Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ-28

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
28

சுஷ்மி, " எங்க அத்தையை நீ தான் தூக்கிட்டுப் போயிட்டியா? " என்று கேட்டதும், தீபக் ஒரு கணம், ஸ்தம்பித்து நின்று விட்டான்.

ஆனால் ரவி, சட்டென சுதாரித்துக் கொண்டான் .தனது அலைபேசியைக் கையில் எடுத்து , அதில் இருந்த வெண்ணிலாவின் புகைப் படத்தை எடுத்து அந்தச் சிறுமியிடம் காட்டினான்.

" பாப்பா, சொல்லு, இது தான் உங்க அத்தையா? இவங்க இங்கேயா இருக்காங்க? நல்லாப் பாத்துச் சொல்லும்மா " என்று கேட்டான்.

" ஆமாம், ஆமா. இது உனக்கு எப்படி வந்துச்சு. இது என் அத்தை. எனக்கு அழகா டிரஸ் போட்டாங்க, இட்லி ஊட்டினாங்க. ம்..அப்புறமா குளிக்க வச்சாங்க...ஆனா காலையில அவங்க காணோம். நீ பார்த்தியா? " என்று ரவியைப் பார்த்துக் கேட்டாள்.

சுஷ்மியை வாரி அணைத்துக் கொண்ட ரவி, " பாப்பா, இந்த அத்தை இங்க இருந்தாங்கன்னா, அவங்களை யாரு கூட்டிட்டு வந்தாங்க " என்று கேட்டான்.

இந்தக் கேள்விக்கு, சுஷ்மியிடம் பதில் இல்லை. யோசிக்கத் தொடங்கினாள் .
" ஆங் ஆங்..நேத்திக்கு ...ம்ஹீம் நேத்திக்கு முந்தா நாள், அத்தை ஒரு ரூமில இருந்தாங்களா..ரூம் கதவு பூட்டி இருந்துச்சு. அப்புறம் மாமா வந்து தெறந்து விட்டுச்சு. அங்கே தான் இந்த அத்தை இருந்தாங்க " என்று திக்கித் திணறி ஒரு வாறு சுஷ்மிதா சொல்லி முடிப்பதற்குள் அங்கே மூச்சிரைக்க ஓடி வந்த சாரதா, " ஏய், சுஷ்மிதா! இங்கே என்னடி பண்ணிட்டு இருக்கே. நீங்க ரெண்டு பேரும் யாரு? வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க. கந்தசாமி அண்ணே, அண்ணே இவங்க எப்படி வீட்டுக்குள்ளே வந்தாங்க? " என்று செக்யூரிட்டியை அழைத்தாள்.

தீபக், " அம்மா என்னை ஞாபகம் இருக்குது இல்லை? நான் .." அவன் முடிப்பதற்குள் சாரதா, அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.

" நீங்க ...திரும்பவும் எதுக்கு வந்து இருக்கீங்க. அதான், வெண்..." என்று தொடங்கிய அவள், சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

" அதான் நீங்க தேடி வந்த பொண்ணு இங்கே இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டோமே, அப்புறம் எதுக்காகத் திரும்பவும் வந்து இப்படி தொல்லை கொடுக்கறீங்க. போங்க சார் வெளியே " என்று மிகுந்த பதட்டத்துடன் சொன்னாள்.

ஆனால் சுஷ்மி விடவில்லை, ரவியைப் பார்த்து " பாட்டி இந்த மாமா , நம்ம அத்தை போட்டோ வச்சிட்டு இருக்காங்க..." என்று மீண்டும் ஆரம்பிக்க.., சாரதா, " என்னது அத்தையா? யாரு உனக்கு அத்தை ? உள்ளே போ, இப்ப உள்ளே போகப் போறியா இல்லையா, " என்று அவளை அடிக்கத் தனது கைகளை ஓங்கினாள்.

" அம்மா, அம்மா கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்களே வெண்ணிலான்னு ஆரம்பிச்சுட்டீங்க, அப்போ அவங்க , இங்கே தான் இருக்காங்க. அதை மட்டும் மறுக்காதீங்க . அவங்களைக் காணாம, அங்கே ஒரு குடும்பமே, தவிச்சுப் போய் இருக்குது. நான் தான், அவளோட வருங்காலக் கணவர். எங்களுக்குக் கல்யாணம் முடிவாயிடுச்சு. கொஞ்சம் எங்களுக்கு உதவி பண்ணுங்கம்மா. அவ எங்கே இருக்கா? பிளீஸ் சொல்லுங்க " என்று ரவி சாரதாவிடம் கேட்டான்.

அதற்குள் தீபக்கின் அலைபேசி ஒலி எழுப்பியது. " சார், அந்த செல்போன் லொகேஷனை ரீச் பண்றதுக்கு நீங்க உங்களோட இடது பக்கத்தில திரும்பி, இன்னும் ஒரு இருபது அடி தூரம் நடக்கணும் சார். " என்று சொன்னது மறு முனை .

" ஓ.கே, கிருஷ்ணா. நீங்க தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க . அல்மோஸ்ட் நாங்க , குற்றவாளியை நெருங்கி வந்துட்டோம்னு நெனக்கிறேன். அதனால எனக்குக் கொஞ்சம், கூடுதல் போலீஸ்காரங்க தேவைப்படும்னு நெனக்கிறேன். கொஞ்சம், டிஎஸ்பி ரங்கநாதன் சார் கிட்ட பேசி, எனக்கு உதவி பண்ணுங்க. ஏன்னா, என்னால இப்போதைக்கு எந்த எவிடென்சும் கலெக்ட் பண்ணித் தர முடியாது அதனால, அவங்க உதவி செய்ய மாட்டேன்னு சொல்லி மறுக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு . கொஞ்சம் பேசி, எனக்கு உதவி பண்ணுங்க " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசியைக் கிடத்தினான் தீபக்.

பின் அவன் சாரதாவை நோக்கி " அம்மா, நீங்க தப்பிக்கவே முடியாது. வெண்ணிலாவை இங்கே தான் நீங்க, ஒளிச்சு வச்சி இருக்கீங்க. இப்ப எனக்குத் திரும்பவும் ஒரு கிளூ கிடைச்சிருக்கு..நீங்களா உண்மையைச் சொல்லிடுங்க . இல்லைன்னா, இதோட விளைவுகள், உங்களுக்கு ரொம்ப சிக்கலைக் கொடுத்திடும் " என்று மிரட்டினான் தீபக்.

" தம்பி, எனக்கு ஒன்னும் தெரியாது தம்பி. வெண்ணிலா இங்கே ஒன்றரை நாள் வரைக்கும் இங்கே தான் இருந்தா. நான் தான் அவளைப் பார்த்துக்கிட்டேன்..ஆனா இன்னிக்குக் காலையில இருந்து அவளைக் காணோம் தம்பி. இதோ இந்தப் பாப்பாவைப் போல, நானும் அவளைத் தான் தேடிட்டு இருக்கேன் " என்றாள் சாரதா.

" அப்ப, இன்னிக்குக் காலையில இருந்து நீங்க அவளைப் பார்க்கலைன்னு சொல்றீங்க அப்படித் தானே ," என்று தீபக் அதட்டல் தொனியில் கேட்க, சாரதா, " ஆமாம் தம்பி. நான் சொல்றது நிஜம் தான் . வாசு தான் அவளை இங்கே கூட்டிட்டு வந்து அடைச்சி வச்சிருந்தான். ஆனா அவனால் இப்ப வரைக்கும், அந்தப் பொண்ணுக்கு எந்த விதமான ஆபத்தும் நடந்துடலை, இது என் மேல சத்தியம் " என்று சொன்னாள் சாரதா.

"சரி, அப்ப வாசுங்கிறது யாரு? " என்று கேட்டான். " வாசு என் பிள்ளை தான்." என்றாள் சாரதா.

" அப்ப இந்தப் பாப்பா, அவரோட குழந்தையா? " என்று கேட்டான்.

ஒரு கணம், அமைதி காத்த சாரதா , " இல்லை " என்றாள்.

இருவர் பேசுவதையும் மாற்றி, மாற்றிக் கவனித்துக் கொண்டிருந்த சுஷ்மிதா திடீரென அழத் தொடங்கினாள் ." பாட்டி, வாசு மாமா எங்கே , அத்தையும் காணோம், மாமா காணோம் " என்றவாறே.

அதற்குள், நிலவறையில் இருந்து, குதித்தோடி வந்த வாசு, சுஷ்மிதாவைத் தூக்கிக் கொண்டான்.

" டேய், உன் கிட்ட காலையிலேயே, எச்சரிக்கை பண்ணி அனுப்பி வச்சேனே. இப்ப, எதுக்காகத் திரும்பவும் வந்தீங்க? முதல்ல வெளியே போங்க " என்று தீபக்கிடம் எரிந்து விழுந்தான்.

" குற்றம், உறுதி ஆயிடுச்சு மிஸ்டர் வாசு. இனி நீங்க தப்பிக்கவே முடியாது. இதோ இன்னும் அரை மணி நேரத்தில , மொத்த போலீஸ் படையும் இங்கே வந்துடும். வெண்ணிலாவைக் கடத்தினதோட மட்டுமில்லாம, இன்னும் ஏதேதோ சட்டத்துக்குப் புறம்பான வேலைகளையும் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்கன்னு நாங்க சந்தேகப் படறோம். அதனால நீங்களா சரண்டர் ஆகிடுங்க. அப்படி செஞ்சீங்கன்னா, உங்களுக்குக் குறைஞ்ச பட்சம் தண்டனை மட்டுமே கிடைக்கும். இல்லைன்னா , என்னால எதுவும் சொல்ல முடியாது ..." என்று வாசுவைக் கடுமையாக எச்சரித்தான் தீபக்.

" டேய், நீ தான் வாசுவாடா? எங்கேடா என்னோட நிலா. வெண்ணிலா எங்கேடா, சொல்லுடா. அவளை எங்கே மறைச்சு வச்சிருக்கே? " என்று வாசுவை சமீபித்து வந்த ரவி, அவனது சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கியபடி ஆத்திரக் குரலில் கேட்டான்.

அவன் வசம் இருந்த தனது சட்டைக் காலரை, விடுவித்துக் கொண்ட வாசு, " ஓ , நீ தான் மிஸ்டர் ரவிச்சந்திரனா. உன்னோட நிலா எனக்கு சொந்தமாகி ரொம்ப நேரமாயிடுச்சு " என்று சொல்லி விட்டு சிரிக்கத் தொடங்கினான் வாசு.

அப்போது அவனது அலைபேசி ஒலித்தது. அதனை எடுக்காமல் தாமதித்தான் வாசு.

அலைபேசி மீண்டும், மீண்டும் ஒலித்துக் கொண்டு இருந்தது.
சரேலென அவனை மடக்கிப் பிடித்த தீபக், அவனது , பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை உருவி, அதனை ஆன் செய்து, மறு முனையில் ஒலித்த குரல் தெரிவித்த செய்தியை மௌனமாக உள் வாங்கிக் கொண்டான்.

அவனது முகம் கோபத்தில் செம் பிழம்பாக ஜொலித்தது.

மறு முனையில் அழைத்துப் பேசியது மருத்துவர் ஷீபா. " டாக்டர் வாசு, குழந்தை பத்திரமா இருக்கா. ஆனா, அதோட அம்மா தான் போய் சேர்ந்துட்டா. பாடியை வழக்கம் போல டிஸ்போஸ் பண்ணிடலாமா டாக்டர் " என்று கேட்டாள், ஷீபா .
தனது, குரலை மாற்றி வாசுவுடையதாக்கி, " ம்ம், செய்யுங்க " என்று உணர்ச்சி அற்றுப் போனவனாகிப் பேசினான் தீபக் .

அப்போது தானே, இங்குள்ள ரகசிய இடங்கள் பற்றி அவனுக்கு முழுமையாகத் தெரிய வரும்.

பின் வாசுவை, இரு கன்னங்களிலும் மாற்றி, மாற்றித் தனது ஆத்திரம் தீரும் வரை அறைந்தான்.
சாரதா கதறினாள். " சார், என் பிள்ளையை விட்டுடுங்க. அவன் தன் தங்கையைக் காப்பாத்த முடியலைன்ற குற்ற உணர்ச்சில தான் இப்படி எல்லாம் பண்ணிட்டான். இதோ, இந்தப் பச்சை பிள்ளையைப் பாருங்க. இவ முகத்துக்காகவாவது நீங்க, அவனைக் கொஞ்சம் விட்டுங்க தம்பி. " என்று தீபக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

. " அம்மா, நீங்க உங்க பிள்ளைக்காக அழறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவன், நல்லவன் கிடையாது. அதை நான் சொல்ல வேண்டியது இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில நீங்களே புரிஞ்சுக்குவீங்க " என்று சொன்னான் தீபக்.

அவன் வாய் தான் பேசிக் கொண்டு இருந்ததே தவிர, அவனது கண்கள் சுற்று முற்றும் அலை பாய்ந்து கொண்டே தான் இருந்தது.
அவன் எதிர்பார்த்தது எதிர்பார்த்தது போல நிலவறை கதவு திறக்கப் பட்டது.

ஸ்டிரெச்சரில், எவர் செய்த குற்றத்திற்காகவோ , தன் உயிரை மாய்த்துக் கொண்ட, அந்தப் பெண்ணின் சடலம் மேலே கொண்டு வரப் பட்டது.
அதன் பின்னே இரண்டு மருத்துவமனை ஊழியர்களுடன் மருத்துவர் ஷீபா வந்து கொண்டிருந்தாள்.

தீபக்கின் கவனம் மொத்தமும், அங்கே திரும்பி விட, அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்ட வாசு, தனது சட்டைப் பையில் இருந்த, கூர் முனைப் பேனாக் கத்தியை, உருவி எடுத்து, அதனை ரவியின் கழுத்துக்குக் கொண்டு சென்றான்.

" டேய், போலீஸ்காரா. உடனே இந்த இடத்தை விட்டுப் போய்டு. இல்லைன்னா மாப்பிள்ளைக்கு நம்ம கையால தான் சாவு " என்று மிரட்டினான் .

இதனைச் சற்றும் எதிர்பாராத தீபக், " டேய், டேய் உடனே கத்தியைக் கீழே போடு . போடுடா. இல்லைன்னா நடக்கறதே வேற " என்று கத்தினான் .

வாசு, சாரதாவிடம் " அம்மா சொல்றதைக் கேளு. நீ பாப்பாவைத் தூக்கிட்டு உள்ளே போ ,போ போயிடு. இங்கே நிக்காதே நீ " என்று ஆணை இட்டான்.

சாரதா ," வாசு, ஏன்டா நீ இப்படி எல்லாம் பண்றே? ரம்யாவோட வாழ்க்கை தான் இப்படி, ஒன்னுத்துக்கும் இல்லாம ஆகிப் போயிடுச்சே. நீயாவது நல்லா வாழ்ந்து உங்க அப்பா பேரைக் காப்பாத்துவேன்னு நெனச்சேன். ஆனா நீ..எப்படிடா தம்பி இந்த அளவுக்கு மாறிப் போனே? கடவுளே..இதுக்காகவா நான் உங்களை வெளியூருக்கு எல்லாம் அனுப்பிப் படிக்க வச்சேன். டேய் வாசு, அம்மா நான் சொல்றேன். அந்தக் கத்தியைக் கீழே போடுடா. போட்டுட்டு நீயே தம்பி கிட்ட மன்னிப்பு கேட்டு, நீ செஞ்ச தப்பை எல்லாம் ஒத்துக்க . கடவுள் இருக்காரு. அவர் பார்த்துப்பாரு. ம், கத்தியைக் கீழே போடுடா " என்று மிகுந்த ஆதங்கத்துடன், அவனைப் பார்த்துக் கத்தினாள்.

அதற்குள் தீபக் சொல்லி இருந்ததைப் போல அவன் எதிர்பார்த்த இடத்தில் இருந்து காவல் படை வீரர்கள் வந்து விட்டிருந்தனர். அவர்கள் அந்த, இடத்தை முழுமையாக முற்றுகை இட்டனர்.

போலீஸ் படையைக் கண்ட மருத்துவர் ஷீபா, அங்கிருந்து ஓட முயற்சித்தாள் அதற்குள், அவளது
ஓட்டத்தைத் தடுத்த தீபக், " வாங்க, அந்த டாக்டரை முதல்ல பிடிங்க .எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமே அவங்க தான் " என்று ஆக்ரோஷக் குரலில் சொன்னான்.

" வராதீங்க யாரும் அவங்க பக்கத்தில வராதீங்க. எல்லாரும் அப்படியே திரும்பிப் போயிடுங்க " என்று வாசு உரத்த குரலில் எச்சரித்தான்.

அவனது பிடிக்குள் ரவி, அசைவற்றவனாய் நின்று கொண்டிருந்தான்.
( வரும்)

ஹாய், ஃபிரெண்ட்ஸ் அடுத்த எபி போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க, கருத்துக்களைச் சொல்லுங்க. மிக்க நன்றி.










 
நிஐமா வாசுவை ஒரு குற்றவாளியா பாக்க முடியல.... ஆனால் திடீரென ரவி மேல சந்தேகம் வருது ...?
சூப்பர் 😀
 
Top