Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 21:

திருமணத்திற்கு ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க... மலருக்கும், பார்வதிக்கும் வருபவர்களை வரவேற்பதில் நேரம் பறந்தது. பெரியசாமி ஒட்டுதல் இல்லாமல் இருக்க, மனோகரனோ அன்றும் குடித்துவிட்டு தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் வெள்ளையும் சொல்லையுமாக இருந்தார்.

தனபாண்டியும்,குணபாண்டியும் ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருந்தனர். எப்போதும் போல் அரசி அவர்களை முறைத்துக் கொண்டிருந்தார்.

மதியின் கடைசி சித்தப்பாவான கோபியும், சித்தி லட்சுமியும் யாருக்கோ கல்யாணம் என்கிற ரீதியில் கூட்டத்தில் ஒருவராய் அமர்ந்திருந்தனர்.

“எப்பா தனம், குணம் போய் முகிலன் கூட இருங்கப்பா. நீங்க அவனுக்கு மச்சினன் முறை ஆகணும்..!” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல,

“இங்க பாருடா தனபாண்டி. நமக்கும் முகிலன் வயசு தான் ஆகுது. அவங்க அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குது. ஆனா நமக்கும் தான் இருக்கே அம்மான்னு ஒன்னு..!” என்றான் குணபாண்டி.

“நானும் இதைத்தான் நேத்து இருந்து யோசிக்கிறேன் குணப்பாண்டி. முதல்ல நமக்கு ஒரு பொண்ணை பார்க்க சொல்லணும்..!” என்றான் அவன்.

“ஒரு பொண்ணு இல்லைடா..! ரெண்டு பொண்ணு..!” என்றான் குணப்பாண்டி.

“இப்ப இது ரொம்ப முக்கியம். போய் வேலையை பாருங்கடா..!” என்று பெரியசாமி விரட்ட,

“இந்த மாமனுக்கு கொழுப்பு கூடிடுச்சுடா..! மலர் அத்தைகிட்ட சொல்லி குறைக்க சொல்லணும்..” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சென்றனர்.

வீட்டின் முன் போடப்பட்டிருந்த அந்த மேடையில் வந்து அமர்ந்தான் மணி முகிலன்.

“எம்மா பொண்ண கூட்டிட்டு வாங்க..! நல்ல நேரம் முடிய போகுது..!” என்று சொல்ல, தோழியர்கள் புடை சூழ மணமேடைக்கு வந்தாள் வண்ண மதி.

மலரும் பெரியசாமியும் முகிலனுக்கு அருகில் நிற்க, பார்வதியும், மனோகரனும் மதிக்கு அருகில் நின்றனர்.சுமதி அக்காவையே பார்த்துக் கொண்டு அருகில் நின்றிருந்தாள்.

வண்ண மதியோ யாரையும் பார்க்கவில்லை.தரைக்குள் புதைந்தைப் போல தலையை கவிழ்த்தி வைத்திருந்தாள். முகிலனுக்கு தான் ஓரு வித சந்தோஷ உணர்வு. சுற்றுப் புறம் மறந்து அவன் கண்களில் விழுந்தது அவளின் பிம்பம் மட்டுமே.

“என்னாச்சு மதி..? கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்..!” என்றான் ஆசையாக.ஆனால் மதிக்கு தான் காதே கேட்கவில்லை. கேட்காதைத் போல் இருந்தாள் என்று சொன்னால் அது தான் உண்மை.

“மதி உன்னைத்தான்..!” என்றான் சற்று குனிந்து.

“மாப்பிள்ளை.. நேரா உட்காருங்க..! எதிர்த்தப்படி நாங்க எல்லாரும் இருக்கோமா இல்லையா..?” என்றான் தனபாண்டி.

அவனைப் பார்த்து முகிலன் முறைக்க, இவர்கள் இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்.

“இந்தாங்க..! இந்த மாலையை மாத்திக்கங்க..!” என்று சொல்ல,

ஒருவருக்கு ஒருவர் மாலையை மாத்திக் கொண்டனர். அப்போது கூட மதி அவனைப் பார்க்கவில்லை. குனிந்து கொண்டே மாலையைப் போட போக, அவனோ கொஞ்சம் பின்னால் சென்றான்.அதன் பிறகு தான் கொஞ்சம் நிமிர்ந்தாள் மதி.

அவளைப் பார்த்து சிரித்த முகிலன், பிறகு அவளைப் பார்த்துக் கொண்டே மாலையைப் போட்டான். அடுத்ததாக அவன் கையில் தாலியை கொடுக்க, கெட்டிமேளச் சத்தம் கேட்டது.

“கெட்டிமேளம்..!கெட்டிமேளம்..!”

நிறுத்தி நிதானமாக மதியின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் மணி முகிலன். வண்ண மதி மனோகரன், வண்ண மதி மணி முகிலன் ஆனாள் அந்த நிமிடம் முதல்.

பார்வதிக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வர, அவரைப் பார்த்த மதிக்கும் அழுகை வந்தது. கங்காவும், செல்வியும் கூட கண் கலங்கினர். பின் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கும் கண்ணீர் வந்தது. அதைவிட பிரதானமாக கோபமே வந்தது. தான் எண்ணியது நடக்கவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.

அட்சதையைத் தூவிய திலகாவின் மனதிற்குள் ஆயிரம் வஞ்சம். இப்படி பலரும் பலதரப்பட்ட எண்ணங்களில் இருக்கும் போது அங்கு வந்த போலீசைக் கண்டு திகைப்பில் அனைவரும் எழுந்தனர்.

“என்ன ஆச்சு..? போலீஸ் வந்திருக்கு...! நம்ம ஊருக்கு போலீஸ் எல்லாம் வராதே..!” என்றபடி ஆளுக்கு ஒரு விதத்தில் பேச ஆரம்பிக்க, கல்யாணம் நடப்பதற்கு முன் வரவேண்டிய போலீஸ், நடந்து முடிந்த பிறகு வந்திருந்தது.

அவர்களின் அருகில் ஓடி சென்ற பெரியசாமி..”வாங்க சார்...? என்ன பிரச்சனை..? எதுக்காக வந்திருக்கிங்க..?” என்றார் பதட்டத்துடன்.

“நீங்க மைனர் பொண்ணைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றதா எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு..! பதினெட்டு வயசு முடியாம கல்யாணம் பண்றது சட்டப்படி தப்பு. அதனால இந்த கல்யாணத்தை நிறுத்துங்க..!” என்றனர்.

“கல்யாணம் முடிஞ்சுடுச்சு சார்..!” என்றனர் கொஞ்சம் பயந்த குரலில்.

“அப்போ மைனர் பொண்ணை கல்யாணம் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த குற்றத்துக்காக நாங்க உங்க பையனை அரஸ்ட் பண்றோம்..!” என்றனர்.

“என் பொண்ணை யாரும் கட்டாயப்படுத்தலை. இது அவ சம்மதிச்சு நடந்த கல்யாணம் தான்..!” என்றார் பார்வதி.

“எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு..!” என்றனர் காவல் துறையினர்.

“யாரு புகார் கொடுத்தது..?” என்றார் பெரியசாமி.

“புகார் குடுத்தவங்க பேரு எதையும் சொல்லலை. எங்களுக்கு போன் வந்தது..!” என்றனர்.

“இந்த ஊர்லையே இந்த மாப்பிள்ளை வீட்ல மட்டும் தான் போன் இருக்கு. அவங்களே எதுக்கு போன் பண்ணி புகார் குடுக்க போறாங்க..?” என்றனர்.

“அதைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு புகார் வந்தது. இங்க வந்து பார்த்தா அதே மாதிரி தான் நடந்திருக்கு. ஒன்னு உங்க பொண்ணு மேஜர் தான் அப்படின்னு ஆதாரம் காட்டுங்க. இல்லைன்னா வழியை விடுங்க நாங்க அரஸ்ட் பண்ணனும்.

ஸ்டேஷன்ல வந்து எதுன்னாலும் பேசிக்கோங்க..!” என்றனர்.

“சார் அவன் படிக்கிற பையன். டாக்டருக்கு படிக்கிறான்.இப்படி அரஸ்ட் பண்ணினா அவன் எதிர்காலமே கேள்விக் குறி ஆகிடும்..!” என்று மலர் கெஞ்ச, முகிலன் அவமானத்தால் தலை குனிந்து நின்றான்.

“எங்களுக்கு ஒத்துழைப்பு குடுங்க. இல்லைன்னா பையனோட அம்மா, அப்பா உங்களையும் சேர்த்து நாங்க அரஸ்ட் பண்ண வேண்டியது வரும்..!” என்றனர்.

“எங்க ஊருக்குள்ள இது தான் வழக்கம். எங்களுக்கு வயசு முக்கியமில்லை. இது மாதிரி நிறைய கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. இதென்ன புதுசா இருக்கு..?” என்று அனைவரும் கேள்வி எழுப்ப,

“நீங்க பண்ணி வச்சிருக்க கல்யாணத்துக்கு எல்லாம் சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. அதுமட்டுமில்லை, அந்த நேரத்துல எங்களுக்கு எந்த புகாரும் வரலை. அப்படி வந்திருந்தா அப்பவும் நாங்க வந்து அரஸ்ட் பண்ணியிருப்போம். உங்களுக்கு இவ்வளவு விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்..!” என்ற காவலர்,

“மிஸ்டர்..!” என்று இழுக்க,

“மணி முகிலன்..!” என்றான் கம்பீரமாய்.

நடந்த அனைத்தையும் பேந்த பேந்த பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, மதிக்கு போலீசைக் கண்டு உடல் வெடவெடத்தது. இப்போது போல் அப்போது போலீஸ் எல்லாம் சாதாரணம் இல்லை என்ற எண்ணம். அவள் பயந்து ஒதுங்கி பார்வதியின் பின் ஒதுங்க, அதைப் பார்த்த முகிலன் செத்தே விட்டான். அந்த நொடி, அவளின் இடத்தில் அவனும் யோசிக்கவில்லை. அவனின் இடத்தில் யோசிக்கும் பக்குவமும் அவளுக்கு இல்லை.

“எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு. நீங்க என்னை மட்டும் அரஸ்ட் பண்ணுங்க..!” என்றான் முகிலன்.

“சார்..! மேற்கொண்டு எதுவும் பண்ண வேண்டாம். இதை எப்படி முடிக்கனுமோ அப்படி முடிச்சுக்கலாம்..! அவன் படிக்கிற பையன்..!” என்று பெரியசாமி கெஞ்ச,

“நீங்க ஸ்டேஷன்ல வந்து இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிக்கோங்க. ஆனா இப்ப வரைக்கும் எப்ஐஆர் போடலை..!” என்ற போலீசார் முகிலனைப் பார்க்க, அவன் அவர்கள் பின்னால் செல்ல ஆயத்தம் ஆனான்.

கணவன் என்ற முறையில் மதிக்கு எதுவும் தோன்றாமல் இருந்தாலும், அவளின் மணி மாமாவாக அவளுக்கு உள்ளுக்குள் பிசைந்தது.

“மணி மாமா..!” என்று அழைத்த படி அவள் அழ ஆரம்பிக்க, அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் என்ன இருந்தது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் முகம் இறுகிப் போய் இருந்தது.
 
“என்ன அண்ணே..! பார்த்துட்டே இருக்கீங்க..? ஏதாவது பண்ணி முகிலனை நிப்பாட்டுங்க..!” என்று பார்வதி கதற...

“இப்ப சந்தோஷமா...? எல்லாம் உன் பொண்ணு வந்த நேரம். என் பையன் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டான்..! இன்னும் என்ன செய்யலாம்ன்னு காத்திருக்கிங்க..?” என்று பெரியசாமி கத்தத் தொடங்கினார்.

“ஏங்க..? இதுல அவங்க என்ன பண்ணுவாங்க..? முதல்ல புகார் கொடுத்தது யாருன்னு கண்டு பிடிங்க..! அதுக்கு முன்னாடி என் பையனை கூட்டிட்டு வாங்க..!” என்று மலர் கதற, ஒரு தந்தையாய் ஓய்ந்து அமர்ந்தார் பெரியசாமி.

ஊரில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒன்றாய் பேச, இது தான் சமயம் என்று எண்ணிய திலகா,

“வேற யார் புகார் குடுத்திருப்பா..? எல்லாம் இந்த முத்து பய தான் குடுத்திருப்பான்..!” என்றார்.

அனைவரும் அதிர்ந்து நோக்க,

“ஆமா..! எனக்கு அப்படித்தான் தோணுது. ஏற்கனவே ரெண்டு பெரும் அப்படி இப்படி இருந்தவங்க தானே..! இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம அந்த முத்து பய ஏன் புகார் குடுத்திருக்க கூடாது..?” என்றார் திலகா.

“அபாண்டமா பேசாதிங்க..!” என்று வெகுண்டு எழுந்தார் பார்வதி.

“உள்ளதை சொன்னா கோபம் வருதோ..! நேத்து கூட உன் பொண்ணு இருந்த ரூமோட ஜன்னல் பக்கத்துல தான் அவன் நின்னுட்டு இருந்தான். ஏன் ரெண்டு பெரும் பேசி வச்சு கூட பண்ணியிருப்பாங்க..!” என்றார் திலகா.

பார்வதி திரும்பி மதியை முறைக்க,

“அம்மா..! நான் ஒண்ணுமே பண்ணலைமா..! என்னை நம்புமா..” என்று அழுக ஆரம்பித்தாள்.

“பார்வதி அத்தை ..! முத்து வந்தது உண்மை தான். ஆனா நான் தான் போய் பதில் சொல்லிட்டு வந்தேன். மதி அவன் கூட பேசவே இல்லை..!” என்று கங்கா சாட்சிக்கு வந்தாள்.

“எனக்கு என் பொண்ணைப் பத்தி நல்லா தெரியும். அவளுக்கு தப்புப் பண்ணவும் தெரியாது. தப்புக்குத் துணை போகவும் தெரியாது..!” என்றார் பார்வதி உறுதியாக.

“ஐயோ..! கொஞ்ச நேரம் எல்லாரும் நிறுத்துங்க..! ஏங்க நீங்க போய் முதல்ல முகிலனை கூட்டிட்டு வர வழியைப் பாருங்க..!” என்று மலர் சத்தம் போட,

மதியை வெறுப்புடன் பார்த்த பெரியசாமி, அந்த இடத்தை காலி செய்தார்.

தாலிகட்டி, குங்குமம் கூட அவள் நெற்றியில் அவன் வைத்திருக்கவில்லை. காலை உணவு என்று பச்சத் தண்ணீர் அவன் பல்லில் படவில்லை. போலீஸ் ஸ்டேஷன் சென்றான் முகிலன்.

அதே இடத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் வண்ண மதி. அவளை விடாமல் துரத்துவது எது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“அழுகாத மதி..! முகிலன் மாமா வந்திடுவாங்க..!” என்று வினோதினி சொல்ல,

“ஆமா மதி. அதான் பெரியப்பா போயிருக்காங்கல்ல.கண்டிப்பா அண்ணாவைக் கூட்டிட்டு வந்திடுவாங்க..!” என்று கங்காவும், செல்வியும் ஆறுதல் சொல்ல, மலர் யாருடனும் பேசாமல் ஒதுங்கி அமர்ந்திருந்தார்.

நிறைய பேருக்கு இப்படி நடந்தது தான் சந்தோசம் என்கிற ரீதியில் இருந்தது அவர்களின் மன நிலை.திலகாவிற்கு அப்படி ஒரு சந்தோசம். அரசிக்கு சந்தோஷமும் இல்லை,. வருத்தமாகவும் இல்லை.

போலீஸ் ஸ்டேஷனில் தலை குனிந்து அமர்ந்திருந்தான் மணி முகிலன். காலையில் இருந்த மனநிலை அவனுக்கு முற்றிலும் மாறி இருந்தது. பட்டுவேட்டி சட்டையில் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்த அவனைப் பார்த்த ஒரு சில காவலர்களுக்கு கூட பாவமாய் போனது.

“என்ன தம்பி டாக்டருக்கு படிக்கிறிங்கன்னு சொல்றாங்க..? இது கூட தெரியாம எப்படி கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னிங்க..!” என்றார் ஒரு கான்ஸ்டபில்.

அவன் பதில் சொல்லும் முன், பெரியசாமி அங்கு சென்று விட்டார். மகனை அந்த நிலையில் பார்த்த ஒரு தந்தையின் உள்ளம் பதறி துடித்தது. அதிலும் பிறந்ததில் இருந்து செல்லமாய் வளர்ந்தவன், இன்று போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதைப் பார்த்தால் அவருக்கு எப்படி இருக்கும்..?

நல்லவேலையாக அவன் மீது எப்ஐஆர் போடாமல் இருந்தது. எப்படியோ இன்ஸ்பெக்டரிடம் பேசி, கவனித்து ஒரு வழியாக அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் பெரியசாமி. இதில் பக்கத்து ஊர் அரசியல்வாதியின் உதவியும் அடங்கும். பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, கவனிக்க வேண்டியதை கவனித்து, பேச வெண்டியதைப் பேசி அவனை அழைத்து வந்து விட்டாலும், முகிலனின் முகம் இறுகித்தான் கிடந்தது.

அவன் வீடு வந்து சேர மதியத்திற்கு மேல் ஆனது. அதுவும் பெரியசாமி வாடகை கார் எடுத்திருந்தார். இல்லை என்றால் இவ்வளவு சீக்கிரம் வேலை முடிந்திருக்காது.

அவர்கள் போகும் போது எந்த நிலையில் இருந்தார்களோ, அவர்கள் வரும் போதும் அதே நிலையில் தான் இருந்தார்கள். மதி வாடி வதங்கிப் போயிருந்தாள்.

வீட்டிற்கு வந்தவன், யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். சென்ற அவனையே பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு மனதிற்குள் திக்கென்று இருந்தது.

“இவ காலடி எடுத்த வச்ச நேரம். இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கோ..?” என்றபடி திலகா சென்றார்,
மனதிற்குள் மகிழ்ச்சியுடன்.

சந்தோஷமாய் இருந்த கல்யாண வீடு, இப்போது கலையிழந்து காணப்பட்டது. வந்தவர்கள் முக்கால்வாசிப்பேர் சென்றிருக்க, பார்வதியின் தங்கையும், வினோதினியும் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தனர். அறைக்குள் சென்ற முகிலன் வெளியே வரவேயில்லை.

“இப்ப என்ன நடந்திடுச்சுன்னு எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கிங்க..? எந்திருச்சு அடுத்து நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க..!” என்று ஒரு கிழவி சொல்ல,

“இதுக்கு மேல நடக்க என்ன இருக்கு..?” என்று பெரியசாமி கோபத்துடன் சொல்ல, சற்று முன்பு அவருக்கு வேப்பில்லை அடித்துவிட்டு சென்றிருந்தார் திலகா.

“மதி எழுந்து உள்ள வாம்மா..!” என்றார் மலர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமிக்கு பொறுக்க முடியவில்லை. முகிலனின் அமைதியும் அவருக்கு வசதியாய் போனது.

சற்று தெளிந்து எழுந்த பார்வதி, அவர்களின் வீடு வரை சென்றிருக்க, அப்போது தான் வெளியே வந்தான் முகிலன்.
வந்தவனின் கண்களில் மதி இருந்த கோலம் பட, உள்ளுக்குள் வெதும்பிப் போனான். அப்போதும் அவனின் மனம் அவளுக்காக தான் யோசித்தது.

“இப்ப நான் என்ன செத்தா போயிட்டேன்..! இது கல்யாண வீடா..? இல்லை இழவு வீடா? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க..? போங்க..போய் வேலையைப் பாருங்க..!” என்று கத்தினான் முகிலன்.

“என்ன முகிலா இது? நல்ல நாள் அதுவுமா அபசகுணமா பேசிகிட்டு...!” என்று மலர் கண்கலங்க, அப்போதும் பேந்த பேந்த முழித்தாள் மதி.

அவள் அப்படி முழிப்பதைப் பார்த்த முகிலனுக்கு தேவையில்லாமல் கோபம் வந்தது.

“இப்ப எதுக்கு இப்படி முழிச்சுகிட்டு நிக்குற..? போ போய்டு..! என் கண்ணுலையே படாத..!” என்றான். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல், தெரியாமல்.

சொன்னவன் அப்படியே அறைக்குள் சென்று விட, அவனின் வார்த்தைகளில் திகைத்தவள், அப்படியே இருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாள் என்று அவளுக்கே தெரியாது.

மலர் மகனின் பின்னால் செல்ல,

“இப்ப உனக்கு சந்தோஷமா..? எப்படி இருந்த வீடு, இன்னைக்கு உன்னால தான் இப்படி ஆகியிருக்கு..! அவன் வாழ்க்கையில என்னைக்கு வந்தியோ அன்னைக்கு பிடிச்சது கெட்ட காலம்..!” என்றார் பெரியசாமி.

“நான் ஒன்னும் பண்ணலை மாமா..!” என்றாள் அழுது கொண்டே.

“என்ன ஒன்னும் பண்ணலை. அந்த முத்து பய கூட சேர்ந்து புகார் கொடுத்தது நீ தான..! இந்த கருமத்தை முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காதுல...” என்றார்.

“என்னை நம்புங்க மாமா..! நான் ஒன்னும் பண்ணலை..!” என்றாள்.

“உன்னை மருமகளா கொண்டு வந்ததுக்கு இன்னும் எவ்வளவு அசிங்கப்படனுமோ..? குடும்பத்தோட தூக்குல தான் தொங்கணும் போல..!” என்று கோபத்துடன் சொல்ல,

“மாமா..!” என்றபடி அதிர்ந்து நின்றாள்.

“விடிஞ்ச உடனே பஞ்சாயத்தைக் கூட்டி அத்து விடுறது தான் முதல் வேலை..!” என்றபடி பெரியசாமி செல்ல, பிரமை பிடித்தார் போல் நின்றிருந்தாள் மதி.

“இதுவரைக்கும் நான் எந்த தப்புமே பண்ணலையே. அப்பறம் ஏன் எல்லாரும் என்னை இப்படி பேசுறாங்க..! நான் எது செஞ்சாலும் குத்தமா..!” என்று நினைத்தவளுக்கு, உடனே கோபமும் வந்தது.

யாரிடமும் சொல்லாமல் கிளம்பி அவளின் வீட்டுக்கு சென்றாள். இடையில் சிலர் தடுத்தும் நிற்கவில்லை.உள்ளூர் என்பதால் அவளுக்கு வசதியாக போனது. அந்த வயதில் உடனே வரும் கோபம், தன்னை ஒருத்தர் தப்பாக பேசுகிறார் என்பதால் வந்த கோபம், எல்லாம் சேர்ந்து அவளைப் படுத்த அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

மகளைப் பார்த்த பார்வதி அதிர்ந்து நிற்க,

“அம்மா..!” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

“என்ன மதி..? எதுக்கு வீட்டுக்கு வந்த..? நீ இங்க வந்தது தப்பு..!கிளம்பு போகலாம்..!” என்று பார்வதி அம்மாவாய் மாறி பேச,

“நான் இனி அங்க போக மாட்டேன்..! மாமா என்னை தப்பா பேசுறார். நான் ஒண்ணுமே செய்யலைம்மா..! ஆனா அதையே பேசுறாங்க..எத்தனை தடவை தான் கேட்குறது. நான் நம்ம வீட்லயே இருக்கேன்ம்மா..!” என்று கதறிக் கொண்டு அழ,

அவளின் கண்ணீரைப் பார்த்த பார்வதிக்கும் அழுகை வந்தது. இதைப் பார்த்த பார்வதியின் தங்கை,

“என்னக்கா..? இப்பவே நம்ம பிள்ளையை இப்படி தப்பா பேசுறாங்க. நாளைக்கு எதுக்கெடுத்தாலும் இப்படி தப்பா பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்..?” என்று சண்டைக்கு வந்தார்.

“கொஞ்சம் அமைதியா இரு..!” என்றார் பார்வதி.

“இதுக்கு மேல எப்படி அமைதியா இருக்க சொல்றிங்க பெரியம்மா. நேத்தும் அப்படித்தான் பேசுறாங்க..? என்ன நினைச்சுட்டு இருக்காங்க..?” என்றாள் வினோதினியும் அவள் பங்கிற்கு.

பஞ்சாயத்து வச்சு, பேசி முடிக்காம நம்ம பொண்ணை அனுப்ப வேண்டாம் அக்கா..! இவ இங்க வந்தது கூட தெரியாம அவங்க அங்க என்ன புடுங்குறாங்க..? என்று சத்தம் போட்டார் வினோதினியின் அம்மா.

விதி, இவர்களுக்கு மறுநாள் பஞ்சாயத்தில் வைத்திருந்தது ஒரு மாற்றத்தை.
 
Top