Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 9

ஆச்சர்யம் விலகாமல் சிலையான ஆதியும் அனுவும், மணிமேகலை இவர்கள் யாரென்று கேட்கவும், உணர்வுக்கு வந்தனர்.

உருவத்தில் ஒன்றுபோல் இருந்தாலும் அவர்கள் இருவரின் ஆளுமையும், எண்ண ஓட்டங்களும் வெவ்வேறாக இருந்தன.

எப்போதுமே ஒரு பரபரப்பு, எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம், குழந்தைத்தனம், அதிரடி அடிதடி… இது அனன்யா….

அனைவரிடமும் கனிவு, பொறுமை, அமைதி, சலனமில்லாத தீர்க்கமான அதேநேரம் துணிவு பொருந்திய அகமும் முகமும் கொண்டவள் மணிமேகலை…



Advertisement

“நம்ம எப்படி வந்தோம்ன்னு தெரிஞ்சா பயந்துடுவாங்க…!! அதனால அதை பத்தி சொல்ல வேண்டாம்..!!” என்று முதலிலேயே ஆதி சொல்லியிருந்ததால் அனு என்ன பேசுவது என்ற குழப்பத்தில் இருந்தாள்.

ஆதி தான் முதலில் பேசத்துவங்கினான்.

“தாயே வணக்கம்…!!! என் பெயர் ஆதன்… இவள் என் மனையாள் அனிச்சமலர்…!! வழிதவறி இந்நகரம் வந்துவிட்டோம்…!!! இவ்விடம் நாங்கள் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல தங்கள் அனுமதி வேண்டும்…!!!” என்றான் பணிவுடன்.

Advertisement

அனுவுக்கு சிரிப்பு வந்தது… “நல்லா மகாபாரதம், ராமாயணம் எல்லாம் டி.வி யில் பாத்து பயங்கரமா செந்தமிழ் பேசறான்…!!” என்று உள்ளுக்குள்ளே நினைத்து சிரிப்பை விழுங்கிக்கொண்டிருந்தாள்.

Advertisement

“இந்நகரில் விருந்தினர் தங்குமிடங்கள் ஏராளம் உள்ளன ஐயா…!!! எனினும் இங்கு வந்து கேட்டமையால் மறுத்திட மனம் வரவில்லை… நீங்கள் தாராளமாக இங்கே தங்கலாம்..!!” என்றாள் மணிமேகலை, அருள் நிறைந்த மனதோடு…

“ நன்றி தாயே…!! இவ்வுதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்…!!” என ஆதி சொன்னான்.

இதற்கும் அனன்யா சிரித்துக்கொண்டே இருக்க, மணிமேகலை “உன் மனைவியை அழைத்து சென்று ஒருமுறை நெடுங்கல் நின்ற மன்றத்தை வலம் செய்து விட்டு வாருங்கள்…!!!” என்று சொன்னாள்.

Advertisement

கட்டாயம் செய்வதாக ஆதி சொல்லிவிட அனு அவனை முறைத்தாள். இவளின் செய்கைகள் ஆதிக்கு சற்று அதிருப்தி தந்தது முகத்தில் தெரிந்தது. அனுவும் ஆதர்ஷும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்ட அறையில் தங்குவதற்காக சென்றனர்.

◆◆◆

அங்கு சென்றதும், அனன்யா ஆதியிடம் கொஞ்சம் காட்டமாக பேசினாள்…. “என்னதான் அவ என்னை மாதிரியே இருக்கான்னாலும்… அவ சொல்ற எல்லாத்துக்கும் நீங்க சரின்னா ரொம்ப அதிகமா தெரியுது…!!!! அதுவும் இல்லாம அவ என்ன லூசுன்னு சொல்றா….!!! நீங்களும் கேட்டுட்டு வரீங்க…!!!” என்று…

“என்ன…?! நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல…!!!! நீ சம்பந்தமில்லாம பேசுற…!!!”என்றான் ஆதி.

“என்ன அவளோ கடுப்பா பேசுறீங்க…!!!” என்று கொஞ்சம் சோகமாக சொன்னாள் அனு.

“ அப்படி எல்லாம் இல்ல அனு……அவங்க எவ்ளோ பெரிய ஆளு… அதுவுமில்லாம இப்போ ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்காங்க…. நீயோ சம்பந்தமில்லாம சிரிச்சிட்டு இருந்த…. அவங்க முன்னாடி மரியாதையே இல்லாம நீ நடந்துக்கிட்ட மாதிரி தோனுச்சு…. அதான் கொஞ்சம் கோவமா நடந்துகிட்டேன்….. மன்னிச்சுக்கோ ப்ளீஸ்….!!!” என்று விளங்கினான் ஆதி.

“சரி இப்ப நான் கொஞ்சமா….. ரொம்ப கொஞ்சமாத்தான் கோவமா இருக்கேன்….!!!” என்று கண்ணிமைத்துவிட்டு….

அனு தொடர்ந்தாள்… “நான் சிரிச்சதுக்கு காரணம் உங்களுடைய ஸ்லாங்க் தான்… ஏதோ டப்பிங் சீரியல்கள் மாதிரியே ரொம்ப தூய தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க…!!! அதான் எனக்கு சிரிப்பு அடக்க முடியல….!!” என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள்.

ஆதியும் அவள் சொன்னதை நினைத்து சிரித்துவிட்டு… “அப்புறம் எதுக்கு மேடம் கோவப்பட்டீங்க…!!!” என்று கேட்க…

தன் கோபம் நினைவு வந்தவளாய்…. கொஞ்சம் முறைப்போடு “பின்னே என்ன….?? நெடுங்கல் நின்ற மன்றம் போய் சுத்தி கும்பிட சொல்றா.. நீங்க சரின்னு சொல்லிட்டு வரீங்க…!! அது என்ன தெரியுமா…??? புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை அழைச்சிட்டுப் போய் குணமாக வேண்டுகிற இடம்…!!!!” என்று கூறி நிறுத்தினாள்.

ஆதி சிரிக்க ஆரம்பித்தான் “ஓ… அவங்க உன்ன அப்படி நெனச்சுட்டாங்க போல…

அப்புறம் சும்மா சும்மா சிரிச்சிட்டு இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க….!!!

விடு அனு…. பழைய காலத்து மனுஷங்கல்ல…!!” என்று சமாதானம் செய்ய பார்த்தான்.

“சரி ஆதி பையா… எப்படி நம்ம நிலைமையை அவங்களுக்கு புரிய வைக்கிறது…!!! என்ன நினைப்பங்கன்னே தெரியல… எப்படி சொல்றதுன்னும் புரியல…!!!” என்று தங்கள் நிலையை நினைத்து வருந்தினாள்.

“ நான் பேசறேன்… கவலைப்படாத…!!! உடனே சொல்ல எனக்கும் பயம் தான்….!!! யோசிப்போம்….!!!” என்று சொல்லிவிட்டு அந்த அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

அனுவும் சற்றுநேரம் யோசித்துவிட்டு “நான் நேரா போய் பேசறேன் ஆதி…” என்றுவிட்டு மணிமேகலை அறைக்குச்செல்ல அனு எழுந்தபோது….

“வேண்டாம் அனு… ஏதும் பிரச்சினை ஆகிடப்போகுது…” என்று ஆதி தயங்கி தயங்கி சொன்னான், எப்போது வேண்டுமானாலும் கோபப்படும் அவள் குணம் அறிந்து.

“பொண்ணுங்களுக்கு பேச ஆயிரம் இருக்கும்… எத்தன நூறாண்டு போனாலும் இது மாறாது….குடும்பம் பத்தி, அவங்கள லவ் பண்ற ஆள பத்தின்னு ஏதாச்சும் பேசி இதை சொல்ல பாக்குறேன்…!!! நீங்க ஒன்னும் பயப்படாதீங்க..” என்று சொல்லி சிரித்தாள்.

“நீ ரொம்ப வித்தியாசமான ஆளு தான்.. தில்லு ஜாஸ்தி அனு… ஆல் தி பெஸ்ட்…!!!” என்று வெளியில் சொன்னாலும்… விபரீதம் ஏதும் வருமோ என்று ஆதி உள்ளுக்குள் பயந்தான்.

“ஏதும் பிரச்னைன்னா ஓடிடுவோம்… !! எனக்கு அத்லெடிக்ஸ் தெரியும்…!!! பயம் உங்க முகத்துல அப்பட்டமா தெரியுது…!!” என்று கலாய்த்துவிட்டு அனு நடந்தாள்.

◆◆◆

மணிமேகலை அறையை அடைந்தபோது… அங்கே மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் அனு காதில் விழுந்தது… “அப்பெண் உன்னைப்போலவே இருக்கிறாள்… ஆனால் அவர்கள் நம் ஊரோ அல்லது நாடோ இல்லை… வேற்று உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல் இருக்கிறார்கள்…!! சற்று சிந்தித்து செயல்படு…!!” என்றாள் சுதமதி.

“எனக்கும் சிறு ஐயம் உள்ளது… அதேநேரம் அவர்கள் ஏதோ சிக்கலில் இருப்பதுபோல் உள்ளுணர்வு சொல்கிறது…!!!” என நிறுத்திவிட்டு… “புகார் நகரில் வந்து, எவரும் தவறு செய்துவிட்டு திரும்ப இயலாது… எனவே அச்சம் தேவையில்லை…!!!” என்றாள் மணிமேகலை.

அனன்யா இவையெல்லாம் கேட்டு மனதில் வைத்துக்கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்ததால், தன் காலடி சத்தம் அவர்களுக்கு கேட்கும்படி நடந்து… “நான் உள்ள வரலாமா மணிமேகலை…!!! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..!!” என்றாள்.

சுதமதி சற்றே திடுக்கிட்டு பார்க்க, ஏதும் நடக்காதது போல்….. “உள்ளே வாருங்கள் அனிச்சமலர்…!! ஏதும் உதவி வேண்டுமா…??” என்றாள் மணிமேகலை.

“உங்ககிட்ட சில உண்மைகள சொல்லனும்… பயப்பட்டு என்னை விரட்டிவிட்டுடாதீங்க..!!!” என்றபடி நுழைந்தாள் அனு.

கேள்வியாகப் பார்த்த மணிமேகலையிடம் தங்கள் திருமணம் முடிவானது முதல் பூம்புகார் நகரில் அவளைப் பார்த்தது வரையிலான கதை முழுவதும் கூறினாள்.

சுதமதி இதனைக்கேட்டு மயங்கும் நிலைக்குச்சென்றுவிட்டாள். ஆனால் மணிமேகலை நிதானமாக எழுத்து தன் பெட்டகத்திலிருந்து சிறு மரப்பெட்டியொன்றை எடுத்துவந்து அனன்யாவிடம் தந்தாள்.

அனன்யாவுக்கும் இந்த செயல் குழப்பம் ஏற்படுத்த… “இத எதுக்கு என்கிட்ட தர்றீங்க…??” என்றாள் தயங்கியபடி… “பெற்றுக்கொள் அனிச்சமலர்…!! இதனை திறந்துபார்…!!” என்றாள் மணிமேகலை.

“இன்னொரு உதவி… இந்த அனிச்சம், இனிச்சம் ன்னு சொன்னா யாரையோ கூப்பிடுறது மாதிரி இருக்கு… என் பேரு அனன்யா… நீங்க அனு ன்னும் கூப்பிடலாம்…!!! ப்ளீஸ்…!!!….

ம்ம்ம்…

ப்ளீஸ் ன்னா தயவுசெய்து…!!!” என்று நீண்ட உரையாற்றி விளக்கமும் சேர்த்து சொல்லி முடித்தாள்.

“அவ்வாறே அழைக்கிறேன் அனு… முதலில் இந்த பேழையை திறந்து பார்க்கவும்…!!!” என்று வற்புறுத்தி சொன்னாள் மணிமேகலை.

 

 

◆◆◆

 

 

அனு மெல்ல அதனைத் திறந்தாள்….

அது இந்திரநீலக்கல்லே தான்….

ஆனால் இவர்கள் பார்த்தபோது இருந்ததுபோல் இல்லாமல், அப்போதுதான் பட்டைதீட்டப்பட்டதுபோல அற்புதமாய் மிளிர்ந்தது…….

“ஹேய்… இது எப்படி உங்க கைக்கு வந்துச்சு… ” என்று வியந்து அனு விழிவிரித்தாள்.

இதைக் கேட்டவுடன் மணிமேகலை முகத்தில் ஒரு சிறு வியப்பு மற்றும் சோகம் படர்ந்து மறைந்ததனை அனன்யா கண்டுகொண்டாள்.

“என்னாச்சு சட்டுன்னு முகம் வாடிப்போச்சு…”என்று மனதில் நினைத்ததை கேட்டுவிட்டாள்.

மணிமேகலை “இது அரசிளங்குமரன் பரிசளித்தது….. இவ்வுலக வாழ்வில் அவரோடு இணைய முடியாவிட்டாலும் அவர் தந்த பரிசு மட்டுமாவது என்னோடிருக்கட்டுமென்று வைத்துக் கொண்டேன்…” என்றாள்.

“அப்போ மணிமேகலை நீங்க உண்மையிலேயே அந்த உதயகுமாரன விரும்புறீங்களா…” என்று அனன்யா பட்டென்று கேட்டாள்.

“உங்களுக்கு எப்படி அவரைப்பற்றி தெரியும்.. இந்நகருக்குள் நடப்பவற்றை முழுதும் அறிவீர்கள் போலவே ?” என்று பதில் கேள்வி கேட்ட மணிமேகலையிடம்…

“உங்களோட கதை தமிழ்நாடு முழுக்க தெரியும்….அதப்பத்தி அப்புறம் சொல்றேன்… நீங்க சொல்லுங்க… அவர விரும்புறீங்களா…” என்று விடாப்பிடியாக நின்றவளின் அந்த வினாவிற்கு மணிமேகலையால் விடை சொல்ல முடியவில்லை…

“இருக்கலாம்… ஆனால் என் அன்னையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, நான் இல்லற வாழ்வு வேண்டாமென முடிவெடுத்துவிட்டேன். முதலில் சிறிது சஞ்சலம் இருந்தாலும், தற்போது என் மனம் முழுமையாக துறவறத்தில் நிலைத்து விட்டது….!” என்றாள் மணிமேகலை.

“உங்க அம்மாவை தவிர வேற குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நீங்க துறவியாக போறதில விருப்பமில்லைன்னு சொல்லி ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க…. அது உண்மையா…??

நிச்சயமா ஒரு குடும்பத்து பொண்ணு துறவியா மாறுவது யாருக்குமே பிடிக்காததா தான் இருக்கும்… நீங்க அவங்களை பத்தி நினைக்கலயா…??” என்று அனன்யா கேட்க….

“எங்களுடையது தாய்வழி சமூகம்…! என் தாய் வழி பாட்டி தான் என் அன்னையின் வாழ்வு, நிலையில்லாமல் ஆனதற்கு காரணம்….. இப்போது என்னை இளவரசர் உதயகுமாரனை மணந்து கொள்ளச் சொல்வதும் அவரே…

என் தந்தையின் செல்வங்களை அபகரித்த அவர், மனம்வருந்தி அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே என் தாய் துறவறம் பூண்டார். தந்தைவழி சொத்துகள் யாவும் அவர்தம் உறவினர்க்குச் சேரும்படி செய்தார்…. இப்போது நான் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மனவருத்தம் நிலைக்காது……” என்று நிறுத்தினாள் மணிமேகலை.

“அம்மாடி…! நீங்க என்ன இப்படி பேசுறீங்க…. அவங்க தப்பு செஞ்சவங்க அதுக்கு அவங்க தண்டன அனுபவிக்கணும்…. ஆனா இந்த சின்ன வயசுல நீங்க அவங்களுக்காக ஏன் தண்டன அனுபவிக்கணும்ன்னு நினைக்கிறீங்க…? இது உங்க வாழ்க்கை. அதை சூனியமாக்க கனவுல கூட நினைக்கக்கூடாது… அந்த பையன உங்களுக்கு புடிச்சிருந்தா நீங்க அவன கல்யாணம் பண்ணிக்கோங்க…

பாருங்க….. உங்க காலத்துல பெரிய தடங்கல்கள் ஏதும் இல்ல. ஆனா வருங்காலம் அப்படி இருக்கப்போறதில்ல…. எங்களுக்கு ஜாதியும் மதமும் பணம் தகுதின்னு பல வேறுபாடுகள் இருக்கு…. உங்களுக்கு இப்போது எதுவுமே இல்ல…. அதனாலதான் சொல்றேன்.. கல்யாணம் பண்ணிக்கோங்க ” என்று பாடம் சொல்லி முடித்தாள்.

மணிமேகலைக்கு இவள் சொல்லும் அனைத்தும் புதிதாகவும் புதிராகவும் இருந்தது…. “நீ சொல்வது ஒருபுறம் இருந்தாலும் அந்த அரசகுமாரன் தன் முற்பிறவி பயனாகவே இவ்விதம் அல்லல் படுகிறான். கடந்த பல பிறவிகளாக நானும் அவனும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் காரணமாய் நாங்கள் இப்பிறவியில் சேர முடியாது என்பது விதியாகும்” என்றாள் மணிமேகலை.

“ஏ லூசு பொண்ணே… விதி.. போன ஜென்மம்… புருஷன் பொண்டாட்டி… இது எல்லாமே எதுவுமே உண்மை கிடையாது…. உன்ன எங்க காலத்துக்கு அழைச்சிட்டு போக முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு தோணுது…. அங்க நீ வந்து பார்த்தா தான் உனக்கு புரியும்….

இது எல்லாம் விதி கிடையாது….உங்க அம்மா செஞ்ச சதியா இருக்கும். உன்னை அந்த தீவுக்கு அழைச்சுட்டு போன குரு தானே உன் கிட்ட எல்லாம் சொன்னாங்க ? அதுவும்கூட உன்ன மாத்தி துறவறத்திற்கு அழைச்சிட்டு போறதுக்காக இருக்கலாம்.

நீ திருமணம் பண்ணி வாழ்க்கையை வெறுக்க வேண்டாம்ன்னு உங்க அம்மா மனசுல நினைச்சிருக்கலாம்… ஆனா அந்த உதயகுமாரன் நல்லவனா இருந்தா நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ…. அதுல என்ன தப்பு இருக்கு ? ஒருவேளை அவனோட வாழ பிடிக்கலன்னா…, நீ உனக்கு விருப்பப்பட்ட போது துறவறம் போறதுக்கும் உங்களோட காலத்துல வாய்ப்பு இருக்கு….” என்றாள் அனு.

இவ்வளவு நேரம் ஆகியும் காணாததால், அனன்யாவைத் தேடி ஆதர்ஷ் அந்த புத்த விகாரம் முழுவதும் அலைந்தான்.

அப்போது மணிமேகலை அறையில் அவள் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்ததும், தயக்கத்துடன் வெளியில் வந்து நின்றான்.

இறுதியாக அனன்யா பேசிய வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அந்நேரம் ஆதர்ஷ் குறுக்கிட்டு “அவங்களோட தனிப்பட்ட விஷயத்துல தலையிடாத அனு…” என்று அனன்யாவிடம் சொல்லிவிட்டு… “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் மணிமேகலை… அனுமதியின்றி நான் உள்ளே வந்திருக்க கூடாது…” “வா போலாம்” என்று கோபமாக அனுவை அழைத்தான்.

மணிமேகலை “அவள் சொல்வதில் தவறு ஏதும் இல்லை….அவளை பேச விடுங்கள்…” என்று கூறினாள்.

அனன்யா உடனே “பாத்தீங்களா.. நான் பேசுறது அவங்களுக்கு பிடிச்சிருக்கு ஆதி… ஷி நீட் திஸ் விஸ்டம்….” என்று ஆதியிடம் சொல்ல…

ஆதியோ… “இதுவே உனக்கும் எனக்கும் வீட்ல பாத்து நிச்சயம் பண்ணாம… நான் நேரா உன்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சுருப்ப அனு… இவங்க நிலைமையும் அதானே !” என தனக்கு சரியென்று பட்டதை பேசினான்.

“இது அவங்களோட தனிப்பட்ட முடிவுன்னா சரிதான்…. ஆனா அவங்களா எடுத்த முடிவு இல்லை ஆதி இது. இந்த முடிவுக்கு அவங்க நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்காங்க….

நான் சூழ்நிலைய அவங்களுக்கு புரிய வைக்கிறேன். காதல பெரிய விஷயமா நான் சொல்லல….. ஆனால் நம்மள புரிஞ்சுக்கிற ஒருத்தர் கூட இருக்கிறது நம்ம வாழ்க்கைக்கு நல்லதுன்னு தான் அவங்க கிட்ட சொல்றேன்…

நான் உன்னை கோவில்ல பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு காதல் கீதல் மேலே ஒரு நம்பிக்கையும் இல்லை….!

ஆனா இப்போ, நீ எனக்குள்ள அப்பப்போ உண்டாக்குற அந்த அழகான உணர்வுகள், உன்னோட இருக்கும்போது வரும் தைரியம்…. இதெல்லாம் ரொம்ப நல்லாருக்கு ஆதி…

அதுமாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள மணிமேகலையும் அனுபவிக்கணும்ன்னு எனக்கு தோணுது …. அந்த ராஜாவோட பையன் இவங்கள உண்மையாகவே விரும்பினார்ன்னா இவங்க அவரை கல்யாணம் பண்ணிக்கட்டுமே ..” என்று எப்போதும் இல்லாத வகையில் அனன்யா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

தன்னைப்பற்றி அவள் சொன்னது ஆதியின் மனதில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது.

அப்போது ஒரு துறவி அங்கு வந்து வாசலில் ஒருவன் நினைவின்றி அமர்ந்திருப்பதைத் தெரிவிக்க, மணிமேகலை மற்றும் சுதமதி அங்கு விரைந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!