வரம் 1 (Completed)

Advertisement

Writer girl

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் 😇

பிப்ரவரி 14 அன்று கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😍

வரம் 1

அந்த விஸ்தாரமான வீட்டின் பிரம்மாண்டத்திலேயே அதில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும்!

அந்தளவிற்குப் பணத்தைச் செல்வழித்து அந்தப் பெரிய வீட்டைக் கட்டி இருந்தார் அதன் உரிமையாளர் ரமணன்.

அவர் தனது தங்க பிரேமிட்ட கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு,“நம்மப் பொண்ணு எங்கே ம்மா?”என்க,

“அவ கடற்கரை மணலில் நடந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனாள் ங்க”என்றுரைத்தார் கஸ்தூரி.

“ஓஹ்! அப்போ பிளாக் காஃபி கொண்டு வரச் சொல்லும்மா”என்றவருக்கான கருப்புக் கொட்டை வடிநீரைக் கொண்டு வருமாறு சமையலறையில் இருந்த பணியாளர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு,

“உங்க தங்கச்சிப் புருஷனும், பையனும் அடுத்த வாரம் இங்கே வர்றதாக சொன்னீங்களே? எந்த தேதின்னு ஏதாவது இன்ஃபார்ம் செஞ்சாங்களா?”எனக் கேட்டதற்கு,

“இன்னும் இல்ல ம்மா. இனிமேல் தான் மகிழ் கிட்டே கேட்கனும்”என்று பதிலளித்தார் ரமணன்.

“அவனுக்குப் பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சிட்டாரா பால்ராஜ் அண்ணன்?”

“ம்ஹூம். அவர் எங்கிட்ட பேசினதை வச்சுப் பார்த்தால் இல்லைன்னு தான் நினைக்கிறேன்”எனத் தன்னிடம் கொடுக்கப்பட்ட கருப்புக் கொட்டை வடிநீரை உறிஞ்சினார்.

“ஏன்? அவனுக்கும் வயசு ஏறிட்டே போகுது தானே? இப்போ இருந்தே பார்த்தால் தான் சீக்கிரம் முடியும்”என்றவரோ,

“அப்படியே நம்ம சஹாவுக்கும் மாப்பிள்ளைப் பார்க்கலாம் ங்க. அதான், உங்க தொழிலை எடுத்து நடத்தி இப்போ அதில் காலூன்றி நின்னுட்டாளே? அப்பறம் என்ன? இனிமேல் கல்யாணம் செஞ்சிட்டுப் புருஷனோட சேர்ந்து தொழிலை நடத்தட்டும்”என்றார் கஸ்தூரி.

அதைக் கேட்டதும்,“எனக்கு ஒரு ஐடியா தோணுதும்மா”என அவரிடம் கூறினார் ரமணன்.

“சொல்லுங்க”

“நாம ஏன் மகிழுக்கும், நம்மப் பொண்ணுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கக் கூடாது?”என்றவரை மலைத்துப் போய்ப் பார்த்தார் கஸ்தூரி.

“என்னம்மா?”

“நீங்க என்னப் பேசுறீங்கன்னு உங்களுக்குப் புரியுதா?”

“ம்ம். புரியுதே!”என்றுரைத்தார் ரமணன்.

“உங்களுக்குப் புரியும்! எனக்கும் புரியுது! ஆனால் நம்மப் பொண்ணைப் பத்தி யோசிச்சுப் பாருங்க! அவ இதுக்கு ஒத்துக்குவாளா?”எனக் கேட்டார்.

“நாம அவளை ஒத்துக்க வைப்போம்மா”என நம்பிக்கையுடன் கூறிய கணவரிடம்,

“அது எப்படி நடக்கும்ங்க? அவ இதுக்குக் கண்டிப்பாக ஒத்துக்கவே மாட்டாள்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும்! அப்படி இருக்கும் போது நாம எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்? அவளுக்குப் பிடிச்சா மாதிரி மாப்பிள்ளையைப் பார்ப்போமே?”என்று சொல்லிப் புரிய வைக்க முயன்றார் கஸ்தூரி.

“அதெல்லாம் வேண்டாம்மா. சஹாவுக்கு என்னோட தங்கச்சிப் பையனைத் தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அவ பொறந்த அப்போவே முடிவு எடுத்துட்டேன்! ஆனால் அந்தச் சமயத்தில் எதையும் சொல்ல முடியலை. அப்போ நம்ம நிலைமையும் கொஞ்ச மோசமாகத் தானே இருந்துச்சு? அதனால் தான், அந்த ஆசையை என் மனசுக்குள்ளேயே வச்சி இருந்தேன். இப்போ அதை நிறைவேத்திக்கப் போறேன்! அதே சமயம் இது என் தங்கச்சி செய்ய நன்றிக் கடனாக இருக்கட்டும்!”என்று நெகிழ்ந்து போய் உரைக்க,

அவர் கூறியதும் உண்மையே என்றுணர்ந்து,”ஆமாங்க. மல்லிகா மட்டும் அவ நகையைக் கொடுத்து நமக்குத் தொழில் தொடங்க உதவி செய்யலைன்னா நாம இப்போ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது! ஆனால் இதுக்கு சஹா எப்படி சம்மதிப்பாள்?”என்க,

“அதை நான் பார்த்துக்கிறேன். அதுக்கு முதல்ல பால்ராஜூம், மகிழும் இங்கே வரனும்”என்ற ரமணனிடம்,

“அவங்க கிட்ட இதைச் சொன்னா கண்டிப்பாக ஒத்துக்க மாட்டாங்க!”என்று கூறினார் கஸ்தூரி.

“அது எனக்கும் நல்லா தெரியும்மா. அதனால் அவங்களுக்கு விஷயம் தெரியாமலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்”என்று உறுதி அளித்தார்.

இதே நேரத்தில், கடற்கரை மணலில் தன் கால்கள் அழுத்தமாகப் பதிய நடந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.

அவள் சஹஸ்ரா!

‘சஹஸ்ரா மில்க் புராடெக்ட்ஸின் உரிமையாளர்’

அவளது பெற்றோருக்கு ஒரே வாரிசு மற்றும் அவர்களது ஆஸ்திக்குச் சொந்தக்காரி இவள் மட்டும் தான்!

பளிங்குச் சிலை அவளின் வெண்மை நிறம் வானத்து நிலவிற்குப் போட்டியாக மிளிர்ந்தது.

தனது குட்டையாக வெட்டியிருந்த சிகையைக் கையால் கோதி விட்டுக் கொண்டே நடை பயின்றவள் அணிந்திருந்த தங்க கொலுசுகள் அவளது பாதங்களை மேலும் மெருகூட்டிக் காட்டியது.

தனது எம். பி. ஏ படிப்பை முடித்தவுடன், பால் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தந்தையின் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்த சூத்திரங்களைக் கற்றறிந்து கொண்டுத்,

தற்போது தனது இருபத்தி ஒன்பதாவது வயதில் தன் சொந்த முயற்சியால் ஒரு கிளையைத் திறந்திருக்க, இப்போது அந்த வியாபாரத்தில் யாரும் அசைக்க முடியாதவாறு அதில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கிறாள்.

இதே சமயம், மற்ற ஊர்களிலும் இன்னும் சில கிளைகளைத் திறக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறாள் சஹஸ்ரா.

ஆனாலும் அவளுக்கு அந்தப் புகழ் மற்றும் பணத்தின் மீதான தாகம் இன்னும் அடங்கவில்லை போலும்!

தன் தலைக்கு மேலிருந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு மட்டும் சக்தி இருந்தால் அந்த வானத்தையும் தன் வசப்படுத்தி இருப்பாள் சஹஸ்ரா.

தான் இங்கே வந்து வெகு நேரம் ஆகி விட்டதால் தனது கையிலிருந்த செல்பேசியில் மகிழுந்தின் ஓட்டுநருக்கு அழைத்துக் கொண்டு வரச் சொல்லி அதில் ஏறி வீட்டிற்கு விரைந்து வந்தாள்.

“ஹாய்ப்பா, ஹாய்ம்மா” என்ற மகளிடம்,

“ஹாய் சஹா! உனக்குக் காபி கொண்டு வரச் சொல்றேன்”என்று கூறி விட்டுப் போக, அப்போது தனது மொபைலில் வந்திருந்த குறுஞ்செய்தியைக் கண்டதும்,

“கஸ்தூரி ம்மா! பால்ராஜூம், மகிழும் அடுத்த வாரம் சனிக்கிழமை இங்கே வர்றாங்களாம்”என்று மனைவிக்கு அறிவித்தார் ரமணன்.

தான் கொண்டு வந்திருந்த காபிக் கோப்பையை மகளிடம் கொடுத்து விட்டு,“சரிங்க. எவ்வளவு நாள் தங்குவாங்களாம்?”என விசாரிக்க,

“அது தெரியலைம்மா. அவங்க வந்ததும் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்”என்றார்.

தன் அன்னையிடமிருந்து வாங்கிய காபிக் கோப்பையைத் தனது சாயம் பூசிய இருந்த உதட்டில் விளிம்பில் வைத்துப் பானத்தைப் பருகிய சஹஸ்ராவோ, இவர்கள் பேசியதைக் கேட்டிருந்தாலும் கூட, அவர்களிடம் என்னவென்று வினவவே இல்லை.

ஆனால் அவளிடம் விஷயத்தை உரைப்பது பெற்றோரின் கடமையல்லவா?

அதனால்,”சஹாம்மா. உன்னோட மாமாவும், மாமா பையனும் ஊரிலிருந்து வர்றாங்க”என்று அவளிடம் மேலதிக விவரத்தையும் தெரிவித்தார் ரமணன்.


“ஓஹ் ஓகேப்பா”என்றவளிடம் இருந்து வேறெந்த எதிர்வினையும் வராததால்,

“வேற எதுவும் கேட்கலையே நீ?”என்று ஏமாற்றத்துடன் வினவினார் கஸ்தூரி.

“என்னை வேற என்னக் கேட்க சொல்றீங்கம்மா?”என்றாள் சலிப்பாக,

“நம்ம வீட்டுக்குச் சொந்தக்காரங்க வரப் போறாங்க. அதுவும் உன்னோட மாமாவும், மாமா மகனும்! அப்படி இருக்கும் போது உனக்கு அது சந்தோஷத்தை தரலையா?”எனக் கேட்கவும்,

“எனக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லப்பா. அவங்க வந்தால் வந்துட்டுப் போகட்டும். ஆனால் அவங்க என்னைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்”என்றவளை ஆயாசமாகப் பார்த்தார்கள் அவளது பெற்றோர்.

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரூமுக்குப் போறேன்”என்றவளிடம்,

“நைட்டுக்கு என்ன சமைக்கச் சொல்லட்டும்?”என்று வினா எழுப்பினார் கஸ்தூரி.

“சைனீஸ் ஐட்டம் எதுவாக இருந்தாலும் சமைக்க சொல்லுங்கம்மா”என்றுரைத்து விட்டு அறைக்குப் போய்த் தனது மடிக்கணினியுடன் ஐக்கியமாகி விட்டாள் சஹஸ்ரா.

அவளுக்குச் சமீபத்தில் சீன உணவுகளின் மீது நாட்டம் வந்திருந்தது. அதனால் தான், இரவுச் சாப்பாட்டிற்கு அந்த வகை உணவைச் செய்யுமாறு கூறி இருந்தாள்.

தனது அறைக்குள் வந்து மடிக்கணினியை உயிர்ப்பித்து விட்டுத் தன் காரியதரிசிக்கு அழைத்தாள் சஹஸ்ரா.

“ஹலோ மேம்”

“நான் கேட்ட தகவல் இன்னும் எனக்கு வராமல் இருக்கே மிஸ். மோனிகா! மறந்துட்டியா என்ன?”என்றவளின் ஆளுமையில் சில கணங்கள் ஸ்தம்பித்து விட்டு,

“இல்லை மேம். ஞாபகம் இருக்கு. ஆனால் இன்னும் கொஞ்சம் தகவலைத் திரட்ட வேண்டி இருந்தது. அதனால் தான் அனுப்ப டிலே ஆகுது”என்று பவ்யமாக உரைத்தாள் மோனிகா.

“இன்னும் தகவலைத் திரட்டனுமா? அப்படின்னா இன்னும் முடியலையா?”

“ஆமாம் மேம். இன்னும் வேலை முடியலை”

“இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை? எப்போ கொடுத்த வேலை இது?”என அவளைக் கடிந்து கொண்டாள் சஹஸ்ரா.

அதில் மிரண்டு போய்,“சாரி மேம். உடனே முடிச்சு அனுப்பிட்றேன்”என்று மன்னிப்புக் கோரவும்,

“இன்னும் பத்தே நிமிடத்தில் நீ எனக்கு மெயில் அனுப்பி இருக்கனும். இல்லைன்னா, உன்னை வேலையை விட்டுத் தூக்க வேண்டியது வரும்!”என்று கூறி எச்சரித்து விட்டு அழைப்பை வைத்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டுச் சிறிது நேரத்திலேயே அவள் கேட்டதை துரிதமாக முடித்து அனுப்பி வைத்திருந்தாள் மோனிகா.

அதைக் கவனித்து விட்டு,”ம்ஹ்ம். வேலையிலிருந்து தூக்கிடுவேன்னு பயம் காட்டினா தான் உடனே முடிச்சு அனுப்புவாள்ன்னு சரியாகத் தான் கெஸ் செய்து இருக்கேன்!”என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாள் சஹஸ்ரா.

அவளுக்குத் தனது தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற பேராசை!

அப்படி பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்றால் இப்படித் தன்னிடம் வேலை செய்பவர்களிடம் கறாராகத் தான் பேசி, நடந்து கொண்டு வேலையை வாங்க வேண்டும் என்று இத்தனை வருட அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டிருந்தாள் சஹஸ்ரா.

இதே சமயம்,”என்னப்பா பண்ற?”என்று அடுக்களையில் பாத்திரங்களுடன் தகராறு செய்து கொண்டிருந்த மகனிடம் வினவினார் பால்ராஜ்.

“நமக்கு இராச் சாப்பாட்டுக்குத் தயார் பண்ணிட்டு இருக்கேன் ஐயா”எனப் பதில் வரவும்,

“அதுக்கு ஏன் பாத்திரத்தைப் போட்டு இப்படி உருட்டிட்டு இருக்கிறப்பா?”என்றவரிடம்,

“உருட்டலை ஐயா. எல்லாம் அலங்கோலமாக இருந்துச்சு. அதான், அடுக்கி வச்சிட்டுச் சமையலை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்”எனக் கூறினான் மகன்.

“சரிப்பா. பார்த்துப் பொறுமையாகவே பண்ணு”என்றார் அக்கறையுடன்.

“சரிங்க ஐயா”என்று சமையல் செய்யத் தொடங்கிய அந்த ஆடவனின் பெயர் மகிழம்பூவன்!

பால்ராஜ் மற்றும் மல்லிகாவின் இரண்டாவது மகன்.

மூத்த மகளின் பெயர் வண்ணமதிக்குத் திருமணமாகி, அதே ஊரில் தன் கணவன் பூபாலன் மற்றும் தங்கள் ஒரு வயது மகன் செந்திலுடன் வசித்து வருகிறாள்.

பூபாலனுக்குச் சொந்தமாகப் பருத்தி ஆலை உள்ளது.

தனக்குத் தோன்றும் நேரத்தில் தனது கணவன் மற்றும் மகனுடன் இங்கே வந்து தன் தந்தையையும், தம்பியையும் பார்த்து விட்டுப் போவாள் வண்ணமதி.

மகிழம்பூவன் அவளுக்கு அடுத்துப் பிறந்தவன். ஒரு டிகிரி மட்டும் படித்து இருந்தவனுக்குச் சொந்தமாக மாடுகளும், பால் பண்ணையும் இருந்தது. அதை அவனது தாயின் அண்ணனான ரமணன் தான் வைத்துக் கொடுத்திருந்தார்.

அதில் வரும் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

பால்ராஜ்,“ஏன்ப்பா, நாம ரமணன் வீட்டில் எவ்வளவு நாளைக்குத் தங்கப் போறோம்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்ல ஐயா. நான் இன்னும் முடிவு பண்ணலை”என்றான் மகிழம்பூவன்.

“சீக்கிரம் முடிவு செஞ்சி மதிக்கிட்டேயும் சொல்லிரு. நம்மக் கூட அவளும் வர்றேன்னுச் சொல்லி இருக்காள்”என்றவுடன்,

“ம்க்கும். நமக்கே அங்க வரவேற்பு எப்படி இருக்கப் போகுதுன்னு தெரியலை ஐயா!”என்று ஐயத்துடன் உரைத்த மகனை வாஞ்சையாகப் பார்த்து,

“அதெல்லாம் அமோகமாக இருக்கும் மகிழு!”என்று அவனுக்கு நம்பிக்கை அளித்தார் தந்தை.


- தொடரும்
 

Attachments

  • ei43CJ68223.jpg
    ei43CJ68223.jpg
    298.8 KB · Views: 0
Last edited:
Welcome ma. Nice start. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top