Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 4 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

“நீ பேசறது கொஞ்சமும் சரியில்லை நேத்ரா. அவளை அழவிட்டு நீ வந்துட்ட. என்னையும் அவக்கிட்ட பேசவிடலை. ரோஷி நிச்சயம் எதுவும் பேசபோறது இல்லை. உனக்கு ராகினியை விட அந்த ஆனந்த் முக்கியமா போய்ட்டானா?...”

அவளின் ஆவேசத்திற்கு கொஞ்சமும் முகம் மாறாத நேத்ரா,

“எனக்கு யார் முக்கியம்னு உனக்கே தெரியும். தெரிஞ்சும் கேட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. நிரூபிக்கணும்னு அவசியமும் இல்லை. இந்த விஷயத்தை இத்தோட நிறுத்தினா நல்லது...”

திட்டவட்டமாக அழுத்தமான குரலில் நேத்ரா கூற வனமலர் பேசமுடியாமல் உள்ளுக்குள் குமுறினாள்.

“கொஞ்சமும் இளக்கம் காட்டாம எப்படி பேசறா? இவளுக்கு இருக்கிற திமிர் என்னைக்கும் குறையாது...”

மனதில் நினைத்தாலும் ஆனந்தை விட ராகினி தான் நேத்ராவிற்கு முக்கியம் என்பதில் வனமலருக்கு நிச்சயமே. ஆனாலும் அவள் மேல் வருத்தம் எழாமல் இல்லை.

“ராகினி செய்தது தவறுதான். அதை திருத்திக்க அவளுக்கொரு வாய்ப்பே கொடுக்காமல் தண்டிப்பது மட்டும் சரியா?...” தனக்குள் தான் கேட்டுகொண்டாள் வனமலர்.

தவறியும் இதே வார்த்தையை நேத்ராவிடமோ ரோஷிணியிடமோ கேட்டுவிடமுடியாது. ஆனந்த் விஷயத்தில் ராகினியை விடுத்து இருவரும் அவனிற்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

ராகினியும் இவர்களிடம் போராடி போராடி ஓய்ந்துபோனது தான் போனாள். அறியாத தவறை அறிந்தே தானே செய்தாள்.
ஆனந்தின் இதயத்தை கத்தியால் கூரிட்டு குருதியும் கண்ணீரும் கொப்பளிக்கவைத்தவள் இன்று மரித்த மனதிற்கு மருந்திடுகிறேன் என வந்து நிற்பதை அவன் ஏற்றுகொள்ளாமல் இவளை அலைப்புற செய்கிறான்.

வனமலர் ராகினியை பற்றியே சிந்தனையில் நிற்க நேத்ரா அவளை அழைத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்றாள்.

“ஹே கூழ்வண்டி இந்தா இதை குடி. ரொம்ப டயர்டா இருப்பல...” என ஒரு கூல்ட்ரிங்க்ஸ் டின்னை அவள் புறம் வைத்துவிட்டு ரோஷிணியின் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள்.

“ரோஸ் இந்த கட்டுமரம் பத்தின டீட்டயில்ஸ் கொஞ்சம் கலெக்ட் பண்ணனுமே. யார்க்கிட்ட விசாரிக்க சொல்லலாம்?...” என யோசனையாக பார்க்க,

“அதான் இருக்கவே இருக்காருல நம்ம ராசு அண்ணா...”என்று ரோஷிணியும் அவளுக்கு எடுத்துக்கொடுத்தாள்.

தன்னை கண்டுகொள்ளாமல் அவர்கள் அலட்சியம் செய்வதை ராகினி உணர்ந்தாலும் தனக்கு இது தேவைதான் என மனதினுள் நொந்துகொண்டு மௌனமாகி வேடிக்கை பார்த்தாள்.

ராகினியின் நிலை வனமலருக்கு வருத்தத்தை அளித்தாலும் ஒன்றும் பேசாமல் அவளின் கைகளை ஆறுதலாக அழுத்திக்கொடுக்க ராகினி மெல்ல புன்னகைத்தாள்.

அப்புன்னகையில் தான் எத்தனை வலிகள்?
கல்லூரியை ஒரு சுற்று சுற்றிவிட்டு தன்னறைக்கு வந்து அமர்ந்தவனின் மூச்சுக்காற்றில் கூட அத்தனை உஷ்ணம்.

“ஓ காட், டிஸ்கஸ்டிங்...” என தலையை அழுந்த தேய்த்துக்கொண்டவன் விழிகளுக்குள் நேத்ரா வந்து நிற்க,
“டாமிட். நான் யார்னு தெரிஞ்சும் கொஞ்சமும் பயமில்லாம எப்படி பார்க்கா? அவளை...” என கண்கள் சிவக்க நினைத்தவனுக்கு நேத்ராவை கொன்றுவிடும் வெறி பிறந்தது.

எந்த வாழ்க்கை வேண்டாம் என்று தனக்கென்று ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டிருந்தானோ அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்து வாழ்வின் திசையை மாற்றிவிட்டாளே!

நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. சுமங்கலியின் ஓங்கிய கைகள் நினைவடுக்கில் வலம் வர தாடை இறுகியது இவனுக்கு.

மொத்த ரத்தமும் சூடாகி அனலென கொதிக்க, “இவளை நான் பார்த்திருக்கவே கூடாது...” எத்தனை முயன்றும் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவே அவனால் முடியவில்லை.

அதே நேரம் நேத்ராவின் ஹெச்ஓடி கந்தன் வந்து நிற்கவும் காய்ச்சி எடுத்துவிட்டான் அவரை. பதில் பேசமுடியாமல் ரிஷியின் கோபத்திலும் சூடான பேச்சிலும் மிரண்டுதான் போனார் அவர்.

அப்படி என்ன அவளின் மேல் துவேஷம்? துரைச்சாமியிடம் காட்டமுடியாத கோபத்திற்கு வடிகாலாக நேத்ராவை கொண்டுவந்து நிறுத்தினான். அவளை வைத்துதானே தனக்கிந்த தண்டனை என பொங்கியது அவன் உள்ளம்.
இனி இந்த வாழ்க்கை தான் தனக்கு நிரந்தரம் என்ற எண்ணமே வேப்பங்காயாக கசந்தது.

சிறு பெண் மேல் இத்தனை வன்மம் கூடாது என ஒரு மனம் இடித்துரைக்க தன் நிலைக்கு நேத்ராவும் ஒரு காரணம் தானே என நேத்ராவிற்கு எதிராக அவனின் இன்னொரு மனம் வாதாடியது.

எத்தனை முயன்றும் ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் திணறியவன் அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் வேகமாக கிளம்பிவிட்டான்.

வெளியே வந்தவனின் கண்களில் நேத்ரா விழுந்தாள். வனமலரோடு வம்பிளுத்தபடி முகம் கொள்ளா புன்னகையோடு சலசலத்துக்கொண்டே அவனை கடந்தவளை எரித்துவிடுவது போல பார்த்தான் ரிஷி.

தன்னை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் தன் போக்கில் செல்பவளை பார்க்க பார்க்க பற்றி எரிந்தது உள்ளுக்குள்.
நேத்ராவோ அவனை கவனிக்கவே இல்லை. அவனானால் தன்னை அவமதித்து அலட்சியமாக அவள் சென்றுவிட்டதாகவே முடிவு செய்தான்.

“இவளுக்கு சரியான பாடத்தை நான் கத்துக்குடுக்காம விடப்போறதில்லை. இருக்குடி உனக்கு...” சூளுரைத்த மனதோடு தன் காரை எடுத்துக்கொண்டு காரைக்குடி நோக்கி சென்றான்.

வேக எட்டுக்களோடு புயலென வீட்டுக்குள் நுழைந்தவனை எதிர்கொண்ட சுமங்கலி,
“ரிஷி என்ன இவ்வளோ டென்ஷனா இருக்க? தலை வலிக்குதா?. பில்டர் காபி கொண்டுவர சொல்லட்டுமா?...”

வாஞ்சையாக கேட்டபடி எதிரே வந்து நின்ற தாயை கண்டவனின் வேகம் தடைபட பெற்றவளின் கனிந்த முகத்தை கண்டு அவனின் கொந்தளித்திருந்த மனம் கொஞ்சம் அமைதிப்பட்டது. சோபாவில் விக்ராந்தையாக அமர்ந்தவன் சட்டையின் முதல் இரண்டு பட்டன்ங்களை கழட்டி தளர்த்தியவன் தலையை அழுந்த கோதிக்கொண்டான்.

அவனருகில் அமர்ந்த சுமங்கலி, “காலேஜ்ல எதுவும் டென்ஷனா? ரொம்ப கோவமா இருக்கிறது போல தெரியுதே?...”

“நத்திங் ம்மா...” அவரின் தோளில் சலுகையாக சாய்ந்துகொண்டவன்,
“ரெண்டு நாளா தானே காலேஜ் பொறுப்பை எடுத்திருக்கேன். கொஞ்சம் பிக்கப் பண்ண டைம் எடுக்குமே. வேற ஒன்னும் இல்லை மாம்...”

தாய் வருந்த கூடாதே என்று சமாளித்தவன்,
“நான் போய் ப்ரெஷ் ஆகறேன். எனக்கு ஒரு டென்மினிட்ஸ் கழிச்சு காபி அனுப்புங்க. செல்லம்மாவை போட சொல்லுங்க மாம். ஒரு ஆர்வத்துல நீங்க போட்டுட போறீங்க...”

வேண்டுமென்றே குறும்பாய் கூறி சிரித்தவன் தாயின் முறைப்பில் வேகமாக மாடியேறிவிட்டான்.

சுமங்கலிக்கு தெரியும் அவனின் இந்த உற்சாகமும் குறும்பும் தனக்கே வரவழைக்கப்பட்டது என்று.

ஆனாலும் அவனின் போக்கில் விடமுடியாதே. விட்டால் பின் பிடிக்கவே முடியாது என்பது குடும்பமே அறிந்த உண்மை. அப்பேர்ப்பட்ட பிரசித்தி பெற்ற குணம் ரிஷியினுடையது.
ஒரு பெருமூச்சோடு செல்லம்மாவை தேடி சென்றார் சுமங்கலி.

அறைக்குள் வந்த ரிஷி முகத்தை கழுவிவிட்டு வேறுடை மாற்றி பால்கனியில் சென்று அமர்ந்தான்.
காலையில் இருந்து கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை வரிசையாக மனம் அசைபோட இறுதியில் தான் கோபமாக கிளம்பியதில் வந்து நின்றது அவனின் எண்ணங்களின் பயணம்.

“நேத்ரா சரியான ராட்சஸி...”வாய் முணுமுணுக்க.

எங்கே நேத்ராவை தான் விரும்பி இருப்போமோ, காதல் என்று வந்து நின்றுவிடுவேனோ என்று பயந்துதானே தாத்தா அவனை தன் கட்டுப்பாட்டில் வைக்க கல்லூரி பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நேத்ராவே தன் கல்லூரியில் தான் படிக்கிறாள் என்று அறிந்தால் துரைச்சாமியின் முகம் எப்படி இருக்கும்? நினைக்கும் பொழுதே ரிஷியின் முகம் புன்னகை பூசியது.

மறு நொடியே, “நானாவது அவளை விரும்புவதாவது?...” சிலுப்பிக்கொண்டவன் நொடியில் பாறையாக இறுகிப்போனான் ரிஷி.

என் கனவுகள் எல்லாத்தையும் தரைமட்டமாக்கியது அவளுடைய சந்திப்புதானே.

“இந்த ஜென்மத்துல அவ தான் என்னுடைய முதல் எதிரி. அவளை. சிக்கும் போது வச்சிக்கறேன்...”
எந்த நேரத்தில் நினைத்தானோ அவனின் எண்ணத்தை பொய்யாக்கிவிடாமல் அடுத்த பத்தாவது நாளே அவனிடம் வகையாக மாட்டினாள் நேத்ரா.

அலை தீண்டும் ...
Nice
 
Top