Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 12

rishiram

Active member
Member
அத்தியாயம் 12

தன்னுடன் நடிக்க முடியாது என்று உறுதியான குரலில் சொன்ன ஸ்ரீலதாவை ஒரு முறை முறைத்து விட்டு டக் என்று சுற்றிலும் பார்த்தான் கணேஷ். ஹாலில் மெலிதாக மேற்கத்திய சங்கீதம் ஒலிக்க அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுற்றிலும் நிருபர் யாரும் இல்லாததை தெரிந்து ஸ்ரீலதாவிடம் சொன்னான் கணேஷ்.
'என்னடி சொன்ன? பழசெல்லாம் மறந்துட்டியா?'
ஸ்ரீலதா பட் என்று சொன்னாள்.
'மறக்கலடா. மறக்காததால தான் இந்த பழிவாங்கல்டா.'
'என்ன டா சொல்லி கூப்டறியா தே...' என்று டைப் பண்ண முடியாத வார்த்தையைச் சொல்ல பக்கத்தில் இருந்த விஜி ஓங்கி அவன் கன்னத்தில் ஒண்ணு விட, தூரத்தில் இருந்த போட்டோகிராபர்கள் மற்றும் நிருபர்கள் மூக்கில் வியர்த்து ஓடி வந்தார்கள்.
சூழ்நிலையை மறந்து கோபத்தில் கத்தினான் கணேஷ்.
'மேல கைய வைக்கறியா நாயே! ஒனக்கு படமே இல்லாம பண்ணிடுவேண்டா.'
'நீ ஸ்ரீலதாவ தே...னு சொல்லுவே.. நான் பாத்துட்டு இருக்கணுமா?'
டக் என்று ஸ்ரீலதா முன்னால் வந்து கணேஷின் காலில் விழுந்தாள்.
நடிகை அல்லவா நடிக்க சொல்லியா தர வேண்டும்?
'அவருக்காக நான் மன்னிப்பு கேட்கறேன் சார். நீங்க ஏதோ குடிபோதையில அந்த வார்த்தய சொல்லிட்டீங்க. அவருக்கு கோபம் வந்துருச்சு. என்ன தான் இருந்தாலும் என் குருநாதரான ஒங்கள அவர் கை வச்சிருக்கக் கூடாது. எனக்காக மன்னிச்சிருங்க. இத பெருசு பண்ணிராதீங்க.'
கண்களில் கண்ணீர் வழிய அவள் அழுக, கேமிராக்கள் உற்சாகமாய் படம் பிடித்துக் கொண்டன.
அடுத்த நாள் முக்கிய செய்திப் பத்திரிகைகளில் பின் பக்கம் முழு பக்க அளவில் இந்த நியூஸ் தான்.
'பிரபல நடிகையை தகாத வார்த்தையால் திட்டிய பிரபல நடிகர்.
கோபம் கொண்டு அவரை அறைந்த டைரக்டர்.
கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட நடிகை'
வாசகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வாசித்து கோபமுற, மாதர் சங்கங்கள் கொதித்து கணேஷின் வீட்டின் முன், ஷூட்டிங் ஸ்பாட்டின் முன், அவனது கெஸ்ட் ஹவுஸின் முன் போராட்டங்கள் நடத்தின.
பிரபல வார இதழ்கள், செய்தித் தாள்கள், சினிமா பத்திரிகைகள் என எங்குமே இந்த நியூஸ் தான். ஸ்ரீலதாவின் கண்ணீர் மல்கிய படம் மக்களின் மனசை உருக்க கணேஷுக்கு புதுப் படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த புரொடியூசர்கள் கணேஷுக்கு பதிலாக வேறு நடிகர்களை புக் பண்ண, உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று ஆனது.
கணேஷின் மனைவி எரிச்சலில் அவனிடம் கத்தினாள்.
'வெளில தல காட்ட முடியல. ஸ்ரீலதாவ சொன்ன ஒம் புருஷன நீ தட்டிக் கேட்க மாட்டியா? நீயும் ஒரு பொண்ணு தான. பொம்பளப் புள்ள வச்சிருக்கேல்ல. ஒன்ன யாராவது இப்படி சொன்னா அவர் ஒத்துப்பாரான்னு ஒரே கூச்சல்.'
நீ அப்படித் தானேடி என்று மனதில் நினைத்துக் கொண்டான் கணேஷ்.
அவள் தொடர்ந்தாள்.
'சீக்கிரம் ஒரு மன்னிப்பு பேட்டி குடுத்துருங்க. மாதர் சங்கத்து ஆண்டு விழா வருது. நான் தான் சீப் கெஸ்ட். கெடுத்துராதீங்க. ஆமாம் அக்கவுண்ட்ல பணம் இல்லயா நான் அந்த மாதர் சங்கத்துக்கு குடுத்த அம்பதாயிரம் ரூபா செக் திரும்பி வந்துருச்சாம். அவங்க போன் பண்ண நான் உங்க பீரோல இருந்து ஒரு அம்பதாயிரம் ரூபா ரெடி கேஷா எடுத்து குடுத்திட்டேன்.'
கணேஷ் அவளை முறைத்தான்.
'சரி வரேன் டார்லிங். என் பிரண்டு ஜட்ஜ் பொண்டாட்டி வெயிட் பண்றாங்க. அந்த மன்னிப்பு பேட்டி மறந்திராதீங்க.' என்று விட்டு வானிடி பேக்கை தோளில் வீசியபடி வெளியேறினாள்.
கணேஷுக்கு முன்பு முந்திக் கொண்டாள் ஸ்ரீலதா.
பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விஜியைப் பேசச் செய்தாள்.
'உங்க எல்லார் மூலமா கணேஷ் சார்ட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அவர் பெரிய ஸ்டார். நான் வளர்ந்து வர்ற இயக்குனர். என் பீல்ட்ல அவர் தான் சீனியர். என் கோபத்த கட்டுப்படுத்த தெரியாம கை நீட்டிட்டேன். ஐ அம் எக்ஸ்ட்ரீமிலி சாரி சார். இந்த நிகழ்ச்சியினால மனம் புண்பட்டுப் போன அவரது குடும்பத்தாருக்கும் அவரது ரசிகப் பெருமக்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.'
அவன் பேசும்போது ஸ்ரீலதா கர்ச்சீப்பை எடுத்து தன் அழகிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அன்று ஈவினிங்கே அந்த பேட்டி மாலைப் பத்திரிகைகளில் வெளியாக, விஜியின் பெருந்தன்மை மக்களால் விமர்சிக்கப் பட்டதோடு கணேஷின் பெயர் மேலும் டேமேஜ் ஆனது.
கணேஷ் உடைந்து போனான்.
பெக் பெக்காக ஆல்கஹால் அவனுள் போனது. கொஞ்சம் தெளிந்த வேளையில் கிடைத்த கேப்பில் நடித்துக் கொடுத்தான். ஈடுபாடு இல்லாது செய்யும் காரியம் எப்படி வெற்றி தரும்? அவனது படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பெட்டியில் வந்து தஞ்சம் அடைந்தன. இரு வருடங்களாய் நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாப். பத்திரிகைகள் கிழி கிழி என்று கிழிக்க அவனுக்கு படங்கள் ஏதும் வர வில்லை. முதலில் குனிந்து வளைந்து பல்லை இளித்த புரொடியூசர்ஸ் இப்போது இவனது போன் வந்தாலே 'ஆள் இல்லை' என்று சொல்ல வைத்தனர். நேரில் போனால் கூர்க்கா அவனது காரை கேட்டைத் தாண்டிச் செல்ல அனுமதிப்பதில்லை.
அவமானத்தின் உச்சிக்குச் சென்ற கணேஷ் பாரே தஞ்சமென இருக்க கடன்காரர்கள் நெருக்க ஆரம்பித்தனர். அவனது மனைவி குழந்தைகளோடு அம்மா வீட்டுக்குப் போய்விட்டதோடு மட்டும் அல்லாமல் குடிக்கிறார் அடிக்கிறார் என்று காரணம் சொல்லி விவாகரத்து வாங்கி விட்டு தன் பழைய சகவாசங்களைத் தொடர்ந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் நோய்கள் அவனிடம் தஞ்சம் புக, வெறுப்பின் உச்சத்தில் ஒரு பத்திரிகை நிருபரின் முகவரிக்கு ஒரு காஸெட்டை பார்சல் செய்து அனுப்பினான்.
அடுத்த நாள் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே கால் பக்க செய்தி.
'பிரபல நடிகை நடிகருடன் உல்லாசம்.'
'வீடியோ வெளியானது.'
'வீடியோ கடைகளில் வாலிபர்கள் கூட்டம் கேஸட் கேட்டு மொய்த்தனர்'
சட்டை இல்லாத சுதீஸ் ஸ்ரீலதாவின் மேல் படுத்திருப்பது போலவும் அவளின் அந்தரங்க பாகங்கள் கருப்புக் கோடால் மறைத்திருப்பது போலவும் படங்கள் வெளியாக பற்றிக் கொண்டது திரையுலகம்.

(தொடரும்)
 
Top