Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(05)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(05)



திருவாசகம் டாக்டர் விஜயனை தனியாக பேச அழைத்து சென்ற பின் ஜானவி அங்கு நின்றுகொண்டுருந்த மாயாவதியையும் லீலாவதியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நேராக ராஜவர்மனின் அறைக்கு சென்றார்.

ராஜவர்மன் அவனின் லேப்டாப்பை மடியில் வைத்து அவனின் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான். அப்போது அங்கு சென்ற ஜானவி,

“ ராஜா" என அழைக்க

“ அம்மா என்னமா??. உள்ள வாங்க” என கூறி லேப்டாப்பை தன் முன்னிருந்த டீப்பாயி மேல் வைத்துவிட்டு எழ

“ ராஜா நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்”

“ உதவியா??”

“ ஹ்ம்ம்….”

“ என்னது??”

“ ராஜா இங்க வீட்டுல நடக்குற பிரச்சனை தெரியும்தானே உனக்கு??”

“ பிரச்சனையா???. ஓ!!!... குணா மாமா வந்து கத்திட்டு போனதா. அவரு எப்பவும் ஏதாவது வந்து உளறதுதானே ம்மா”

“ ம்ப்ச்….. அது இல்லடா ருத்ரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறது பத்தி “

“ என்ன ருத்ரனுக்கா!!!.....”

“ ஹ்ம்ம் ஆமாடா”

“ ஏன் மா???”

“ ம்ப்ச்… என்ன சொல்ல???. ஜோசியர் சொல்லிட்டாருன்னு சுயநினைவு இல்லாம இருக்குறப்போ கல்யாணம் பண்ண பார்குறாருடா உன் அப்பா.”

“ சரி அதுக்கு நான் என்ன செய்யணும்???”

“ டேய் மாறன் எவ்வளவோ சொல்லி பார்த்தான் ஆனா உங்க அப்பா கொஞ்சம் கூட கேட்கவே இல்ல. சரி அதான் நீயும் ஒரு வார்த்தை…” என ஜானவி கூறிக்கொண்டிருக்கையில்

இடைமறித்த ராஜவர்மன் “ அம்மா அது அவுங்க பிரச்சனை நான் எதுக்கு தலையிடனும்”

“ டேய் உன் தம்பி வாழ்க்கைடா”

“ சரி இப்போ அவன் சுயநினைவு இல்லமா இருக்கான். அதனால அவனோட முழு பொறுப்பு அப்பாவோடது. அதனால அவனோட வாழ்க்கை சம்மந்தப்பட்டதை அவரு முடிவு எடுக்குறாரு. என்னைப் பொறுத்தவரைக்கு மாறன் போய் பேசுனதே தப்பும்மா”

“ டேய் இதுல ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கைக்கும் சம்மந்தம் ஆகிருக்குடா”

“ யாரு நித்யவதியா??”

“ இல்ல அவ சிம்மாவை விரும்புறதால அவனுக்கும் அவளுக்கும் உங்க அப்பா கல்யாணம் பண்ணிவைக்க போறாராம். அதே நாளல்ல ருத்ரனுக்கும் வேற ஒரு பொண்ணுக்கும் கல்யாணமா”

“ சரி அப்போ அந்த பொண்ணோட வீட்டுல இருக்குறவங்க ருத்ரன் நிலை தெரிஞ்சேதானேம்மா ஒத்துக்கிட்டு இருந்துருப்பாங்க இந்த கல்யாணத்துக்கு. இதுல நாம எதுக்கு தேவை இல்லாம மூக்கை நுழைக்கனும்.

இப்பவும் சொல்றேன் அவுங்க அவுங்க பிரச்சனையை அவுங்க அவுங்க தான் பார்க்கணும்” என ராஜா கூறி முடித்து லேப்டாப்பை மீண்டும் எடுத்து சோபாவில் அமர

‘ இவனை சின்ன பிள்ளையில தேவை இல்லாம மத்தவங்க விசயத்துல மூக்கை நுழைக்காதான்னு சொன்னது தப்பா போச்சு. சொந்த தம்பிக்கு பிரச்சனைனா கூட கம்முன்னு இருக்கான். இவனை என்ன செய்றது???’ என மனதில் அவனை திட்டிக்கொண்டு,

ஜானவி நேரடியாக திருவாசகத்திடம் பேச வேண்டும் என்ற ஒரு முடிவுடன் திருவாசகத்தை காண சென்றார்.

ஜானவி திருவாசகத்தை தேடி ஒருவழியாக அவர் தோட்டத்தில் விஜயனுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு,

‘ இப்போ போய் பேசுறதுதான் சரி. மூணு வருசமா பேசாம இப்போ பேசுனா கண்டிப்பா வழக்கம் போல கழுத்து சுழுக்குற அளவுக்கு மூஞ்சிய திருப்புவாரு ஆனா விஜயன் அண்ணா பக்கத்துல இருக்குறதால சண்டை போட்டுற மாட்டாரு’ என மனதில் நினைத்துக்கொண்டு அவர்களின் அருகில் செல்ல

“ டேய் என்ன சொல்லுற திரு???. கல்யாணமா அதுவும் ருத்ரனுக்கா???. கொஞ்சமாது புத்தியோடதான் பேசுறியா??” என விஜயன் திருவாசகத்தை கடிந்துகொள்ள

இந்த சம்பாஷணையை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டே வந்த ஜானவி அங்கே இருந்து அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார். எப்படியும் தான் செய்ய வந்த வேலையை விஜயன் செய்ய அதனால் தன் கணவன் மனம் மாறிவிடாதா என்ற ஆசையில் கவனிக்க,

“ ஹ்ம்ம் ஆமாம்டா ருத்ரனுக்குத்தான் கல்யாணம். என் குடும்ப ஜோசியர் சொன்னாருடா கல்யாணம் பண்ணுணா அவன் உடல் நிலை சரி ஆகிடும்ன்னு”

“ அப்போ ஜாதகத்துக்கு பதிலா போய் medical report ட்ட அவன்கிட்டையே காட்டு. இனிமே என்னைய கூப்பிடாத. கொஞ்சாமாவது படிச்சவன் மாதிரி பேசுறியாடா.”

“ விஜய் கோவப்படாத. நீயே சொல்லு ஒரு வாரம் முன்னுக்கு ருத்ரனோட உடம்பு ரொம்ப மோசம் ஆகிட்டு வருது அப்பிடின்னு சொன்ன. நானும் ஜோசியர்ட்ட எதுவும் பரிகாரம் இருக்குமான்னு கேட்டேன்.

அவரும் ருத்ரனுக்கு கல்யாணம் பண்ணுனா அவன் அவனோட கண்டத்துல இருந்து தப்பிடுவான்னு சொன்னாரு அப்போதுல இருந்து பொண்ணு பார்த்து இப்போ கல்யாணம் முடிவு பண்ணனும்ன்னு சொன்னவுடனே நல்ல செய்தியா ருத்ரன் குணமாகிட்டு வரான்னு சொல்லிட்.ட அப்போ கல்யாணம் பண்ணிட்டா பழைய மாதிரி எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவான்” என உறுதியான குரலில் திருவாசகம் கூற

அதனை கேட்ட விஜயன் “ அப்போ நான் மருத்துவம் பார்க்கவே இல்ல அப்படித்தானே”

“ டேய் புரிஞ்சுக்கோடா இது நம்பிக்கை சார்ந்த விஷயம்”

“ சரி உன் கருத்துக்கே வரேன் உன்னோட அர்த்தமில்லாத நம்பிக்கைக்கு ரெண்டு பேரோட வாழ்க்கையை பழி ஆக்க போறியா???. இதுல எவ்வளவு நடைமுறை சிக்கல் இருக்கு தெரியுமா??.”

“ ம்ப்ச் நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் மகன் தான் முக்கியம். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என திருவாசகம் முடிவாக கூற ,

விஜயன் எதுவும் கூறாது சிறுது நேரம் அமைதியாக திருவாசகத்தை பார்த்து விட்டு,

“ ஒரு பொண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குன பாவம் உனக்கு வந்து சேராம இருந்தா சரிதான்” என கூறிவிட்டு சென்றுவிட்டார் விஜயன்.

இதை எல்லாம் தூரம் இருந்த கேட்ட ஜானவி ‘ இவரு ரொம்ப உறுதியா இருக்காரு. நிச்சயம் நாம சொன்னாலும் கேட்க மாட்டாரு. இனி இந்த குடும்பத்துல என்ன நடக்கணும்ன்னு விதி இருக்கோ அதுவே நடக்கட்டும்’ என மனதில் எண்ணிக்கொண்டு திரும்பி வீட்டிற்குள் சென்று ருத்திரனின் அறைக்கு சென்றார்.

ருத்ரவர்மனின் அறையில் நினைவு இல்லாமல் படுத்திருந்த தன் மகனை நெருங்கிய ஜானவி,

“ ருத்ரா உனக்கு உங்க அப்பா கல்யாணம் ஏற்பாடு பண்றாரு. நிச்சயம் நீ நினைவு வந்து எங்க எல்லார்கிட்டயும் ஏன் தடுக்கலன்னு இதுக்கு சண்டை போட போற. ஆனா ஒரு வேளை கல்யாணம் பண்ணுனா பழைய மாதிரி நீ ஆகிடுவன்னு உங்க அப்பாவோட நம்பிக்கை எனக்கு கொஞ்சம் வந்துடுச்சு.

அதனால நான் எதுவும் செய்ய முடியாத நிலையில இருக்கேன். ஆனா நிச்சயம் இந்த கல்யாணமும் வர போற பொண்ணும் உனக்கு பிடிச்ச மாதிரி அமையணும்ன்னு கடவுளை வேண்டிகிறேன்” என ஜானவி பேசிக்கொண்டிருக்கையில்

“ அது எப்படி அண்ணி அமையும்??” என கேட்டுக்கொண்டே மாயாவதி ருத்ரனின் அறைக்குள் நுழைந்தார். அவரிடம் எதுவும் பேசாது அமைதியாக ஜானவி நிற்க,

“ அண்ணி சொல்லுங்க நாங்க பார்த்திருக்க பொண்ணு ருத்ரனுக்கு பொருந்தவே பொருந்தாது. அப்புறம் எப்படி ருத்ரனுக்கு பிடிக்கும். ஹ்ம்ம்….” என நக்கலாக பேச அப்பொழுதும் எதுவும் கூறாது அமைதியாக ஜானவி சென்றுவிட்டார்.

ருத்ரனை வன்மத்துடன் நோக்கிய மாயாவதி,

“ உன்னோட வாழ்க்கையை அழிக்கணும்ன்னு நான் எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா?. ஆனா பாரேன் அந்த ஆண்டவனே எனக்கு வாய்ப்பை அள்ளிகுடுக்குறான். எனக்கு நீ எப்போடா குணமாவன்னு இருக்கு. குணமானவுடன் உன் பொண்டாட்டிய பார்த்து அப்படியே திகைக்கனும் அதை நான் பார்க்கணும்” என கூறிவிட்டு மாயாவதியும் சென்றுவிட்டார்.

அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடக்க ஒருவாரத்தில் கல்யாண தேதி குறிக்கப்பட்டு வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் ரொம்ப சாதாரணமாக யாரையும் அதிகம் அழைக்காது இரண்டு திருமணத்தையும் முடித்துவிட்டு ருத்ரனின் உடல் நிலை சரி ஆனவுடன் பெரிய வரவேற்பதாக வைத்துக்கொள்ளலாம் என திருவாசகம் முடிவெடுத்து கூற,

முதலில் மாயாவதியும் லீலாவதியும் மறுத்து கூறி சிம்மவர்மன் நித்யவதி திருமணத்தை விமர்சையாக செய்ய சொல்ல அதற்கு சிம்மவர்மன் மறுத்துவிட்டான். மீறி விமர்சையாக நடத்த திட்டமிட்டால் திருமணமே நடக்காது என கூறி சகோதிரிகள் இருவரின் வாயையும் அடைத்துவிட்டான்.

நாட்கள் செல்ல பிள்ளையார் கோவிலின் பின் இருந்த வீட்டை வாடைகைக்கு எடுத்து தென்றல் குடும்பத்தை திருமணத்திற்கு முதல் நாள் பேயாடிக்கோட்டையில் இருந்து வரவழைத்து அங்கு தங்கவைத்திருந்தனர்.

திருமண நாளும் விடிந்தது,

“ ஆத்தா எனக்கு பயமா இருக்கு” என பூந்தென்றல் செல்வி முகத்தில் கலக்கத்துடனும் குரலில் நடுக்கத்துடனும் கூற

“ குளிரா இருக்கா??. ஏண்டி நாலு மணிக்கு எழுந்து குளிச்சா அப்படித்தான் இருக்கும். கல்யாண நாளும் அதுவுமா சும்மா தொண தொணன்னு பேசாம போய் முகூர்த்த பட்டை கட்டு” என கூற பயத்தில் சின்னாத்தாவிடம் மெதுவாக பேசியதை எண்ணி கடுப்புடன் எதுவும் கூறாது அமைதியாக பட்டு சேலையை உடுத்தி தயாராக ஆரம்பித்தாள் தென்றல்.

“ செல்வி”

“ என்ன ஆத்தா??”

“ அந்த பேச்சியம்மா கொடுத்தால ஒரு டப்பா. அதான் வெள்ளை மாவு மூஞ்சில போடுறதுக்கு”

“ ஹ்ம்ம் ஆமா பவுடரா??”

“ ஹ்ம்ம் அதான். அதையும் நல்லா பூசு. இங்குன பார்குறவங்க எல்லாரும் என் பேத்திதான் நல்ல நிறம்ன்னு சொல்லணும்”

“ சரி ஆத்தா”

“ அப்புறம் அந்த மண்டைல வைக்க மினுமினுன்னு ஒன்னு குடுத்தாலே அதையும் வை”

“ சரி ஆத்தா”

“ ஹ்ம்ம் அப்புறம் கனகாம்பரத்தையும் அந்த மல்லிகைப்பூவையும் ஒண்ணா வைத்தா. அப்படியே சடைக்கு கீழ ஒரு சிவப்பு கலரு குஞ்சத்தையும் வச்சிரு”

“ சரி ஆத்தா”

“ பொட்டு நல்லா பெருசா வை”

“ சரி” என தென்றல் கூற

‘ பாரு இந்த பிள்ளைக்கு வந்த கொழுப்பை இவ்வளவு சொல்றேன் சரின்னு ஒரு தடவையாவது சொன்னாளா அமைதியா இருக்கா. ஹ்ம்ம் என்னத்த சொல்ல ஒரு வேளை கல்யாண கனவுல இருப்பா போல’ என எண்ணிக்கொண்டு அறையை விட்டு வெளியே வர எண்ணிய சின்னாத்தா எதோ நினைவு வந்தவராக,

“ செல்வி” என
அழைக்க

“ என்ன ஆத்தா??” என தென்றல் கத்த

“ இந்தா இதை குடுக்க வந்துட்டு நான்வாட்டுக்கு போக பார்த்துட்டேன்” என சின்னாத்தா தன் சுருக்கு பையை குடுக்க

“ என்னது ஆத்தா??” என கேட்டுக்கொண்டே சுருக்கு பையை வாங்கி பார்க்க

அதில் ஒரு பெரிய செயினும் ஒரு சின்ன அட்டிகையும் ஒரு சிறு கிளிகூண்டு தோடும் தங்கத்தில் இருந்தது. அதனை பார்த்த தென்றல்,

“ ஆத்தா என்னது இது??. ஏது இது?? இதையும் யாருகிட்டையாவது வாங்குனியா??” என சற்றே கோவம் எட்டிப்பார்க்க தென்றல் வினவ

“ இல்ல செல்வி இது உன் அம்மா நகை”

“ என்னது அம்மாவோடதா!!!... இத்தனை நாள் எங்க இருந்துச்சு??”

“ செல்வி அந்த காலத்துல உங்க அம்மாவுக்கு இந்த ரெண்டு பவுனுல அட்டிகையும் அரை பவுனுல தோடும்தான் போட முடிஞ்சுச்சு. உங்க அம்மா இறந்தபிறவு இதை என்கிட்ட குடுத்துட்டாரு உன் அப்பா. அப்புறம் இந்த செயின் மூணு பவுனு. இது என்னோட இத்தனைவருச உழைப்பு உனக்காக நான் சின்னத்துல இருந்து சேர்த்த காசுல வாங்குனே”

“ நீ எப்போ கடைக்கு போயி வாங்குன”

“ நான் போகலடி . பேச்சியம்மாதான் போனா. ஆமா இது ரொம்ப முக்கியமா இந்தா இதை போட்டுக்க அந்த சிவப்பு பாசிய கலட்டிரு”

“ சரி ஆத்தா. ஆனா அத்தை….” என தயங்க

“ உன் கல்யாணத்துக்காகத்தான் இதை எல்லாம் உன் அத்தை கண்ணுல ஏன் உன் மாமன் கண்ணுல கூட காட்டாம இத்தனை வருஷம் வச்சுருக்கேன். இல்லைனா இதையும் எதாவது சொல்லி எப்போவோ பிடிங்கிருப்பா.
இப்போ இது மட்டும் இல்ல உனக்கு உன் மாமனும் அத்தையும் இந்த பசியோடதான் கல்யாணம் கட்டி வச்சுருப்பாங்க

சரி சரி அதை பத்தி எல்லாம் யோசிக்காம போய் சந்தோசமா இதை எல்லாம் போட்டுக்கிட்டு தயாராகு. நான் போய் இந்த மாறவர்மன் தம்பியை பார்த்துட்டு வந்துடுறேன்”

“ யாரு ஆத்தா அவுங்க??”

“ அடியே மாறவர்மன் தான் உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை பேரு”

“ இப்போ எதுக்கு அவுங்கள பார்க்க போற ஆத்தா??”

“ என் பேத்தி அழகுக்கு வருமான்னு பார்த்துட்டு ஒரு வார்த்தை பேசி எப்பிடி என்னன்னு தெரிஞ்சுக்கத்தான்”

“ ஓ!!.... சரி ஆத்தா நான் போய் தயாராகுறேன்”

“ ஹ்ம்ம்” என சின்னாத்தாவும் மாப்பிளை மாறவர்மன் என எண்ணி அவனை சந்திக்க போனார்.

பூந்தென்றல் தயாராகிவிட்டாளா என காண வந்த தரகர் பரமசிவம் கடைசியாக சின்னாத்தா மாப்பிள்ளை மாறவர்மன் என கூறியதை கேட்டு அதிர்ந்தார்.

‘ என்ன இந்த அம்மா மாறவர்மன் மாப்பிள்ளைன்னு சொல்லுது. மாப்பிள்ளை ருத்ரவர்மன்ல. இந்த கல்யாணம் எந்த மாதிரி சூழ்நிலையில நடக்குதுன்னு தெளிவா சொல்ல சொன்னாரே திருவாசகம் ஐயா. நானும் இந்த சுந்தரிகிட்ட தெளிவா சொன்னேனே. ஆனா இவுங்க பேசுறத பார்த்தா மாப்பிள்ளைக்கு சுயநினைவு இல்லைன்னு தெரியாது போல. அப்போ எதுவும் பிரச்சனையை ஆகிடுமோ’ என எண்ணிக்கொண்டு அவசரமாக சுந்தரியை தேடி சென்றார்

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

plz drop ur comments friends and thanks for supporting
Nice
 
Top