அதில் மித்ரன் கொஞ்சம் அசந்தாலும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
“ஓகே இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க??”
“அதை தான் இவ்வளவு நேரமும் சொல்லிட்டு இருந்தோம்ல”
“நீங்க விஷ்வா இல்லை அப்படித்தானே…”
“ஆமா…” என்றான் அவன் உறுதியாய்.
“ஓகே நான் கிளம்பறேன்…” என்று அவள் எழ “மிசஸ் காஞ்சனா…” என்று நிறுத்தினான் விஜய்.
“சொல்லுங்க…”
“எங்க கிளம்பறீங்க நீங்க?? வந்த வேலையை முடிச்சுட்டு போங்க மேடம்…” என்றான் மித்ரன் நக்கலாய் அதிகாரமாய். ‘இது நிச்சயம் விஷ்வா அல்ல. அவன் குரலில் எப்போதும் ஆணவம் இருக்கவே இருக்காது. இவன் குரலிலேயே ஒரு மிடுக்கு தெரிகிறது’ என்று தான் பார்த்தாள் அவள்.
விஷ்வா வேணும்ன்னே என்னை ஹர்ட் பண்ண இப்படியெல்லாம் செய்யறீங்கன்னு எனக்கு தெரியுது, எவ்வளவு தூரம் போறீங்கன்னு பார்க்கறேன் என்று எண்ணிக் கொண்டாள்.
“எனக்கு இந்த வேலை செய்ய பிடிக்கலை…” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.
“சோ வாட், உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காக எங்களுக்கு பிடிச்சதை நாங்க செய்யாம இருக்க முடியாது. இவனோட அப்பா சிட்டில ஒரு மால் கட்டி முடிச்சிருக்காரு…”
“அதுல தனிஷ்க் போல ஷாப் ஒண்ணு கட்டியிருக்கார். அதுக்காக பெஸ்ட் டிசைன்ஸ் எல்லாம் தேடிட்டு இருந்தோம், அப்போ உங்களோடது பார்த்திட்டு இவன் சொன்னான். அதுக்காக தான் பேசலாம்ன்னு உங்களை இங்க கூப்பிட்டது…”
“அப்புறம்…” என்றாள் அவள் கதை கேட்கும் பாவனையில்.
“நான் உங்களுக்கு கதை சொல்ல கூப்பிடலை, ஷோ மீ யூவர் மாடல்ஸ்” என்றான் அதிகாரமாய்.
“காட்ட முடியாது…”
“வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்புற வேலைய பாருங்க மேடம், டேய் விஜய் சொல்லு இவங்ககிட்ட எனக்கு வேற வேலையிருக்கு நான் கிளம்பணும்” என்று மணி பார்த்தான் அவன்.
‘விஷ்வா என்னை ஏன் இப்படி ஹர்ட் பண்ணிட்டே இருக்கீங்க’ என்று மனதார கதறிக் கொண்டிருந்தாள் அவள்.
அவன் கிளம்புகிறேன் என்று மணி பார்த்ததும் அவனை பார்த்துக் கொண்டாவது இருப்போமே என்ற எண்ணம் அவளிடத்தில் இப்போது.
“மிசஸ் காஞ்சனா ப்ளீஸ் கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க… நாளைக்கு நான் அப்பாவை பார்த்து இதெல்லாம் காட்டணும், உங்களை வேற அவர் பார்க்கணும்ன்னு சொல்வார், சோ ப்ளீஸ்…” என்றான் அவன் தன்மையான குரலில்.
“மால் கட்டியிருக்கீங்கன்னு நீங்க சொன்னதை…”
“நீங்க நம்பலையா…” என்றவன் லேப்பை திறந்து அந்த மாலின் படத்தை அவளுக்கு காட்டினான்.
“நாளைக்கு எங்கப்பா இங்க இருப்பாரு, அவரை நீங்களே நேர்ல பார்த்து பேசிக்கோங்க… இப்போ நாம கொஞ்சம் வேலையை பார்க்கலாமா” என்றவனும் அவர்களுடனே சேர்த்து அமர்ந்து கொண்டான்.
காஞ்சனா கண்ணை மூடி நிதானித்தாள். இருவரும் அவளின் முகபாவங்களையே ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். அவளின் கோபம், ஏமாற்றம் அனைத்தையுமே கட்டுப்படுத்தினாள்.
மேலும் சில நொடிகள் எடுத்துக் கொண்டாள் தன்னை சமனப்படுத்திக் கொள்ள, கண்ணை திறக்கும் போது அவளின் முன் நீர் நிரம்பிய கிளாஸ் ஒன்று இருந்தது.
“ஹாவ் இட்…” என்றான் விஜய்.
அவள் மித்ரனை பார்த்துக் கொண்டே அதை எடுத்து பருகினாள். உள்ளுக்குள் அதை நினைத்து பறக்கும் உணர்வு வந்தாலும் மித்ரன் சாதாரணமாய் பார்த்தான் அவளை.
அவள் தன் டேபை எடுத்து அவர்கள் கேட்ட மாதிரிகளை காண்பிக்க ஆரம்பித்தாள். அவனது மட்டுமல்லாது, அவளதும் சில மாதிரிகளை இருவருமே சேர்ந்து ஓகே செய்திருந்தனர்.
ஒரு வழியாய் எல்லாம் பார்த்து முடித்ததும் “இந்த மாடல்ஸ் எல்லாம் எனக்கு சென்ட் பண்ண முடியுமா” என்றான் விஜய்.
“எதுக்கு??”
“அப்பாகிட்ட காட்டணும்” என்றான்.
அவன் பேச்சில் பொய் தெரியவில்லை அவளுக்கு. உண்மையாக தான் அவளை அங்கு வர வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. அதைக்காட்டிக் கொள்ளாமல் “டூ மினிட்ஸ் வில் சென்ட் யூ” என்றுவிட்டு அவன் கேட்டதை அவனுக்கு மெயிலில் லிங்க்காக அனுப்பி வைத்தாள்.
“நாளைக்கு மறுபடியும் நீங்க வர வேண்டி இருக்கும், அப்பாவை பார்க்க” என்றான்.
“ஓகே…”
“இப்போ…”
“கிளம்பலாம் நான் டிராப் பண்ணுறேன் உங்களை” என்று எழுந்தான் விஜய்.
அப்போது கரிகாலன் அங்கு வந்து கதவை தட்டினான். “எஸ்” என்று விஜய் சொல்லிட உள்ளே வந்திருந்தான் அவன்.
இவளைக் கண்டவன் “சார் இவங்க…” என்று ஆரம்பிக்க அவனை முறைத்த மித்ரன் “கிரிகாலன்” என்றான் அழுத்தமாய்.
“கரிகாலன் சார்…”
“ஒகே கரிகாலன் உங்களுக்கு இப்போ இங்க என்ன வேலை??” என்றான் அவன் பற்களைக் கடித்தவாறே.
“சங்கவி மேடம் சாரை கூட்டிட்டு வான்னு சொல்லி அனுப்புனாங்க…” என்றான் அவன்.
“நீங்க போங்க நான் வர்றேன்” என்றான் மித்ரன்.
“உங்களை ஒண்ணும் கூப்பிடலை சார்… நம்ம விஜய் சாரை தான் பார்க்கணும்ன்னு சொன்னாங்க…” என்று அவன் சொல்ல விஜய் இவனை பார்த்தான். காஞ்சனா அங்கு என்ன தான் நடக்கிறது என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஜயோ “என்னால வந்து அவளை பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க கரிகாலன். எனக்கு வேலையில்லைன்னு நினைச்சுட்டாளா அவ, சும்மா வா போன்னு சொல்லிட்டு இருக்கா…” என்றவன் நிஜமாகவே கோபமாய் இருந்தான்.
மித்ரன் தான் “விஜய் கூல்…” என்றான்.
“டோன்ட் சப்போர்ட் ஹர்…” என்று அவன் சொல்ல “இது என் டயலாக்” என்றான் அவன் பதிலுக்கு.
“கரிகாலன் நீங்க இன்னும் என்ன இங்க நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க, போங்க போய் சொன்னதை செய்ங்க” என்று அவரை விரட்டினான் விஜய்.
“சரி மித்ரன் நான் கிளம்பறேன், இவங்களை வீட்டில ட்ராப் பண்ணிட்டு நான் வர்றேன்…” என்று எழுந்தான் விஜய்.
“விஜய் நீ இங்க இரு, இன்னைக்கு அந்த ஜுஹு பிளாட் இன்டீரியர்ஸ் பத்தி பேச வரச் சொல்லி இருக்கேன். உன்னோட சைடு எல்லாம் ரெடி பண்ணிடு, நானே இவங்களை ட்ராப் பண்ணிட்டு வர்றேன்…” என்றான் மித்ரன்.
‘வாங்க விஷ்வா இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் அவள்.
விஜய் காஞ்சனாவை கவலையாக பார்த்தான். “மிசஸ் காஞ்சனா உங்களுக்கு அவன் ட்ராப் பண்ணுறதுல எதுவும் ப்ரோப்ளம் இல்லையே??” என்றான்.
இவர் எதுக்காக நம்மளை கவலையா பார்க்கறாரு என்று தான் நினைத்தாள். “காஞ்சனா” என்றான் அவன் மீண்டும்.
“நீங்க இன்னும் கிளியர் ஆகலையா?? இவனை விஷ்வான்னே தான் நினைச்சுட்டு இருக்கீங்களா??” என்றான் விஜய்.
“இல்லை அதைப்பத்தி நான் எதுவும் பேச விரும்பலை. தூங்கறவங்க எழுந்திடுவாங்க, தூங்கற மாதிரி நடிக்கறவங்க இடியே விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டாங்க…” என்றாள்.
இருவருக்கும் அவள் பதில் சிரிப்பை கொடுக்க அதை வாய்க்குள்ளேயே மென்று விழுங்கினர். “அப்போ இவனோட போறது பத்தி…”
“நோ அப்ஜெக்ஷன்” என்றாள்.
“அப்ஜெக்ட் பண்ண வேண்டியது நானு. நீ என்ன இவங்களை போய் கேட்டுட்டு இருக்க” என்றான் மித்ரன்.
அவனை மனதார திட்டிக்கொண்டே அவனுடன் நடந்தாள் அவள். லிப்ட்டில் பயணித்து கீழே இறங்கி வரும் வரையில் கூட இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவர்கள் வெளியில் வரவும் இவன் அலுவலகத்தில் ரிஷப்ஷனில் பணிபுரியும் பெண் ஷிவானி இவனைக் கண்டு ஓடிவந்தாள். மராத்தியில் அவள் இவனிடம் ஏதோ பேச இவன் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஷிவானி அவனிடம் வெகு நெருக்கமாய் ஒட்டி நின்றிருந்தாள். “தேங்க்ஸ் ஜி” என்று சொன்னவள் கிளம்பும் போது அவனை அணைத்து கன்னத்தில் முத்தம் வைக்க காஞ்சனாவுக்கு புகைந்தது…
ஷிவானியை எரித்துவிடுவது போல பார்த்தாள், உடன் மித்ரனையும். அவனோ இவளைக் கண்டுக்கொள்ளாது “லவ் யூ ஷிவானி” என்று சொல்லிட அவளின் கோபம் கரைகடந்தது.
கையில் இருந்த கைப்பையை தூக்கி தூர வீசினாள் கோபத்தில். “என்னாச்சு மேடம் உங்களுக்கு??” என்றான் அவன் கூலாக.
“அளவுக்கு மீறி போயிட்டு இருக்கு” என்றாள்.
“எது??”
“நீங்க பண்ணுறது??”
“அதை பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க?? அதைப்பத்தி என்னோட வுட்பி கவலைப்படுவா ஓகேவா…”
“அவங்க எங்க இருக்காங்க??”
“கொஞ்சம் முன்னாடி போனாலே…” என்று அவன் முடிப்பதற்குள் “என்னது அவளா??” என்று முகம் சுளித்தாள் இவள்.
அங்கிருந்த செக்யூரிட்டி அவள் தூக்கி எறிந்த கைப்பையை பவ்வியமாய் கொண்டு வந்து அவள் கையில் கொடுக்க கொஞ்சம் அதிகமாக தான் ரியாக்ட் செய்துவிட்டோம் என்று உணர்ந்து சற்று அமைதியானாள்.
“அவளோட சிஸ்டரை தான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன் அவ பேரு காஜல்” என்று அலுங்காமல் குலுங்காமல் குண்டை தூக்கிப் போட்டான் அவளிடம்.
ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவள் “போகலாம்” என்றாள். அவளுக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருந்தது.
‘என் விஷ்வா இப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. ஹிஸ் மை மேன்’ என்று சொல்லிக் கொண்டாள்.