Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 29 3

சில நிமிடங்கள் அவன் அப்படியே உறைந்திருக்க, “என் அப்பா அம்மாவை மீறி என்னால எதுவும் பண்ண முடியலை!” என்றாள் பார்வதி தலை தாழ்த்தி.

     அதைக் கேட்டு கோபம் கொண்ட ரஞ்சன், “உன் அப்பா, அம்மாவைக் கேட்டுக் கிட்டாடி என்னைக் காதலிச்ச?!” என்று ஒரு நொடி தன்னை மறந்து கத்தினான். பின் சற்றே தணிந்து வந்து,

     “பாரு… இங்க பார்! உன்னை ஏதாவது மிரட்டினாங்களா?! சொல்லு நான் பார்த்துக்கறேன்! இப்பவே நாம ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிடலாம்! எங்க தாத்தகிட்ட சொன்னா அவர் எல்லாத்தையும் பார்த்துக்குவார்!” என்றான்.

     “இதுதான்! இதுதான் ரஞ்சி… உன்கிட்ட இருக்க பிரச்சனை! உன்னால சுயமா எதையும் செயல் படுத்த முடியாது!



Advertisement

     எங்க வீட்ல இந்தக் கல்யாணத்தைப் பத்தி சொன்னப்போ, நான் நம்ம காதலைச் சொன்னேன்! நீ என்ன பண்றன்னு கேட்டாங்க. நான் உன் குடும்பத்தைப் பத்தி சொன்னேன். உங்க தாத்தாவைப் பத்தி சொன்னேன். நீ இங்க பார்த்துகிட்டு இருக்கிற வேலையையும் சொன்னேன்! அதுக்கு என்ன சொன்னங்க தெரியுமா?!”

     “உன் தாத்தா தன்னோட அறுபது வயசில சம்பாதிச்ச சொத்தோட மதிப்பை எனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை தன்னோட இருபத்தியெட்டு வயசில சம்பாதிச்சிருக்கார்ன்னு சொன்னாங்க! அதுமட்டும் இல்ல, உனக்கு தனிப்பட்ட முறையில எவ்வளவு சொத்து இருக்குன்னு என்கிட்டே கேட்டாங்க.

     நான் என்ன சொல்றது?! நீ மாசாமாசம் வாங்குற ஏழுபதாயிரம் ரூபாய் சம்பளத்தையும், பிரெண்ட்ஸ், வீண் செலவுன்னு அழிச்சிட்டு மிச்ச செலவுக்கு உங்க தாத்தாவை எதிர்பார்த்து நிக்கறன்னா?!” என்று அவள் பேசப் பேச, அவன் பேச மறந்து நின்றான்.

Advertisement

     ‘என் பாருவா?! என் பாருவா?! இப்படியெல்லாம் பேசுறது?!’ என்று அவளையே உறுத்து பார்த்தவனின் விழி வீச்சைத் தாங்க முடியாமல் கண்களைத் தாழ்த்தியவள், தன் உணர்ச்சிகளை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு வந்து, அவனை நேருக்கு நேர் நோக்கி,

Advertisement

     “உனக்கு இப்போ ஒரு உண்மைய சொல்லட்டுமா? உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சதே நீ பணக்கார வீட்டுப் பையன்னு தெரிஞ்ச பிறகுதான்!” என்று அவள் சொல்ல, அவன் விழிகள் அவளைக் கூறு போட்டன.

     கண் மூடி அதைச் சகித்தவள், “ஏன்னா என் அப்பா வீட்ல ரொம்ப வசதியான வாழ்க்கையை வாழ்ந்த நான், புகுந்த வீட்லயும் அதே மாதிரி வாழணும்னு ஆசைபட்டேன்! நீ என்னை உருகி உருகி காதலிச்சதைப் பார்க்கும் போது எனக்கும் உன்மேல ஒரு ஈர்ப்பு வந்தது. அதான், நீயும் பணக்கார வீட்டுப் பையன் தானேன்னு சம்மதம் சொல்லிட்டேன்!

     ஆனா அதுக்கப்புறம்தான் நீ உங்க வீட்டை மதிக்காம இங்க வந்து தங்கியிருக்கிறதும், உனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும் இருக்கிறதும், தெரிஞ்சது. உங்க தாத்தா சொத்துல மூணு பேருக்கு உரிமைன்னு தெரிஞ்சதுமே கொஞ்சம் எரிச்சல் வந்தது. ஆனா நீ என் மேல வைச்சிருந்த அன்பை வச்சி, உங்க தாத்தாவோட கடையையாவது உன் பேர்ல மாத்தி எழுதித் தரவைச்சு உன்னை எங்க வீட்டோட மாப்பிளையா வைச்சிச்கிட்டா.. நீயும் என் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பன்னு நினைச்சேன்! பட் இப்போ.. என் பப்பா இந்த சம்மந்தம் பத்தி எடுத்துச் சொன்னதும், ரொம்ப யோசிச்சேன், ரெண்டு நாள் முழுக்க யோசிச்சேன்! எவ்வளவு யோசிச்சாலும், பப்பா சொன்னதுதான் சரின்னு தோணுச்சு! அதான் சம்மதம் சொல்லிட்டேன்” என்று அவள் நிறுத்த,    

Advertisement

     “ம்ம்! ரெண்டே நாள்ல உன் மனச மாத்திக்கிட்டியா பாரு?!” என்று அவன் உடைந்து போய்க் கேட்க, அவள் கண்கள் நீரில் நிறையத் துடித்தது.

     ‘ரெண்டு நாள் இல்ல ரஞ்சி… ரெண்டே நொடியில மனச மாத்திக்கிட்டேன்! உன் மரணத்தை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தின ரெண்டே நொடியில!’ என்று அவள் உள்ளம் சொல்லத் துடித்ததை அடக்கி,

     “எனக்கு டைம் ஆகிடுச்சு! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு! கடைசியா உன்னை பார்த்து, என் கல்யாணத்துல எந்தப் பிரச்சினையும் பண்ணிடாதன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்! பை!” என்று கிளம்ப எத்தனித்தவள், ஒரு நொடி நின்று அவன் புறம் திரும்பி,

     “பணத்துக்காக உன் வாழ்க்கையில வந்த நான், பணத்துக்காகவே உன் வாழ்க்கையை விட்டுப் போறேன்! குட் பை!” என்று சொல்லிவிட்டு வெளியேறியவளின் உள்ளம் அனலிலிட்டப் புழுவாய்த் துடித்தது.

     அவள் செல்வதையே சிலை போல் நின்று வெறித்திருந்தவன் மனம், நடந்த எதுவும் உண்மையாக இருக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப எண்ணியது.

     அவள் சென்றதும் அவன் அறையின் வாஷ் ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த பணியாளும் வெளியேறினான். அதாவது பணியாள் உருவத்திலிருந்த ரவீந்தரின் அடியாள்.

     அன்று பார்த்ததுதான் ரஞ்சியை! இன்று, இப்போது எவ்வளவு மாறிப் போயிருக்கிறான்! ரிஷி அண்ணன் சொன்னது போல் ரஞ்சியும், அவன் மனைவியும் இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்று அந்தப் பேதை மனம் இறைவனிடம் வேண்டியது.  வெகு நேரம் கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அந்த நிறைமாத கர்ப்பிணி, தன்னையறியாமல் விடியற்காலையில் உறக்கத்தைத் தழுவினாள்.

     இங்கு ரஞ்சன் தான் கொட்டிய வார்த்தைகளின் வீரியத்தை எண்ணி எண்ணி மனம் நொந்து கொண்டிருக்க, அவ்வார்த்தைகளால் தாக்குண்டவளோ, அதன் வலி தாங்காமல், துடித்துக் கொண்டிருந்தாள்.

     நெடு நேரம் அவளிடம் கெஞ்சிப் பார்த்தவன், “தயவு செய்து என்னைத் தனியா விடுறியா?!” என்று அவள் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்க, அவன் ஏதும் பேசாமல் அவளுக்குத் தனிமை கொடுத்துவிட்டு எழுந்து போய் சற்றுத் தொலைவில் அமர்ந்து கொண்டான்.

     “எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, இப்போதுதான் எங்கள் வாழ்வில் இன்பம் மலர்ந்தது. அதையும் எனது முட்டாள்தனத்தால் இப்படிச் சிதைத்துவிட்டேனே!” என்று வேதனை கொண்ட ரஞ்சன், வாயிற்கதவின் மேல் சாய்ந்து விட்டத்தையே வெறித்திருந்த தன் ஜீவனை கண்டு மேலும் துவண்டு போனான்.

     மணாளனின் வார்த்தைகளை எண்ணி எண்ணி அவள் வெறுப்பையும், மனையாளின் மறுகலை எண்ணி எண்ணி அவன் வேதனையையும்  வளர்த்துக் கொள்ள, அன்றைய இரவு இருவருக்கும் உறங்காப் பொழுதாய் முடிந்தது.

     விடியற்காலையில் அவள் அருகே எழுந்து சென்ற ரஞ்சன், “கொஞ்ச நேரமாவது தூங்கும்மா… ரொம்ப சோர்வாயிருக்க!” என அக்கறையுடன் சொல்ல, அவள் பார்வையின் வீச்சு அவனைப் ‘போ!’ என்று சொல்லாமல் சொல்லியது.

     பொழுது விடிந்ததும் வீட்டில் அனைவரும் எழுந்துவிட்ட அரவம் கேட்க, ரஞ்சன் எழுந்து அவளருகே வந்து, “நிலாம்மா… நான் சொன்னது தப்புதான் அதுக்காக என்னை என்ன வேணா திட்டு, இப்படி பேசாம அமைதியா இருந்து என்னைக் கொல்லாத!” என்று அவன் கெஞ்ச,

     “ம்! கொல்றதா நானா உன்னையா?! அதான் வார்த்தையால் நேத்தே என்னைக் குத்திக் கொன்னுட்டியே! யாரோ ஒருத்தி உன் வாழ்க்கையில பணத்துக்காக வந்து போனாங்கிறதுக்காக, என்னையும் அதே மாதிரி நினைச்சிட்டயில்ல…?!” என்று அவள் கேட்க,

     “இல்ல இல்ல… நிலா…!” என்று அவன் தன் மனதை உணர்த்திவிட முயல, அவள் கை உயர்த்தி அவன் சொல்ல வருவதைத் தடுத்துவிட்டு,

     “எல்லோரும் எழுந்துட்டாங்க! இனி பழையபடி நம்ம நாடக வாழ்க்கையை ஆரம்பிப்போம்!” என்று சொல்லிவிட்டு எழப் போனாள்.

     ஆம் எழப் போனாள்! ஆனால் அவளால் எழ முடியவில்லை. தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. சில நொடிகள் கண்மூடி தன்னை ஒருநிலைப் படுத்தியவள், மறுபடியும் எழப் போக, மறுபடியும் தலை சுற்றியது!

    “என்னாச்சும்மா…?!” என்று அவன் கேட்பதை சற்றும் பொருட் படுத்தாமல்,

     ‘என்ன இது?! ராத்திரி முழுக்க தூங்காம அழுததுனால இப்படி இருக்கா?!’ என்று யோசித்தபடியே, கதவைப் பிடித்துக் கொண்டு ஒருவாறு எழுந்து நின்றாள்.

     ஆனால் அப்போதும் ஏதோ போல் இருந்தது அவளுக்கு. சமாளித்துக் கொண்டு நான்கடி எடுத்து வைத்தவளுக்கு மீண்டும் மயக்கம் வர, சற்றே தள்ளாடினாள்.

     அவள் தடுமாறுவதைக் கண்ட ரஞ்சன் ஓடிப் போய் அவளைத் தாங்கிக் கொள்ள, பட்டென அவன் கையை உதறியவள், அருகே இருந்த தண்ணீர் ஜாடியிலிருந்து தண்ணீரை ஊற்றிக் குடித்தாள்.

     குடித்ததுதான் தாமதம், உடனே வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர, தன்னைச் சமாளித்துக் கொண்டு குளியலறைக்கு ஓடினாள்.

     அவள் என்னதான் தடுத்தாலும், ரஞ்சன் அவள் பின்னே ஓட, கதவை அறைந்து சாத்தினாள் நிலா.

     அவள் செய்கையில் அவன் முகம் வாடினாலும், அவள் வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டு, அவளுக்கு என்னவாயிற்றோ என்று மனம் பதறியது.

     “நிலா… கதவைத் திற ப்ளீஸ்!” என்று அவன் தொடர்ந்து குரல் கொடுத்தும் கதவைத் திறக்காதவள், வாந்தி எடுத்து முடித்த பின் மேலும் சோர்வை உணர, முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவினாள். பின் அங்கிருந்த கைத்துண்டில் முகத்தை அழுந்தத் துடைத்தாள். நீரால் சற்று புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் உடல் சோர்வு அப்படியே இருப்பது போல் தோன்றியது அவளுக்கு!

     ‘ஏன் இப்படி…?!’ என்று யோசித்தவளுக்கு நாட்கள் தள்ளிப் போய் இருப்பது தெரிய வர, ‘குழந்தையாய் இருக்குமோ?!’ என்று எண்ணியபடி, வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். அவளால் முழுதாய் சந்தோஷப் படமுடியவில்லை, அதற்காக வருத்தப் படவும் முடியவில்லை.

     ‘அப்படி இருந்தால்?! அய்யோ என் செல்வமே! என் காதலே பொய்யாகி நிற்கும் இந்த நிலையிலா நீ என் வயிற்றில் உதிக்க வேண்டும்?!’ என்று மருகித்தான் போனாள் மலர்விழியாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!