Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 18:

பெரிசாமி சொல்லி சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தார் பார்வதி.அவர் மனதிற்குள் சின்ன உறுத்தல் அப்போதே ஆரம்பித்து இருந்தது.

யார் நம்பாவிட்டாலும்,கட்டியவனும்,அவன் வீட்டில் உள்ளவர்களும் நம்பாவிட்டால்...ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படிப் போகும் என்பதற்கான உதாரணங்களை அவர் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்.

மதி சந்தோஷமாக வாழ்வாளா..? என்கிற உறுத்தல் அப்போதே வந்திருந்தது பார்வதிக்கு.

தாயின் முகத்தையே பார்த்திருந்த மதிக்கு ஒன்றும் புரியவில்லை.அவர் என்ன நினைக்கிறார்.இனி என்ன செய்ய போகிறார்..? என்று எதுவும் தெரியாமல், அடித்து விடுவாரோ..? என்ற பயத்துடன் இருந்தால் வண்ண மதி.

“இங்க வா மதி..!” என்றார்.

“அம்மா...!”

“நான் சொல்றதை நல்லா புரிஞ்சுக்க...நாலு பேர் நம்மை பேசுற அளவுக்கு வச்சுக்க கூடாது.நீ சரியாவே இருந்தாலும்..,உன்கிட்ட குத்தம் கண்டுபிடிக்கனும்ன்னு நினைச்சுட்டா...,நீ செய்ற எல்லாமே தப்பா தான் படும். அதானால, கொஞ்சம் கவனமா இரு.இதுக்கு மேல என்னை சொல்ல வைக்காத.மாமா எப்படி பேசிட்டு போனார்ன்னு நீயும் பார்த்த தான..?” என்றார்.

“அப்பாவை குடிகாரன்னு சொன்னார்.அதான் நானும் பதில் சொன்னேன்..!” என்றாள் சிறுபிள்ளைத்தனமாய்.

அவள் சொன்ன வார்த்தைகள் பார்வதியின் நெஞ்சைத் தைத்தது.இது ஒன்றும் அவர்கள் புதிதாக கேட்பதில்லை.ஆனால் கேட்கும் நிமிடங்களில் எல்லாம் உள்ளே ஒரு வலி.தன்மான சீண்டல்.எதிர்த்து நின்று பேச முடியாது.மனோகரன் தான் எவ்வளவு சொன்னாலும்..அந்த பழக்கத்தை விடுவதில்லையே.

“உண்மையைத் தான சொன்னார் மதி.உண்மையை சொன்னா கேட்டுக்கணும்.நமக்கு கோபம் எல்லாம் வரக் கூடாது..!” என்றார் கலங்கிய கண்களுடன்.

“தப்புத்தான்...! இனி அப்படி பேசமாட்டேன்..!” என்றாள்.

அதற்கு பிறகான நாட்களில்...அவள் அவளாகத் தான் இருந்தாள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, கடன் வாங்கியாவது, மதிக்கு சீர்வரிசையை நன்றாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார் பார்வதி. நாளை யாரும் ஒரு சொல் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் தான்.

அவள் திருமணத்திற்கு முதல் நாள்...

“என்ன பார்வதி..? எல்லாம் ரெடியா..? மாப்பிள்ளை வீட்ல இருந்து பாக்கு,வெத்தலை பிடிக்க வராங்க..! (நிச்சையம் செய்வதை அப்படித்தான் சொல்வர்.).

“எல்லாம் ரெடியா இருக்குக்கா...! பந்திக்கும் எல்லாம் தயாரா இருக்கு..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க... முகிலன் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த குழாய் ரேடியோவில்...இளையாராஜாவின் திருமண பாடல்கள் ஒழித்துக் கொண்டிருந்தது.

அந்த ஓட்டு வீட்டின் உள்ளே இருந்த அந்த சிறிய அறையில்.. ஜமுக்காளத்தை விரித்து.., அதில் அமர்ந்திர்ந்தாள் வண்ண மதி.உடன் கங்காவும்,செல்வியும் இருந்தனர்.ஆனால் மதி அவர்களுடன் பேசவேயில்லை.

“என்னடி மதி..? இப்ப கூட பேச மாட்டேங்குற..? விடிஞ்சா உனக்குக் கல்யாணம். அப்பறம் நீயே நினைச்சாலும் எங்க கூட எல்லாம் பேச நேரம் இருக்குமா..?” என்று கங்கா கண்களில் கண்ணீருடன் சொல்ல..

அதுவரை அழுகையை அடக்கிக் கொண்டிருந்த மதியின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது.

“என்னடி ஆச்சு..? எதுக்கு அழுகுற..?” என்றாள் செல்வி பதைபதைப்புடன்.

“சாரிடி...! தேவையில்லாம உங்க மேல கோபப்பட்டுட்டேன்..!” என்றாள் தேம்பித் தேம்பி அழுத படி.

“விடுடி..! நீயென்ன வேணுமின்னா பண்ணுன..? எங்களுக்கு கோபம் எல்லாம் இல்லை.நீ முதல்ல கண்ணைத் துடை. அப்பறம் இதுக்கும் ஏதாவது கதை கட்டிடுவாங்க. இந்த ஊரு அப்படிப்பட்ட ஊரு..!” என்று கங்கா உண்மையை புட்டுப் புட்டு வைத்தாள்.

மதி வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.தலைவாரி பூச்சூடியிருந்தாள். அதில் கனகாம்பரம்,மல்லி சேர்த்து ஜடை அலங்காரம் வேறு.தாவணியில் இருந்தாள்.மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த உடன்..,அவர்கள் கொடுக்கும் சேலையை கட்ட வேண்டும்.

மதிக்கு எப்போதும் கனகாம்பரம் பிடிப்பதில்லை.அவள் மல்லிகை பூவை மட்டுமே விரும்பி வைப்பாள்.ஆனால் கிராமத்து திருமணங்களில் கனகாம்பரம் இல்லாத விசேசங்களைப் பார்க்கவே முடியாது.

“தலையெல்லாம் பாரமா இருக்கு கங்கா..! இந்த கனகாம்பரத்தை வேற வச்சு விட்டுட்டாங்க..!” என்று மதி முகத்தை சுழிக்க...

“ஏய்..! ரொம்ப அழகா இருக்குடி..!” என்று செல்வி சொல்லிக் கொண்டிருக்க...அவர்களின் எதிர்த்த வீட்டு அத்தை ஒருவர் வந்தார்.

“இந்தா மதி..! இந்த காசு மாலையைப் போடு..!” என்று அவரின் தங்க காசு மாலையை போட்டு விட...

“எதுக்குக்கா இதெல்லாம்..!” என்றபடி பார்வதி வந்தார்.

“இருக்கட்டும் பார்வதி..! விசேஷம் முடிஞ்சதுக்கு பிறகு வாங்கிக்கிறேன்..! பாரு இதைப் போடவும் மதி எப்படி அழகியா தெரியறான்னு..?” என்று வெகுளித்தனமாய் சொல்லி விட்டு சென்றார்.

அடுத்தவரைக் கெடுத்து வாழ வேண்டும் என்று பத்து பேர் இருந்தால்... அடுத்தவர்க்கு கொடுத்து வாழ வேண்டும் என்று எண்ணும் இரண்டு பேர் அந்த ஊரில் இருக்கத்தான் செய்தனர்.

தங்கள் நகைகளை மற்ற பெண்களுக்கு,விசேஷங்களில் போட்டு அழகு பார்ப்பார்.இந்த நிகழ்வுகள் சில வருடங்களுக்கு முன்பு வரை எல்லா கிராமத்திலும் இருந்தது.இன்று போல் இல்லை.இன்று நம் நகையை நாமே போட்டுக் கொண்டு நடக்க முடியாது.பாதுகாப்பற்ற தன்மை.

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க..!” என்று ஒருவர் சொல்ல...மதியின் வீட்டின் முன், தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அதில் ஜமுக்காளங்கள் விரிக்கப் பட்டிருக்க..., தாங்கள் கொண்டு வந்த தட்டு வகைகளை அதில் பரப்பினர்.
மதியின் பெரியம்மாக்கள்,பெரியப்பாக்கள் என அனைவரும் அவளின் வீட்டின் சார்பாக..,அவளின் உறவாய் நிற்பதற்கு பதிலாய் முகிலன் தாய் மாமன்களாய் வந்திருந்தனர்.அதைப் பார்த்த பார்வதிக்கு உள்ளுக்குள் மனம் கலங்கினாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

முகிலன்- வெள்ளை வேட்டி சட்டையில், கொஞ்சம் விடலைப் பையனாகத் தான் இருந்தான். ஆனா பார்க்க அழகாக இருந்தான்.அவன் படிக்கும் படிப்பே....அவனுக்கு தனி அடையாளமாய் இருந்தது.

தோட்டம்,காடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மத்தியில்.... நகக்கண்ணில் துளியும் அழுக்கில்லாமல் நடுமையமாக இருந்த அவன் தனித்தும், தனித்துவமாகவும் இருந்தான்.

ஆனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய அவன் முகம் கொஞ்சம் கூட சந்தோஷமாக இல்லை.மதியை இழக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக தான், வெளியே சொல்லாமல் அமர்ந்திருந்தான். ஆனால் மனதிற்குள் ஆயிரம் யோசனைகள். அவனுக்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அது தான் உண்மை.

பெண்ணின் தாய் மாமாவும்,மாப்பிள்ளையின் தாய் மாமாவும் தான் வெற்றிலை பாக்கை கொடுத்து மாற்றிக் கொள்வர்.

வடிவேல்,கணபதி,கோபி மூவரும் முகிலனுக்கு தாய்மாமனாய் அமர்ந்திருக்க...அதைக் கண்ட ஊர் மக்கள் கூட ஒரு மாதிரி பேசிக் கொண்டனர்.பார்வதிக்கு உடன் பிறந்த ஆண்கள் யாருமில்லை. அதனால் மதிக்கு தாய் மாமன் என்ற உறவே கிடையாது.

“இப்போ மதிக்கு தாய் மாமனா யார் உட்காருவது..?” என்ற பேச்சுக்கள் சலசலக்க...

“பேசாம..,பெரியசாமியையே உட்கார சொல்லுங்கப்பா..!” என்றனர்.மனோகரனுக்கும் ஒரு மாதிரி இருந்தது.அவரும் முகிலனுக்கு மாமா தானே.தன் அண்ணன்,தம்பிகள் தனக்கு எதிரில் இருப்பதைக் கண்டு அவரும் மனம் வருந்தத்தான் செய்தார்.

ஆனால் குணப்பாண்டியும்,தனப்பாண்டியும் மனோகரனுடன் இருந்தனர். அதற்கே அரசி அவர்களை முறைத்துக் கொண்டிருந்தார்.

பெரியசாமி ஒரு வித இறுமாப்புடன் பார்க்க...அதைக் கண்டு பார்வதி உள்ளுக்குள் துடித்தார்.மனதில் ஒரு முடிவு எடுத்தவராய்,

“என் மகளுக்கு தாய்மாமன் இல்லைன்னா என்ன..? தாய் நான் இருக்கேன்..! நானே மாத்திக்கிறேன்..!” என்றார் கணீர் குரலில்.

பார்வதியின் வார்த்தைகளில்..,அனைவரும் அவரைப் பார்க்க, இந்த விஷயத்தை வைத்து அவரை அவமானப் படுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த திலகாவிற்கு பெரிய அடி.

தேவையில்லாமல் எதையும் யோசிக்காத பார்வதி...,அவரே எதிரில் அமர்ந்து பாக்கு,வெத்தலையை கொடுத்து வாங்கினார்.

முகிலனுக்கும், மதிக்குமான திருமணத்திற்கு அச்சாரம் இடப்பட்டது.

“பொண்ணைக் கூட்டிட்டு வாங்க..!” என்று மற்றவர்கள் சொல்ல...

“தரைக்குள்ளேயே புதைந்து போய்விடும் அளவிற்கு தலைக் குனிந்து கொண்டு வந்தாள் மதி. தாவணியில் அவள் சிறு பெண் போல இருக்க...அவளைப் பார்த்த முகிலனுக்கு மீண்டும் குற்ற உணர்ச்சி.

“அநியாயத்து சின்ன பிள்ளையா இருக்காளே...? இதெல்லாம் சரியா வருமா..?” என்று நகத்தைக் கடிக்க ஆரம்பித்தான் முகிலன்.

அவளின் அருகில் வந்தவர்களின் கையில் ஒரு தட்டைத் தூக்கிக் கொடுத்தனர்.அதில் சேலை,ரவிக்கை,சின்ன கண்ணாடி,சாந்து பொட்டு,ஸ்டிக்கர் பொட்டு,சீப்பு,பவுடர் டப்பா,பவுடர் என எல்லாம் அணிவகுத்து இருந்தது.
 
“போய் சேலையைக் கட்டிக் கூட்டிட்டு வாங்க..!” என்றனர்.

மதிக்கு அழுகை வரும் போல இருந்தது.அவ்வளவு கூட்டத்தின் நடுவில் நிற்க...அவளுக்கு கூச்சமாக இருந்தது.எல்லாரும் அவளையே பார்ப்பது போன்று இருந்தது. முகிலன் கூட அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அது கண்டிப்பாக காதல் பார்வையில்லை. அது ஆராய்ச்சிப் பார்வை.

“நானே என் மருமகளுக்கு கட்டிக் கூட்டிட்டு வரேன்..!” என்று மலர் எழுந்து செல்ல...

“ரொம்பத்தான் கொனைக்கிராக..!”(கொஞ்சுதல்.) என்று திலகா பொரிந்து கொண்டிருந்தார் அரசியிடம்.

“ஆமா..! திலகா, எனக்கும் இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க சகிக்கலை...! இவளுகளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்..!” என்று இருவரும் பொரணி பேசிக் கொண்டிருந்தனர்.

உள்ளே...மாம்பழ வண்ண மஞ்சள் பட்டுப் புடவையை கட்டி..அதற்கு ஏற்ப, அவர்களுக்குத் தெரிந்த அலங்காரங்களைப் பண்ண...அந்த அலங்காரத்திலேயே அவ்வளவு அழகாய் இருந்தாள் மதி.சேலையில் கொஞ்சம் பெரிய பெண்ணாய் தெரிந்தாள்.ஆனால் அதைக் கட்டிக் கொண்டு அவளால் நடக்கவே முடியவில்லை.

“என்னாச்சு மதி..?” என்றார் மலர்.

“அத்தை! என்னால நடக்கவே முடியலை..!” என்றாள் முகத்தை பரிதாபமாய் வைத்துக் கொண்டு.

“கொஞ்ச நேரம் தான் மதி..! மெதுவா வா..!” என்றபடி மலர் செல்ல... அவளைப் பின்னோடு அழைத்து வந்தனர்.

முகிலனின் அருகில் சென்ற மலர்..”முகிலா...! அங்க பாரு என் மருமகளை..!” என்றார்.

எதற்கு அவளைப் பார்க்க..? என்றபடி அசால்ட்டாகத்தான் நிமிர்ந்தான் முகிலன்.ஆனால் நிமிர்ந்தவன் நிமிர்ந்தவன் தான்.அவனால் கண்ணையே எடுக்க முடியவில்லை.

கண்மை வைத்த கண்கள் அவனை காந்தமாய் ஈர்க்க...இதுவரை இருந்த குழப்பம்,யோசனை,தவிப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டது.அவன் அவளை இதுவரை சேலையில் பார்த்ததில்லை.

இன்று தான் முதன் முதலில் பார்க்கிறான்.அப்படியே அவன் கண்களின் வழியே மனதிற்குள் இறங்கினாள் வண்ண மதி.

“என்ன இப்படி அழகா இருந்து தொலைக்கிறா..? தளதளன்னு தக்காளிப் பழம் மாதிரி இருக்காளே...!” என்று அவனின் வயது அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

எல்லாம் மறந்து அவள் மட்டுமே தெரிந்தாள்.அவன் கன்னத்தின் ஓரத்தில் இருந்த பருக்கள் கூட அவனுக்கு அழகாய் தெரிந்தது. திருத்தப்படாத புருவங்கள் வில்லாய் வளைந்து, அவனின் மனதில் அம்பை எய்ய...சுகமாய் உணர்ந்தான் மணி முகிலன்.யாரையும் கேட்காமல் அவனின் இதய சிம்மாசனத்தில் அழகாய் அமர்ந்தாள் வண்ண மதி.

பெரியவங்க கால்ல விழுந்து கும்பிட்டுக்கோ...!” என்று யாரோ சொல்ல..சபையின் நடுவில் அனைவருக்கும் பொதுவில் விழுந்து வணங்கினாள்.பிறகு முகிலனின் காலில் விழ சொல்ல...அவனை ஏறிட்டுப் பார்க்கவே அவளால் முடியவில்லை.

“என்ன வெட்கம் மதி..? முகிலன் காலில் விழு..!” என்றனர். அவளும் அவர்கள் சொன்ன படியே செய்தாள்.

“ஏய் மதி...! வேண்டாம் எழுந்திரு...!” என்று அவன் அவளை லேசாகத் தொட்டுத் தூக்க...அந்த சின்ன தொடுதல்..அவனுக்குள் மின்சாரமாய்த் தாக்கியது.

பட்டென்று கைகளை எடுத்துக் கொண்டான்.ஆனால் மதிக்கு அப்படி எதுவும் தோன்றவில்லையா...? இல்லை அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லையா..? என்று தெரியவில்லை...” அப்படியே இருந்தாள்.

மலர்.., அவளின் தலையில் பூவை வைத்து விட, இருவரையும் அருகருகே அமர வைத்து.., சந்தனம்,குங்குமம் வைத்தனர்.மதி அவனின் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருக்க,அவளின் ஓர அழகை ரசித்துக் கொண்டிருந்தான் மணி முகிலன்.

“முகிலனுக்கு,மதியை விட்டு கண்ணை எடுக்க முடியலைப்பா..!” என்று யாரோ கிண்டல் செய்ய...அப்போது தான் இருக்கும் இடம் அறிந்து தன் பார்வையை விளக்கினான் முகிலன்.

“ஆமா கண்ணை எடுக்க முடியலை..! இப்படி அழகா இருந்து தொலைச்சா நானும் என்ன தான் பண்ணுவேன்.எனக்கும் உள்ள என்னனென்னமோ செய்து...! இதை நான் யாருகிட்ட போய் சொல்லுவேன்...!” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான் முகிலன்.பகிர்ந்து கொள்ள நண்பர்களும் அருகில் இல்லை.

தனக்குத் திருமணம் என்று சொல்லவே அவனுக்கு கூச்சமாக இருந்தது.அனைவரின் கிண்டலுக்கும்,கேலிக்கும் ஆளாக வேண்டும் என்று எண்ணினான்.அதனால் யாருக்கும் சொல்லவில்லை.யாரையும் அழைக்கவில்லை.

உள்ளூரிலும் அவனுக்கு சரியாக நண்பர்கள் கிடையாது.இருந்த ஒன்றிரண்டு பேரும்...அவன் படிப்பைப் பார்த்து ஒதுங்கி விட்டனர்.அதனால் தனித்து இருந்தான்.தவிப்புடன் இருந்தான்.

அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றனர்.

“இந்த கேப்ல எப்படியாவது இவகிட்ட பேசிடனும்..!” என்று முகிலன் மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்க...அதற்கும் சோதனை வந்தது.

“மதி...! உன்கிட்ட பேசணும்..!” என்றான் வாயத்திறக்காமல்.அவன் வாய் திறந்து சொன்னாலே அவளுக்கு கேட்டிருக்காது. அந்த நிலையில் அவள் இருந்தாள். அப்படி இருக்கும் போது இப்படி சொன்னால் அவளுக்கு எப்படித் தெரியும்.

“மதிஈஈஈ...” என்றான் மீண்டும். அதோ பாவம். அவள் செவிகளில் விழவே இல்லை.

“மதி நீ எந்திருச்சு உள்ள போமா...! முகிலா நீ சாப்பிட வா..!” என்று மலர் அழைக்க...அம்மாவை முறைத்தான் முகிலன்.

“எதுக்கு முகிலா என்னை முறைக்கிற...?” என்றார் மலர்.

“அம்மா...! எனக்கு மதி கூட பேசணும்...! நீங்க என்ன பன்னுவிங்களோ தெரியாது...!” என்றான் கடுப்பாய்.

“டேய்..! நாளைக்கு கல்யாணம். அதுக்கப்பறம் நீ எவ்வளவு வேணுமின்னாலும் பேசு..! இப்படி பேசக் கூடாது.யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?” என்றார் மலர்.

“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை..! எனக்கு அவகூட பேசணும்..!” என்று அவன் பிடிவாதம் பிடிக்க...

“என்ன முகிலா இப்படி பண்ற..?” என்று கைகளைப் பிசைந்தார் மலர்.

“அம்மா..!ப்ளீஸ்...எனக்காக..” என்றான்.

“இரு பாக்குறேன்..!”என்றபடி உள்ளே சென்றவர், கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.

“எல்லாரும் பந்தியில கவனமா இருக்காங்க முகிலா... கங்காகிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்.போயிட்டு சீக்கிரம் வா..!” என்றார் மலர்.

“சூப்பர்ம்மா..” என்றபடி, அவன் நாசூக்காய் அங்கிருந்து நகன்றான். யாரின் கண்ணிலும் விழாமல் சென்றான்.சிலர் பார்த்தாலும்...கண்டும் காணாமல் இருந்தனர்.

கங்கா அறைக்கு வெளியே நிற்க...

“அண்ணா...! சீக்கிரம் பேசிட்டு வாங்க..! பார்வதி அத்தை பார்த்தா என்னைத் தொலைச்சுக் கட்டிடுவாங்க..!” என்றாள் கங்கா.

“ம்ம்..” என்றபடி சென்ற முகிலன், உள்ளே சென்று அவளைக் காணாமல் தேட...அங்கிருந்த சின்ன பீரோவின் பக்கத்தில் அதனை ஒட்டி நின்றிருந்தாள் மதி.

“மதி...” என்றான் அமைதியாய்.

அவள் நிமிருவேனா..? என்று அடம்பிடித்தபடி...அங்கேயே நின்றிருக்க....அவளின் அருகில் சென்றான்.

“எதுக்கு மணி மாமா...பக்கத்துல வராங்க..!” என்றவளுக்கு வியர்த்து ஊற்றத் தொடங்கியது.

“எதுக்கு இப்படி பயந்து போய் நிக்குற..? நான் எவ்வளவு கஷ்ட்டபட்டு உள்ள வந்தேன் தெரியுமா..?” என்றான்.
“தெரியாது..!” என்றாள்.

குழம்பினான் அவன்.”என்ன தெரியாது..?” என்றான்.

“இல்லை நீங்க எவ்வளவு கஷ்ட்டபட்டு உள்ள வந்திங்கன்னு தெரியாது..!” என்றாள் சின்னக் குரலில்.

“ம்ம்க்கும்..ரொம்ப முக்கியம்..!” என்று அலுத்துக் கொண்டவன்...அவள் கைகளைப் பட்டென்று பிடித்தான்.

“அம்மா...” என்று கத்தப் போனவள்...அவன் முகம் பார்த்து அமைதியாய் நிற்க...

“கத்துன கொன்னுடுவேன்..!” என்று மிரட்டியவன்...அவளையே சில நிமிடம் பார்க்க...

“இந்த சேலைல நீ ரொம்ப அழகா இருக்க மதி...!” என்றான் மயக்க குரலில்.

“ம்ம்ம்..” என்றாள்.

“என்னைய உனக்கு பிடிச்சிருக்கா..?” என்றான்.

அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

“நாம நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாமா...?” என்றான் அவள் கண்களை நோக்கி.

அதற்கும் தலையை மட்டும் ஆட்டினாள்.

“நான் உன்னை கட்டிப் பிடிக்கவா..?” என்றான்.

அதற்கும் அவள் தலையை ஆட்ட...அவன் நமட்டு சிரிப்பு சிரித்தான். பிறகுதான் அவளுக்கும் புரிந்தது..,அவன் என்ன சொன்னான் என்று.

அவனின் சிரிப்பு அவளுக்கு கோபத்தை வரவைக்க...”விடுங்க மணி மாமா..!” என்றபடி கைகளை உருவிக் கொண்டாள்.அவளின் கையை விடவே மனசில்லை அவனுக்கு.

“உனக்கு எப்போ ரிசல்ட்..?” என்று அவன் கேட்டு முடிக்கவில்லை.... அவள் காதிலும் அது முழுமையாக விழவில்லை..அதற்குள் கங்காவின் குரல் கேட்டது.

“அண்ணா...அத்தை..!” என்று அவள் குரல் கொடுக்க...

“ஓகே...மிச்சத்த நாளைக்கு பேசிக்கிறேன்..!” என்றவன். அவளை முத்தமிடத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு வெளியே சென்றான்.

அவன் பிடித்த இடம்...அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த...ஏதோ தவிப்பில் இருந்தால் வண்ண மதி.

தன் வீட்டில் அமர்ந்து நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.அவனுக்கு மனசில் அவ்வளவு பாரம்.தன்னை விட்டு மதிக்கு ஒரு நல்லது நடப்பது அவனுக்கு மனதிற்குள் எப்படியோ இருந்தது.

முகிலனைப் பார்க்கும் போது எரிச்சல் வந்து சேர்ந்தது.என்ன செய்யலாம்..? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 
Top