ஒருவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது அவ்வளவு எளிதல்ல என்று புரிந்தவள் தெளிவாய் காய் நகர்த்தினாள்.
எதையும் சட்டென்று அவள் செய்திடவில்லை. காலம் கனிய அவள் காத்திருந்தாள்.
அவன் வரையும் மாதிரி டிசைன்களில் சிலவற்றில் மட்டுமே அவள் கரெக்ஷன்ஸ் சொன்னாள், அது சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே விஸ்வா மாற்றிக் கொள்வான்.
அவனுக்கு சரிவராது என்று தோன்றினால் அதை அவன் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டான். அவள் புதிதாய் வரைந்திருந்த இரண்டு டிசைன்கள் மாதிரிகள் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தான் விஸ்வா.
எந்த புது மாதிரி வந்தாலும் அதை முதலில் தக்கலையில் இருந்தே தொடங்குவான். அவனின் இந்த பிரத்யேகமான மாதிரிகளுக்காய் தனியாய் வாடிக்கையாளர்கள் உண்டு அவர்களின் கடைக்கு.
அவனுக்கென்று தனி வெப்சைட்டும் கூட வைத்திருந்தான் அவன். அதில் அந்த மாதிரி நகைகளின் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியூரில் இருந்து கூட ஆர்டர்கள் வருவதுண்டு.
இப்போது காஞ்சனாவின் மாதிரியையும் அதில் அவன் பதிவேற்றம் செய்ய சென்னையில் இருந்து அதற்கு ஆர்டர் வந்திருந்தது.
அன்று அவள் அவன் அறையில் அமர்ந்து தான் வேலை செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கென்று தனியாய் சின்னதாய் ஒரு தடுப்பை ஏற்படுத்தி லேப்டாப் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது.
அவளிடம் முதலில் இரண்டு நாட்களுக்கு என்று மட்டும் சொல்லியிருந்தவன் அவள் விடுப்பு தினத்தை தவிர அத்தனை நாளுமே அவனுடனே வைத்துக் கொண்டான்.
அவள் முன்பு இருந்த இடத்தில் வேறு ஆளை நியமித்திருந்தனர்.
“ஹேய் காஞ்ச்சு…” என்று ஆர்வத்தில் சத்தமாய் அழைத்துவிட்டான்.
“நேத்து நம்ம கடையில ஒருத்தர் வாங்கிட்டு போனாங்க. இப்போ அதே மாடல் கேட்டு சென்னையில இருந்து ஒருத்தர் மெயில் பண்ணியிருக்காங்க…” என்று சந்தோசமாய் சொன்னவன் அவளுக்கு கைக்கொடுத்தான்.
“தேங்க்ஸ் சார்…”
“எனக்கெதுக்கு நீங்க தேங்க்ஸ் சொல்றீங்க. நான் தான் உங்களுக்கு சொல்லணும்…”
“நம்ம கடைக்காக நீங்க வரைஞ்சு கொடுத்திருக்கீங்க… அதுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்…”
“என்னையும் மற்றவங்க திரும்பி பார்க்க வைச்சிருக்கீங்க சார் நீங்க… நான் தான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன்…” என்றாள் அவள்.
“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கறதை விட்டிருவோம்… எனக்கு என்ன தருவீங்க…”
“ட்ரீட் வேணுமா சார்… நாளைக்கு போய்டலாம்…”
“ட்ரீட்டா நீயே வேணும்…”
“சார்…”
“சாரி சாரி காஞ்ச்சு டோன்ட் மிஸ்டேக் மீ… ஐ மீன் ஐ லவ் யூ…” என்றிருந்தான் அவன்.
ஆம் அவன் மனதில் சில நாட்களாய் அவளைப் பற்றி யோசித்து யோசித்து அவன் சிந்தனை முழுதும் இப்போது அவளே ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தாள்.
உறங்கும் போது கூட அவனுக்கு அவளின் நினைவே. அவன் முதலில் அவளை இரண்டு நாட்களுக்கு தான் அவனுடன் வேலைப் பார்க்கச் சொன்னான்.
ஒரு இரண்டு நாட்கள் அவளை வேறு வேலை பார்க்கவும் அனுப்பி வைத்தான் தான். மறுநாளே அவளை புது டிசைன் வரைய வேண்டும் என்று சொல்லி அழைத்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கே அவன் மாற்றம் புதிதாகவே இருந்தது. எப்போதும் எதையும் அன்னையிடம் மறைக்காமல் சொல்லும் விஸ்வா மறைத்த விஷயம் காஞ்சனா அவன் மனதில் இருப்பதை தான்.
அது கூட அவளின் விருப்பம் அறிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தவன் எப்போதடா அதற்கு நேரம் கிடைக்கும் என்று காத்திருந்தவன் இதோ இப்போது சொல்லியும் விட்டான்.
“சார்…” என்றாள் உச்சபட்சமாய் அதிர்ந்து.
காஞ்சனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் பொருட்டு தான் அவளுக்கும் அதிர்ச்சியே.
அதற்கு மேல் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. ‘பேசாமல் வேலையை விட்டுவிடலாமா, இல்லை தன் வேலையை இப்போதே தொடங்கி விடலாமா இப்படி தான் அவளின் சிந்தனை சென்றது.
‘காஞ்ச்சு’ என்று அவன் அழைக்கும் குரல் கேட்கும் வரை அவள் வேறே எண்ணத்தில் தான் பயணித்துக் கொண்டிருந்தாள்.
‘காஞ்ச்சுவா… இதை எப்படி கவனிக்காம விட்டோம். ஆமால இவன் ரொம்ப நேரமா என்னை அப்படி தான் கூப்பிட்டுக்கிட்டு இருக்கான்ல…’ என்று இப்போ தான் உணர்ந்தாள்.
“சார்…” என்றாள்.
“உங்க பதிலை சொல்லணும்ன்னு நான் எதிர்பார்க்கலை. என்னோட விருப்பத்தை மட்டும் தான் சொன்னேன், உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க… சொல்லவே இல்லைன்னாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன்…”
‘இதுக்கு என்ன அர்த்தம் நான் பதில் சொல்லலைன்னா இவன் கல்யாணமே பண்ணிக்காம இருந்திடுவானாமா…’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
“நான் கிளம்பறேன் சார்…” என்று அவன் முகம் பார்க்காமல் அவள் சொல்ல அவன் தலையாட்ட அவள் அன்று நேரமாகவே சென்றுவிட்டாள்.
அவளுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. இதுவரை அவள் திட்டப்படி எல்லாம் நடந்திருந்தாலும் சிலவற்றை அவள் சூழ்நிலையை கொண்டு தனக்கேற்றவாறு மாற்றிக் கொண்டிருந்தாள்.
-உதாரணமாய் விஸ்வா பார்க்கும்படி அவள் வேண்டுமென்றே தவறவிட்ட மாதிரி டிசைன்ஸ் வைத்து விஸ்வா அவளை கேட்பான் என்பதை அறிவாள் அவள்.
அவனும் அவள் நினைத்தது போலவே அவளை கேட்டிருந்தான். அவளும் அவனுக்கு சரியென்று சொல்ல வேண்டும் என்று ஆனால் இதில் இடையில் டேவிட் புகுந்து அவளை சந்தேகப்பட அதை வைத்தே அவள் விளையாடினாள்.
தனக்கு விருப்பமில்லாதது போல் அவள் பேச டேவிட்பேசியது தான் காரணமென்று விஸ்வா மற்றும் டேவிட் இருவருமே நினைத்துக் கொண்டிருந்தனர்.
எல்லாம் அவள் தானாய் செய்தது என்று அன்று அவர்கள் அறியாதது அது.
வீட்டிற்கு சென்று யோசித்தவள் அவனிடம் மறுத்து விடவேண்டுமென்று உறுதியாய் முடிவெடுத்து தான் மறுநாள் வேலைக்கு வந்தாள்.
அவளின் மாதிரிக்கென்று அவன் தனியாய் அவளுக்கு ராயல்டி போன்று பணம் கொடுத்து வாழ்த்தவும் நமக்குள்ள இதெல்லாம் எதுக்கு என்று வாய் தவறி சொல்லிவிட்டாள்.
என்ன எண்ணத்தில் அன்று அதை சொன்னாள் இன்று அவளே அறியாள். விஸ்வா அவளை குறுகுறுவென்று பார்க்க அவளுக்கு என்னவோ போலானது.
‘இதென்ன வேணாம்ன்னு சொல்லணும்ன்னு நினைச்சா, இவன் இப்படி பார்க்கறான்…’ என்று தான் எண்ணினாள்.
“நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் காஞ்ச்சு??”
“எதை சார் சொல்றீங்க…”
“சார்ன்னு சொல்லாத காஞ்ச்சு…”
‘நீயும் என்னை காஞ்ச்சுன்னு சொல்லாதடா, ரொம்ப காஞ்ச்சு போன மாதிரி இருக்கு…’ என்று மனதிற்குள் புலம்பினாள் அவள்.
“ஓகே…”
“சரி சொல்லு நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்??” என்று அவன் மீண்டும் மீண்டும் கேட்க “எதைப்பத்தின்னு தெளிவா சொல்லுங்க…”
“நமக்குள்ள இதெல்லாம் எதுக்குன்னு ஏன் சொன்னே??”
‘அடடா ஆமா ஏன் சொன்னேன், இவன் காசு கொடுத்தா நான் வாங்கி வைச்சுக்காம பிகு பண்ணப்போய் இவன் இப்படி உளறிட்டு இருக்கானே’ என்றிருந்தது அவளுக்கு.
ஆனாலும் அவனை மறுத்து பேச ஏனோ மனம் வரவில்லை. அவனுக்கு வேண்டுமானால் அவள் யார் என்று தெரியாமல் இருக்கலாம், அவளுக்கு அவன் யார் என்று தெரிந்து தானே இருந்தது.
அந்த உறவு கொடுத்த தைரியமா இல்லை அவள் மனதில் உண்மையாகவே அவன் மேல் காதல் வந்துவிட்டதா என்றவள் அறியாள்.
அவனின் கேள்விக்கு நாணமே அவளின் பதிலாகப் போனதில் அவன் அவ்வளவு மகிழ்ந்திருந்தான் இப்போது.
——————
சில வருடங்களுக்கு முன்
————————————————-
“உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா…”
“அம்மா நம்ம வீட்டுக்கு மகாலட்சுமி வந்தாச்சும்மா…” என்று குதித்தார் அவர்.
“இனிமே நம்ம கஷ்டமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பறந்து போய்டும் பாருங்க…”
“நீங்க சொன்னீங்கள்ள தங்கச்சியோட எல்லா லட்சுமியும் போய்டுச்சுன்னு. இப்போ பாருங்க நம்ம வீட்டுக்கும் ஒரு லட்சுமி வந்தாச்சு…” என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.
“ஏன்யா பொம்பிளை ஆட்சி எல்லாம் என்னைக்கு இருந்தாலும் அவ புருஷன் வீட்டுல தானேய்யா…”
“எம் பொண்ணு இருக்க இடம் லட்சுமி கடாச்சமா இருக்கும்ன்னு சொல்லுங்கம்மா. அவ பிறந்த வீட்டை என்னைக்கும் கஷ்டப்பட வைக்க மாட்டாம்மா…” என்று தன் அன்னைக்கும் சொன்னவர், அதை தனக்குமாய் சேர்த்தே சொன்னார்.
குழந்தை பிறந்து சில நாட்கள் வரை குழந்தை கையை காலை சரியாக அசைக்காமல் இருக்க அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் பெற்றவர்கள்.
மருத்துவர்கள் அக்குழந்தைக்கு போலியோ அட்டாக் ஆகியிருப்பதாக சொல்லி மருத்துவம் பார்க்கச் சொன்னார்கள்.
அவரிடம் அப்போது பணமென்பதே கிடையாதே. தன் தகப்பன் செய்த செயல் அதற்கு தானும் சேர்ந்து உடன்ப்பட்டது எல்லாம் கண் முன் வந்து போக என் குழந்தையை வாழ்க்கையை நானே பாழாக்கி விட்டேனே என்று அவரால் அப்போது கதறத்தான் முடிந்தது.
இருந்தும் தான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடம் தன் இயலாமை சொல்லி உதவி கேட்க அதை அவர்கள் நிராகரித்தனர்.
பிச்சை போட்டவனே பிச்சை கேட்டு நின்றிருக்க அவர்கள் அவனை அவமானப்படுத்தி அனுப்பினர்.
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று…
தன் மகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத தன் நிலையை எண்ணி எண்ணி வருந்தினார் அவர். குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உள்ளம் வெதும்பும்.
ஒரு கையும் காலும் லேசாய் கூம்பியிருக்க அழகோவியமாய் இருக்கும் அக்குழந்தையை யாருக்குமே பிடிக்காமல் இருக்காது. அவ்வளவு கஷ்டத்திலும் குழந்தையை நன்றாகவே வளர்ந்தார் அவர்.
அடுத்து ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தது. கடவுளிடம் ஆயிரம் முறை வேண்டியிருப்பார். அடுத்த குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்று.
அந்த வீட்டின் இளவரசி காஞ்சனாவிற்கு குட்டி தம்பி அமுதன் பிறந்திருந்தான்…