Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ; 30

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
30
ரவிச்சந்திரனுடன் இணைந்து, மேல் தளத்துக்கு ஏறி வந்த, வெண்ணிலா, அங்கே நிலவிய அசாதாரணமான சூழலைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் போனாள்.
அவளை வாசு, இங்கே அழைத்துக் கொண்டு வந்தபோது மயக்கத்தில் , இருந்தமையால், அந்த வீட்டின் வெளிப் புறம் அவளால் கவனிக்கப் படாததாகவே இருந்தது.
ரவியின் அருகாமையில் அவளுக்கு, இப்போது மிகுதியான ஆசுவாசம் எழுந்தது.
அந்தச் சுற்றுப் புறத்தைத் தனது விழிகளால், அலசிக் கொண்டு இருந்த வெண்ணிலாவுக்கு, " வாசு, எதுக்குடா உனக்கு இந்த கேடு கெட்ட பொழப்பு. இதோ பாருடா, ரம்யா உன் கிட்ட, நம்பி ஒப்படைச்சிட்டுப் போன, அவளோட உசுரு. இந்த முகத்தைப் பார்த்துக் கூடவா உனக்கு இப்படி எல்லாம் அக்கிரமம் பண்ணத் தோனுச்சு. எனக்கே தெரியாம , எத்தனை எத்தனை, பித்தலாட்டங்களைப் பண்ணி இருக்கே நீ? இதை எல்லாம் நான் உன் கிட்ட கேட்டேனாடா? உன் படிப்புல, நீ நேர் வழியிலே சம்பாதிச்சுக் கொடுக்கற காசுல தான் நான் இத்தனை நாள் குடும்பம் நடத்திட்டு இருக்கிறதா நெனச்சேனே பாவி. இப்படி அக்கிரமம் பண்ணினதுல கிடைச்ச காசு எனக்குத் தேவையே இல்லை. நான், இதோ இவளைக் கூட்டிட்டு, நம்ப ஊருக்கே போறேன். அங்கே, எனக்கு இன்னமும் உறவுகள் காத்துக்கிட்டு இருக்கு. நான் போறேன் " என்று கூச்சலிட்டு கொண்டிருந்த சாரதாவின் முகம் தெரிந்தது.
சுஷ்மியின் அழுகை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. வீறிட்டு அழுது கொண்டே இருந்த அந்தக் குழந்தைக்குத் தன் மாமன் எங்கோ தன்னை விட்டுப் போகிறான் என்பது மட்டுமே தெரிந்தது.
அப்போது தான், போலீஸ் ஜீப்பில் விலங்கு பூட்டிய கரங்களுடன் அமர்ந்து கொண்டிருந்த ஷீபாவையும், வாசுவையும் வெண்ணிலா கவனித்தாள்.
" மேம் நீங்க எங்களை எல்லாம் வேலைக்கு வச்சி சம்பளம் கொடுக்கறீங்க. உங்க பேருக்குப் பின்னால, எத்தனையோ டிகிரிகளைப் போட்டு வச்சிருக்கீங்க? ஆனா இப்படி,
உயிரோட விளையாடறதுக்காகவா, இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு வந்தீங்க?
உங்களைப் பார்க்கவே எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்குது " என்று கோபக் குரலில், பேசிய அவள் வாசுவின் பக்கம் திரும்பக் கூட இல்லை .
அதற்குள், அழுது கொண்டிருந்த குழந்தை சுஷ்மி, அவளிடம் ஓடி வந்தது. " அத்தை, நீங்க வந்துட்டீங்களா? பாரு அத்தை, மாமாவை எங்கேயோ கூட்டிட்டுப் போறாங்க. உனக்கு மாமாவைப் பிடிக்கும் தானே அத்தை? அதனால நீ மாமாவை எப்படியாவது விடச் சொல்லு அத்தை " என்று கெஞ்சத் தொடங்கினாள்.
அப்போதும் அவள் வாசுவை ஏறிட்டும் பார்க்கவில்லை.
ஆனால், சுஷ்மியின் அழுகையைக் காணச் சகித்திடாமல், அவளைத் தூக்கிக் கொண்டாள்.
" அழாதே சுஷ்மி , மாமாவை இப்ப விட மாட்டாங்க. நீ அழாதே செல்லம் " என்று வேதனை ததும்பிய குரலில் சொல்லிய அவள், சாரதாவின் பக்கம் திரும்பினாள்.
" அம்மா , இந்த மாதிரி ஒரு, அயோக்கியன் கிட்டயும் நான் பாதுகாப்பா இருந்தேன்னா , அதுக்கு நீங்க தான் காரணம்மா. ரொம்ப தேங்க்ஸ்மா " என்று சொல்லி விட்டு அவளது கைகளைத் தன்னோடு பிணைத்துக் கொண்டாள்.
சாரதா, அவள் பேசிய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தவளாய், குமுறி அழத் தொடங்கினாள்.
அதற்குள் நிலவறைக்குள் இருந்த கோப்புகள், மருந்துகள் யாவும் கைப்பற்றப் பட்டன.
மயக்கத்தில் இருந்த பெண்களை அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்திட , ஆம்புலன்ஸ் வண்டி தருவிக்கப்பட்டது.
அவர்கள் ஐவரும் கர்ப்பிணிப் பெண்கள். ஆனால் அவர்கள் யார்? வெண்ணிலாவைப் போல வாசுவினால் கடத்தப் பட்டவர்களா? என்பது போன்ற கேள்விகளுடன், தீபக் ரவியை நாடி வந்தான்.
ரவி, இன்னமும்
வெண்ணிலாவை அணைத்தபடி, அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.
" டேய், ரவி இவங்களை நீ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலையா இன்னும். அவங்களை வீட்டில விட்டுட்டு வா. இங்கே உனக்கு நிறைய வேலை இருக்கும் போல. பைக்லயே போயிடறியா, இல்லை உனக்கு ஏதாவது டாக்ஸி புக் பண்ணித் தரட்டுமா " என்று கேட்டான்.
சட்டென விலகி நின்று கொண்ட வெண்ணிலா, தீபக்கைக் கேள்விக் குறியுடன் நோக்கினாள்.
" ரவி, என்னை அறிமுகப் படுத்தி
வக்கிற மனநிலையில இல்லைன்னு நெனக்கிறேன். பை த வே , நான் தீபக். இவனோட கிளாஸ்மேட், அண்ட் பெஸ்ட் ஃபிரெண்டு " என்றபடி அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவன் அப்போது காவலரின் சீருடையில் இல்லாததால், " வணக்கம் அண்ணா " என்று தனது கைகளைக் கூப்பிய வெண்ணிலாவிடம், " இவன் கிட்ட தான், நான் நீ காணாமப் போன விஷயத்தைச் சொல்லிட்டு, வெளி உலகத்துக்குத் தெரியாத மாதிரி, தேடச் சொன்னேன் " என்றான் ரவி.
" அப்படியா..ர..வி.. " என்று தயங்கிய வெண்ணிலாவை, " அமைதியா இருங்க சிஸ்டர். வீட்டுக்குப் போய், நல்லா ரெஸ்ட் எடுங்க. நான் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வர்றேன். அப்ப பேசிக்கலாம் " என்று பரிவுடன் சொல்லிய, அவனைப் பார்த்துக் கண் கலங்கினாள் வெண்ணிலா.
பின் ரவியைப் பார்த்து, " நாம போகலாம் " என்றபடி அங்கிருந்து
நகரத் தொடங்கினாள்.
உடனே அவளது சுடிதார் துப்பட்டா முனையைத் தன் வசம் பிடித்து இழுத்துக் கொண்ட சுஷ்மி, " அத்தே, அத்தே. நீயும் போறியா அத்தை, என்னை விட்டுட்டு, பாப்பா பாவம் அத்தை, போயிடாதே அத்தே " என்று கதறினாள் .
சாரதா, " ஏய் பாப்பா குட்டி .அத்தையை விடும்மா அவங்க வீட்டுக்குப் போகட்டும். நாம ரெண்டு பேரும் நாளைக்கு ஊருக்குப் போவோம். அங்கே உனக்கு, இதே போல உனக்கு நிறைய அத்தைங்க கிடைப்பாங்க " என்று சொல்லி அவளது கண்களைத் துடைத்து விட்டாள்.
" வெண்ணிலா, போகாதேடி வெண்ணிலா. என்னோட உயிரே நீ தான்டி. என்னை விட்டுட்டுப் போயிடாதே வெண்ணிலா " என்று அது வரையில் அமைதியாக இருந்த வாசு கதறத் தொடங்கினான்.
வெண்ணிலா தயங்கியபடி நின்று கொண்டிருந்தாள். தீபக் வாசுவை எரித்து விடுவது போலப் பார்த்தான் .
" ரவி நீ எதுக்கு இங்கே இன்னும் நின்னுட்டு இருக்கே? போ, கிளம்பு. இதுக்கு மேல, வெண்ணிலா இங்கே இருக்க வேண்டாம் " என்ற தீபக்கின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, இருவரும் அங்கிருந்து வெளியேறிட முயற்சித்தனர்.
" அம்மா, என்னம்மா நீ இப்படி சும்மா, அவ போறதையே பார்த்துட்டு நிக்கறே. அவளைக் கூப்பிடும்மா, அவளை வரச் சொல்லும்மா. நம்ம சுஷ்மி பாப்பாவை , உனக்கு அப்புறம் அவளை விட்டா, வேற யாரும்மா பார்த்துப்பாங்க " என்று சாரதாவைப் பார்த்துக் கதறத் தொடங்கினான்.
சாரதாவும் , தன் கண்களின் கசிவை, அணையிட்டுத் தடுத்திட முயற்சித்தாள்.
ஆனால், விழி வழியே புறப்பட்ட, நீரானது அவளது கன்னங்களைத் தாண்டி, மாரில் விழுந்தது.
பெரும் பாடுபட்டுத் தனது விசும்பலைத் தவிர்த்த அவள், " டேய் அழாதேடா வாசு. இப்ப அழுது என்ன பிரயோஜனம்? நீயே சொல்லு. நான் எந்த உரிமையில வெண்ணிலாவைக் கூப்பிடுவேன். அவ என்ன நீ தாலி கட்டின பொண்டாட்டியா. இன்னமும் கூட நீ செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டேங்கிற பார்த்தியா? ஏன்டா உன் மனசு இப்படி கல்லாப் போச்சு? சொல்லுடா! உன் சம்பந்தப்பட்ட குற்றங்களை எல்லாம் விவரமாச் சொல்லி எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேளுடா. ம்ம், கேளு தம்பி " என்று தன் மகனிடம் கெஞ்சத் தொடங்கினாள் அவள்.
வாசு, " நான் எதுக்காகம்மா மன்னிப்பு கேட்கணும்? சொல்லும்மா, நான் எந்தத் தப்பும் பண்ணலையே. அம்மா, உனக்கு ஞாபகம் இருக்குதா? ரம்யா, இறந்த விஷயத்தை, நீ அப்பா கிட்ட சொன்னே இல்லையா ? அதுக்கு அவரு என்னம்மா சொன்னாரு? சொல்லு ம்மா " என்று சாரதாவை வற்புறுத்தினான்.
சாரதா தன் வாழ்வின் அந்த இருள் நாளை நினைவு கூர்ந்தாள்.
?????
கண்ணுக்கு எதிரே தன் மகள் பிரேதமாகக் கிடந்த, அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உயிரற்றவளாய் நின்று கொண்டிருந்த, சாரதா, தன் கணவனிடம், இந்த பேரதிர்ச்சியைத் தந்த செய்தியை எப்படி சொல்வது என்று தவித்துப் போனாள்.
ஒருவாறு, தன்னைத் தேற்றிக் கொண்ட அவள், " ஏங்க, நம்ம ரம்யா நம்மளை விட்டுட்டுப் போயிட்டாங்க, கடைசியா அவ முகத்தைப் பார்க்கறதுக்காகவது நீங்க இங்கே, வந்துட்டுப் போங்க " என்றாள்
ஆனால் மறு முனையில் இணைப்பில் இருந்த அவளது கணவரோ , " ஏய், முதல்ல போனை வைடி. இந்த மாதிரி, மானத்தை வித்துப் பொழப்பை நடத்தறவளுக்கு எல்லாம் அப்பான்னு சொல்லிக்கவே எனக்குக் கூசிப் போகுது. என்னவோ செஞ்சி தொலை. ஆனா இனிமே, உங்க வாழ்க்கைல நான் ஒருத்தன் இருக்கேன்றதையே நீ மறந்துடு . இப்ப போனை வை " என்று ஆக்ரோஷக் குரலில் சொன்னார்.
அத்தோடு இணைப்பும் துண்டிக்கப் பட்டது.
அதன் பின், தனது கணவரிடம் பேச அவளுக்குத் தைரியமும் இல்லை , மனமும் வரவில்லை.
" ம் சரி, அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? " என்று தன் மகனைக் கேட்டாள் சாரதா.
" அதுக்கப்புறம், நாம எவ்வளவு சிரமப்பட்டு, அவளோட காரியங்களை எல்லாம் செஞ்சி முடிச்சோம். அவளோட சாவுக்கு நம்ம ரெண்டு பேரையும் தவிர யாரும்மா வந்தாங்க? தெரியாம அவ வாழ்க்கையில நடந்த ஒரு தப்பு நம்ம வாழ்க்கையையே எப்படி எல்லாம் புரட்டிப் போட்டுடுச்சி பார்த்தியா " என்றான் வாசு.
அந்த இடத்தில், அவனது குரலைத் தவிர வேறெந்த ஒலியும் இல்லை. மரங்கள் கூட அசைவற்று நின்றபடி அவனது, வாக்கு மூலத்தைக் கேட்டுக் கொண்டு இருந்தன.
" அதான்மா , நான் டாக்டர் ஜென்சி கொடுத்த பிராஜெக்ட்டுக்கு ஓ.கேன்னு சொன்னேன். ஏன்னா கோடிக் கணக்கில், பணம் கைல இருந்தா, தப்புப் பண்றவங்க எல்லாரும் தலைவர்களா மாறிடறாங்களே " என்று அலட்சியக் குரலில் சொன்னான் வாசு.
தனது, வாக்குமூலம் வீடியோவில்
பதிவு செய்யப் படுகிறது என்பதைத் தெரிந்து கொண்ட அவன், " சார் , நான் எல்லாத்தையும் சொல்லத் தான் போறேன். எனக்கு எந்தத் தண்டனையும் வேண்டாம்னு நான் உங்க கிட்ட கெஞ்சப் போறது இல்லை. எனக்கு வேண்டியது எல்லாம், இதோ நான் பெறாத என் மகளுக்கான, நல்ல வாழ்க்கை: அது மட்டும் தான். அது மட்டும் எனக்குப் போதும் " என்றான்.
( வரும்)

 
Nice update..
தங்கைக்கு நடந்ததுக்கு பழி வாங்கினா கூட ஓகே... அதை விட்டுட்டு அவளை மாதிரி இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சுட்டு நியாயம் பேசுறான்... ?
 
Nice update.Why Vasu is doing this heinous thing joining hands with the very same people
who were responsible for his sister’s b condition and death?
 
இவனுக்கு என்ன மூளை குழம்பிச்சா என்ன ..?
தங்கையை போல் பாதிக்க பட்டவங்களை காத்து ...பாதுகாக்கிறான் என நினைத்தேன் ..🤧
சூப்பர் 😀
 
Top