Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 11.1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 11

ஜெனி சொன்னதைக் கேட்ட செல்வராணி மிகவும் சந்தோஷப்பட்டார். அவருக்கு நான்கு நாட்களாக இல்லாத தூக்கம் கண்களைத் தழுவ ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார்.

சிறிது நேரம் சென்று உள்ளே வந்த விஜய் ஜெனியிடம் “தூங்கிட்டாங்களா.... நாலு நாளா சரியாவே தூங்களைன்னு அப்பா சொன்னார்.” என்றான்.

“அப்பவே தூங்கிட்டாங்க....” என்றாள். அப்போது மருத்துவர் உள்ளே நுழைந்தவர் பரிசோதித்து விட்டு “பிரஷர் நார்மலுக்கு வந்து விட்டது. நாளைக்குக் காலையில வீட்டுக்கு போகலாம்.” என்றார்.
அதைக் கேட்ட விஜய் மகிழ்ச்சியுடன் ஜெனியை பார்க்க... அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ரொம்ப நாட்கள் கழித்து ஜெனி விஜய்யின் பார்வையை நேரில் சந்திக்கிறாள்.

லீனா வந்த போது செல்வராணி உறங்கி கொண்டு இருந்தார். ஒரு தட்டில் உணவை எடுத்தவர் விஜய்யிடம் கொடுக்க... விஜய் வாங்க தயங்க...

“இப்பதான் அம்மாவுக்குச் சரி ஆகிடுச்சு இல்ல... சாப்பிடுங்க. நீங்க தெம்பா இருந்தா தான உங்க அம்மாவை கவனிக்க முடியும்.” என்றதும், விஜய் சென்று கை கழுவி வந்தவன், தட்டை வாங்கிச் சாப்பிட்டான். விஜய் சாப்பிட்டதும், அவனைச் செல்வராணிக்கு துணைக்கு வைத்து விட்டு மற்றவர்கள் வீட்டிற்குக் கிளம்பி சென்றனர்.

மறுநாள் காலை செல்வராணி புத்துணர்வுடன் காணப்பட்டார். அவர் எழுந்ததும் விஜய் சென்று காபி வாங்கி வந்து கொடுக்க... அதைப் பருகியவர் சற்று தெம்பாக உணர்ந்தார். அப்போது உள்ளே வந்த நர்ஸ் பரிசோதித்துப் பார்த்து விட்டு பிரஷர் நார்மல் என்றார்.

“சீக்கிரம் வீட்டுக்கு போகணும் டா.... எப்ப போகலாம்னு டாக்டரை போய்க் கேட்டுட்டு வாயேன்.” என்று செல்வராணி நச்சரிக்க ஆரம்பிக்க....
“நேத்தெல்லாம் எல்லாரையும் பயப்படுத்திட்டு இப்ப பேச்சை பாரு...” போலியாக அலுத்துக்கொன்டாலும் தன் தாய் சொன்னதை நிறைவேற்ற விஜய் சென்றான்.

அந்தப் பக்கம் அவன் சென்றதும், இந்தப் பக்கம் ஆரோக்கியராஜ் ஸ்டீபனின் குடும்பத்தோடு உள்ளே நுழைந்தார். தன் மனைவி நலமாக இருப்பதைப் பார்த்ததும் ஆரோக்கியராஜ் நிம்மதி அடைந்தார்.

செல்வராணியை நலம் விசாரித்து விட்டு ஆரோக்கியராஜூம் ஸ்டீபனும் வெளியே செல்ல... செல்வராணி உடை மாற்றி அவர்கள் கொண்டு வந்த உணவை அருந்தினார்.

அவர் உணவை அருந்தி முடித்ததும் லீனா எல்லாவற்றையும் எடுத்து வைக்க...

“ஜெனிக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா சொன்னீங்களே.... எதாவது இடம் வந்திருக்கா...” செல்வராணி கேட்க....

அதே அறையில் இருந்த ஜெனியை ஒரு பார்வை பார்த்த லீனா “இன்னும் தீவிரமா பார்க்க ஆரம்பிக்கலை...” என்றார்.
செல்வராணியும் நிம்மதி அடைந்தவர், மருத்துவமனையில் வைத்துத் திருமணப் பேச்சை ஆரம்பிக்க வேண்டாம். வீட்டிற்குச் சென்றதும் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தார். விஜய் வந்ததும் எல்லோரும் கிளம்பினர்.

மறுநாளே செல்வராணி லீனாவை அழைத்து விஜய் ஜெனி திருமணத்தைக் குறித்துப் பேச.... ஏற்கனவே அந்த எண்ணத்தில் இருந்த லீனா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

வரும் கிறிஸ்தமஸ் முடிந்து புது வருடம் ஆரம்பித்ததும், அவர்கள் வீட்டில் வந்து பேசுவதாகச் செல்வராணி சொன்னார். புத்தாண்டு வரை ஹோட்டலில் விஜய் பிஸியாக இருப்பான் என்பதால்... இரண்டு வாரம் பொறுத்திருக்க முடிவு செய்தவர், அவர்களைக் கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து புத்தாண்டு வரை அவர்கள் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்டீபன் மாலை கல்லூரியில் இருந்து வந்ததும் லீனா ஸ்டீபன்னிடம் மகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள.... ஸ்டீபன் யோசித்தார்.



ஜெனியின் காதலை அவர் மறுத்திருந்தாலும்... அவர் பார்க்கும் மாப்பிள்ளை அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்தார். அதனால் செல்வராணியின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தார். பெற்றோர் பேசியது ஜெனியின் காதிலும் விழுந்தது.

செல்வராணி அழைத்திருந்தாலும் ஆரோக்கியராஜும் தொலைபேசியில் மரியாதைக்காக அவரும் ஒருமுறை ஸ்டீபன்னை அழைத்தார்.

கிறிஸ்தமஸ் தினத்தன்று காலையில் ஆலையத்தில் ப்ராத்தனை மற்றும் வீட்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ஸ்டீபனின் குடும்பம் ஆரோக்கியராஜ் வீட்டிற்குச் சென்றனர்.

அவர்கள் வந்தது செல்வராணிக்கு மிகவும் சந்தோஷம். அவர் அவர்களை நன்றாக உபசரித்தார். இரவு அவர்கள் வீட்டில் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கம் இருப்பவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

உணவை விஜய் ஹோட்டலில் இருந்து அனுப்புவதாகச் சொல்லி விட்டான். அதனால் வீட்டை அலங்கரிக்கும் வேலை மட்டுமே இருந்தது. வீட்டில் வேலை செய்பவர்கள் அலங்கரிக்க... அதைச் செல்வராணி மேர்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். தோட்டத்தில் பப்பே முறையில் விருந்து என்பதால்... அங்கேயும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஜெனி வந்திருப்பது விஜய்குத் தெரியாது. செல்வராணி அவர்களை அழைத்தது பற்றி அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கட்டும் என்று நினைத்தார்.

ஜெனியின் வீட்டில் திருமணத்தைப் பற்றி அவர் பேசியதும், அவனுக்கு இன்னும் தெரியாது. முதலில் ஜெனி இங்கு வரட்டும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசி பழகட்டும் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று நினைத்தார்.

விடுமுறை தினம் என்பதால் ஹோட்டலில் கூட்டம் அலை மோதியது. அதனால் விஜய் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வந்தான். அப்போது தான் விருந்து ஆரம்பித்து இருந்தது. விஜய் வீட்டிற்குள் இருந்தவர்களைப் பார்த்து வரவேற்கும் விதமாகப் புன்னகையுடன் தலையசைத்தபடி அவன் அறைக்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் முகம் கழுவி உடை மாற்றி விட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவன், கீழே இறங்கும் முன் பால்கனி கதவு திறந்திருப்பதைப் பார்த்து... இந்நேரம் ஏன் கதவு திறந்திருக்கு என்று அதைப் பூட்டுவதற்குச் செல்ல... அங்கே நிலவொளியில் ஜெனி நின்றிருந்தாள்.

விஜய் அங்கே அவளை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.... ஜெனி இன்னும் அவனைப் பார்க்கவில்லை... வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய் ஜெனி...” விஜய்யின் குரல் கேட்டு ஜெனி திரும்ப....

“What a surprise? எப்ப வந்த?” என்றான்.

“மதியமே வந்துட்டோம்.” ஜெனி புன்னகைக்க...

“ஓ... அப்படியா” என்றவன் “Happy Christmas.” என்று கைநீட்ட.... தயங்கினாலும் ஜெனியும் அவனின் கைப்பற்றிக் குலுக்கினாள்.

“ஏன் இங்க தனியா இருக்க? வா கீழ போவோம்.” விஜய் இயல்பாக அழைக்க...

“நீங்க போங்க... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.” என்ற ஜெனியை விஜய் புரியாமல் பார்க்க... ஜெனி விஜய்யின் பார்வையைத் தவிர்த்தாள்.

அவ்வளவுதான் விஜய்க்குக் கோபம் வந்து விட்டது. இப்ப இவளை கீழ தானே கூப்பிட்டோம், அதுக்கு எதுக்கு இப்படிச் சீன் போடுறா?... என்று நினைத்தவன், விடுவிடுவென்று கீழே இறங்கி சென்றுவிட்டான்.

விஜய்குத் தங்கள் திருமணம் குறித்து இரு வீட்டிலும் பேசி இருப்பது தெரியாது... ஆனால் ஜெனிக்கு தெரியும். அதனால் இருவரும் சேர்ந்து சென்றால்... வீட்டினர் எதாவது நினைப்பார்கள் என்று ஜெனி விஜய்யை தவிர்க்க... விஜய்கு அது தெரியாது இல்லையா... அவன் இன்னும் ஜெனி முன்பு போலவே இருக்கிறாள் என்ற நினைப்பில் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டான்.

ஜெனியின் மீது வருத்தம் இருந்தாலும் விஜய் அதை மற்றவர்களிடம் காட்டவில்லை... மலர்ந்த முகத்துடன் வளைய வந்தான். ஸ்டீபனிடம் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். அவருக்கு ஏற்கனவே விஜய்யை பிடிக்கும். இப்போது அவனை ஜெனிக்காகக் கவனித்துப் பார்க்கும் போது இன்னும் பிடித்தது.


ஜெனி ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள். விஜய் எல்லோரிடமும் சகஜமாக இருந்தாலும்... அவன் ஜெனியின் பக்கம் மட்டும் திரும்பாமல் இருப்பதைப் பார்த்து செல்வராணி கவலைக் கொண்டார்.

விருந்து நல்லபடியாக முடிந்து நண்பர்கள் சென்றதும், விஜய்யும் ஹோட்டலுக்குச் சென்று விட்டான். கீழே இருந்த விருந்தினர் அறை ஒன்றில் ஜெனியும் லீனாவும் படுத்துக்கொள்ள... மற்றொன்றில் ஸ்டீபன் படுத்துக் கொண்டார்.

மறுநாள் காலை சாவகாசமாக எழுந்து முன்புறம் இருந்த தோட்டத்தில் அமர்ந்து எல்லோரும் காபி குடித்துக் கொண்டிருந்தனர். விஜய் மட்டும் இன்னும் எழுந்திருக்கவில்லை....

“இங்க இருந்து இந்த லேடிஸ்சோட என்ன செய்யப்போறோம்? வாங்க நாம ரெண்டு பேர் மட்டும் பாண்டிச்சேரி போய் அங்கிருந்து ஜோசெப்பையும் கூடிட்டு ரெண்டு நாள் ஊர் சுத்திட்டு வரலாம்.” என்று ஆரோக்கியசாமி ஸ்டீபனை அழைக்க...

“ரொம்பச் சந்தோசம் ! ரெண்டு நாள் இல்லை... நாலு நாள் போயிட்டு வாங்க.” என்றார் செல்வராணி கையெடுத்துக் கும்பிட்டு... ஸ்டீபன் லீனாவை பார்க்க... அவரும் போயிட்டு வாங்க என்பது போல் தலையசைத்தார்.

ஸ்டீபனுக்கே நான்கு நாட்கள் எப்படி இங்கே இருப்பது? என்றுதான் இருந்தது. ஆரோக்கியராஜ் சொன்னது அவருக்கும் பிடித்திருந்தது. விஜய் எழுந்ததும் அவனிடம் சொல்ல... அவர்களுக்கென்று ஒரு பெரிய காரை டிரைவரோடு கொடுத்து அனுப்பி வைத்தான். காலை உணவு முடிந்ததும், ஆரோக்கியராஜும் ஸ்டீபன்னும் கிளம்பி விட்டனர்.

விஜய்யும் சிறிது நேரம் தன் அம்மாவோடும் லீனாவோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு வழக்கம் போல் அவன் வேலையைப் பார்க்க சென்றான். ஜெனிக்கு பொழுதே போகவில்லை... அவ்வளவு பெரிய வீட்டை சுற்றிக் கொண்டிருந்தாள்.

மாலை விஜய் வந்ததும் அவனுக்குச் செல்வராணி சிற்றுண்டி கொடுக்க... அதைச் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்த விஜய்... வழக்கம்போல் அவர்கள் வில்லாவிற்கு என்று இருக்கும் க்ளப்பிற்குக் கிளம்ப...

“டேய் விஜய் ஜெனிக்கு பொழுதே போகலை டா... அவளையும் கூடிட்டு போடா...” செல்வராணி சொல்ல... லீனா இருந்ததால் விஜய் மறுக்க முடியாமல் சரி என்றான்.

நடக்கும் தூரம் என்பதால் இருவரும் நடந்தே சென்றனர். இருவருக்கும் இடையில் ஒரு பஸ் போகும் அளவிற்கு இடைவெளி இருந்தது. ஜெனி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். விஜய் அவள் பார்க்காத நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹப்பா... இதே ஒரு ஊரு போல இருக்கு என்று மனதிற்குள் வியந்தபடி வந்த ஜெனி, அங்கே சென்றதும் அசந்து விட்டாள். அதே ஒரு மாளிகை போல் இருந்தது. அதில் இல்லாததே இல்லை... நீச்சல் குளம், ஜிம், ஷட்டில் கோர்ட், டென்னிஸ் கோர்ட், சிறுவர்களுக்கான விளையாட்டு என்று நிறையவே இருந்தது.

விஜய் ஜெனிக்கு எல்லாவற்றையும் காட்டிவிட்டு ஷட்டில் கோர்ட் வந்தவன், அவளிடம் ஒரு பேட்டை கொடுக்க... ஜெனி பயந்து விட்டாள்.


“விளையாடலாமா...” விஜய் அழைக்க...

“எனக்குத் தெரியாது... நான் சும்மா பார்கத்தான் வந்தேன்.” ஜெனி விட்டால் அழுது விடுபவள் போல் இருந்தாள். விஜய்க்கு அவளைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

“சொல்லித்தரவா...” விஜய் புன்னகையுடன் கேட்க...

அங்கிருந்த நண்டு சிண்டு எல்லாம் சூப்பராக விளையாடும் போது... அவர்களுக்கு நடுவில் இப்போது தான் விளையாட கற்றுக்கொள்வது கேலியாக இருக்காது என்று நினைத்த ஜெனி, வேண்டாம் என்று தலையசைக்க....

“சரி அப்ப நீ போய் உனக்கு எங்க இருக்கணுமோ அங்க இரு... நான் விளையாடிட்டு வரேன்.” என்ற விஜய், அவன் தினமும் விளையாடுபவர்களுடன் சேர்ந்து கொள்ள... ஜெனி திரும்ப ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
:love: :love: :love:

இருவருக்கும் இடையில் ஒரு பஸ் போகும் அளவுக்கு இடைவெளி இருந்தது.......
நீ என்னை நீங்காதே அன்பே :eek::eek::eek:

ஜெனிக்கு தெரிந்தும் நெருங்கவில்லை........
அவனுக்கு தெரியாமல் நெருங்கவில்லை.........
நீ ????
 
Last edited:
Top