Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 19

Advertisement

அத்தியாயம் – 19

இந்திராவிற்கு, சிவகாமியைப் பார்த்ததும் அப்படியொரு அழுகை. இதுநாள் வரைக்கும் அவரின் முகத்தினை கூட நேருக்கு நேர் பார்த்திடாதவர், அப்படியே பார்க்க நேர்ந்தாலும் முகத்தினை திருப்பிக்கொள்வார். ஆனால் இப்போதோ, என்னவோ அவருக்கே தெரியவில்லை சிவகாமி வந்த தன்னருகே அமர்ந்ததும், ஏற்கனவே அழுதுகொண்டு இருந்தவருக்கு இன்னமும் அழுகை கூடியது.

வெளியே நாம் யாரைப் பற்றி எப்படி பேசினாலும், நம்முடைய நிலையை தக்க வைத்துகொள்ள என்ன செய்தாலும், நம்மின் உள் மனதிற்கு தெரியும் தானே யார் எப்படி என்றும், நாம் எப்படி என்றும்.

அதிலும் இந்திராவிற்கு, பமீலாவை அந்த நிலையில் காணவும் மனது மிக மிக அடிபட்டு போனது. தான் அவளை சரியாய் வளர்க்கவில்லையோ என்று தோன்ற அதே நேரம் தான் எங்கே அவளை வளர்த்தோம் என்றும் தோன்றியது.. மனதில் பல எண்ணங்கள்.. அனைத்தையும் தாண்டி பமீலா குணமாகிவிட வேண்டும் என்பதே பிரதானமாய்..

அதிலும் இப்போது கமலி சிவகாமி எல்லாம் வர, வேதனை ஒருபுறம் இருந்தளும் குற்றவுணர்வு வேறு.. எல்லாம் சேர்த்து இந்திராவிற்கு மேலும் மேலும் அழுகையை கொடுக்க,

மணிராதாவோ “இப்போ என்னத்துக்கு இப்படி அழற.. அதெல்லாம் அவளுக்கு ஒன்னும் ஆகாது..” என்றார் கொஞ்சம் கடிந்தே..

சிவகாமி எதுவும் சொல்லவில்லை. இந்திரா அழும் மட்டும் பொறுத்திருந்தவர், “இப்போ இதை சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம். எந்த நிலையிலையும் நம்ம நிலை இறங்கி நடக்கக்கூடாது.. அதேதான் நம்ம பிள்ளைகளுக்கும்.. எங்க இருக்கோம், யாரோட இருக்கோம்னு எல்லாம் இல்லை.. எப்படி இருக்கோம் அது மட்டும் தான் பேச்சு. நம்ம நடந்துக்கிறது தான் எல்லாத்தையும் முடிவு செய்யும் இந்திரா.. பமீலாவுக்கு ஒன்னும் ஆகாது. ஆனா இது அவளுக்கும் நல்லதில்லை.. அவளோட வாழ்க்கைக்கும் நல்லதில்லை.. நம்ம பசங்க நம்மளைப் பார்த்துதான் வளர்றாங்க.. எல்லாத்தையும் தாண்டி அவளோட வாழ்க்கை அவளுக்கு ரொம்ப முக்கியம்.. இந்த பிரச்சனை எல்லாம் நீயும் நானும் இருக்க வரைக்கும்தான்..

ஆனா நான் எதையும் பெருசா எடுத்துக்கிறது இல்லை. அப்படி நான் நினைச்சிருந்தா என் பொண்ணுக்கு இப்போ வனா போல ஒருத்தன் கிடைச்சிருக்க மாட்டான்.. இனியாவது கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கோ நீயும்..” என, பதிலுக்கு அங்கே யாருமே எதுவும் பேச முடியவில்லை.

இப்படியொரு நிலையில் இப்படியான பேச்சினை அத்தனை எளிதில் யாரும் பேசிட முடியாது. ஆனால் இது தேவையான ஒன்றும்கூட.

ஏனெனில் இன்று பமீலா செய்தது அவளின் வாழ்வை மொத்தமுமாய் பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எதாவது ஒன்றேன்றால் அதன்பின் யார் பொறுப்பு??

சிவகாமி மனதில் எதுவும் வைத்துகொள்ளாது சொல்லிவிட்டார். இதற்குமேலும் இதைப்பற்றி பேசுவாரா என்பது தெரியாது. ஆனால் இன்று பேசிவிட்டார். யாரும் பதில் சொல்லவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை.

திரும்பி வந்தனாவைப் பார்த்தவர், “என்ன நீ.. கல்யாணப் பொண்ணு இங்க உக்காந்து இருக்க.. வீட்டுக்கு போகலையா??” என, அப்போது தான் மணிராதாவிற்கும் அது நினைவில் வர,

“வந்தனா.. ஒரு ஆட்டோ பிடிச்சு கூட போறியா..” என்று கேட்க,

சிவகாமியோ “அதெல்லாம் வேணாம்.. நீ என்னோட வா..” என்றவர், மருத்துவர் வந்து என்னவென்று சொல்லும்வரைக்கும் காத்திருந்தார்.

வந்தனாவிற்கு சிவகாமியை எண்ணி ஆச்சர்யமாய் இருந்தது. எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று. அப்படியே கமலி சில நேரங்களில் சிவகாமிதான். எப்போது என்ன பேசவேண்டும் அதை எப்படி பேசவேண்டும். பெரும்பாலும் பேச்சினால் தானே பல விஷயங்கள் நிறம் மாறுகின்றன. அவளின் எண்ணம் அவளின் பார்வையில் தெரிய,

“என்ன வந்தனா??!!” என்றார் சிவகாமி.

“ஒண்ணுமில்ல அத்தை..” என்றவள் லேசாய் புன்னகைக்க,

“என்னடா இவ இப்படி இருக்காளேன்னு பாக்குறியா.. சூழ்நிலை தான் நம்மளை மாத்தும்.. ஆனா எப்படி மாறனுங்கிறது நம்ம கைலதான் இருக்கு.. நான் ஒரு விசயத்துல தெளிவா இருந்தேன். அதுனால மட்டும்தான் இப்போ வரைக்கும் இப்படி இருக்க முடிஞ்சது.. கமலிக்கும் அதைதான் சொல்லிக்கொடுத்தேன்..” என, அவர் சொன்னது பிறரின் காதிலும் விழுந்தது.

ஒருவார்த்தை யாரையும் நோகடிக்கவில்லை, குத்திக்காட்டவில்லை, நீ இப்படி அப்படி என்று யாரையும் எதுவும் சொல்லவில்லை. எது நடந்ததோ அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் சொல்லவேண்டியதை சிறப்பாய் சொல்ல, இதனை கேட்ட இந்திராவிற்கும் மணிராதாவிற்கும் முகத்தினை எங்கே கொண்டுபோய் வைக்கவென்று தான் தெரியவில்லை.

இருவரும் முகத்தை தொங்கப் போட்டு அமர்ந்திருக்க, ஒருவழியாய் பமீலாவிற்கான வைத்தியம் முடிந்து மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

வந்தவர்களோ “நிறைய ப்ளட் லாஸ்.. பட் க்ரிட்டிக்கல் தாண்டியாச்சு.. இருந்தாலும் ரெண்டு நாள் ஐசியுல இருக்கட்டும்.. அடுத்து நார்மல் ரூம் ஷிப்ட் பண்றோம்...” என்ற, அனைவர்க்கும் மனதில் கொஞ்சம் நிம்மதி.

கோவர்த்தன் “இப்.. இப்போ பாக்க முடியுமா??” என்று கேட்க,

“ஒன் ஹவர் போகணும்.. அப்புறம் போங்க..” என்றுவிட்டு போனார் மருத்துவர்.

மருத்துவர் அப்பக்கம் செல்லவும் சிவகாமி கோவர்த்தனிடம் “அப்போ நான் கிளம்புறேன் தம்பி.. ரூம்க்கு மாத்தவும் வந்து பாக்குறேன்..” என்றவர், வந்தனாவிடம் “வர்றியாம்மா..” என்றுசொல்ல,

அவளோ “சரிங்கத்தை..” என்றவள், பின் அம்மாவின் முகம் பார்க்க, மணிராதா போ என்றும் சொல்லவில்லை போகாதே என்றும் சொல்லவில்லை.

ஆனால் முகத்தினில் மறுப்பாய் எதுவும் தெரியவில்லை என்பதால் வந்தனா சிவகாமியோடு கிளம்பி வந்தாள்.

வனமாலி இன்னமும் உறக்கத்தில் தான் இருந்தான்.. நல்ல ஆழ்ந்த உறக்கம். என்னவோ இத்தனை நாள் இல்லாது இன்று அப்படி உறங்க முடிந்தது அதற்கு காரணம் கமலியே. அவளின் அணைப்பும், அருகாமையும் இல்லையெனில் கண்டிப்பாய் வனமாலிக்கு இப்படியான ஒரு உறக்கம் வந்திருக்காது.

வனமாலி உறங்கிவிட்டான் என்றெண்ணியவள், மெதுவாய் அவனிடம் இருந்து விலகி, ஹாலில் வந்து கொஞ்ச நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள். அவளுக்கு உறக்கமில்லை. ஆனால் அவன் உறங்கவேண்டும் என்று கொஞ்ச நேரம் அங்கே படுத்திருக்க, இப்போது எழுந்து வந்தவளின் கண்களிலோ அங்கே வீட்டு ஹாலில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று கண்ணில் பட்டது.

மகுடேஸ்வரனோடு வனமாலி கோவர்த்தன் மற்றும் வந்தனா எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம். அநேகமாய் இவர்கள் எல்லாம் இங்கே வந்த புதிதில் எடுத்திருக்கவேண்டும். மகுடேஸ்வரன் இள வயதில் இருந்தார். கமலிக்கு அப்புகைப்படத்தைக் கண்டதும் ஏனோ அதை கையில் எடுத்துப் பார்க்கவேண்டும் என்று தோன்ற, சுவரில் மாட்டியிருந்ததை எடுத்துப் பார்த்தாள்.

அவளையும் அறியாது கண்களில் நீர் வழிய, ஆனாலும் பார்வை மாற்றாது அவளின் அப்பாவின் முகத்தை மட்டுமே பார்த்திருந்தாள். புன்னகை முகத்துடன் இருக்கும் மகுடேஸ்வரன். அநேக நேரங்களில் அவர் அப்படித்தான் இருப்பார்.

அதிலும் இவளைக் காணும்போதெல்லாம் அவர் கண்களில் ஒரு ஏக்கம் தெரியும் அப்பா என்று அழைக்கமாட்டாளா என்று. ஆனாலும் எதுவும் சொல்லாது “கமலிம்மா..” என்பதை தவிர கடைசிவரைக்கும் அவர் வேறொன்றும் சொல்லவில்லை.

என்றாவது ஒருநாள் தன்நிலையும் மகளுக்கு புரியும் என்று எண்ணியிருந்தார். ஆனால் அதற்கான காலம் அவருக்கு இல்லாமல் போனது தான் பரிதாபம். கமலியின் மனதிலும் இதே எண்ணங்கள் தான் இருந்திருக்க வேண்டும்.

‘அப்பா...!!’ என்று மெதுவாய் அவளுக்கே கேட்காத வகையில் அவளின் இதழ்கள் முணுமுணுக்க, அவளின் கண்களில் வழிந்த நீர் அப்புகைப்படத்தில் விழுந்து நின்றது..

“ப்பா...” என்று திரும்பவும் அழைத்தவள், மெதுவாய் அவரின் உருவத்தை வருட,

“ஏன் ப்பா.. ஏன்?? நீங்க நினைச்சிருந்தா எல்லாம் செஞ்சிருக்கலாம்.. எல்லாத்தையுமே சரி பண்ணிருக்கலாம்.. ஆனா ஏன்ப்பா எதுவுமே செய்யலை..” என்று இத்தனை ஆண்டுகளாய் அவரோடு பேசாது விட்டதை இப்போது கேட்டாள்.

“அம்மாக்கு மட்டுமில்லை யாருக்குமே நீங்க நியாயம் செய்யலைப்பா. உங்க மனசுல என்ன இருந்ததோ தெரியலை. ஆனா நீங்களும் கண்டிப்பா ஏதாவது செஞ்சிருக்கணும். இல்லையா இந்த உயில் எழுதுறப்போவாது எல்லாரையும் உக்கார வச்சி பேசிருக்கணும். கண்டிப்பா அப்போ உங்களை மீறி நடந்திருக்காது..” என்றவளுக்கு அழுகை கூடி கேவல் பிறக்க,

தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தவள், ஒருநொடி திகைத்து, அப்படியே அந்த புகைப்படத்தை வைத்துவிட்டு, வேகமாய் போய் வனமாலியின் அருகே திரும்பப் படுத்துகொண்டாள்.

என்னவோ அந்த நேரத்தில் தான் அழுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அழாது இருக்க முடியவில்லை. கண்களை திரும்ப திரும்ப துடைத்தவள், அது முடியாது போகவும், தலையணையில் வேகமாய் முகத்தை புதைக்க, இவளின் அசைவில் லேசாய் வனமாலியின் உறக்கம் கலைந்தது.

ஆனால் கமலியோ அதெல்லாம் காணும் நிலையில் இல்லை.

‘நீங்களும் எதுவும் பண்ணலப்பா.. ஆனா நானுமே கூட அம்மா சொல்றத கேட்டிருக்கணும்.. நான் தப்பா எதுவும் செய்ய நினைக்கலை.. அவங்க அவங்க தப்பை உணர வைக்கணும் நினைச்சேன்.. ஆனா எல்லாமே இப்போ என்னால தானே..’ என்று மனம் வருந்த, அவளின் உடலோ அழுகையில் குலுங்கியது.

தான் சரி என்று நினைத்து இத்தனை நாள் செய்தது ஒன்று. ஆனால் அது வாழ்வின் ஓட்டத்தில் மாறக்கூடும் என்பதும், சூழ்நிலை மாறுகையில் நாம் நினைப்பது சரியானதாகவே இருந்தாலும் அது தவறாகக்கூடும் என்பதும் கமலிக்கு அப்போது தான் புரிந்தது. மேலும் மேலும் அவளின் அழுகை கூட வனமாலி முழித்தே விட்டான்.

“ஹேய் கமலி..” என்று அவளைத் தொட,

அவளோ முகத்தையே திருப்பாது “நான் அழறேன் ப்ளீஸ்..” என்றாள் திரும்பாது.

“எ.. என்னாச்சு?? ஏன் அழற??” என்றவன் அடித்து பிடித்து எழுந்தமர,

“ஒண்ணுமில்ல.. விடுங்க..” என்றவள் இன்னும் முகத்தை மறைத்தாள்.

“அழறதா இருந்தாலும், என்னைப் பார்த்து என்கிட்டே சொல்லிட்டு அழு கமலி..” என்றவன் அவளை வம்பாய் திருப்ப,

அவளோ “ம்ம்.. எல்லாமே என்னாலதானே..” என்றாள் அழுகையோடு.

‘இப்போ இவ ஆரம்பிக்கிறாளா..’ என்று பார்த்தவன், “அப்படின்னு யார் சொன்னா??” என்றான்.

“யார் சொல்லணும்.. அப்பா எல்லாத்தையும் சரி பண்ணிருக்கணும்.. இல்லையா நானாவது சும்மா இருந்திருக்கணும்..” என, இத்தனை ஆண்டுகளில் கமலி முதல் முறையாய் அப்பா எனும் வார்த்தையை சொல்வதை ஒருவித அதிர்வோடு உணர்ந்தான் வனமாலி.

‘என்ன சொன்ன??!!’ என்று கேட்கும் வேகம் வர, உடனே அதைவிட்டு “யார் மேலயும் எந்த தப்புமில்லை கமலிம்மா..” என்றான் மெதுவாய்.

அவனின் ‘கமலிம்மா..’ அப்படியே மகுடேஸ்வரன் சொல்வதுபோல் இருக்க “ம்ம் ம்ம் அப்பாவும் இப்படிதான் சொல்வார்..” என்றவள், அவனைத் திரும்பிப் பார்த்து, “என்னை கொஞ்ச நேரம் கட்டிக்கோங்க..” என, ‘என்னடா இது..’ என்று கண்களை விரித்தான்..

“ம்ம்ச் அப்புறம் ஷாக் ஆகலாம்..” என்றவள், தானே அவனின் கரங்களை எடுத்து தன் மீது போட்டுக்கொள்ள, வனமாலியோ மற்றது விடுத்து அவளை இறுக அணைத்து “என்னாச்சு உனக்கு??” என,

“ம்ம்ம் ஒண்ணுமில்ல..” என்றவள் இன்னும் அவனை நெருக்கி, அவன் மீதே முகம் புதைக்க, அவனோ “ஹேய் கமலி.. நீ என்ன செய்றன்னு தெரியுதா??” என்றான் சின்ன சிரிப்போடு.

அவனின் சிரிப்பில் நிமிர்ந்தவள் “நான் ஒன்னும் பேபி இல்லை..” என,

“ஹா ஹா.. ஆனா பேபி போல அழற..” என்றவன், மெதுவாய் அவளின் கண்களில் முத்தமிட,

“நான் எதுவும் யாருக்கும் தப்பா செய்யணும் நினைக்கலை.. பட் அன்னிக்கு உங்... அத்தை பேசினது தப்புதானே.. அதுதான் என்னை ரொம்ப பேச வச்சிடுச்சு..” என்று ஆரம்ப நிலைக்கே போக, கமலியின் இந்த மாற்றம் வனமாலிக்கு புரியாது இல்லை.

ஆனாலும் தான் ஏதாவது கேட்கப் போய் அவள் வேண்டுமென்றே மறைக்க நினைப்பாள் என்று தெரியும், ஆக “இப்போ ஏன் அந்த பேச்சு.. எல்லாமே சரியாகும்.. நம்ம எல்லாம் ஒரே குடும்பம்.. ஒண்ணா இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி..” என்றவன்,

“என்னை தூங்க சொல்லிட்டு நீ இந்த வேலை செஞ்சிட்டு இருக்க..” என்று, அவளை தன்மீதே சாய்த்து தட்ட, “ம்ம்ச் தட்டிக்கொடுக்க நான் என்ன பேபியா..” என்றாள் அவன் சொன்னதுபோலவே.

வனமாலியோ பேச்சை மாற்ற எண்ணி “யாரோ சொன்னாங்க முதல்ல நம்ம குழந்தை பெத்துக்கனும்னு..” என, அவன் சொன்னது காதில் விழுந்தாலும் கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தவள் “ம்ம் பேசாம நம்ம கொடைக்கானல் போயிருந்திருக்கலாம்..” என்றாள் அவளும் சிரித்து.

என்னவோ அழுகை, வேதனை எல்லாம் வனமாலியின் இந்த நெருக்கத்தில் காணாது போக, மனதோ அவனிடம் இன்னும் நெருங்க நினைத்தது.

வனமாலியோ, “கொடைக்கானல் தான் போகனுமா என்ன??” என்று கேட்க, இவளோ “ம்ம்ம்ம்..” என்று இழுக்க,

“ஓய்.. என்ன??” என்று அவளின் முகத்தை நிமிர்த்தியவன், அவள் முகம் சொன்ன சேதியில் “கமலி...!!!” என்று இன்னும் இறுக அணைத்துக்கொள்ள,

அவளின் செவியை தன் இதழால் வருடியவன் “தேங்க்ஸ் கமலி.. என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு..” என்றான்.

அவன் செய்தது கூசினாலும் விலகாது “உங்களை புரிஞ்சுக்கிட்டேனா தெரியலை.. ஆனா பிடிச்சிருக்கு..” என்றாள் அவனைப் போலவே ஆனால் அவன் கன்னத்தோடு கன்னம் தேய்த்து.

“அதான் ஏற்கனவே தெரியுமே..” என்றவன் அடுத்து முன்னேற, “என்ன தெரியும் என்ன தெரியும்??” என்றாள் வேகமாய்.

“என்னை உனக்கு பிடிக்கும்னு..” என்றபடி அவனோ பேச்சு தேவையா என்று பார்க்க, “அப்படியெல்லாம் எதுவுமில்லை..” என்று வேகமாய் மறுத்தவள்,

“ஆனா கொஞ்சம் அப்படித்தான்..” என்று சொல்ல,

“ஹா ஹா ஹா..” என்று சிரித்தவன், அவர்களின் வாழ்வின் அடுத்த கட்டத்தினை நோக்கி செல்ல, இருவருமே மற்றவரின் நெருக்கத்தில், தங்கள் மனதில் இருக்கும் வருத்தங்கள் துறந்து, விருப்பங்கள் கண் விழிக்க,

கமலியும் சரி வனமாலியும் சரி, தங்களுக்கான வாழ்வு என்பது எது என்று அந்நொடியில் உணர, இருவருமே அந்நிலையில் வேறெதுவும் நினைக்கத் தயாராய் இல்லை. மீண்டும் எப்போது உறங்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஆழ்ந்த நிம்மதியான நல்லுறக்கம்.

அப்போதும் கூட கமலிதான் முதலில் விழித்தாள், விழித்தவள் வனமாலி முகம் பார்க்க, அவனோ அப்படியொரு நிம்மதியிலும் மகிழ்விலும் உறங்குவதுபோல் தோன்ற, மெதுவாய் அவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள், நேரம் பார்க்க,

“இவ்வளோ நேரமா??!!” என்று அதிர்ந்து பின் வேகமாய் குளித்து வந்ததும், வந்தனாக்கு போன் செய்ய, அவளோ “பமீலாக்கு க்ரிட்டிக்கல் தாண்டியாச்சு.. நானும் அத்தையும் நம்ம வீட்டுக்குத்தான் வர்றோம்..” என்று சொல்ல,

“ஓ.. சரி சரி..” என்றவள், ஒருவித சந்தோசத்தோடே போய் வேறு உடை மாற்றிக்கொண்டு வரவும், சிவகாமியும் வந்தனாவும் வந்து கதவு தட்டவும் சரியாய் இருந்தது.

கமலியோ முதலில் போய் வனமாலியை எழுப்ப, அவனோ “கமலி..” என்று முனங்கியபடி, அவளை இழுக்க, “ஷ்... அம்மா வந்தனா எல்லாம் வந்துட்டாங்க.. போய் டோர் ஒப்பன் செய்யணும்.. நீங்க குளிச்சுட்டு வாங்க..” என்று அவனை உசுப்ப, “ம்ம்ஹும் நீ வா..” என்றான் திரும்ப.

கமலியோ “நீங்க எந்திருக்கவே வேண்டாம்..” என்று அவனை ஒரு அடி அடித்துவிட்டு செல்ல, வெளியவோ திரும்ப திரும்ப காலிங் பெல் அடித்தது.

“இதோ வர்றேன்..” என்றபடி போய் கதவு திறக்க, இருவருக்குமே கமலியின் முகத்தில் இருக்கும் ஒரு ப்ளீச் கண்களுக்குத் தெரிய, அவளோ லேசாய் தயங்க, சிவகாமி எதுவும் வெளிக்காட்டாமல்,

“ரெண்டு நாள் கழிச்சு தான் ரூமுக்கு பமீலா வருவாளாம்.. சரி வந்தனாவும் ஏன் அங்க இருக்கணும்னு கூட்டிட்டு வந்துட்டேன்..” என்றவர், அப்படியே அமர,

“சரிம்மா..” என்றவள் “இருவரையும் பார்த்து, ச.. குடிக்க டீ போடவா??” என, வந்தனாவோ அவளை என்னவோ கிண்டலாய் பார்ப்பது போல் தெரிந்தது.

“என்.. என்ன வந்தனா??!!”

“ஒன்னுமில்லையே..” என்றவள் “நான் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்று உள்ளே செல்ல,

சிவகாமி அப்போதுதான் அங்கே சோபாவில் இருந்த அந்த புகைப்படத்தை காண, கமலியோ ‘ஐயோ..’ என்று தலையில் தட்டிக்கொண்டாள்.

சிவகாமி அதனை எடுத்துப் பார்த்தவர், சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு “இந்தா இதை எங்க மாட்டனுமோ மாட்டு..” என்று கொடுத்தவர் “வனா எங்க??” என்று கேட்க,

“அவரா..” என்று அறைக்குள்ளே எட்டிப்பார்க்க, அவன் அங்கில்லை எனவும் குளிக்கின்றான் என்பது உணர்ந்து “குளிச்சிட்டு இருக்கார் ம்மா..” என்றாள்.

மகளின் மாற்றங்கள் புரிந்தாலும் சிவகாமி அதெல்லாம் எதுவும் கேட்கவில்லை, ஆனாலும் அவரின் பார்வை கமலியின் மீதே இருக்க, “என்னமா??!!” என்றாள்.

“ஹ்ம்ம் இப்போ உனக்கு எல்லாம் புரியும்னு நினைக்கிறேன். யாரும் யாருக்கும் வாழ்க்கைல நியாயம் வாங்கி கொடுக்க முடியாது. சிலருக்கு நடக்கும் சிலருக்கு நடக்காது.. அதுவும் ஒரே குடும்பத்துல சிலதை சகிச்சுக்கிட்டு தான் போகணும்..” என்றவர்,

“நைட்டு டிபன் செஞ்சு கொடுத்துவிடு ஹாஸ்பிட்டலுக்கு.. நீ அடிக்கடி போய் பாரு.. ப்ரெஸ் தாத்தாகிட்ட சொல்லி பாத்துக்க சொல்றேன். பமீலா சரியாகி வர வரைக்கும் நீதான் இங்க பொறுப்பா நிக்கணும்.. அதுக்கப்புறமும் கூட.” என,

கமலியின் தலையோ சரியென்று மட்டுமே ஆடியது.. அடுத்து வந்தனா உடை மாற்றி வந்துவிட, “ராணி சித்தி எங்கம்மா??” என்று கேட்டபடி கமலி இருவருக்கும் டீ கலக்கப் போக,

வனமாலியும் “வாங்கத்தை..” என்றபடி வர, அவனைப் பார்த்து நின்றவள், “டீ போடவா??” என, “ம்ம்..” என்று மட்டும் சொன்னவன், வந்தவர்களோடு பேச, கமலி உள்ளே சென்றுவிட்டாள்.

என்னவோ கமலிக்கு இன்றைய தினம் இந்த வீட்டில் அனைத்தும் புதிதாய் இருப்பது போல் இருந்தது. மனதில் ஒரு தெளிவு, ஒரு உற்சாகமும் கூட, அதெல்லாம் அவளுக்கு ஒருவித துள்ளல் கொடுக்க, அனைவருக்கும் டீ போட்டவள் எடுத்துக்கொண்டு போக,
சிவகாமி “ராணி.. அவ வீட்டு கிட்ட இறங்கிட்டா.. வீட்ல தான் தேவி இருக்காளே..” என்றுசொல்லி, டீ குடித்து கிளம்பிவிட்டார்..

வாசல் இறங்கும் முன், பின்னோடே வந்த கமலியிடம் “நீ அடுத்தவங்களை ஜெயிக்கிறது முக்கியமில்லை கமலி.. உன்னோட வாழ்கையில ஜெயிக்கணும்.. எப்பவும் சந்தோசமா இருக்கனும்..” என்றுமட்டும் சொல்லி அவளின் கன்னத்தை ஒருமுறை வருடிவிட்டு செல்ல, சிறிது நேரம் அப்படியே கமலி நின்றிருந்தாள்..

வந்தனா அவளின் அறையில் இருக்க, வனமாலி வந்தவன் இவளை ஓட்டிக்கொண்டு நிற்க “என்ன இது..” என்று நெளிந்தாள்,

“ஒன்னுமில்லையே..” என்றவன் வெளியே பார்ப்பது போல் பார்க்க,

“வந்தனா வந்து பாக்கப்போறா..” என்றவள் உள்ளேப் போகப் பார்க்க,

“அவ ரூம்ல இருக்கா..” என்றவன், எதற்கும் தங்கை வருகிறாளா என்று ஒருமுறை பார்த்துவிட்டு, கமலியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு லேசாய் கடிக்கவும் செய்ய,

“அச்சோ.. என்னங்க நீங்க..” என்று சிணுங்கியவள் “டிபன் செஞ்சு தர்றேன்.. கொண்டு போய் கொடுத்துட்டு வாங்க..” என,

“வர்றப்போ அம்மாவை கூட்டிட்டு வரணும்..” என்று சொல்லிக்கொண்டே கோவர்தனுக்கு அழைத்து விசாரித்தான்.

கமலி மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உணவு செய்து வனமாலியிடம் கொடுத்துவிட்டு வந்தனாவும் அவளும் பேசியபடியே உண்டுவிட்டு, அமர்ந்திருக்க, “இப்போ ரெண்டு பேரும் ராசியாகியாச்சா??” என்றாள் வந்தனா சிரித்து,

கமலியோ அவள் கேட்டது புரிந்து “ம்ம்” என்றுமட்டும் சொல்ல,

“ஹப்பாடி.. அப்படியே பமீலாவும் சரியாகிட்டா நல்லது..” என்றவள் பின் சிவகாமி அங்கே பேசியதை சொல்ல, “எனக்குத் தெரியும் அம்மா இப்படிதான் பேசுவாங்கன்னு..” என்றாள்.

அடுத்து வனமாலியும், மணிராதாவும் வந்துவிட, அவர்களுக்கு உணவு பரிமாறி எல்லாம் ஒதுக்கப்போட்டு என்று கமலிக்கு வேலை சரியாய் இருந்தது. அன்று மட்டும் என்றில்லை அடுத்து வந்த நாட்கள் எல்லாம் கூட.

வீட்டின் மொத்த பொறுப்பும் அவளைக் கேட்காமலேயே அவளிடம் வந்துவிட்டது. மணிராதா எதிலும் தலையிடவில்லை. அமைதியாய் இருந்தார். ஆனாலும் அனைத்தையம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். இருந்தும் கமலியின் முடிவுகள் எதிலும் மறுப்பு சொல்வதில்லை.

இரண்டு நாட்கள் கழித்துத் தான் பமீலாவை அறைக்கு மாற்றவும் கமலி சென்றுப் பார்க்கப் போனாள். பமீலாவோ கமலியைப் பார்த்ததும் ஒருவித சங்கடத்தில் முகம் திருப்ப, கமலியோ நேராய் அவளறகு சென்றமர்ந்து “ஏன் இப்படி பண்ண??” என்றாள் ஒருவித வேகத்தில்.

From epi 1 , all the epi are emotionally packed ..

Just want to say wow , wow dear ..
 
Top