Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum paruvam chapter ten

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 10

'என்னது பாலாவா அது?' எழுந்த தேவி வேகமாய் பெஞ்சை விட்டு எழுந்து பின் ரோவுக்குச் சென்றாள். கூட்டம் மேடையில் உள்ள நாடகத்தை ரசித்துக் கொண்டிருக்க இறைவனின் இந்த நாடகத்தை இவர்கள் கூட உள்ளவர்கள் மட்டும் கண்டு ப்.
அவள் வருவதைக் கண்டு ஷீபா உள்ளே போக இசைவாக நகர ஷீபாவின் அருகில் உட்கார்ந்திருந்த சரவணன் என்ன இவ்வளவு வேகமாய் வருகிறாள் என்பது போல் பார்க்க அவனைக் கண்ட மாத்திரத்தில் கண்ணீர் உடைப்பெடுக்க அவன் அருகில் அமர்ந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
'நீ...நீங்க... பாலாவா? எவ்ளோ வருஷமாச்சு ஒங்களப் பாத்து?'
ஷீபா குறுக்கிட்டாள்.
'போன வாரம் தான பாத்தீங்க?'
'அவ சின்ன வயசுல என்ன பாத்தத சொல்றா?'
'ஓகோ! மகாராணி அதெல்லாம் நியாபகம் வச்சிருக்காங்களா என்ன?'
'இவங்க என்ன இப்படி சொல்றாங்க? ஒவ்வொரு லீவுக்கும் நீங்க வருவீங்கன்னு ஆவலோட காத்திட்டு இருப்பேன். எங்க அத்த வீட்டுக்கு எல்லோரும் போறப்ப எங்க தாத்தா பாட்டியோட நான் மட்டும் வீட்ல இருப்பேன் உங்களுக்காக. நான் எட்டாவது படிக்கும்போது வந்தீங்க. அதுக்கப்புறம் வரவே இல்ல.... ஏன்?'
'அது... அந்த அத்த வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் ஒரு சின்ன பிரச்சினை. போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு லீவானா துடிக்கும். ஒரு ரெண்டு வருஷம் பொறுத்துகிட்டேன். அப்புறம் லீவ்ல ப்ரெண்ட்ஸோட ஒங்க ஊருக்கு வந்து ஒன்ன பாப்பேன். நான் தான் பாலான்னு சொல்லி பேச பயமா இருந்தது. கூட வெளயாண்ட புள்ள சும்மா தான் வெளயாண்டுச்சா இல்ல என் மேல பாசமா இருந்துச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறது? வேற வழி இல்லாம ஒன்னயே பாலோ பண்ணியே பொழுத போக்கணும். காலேஜ் படிக்க வெளில தான வருவ. அப்ப பேசலாம்னு நெனச்சென். அது படியெ செஞ்சென். கொஞ்சம் பேசிப் பழகினதுக்கப்புறம் நான் தான் பாலானு சொல்லலாம்னு நெனச்சேன். மொதல்லயே பாலான்னு சொல்லிட்டா நீ நான் ஒங்கள அண்ணன் மாதிரி நெனச்சேன்னு சொல்லிட்டா...'
அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள் தேவி.
'எனக்கு அந்த பசுமையான நினைவுகள் எல்லாம் மனசுக்குள்ள அப்படியே இருக்கு. நீங்க நாங்க எல்லாம் விளையாடுனது.. என்ன அவுட் பண்ணாம மொதல்ல மத்தவங்கள நீங்க அவுட் பண்றது... கொளத்துல விழுந்த என் மோதிரத்த நீங்க கஷ்டப்பட்டு எடுத்துத் தந்தது... எங்க வீட்டு மணி இறந்தப்போ கொண்டு போய் அடக்கம் பண்ணிட்டு நான் அழறதப் பாக்க சகிக்காம இன்னொரு நாய் வாங்கிட்டு வந்தது... அந்த மணி இறந்தப்போ நான் அத நெனச்சி மட்டும் அழல.. ஒங்களயும் பாக்க முடியலயேன்னு நெனச்சு அழுதேன்...'
'ஐயோ முடியல சரவணா.. என்ன இது சினிமால வர மாதிரியே..சரி.. நாங்கள்லாம் வேற இடத்துக்கு போயிறோம். நீங்க உக்காந்து பல்லாங்குழி வெளயாண்ட கதையையும், பாம்புகட்டம் வெளயாண்ட கதையையும் பேசிட்டிருங்க. ஆமாம். தேவி.. சின்ன வயசுல அப்பா அம்மா வெளயாட்டு வெளயாண்டிருக்கிங்களா?'
தேவியின் முகம் சிவக்க ஒரு 'சீ'யை உதிர்த்து தலை குனிந்தாள்.
'என்ன ஷீபா இது?' என்றான் சரவணன்.
'இங்க பாருடா.. இவள கேலி பண்ணா ஐயாவுக்கு கோபம் வரத? இவ்ளோ இடம் கொடுக்காத சரவணா.. நாளைக்கு இந்த ஷீபா கூட சேராதீங்கன்னு நம்ம நட்புக்கே ஒல வச்சிருவா..'
தேவி திரும்பினாள்.
'ஏன் இப்படி பேசுறீங்க.. இவர்ட்ட நான் மொத மொத லவ் யூ சொல்ல வச்ச நீங்க என் நாத்தனார் மாதிரி.'
'என்னது நாத்தனாரா? சரவணன் அண்ணா சரவணன் அண்ணா எனக்கு முனியாண்டி விலாஸ்ல நெய் தோச வாங்கித் தாங்கண்ணா..'
ஷீபாவின் கேலியை அந்த கூட்டமே ரசிக்க, சரவணன் 'இவங்க நம்மள பேச விட மாட்டாங்க. வா. வெளில அந்த புளிய மரத்தடிக்கு போலாம்.' என்றான்.
ஷீபா 'பாத்தியா. காதல் நட்ப தள்ளி வைக்கறத.'
சரவணன் சிரித்துக் கொண்டே 'நான் முன்னால போறேன். நீ ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு வா.' என்றான்.
தேவி தலையாட்டியபடி முன்னால் அமர்ந்திருந்த சரசுவிடம் 'சரசு! நான் வெளில புளிய மரத்தடியில் வெயிட் பண்றேன். நீ ஃபங்ஷன் முடிஞ்சதும் அங்க வா.'என்றாள்.
சரசு தலையாட்டி விட்டு ஒரு குறும்புப் பார்வையோடு ஸ்டேஜ் மீது கண்களை நகர்த்த அதற்குள் சரவணன் அரங்கை விட்டு வெளியேறி இருந்தான்.
ஷீபா தேவியிடம் திரும்பினாள்.
'நீ கொடுத்து வச்சவ தேவி. சரவணன் நல்ல பையன். நெறய சீனியர் ஜுனியர் ஏன் புதுசா வந்த லெச்சரருமே வலை விரிச்சும் சிக்கல. கண்ணியமா பழகற பையன். நீ அவன புரிஞ்சுக்கலன்னதும் எனக்கு கோபம் வந்துச்சு. இப்ப தணிஞ்சிரிச்சி. புளியங்கொம்பு. விட்டுராத. பாசமா இருப்பான். ஒரு பொம்பளைக்கு வேற என்ன வேணும்? போ. வெளில இருந்து நகத்த கடிச்சிட்டு இருப்பான். நீ இன்னும் வரல்லன்னு.'
தேவி தலை ஆட்டிக் கொண்டு மெதுவாய் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினான்.
தூரத்தில் புளிய மரமும் அதன் கீழ் அவனும் தெரிந்தார்கள்.
பாலாவின் மீது அந்த வயதில் ஒரு இனம் புரியாத இனக் கவர்ச்சி. செவத்த பையன். தன்னிடம் அக்கறை காண்பித்த பையன். நாகரிகமாகப் பழகிய பையன். அவன் மீது காதல் என்று வந்ததில்லை. ஆனால் பிடிக்கும். அவன் வராத நாட்களில் அந்த வீட்டு அத்தையிடம் எங்கே என்று கேட்டதற்கு அடுத்த லீவில் வருகிறான். பரீச்சை இருக்கிறதாம் என்றே வருடா வருடம் பதில் கிடைத்தது. லக்ஷ்மி, சிவசங்கரி கதைகள் படிக்கும்போது அதில் வரும் நாயகன் அவன் உருவமாய் தெரிந்தது.
சினிமாவில் கதா நாயகன் டூயட் பாடும்போது பாலா இப்போது எப்படி இருப்பான் என்று தோன்றியது. பக்கத்து வீட்டுக்கு உறவினர் கும்பலாய் வரும்போது அதில் சில வாலிபர்களைப் பார்க்கும்போது பாலாவாய் இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் கேட்க முடியாமல் தவித்திருக்கிறாள். அவள் அப்போது வாலைக்குமரி ஆயிற்றே.
அடுத்தடுத்து படிப்பு படிப்பு என சிறிது அவனை மறந்திருக்கும்போது இப்போது அவன். தன் மனம் கவர்ந்தவன். பெண்கள் கண்டாலே ஏங்கும் அழகன். அழகு இருக்கிறதே என்று பொறுக்கியாய் திரியாமல் குணத்திலும் தங்கம்.
புளிய மரத்தடியில் நிற்கும் அவன் அருகில் வந்தாள். ஒரு முறை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஐந்து நாள் தாடி அவனது சிரிப்பை மறைத்திருக்க கண்களில் அவள் தன்னை புரிந்து கொண்டாளே என்ற நினைப்பு மிளிர்ந்தது.ம
'தேவி.. ஸ்ரீதேவி.. உன் திருவாய் மலர்ந்திட வார்த்தை சொல்லி விடம்மா..' என்ற பாடலை உதடு குவித்து விசில் மூலம் இசைக்க தேவியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
அவள் தலை குனிய அவன் தனது கைகளால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.
'உங்களுக்கு என் மேல அவ்ளோ பிரியமா? இந்த ஒல்லிப்பிச்சானுக்காக இந்த தாடியா.'
தாடியை கைகளால் அளைந்தாள்.
'என்ன இப்படி சொல்லிட்ட? ப்ளஸ் டூ படிக்கிறப்ப ஒன் பின்னால வந்து சரசு செருப்ப தூக்கி காட்டி இருக்குறா. அப்புறம் நீ ஒல்லிப் பிச்சானெலாம் இல்ல. ஒடல் வாகு அப்படி. ஒன் கண்ணே போறுமே. காந்தம் மாதிரி. நீ பாத்தேன்னா ஒன் கண்ண பாக்கறவன் வேற பக்கம் கண்ண நகத்த முடியாது. அவ்ளோ பவர்புல் ஒன் கண்ணூ.'
சிரித்துக் கொண்ட தேவி 'அப்புறம்?' என்றாள்.
'அப்புறம்..ஒன் மூக்கு இங்கிலீஸ்ல ரோமன் நோஸ்னு சொல்வாங்க. அளவா நீண்டு கூர்மையா இருக்கும். ஒனக்கு அதான். ஒரு கடி கடிக்கணும் போல இருக்கும்.'
கடித்து விட்டது போல் 'ஹா' என்றாள் தேவி.
'பொண்ணு மூக்கும் முழியுமா இருக்கான்னு கேப்பாங்கள்ல. இந்த ரெண்டும் தான் ஒரு பொண்ணுக்கு அழக தரும். ஒனக்கு இந்த ரெண்டுமே அவ்ளோ அழகு.'
'அப்போ என் அழகுக்காகத் தான் லவ்வா?' சிணுங்கினாள் தேவி.
'அப்படில்லாம் இல்ல. ஒன் மேல உள்ள அன்புக்காகவும் தான். நீ என்ன நல்லா வச்சி பாத்துப்பேங்கறதுக்காகவும் தான்.'
அவள் அவனது கண்களை உற்றுப் பார்த்தாள். அது உண்மையால் வழிய அவளது கண்கள் கண்ணீரால் பளபளக்க ஆரம்பித்தன. அவனது கைகள் மெதுவாய் அவளது கண்ணீரைத்துடைக்க வர விழிகளை மூடிக் கொண்டாள். கன்னத்தில் நீர் வழிந்தோட அதைத் துடைத்தான் சரவணன். அவனது விரல்கள் தந்த ஸ்பரிசத்தில் சிலிர்த்தாள் தேவி.
'ம்கும்' என்ற கனைப்பு சப்தம் கேட்க சட் என்று திரும்பினாள் தேவி.
சரசு.
தள்ளி நின்று திரும்பி நின்றவாறு சொன்னாள்.
'ஃபங்ஷன் முடிஞ்சது. எல்லாரும் வராங்க. டைம் ஆச்சு. போலாமா?'
தேவி தன் கைகளைப் பார்த்தாள்.
'ஐயயோ என் புக்ஸ்?'
அலறினாள்.
சரசு திரும்பி 'மகாராணி தான் பறந்துட்டீங்களே! நான் எடுத்து வச்சிருக்கேன். வாங்க.' என்றாள் சிரித்தபடி.
அசடு வழிய 'வரென். நாளைக்கு பாக்கலாம்' என்றாள் சரவணனிடம்.
'என்ன அதுக்குள்லெயா? இன்னும் கொஞ்ச நேரம் இரென்.' என்று கெஞ்சினான் சரவணன்.
'ம்கூம். முடியாது. நாளைக்கு க் ளாஸ் முடிஞ்சதும் இந்த புளிய மரத்தடிக்கு வந்துருங்க. இவள லைப்ரரிக்கு அனுப்பிட்டு நான் இங்க வந்துர்றன்.' என்றாள்.
'ஆமாம். நான் பாடம் படிக்கணும். நீங்க காதல் பாடம் படிக்கணும்.' என்று போலி சலிப்புடன் சரசு கூற சிரித்தனர் இருவரும்.

(தொடரும்)
 
Nice romantic epi.
Interesting. Ellam seri than pinnae yenn vittu pona nallavan.
Waiting for next epi. Veegam varennae.
 
Top