20
முரண்பாட்டின் முகவரியா நீ…?!
ஒரு நொடி
அவளை ஏற்கவே முடியாது
என சபதமெடுக்கிறாய்!
மறு நொடியே
அவள் நினைவுகளால்
உன்னை நிறைக்கிறாய்!
அவன் பார்வைத் தன் மீது பதிந்ததை உணர்ந்த நொடி, தன்னையும் மீறி நிலா வெட்கத்துடன் தன் பார்வையைத் தரை தாழ்த்தினாள்.
அவளது செயல்கள் ஒவ்வொன்றையும் அவன் மனம் நினைவு கூர்ந்து அசை போட, நிச்சயமாகத் தெரிந்தது அவள் தன்னைக் காதலிக்கிறாள் என்று!
‘அய்யோ இதென்ன சோதனை!? என்ன சொல்வது இவளிடம்?! நான் உன்மீது வளர்த்துக் கொண்டிருப்பது வெறும் நட்பு மட்டுமே! காதல் எப்போதும் நமக்குள் சாத்தியமல்ல என்று?!’ என சிந்தித்துக் கொண்டிருந்தவன் மனதில் அவன் நண்பர்கள் பேசியது சுத்தமாக பதியவில்லை.
“டேய்! உன் பொண்டாட்டியை ரசிச்சது போதும்! சாப்பிடப் போலாமா?” என்று கிரிஷ் அவனை உலுக்க,
“ஹான் எ என்னடா?!” என்றான் தூக்கத்திலிருந்து விழித்தவன் போல்.
“ம்ம்! சாப்பிடப் போகலாமான்னு கேட்டோம்?! உன் மனைவியையும் அழைச்சிகிட்டு வா! நான் போய் என்னோட மனைவியை கூட்டிட்டு வரேன்!” என்றான் இன்னொரு நண்பன்.
அதன் பின் அனைவரும் தம்பதியராக உணவருந்த அமர, ரஞ்சன் தன் நண்பர்களோடு அமர்ந்து கொண்டான்.
அதைக் கண்ட தலைவியின் முகம் ஒளியிழந்த நிலவாய் மாறிவிட, அவள் முகம் கண்ட தலைவனின் மனம் தானாக அவனை அவளருகே இழுத்துச் சென்றது.
“இல்ல… ரஞ்சு நீ அவங்க கூடவே உட்கார்ந்து சாப்பிடு!” என்றாள் தன் ஆசையை மறைத்துக் கொண்டு.
“இல்ல… பரவாயில்லை நீ உட்காரு!” என்றவன், அவளருகே அமர்ந்து கொண்டான்.
திருமணமான இத்தனை மாதத்தில் நிலா, அவனோடு சேர்ந்து கலந்து கொண்ட முதல் சுப நிகழ்ச்சி இதுதான். அவனோடு சேர்ந்திருப்பது நிலாவின் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
கண்கள் கள்ளப் பார்வையோடு அவனை அணுஅணுவாய் ரசிக்க, தொண்டைக்குழியில் உணவு செல்வேனா என சண்டித்தனம் செய்தது.
அவள் உணவை அலைந்தபடியே அமர்ந்திருப்பதைக் கண்டு, “சாப்பிடு நிலா வீட்டுக்குப் போக வேண்டாமா?!” என்றான் ரஞ்சன்.
வீடு திரும்பிய பின் ரஞ்சனால் திருமணத்திற்கு செல்லுமுன் இருந்தது போல் சகஜமாக இருக்க முடியவில்லை!
அவள் கேட்டதற்கெல்லாம், “ம், வேண்டாம்!” என்ற பதிலைத் தவிர வேறெந்த வார்த்தையும் அவன் வாயிலிருந்து பிறக்கவில்லை.
அதுமட்டுமின்றி, காலை அவள் எழும்முன்பே எழுந்து வெளியே கிளம்பியவன், இரவு அவள் உறங்கி வெகு நேரம் கழித்துதான் வீடு திரும்பினான். வீட்டிலிருப்பவர்கள் கேட்டால், புதிய கிளை திறப்பதற்கான வேலை அதிகம் இருக்கிறது என்று சமாளித்தான். கிட்டத்தட்ட இருவாரத்திற்கும் மேல், அவன் நடவடிக்கை இப்படியே தொடர, நிலாவால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அன்று இரவு அவன் வரும் வரை விழித்தே இருக்க வேண்டும் என்ற முடிவோடு, ஓர் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீடு திரும்பிய ரஞ்சன், தங்கள் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே நிலா இன்னும் உறங்காமல் இருப்பதைக் கண்டு தயங்கியபடி உள்ளே சென்றான்.
அவள் புறம் முகத்தைக் கூடத் திருப்பாமல் ரெப்ரெஷ் செய்துகொண்டு வந்து படுக்கப் போனவனை, “ரஞ்சு… ஒரு நிமிஷம்!” என்று அவனருகே வந்தாள் நிலா.
அவள் முகம் நோக்கமலேயே, “என்ன?!” என்றான்.
“நான் ஏதாவது தப்பு செய்திட்டேனா ரஞ்சு..?! ஏன் என்னை இந்த அளவுக்கு அவாய்ட் பண்ற?!” என்றாள் வேதனையுடன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை! உனக்கே தெரியும் இல்லை… என்னோட சொந்த முயற்சியில நம்ம கடையோட புது கிளை தொடங்கனும்னு சொல்லியிருந்தேன் இல்ல… அந்த வேலையில கொஞ்சம் பிசியா இருக்கேன்!” என்றான்.
“ம்! அத்தை சொன்னாங்க. ஆனா….?!” என்று நிறுத்தி, சில நொடிகள் தயங்கி நின்றவள்,
“ரஞ்சு…! நான் உங்கிட்ட ஒ ஒண்ணு சொல்லனும்னு…!” என்று அவள் திணறும் போதே,
“எனக்குத் தூக்கம் வருது நிலா…. மணி ஒண்ணாகப் போகுது! நீயும் போய் தூங்கு!” என்று சொல்லிப் படுத்துக் கொண்டான்.
அவன் தன்னைத் தவிர்க்கிறான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவனால் தன்னை அவ்வளவு எளிதில் மனைவியாக, காதலியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவள் நன்கு அறிந்தபோதும், ஏனோ அவள் மனம் அவன் அன்பை அளவுக்கு அதிகமாய்த் தேடியது.
கண்களில் நீர் துளிர்க்க அவள் பட்டென அங்கிருந்து நகர்ந்ததும் அவனுக்கும் உறக்கம் பறிபோனது.
“சே நான் முதல்லயே கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருந்திருக்கணும்! தாத்தா பாட்டிக்குன்னு கல்யாணம் செய்துக்கிட்டு இப்போ இவள வேதனைப் படுத்திக்கிட்டு இருக்கேன்!’ என்று தன்னையே நொந்து கொண்டவன், மெல்ல அவள் புறம் பார்வைத் திருப்பினான்.
அவள் கண்களை மூடிப் படுத்திருந்தாலும் அவள் உறங்கவில்லை என்பதற்கு அவள் கண்ணிகளிலிருந்து வழிந்த நீரே சாட்சியானது.
அக்கண்ணீரைக் கண்டவனது உள்ளம், ஓடி சென்று அவள் விழிநீருக்கு அணையிட துடியாத் துடித்தது.
‘இதென்ன முரண்!? அவளுக்கும் எனக்கும் நட்பைத் தவிர ஏதுமில்லை என்று சொல்லிக் கொள்கிறாய்!? ஆனால் அவள் கண்ணீரைக் கண்டதும், துடியாய்த் துடிக்கிறாய்?! ஒருவேளை உனக்குள்ளும் அவள் மேல் காதல் வந்துவிட்டதோ?!’ என்று உசுப்பிவிட்டது அவன் உள்மனம்.
‘இல்லை நிச்சயமாக இல்லை! நான் அவளைக் காதலிக்கவில்லை! என்னைப் பொறுத்தவரை அது சாத்தியமே இல்லை!’
‘பிறகு ஏன் அவள் கண்ணீரைக் கண்டும், அவள் வேதனையைக் கண்டு துடியாய்த் துடிக்கிறாய்?!’
‘அது நட்பு! நான் அவள் மேல் கொண்ட நட்பு, அவள் கண்ணீரைத் தாளமுடியாமல் துடிக்கச் செய்கிறது!’ என்று முன்னுக்குப் பின் முரணாக ஏதேதோ யோசனை செய்து கொண்டிருந்தவன், அழுதபடியே உறக்கத்தைத் தழுவியிருந்த தூயவளின் நிர்மலமான முகத்தைக் கண்டதும், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியபடியே முழுதாக தன் கண்களுக்குள் தனக்குரியவளை நிரப்பிக் கொண்டான்.
காலை கண்விழித்தவன், அவள் அங்கே இல்லாததைக் கண்டு மனம் பதைத்தான்.
அவள் படுத்திருந்த சோபாவின் அருகே இருந்த டீப்பாயில் ஒரு பேப்பர் படபடத்தது கண்டு விரைந்து சென்று அதனை எடுத்தான்.
“ரஞ்சு நீ என்னை அவாய்ட் பண்ணனும்னு நினைச்சி சீக்கிரம் கிளம்பி ஓட வேண்டாம். பொறுமையா வேலைக்குக் கிளம்பிப் போ! நான் முடிந்தவரை உன் கண்ணில் படாமலேயே இருந்துக்க முயற்சி பண்றேன்!” என்று எழுதியிருந்தாள்.
அவன் தன்னை தவிர்க்கத்தான் இப்படி ஓடி ஒளிகிறான் என்று உணர்ந்து கொண்டவள், அதிகாலையே எழுந்து குளித்துத் தயாராகி ராதாவிடம் சென்று,
“ஆன்ட்டி நான் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து நாற்பத்திஎட்டு நாள் விளக்கு போடறேன்னு வேண்டியிருக்கேன்! அது மட்டுமில்லாம ஸ்கூல்ல ஸ்பெஷல் க்ளாசஸ் வேற ஆரம்பிச்சிருக்காங்க. அதனால் நான் கோவில் போயிட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போயிடறேன்!” என்று சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
கடைக்குச் செல்ல தயாராகி வந்த ரஞ்சன், “அம்மா நிலா எங்க போனா?! உங்ககிட்ட ஏதாவது சொல்லிட்டு போனாளா?!” என்றான்.
“கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே ஸ்கூலுக்குப் போறேன்னு சொன்னாடா.. ஏன் ரஞ்சு… உன்கிட்ட அவ சொல்லிட்டுக் கிளம்பலையா?!” என்றார் சந்தேகமாக.
“நைட்டே சொன்னா ம்மா.. நான்தான் மறந்துட்டேன்! காலையில நான் நல்லா தூங்கிட்டு இருந்தேனா… அதான் எழுப்ப வேண்டாம்னு கிளம்பியிருப்பா..!” என்று சமாளித்தான் ரஞ்சன்.
‘சரி நைட் வந்த பிறகு பேசிக்கலாம்!’ என்று நினைத்தவன், வேலைக்குக் கிளம்பிச் சென்றான்.
இரவு அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து, ரஞ்சன் சீக்கிரம் வர முயற்சி செய்தும் வேலை மிகுதியால் அவன் வீட்டை அடைய மணி பதினொன்று ஆகிவிட்டது.
அப்போது நிலா நல்ல உறக்கத்தில் இருந்ததால், அவள் உறக்கத்தை கலைக்க மனம் இல்லாமல் தானும் உறக்கத்தைத் தழுவினான்.
ஆனால் பின் வந்த நாட்களிலும் இதுவே தொடர, அவளின் ஒதுக்கம் அவனைப் பெரிதும் பாதித்தது. அது எதனால் என்று அவனால் உணர முடியவில்லை!
அன்று அதிகாலை அவள் எழும் முன்பே ரஞ்சன் அவளுக்காக எழுந்து காத்திருக்கலானான். அவள் உறக்கம் கலைந்ததும், ரஞ்சன் உறங்காமல் தன்னையே வெறித்திருப்பதைக் கண்டு, தன் விழி தாழ்த்தினாள்.
சிறிது நேரம் மௌனமாய் அமர்ந்திருந்தவள், எழுந்து, அவன் புறம் பார்வைச் செல்லுவதை வெகு சிரமப்பட்டுத் அடக்கி, தனது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.
அவள் குளித்துவிட்டு வரட்டும் என்று அமைதியாய்க் காத்திருந்தவன், அவள் வெளியே வந்ததும்,
“இந்த நாடகம் இதோட முடிஞ்சிடுமா இல்லை…. இனி எப்பவும் தொடருமா?!” என்றான் காட்டமாக.
அவள் பதிலே கொடுக்காமல் பால்கனிக்குச் சென்று அமைதியாய் தலைத் துவட்டிக் கொண்டிருக்க,
“கேட்டது காதுல விழலியா?!” என்றான் அவள் பின்னோடு சென்று நின்று.
அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாய் அவள் புறம் திருப்பினான்.
அவள் கையை விடுவித்துக் கொள்ள திமிர, “ஏய் இங்க பாரு…! என்ன?! பழிக்குப் பழி வாங்குறியா?!” என்றான் ஆத்திரத்தை அடக்க முடியாமல்.
“…………………..” அவள் பதிலேதுமின்றி தலை கவிழ்ந்தபடியே நிற்க,
“ஏய் உன்னைத்தானே கேட்கறேன்…! பதில் சொல்லுடி… ஏன் இப்படி ஓடி ஒளியற? என்னைப் பார்க்கக் கூட பிடிக்கலையா?!” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.
அப்போதுதான் கவனித்தான், அவள் கண்கள் குளமாக தேங்கி நிற்க, இமை தாண்டி எப்போது தெறித்து விழுந்து விடுவோமோ என்று ததும்பிக் கொண்டிருந்தது கண்ணீர்.
அவன் அவள் பார்வையை ஊடுருவி, “இப்போ எதுக்கு இப்படிக் கண்கலங்கற?! நான் உன்கிட்ட எறிந்து விழுந்து பேசின போதெல்லாம் கூட நீ என்கிட்டே பேசிக்கிட்டுதானே இருந்த?! இப்ப ஏன்டி என்கிட்டே பேசாம விலகிப் போற?!” என்றான் தன் மனதை ஒளியாமல்.
அவன் கேள்வியால் அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள், “நான் ஒண்ணும் உன்னை மாதிரி தவிர்க்க நினைச்சு ஓடி ஒளியலை! என் மனசில உன் மேல இருக்கக் காதலை மறைக்க நினைச்சு ஓடி ஒளியறேன்! நானும் சாதாரண மனுஷிதான் ரஞ்சு…! எனக்கும் ஆசை, பாசம், உணர்வுகள் எல்லாம் இருக்கும்” என்றாள் கோபமும், கண்ணீரும் போட்டியிட.
அவள் வெளிப்படையாய்த் தன் காதலைச் சொன்னதும் அவனின் பிடி முற்றிலும் தளர்ந்தது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு என்ன பதில் உரைப்பதென்று தெரியாமல் மௌனம் காத்தான் ரஞ்சன்.
அவன் நிலை உணர்ந்தவள், அவன் முகம் பார்த்து, “எனக்குத் தெரியும் ரஞ்சு… உன்னால என்னை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியாதுன்னு! நானும் அப்படி நினைச்சுதான் உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். ஆனா இப்போ….?!
ஆரம்பத்துல என் அப்பாவோட சந்தோஷதுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும், நாட்கள் செல்ல செல்ல உன் மேல எனக்கிருந்த சின்னச் சின்ன மனக்கசப்புகள் எல்லாம் நீங்கி, என்னையும் அறியாம உன்மேல் ஒரு நேசம் உருவானது! அது காதலினால் ஏற்பட்ட நேசமா?! இல்லை உன் மனைவியானதால் ஏற்பட்ட நேசமான்னு எனக்குத் தெரியலை!
நீ கொஞ்சம் மனம் வருந்தினா கூட, என் மனசு பரிதவிச்சது. உன்னோட ஒவ்வொரு சுக துக்கத்திலையும் உனக்கு உறுதுணையா இருக்கணும்னு நினைச்சேன்! உன்னோட அருகாமையை என் மனம் ரசிக்க ஆரம்பிச்சது! நீ எல்லோர் கிட்டயும் சகஜமா பேசுறதைப் பார்க்கும் போது என்கிட்டயும் ஒரு நாள் அப்படிப் பேச மாட்டியான்னு ஏங்கினேன். அன்னிக்கு முதல் முதலா ஹாஸ்பிட்டல்ல, நீயாகவே எனக்காக கார்ல வெயிட் பண்ணி ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய்விட்ட போது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா?!
அப்புறம் நாட்கள் செல்ல செல்ல, நீயும் என்னோட சகஜமா பேசிப் பழகியது என் மனசுக்கு புது உற்சாகத்தைத் தந்தது. உன் மீது எனக்கு ஏற்ப்பட்ட காதல் அதிகரிச்சுகிட்டே போச்சு! ஆனா இப்போ…?!
சில நாட்களா நீ என்னை முற்றிலுமா தவிர்க்கிறதை என்னால தாங்ககிக்கவே முடியல ரஞ்சு…! சகஜமா இல்லைன்னாலும், பழையபடி வேண்டா வெறுப்புடனாவது என்கிட்டே நீ பேசிகிட்டே இருக்க மாட்டியான்னு என் மனசு ஏங்கித் தவிச்சது ரஞ்சு…!
அதான் அன்னிக்கு ராத்திரி உன்கிட்ட பேசியே ஆகனும்னு முடிவெடுத்துக் காத்திக்கிட்டு இருந்தேன். ஆனா அன்னிக்கு நீ பேசினபோதுதான் தெரிஞ்சுது, நீ என்னை வேணும்னே தவிர்க்கிறன்னு!
அதான்… என் மனசில இருந்த காதலை எனக்குள்ளேயே மறைச்சிகிட்டு, நீயாவது நிம்மதியா இருக்கணும்னு ஒதுங்கிப் போனேன்!” என்றாள் கண்ணீர் வழிந்தோட.
அவள் மனப் போராட்டத்தையும், கண்ணீரையும் உணர்ந்தவனுக்கு அவளை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழ, அவன் பெரும் முயற்சி செய்து தன் மனதைக் கட்டுப் படுத்தினான்.
அவள் தன் மனதின் எண்ணங்களை எல்லாம் வெளிக்கொட்டிய பின்னும் அவன் வார்த்தையின்றி மௌனமாய் தன் கைகளை இறுக மூடி நின்றிப்பதைக் கண்டு, தன் மனதைக் கட்டுப் படுத்த முடியாமல், ஓடி சென்று சோபாவில் விழுந்து முகம் புதைத்துக் கதறினாள்.
அவள் முகம் புதைத்து அழுது கொண்டிருப்பதை மனம் நோக வெறித்துக் கொண்டிருப்பதைத் தவிர தன்னால் ஏதும் செய்ய இயலவில்லையே என்று தன்னையும், தன் விதியையும் நொந்து கொண்டு சிலையாய் நின்றான் ரஞ்சன்.
யார் வாழ்க்கை எப்படிப் போனாலென்ன?! நான் பாட்டிற்கு என் கடமையைச் செய்தே தீருவேன் என்று நிலமகள் சுழன்று கொண்டே இருக்க, நாட்களும் நகர்ந்து கொண்டே இருந்தன.
அன்று மாலை யாஷினி தனது பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, பஞ்சாட்சரம் யாரோ சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அவளைக் கண்டதும், “வாம்மா யாஷினி… இவன் என்னோட பிரெண்ட் யூ.எஸ் ல செட்டில் ஆகி இருபது வருஷமாச்சு! நான் அங்க வேலை விஷயமா போகும் போது இவனை பார்க்கம வந்ததே இல்லை” என்றார் பெருமையோடு.
“ஓ! ஹலோ அங்கிள்… ஹாய் ஆன்ட்டி.. எப்படி இருக்கீங்க!” என்றாள் சம்பிரதாயமாக.
“வி ஆர் டூயிங் குட் டியர்! நீ எப்படி இருக்க?!” என்றார் அந்த பெண்மணி.
“ம் நல்லாயிருக்கேன் ஆன்ட்டி!” என்றாள்.
“உன் டாடிக்கு இருக்க வசதிக்கு நீ ஏன்ம்மா வேலைக்கெல்லாம் போற?!” என்று அவர் கேட்க,
‘இதென்ன அனாவசியமான கேள்வியெல்லாம் கேட்கறாங்க!?’ என்று மனதுள் எரிச்சலுற்றவள்,
“எனக்குப் பிடிச்சிருக்கு அதனால் போறேன் ஆன்ட்டி!” என்றாள் பட்டென்று.
“ஓ!” என்றவர், ”பட் கல்யாணத்துக்குப் பிறகு நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம் டியர்.. வீட்லயிருந்து என் மகனை சந்தோஷமா பார்த்துக்கிட்டாலே போதும்,!” என்றார் அப்பெண்மணி கட்டளைக் குரலில்.
“வாட்…?!” என்று அவள் தன் தந்தையை முறைக்க,
“யாஷினி.. நீ ரொம்ப டயர்டா இருக்க பாரும்மா.. போ போய் ப்ரெஷ் ஆகிட்டு வா!” என்று பஞ்சாட்சரம் மகளைச் சமாளித்து உள்ளே அனுப்ப முயன்றார்.
அவள் தன் தந்தையை கோபமாய் முறைத்தவிட்டு, வேகமாகப் படியேறினாள்.
சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் கிளம்பும் சமயம் பஞ்சாட்சரம் மகளை அழைக்க, அவள் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு கீழிறங்கி வந்து அவர்களுக்கு விடை கொடுத்தாள்.
அவர்கள் கிளம்பியதும், கோபத்துடன் தன் அறைக்குச் சென்றவள், தந்தையைக் குதறுவதற்கு பதில் நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் நிச்சயமாகக் கடும் கோபத்தில் இருப்பாள் என்பதை உணர்ந்தாலும் மகளிடம் பேசியே ஆக வேண்டும் என்று அவர் அறைக்குள் நுழைந்தார் பஞ்சாட்சரம்.