Skip to content
Post Views: 3,184
29
அன்று ரிஷியின் அக்காவின் வளைகாப்பு என்பதால் ரிஷி, பார்வதியையும், ரஞ்சனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தான். அதனால் பார்வதி தன் வீட்டிற்குத் தெரியாமல் காலேஜிற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, ரஞ்சனுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றாள்.
ரிஷியின் குடும்பத்தினர் அனைவரும் அவர்களை அன்புடன் வரவேற்று மிகவும் கலகலப்பாகப் பழகினர்.
Advertisement
விழா இனிதே நிறைவு பெற்றபின், இருவரும் ரிஷியின் குடும்பத்தினரிடம் விடைபெற்று கிளம்ப,
“சீக்கிரமே ரெண்டு பேரும் தம்பதியரா எங்க வீட்டுக்கு வரணும்” என்று வாழ்த்தினார் ரிஷியின் தாய் அருணா.
அங்கிருந்து கிளம்பி இருவரும் வண்டியில் செல்கையில், “ரஞ்சி.. எல்லாருமே ரொம்ப அன்பா பழகுறாங்க இல்ல… ஸோ குட்!” என்றாள் பாரு.
Advertisement
“ம்! ஆன்ட்டி, அங்கிள் ரெண்டு பேருமே ரொம்ப நல்ல டைப்! அவங்க பசங்களையும் அதே மாதிரி வளர்த்திருக்காங்க” என்றான் ரஞ்சு.
Advertisement
“நாமளும் நம்ம பிள்ளைகளை ரிஷி அண்ணா மாதிரி ரொம்ப அருமையானவங்களா வளர்க்கணும்!” என்றாள் பாரு.
“அது என்ன ரிஷி அண்ணா மாதிரி?! ஏன் என்னை மாதிரி வளர்க்கக் கூடாதா?! நான் நல்ல பிள்ளைதானே!” என்று அவன் கேட்க,
“யாரு நீங்களா?!! ரொம்ப…. நல்ல பிள்ளை! ரோட்ல நடந்து போன பெண்ணை கைபிடிச்சு இழுத்து கிஸ் பண்ண வந்த பிள்ளை!” என்று செல்லமாய்க் கடிந்து கொண்டாள் பார்வதி.
Advertisement
“தப்பு பண்ணிட்டேன் பாரு… அன்னிக்கே கிஸ் பண்ணியிருக்கணும்! இப்படி மூணு வருஷமா ஒரு கிஸ் கூட இல்லாம லவ் பண்ற ஒரே லவ்வர்ஸ் உலகத்துலயே நம்மலாதான் இருப்போம்!” என்று ரஞ்சன் சலித்துக் கொள்ள,
“அதான் கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா வட்டியும், அசலுமா வசூல் பண்ணிடுவீங்களே! அப்புறம் என்ன?!” என்று அவள் சொல்ல,
“ஹாஹா, வட்டி, அசல்னு சேட்டு வீட்டுப் பொண்ணுன்னு நிரூபிக்கிற பாத்தியா?!” என்று அவன் கேலி செய்ய,
“ச்சு… போங்க ரஞ்சி!” என்று அவள் கோபித்துக் கொண்டு அவன் முதுகில் ஓர் அடி வைத்தாள். அப்போது காற்றில் அலைபாய்ந்து விழுந்த அவள் துப்பட்டாவை எடுத்து முகத்தை மறைக்க மறந்தாள் நங்கை.
அதே நேரம் நான்கு சாலைகள் கூடும், அந்தப் பிரதான சாலையின் சிக்னலில், ஒருபுறம் ரெட் லைட் ஒளிர்ந்து, இவர்கள் புறம் பச்சை விளக்கு எரிய அவன் வண்டியை கிளப்பினான்.
எதிர்புறத்தை அவர்கள் கடந்து செல்கையில் காரிலிருந்த அவர் கண்களில் பட்டது, அந்தக் காட்சி.
‘பாரு…???!!! என் பொண்ணா இப்படி யாரோ ஒருவனோடு! அதுவும் அவ்வளவு நெருக்கமாக?!’ என்று எண்ணிய ரவீந்தரின் மனம் உலைக்கலமாய்க் கொதித்தது.
சிரிப்பும், பேச்சுமாய், ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு செல்லும் அச்சின்னஞ்சிறுசுகள் தங்கள் காதல் கைகூடப் போவதில்லை என்று தெரியாமல் சிறகடித்துச் சென்றன.
சில நிமிடங்களில் ரஞ்சன் பாருவை அவளுடைய காலேஜின் அருகே டிராப் செய்துவிட்டுத் திரும்பினான்.
‘நல்லவேளை கார் இன்னும் வரலை!’ என்று நினைத்தவளுக்கு, கல்லூரியின் எதிர்புறத்திலிருந்த சாலையில் நின்றிருந்த தங்கள் காரிலிருந்து, தன் தந்தை அவளை வேவு பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் போயிற்று.
சில நொடிகளில் அவர்களின் கார் வந்துவிட, டிரைவர் சீட்டில் தந்தையைக் கண்டவளுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி.
“என்னம்மா இப்படி அதிர்ச்சியாகுற?! வா வந்து உட்காரு!” என்றார் ரவீந்தர் எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல்.
அவர் சொல்லுக்குக் கட்டுப் பட்டு காரில் ஏறி அமர்ந்தவள், சில நொடிகளுக்குப் பின், “ட்ரைவர் வரலியா பப்பா..!” என்றாள் தயக்கத்துடன்.
“ஏன் நான் என் பொண்ணை அழைச்சிட்டுப் போக வரக் கூடாதா?” என்று அவர் பதில் கொடுக்காமல் கேள்வியே கேட்க, அவள் அமைதியானாள்.
‘பப்பா ஏன் ஒரு மாதிரி பேசறார்?! ரஞ்சு ட்ராப் செய்ததைப் பார்த்திருப்பாரோ?!’ என்று எண்ணியவளின் நெஞ்சுக்குள் கலக்கம் எழுந்தது.
வீடு வந்ததும், “இறங்கு பார்வதி..!” என்று அவர் குரல் கொடுத்த பின்தான் வண்டியிலிருந்து இறங்கினாள் பார்வதி.
வீட்டுக்குள் நுழைந்ததும் தன் மனைவியிடம், “இனிமே உன் பொண்ணு காலேஜிக்கு போகமாட்டா! இன்னும் பத்து நாள்ல அவளுக்குக் கல்யாணம்!” என்றார்.
“ப பப்பா…??!!” என்று பார்வதி அதிர்வுடன் நோக்க,
“என் பொண்ணு படிக்கிறான்னு நினைச்சு நான் காலேஜிக்கு அனுப்பினேன். ஆனா அவ காலேஜிக்குப் போகாம, எவனோ ஒருத்தனோட ஊர் சுத்திக்கிட்டு இருக்கான்னு இன்னிக்குதான் தெரிஞ்சிது!” என்று அவர் சொல்ல,
“என்னங்க என்ன சொல்றீங்க? நம்ம பாருவா?!” என்று அதிர்ச்சியானார் அவளின் தாய் சந்திரா.
உடல் பயத்தில் படபடத்தாலும், ‘இப்பவாவது சொல்லிடு பார்வதி….!’ என்று அவள் மனம் உந்த, “பப்பா… அவரு ரொம்ப நல்லவர், நாங்க மூணு வருஷமா காதலிக்கிறோம்!” என்றாள். குரலில் சற்றே நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
அவள் சொன்னதைக் கேட்ட தாய், தந்தை இருவருக்குமே பேரதிர்ச்சி.
“கேட்டுக்கோ சந்திரா… மூணு வருஷமா காதலிக்கறாளாம்! காதல் மட்டும் தான இல்லை…. அதையும் தாண்டி போயிடுச்சாமாம்?!” என்று ரவீந்தர் ஏளனமாய்க் கேட்க,
“பப்பா…??!!” என்று பார்வதியின் குரல் உயர்ந்தது.
“போதும் நிறுத்திடி… ஒண்ணும் தெரியாத பொண்ணுன்னு உன்னை நினைச்சது தப்புன்னு இப்பதான் புரியுது!” என்று அதட்டிய சந்திரா,
“முதல்ல இவளுக்கு கல்யாணத்தை முடிங்க!” என்றார் முடிவாக.
பார்வதிக்கு எங்கிருந்துதான் தைரியம் வந்ததோ?! “முடியாது நான் என் ரஞ்சியைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு, தன் புத்தகங்களை சோபாவிலேயே போட்டுவிட்டு தன் அறைக்குள் சென்று கதவைத் சாத்திக் கொண்டாள்.
இதுவரை ஒருவார்த்தை கூட எதிர்த்துப் பேசியிராத தங்கள் மகள் இப்படிப் பேசிவிட்டுச் சென்றதைப் பார்க்க இருவருக்குமே அதிர்ச்சி.
அன்று மதியம் தன் பெண் ஒருவனுடன் வண்டியில் செல்வதைப் பார்த்ததுமே, பல நாட்களாக தங்கள் வீட்டுடன் சம்மதம் செய்வதற்காகக் காத்திருந்த தன் நண்பர் ஒருவரின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டிருந்தார் ரவீந்தர்.
உள்ளே சென்ற பார்வதி, ரஞ்சனுக்கு போன் செய்து விவரம் கூறலாம் என்று நினைத்து தன் போனைத் தேட, போனைப் புத்தகங்களுடன் சேர்த்து, சோபாவிலேயே போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
அதை எடுப்பதற்காக வெளியே வந்தவள், தன் போன் அங்கு இல்லாததைக் கண்டு தேடத் துவங்க, அது சுக்கு நூறாய் உடைக்கப் பட்டு குப்பையில் கிடப்பதைப் பார்த்ததும் கோபம் மூண்டது.
சரி வீட்டுத் தொலைப்பேசியில் பேசலாம், என்று அதை நோக்கிச் செல்ல, அதன் இணைப்பும் துண்டிக்கப் பட்டிருந்தது.
‘போன் இல்லன்னா…?! என்னால எதுவும் பண்ண முடியாதா என்ன?!” என்று நினைத்தவள் ,தனது லேப்டாப்பை எடுக்க நினைக்கும் போதே, அவர் தந்தை வந்து அதனையும் சென்று விட்டார்.
‘சே! இந்த நேரம் பார்த்து சகு வேற எஜூகேஷனல் டூர் போயிருக்காளே?!’ என்று வேதனை கொண்டவள்,
‘என்னயிருந்தாலும் என்னை மீறி எப்படிக் கல்யாணம் செய்திட முடியும்?!’ என்று நம்பிக்கையுடன் இருந்தாள்.
ஆனால் மறுநாள் காலை விழிக்கையிலேயே அவளது திருமணப் பத்திரிக்கை, தன் கட்டில் மேஜை மேல் இருப்பதைக் கண்ட பார்வதிக்கு சற்றே உதறல் எடுத்தது.
ஏற்கனவே அவளுக்கு நன்றாகத் தெரியும்தான், தன் குடும்பத்தினரைப் பற்றி. இருந்தாலும் பேசி சம்மதிக்க வைத்து விடலாம் என்று கொஞ்சம்நஞ்சம் நம்பிக்கை இருந்தது. அப்படி சம்மதிக்க வில்லை என்றாலும் ரஞ்சனைத்தான் கைப்பிடிக்க வேண்டும் என்று அவள் உறுதியுடன் இருந்தாள்.
ஆனால் இப்போது?! கோபத்துடன் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், “என்னம்மா இது?!” என்றாள்.
“பார்த்தால் தெரியலை!” என்ற சந்திரா, “இந்தா பாலைக்குடி” என்று அவள் கையில் கிளாஸைத் திணிக்க,
“இது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று எரிச்சலுடன் பாலைத் தட்டிவிட்டாள் பார்வதி.
“இதோ பார்டி… இன்னும் ஒருவாரத்தில கல்யாணம்! கையில சூடு பட்டுடுச்சுன்ன என்ன ஏதுன்னு கேள்வி வரும்! ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்றபடி கேட்டு நடந்துக்கோ!” என்று சந்திரா எச்சரிக்கும் பாவானையில் சொல்ல,
“இல்லன்னா.. இல்லன்னா என்ன பண்ணுவீங்க? அடிப்பிங்களா?!” என்று பார்வதி கேட்க,
“அடிக்கமாட்டோம், கொன்னுடுவோம்!” என்றார் ரவீந்தர்.
“ஓ!! கொன்னுடுவீங்களா?! ம்! கொன்னுடுங்க! ரஞ்சியோட வாழமுடியாத வாழ்க்கை இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?!” என்று அவள் விரக்தியுடன் சொல்ல,
“உன்னை இல்ல…! நீ ரஞ்சி ரஞ்சின்னு உருகுறியே அவனை!” என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ரவீந்தர்.
சில நொடிகள் அவள் அதிர்ச்சி கொண்டாலும், சமாளித்துக் கொண்டு, “என்ன மிரட்டறீங்களா?!” என,
“இல்ல உண்மையைச் சொன்னேன்!” என்றவர், தன் கைப்பேசியிலிருந்த காணொளியை ஓடவிட்டு, அவள் கையில் கொடுத்தார்.
அதில் ரஞ்சன் வீட்டைச் சுற்றிலும் சில ஆட்கள், ஆயுதங்களோடு சுற்றிவருவது தெரிந்தது.
“ர ரஞ்சி??!!” என்றவளுக்கு நா உலர்ந்து போனது.
“ஆமா அவனேதான்! அவனைக் கொல்லனும்னுகிறது என் விருப்பம் இல்ல.. நான் சொல்றதை கேட்டு நீ நடந்தன்னா அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது இல்லன்னா…?!” என்றவர், அவள் முகத்தை நேருக்கு நேர் நோக்கி,
“இதுக்கப்புறமும் நீ அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருந்தா அவன் சாவுக்கு நீதான் காரணமா இருப்ப!!” என்றார் தீர்மானமாக.
இதுவரை தைரியமாக இருந்த அவள் மனம், இவ்வார்த்தைகளைக் கேட்டதும் முற்றிலும் சோர்ந்து போனது. இருந்தாலும் ஏதோ சிறு நம்பிக்கை மனதில் இருந்ததில் அப்போதைக்கு சற்றே அமைதியானாள்.
ரஞ்சனும், பார்வதியும் வாரத்தில் ஒரு முறை கோவிலுக்குச் செல்லும் போது மட்டுமே நேரில் சந்தித்தாலும், தினமும் போனில் பேசிக் கொள்வது வழக்கம். ஆனால் இரண்டு நாட்களாக அவளின் போன் தொடர்பு துண்டிக்கப் பட்டிருந்ததால் அவன் நேரடியாகக் கிளம்பி அவர்கள் வீட்டிற்கே செல்ல, அங்கே அவர்கள் வீடு பூட்டிக் கிடந்தது.
error: Content is protected !!