Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 4

Advertisement

காதல் 4:

டைமண்ட் டவர்ஸ் முன்னால் தன் காரை சர்ரென்று நிறுத்திய நந்தன், காரின் கதவைத் திறந்து வெளியே நின்றான். தன் அலைபேசியை எடுத்து ராஜதீபனுக்கு அழைக்க நினைக்க, அவனது அலைப்பேசி தான் ஸ்வப்னாவின் புண்ணியத்தில் ஸ்வாகா ஆகிவிட்டதே..!

அந்த கோபத்தில் காரை உதைக்க, அப்போது பார்த்து ரகு வர, அவனிடம் ,

“நான் அவன் கிட்ட பேசனும்… போன் தா…..” எனக் கேட்க….,

‘எங்கே தன் போனையும் உடைத்து விடுவானோ என்று பயந்தவன் ,

“சார்…. கண்டிப்பா… அவர் இப்படி செஞ்சிருக்க மாட்டாரு… வேண்டாம் விட்டுடலாம்…” எனப் பொறுமையாகச் சொல்ல

நந்தனோ, “விடுறதா… இனிமே எதையும் நான் விடத் தயாரா இல்லடா…. எனக்குன்னு இருக்கறது இந்த மரியாதை தான்.. அதிலேயே கைவைக்க நினைச்சா… நான் மனுசனா இருக்க மாட்டேன்... அவன் செய்யல… ஆனா ஆள் வைச்சு செஞ்சிருக்கான்… நான் போன வாரம் அந்த ஹோட்டலை வாங்கினேன்ல… அதான்… அந்த கடுப்புல செஞ்சிருப்பான்… இப்போ நீ போன் செய்றியா இல்ல…. நானே நேரா போய் அவன் சட்டையைப் பிடிக்கவா..?” எனக் கோபத்தில் கத்தினான்.

நந்தன் சினிமா பாடகன் மட்டுமில்லை… ஒரு நல்ல வியாபாரியும் கூட.. தனது வருமானத்தையெல்லாம் பல வகைகளில் முதலீடு செய்துள்ளான்… இந்த எட்டு வருடத்தில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அவன் ஆயிரம் பாடல்கள் பாடி விட்டான்…. இப்போது ஹிந்தியிலும் பாடுகிறான். எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமையால் அவனால் வருமானத்துக்குத் தக்க நன்றாய் வாழ முடிந்தது. இதைத் தவிர அவன் தனியாக கச்சேரிகள், கான்சர்ட் என்று நடத்துவான். பணம் பெருக்கும் பல வழிகளை அறிந்திருந்தான் அந்த பாடகன்.

நந்தனின் கோபத்தை அறிந்தவன் ரகு…. எப்போதுமே அமைதியாக இருக்கும் நந்தன் கோபம் வந்தால் மட்டும் ருத்ரமூர்த்தியாக மாறி விடுவான்… கோபம் வந்தால் அவனின் சொல், செயல் எதுவும் அவனுக்கு நினைவில் இருக்காது…. இந்த கோபம் கூட இந்த சில ஆண்டுகளில் தான்.. அதற்கு முன் அவன் கோபப்படும்படியான சம்பவங்கள் எதுவும் அவன் வாழ்வில் நடக்கவில்லை.

நந்தனின் கோபம் குறையாததைக் கண்டவன், உடனே ராஜதீபனுக்குப் போன் செய்தான். அந்த பக்கம் தீபன் போனை எடுத்து ,

“சொல்லு ரகு..” என

“சார்…. உங்களை நந்தன் சார் பார்க்கனுமாம்… இப்போவே உடனே…” எனப் படபடக்க
“என்னாச்சுடா…? எதாவது ப்ராப்ளமா….? சூடா இருக்கானா அவன்..?”

“சூடாவா…. எரிமலை எப்ப வெடிக்கும்னு தெரியல…. ஆனா எப்போவேணும்னா வெடிக்கும்.. அந்த நிலைமை போதுமா….” என மெதுவாகச் சொல்ல,

“என்னாச்சு… அவன் கோவப்படுற அளவுக்கு…..?”

“ஏய்… அவனால என்னைப் பார்க்க முடியுமா முடியாதாடா….?” என நந்தன் கோபமாய் சீற

“சார்.. ஒரு நிமிசம்.. இதோ..” என்ற ரகு தீபனிடம் ,

“என்ன சார் கேட்டுச்சா..?” என

“ம்ம்.. சரி.. அவனை விஐபி லிஃப்ட்ல வரச் சொல்லு… தர்ட் ஃப்ளோர்க்கு வாங்க... அங்க எங்க பெர்சனல் ரூம் இருக்கு…” என்று சொல்ல, அதை ரகு நந்தனிடம் சொல்ல இருவரும் மூன்றாம் மாடி சென்றனர்.

அந்த அறையில் அவர்களுக்கு முன் தீபன் காத்திருந்தான்.
உள்ளே நுழைந்த நந்தன் ராஜதீபனைப் பார்த்து, “உனக்கு வெட்கமா இல்ல… என்னோட அடையாளத்தைக் கேவலம் ஒரு பொண்ணை வைச்சு களங்கம் செய்யப் பார்க்கிற…?” எனக் கேட்க

“நீ என்ன சொல்ற…. புரியல தெளிவா சொல்லு…” என

“அந்த வெங்காயத்தை நீயே சொல்லுடா ரகு…. அதைத் திரும்ப என்னால சொல்ல முடியாது…” என்று நந்தன் எரிச்சலாக மொழிய, ரகுவும் பத்திரிக்கைச் செய்திப் பற்றிச் சொல்ல

“இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… நீ பேமஸான ஆளு… அதான் உன்னைப் பத்திக் கிசுகிசு எழுதியிருக்காங்க… இதெல்லாம் சகஜம் தான.? இதுல நான் எங்கிருந்து வந்தேன்… ஒன்னு அந்த நடிகையைப் போய் கேளு, இல்லை அவளைப் பேட்டி எடுத்த ரீப்போர்ட்டரைக் கேளு… அந்த பத்திரிக்கையோட எடிட்டரைக் கேளு… இப்படி சம்பந்தமே இல்லாம என்னைக் கேட்டா… எனக்கு எப்படி தெரியும்……..?” என நிதானமாய் தீபன் கேட்க,

இதே சாதாரண சூழ் நிலையாய் இருந்திருந்தால் கூட நந்தன் யோசித்திருப்பான். ஆனால் அவனோ கோபத்தின் கோரப்பிடியில் அல்லவா இருந்தான்..? காலையிலேயே இந்த செய்தியைப் பார்த்த அதிர்ச்சி, அந்த அதிர்ச்சி தந்த ஆத்திரம், சாப்பிடாமல் வேறு இருந்ததால் அவன் மிகவும் கொதி நிலையில் இருந்தான். நிதானம் சிறிதுமில்லாமல் சீறினான் அவன்… இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் அவன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்… சிங்கத்தின் கர்ஜனைப் போல் இருந்தது அவனது குரல்….

“சம்பந்தம் இருக்குடா..” என்றான் அழுத்தமாக,

“அந்த பேட்டியை எடுத்தவ… உன் ஆபிஸ்ல வேலைப் பார்க்கிறா.. அப்போ நீ சொல்லித்தானே… அவ செஞ்சிருப்பா… இத்தனை வருசம் நடக்காதது இப்போ நடந்திருக்குன்னா காரணம் நீ இல்லாம யாருடா..?”
ரகு அந்த பத்திரிக்கையை தீபனிடம் நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவன் ,
“இந்த பேட்டிக்குக் கீழ ராணி அப்படின்னு தானே போட்டிருக்கு.. என் ஆபிஸ்ல அப்படி யாருமே இல்ல… உன்னை அப்படி அவமானப்படுத்தனும்னு எண்ணம் எங்களுக்கு இருந்திருந்தா இத்தனை வருசம் சும்மாவா இருந்திருப்போம்.. சும்மா வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது மிஸ்டர்.நந்தன்.” என்று கொஞ்சம் கோபமாய் சொல்ல

“அந்த ராணி யாரு தெரியுமா… உன் ஆபிஸ் ஸ்டாஃப் மதுரவசனி….” என்று சொல்ல ராஜதீபனின் முகம் அதிர்வைக் காட்டியது. அந்த அதிர்ச்சியின் காரணம் வேறு என்று அறியாத நந்தன் ,

“என்ன சார் ஷாக்… உண்மையை ஒளிச்சு வைக்க முடியாதுடா” என நக்கலாய்ப் பேச

“இப்பவும் சொல்றேன்… நான் அப்படி செய்யல…. நீ சண்டைப் போட வேண்டியது அந்த ஸ்வப்னாவை இல்லை… அந்த எடிட்டரத்தான்…. கோபத்தைக் கொஞ்சம் குறைச்சிட்டு யோசி ப்ளீஸ்..”

“அந்த ஸ்வப்னாவை நான் திட்டிட்டேன்.. அவ லூசு.. ஆயிரம் சொல்லுவா.. அதுக்காக என்னைப் பத்தி இப்படி தப்பா எழுதலாமா..?” என மீண்டும் அவன் ஆரம்பத்துக்கே வந்து நிற்க

“இப்போ என்னை என்ன செய்ய சொல்ற..?”

“அந்த மதுரவசனியை வர சொல்லு…..”

“நான் மதுக்கிட்ட இப்படி உன்னைப் பத்திப் போட சொல்லலடா.. நம்பு…….”

“நான் என்னையே நம்ப மாட்டேன் தீபன்… உலகத்தில எதுவுமே நம்பிக்கையான விசயம் கிடையாது… எல்லாமே ஒரு நாள் பொய்யாகிடும்… அதை வலிக்க வலிக்க அனுபவிச்சவன் நான் டா…. அதனால் நீ என்னை ஏமாத்த நினைக்காம அவளை வரச் சொல்லு..” என்று நந்தன் பிடிவாதமாய் நிற்க

“சரி.. இரு..” என்றவன் மதுவை போன் செய்து மேலே வரச் சொன்னான். அவளும் போக ,

“நந்தன் சார் உங்ககிட்ட பேசனுமாம் மது…” என்று தீபன் சொல்ல

“அவனை வெளியே போக சொல்லு….. ரகு.. நான் இவ கிட்டத் தனியா பேசனும்..” என்றதும் ராஜதீபனும் ரகுவிடம் கண் காட்டி விட்டு வெளியே செல்ல ,

“ஏய்!! நீதான இந்தப் பேட்டி எடுத்தது…?” என்று எடுத்த எடுப்பிலியே பத்திரிக்கையை அவள் முன்னால் இருந்த டேபிள் மீது விட்டெறிந்தான்.

தீபன் எதுக்குத் தன்னை அழைத்தான் என்று தெரியாமல் அவள் வந்து நிற்க , பாடகன் நந்தனைப் பார்த்த இனிய அதிர்ச்சி, ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் எப்போதும் கேட்கும் அவனது குரலின் இனிமைக்கும், இப்போது இருக்கும் கோபக்குரலுக்கும் முகத்தின் இறுக்கத்துக்கும் சம்மந்தமில்லாமல் இருக்க மதுரவசனி நன்றாக குழம்பினாள்.
 
ஒரு பிரபலத்தைப் பார்த்த சந்தோசம் நீடிக்கச் செய்யாமல் ,

“உனக்குக் காது கேட்குதா?… ஆன்சர் மீ…” என மீண்டும் நந்தன் கத்த ,

மதுரவசனிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளது விருப்பதிற்காகக் கொஞ்ச காலமாக பத்திரிக்கை ஒன்றில் ஃப்ரீலேன்சராகச் சேர்ந்தாள். ஒரு வாரம் முன்பு தான் நடிகை ஸ்வப்னாவைப் பேட்டி எடுத்தாள். ஆனால் அதற்கு அவள் கொடுத்திருந்த தலைப்பு வேறு… இப்படி நந்தனைப் பற்றி எல்லாம் அவள் அந்த பேட்டியில் எழுதவில்லை… அந்த பத்திரிக்கை இதழைப் பார்த்தவளது முகம் யோசனையில் சுருங்கியது. நந்தனின் கோபத்திற்கான காரணமும் புரிந்தது. அவனைப் பற்றிய தவறானச் செய்தியால் கடுப்பாகியுள்ளான் என்று கண்டுகொண்டாள் மதுரவசனி.

“சார்.. நான் தான் அவங்களைப் பேட்டி எடுத்தேன்… ஆனா உங்களைப் பத்தி நான் எதுவும் எழுதல….” என்று பொறுமையாகச் சொல்ல,

“யூ…டாமிட்… பொய் சொல்ற நீ…” என்றபடியே அந்த டேபிளில் இருந்த ஃப்ளவர் வாஸைத் தூக்கி எறிந்தான் நந்தன்.

அதைக் கண்டு வெளியே நின்றிருந்த ராஜதீபனும் உள்ளே இருந்த ரகுவும் பதட்டப்பட , மதுரவசனிக்கு வியர்க்கத் தொடங்கி விட்டது.

“நி..நிஜமா…இல்ல…சார்…….நான் எடிட்டருக்கு இப்படி ரிப்போர்ட் செய்யல….. உங்களைப் பத்தி ஒரு வார்த்தை கூட நான் எழுதல….” என்று பயத்திலும் நடுக்கத்திலும் அவள் திக்கித்திணறி சொல்ல, முழு நிதானத்தையும் இழந்திருந்தான் நந்தன் ,

“உன்னை…” என்றபடி நந்தனின் கைக் கோபத்தோடு மதுரவசனியின் கழுத்தைப் பிடிக்க, தீபன், ரகு இருவரும் அருகே ஓடி வந்து,



“விடு நந்தன்… அவளை.. என்ன செய்ற நீ…. இப்படி ரியாக்ட் செய்யாதடா… சின்ன விசயம் இது….” என தீபன் சொல்ல



“சார்….ப்ளீஸ்….பாவம் அவங்களை விடுங்க….” என ரகு சொல்ல அந்த கோபக்காரன் காதில் கேட்டால் தானே…!



“எதுடா சின்ன விசயம்…. எப்படி ரியாக்ட் செய்ய சொல்ற என்ன…… இப்படியே எழுதுங்கடான்னு சொல்ல சொல்றியா…” என்று தீபனைப் பார்த்துச் சொன்னவன் மதுவிடம்



“…ஒரு மனுசன் முன்னேற எவ்வளவு கஷ்டப்படுறான்… தெரியுமா உனக்கு..? பேனா இருக்குன்னு என்ன கருமத்தை வேணும்னாலும் எழுதுவீங்களா நீங்க… நல்லவனா பத்தித் தப்பா எழுதுறதும்… கெட்டவனைப் புகழ்ந்து எழுதறதும் தானா உங்க தர்மம்….? .....ஒரு நல்ல அடையாளத்தை நமக்குன்னு இந்த சமூகத்தில் ஏற்படுத்திக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல.. பட்.. யூ டாமிட்… கண்டபடி என் மானத்தை வாங்கியிருக்கிங்க… அந்த ஸ்வப்னா என்ன சொன்னாலும் கிறுக்கித் தள்ளுவியா நீ..? அது எப்படி உனக்கே தெரியாமா அந்த எடிட்டர் மாத்தினானா சொல்லு…… இவன் சொல்லித்தானே நீ என்னைப் பத்தித் தப்பா எழுதின…. உண்மையை சொல்லப்போறியா இல்லையா..?” என ராஜதீபனைக் காட்டி அவளிடம் கத்த



மதுவுக்குத் தலைச் சுற்றியது… அவளால் பேசவே முடியவில்லை… இப்படி யாரும் அவளை வாழ்க்கையில் இது நாள் வரை நடத்தியதே இல்லை. அவள் வீட்டினர் யாரும் இப்படி நடக்க மாட்டார்கள்… இத்தனை நாள் அவர்கள் அவளுக்குத் தந்த பாதுகாப்பு உணர்வைக் கட்டுப்பாடு என்றெண்ணியவள் இப்பொழுது இந்த நொடி உணர்ந்தாள் அது கட்டுப்பாடோ அடக்குமுறையோ அல்ல… தங்கள் வீட்டுப் பெண்ணிற்கு அவர்கள் தந்த பாதுகாப்பு என ,



இதே அவள் வீட்டில் இப்படி ஒருவன் அவளிடம் நடக்க முடியுமா என்ன…? இதோ இந்த ராஜதீபன் கூட வேடிக்கைப் பார்க்கிறானே ஒழிய நந்தனிடம் சண்டை போடுகிறானா..? எனத் தோன்றியது. இந்த ராஜதீபனின் குடும்பத்தில் ஒருத்தருக்கு இப்படி நடந்தால் சும்மா இருப்பானா அவன்.. என நினைத்தவள் ராஜதீபனை முறைத்தாள்.



“ச….சா..” என அவள் பேச்சுக்கும் மூச்சுக்கும் திக்க, அவளிடமிருந்து பிடியை உருவினான் நந்தன்.



“ஹக்….ஹக்…” என்று இருமியவளிடம் ரகு தண்ணீரை நீட்ட அதை வாங்கிப் பருகியவள்,



“சார்….. இவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்னே எனக்குத் தெரியாது…. இவருக்கு நான் இப்படி ப்ரஸ்ல இருக்கறதே தெரியாது…. அப்படி இருக்கும்போது இவர் ஏன் உங்களைப் பத்தித் தப்பா எழுத சொல்லனும்….. நான் அந்த நடிகையை இண்டர்வியூ எடுக்கப் போனேன்… நான் மட்டும் போகல சார்… கூட கேமிரா மேனும் வந்தாரு... மொத்தமா அவர் தான் ரெகார்ட் செஞ்சாரு… உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாருன்னு நான் கேட்டேன்.. அதுக்கு அவங்க உங்க நேம் சொன்னாங்க…”



“நான் நீங்க சிங்கர்…. ஹீரோ பேர் சொல்லுங்கன்னு கேட்டதுக்கு அவங்க…. நீங்க தான் அவங்க ஹீரோன்னு சொன்னாங்க… ஆனா நான் அதை எடிட்டர் கிட்டக் கொடுக்கல… ஏன்னா நீங்களும் செலப்ரட்டி… எனக்கு இப்படி கிசுகிசுல்லாம் எழுதவும் பிடிக்காது… அதுவும் உண்மையா இல்லன்னு தெரியாம எழுத மனசு வரல… சொல்லப்போனா எனக்கு சினிமா பிரபலங்களை இண்டர்வியூ செய்யலாம் பிடிக்காது… ஆனா நான் புதுசங்கறதால அவங்க சொல்றதைதான் நான் செஞ்சாகனும்……”



“உங்களைப் பத்தின நியூஸ் எப்படி வந்துச்சுன்னு எனக்கு நிஜமா தெரியாது சார்.. நம்புங்க….” எனக் கலங்கிய விழியோடும் குரலோடும் சொல்ல,



“நெவர்… என்னையே நான் நம்ப மாட்டேன்... உன்னை நம்புவேனா…. நம்புற நிஜமெல்லாம் ஒரு நாள் பொய்யாகிடும்… உனக்குத் தெரியாதுன்னு. நீ சொன்னா நான் நம்ப மாட்டேன்.. எனக்கு இப்போ உண்மைத் தெரிஞ்சாகனும்….” எனப் பிடிவாதமாய் நிற்க..



“ஒன் மினிட்…. சார்” என்றவளுக்கு அவளின் நிமிர்வு மீண்டும் வந்திருந்தது. பதட்டப்படாமல் நந்தனைப் போல் நிதானம் தவறாமல் யோசித்தாள்.. எப்படி தன்னை நிருபிப்பது என ,



மதுரவல்லியின் பேத்தியாற்றே..!!
 
தனது எடிட்டருக்குப் போன் செய்து ஸ்பீக்கரில் போட்டவள் ,



“சார்.. நான் மது பேசுறேன்…” என்றாள். அந்தப் பக்கம் ,



“எந்த மது…..? எடிட்டிங் மதுவா இல்ல ஃப்ரீலேன்சர் மதுவா…?”



“ஃப்ரீலேன்சர் மது”



“ஓஹ்… நீயா சொல்லுமா.. பார்த்தியா… உன்னோடப் பேட்டி இன்னிக்கு வந்திருக்கு… ஸ்வப்னா கூட நினைச்ச மாறியே வந்திருக்குன்னு போன் செஞ்சு பாராட்டினாங்க..” என்று மகிழ்வோடு சொல்ல



“சார்.. ப்ளீஸ்… உண்மையைச் சொல்லுங்க... நானும் அதைப் படிச்சேன்… அதுல தேவையில்லாம நந்தன் சார் பேரை எதுக்குப் போட்டீங்க…?”



“என்னமா நீ…? அதைப் போட்டவுடனே தான் பிச்சிக்கிது சேல்…. நீ கொடுக்கல தான்.. ஆனா முழு ரெக்கார்டிங்கையும் நான் பார்த்தேன்.. நீ ஏன் இப்படி ஒரு மெயின் மேட்டர விட்ட… அதுதான் அங்க சூப்பரான விசயமே… சினிமா நியூஸ் படிக்கிறதே கிசுகிசுக்குத்தான்… அது தெரியாம நீ என்னடான்னா என்னமோ அப்துல் கலாமைப் பேட்டி எடுக்கிற மாதிரி ரேஞ்சுக்கு மசாலாவே இல்லாம எடுத்துக் கொடுத்திருக்க. நீ இன்னும் வளரனும்மா…” என்று அவர் பேச



“அப்படிப்பட்ட வளர்ச்சி எனக்கு வேண்டாம்… சார்” என்றவள் போனை வைத்து விட ,



அவள் நந்தனிடம் பார்வையை செலுத்த, அவனோ தீபன் மீது தவறு இல்லை என்றதுமே வெளியேறி விட்டான். ரகுவும் மதுவிடம் ஒரு சாரி சொல்லி விட்டு நந்தனின் வால்பிடித்துச் சென்றான்.



தீபனோ மதுவிடம் பேச வர, அவள் இருந்த நிலைமையில் , வேகமாக தனது இருக்கைக்குச் சென்று மேஜையில் தலைக் கவிழ்ந்தாள்.



காரில் அமர்ந்திருந்த நந்தனிடம் ரகு வந்து ,



“நீங்க செய்றது எனக்கு சுத்தமா பிடிக்கலண்ணா…. ஏன் இப்படி செஞ்சிங்க… இது ஒரு சாதாரணமான விசயம்னு ஏன் புரிய மாட்டேங்குது….. இப்படி கோவப்பட்டு.. தீபன் சார் கிட்டக் கோவப்பட்டிங்க…. ஓகே… ஆனா அந்த பொண்ணு பாவம் சார்… சம்மந்தமே இல்லாம…. அவ கிட்டப் போய்… எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு…” என்று குறைபட



“ஏன்… இவனோட தாத்தா இதுக்கு முன்னாடி இப்படி செஞ்சதில்லையா….. உனக்குத் தெரியாதுடா… எங்க நான் அவர் பேரனை விடப் பெரியாள் ஆகிடுவேனோன்னு அவர் எனக்கு நிறையா கஷ்டம் கொடுத்திருக்கார்…. அதனால் தான் அந்த பொண்ணு இங்க வேலை செய்றான்னதும், எனக்கு இவனும் இவங்க தாத்தா மாதிரி செஞ்சிட்டான்னு கோவம்….”



“இப்போ புரியுதுல… அப்படி அவ செய்யலன்னு.. அப்போ அந்த பொண்ணுக்கிட்ட சாரி கேட்டிருக்கலாமில்ல..”



“அதெல்லாம் முடியாதுடா… ரகு… இந்த விளக்கம் கூட நீ கேட்கிறதால தான் நான் கொடுக்கிறேன்… இப்போ எனக்குப் போகனும்… காரை டிரைவ் பண்றியா..?” எனக் கேட்க



“இறங்கிப் போக மாட்டிங்களே நீங்க…?” என அவன் மதுவிடம்

மன்னிப்புக் கேட்காததைச் சுட்டிக் காட்டிக் கேட்க,



“இறந்து போகும்போது தான் நான் இறங்கிப் போவேன் டா… இனி வாழ்க்கையில எந்த சூழ் நிலையிலும் நான் இறங்கிப் போக மாட்டேன்… எதுக்காகவும் யாருக்காகவும்…..” என்று அழுத்தமாக உரைத்தான்.



நந்தனின் குணம் அது. அவன் எதுக்காகவும் இறங்கிப்போக மாட்டான்… அவ்வளவு ஈகோ பிடித்தவன்… இப்போது கூட, தீபன் மீதும், மது மீதும் தவறில்லை என்ற உண்மை அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆனாலும் கூட அவர்கள் இருவரிடமும் சண்டைப் போட முடிந்தவனால் தன் நிலையிலிருந்து இறங்கி மன்னிப்புக் கேட்க அவன் அகம் அனுமதிக்கவில்லை.



அவன் குணம் அறிந்தவனும் தெரிந்தவனுமான ரகு, அவனது காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு நந்தனின் காரை ஸ்டார்ட் செய்தான்.



“நேரா அந்த எடிட்டரைப் பார்க்க போடா…”



“உங்களுக்கு புரியவே புரியாதா…. சார்…. இவ்வளவு நேரம் தேவையில்லாம ரெண்டு பேரைக் கோபப்பட்டு காய்ச்சி எடுத்திட்டீங்க.. ப்ரஸ்னா அப்படித்தான் இருக்கும்.. இப்போ மறுபடியும் ஒரு ரகளை செய்யப் போறீங்களா….. என்ன..? உண்மையை சொன்னதால் பாடகர் கலாட்டான்னு செய்தி… வரும்.. அப்படி வரனும்னு ஆசையா உங்களுக்கு…? ….மத்தவங்க வேணும்னா உங்களுக்குக் கெடுதல் நினைப்பாங்க.. நான் நினைப்பேனா… அப்படியும் போகனும்னா சொல்லுங்க.. நான் போறேன்..” என்று ரகு இப்போது கோபமாகப் பேச,



நந்தனால் தீபனை எடுத்தெறிந்து பேசியது போல் ரகுவைப் பேச முடியவில்லை…. அது மட்டுமில்லாமல் அவனது மொத்தக் கோபத்தையும் தான் பார்ட் பார்ட்டாகப் பிரித்து மதுவிடமும் தீபனிடமும் காட்டி விட்டானே... அதனால் அவனது ஆத்திரம் தணிந்திருந்தது. அதனால் அமைதியாக இருந்தான்.



அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு ரகுவும் வீடு நோக்கிக் காரைச் செலுத்தினான்.



நந்தன் தனது பெட் ரூமிற்குள் சென்று மெத்தையில் விழுந்தான். அவனுக்கே அவன் மீது கோபமாக வந்தது.. யார் எவர் என்று தெரியாத பெண்ணிடம் நடந்த கொண்ட முறையில் அவன் வெட்கினான்… அவனின் வளர்ப்பு அப்படி கிடையாதே…. இருந்தும் கூட கோபம் வந்தால் அவனின் உடலின் எந்த செல்லும் அவனின் சொல் கேட்பதில்லையே…!!



இப்படி அதிகபடியான கோபத்தால் தான் அவன் வாழ்க்கையின் மிகப்பெரிய அடியை ஒரு நாள் சந்தித்தான்… அதிலிருந்து இன்னும் அவனால் மீள முடியவில்லை…



ஒரே ஒரு மன்னிப்பை மதுரவசனியிடம் கேட்டாலே அவன் மனது அமைதியாகியிருக்கும்… ஆனால் மன்னிப்புக் கேட்கவும் பெரிய மனது வேண்டுமல்லவா…? அவனுக்குத் தான் அதெல்லாம் தலையிறக்கம் உண்டாக்கும் செயலாற்றே…!!



மனம் உணர்ந்து கேட்கும் மன்னிப்பு என்பது காயப்பட்டவரையும் காயப்படுத்தியவரையுமே அமைதிப் படுத்தி விடும்… அந்த காயம் ஆறவிடினும் கூட வலிக்காமல் இருக்கும்….. ஆனால் அதுக்கெல்லாம் தயாராக இல்லை நந்தன். “I can have peace of mind only when I forgive rather than judge.” என்பதை அவன் உணரத் தயாரில்லை... அமைதி வேண்டி கண் மூடிப் படுத்திருந்தவனின் கவனத்தைக் கலைத்தது கீர்த்தியின் அலைப்பேசி அழைப்பு.



அவள் அழைப்பை எடுத்தவன் ,



“சொல்லுடா…” என



“இன்னிக்கு என்ன நாள் தெரியுமா…?” என்று அந்த பக்கம் கொஞ்சம் வருத்தமாய் ஒலித்தது கீர்த்தியின் குரல்.



“சாரிடா…நிஜமா ஞாபகமில்லை…..என்ன நாள்டா…ஒஹ்….உன் பிறந்த நாளா…?” என்று நினைவுக் கூர்ந்துக் கேட்க



“ம்ம்” என்று முனங்கினாள் அவள்.



“ரியலி சாரிடா… நான் வேற டென்சன்ல இருந்தேன்னா. காலையிலேயே மூட் அவுட்… அதான் மறந்துட்டேன்… ஹாப்பி பர்த்டே டூ யூம்மா…..” என அவன் மெய்யாக வருந்தி, வாழ்த்துச் சொல்ல



“ம்ம்…தாங்க்ஸ்…என்னாச்சு ……?” என கவலையாக கேட்க



அவன் விசயத்தை சொல்ல “யாரு அந்த லூசு மாதிரியே நடிப்பாளே அவளா….. அவளுக்கு என்ன திமிர்… அவளுக்கு நீங்க வேணுமா…?” எனக் கத்த



“அவ நடிப்பை நான் என்னிக்குப் பார்த்திருக்கேன்… அவ ஏற்கனவே எங்கிட்ட இது மாறி உளறினாடா.. நான் திட்டின கடுப்பில இப்படி செஞ்சிருக்கா…….”



“ஆனா அதுக்காக நீங்கப் போய் தீபன் கிட்ட சண்டைப் போடலாமா… அவன் இப்படில்லாம் செய்வானா…?” எனப் பாவமாய்க் கேட்க



“என்னை என்ன செய்ய சொல்ற பாப்பு.... உங்க தாத்தா செஞ்சதெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு… இப்படி ஒரு நியுஸ் பார்த்ததுமே நான் நானாவே இல்லை…. வாழ்கையில நாம எதிர்ப்பார்க்காத சூழ் நிலை வரும்போது அதைக் கையாள்றது ரொம்ப கஷ்டம்டா…. டுடே இட் வாஸ் எ டே லைக் தட்”



“ம்ம்ம்…. அதான் தெரியுமே…. கோபம் வந்தா நீ நீயாவே இருக்க மாட்டியே.…. ஹீரோவா இருக்க நீ வில்லனா மாறிடுவியே…” என விளம்பரத்தில் வருவது போல் கீர்த்திப் பேச வெகு நாட்களுக்குப் பிறகு மனம் விட்டுச் சிரித்தான் நந்தன்.



ரகுவும் கீர்த்தியும் தான் இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஆறுதல். அதனால் அவர்களிடம் அதிகமாக கோபம் கொள்ள மாட்டான்.



அவளது பேச்சை ரசித்தவன், “தேங்க்ஸ்டா பாப்பு……. உங்கிட்ட பேசினதுமே கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன்…” என்று மனமுவந்து சொல்ல,



“சூப்பர்… அப்போ பர்த்டே பேபிக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்…”



“என்ன பாட்டு வேணும்…?”



“உங்க பாட்டு வேண்டாம்…. அதைதான் தினமும் கேட்கிறேனே….. வேற யாராவது பாட்டு பாடுங்க… ஆனா எனக்குப் பிடிக்கனும்.. பர்த்டேக்கு நானே போன் செஞ்சு விஷ் வாங்கியிருக்கேன்…… அதனால என் மனசைக் குளிரவைங்க …” என



“தேவதை வம்சம் நீயோ

தேனிலா அம்சம் நீயோ

பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ…

பூக்களின் வாசம் நீயோ

பூங்குயில் பாஷை நீயோ“



எனப் பாட ,



“போதும்.. போதும்.. ஓவர் ஐசா இருக்கு… இது ஃபீமேல் வாய்ஸ் சாங் வேற..”



“என்னவா இருந்தா என்ன..? என் பாப்புக்கு ஏத்த பாட்டு இதுதான்..”



“தேங்க்ஸ் பாடினதுக்கு……. நீங்க எனக்காகப் பாடினது தெரிஞ்சா என் ப்ரண்ட்ஸ்லாம் உயிரையே விட்டுருவாங்க….”



“ஏய்… உயிரை விடுற அளவுக்கு மோசமாவா பாடுறேன்..?” என்றவனது பேச்சில் தெளிவு மீண்டிருந்தது.



“இல்ல இல்ல… நீங்க உருகி உருகி ரொமான்ஸ் சாங் பாடுறதைக் கேட்டு…… என் ப்ரண்ட்ஸ்லாம் ப்ளாட் உங்க குரல்ல… உங்களுக்கு வைஃபா வரவங்கக் கொடுத்து வைச்சவங்கன்னு எல்லாரும் பேசிப்பாங்க….”



“எல்லாரும் சொல்றது இருக்கட்டும்.. நீ என்ன சொல்ற பாப்பு…?”



“நான் செஞ்ச பாவம்… உங்க ரொமான்ஸ் சாங்கெல்லாம் கேட்க முடியாதே……..அதெல்லாம் பாட எனக்கு வேற ஆளு வேணுமே…..” எனச் சோகமாகச் சொல்ல



“ஹா ஹா…. பாப்பு.. அப்போ உனக்காகப் பாட்டு பாட ஆள் பார்க்கவா….?”



“நோ நோ…. இப்போ வேண்டாம்.. முதல்ல நீங்க உருகி உருகிப் பாட ஒரு ஹீரோயினைத் தேடுங்க.. அப்புறம் எனக்குப் பார்க்கலாம்…”



“நான் தேடிப் போறதா….? யாரா இருந்தாலும் இனி என்னைத் தேடி வரனும்…. நானா யாரையும் தேட மாட்டேன்…” என்று திமிராகப் பேச ,



‘இவன் எப்போது மாறுவான்…’ என்று இருந்தது கீர்த்திக்கு. ஆனாலும் அவனைக் கோபம் கொள்ள வைக்க விருப்பமில்லாமல் ,



“ஓகே …. இப்போ…… என் புரோஃபசர் வந்துட்டார்… நான் அப்புறமா பேசுறேன்..பை..” என்று போனை வைத்தாள்.



நந்தனுக்கும் இறுக்கமெல்லாம் தளர்ந்து போனது.. சிறு புன்னகை அவன் முகத்தில் தோன்ற அதுவே அவனை வசீகரமாய்க் காட்டியது. அப்படியே அவன் உறங்கிப் போனான்.



*****************************************************



தனது இருக்கையில் அமர்ந்த மதுரவசனியைப் பார்த்த அவளது தோழி ஹம்சா சிறிது நேரம் கழித்து அவளுக்கு என்னவாயிற்று என்று கேட்க , அவளைத் தொட மதுரவசனியோ மேஜையில் கவிழ்ந்த வாக்கிலேயே மயக்கம் போட்டிருந்தாள்.



அவள் பதறிப்போய் தண்ணீர் தெளிக்க, அவள் விழிக்கவே இல்லை…. அலுவலகத்தில் அனைவரும் கூடி விட, ராஜதீபன் விசயம் அறிந்து விரைவாக அவளை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றான்.



ஆட்டம் தொடரும்..!!!
 
Top