவருக்கு நல்லதுன்னு நினைச்சு செஞ்ச விசயத்தை இவர் அவர் எதுக்கும் லாயக்கில்லை… அவருக்கு யாருமில்லன்னு நீங்க குத்திக்காட்டுறதா நினைச்சிட்டார் அத்த..”

“ஆனா ஒன்னு அத்த… இப்பவும் உங்க மேல இவ்வளவு பாசமா இருக்கவர் ஏன் இப்படி பழசையே நினைச்சுக் கோவப்படுறாரு… இந்த கல்யாண விசயத்துக்குப் போய் இவ்வளவு சீரியஸ் ஆகுறாரு… எனக்காகக் கூட யோசிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறார்... அதான் புரியல....” என மது தெளிவில்லாமல் விழிக்க

“ராஜா அப்படி தான் மது… அவனுக்கு எல்லாமே அதிகம் தான்.. பாசமும் சரி ரோஷமும் சரி…” என்றார் பெருமையாக.

“அதிகபிரசங்கின்னு சொல்லுங்கத்த.. அதான் ரைட்… அவரோடப் பாசத்தை கூடத் தாங்கலாம் போல.. உங்க புள்ளையோட ரோசத்தையும் கோவத்தை… தான்… தாங்க முடில…” என அவள் உடல் சிலிர்க்கச் சொல்ல

“என்ன மது… ரொம்ப கோவமா பேசுற…?” என மதுவின் கோபத்தைக்
கண்டுக் கேட்க

“பின்ன என்ன அத்த… அவ்வளவு தூரம் பொறுமையா சொல்றேன்… அப்பவும்… சும்மா அவர் இஷ்டத்துக்கே ஆடினா…? முடியல அத்த… பயமா இருக்கு… இவர் உங்க மேல உள்ள கோவத்துல கல்யாணத்தை நிறுத்திட்டா என் வீட்டோட நிலைமை நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு…” என்றவளின் கையை வாஞ்சையாகப் பிடித்தவர் ,

“இப்போ இருக்க நிலைமையில… ராஜாட்ட பேசக் கூடிய ஒரே ஆள் நீதான்மா… நான் பேசினா அவன் கேக்க மாட்டான்… கீர்த்தி பேசினா சின்ன பொண்ணுப் பேசாதன்னு சொல்லிடுவான்.. அவளும் அவனை எதிர்த்துப் பேச மாட்டா… ரகுவும் ஒரு அளவுக்கு மேல பேச முடியாது… நீ அவனுக்குப் புரிய வை… அவன் உனக்கு எவ்வளவு முக்கியம்னு… அப்போ அவன் உன்னை விட மாட்டான்… எங்களைப் பத்தி எதுவும் பேசி அவனோட கோவத்தைக் கிளறாதம்மா… அவன் போக்கிலேயே போய் அவனை வழிக்குக் கொண்டு வா” என்று ஆறுதல் சொன்னாலும் அவள் முகம் தெளியவில்லை.

“பயப்படாதடா….” என்று தட்டிக் கொடுத்தார் வைரம்.

“ஏதோ போதாத காலம்… எங்க மேல உள்ள கோவத்தை உன் மேல காட்றான்… நீ மட்டும் அவன் வாழ்க்கையில வந்தா அவனை மாத்திட முடியும்னு தோணுது மதும்மா…”

“சரிங்கத்த.. கவலைப்படாதீங்க… அவரை எப்படி என் வழிக்குக் கொண்டு வரதுன்னு தெரில.. ஆனா கொண்டு வந்துடுவேன்… உங்க புள்ளை அளவுக்கு இல்லனாலும் நானும் பிடிவாதக்காரி தான் அத்த…” என மதுரவசனி கெத்தாகச் சொல்ல

“அப்போ என்னோட ராஜாவுக்கு ஏத்த ராணி நீதான்னு சொல்லு..” என வைரம் புன்னகைப் புரிய, மதுவோ வெட்கத்தில் தலை குனிந்தாள்.
திடீரென, “ஐயோ…….மது………ராஜா…..” எனச் சொல்ல

“என்னாச்சுத்த… என்ன அவருக்கு… அங்க அவன் வரான் பாரு…” என ராஜ் நந்தன் வருவதைக் காட்ட ,

“வரட்டும் அத்த…அதுக்கென்ன…?” என அவள் சாதாரணமாய்ச் சொல்ல

“உன்னை எங்கூடச் சேர்ந்துப் பார்த்தா.. அவன் ஆடித் தீர்த்திடுவான் டா..”

“பாடகர் பாடித் தானே கேட்டேன்.. ஆடியும் பார்க்கிறேன்..” என்றாள் மது அவளுக்குரிய உரிய திமிரோடு. இவனிடம் கெஞ்சினால் எல்லாம் வேலைக்காகாது, வைரம் சொன்னது போல் ராஜாவுக்கு ஏத்த ராணியாக மாற முயன்றாள்.

மகனைக் கண்களால் வருடிய வைரத்திடம் வந்த ராஜ் நந்தன், “நான் நிம்மதியா இருந்தா உங்களுக்குப் பிடிக்காதா..? நான் வேண்டாம்னு தூக்கிப் போட்டீங்க தானே… இப்போ மட்டும் என்னவாம்…?” எனக் கடுப்பாகக் கேட்க

மதுவுக்கோ அவன் தாயின் அன்புக்கு அடம் பிடிக்கும் குழந்தையாகத் தான் தெரிந்தான்.

முரட்டுக் குழந்தையாய்..!!
வைரமோ “ இப்பவும் சொல்றேன் ராஜா.. அம்மாவுக்கு நீதான் வேணும்… நான் சாகும்போது எனக்கு என் மூத்தப் புள்ள தான் கொள்ளி வைக்கனும்…..” எனச் சொல்ல ராஜாவுக்குள் அதிர்வு. உள்ளே இருந்த அன்பு மகன் விழிக்க முயற்சிக்க, கோபக்காரன் அவனை அப்படியே அமுக்கினான்.

“கோவில்ல வைச்சு என்ன பேச்சு…” எனக் கடிந்தவன், “உங்க கிட்ட நான் பேச வரல…” என்றவன் மதுவைப் பார்த்து

“என் கூட வா..” என்று சொல்ல, மதுவும் வைரத்திடம் கண்களால் விடைப்பெற்றபடியே வெளியே வந்தாள்.

வந்தவுடன் அவன் காரில் அவளை ஏறச் சொல்ல அவளோ அமைதியாகவும் அழுத்தமாகவும் நின்றாள். அவனுக்கு இந்த மது புதிது. முதலில் அவன் சட்டையை ஆவேசமாகப் பிடித்தாள். இப்போதோ அழுத்தமாக நிற்கிறாள். அவனோ அன்று ஹாஸ்பிட்டலில் கண்ட மதுவே எப்போதும் இருப்பாள் என நம்பி ஏமாந்தான். ஆனாலும் மது முறைத்தாலும் சரி சிரித்தாலும் சரி … அவனுக்கு அவன் மது வேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்ய நினைத்தான். அவன் மீது அளவற்ற அன்பை பொழியும் மதுவை அவன் இழக்கத் தயாராக இல்லை.

அவள் அருகில் அவளை உரசியபடி வந்து நின்றவன், “இப்போ நீயா ஏறு மது.. இல்லன்னா தூக்கி உட்கார வைப்பேன்… வீணா சீன் க்ரீயேட் பண்ணாத…” என அழுத்திச் சொல்ல அவளும் வந்து காரில் உட்கார, கார் கடற்கரையில் போய் நின்றது.

கார் நின்றதும் ஒரு பெருமூச்சு விட்ட ராஜ் நந்தன், கைகள் இரண்டையும் பின்னுக்குத் தூக்கி சோம்பல் முறித்தான். அதில் அவனது கை மதுவை உரசி விட, அவளோ துள்ளிப் போய் தள்ளி அமர,
“ரொம்பத்தாண்டி..” என்றான் ராஜா.

அவளோ அவனை முறைத்து விட்டு , வெளியே வேடிக்கைப் பார்க்க, ராஜாவோ அவளையே பார்த்தான்.

மது அவனிடம் நீதான் எனக்கு தாலி கட்டனும் என்று சொன்னவுடன் அவன் உள்ளம் கொண்ட உவகைக்கு அளவு கோலே இல்லை. மதுவின் உரிமை கலந்த கோபம் அவளது உள்ளத்தை அவனுக்கு உணர்த்த, அவளைத் தேடி வந்துவிட்டான் ராஜா. அவளது கோபம் அவனுக்குச் சிரிப்பை தான் வரவழைத்தது. அவளிடம் பேசும் முன் மன அமைதிக்காக கோவிலுக்கு வந்தவனின் கண்ணில் மது பட, அதுவும் வைரத்தோடு சேர்ந்திருக்க , அதைக் கண்டவனுக்கு முதலில் கோபம் வந்தாலும் இனியும் எல்லாவற்றுக்கும் மதுவிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருந்தான்.

அவளது முகத்தைத் திருப்பியவன், “நான் தான் உன் மேல கோபப்படனும் மது.. நீ இல்ல… அவங்க உறவு வேண்டாம்னு சொல்லியும் அவங்கட்ட பேசுற… அப்போ என்னை விட அவங்க தான் உனக்கு முக்கியமில்ல…?” என அவள் கண்ணோடு கலந்துக் கேட்க

“என்னை தான் வேண்டாம்னு சொன்னீங்களே….” என அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள

“வேண்டாம்னு சொன்னாலும் நீ தான் விட மாட்டியே… அதான் உன்ட்ட சரண்டர் ஆகலாம்னு வந்துட்டேன்… நீ தான் எனக்கு வேணும் மது…” என்று அவளை அருகில் இழுக்க, அவளோ விரைப்பாய் அமர்ந்திருந்தாள்.

“மது.. இப்போ உனக்கு என்ன கோவம்..? நம்ம கல்யாணம் நீ ஆசைப்பட்ட மாதிரி உன்னோட குடும்பத்தோடு சம்மதத்தோட... உன்னோட அத்தை வந்து நடத்துவாங்க… போதுமா…..” என்றவனை அவள் முகம் மின்னப் பார்த்தாள்.

ராஜாவுக்கு மதுவைப் பிரிய மனமில்லை. அதற்காக தன் நிலையையும் விட முடியவில்லை. ஆனால் தளர்த்திக் கொள்ள முடிவு செய்தான். எதற்கும் அசையாத ஆலமரம் கூட சூறாவளிக்கு வேரோடு சாய்ந்து விடும், ஆனால் நாணலோ வளைந்து கொடுப்பதால் தென்றல் வந்தாலும் சரி சூறாவளியானாலும் சரி அப்படியே நிலைத்து நிற்கும்.

“ஆனால் அதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு..” என அவள் சந்தோசத்தில் செக் போஸ்ட் போட்டவனை முறைத்தாள் மது. ராஜாவும் சளைக்காது அதை தாங்கிக் கொண்டு ,

“முறைச்சாலும் இவ்வளவு தான் என்னால செய்ய முடியும்… மது… அதற்கு மேல் உன்னிஷ்டம்…” என்றவன் மேலும் தொடர்ந்தான்

“மது… உன் விருப்பப்படியே இது அரெஞ்ச் மேரேஜாவே நடக்கட்டும்.. ஆனா எந்த காரணத்துக்காகவும் இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் அவங்க யாரும் என்ட்ட பேசக்கூடாது… எனக்காக எதுவும் செய்ய கூடாது…” என்றவனை அவள் புரியாமல் பார்க்க ,
“நீ வேண்டாம்னு சொன்னாலே நான் தான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்… இதுல நீ வேற… நான் தான் கட்டனும்னு பிடிவாதமா சொல்லிட்ட… அப்புறம் உன்னை எப்படி டி விடுவேன் நான்… உன்னை சமாதானம் செய்யலாம்னு போன் செஞ்சா நீ எடுக்கல.. சரி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவோம்னு கோவிலுக்கு வந்தா மாமியாரும் மருமகளும் கொஞ்சிட்டு இருக்கீங்க… ஆனாலும் என்ட்ட கரெக்டா மாட்டிக்கிட்ட பாத்தியா..? என்ன நான் சொன்னதெல்லாம் அங்க சொல்லியிருப்பியே….” என்றதும் தான் வைரம் அவர் பக்க நியாயத்தை சொன்னது நினைவுக்கு வர

மது உடனே, “ஆமா…. சொன்னேன் தான்… உங்களை எப்படி விட்டாங்கன்னு சண்டை போட்டேன்… ஆனா அத்தை மேல தப்பு இல்லங்க… எல்லாமே சூழ்நிலை தான்.. அவங்க…” எனச் சொல்ல வந்தவளின் வாய் மீது விரல் வைத்தவன்,
 
“போதும் மது… ஆயிரம் தான் விளக்கம் சொன்னாலும் யார் பக்கம் தப்பு இருந்தாலும் எல்லாத்தோடப் பாதிப்பும் எனக்கு மட்டும் தான்… நான் அனுபவிச்ச வலி இல்லன்னு ஆகிடாது… அதனால் அதை பத்தி பேசாத… இனி நமக்குள்ள சண்டை வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்… இதை இப்படியே விடு மது…” என அவன் கண்டிப்புடன் சொல்ல

“சரி” என அவள் சொல்ல அதில் அவள் இதழ்கள் அவன் விரலைத் தீண்ட,

“மது டெம்ப்ட் பண்ணாத… நான் ரொம்ப சாதாரண மனுசன் தான்…” என அவனுக்கே உரிய அந்த உதட்டோரக் குறுஞ்சிரிப்போடு சொல்ல மதுரவசனி அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

“ஓகே மது... உன்னோட பெரியப்பா நம்பர் கொடு… நான் பேசனும்…” என்றதும் அவள் முகம் வெளுத்துப் போக

“அய்யோ… தாயே… கல்யாணம் நிச்சயம் ஆன மாப்பிள்ளை மாமனார்ட்ட பேசுறது தப்பா என்ன…?அப்படியே பேசி நல்லவன்னு செர்டிஃபிகேட் வாங்க வேண்டாமா…?” என்றதும் தான் அவளுக்குப் போன உயிர் திரும்ப வந்தது. அவளும் ரவிச்சந்திரனின் எண்ணை தர, அவரிடம் மிகுந்த மரியாதையுடன் பேச, ரவிச்சந்திரனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடனே மதுரவசனிக்குப் போன் செய்தவர் ,

“மதும்மா… மாப்பிள்ளைப் போன் செஞ்சாருடா… அமெரிக்காவுலேந்து வந்துட்டாராம்… ரொம்பத் தங்கமான பையனா இருக்காரு… உன்ட்ட பேசனுமாம்.. உன் நம்பர் கேட்டாரு… நானும் கொடுத்தேன்... இந்த காலத்துல இதெல்லாம் தராம இருக்க முடியாதுல்ல…ரொம்ப நேரம் பேசாத… வீட்ல பேசுற மாதிரி பட்டுன்னு எதுவும் பேசிடாம அமைதியா கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு… பார்த்து பேசுடா…” என்று சொல்லி விட்டு வைக்க

“அய்யோடா... என்ன நடிப்புடா சாமி... என் நம்பர் வாங்கி ஒரு மாசமாவுது... என் பெரியப்பா கிட்டையும் நம்பர் வாங்குறீங்க… பெர்மிஷன் வேற இதுல.. அவர் என்னடான்னா… மாப்பிள்ளை தங்கம்… நல்லா பேசு… அப்படி இப்படின்னு அட்வைஸ் வேற….” எனப் பொரிந்து தள்ள


அவன் அதே குமிண்சிரிப்போடு அவளைப் பார்த்தான். சத்தம் போட்டு சிரிக்கும் பழக்கம் இல்லாதவன் ராஜ் நந்தன். ஆனால் அந்த இதழ்க்கடையோர குறுஞ்சிரிப்பேக் காண்போரைக் கவர்ந்திழுக்கும். அதில் மதுவும் இழுக்கப்பட்டாள்.

“ஆமா… என்ன திடீர் கரிசனம்… நான் மட்டும் போதும்னு தானே சொன்னீங்க… என் வீட்டு ஆளுங்களுக்கு விசம் வைப்பேன்னு சொன்ன ஆள் தானே….”

“ம்… சொன்னேன் தான்… அது நீ கிடைக்காம இருந்தா தான்… உன்னை மாதிரி ஒரு ஏஞ்சலை எனக்காகக் கொடுத்தக் குடும்பம் உன்னோடது… அதனால் உனக்குப் பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும் மது...” என்றவனின் வார்த்தையில் ஒளிந்திருந்த அர்த்தம் புரிந்தவள் கண்கள் ஒளி வீச அவனை நோக்கி வாயைத் திறக்க

“பட்… எனக்குப் பிடிக்காத விசயம் எப்போவுமே பிடிக்காது…” என அவள் கேட்க வந்தக் கேள்வியை ஊகித்துச் சரியாகப் பதில் சொன்னான் நந்தன். அவனது குடும்பத்தையும் தனக்குப் பிடிக்கும் என்று சொல்லி அவனை லாக் செய்ய நினைக்க, அவனோ உஷாராகத் தப்பித்து விட்டான். அதில் மதுரவசனியின் முகம் டல்லடிக்க,

“பேருக்குத்தான் நாம லவ் பண்றோம்… ஒருத்தர் ஒருத்தர் பத்தி எதுவுமே தெரியாது... உனக்குப் பிடிச்சதெல்லாம் சொல்லு… உங்க வீட்டைப் பத்திச் சொல்லு…” என அவள் இருந்த சீட்டின் மேல் கையைப் போட்டுக் கொண்டு கேட்டான் ராஜ் நந்தன். இவளும் உற்சாகமாய் அவனிடம் அவள் குடும்பம், தோழிகள், பிடித்தவை பிடிக்காதவை எல்லாவற்றையும் சொன்னாள். பின்னர் அவனிடமும் அவள் கேட்க

அவனோ, “மது மட்டும் தான் எனக்குப் பிடிக்கும்…” எனச் சொல்ல, அவளோ

“ப்ச்…உண்மையைச் சொல்லுங்க….”

“நிஜமா இப்போ எனக்கு மதுரவசனியைத் தவிர யாரையுமே பிடிக்கல… நீ மட்டும் தான் என் கண்ணுக்குத் தெரியுற மது….” என்றான் கண்ணில் காதல் பொங்க.

அவளோ தோளைக் குலுக்க, “ஏன் மது… நான் உன்னை மட்டும் தான் பிடிக்கும்னு சொல்றேன்ல... நீ ஏன் அப்படி சொல்ல மாட்ற… உன் ஃபேமிலியை விட என்னைப் பிடிக்கும்னு ஏன் வார்த்தை வரல… அவங்களும் நானும் சமம்னு தான் சொல்ற…”

“ஏன் சொல்லவில்லைன்னு கேட்காதீங்க… சொல்ல வைங்க ராஜா சார்… நீங்க மட்டும் தான் முக்கியம்னு சொல்ல வைங்க… அப்போ கண்டிப்பா சொல்வேன்…” என இவள் தோரணையாய்ச் சொல்ல
“கண்டிப்பா சொல்ல வைப்பேன் மது…” என்றான் தீவிரமாய்.
மதுரவசனிக்குத் தெரியவில்லை அவனது கோபத்தை மட்டும் இல்லை காதலை கூட தன்னால் தாங்க முடியாது என்று. அளவுக்கு மீறினால் அனைத்தும் ஆபத்தே….!!

“ஓகே மது… இப்போ இரண்டு பேரும் ஒரு இடத்துக்குப் போறோம்…” என்றவன் நேராக பிரபல துணிக்கடைக்குச் சென்றான். பெரிய கூலர்ஸை போட்டுக்கொண்டவன், தலையில் ஒரு டர்பனை எடுத்து வைத்துக் கொண்டான்.

அவள் அவனை சிரிப்போடு பார்க்க, “என்ன செய்றது... உன்னைத் தவிர எல்லாரும் என்னை சைட் அடிக்கிறாங்க… ப்ரைவசி இல்ல... அதான்…” என்றபடியேக் காரை விட்டு இறங்கி அவனோடு நடந்தான்.
“எதுக்கு இப்போ சாரி நந்தன்?”
“கல்யாணத்துக்கு மது..” என்றதும் அவள் விழிகள் தெறித்து அவனைப் பார்க்க

“இங்க பாரு மது… எப்படியும் மாப்பிள்ளை வீட்ல தான் புடவை வாங்கனும்… அவங்க ஒன்னும் என் பொண்டாட்டிக்கு வாங்கித் தர வேண்டாம்… என் காசுல தான் வாங்கனும்… இந்தப் புடவையை அவங்கக் கிட்ட கொடுத்துடு சரியா… இப்போ உனக்குப் பிடிச்சதா எடுத்துக்கோ… இப்படி புடவை எடுக்கனும் பாண்டு எடுக்கனும் சாக்கா வைச்சு… என்னை அவங்கக் கிட்ட இழுக்க பார்ப்பாங்க… தாலிக்கும் நான் என்னோட க்ரேடிட் கார்ட் தரேன்… நீ அவங்கட்டக் கொடுத்துடு… இது என்னோட கௌரவம் சம்மந்தப்பட்டது மது… நான் சொன்னதை நீ மீற மாட்டேன்னு நான் நம்புறேன்…” என்றான் அத்தனை அழுத்தமாக. அவளும் அவன் வார்த்தையை மீறாது தலையசைத்தாள்.

“ஆனா….நல்ல நாள் பார்த்து……தானே நந்தன்….”

“நீ எங்கூட இருக்க எல்லா நாளுமே நல்ல நாள் தான் டி..” என்றவன் அவள் கையை அழுத்திப் பிடித்துக் கடையின் முகப்பில் இருந்தப் பிரமாண்டமானப் பிள்ளையாரை வணங்கினான். அவளும் வணங்க,

“பிள்ளையார் கிட்ட வேண்டிக்கிட்டு ஆரம்பிச்சாச்சு.. திருப்தியா…” என்றபடியே பட்டுப்புடவை செக்ஷனுக்குள் நுழைந்தனர்.

அவளுக்கு எடுப்பானப் புடவைகளாக அவர்கள் எடுத்துப் போட, அவளும் கண்ணாடி முன் நின்று மேல் வைத்துப் பார்க்க, அவள் பின் வந்து நின்றான் ராஜா.
அவளை ரசனையோடு பார்த்துக் கொண்டே நின்றவன், “மது…. இப்போவே உன்னைத் தூக்கிட்டுப் போகனும் போல இருக்கு.. செய்யவா…?” எனக் காதோரமாய்க் கேட்க

“போங்க நந்தன்… இதே பேச்சுதான்… புடவை நல்லாயிருக்கா…?” என அவள் சிணுங்க….
“உனக்கு எந்தப் புடவை வைச்சுப் பார்த்தாலும் அழகா இருக்கு…உனக்கு எது பிடிக்குதோ எடுத்துக்கோ மது…” என்றவன் அவளுக்குப் பிடித்தக் குங்குமக் கலர் புடவையை வாங்கினான்.

அவளது கையைப் பிடித்துக் கொண்டே வெளியே வந்தவனுக்கு அவளுக்கு கை வேர்ப்பது தெரிய, காரில் அமர்ந்தவுடனே ,

“என்னாச்சு மது… என் உனக்கு இப்படி கை வேர்க்குது… என்ன காரணம்….?” எனக் கனிவோடு கேட்க

“அ….அது…ஒன்…ஒன்னுமில்ல…” என அவள் திக்க

“நான் கோபப்பட மாட்டேன் மது… எதுவா இருந்தாலும் சொல்லு…” என்றதும் அவளுக்குக் கோபம் வர

“கோபத்துக்கு என்ன காபிரைட்ஸ் வாங்கி வைச்சிருக்கீங்களா.. எங்களுக்கும் கோவமெல்லாம் வரும்….” என அவள் முறுக்கிக் கொள்ள

“வரட்டும்….. வரட்டும்….. தாராளமா வரட்டும்…… இப்போ வேர்க்குதே…. அதுக்குக் காரணம்.. வரனும்…” என்றபடியே தனது கைக்குட்டையால் அவளது கைகளைத் துடைத்து விட்டான்.

“அது…. இப்படி.. வீட்டுக்குத் தெரியாம வரது.. கைக் கோர்த்துட்டு சுத்துறது…. அதெல்லாம்…… ஒரு மாதிரி இருக்கு.. பயமா…. உங்க மேல நம்பிக்கையெல்லாம் இருக்கு..” என்றவளின் தலையில் ஆதுரமாய்க் கை வைத்தவன்

“எதுக்கு இவ்வளவு விளக்கம் மது… ஐ கேன் அண்டார்ஸ்டாண்ட் யூ… எனக்கும் கீது இருக்கா… புரியுதுடா……. இனிமே இப்படி செய்ய மாட்டேன்… கல்யாணம் வரைக்கும் நேர்ல மீட் செய்ய மாட்டேன்… ஆனா தினமும் போன் பேசனும்… எப்படி மொத்தமா உன்னைப் பார்க்காம இருக்க முடியும்….? அட்லீஸ்ட் உன் குரலையாவது கேட்டுக்கிறேன்.. என்ன?”

“ஊரே உங்க குரலைக் கேட்க ஆசைப்படுது.. நீங்க என்னோடதைக் கேட்க ஆசைப்படுறீங்க….?” என அவள் புன்னகைச் செய்ய
“டெல்லிக்கு ராஜானாலும் பாட்டிக்குப் பேரன் தான்… அது போல…. என் மது தான் எனக்கு ஃப்ர்ஸ்ட்…”

“சாப்பிட்டுப் போகச் சொல்ல ஆசைதான்.. மணி ஏழு ஆகிடுச்சு….. லேட்டாகும்னு சொல்லுவ….. சோ போகலாம்..” என்றபடியே காரை எடுத்தான்.

“சாரி நான் உங்களை ஹர்ட் செய்யனும்னு சொல்லல…. ஆனா உங்க கூட இருக்க சந்தோசத்தை முழுசா அனுபவிக்க முடியல………. பயம் வந்து தடுக்குது.. எங்க வீட்ல பசங்கக் கிட்டப் பேசவே மாட்டோம்… எனக்கோ அக்காவுக்கோ…. காலேஜ்ல பாய் ப்ர்ண்ட்ஸே கிடையாது…. எங்க வீட்டு ஆளுங்களை தாண்டி யார் கூடவும் வெளியே போகவும் மாட்டோம்…… அப்படியே பழகிடுச்சு….”

“உன்னை நான் எதாவது சொன்னேனா…… நீ சொல்றது எனக்குப் புரியுது மது.. உன் மரியாதை கெடுற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன் ….” என்றவன் அவளை வீட்டில் இறக்கி விட்டான்.

இருவருக்குமே மனம் நிறைந்திருந்தது.

இப்படியே ஒரு மாதம் ஓடிப் போக மஹாலஷ்மிக்குக் குழந்தைப் பிறக்க ஸ்ரீவாசம் இல்லம் மகிழ்ச்சியில் மூழ்கியது. குழந்தைக்கு மூன்று மாதம் ஆனதும் மதுரவசனியின் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டு அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்நாளும் வந்தது.

மதுரவசனியின் மனம் நிம்மதியடைந்தது. அவர்களது காதல் ஆட்டம் முடிந்து கல்யாணம் நடைபெற போகிற உற்சாகம் அவள் முகத்துக்கு கூடுதல் தேஜஸ் தந்தது.

அவளுக்குத் தெரியவில்லை கல்யாணத்துக்குப் பிறகு அவள் காதலே ஆட்டம் காணப்போகிறது என்று. உண்மையான ஆட்டமே இனிதான்….!!

ஆட்டம் தொடரும்..!!!

 
Ennaka ithu.. alavuku meerinaal aabathu aabathu nae padika vudureenga.. ithellam nallala solliten.. nimathiya padika vudunga kaa.. ??

Kaathal aattam kaanuma.. aadattum aadattum kalyanam mudinchi thaane athuku appuram aval paadu avan paadu.. namakenna.. ??

Amma paiyan paasam roosam sooper.. ???
 
Last edited:
Top