Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 29 2

‘சரி சகு போன் க்கு கூப்பிடலாம்!’ என்று நினைத்தவனுக்கு அவள் புது நம்பர் மாற்றிய பின், நம்பர் வாங்காதது நினைவு வந்தது.

     ‘அய்யோ!!” என்றிருந்தது அவனுக்கு! ‘பார்வதிக்கு என்னவாயிற்றோ?!’ என்று எண்ணியவனின் மனம் மிகுத்த வேதனை கொண்டது. ஆனால் அவனுக்குத் தெரியாதே அவன் பாரு, அவள் வீட்டிலேயேதான் அடைபட்டுக் கிடக்கிறாள் என்று!

     ரஞ்சன் அங்கு வந்தது அவளுக்குத் தெரியவில்லை என்றாலும், அவனை எப்போதும் பின் தொடரும் அவள் அப்பாவினுடைய ஆட்கள் மூலம் அவள் தந்தைக்கு விவரம் தெரிந்துவிட்டது.

     “அவன் வருவான்னு நான் எதிர்பார்த்தேன். அதான் வீட்டை வெளியே பூட்டி இருக்கும் படி வாட்ச்மேன் கிட்ட சொல்லியிருந்தேன்!” என்றார் அவர்களிடம்.



Advertisement

     “அவனை போட்டுடட்டுமா சார்..?” என்று அவர்கள் கேட்க,

     “இல்ல! பாரு கல்யாணம் முடிந்த பிறகு பார்த்துக்கலாம்! அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க!” என்று வைத்துவிட்டார்.

     ஆனால் அன்று மாலை பாரு எடுத்த முடிவினால், அவர் அதை உடனே செயல் படுத்த முடிவெடுத்தார்.

Advertisement

     எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த பார்வதிக்கு, ஓர் யோசனை தோன்ற தங்கள் ஸ்டோர் ரூமிற்குச் சென்று, தன் தாய்க்குத் தெரியாமல் சிறு ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து வந்து தன் அறையின் ஜன்னல் கிரில்களில் உள்ள ஸ்க்ரூக்களில் இரண்டை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைத்தையும் கழட்டி எடுத்து வைத்துக் கொண்டாள்.

Advertisement

     இரவு அனைவரும் உறங்கிய பின், ஸ்க்ரூக்களை முழுதாக அகற்றி க்ரில்லை எடுத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியே குதித்தாள்.

     முன்புறம் வாட்ச்மேனும், ஒரு அடியாளும் இருப்பதைக் கண்டு, பின் வழியாகத் தப்பித்துச் செல்ல நினைத்து, பின் புறம் விரைந்தாள்.

     சரியாக அவள் காம்பவுண்ட் சுவர் ஏறி எகிறக் குதிக்க இருந்த சமயம், அந்த அடியாள் இயற்கை உபாதை நிமித்தம், பின் புறம் இருந்த பாத்ரூமிற்கு வர, வசமாய் அவன் கண்ணில் சிக்கினாள்.

Advertisement

     அவனைப் பார்த்த பதட்டத்தில் பாரு நிதானமிழந்து குதிக்க, நிலை தடுமாறி கீழே விழுந்தாள். எனினும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, எழுந்து ஓடினாள். ஆனால் காலில் அடி பட்டு விட்டதால் அவளால் வெகு விரைவாக ஓடமுடியவில்லை.

     அதற்குள் அவன் வெகு விரைவாகச் செயல்பட்டு, வாட்ச்மேனை சத்தமிட்டு அழைத்தபடியே அவனும் மறுபுறம் ஏறிக் குதித்து, அவளைத் துரத்திப் பிடித்தும் விட்டான்.

     பாருவின் இந்தச் செயலினால் ரவீந்தர், மிகுந்த கோபம் கொண்டாலும், அவளை தண்டிக்கவில்லை!

     ஆனால் மறுநாள் காலை, பாருவை தன்னுடன் காரில் எங்கோ அழைத்துச் சென்றார்.

     சிறிது தூரம் சென்றதும், ஒரு சாலையில் அவர்கள் கார் முன்னே வேறொரு கார் செல்ல, அதன் முன் ரஞ்சன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தான்.   

     ரஞ்சனைக் கண்டதும் அவள் முகம் அடைந்த பிரகாசம் ரவீந்தருக்கு மிகுந்த எரிச்சலைத் தோற்றுவிக்க, யாருக்கோ போன் செய்து, “அடிச்சித் தூக்குங்கடா அவனை!” என்று ஆணையிட்டார்.

     அதுவரை மிதமான வேகத்தில் தங்கள் முன்னே சென்று கொண்டிருந்த கார் மிக வேகமெடுத்து ரஞ்சனை நெருங்க, ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என உணர்ந்த பாரு, “பப்பா… ப்ளீஸ் அவரை ஒண்ணு செய்துடாதீங்க!!” என்று மன்றாடினாள்.

     ஆனால், அந்தக் கார் ரஞ்சனின் பைக்கை மோதிய பின்னேயே நின்றது. கார் இடித்த வேகத்தில் ரஞ்சனின் வண்டி தடுமாற, அவனும் கீழே விழுந்தான்.

     அதைப் பார்த்த பாரு, “ரஞ்சி…..!” என்று அலற,

     “ஷ்!!! உயிர் போற அளவுக்கு அடிபட்டிருக்காது! சும்மா லேசாதான் தட்டச் சொன்னேன்!” என்ற ரவீந்தர் இப்போது அவள் கண்ணுக்கு தந்தையாக அல்ல, எமனின் உருவாய்த் தெரிந்தார்.

    அவள் கதவைத் திறந்து கொண்டு ஓட பார்க்க, கதவு லாக் செய்யப் பட்டிருந்ததால் அது திறக்கவில்லை. எனினும் தன் முழுபலத்தையும் கொண்டு, “ரஞ்சி… ரஞ்சி…!!” என்று அழுதபடியே அவள் அதை உடைக்கும் அளவிற்கு உலுக்க, ரவீந்தர், அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டு,

     “அவன் சாகணும்னு முடிவு பண்ணிட்டியான இங்கிருந்து போ!” என்றார் உறுமலுடன்.

     “நான் வேற ஒருத்தரைக் கல்யாணம் செய்துக்கணும்னு தானே அவரைக் கொல்லப் பார்க்கறீங்க? ஒருவேளை நானே செத்துட்டா?!” என்று கைப்பிடியை உடைக்கும் முயற்சியைக் கைவிடாமல் அவள் கேட்க,

     “ம்! நீயே செத்த பிறகு அவனை உயிரோடு விடுவோமா என்ன?!” என்றார் ரவீந்தர்.

     அதைக் கேட்டவள் முயற்சி அப்படியே நின்றுவிட்டது. “அப்போ நான் செத்தாலும் என் ரஞ்சியை விட மாட்டிங்க?!” என்று அவள் கேட்க,

     “அப்படி ஒரு தப்பை நினைச்சிக் கூடப் பார்க்காத! நான் சொல்றத கேட்டு நடந்தா உனக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது. இல்லன்னா அவன் பிணத்தைதான் நீ பார்ப்ப..!” என்று அவர் சொல்ல, சோர்ந்து போன அவள் மனம் வேறு வழியின்றி தோல்வியைத் தழுவியது.

     அவன் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து, “ரஞ்சி… ரஞ்சி…!” என்று அவனையே அரற்றிக் கொண்டிருந்த மனம் அவனுக்காகவே அவன் காதலை துறக்க முடிவெடுத்தது.

     தன்னை உயிராய் நினைத்தவனின் உயிர், இம்மண்ணுலகை விட்டுப் பிரியக்கூடாது என்று நினைத்தவள், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “என்ன செய்யனும்?!” என்றாள் ரஞ்சன் மற்றவர்களின் உதவியால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதை வெறித்தபடியே!

     ரஞ்சன் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்த இரண்டாவது நாள், கடைசியாக ஒருமுறை ரஞ்சனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று தன் தந்தையின் காலில் விழுந்து கெஞ்சி சம்மதம் பெற்ற பார்வதி, தன் திருமண அழைப்பிதழுடன் அவனைப் பார்க்கச் சென்றாள்.

    தலை, கால், கை என்று ஆங்காங்கே சிராய்ப்புடன் படுத்திருந்தவனைப் பார்த்தவளின் நெஞ்சில் ரத்தம் கசிந்தது. ‘அய்யோ என்னால்தானே!!’ என்று மனம் கதறியது.

     வாசலிலயே அவளை வெறித்தபடி நின்றிருந்தவளின், நிழல் ரஞ்சனின் கண்ணில் பட, அவள் புறம் பார்வையைத் திருப்பியவன், பாரு என்று அறிந்ததும்,

     “பாரு…??!!” என்று காதலும், ஆச்சரியமும் தேக்கிய குரலில் விளித்தபடி, அவளை நோக்கி எழுந்து வர முயன்றான். ஆனால் காலில் ஏற்பட்டிருந்த காயத்தால் அவனால் சரியாக நடக்க முடியவில்லை. அவன் தடுமாறுவதைக் கண்டு தன் நிலை மறந்து, சுற்றிலும் தன் தந்தையின் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து,

     “ரஞ்சி…!!!!” என்று ஓடிப் போய் பாரு அவனைத் தாங்கிக் கொள்ள, அவள்  கையிலிருந்த அழைப்பிதழ் கீழே விழுந்தது.

    “பாரு… என்னாச்சு டா… ஏன்டா ரெண்டு நாளா போனே எடுக்கலை?! காலேஜிக்கு போய் பார்த்தா.. அங்கேயும் நீ வரலைன்னு சொன்னாங்க! உங்க வீட்டுக்கு வந்து பார்த்தேன், வீடும் பூட்டியிருந்தது! எங்க பாரு போன?! ஏன் போன் கூட பண்ணலை!” என்றவன் குரலில் தெரிந்த அன்பும், பதட்டமும் அவள் உயிரை உலுக்கியது.

     பதிலேதும் சொல்லாமல், அவனைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்று படுக்கையில் அமரவைத்தவள், “எப்படி இருக்கீங்க ரஞ்சி…??!!” என்றாள்.  அவ்வார்த்தைகளில் ஜீவனே இல்லை. அவள் ஜீவன்தான் அவளைவிட்டுப் பிரிக்கப்பட்டுவிட்டதே!       

     “அட இது ஒண்ணுமில்லமா சாதரண அடிதான்!” என்றவன், “உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?!” என்று அவள் நலனையே கருத்தில் வைத்துக் கேட்க, அவள் மனம் சுக்கு நூறாய் உடைந்தது.

     அவன் கேள்விக்கு எந்த பதிலும் கொடுக்காமல், கீழே வீழ்ந்திருந்த தன் திருமண அழைப்பிதழை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

     “என்ன இது? யாருக்குக் கல்யாணம் என்று கேட்டுக் கொண்டே அழைப்பிதழில் கண்களைச் செலுத்தியவன், அவளின் பெயரை அழைப்பிதழில் பார்த்ததும் அதிர்ந்து போனான். 

     “எ என்ன பாரு இது???!!!” என்று அவன் கேட்க,

     “அடுத்த வாரம் எனக்குக் கல்யாணம்!” என்றாள் தன் மனதைக் கல்லாக்கி.

     “நம்பிட்டேன்!” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

     “உண்மை ரஞ்சி..!” என்றாள் அவள்.

     “விளையாடாத பாரு…!” என்றவன் மனம் முற்றிலும் அவள் வார்த்தையை ஏற்க மறுத்தது.

     “சத்தியம்!” என்றாள் அவள்.

    அதுவரை கொஞ்சமும் நம்பாமல் இருந்தவனுக்கு சற்றே உறுத்தல் ஏற்பட, அவள் சத்தியம் என்றதும், வேகமாய்ப் பத்திரிக்கையைப் பிரித்துப் படித்தான். அதில் அச்சிடப்பட்டிருந்த வார்த்தைகள் அவன் இதயத்தைத் துளைத்தன. அவன் பெயர் இருந்திருக்க வேண்டிய இடத்தில யாரோ ஒருவனது பெயர்.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!