காலையில் உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்த ரஞ்சன், எதிரே சோபாவில், சோர்வு மிகுதியால் இன்னும் உறக்கத்திலிருந்து மீளாது சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்தான்.
“வெயில் முகத்துல அடிக்கிறது கூட தெரியாம எப்படித் தூங்குறா பாரு கும்பகர்ணி…” என்று முனகிக் கொண்டே எழுந்தவன்,
தன் காலைக் கடன்களை முடித்து வந்த பிறகும் நிலா எழாதைக் கண்டு, சோபாவின் ஒரு மூலையில் இருந்த திண்டை எடுத்து, தூரமாக நின்று கொண்டு அவள் முகத்தின் மீது எறிந்தான்.
பின் ஏதும் அறியாததுபோல் ஆடியோ ப்ளேயரை ஆன் செய்து பாடலின் சத்தத்தை அதிகமாக வைத்தான்.
திடீரென்று ஏதோ வந்து விழுந்ததால் திடுக்கிட்டு கண்விழித்த நிலா, பதறிப் போய் எழுந்தமர்ந்தாள்.
அவன் வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தான் என்று புரிந்து கொண்டவள், நேராக எழுந்துச் சென்று ஆடியோ ப்ளேயரின் ஸ்விட்சை ஆஃப் செய்தாள்.
“ஏய் ஏன்டி ஆஃப் பண்ண?!” என்று அவன் கேட்க,
அவள் காதில் வாங்காமல் தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலைறைக்குச் செல்ல முனைந்தாள்.
“இன்னொரு முறை என் ஆடியோ பிளேயர்ல கை வச்சிப் பாரு?!” என்று மிரட்டியபடியே மீண்டும் ஆன் செய்து சத்தத்தை அதிகரித்தான்.
அதைக் கேட்டவள் வேண்டுமென்றே சென்று அதன் மேயின் ஸ்விட்சை ஆப் செய்தாள்.
“ஏய் என்ன காலையிலயே வம்பு பண்ணப் பார்க்கறியா?!” என்று அவன் அவள் கையை இறுகப் பற்ற, அவள் அதை விடுவிக்கப் போராடியபடியே,
“கையை விடு…!” என்று முறைத்தாள்.
“ஆமாம் இந்தம்மா பெரிய உலக அழகி.. ஆசையா கையப் பிடிச்சு இழுக்கறேன்..!” என்று அவன் நையாண்டி பேச,
“உலக அழகியக் கையப் பிடிச்சு இழுத்திருந்தா இந்நேரம் உன்னை உள்ள தூக்கி வைச்சிருப்பாங்க!” என்றவள், வெடுக்கென்று தன் மற்றொரு கையால் அவன் கையை நறுக்கென்று கிள்ள, அவன் அலறலுடன் அவள் கையை விடுவித்தான்.
அவள் ஏளனமாக ஓர் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர, “பிசாசு பிசாசு..!” என்று வாய்விட்டு அவளைத் திட்டியவன், தங்கள் கடைக்குக் கிளம்பத் தயாரானான்.
அவன் தயாராகி வெளியே சென்ற சில நொடிகளில் அவளும் குளித்து தயாராகி வெளியே வந்தாள்.
“என்னடா ரஞ்சு… எங்க கிளம்பிட்ட?!” என்று காமட்சி பாட்டி கேட்க,
“என்ன பாட்டி இப்படிக் கேட்கறீங்க? கடைக்குப் போக வேண்டாமா?!” என்றான்.
“அச்சோ பாட்டி இந்த பார்மாலிடீஸ் எல்லாம் வேண்டாமே! எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை!” என்று அவன் சலிப்புடன் அமர,
“ரஞ்சு.. பாட்டி சொன்னக் கேளுப்பா… உன்னை என்ன தினமுமா அவங்க வீட்டுக்குப் போக சொன்னோம் இன்னிக்கு ஒரு நாள் தானே?!” என்று ராதாவும் அவனை சமாதனம் செய்து அனுப்பி வைக்க முயன்றார்.
‘மூஞ்சியைப் பாரு சரியான GEM!’ என்று நிலா அவனை மனதுள் வசை பாடிக் கொண்டிருந்தாள்.
தாத்தா என்றதும் அவன் கப்சிப் என்று வாய் மூடிக் கொள்ள, அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்து, மிகவும் மனம் மகிழ்ந்தனர் நிலாவின் குடும்பத்தினர்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… உங்களை இப்படி சந்தோஷமா பார்க்கிறதுக்கு!” என்றார் வெங்கடேசன்.
“ம்” என்று அவள் மெல்ல சிரித்ததோடு,
“சிரி…!” என்றாள் அவனிடமும் மெதுவாக.
“ம்!” என்று அவனும் சிரித்து வைத்தான்.
கலையும், வேணியும் காலைச் சிற்றுண்டிக்காக தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாற,
“ம்! ம்!” என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான் ரஞ்சன்.
முதலில் சாப்பிடவே தயங்கியவன், வேணியின் கைப்பக்குவம் மிகவும் அருமையாக இருந்ததால், “Awesome Aunty..!” என்று சொல்லி ரசித்து, ருசித்துச் சாப்பிட,
“வரவே அப்படி யோசிச்சான் இப்போ எப்படி மொக்குறான் பாரு!?” என்று நினைத்துக் கொண்டே நிலாவும் சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்த பின் ரஞ்சன் உடனே கிளம்ப எத்தனிக்க, “என்னங்க மாப்பிள்ளை உடனே கிளம்பறீங்க?! மதியத்துக்கும் விருந்து ஏற்பாடெல்லாம் நடந்துகிட்டு இருக்கு!” என்று வெங்கடேசன் சொல்ல,
“அவருக்கு கடையில முக்கியமான வேலையை இருக்காம் ப்பா…! போயிட்டு மதியம் வந்திடுவார்!” என்று சமாளித்தாள் நிலா.
“ஆமாம் அங்கிள்… டோன்ட் மிஸ்டேக் மீ…! நான் கிளம்பறேன்…!” என்று அவன் விடைபெற, வேகமாக அவனருகே சென்ற நிலா,
“எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பு..!” என்றாள் மெல்லிய குரலில்.
“ஏய் என்னடி?! நானும் உங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து பார்க்கறேன், ரொம்பதான் ஓவரா போயிட்டு இருக்க?!” என்று அவன் துள்ள,
‘ப்பா… என்னாமா நடிக்கிறா?! ப்ஃராடு ப்ஃராடு!’ என்று திட்டியபடியே காரைக் கிளப்பினான்.
அவன் கார் செல்வதை பார்த்த காமாட்சி, நிலாவின் கைபேசிக்கு அழைத்து விவரம் கேட்க, ‘வேலையிருந்ததுனால நான்தான் போகச் சொன்னேன் பாட்டி. மதியம் வந்திடறேன்னு சொல்லிட்டுதான் போயிருக்கார். நீங்க வருத்தப் படாதீங்க..!” என்றாள்.
“முதலெல்லாம் கடைப் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டான், அவன் பாட்டுக்கு ஒரு தனி போக்குல வாழ்ந்துகிட்டு இருந்தான். இப்போ என்னன்னா இப்படி?!” என்றவர், அவளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு போனை வைத்தார்.
அன்று மாலை தங்கள் கல்லூரியை விட்டுக் கிளம்பிய நிரஞ்சன், தான் எப்போதும் செல்லும் காபி ஷாப்பிற்குச் சென்றான்.
காபியை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தவனுக்கு, ஏனோ திடீரென்று யாஷினியின் நினைவு வந்தது.
‘இந்த யாஷினி இப்பல்லாம் அடிக்கடி வந்து தொந்தரவு பண்றதில்லையே! ஒருவேளை அவங்க வீட்ல கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்களோ?!’ என்று யோசனை தோன்ற,
‘சே சே அப்படி இருந்தா நேத்து கல்யாணத்துல அப்படி பேசியிருக்க மாட்டாளே…?! அவ இன்னமும் என்னைதான் நினைச்சிகிட்டு இருக்கா!’ என்றான்.
‘அப்போ அவ உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்கணும்னு நீ விரும்பற?!’ என்று அவன் மனம் குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
‘அதெல்லாம் இல்லை…!’ என்று அவன் மறுக்க, சரியாக அந்நேரம் அவன் எதிரே வந்தமர்ந்த யாஷினி,
“என்ன பத்திதானே பாப்பா நினைச்சிட்டு இருந்தீங்க?!” என்றாள் கண் சிமிட்டி.
“அ அதெல்லாம் இல்லையே..!” என்று அவன் தடுமாறுவதிலேயே அவள் கண்டு கொண்டாள்.
“என்ன பாப்பா பண்றது?! இப்பல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பிசியாகிட்டேன்! அதான் அடிக்கடி வர முடியறதில்லை!” என்று சோகமாகச் சொன்னவள், அவன் கையிலிருந்த கைப்பேசியைப் வெடுக்கென்று பிடுங்கினாள்.
“ஏய் என் மொபைலைக் கொடு!” என்று அவன் அவளிடமிருந்து வாங்க முயல, அவள் அவனுக்குப் போக்கு காட்டி, அதிலிருந்து தனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஏய் மொபைலைக் கொடுத்துடு!” என்று அவன் மிரட்ட,
“ஹப்பா.. என்ன… கோவம் வருது!? இந்தாங்க பிடிங்க… என் வேலை முடிந்தது! சில காரணங்களால, என்னால இப்பல்லாம் உங்களை அடிக்கடி வந்து பார்க்க முடியல! அதான் போன் நம்பர் எடுத்துக்கிட்டேன். டெய்லி போன் பண்ணுவேன்.. கண்டிப்பா எடுத்து பேசணும்! சரியா?! பை டேக் கேர்!” என்று விடை பெற்றாள்.
‘இவ எப்படி எப்பவுமே இப்படி துருதுருன்னு இருக்கா?! திடீர்னு வர்றா… படபடன்னு பேசறா…! கொலுசொலி போல சிரிக்கறா…! பட்டாம்பூச்சி மாதிரி பறந்து போயிடறா! இவ எப்பவுமே என்னோட இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்!’ என்று அவன் மனம் ஏங்கத் துவங்க,
“என்னை நினைச்சீங்களா?!” என்று கேட்டபடி மறுபடியும் அவனருகே வந்தமர்ந்தாள் யாஷினி.
அவன் எவ்வளவோ மறைக்க முயன்றாலும் அவன் இதழ் அவன் மனதை வெளிக்காட்டிவிட,
“அய்!! பாப்பா! சிரிச்சிட்டீங்க!!!” என்றாள் மிகுந்த குதூகலத்துடன்.
“நீ எப்பவுமே இப்படித்தானா?!” என்றான் சிறு புன்னகையுடன்.
“பிகாஸ் ஐ லவ் யூ!” என்றாள் அவன் கண்ணோடு தன் உயிர் கலந்து.
அன்று இரவும் நிலா பால் செம்புடன் அவர்கள் அறைக்குள் நுழைய, “ஏய் என்ன இதெல்லாம்?!” என்றான் ரஞ்சன் எரிச்சலுடன்.
“ம் ஆன்ட்டியைப் போய்க் கேளு…! அவங்கதான் கொடுத்துவிட்டாங்க! மூணு நாளைக்கு இப்படித்தான் கொடுப்பாங்களாம்! நீ குடிக்கறதுன்னா குடி..! இல்லாட்டி கீழ கொட்டு! அது உன் இஷ்டம்!” என்றவள், தன் பாட்டிற்கு டிவியை ஆன் செய்து டிமான் அண்ட் பூம்பாவை ஓட விட்டாள்.
“நான் உன்னை தூங்க வேண்டாம்னு சொல்லலையே!” என்றவள் மீண்டும் பார்வையை டிவியில் பதிக்க,
“என் நிம்மதியைக் கெடுக்க வந்த கிராதகி..! எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கு! இன்னமும் பொம்மை படம் பார்க்குது பாரு! இந்த லட்சணத்துல இதெல்லாம் டீச்சர் வேற! இதெல்லாம் பாடம் எடுத்து எங்கிருந்து பசங்க உருப்படப் போகுது!?” என்று புலம்பியவாறே முகம் வரை நன்றாக இழுத்துப்போர்த்திக் கொண்டு படுத்தான்.