Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான்; இமையாக நீ--21

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 21

வாசு ," எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே " என்று கேட்டவுடன், ரம்யாவின் கேஸ், ஷீட்டை எடுத்துச் சரி பார்த்துக் கொண்டிருந்த சிஸ்டர், என்ன என்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அவளிடம், தனது சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையைக் காண்பித்த வாசு, " நானும் ஒரு ரிஜிஸ்டர்டு அனஸ்தஸிஸ்ட் தான்.
நீங்க, சம்மதிச்சீங்கன்னா என் தங்கையோட, கேஸ் டிடெய்ல்ஸை என் கிட்ட கொஞ்சம் கொடுக்க முடியுமா? ஏன்னா, இன்னும் அனஸ்திஸீயன் தான் வரலைன்னு முன்னாடி ரிசப்ஷனில பேசிக்கிட்டாங்க. நீங்க, தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் தங்கை தானே வலியால துடிச்சுட்டு இருக்கா . பிளீஸ் சிஸ்டர் " என்று கேட்டான்.


ஒரு அரை நிமிடம் யோசித்த அந்தப் பெண், " ஓ.கே சார். ஆனா ஒரு நிமிஷம் இருங்க. நான் டாக்டர், கிட்ட சொல்லிட்டு வந்துடறேன் " என்றபடி அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்திட, கண் இமைக்கும் நேரத்தில், வாசு தனது தங்கை படுத்துக் கொண்டிருந்த ஸ்டிரெச்சரைத் தள்ளிக் கொண்டு, மருத்துவமனையின், கழிவுகளை அப்புறப்படுத்திடும் , இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

அதன் பின், மெதுவாகத் தன் தோளோடு அணைத்தபடி ரம்யாவை அழைத்துக் கொண்டு, தான் எடுத்து வந்திருந்த காரில் கைத்தாங்கலாக அவளை ஏற்றிக் கொண்டு, தங்களது வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான் வாசு.


வழி நெடுகிலும், வலியில் முனகியபடியே வந்த ரம்யா, அந்த வேதனையிலும், " அண்ணே, என் மேல எந்தத் தப்பும் இல்லை அண்ணே. இது எனக்குத் தெரியாம நடந்த தப்பு. என்னை விட்டுடாதே அண்ணே; நான் இனியும் உயிரோட இருக்க மாட்டேன்னு தான் என் மனசுக்குப் படுது. அதோட, இந்தக் குழந்தை வேணும்னு, யாரு என் வாழ்க்கையைப் பணயமா வச்சாங்களோ, அவங்களும் இப்ப உயிரோட இல்லையாம். அநியாயப்பட்ட பாவிங்க, அதுக்குள்ள இந்தப் பாப்பாவுக்கும் விலை பேசிட்டாங்க போல இருக்குது. அதான் இப்படி, குறை மாசத்திலேயே எனக்கு சிசேரியன் பண்ணிக் குழந்தையை எடுக்கணும்னு சொல்லிட்டு இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க அண்ணே. அதனால ,நான் செத்துப் போனாலும், என் குழந்தையைக் கை விட்டுடாதே அண்ணே..." என்று கதறினாள்.


வாசுவுக்கும், யாரோ தங்களை ஏமாற்றி விட்டது போன்ற உணர்வில் அழுகை தான் பீறிட்டு வந்தது. ஆனால் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

" ரம்யா அழாதேம்மா. உனக்கு எதுவும் ஆகாது. நான் பார்த்துக்கறேன் மா. அழாதேம்மா " என்று தனது துயரை மறைத்துக் கொண்டு அவளைத் தேற்றினான்.


பின், தங்கையின் வாழ்வு அபாயக் கட்டத்தில் உள்ளது என்று அவனது உள்ளுணர்வு சொல்லிட, வண்டியைத் தன்னுடன் பயின்ற, சக பெண் மருத்துவர் சோனாவின் கிளினிக்கை நோக்கி செலுத்தினான்.

அப்பாவின் அலைபேசிக்கு அழைத்து, சாரதாவை உடனே, தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொன்னான்.

சோனா மருத்துவமனைக்கு சென்றதும், அவன் முன்பே சொல்லி இருந்தமையால், அங்கே, ரம்யாவை அனுமதித்துக் கொண்டார்கள்.

" சோனா, பிளீஸ். என் தங்கை இவ. இவளை முதல்ல ஃபுல் செக் அப் பண்ணிடு . ஏன்னா இது ஏழாவது மாசம் தான். கீழே விழுந்துட்டா. அதனால, உடனே சிசேரியன் பண்ணனும்னு , அவங்க ரெகுலரா பார்க்கிற ஹாஸ்பிட்டல்ல சொல்லிட்டாங்க ஆனா எனக்கு, ஒரு செகண்ட் ஒப்பீனியன் கேக்கணும்னு தோனிச்சு. அதான் நான் இவளை இங்கே கூட்டிட்டு வந்தேன். " என்று அவளிடம் சொன்னான்.

" ம் ஓ.கே வாசு. நீ வெளியே வெயிட் பண்ணு . நான் பார்த்துட்டுச் சொல்றேன் " என்று சொன்னாள் சோனா.

இருபது நிமிடங்கள் சென்று வெளியே வந்த சோனா, இப்ப ஒரு இன்ஜக்ஷன் போட்டிருக்கேன். பிளீடிங் நிக்கறதுக்காக. அப்படி நின்னுடுச்சுனா, பரவாயில்லை. நாம வெயிட் பண்ணலாம்..இல்லைன்னா ரிஸ்க் தான் . அப்புறம் குழந்தையை எடுத்து தான் ஆகணும் " என்று சொன்னாள்.

வாசுவும் அதற்கு ஒப்புக் கொண்டு காத்திருக்கத் தொடங்கினான்.

நல்ல வேளையாக, ரம்யாவின் உதிரப் போக்கு நின்றது.

அரை மயக்கத்தில் இருந்த அவள் கண் விழித்துக் கொண்டாள்.

தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த வாசுவைப் பார்த்து மீண்டும், " அண்ணே நான் எந்தத் தப்பும் பண்ணலை அண்ணே . என்னைத் தப்பா நெனச்சுடாதே அண்ணே " என்று கதறத் தொடங்கினாள் .

" ரம்யா, நீ எந்தத் தப்பும் பண்ணலைடா. அண்ணனுக்குத் தெரியும். அழாதேம்மா. அழுதுட்டே இருந்தா உன் உடம்பு தானே வீணாப் போகும். உனக்கு ஒன்னுமில்லை. அண்ணன் இருக்கேன் இல்ல. நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும் " என்று சொல்லி அவளைத் தேற்றிய அவன், தன்னைத் தேற்றிக் கொள்ள வழி அறியாதவனாய் , இமை அணைகளை உடைத்துக் கொண்டு, வெளியேறிய கண்ணீரைத் தடை செய்திட வழி அறிந்திடாமல் , அழத் தொடங்கினான்.

அப்போது அவனது நண்பனது அழைப்பு அவனை எட்டியது.

" டேய் வாசு, எங்கேடா இருக்கே நீ. நான் நீ சொன்ன லொகேஷனுக்கு வந்துட்டேன் " என்று சொன்னான்.

" சாரிபா , நான் மறந்தே போயிட்டேன். நான் இப்ப அங்கே இல்லைபா . நான் சோனா கிளினிக்ல இருக்கேன். அந்த இடம் உனக்குத் தெரியும் இல்லையா. அங்கே வந்துடறியா " என்று சொன்னான் வாசு.

தனது நண்பனைக் கண்டதும், இருவருமாக இணைந்து, சோனாவிடம் சென்று ரம்யாவின் உடல் நலம் பற்றிய சில நுணுக்கமான தகவல்களையும் தெரிந்து கொள்ள எத்தனித்தான் வாசு.

அவர்கள் கேட்ட விவரங்களை எல்லாம் சொல்வதற்குத் தயங்கினாள் சோனா.." டேய் வாசு. உனக்குத் தெரியாதாடா , நீ கேக்கற விவரங்களை எல்லாம், அவங்க வீட்டுக்காரர் கிட்ட தான் சொல்ல முடியும். அவர் எங்கே இருக்காரு? ஏன் இன்னும் வரலை? ஒரு வேளை, ஊரில இல்லையா என்ன? " என்று கேட்டாள்.

நண்பர்கள் இருவரும் ஒருவரை ஓருவர் பார்த்துக் கொண்டனர் .

பின், வாசுவின் நண்பன் பேசத் தொடங்கினான். " சோனா டாக்டர், இவங்க வேலை பார்த்த ஹாஸ்பிட்டல்ல, இவங்களை ஒரு இல்லீகல் சர்ரகேட் மதர் ( illegal surrogate
Mother) அதாவது சட்டத்துக்குப் புறம்பான, ஒரு வாடகைத் தாயா உபயோகிச்சுக்கிட்டாங்க. அது, அந்தப் பொண்ணுக்கே தெரியாது. இப்ப, இவங்க சுமந்திட்டு இருக்கிற குழந்தையோட, பேரன்ட்ஸ் உயிரோட இல்லை. அதனால், இப்படி இந்தப் பொண்ணை ஒரு வழியாக்கிட்டாங்க போலத் தெரியுது. சோ, நாம என்ன செய்யறது? நீங்க தான் எங்களுக்கு, ஒரு ஐடியா சொல்லணும் " என்று கேட்டான்.

" வாசு ,என்ன இது, இது தான் உண்மையா ? இப்ப நான் சொல்றது இருக்கட்டும், நீ, உங்க வீட்டில என்ன முடிவு எடுக்கப் போறீங்க . தகப்பன் பேரு தெரியாத குழந்தையை வளர்க்கறதுக்கு நீ ரெடியா இருக்கியா.
இல்லைன்னா சொல்லு , பிறந்த குழந்தையைத் தத்தெடுத்துக்கறதுக்கு நிறைய பேர், ரெடியா இருக்காங்க. சொல்லு வாசு " என்று கேட்டாள் சோனா.

" எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை சோனா.
இப்போதைக்கு எனக்கு ரம்யா நல்லபடியா பிழைச்சு வந்தாலே போதும்னு இருக்கு. நீ என் கிட்ட உண்மையைத் தானே சொல்றே. அவ நல்லாத் தானே இருக்கா? அவ வயித்துல இருக்கிற குழந்தை எப்படி இருக்கு ?" என்று சந்தேகக் குரலில் கேட்டான்.

சற்றுத் தயங்கிய சோனா, " இல்ல வாசு, அவங்க கொஞ்சம் கிரிடிக்கலாகத் தான் இருக்காங்க. பிரசவம், கொஞ்சம் சிக்கலாகத் தான் இருக்கும். ஆமா அவங்களுக்குத் துணையா இருக்கறதுக்கு, வேற லேடீஸ் யாரையாவது வரச் சொல்லி இருக்கியா? உங்க அம்மா , அக்கா இப்படி யாராவது " என்று கேட்டாள்.

" அம்மா வந்துட்டு இருக்காங்க.
ஆனால், அவங்க கிட்ட என்ன சொல்லி, அவங்களை எப்படி சமாதானப் படுத்தறதுன்னு தான் தெரியலை சோனா " என்று கலங்கிய குரலில் சொன்னான் வாசு.

" கவலைப் படாதே வாசு. நான் அவங்க கிட்ட பேசறேன் " என்று சொன்னாள் அவள்.
????????????
சாரதா, ரம்யா வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பற்றிச் சொன்னதைக் கேட்டதும் வெண்ணிலா அதிர்ச்சியில் மூச்சு விடவும் மறந்து போனாள்.

சுஷ்மியிடம் அசைவு தெரிந்தது. உடனே, சாரதா அவளை எழுப்பினாள் " ஏய் சுஷ்மி குட்டி! நீ என்ன சாப்பிட்ட உடனே இப்படி தூங்கிப் போயிட்டே. எழுந்திருச்சி குளிக்கப் போகலியா நீ, சரியான அழுக்கு மூட்டையா நீ " என்று தனது பேத்தியைக் கொஞ்சினாள்.

சுஷ்மி , வெண்ணிலாவைக் காட்டினாள் . " அத்தை மட்டும், குளிக்கவே இல்லையே. நீங்க அவங்களைக் குளிக்கப் போகச் சொல்லுங்க முதல்ல " என்று மழலைக் குரலில் சொல்லிட வெண்ணிலாவிற்குக் கண்ணீர் தான் வந்தது. ' கண்ணுக்குத் தெரிஞ்சு இதோ இந்த குட்டிப் பொண்ணு. இன்னும் நமக்குத் தெரியாம எத்தனை பிள்ளைங்க இப்படி இருக்காங்களோ தெரியலியே ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் .

பின்," சரி பாப்பா முதல்ல குளி. அத்தை, செகண்டா குளிக்கறேன் " என்றபடி சுஷ்மியை, குளியலறைக்கு அழைத்துச் சென்றாள் வெண்ணிலா.

சுஷ்மி குளித்து முடித்தவுடன் அவளுக்கு, அழகாகக் கண்ணில் மை தீட்டி, சற்றே நீண்டிருந்த தலை முடியை
இரட்டைப் பின்னலாக மாற்றினாள் வெண்ணிலா.

பின் அவளுக்கென சாரதா எடுத்து வந்திருந்த, ஸ்கர்ட்டை அணிவித்தும் விட்டாள்.

பின் கன்னத்தில் நடு நாயகமாக ஒரு திருஷ்டி பொட்டையும் வைத்து விட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த, சாரதாவுக்குக் கண்கள் கலங்கியது.
??????????
தீபக் கொடுத்த அலைபேசி எண்ணைத் தேடத் தொடங்கி விட்டிருந்த பணியாளர்கள், அவனை வழி நடத்திக் கொண்டிருந்தனர்.




தீபக் வாசுவின் இருப்பிடத்தை கண்டு பிடித்து விடுவானா?
பொறுத்திருந்து பார்ப்போம் நட்புக்களே .
தொடர்ந்து வாசித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
( வரும்)








 
Top