Skip to content
Post Views: 5,793
“ ஏன் ?” ஒற்றை வார்த்தை உதிர்ப்பதற்குள் மொத்தமாய் உடைந்து கீழே அமர்ந்தாள் ஷைலஜா .
முன்பென்றால் எப்படியோ ? இந்த இரு நாட்கள் நெருக்கத்தில் அவள் மனதை நெருங்கியிருந்தான் அவன் .
“ ஏன் ? கேட்கிறது ரொம்ப சிம்பிள் ! பதில் சொல்றது கஷ்டம் ” என்றவனும் அங்கிருந்த சிறு மரத்திட்டில் அமர்ந்தான் .
ஷைலஜாவிற்கு கண்கள் உடைப்பெடுக்கவெல்லாம் இல்லை . ஆனால் , நெஞ்சே உடைந்தது போன்றதொரு வலி .
இனி வாழ்க்கை அவனோடு தான் என முடிவு செய்துவிட்டதன் ஏமாற்றமா ? என்னவோ ஒன்று ! அவள் நெஞ்சை அழுத்தி பிசைந்தது .
“ முழுசா நனைஞ்சுட்டேன் … இனி முக்காடு எதுக்கு ? எல்லாத்தையும் சொல்லிடுறேனே !” என்றவன் மொத்தமாய் சொல்ல ஆரம்பித்தான் .
“ அமைச்சர் மகனை கொன்னுட்டேன் ! எப்படியும் சும்மா விடமாட்டாங்க ! நோண்டுவாங்க ! தெரியும் எனக்கு ! அப்போதான் உன்னை கேஸ் ஆபீசரா போட்டாங்க ! உன்னை பத்தி எல்லா விஷயமும் கலக்ட் பண்ணேன் ! நீ எப்படியும் என்னை கண்டுப்பிடிச்சுடுவன்னு தோணுச்சு ! ஐ ஆல்வேஸ் பிலீவ் மை இன்ட்யூஷன்ஸ் “
“ உன்னை குழப்புறதுக்கும் சரியா வேலையை பார்க்க விடாம செய்யுறதுக்கும் விக்கியை விலைக்கு வாங்குனேன் ! நான் எதிர்ப்பார்த்த மாதிரியே மூணு மாசமும் உன்னை ஒன்னையும் கண்டுப்பிடிக்க விடாம நீ போற இடத்துல எல்லாம் கேட் போட்டான் ! ஆனாலும் நீ போற ரூட் கரெக்ட்டா இருந்துச்சு ! இப்படியே போனா மாட்டிப்போம்ன்னு ‘ ஒரு ட்ரைஆங்கிள் லவ் ஸ்டோரியை ‘ சொல்லி உன்னை குழப்ப சொன்னேன் !
பட் யூ ஆர் வெரி க்ளவர் ! சிவா யாமினியை ஒன்சைடா லவ் பண்ணிருப்பான் … மே பீ இதனால ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு செத்துருப்பாங்கன்னு விக்கி சொன்னதை நீ அக்சப்ட் பண்ணல ! ஈவன் அந்த சைட் கூட நீ போகல !
ஃபைனலி … ரொம்ப நாள் இப்படியே ஓட்ட முடியாதுன்னு புரிஞ்சு , இந்த கேஸ் என் கைக்கு வரமாதிரி ப்ளான் பண்ணேன் !
அந்த மிட்நைட் ஆள்கடத்தல் கும்பல் ! என் செட் அப் ! அவங்களை நீ புடிச்சா எப்படியும் அமைச்சர் உன்மேல கோவப்படுவாரு ! கேஸ் கை மாறும்ன்னு நினைச்சேன் ! நடந்துச்சு !
ஆனா , நானே நினைக்காத ஒன்னு … கமிஷ்னரா என்னையே இங்க அப்பாய்ன்ட் பண்ணுவாங்கன்னு ! தட் மேட் மை ஜாப் சோ ஈஸி !”
ஏதோ திரைப்படத்தின் கதையை சொல்வது போல அனாயசமாய் பேசுபவனை வெறிக்க வெறிக்க பார்த்தாள் ஷைலஜா .
“ இங்க வந்தப்போ என்னோட ப்ளான் … உன்னை இந்த கேஸ் ‘ ல மாட்டிவிட்டு நான் எஸ்கேப் ஆகணும்ங்குறது தான் ! பட் ஃபோர்ச்சுனேட்லி , எனக்கு உன்னை பிடிச்சுப்போச்சு !” என்றான் .
“ நீ வேணும்ன்னு தோனுச்சு ! அதான் ப்ளான் ‘ பி ‘ போயிட்டேன் ! அதுப்படி , விக்கியை எல்லார் கண்ணுலையும் சஸ்பெக்ட் ‘ டாக்கி கேஸ் முடிக்கிறது .
அவனுக்கு ஒரு லம்ப் அமவுண்ட் குடுக்குறேன்னு சொன்னேன் ! ஒத்துக்கிட்டான் !
கொஞ்ச நாள் யார் கண்ணுலையும் படாம ஒதுங்கி இருடான்னா கம்முனாட்டி … உன் கண்ணுல சிக்கிட்டான் !” பல்லைக்கடித்து உக்கிரமாய் சொன்னான் .
அவள் அப்படியே பார்த்துக்கொண்டே இருக்க , அந்த பார்வை அவனை பாதித்தது போலும் .
“ ஷைலுமா ! ஆரம்பத்துல நான் பண்ற தகிடுதத்தம் உன் கவனத்துல வரக்கூடாதுன்னு தான் உன்னை ரொம்ப டீஸ் பண்ணேன் ! இர்ரிடேட் பண்ணேன் ! ஈவன் , நான் உன் மாமா பையங்குற மாதிரி உன்னை யோசிக்கக்கூட வச்சு டிஸ்டிராக்ட் பண்ணேன் ! ஆனா , போக போக எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு ! புரிஞ்சுக்கோடா !” என்றான் அவள் முன்னே அமர்ந்து .
அவன் கண்களில் பொய் இல்லை ! கள்ளம் உரைப்பவன் போல இல்லை ! ஆனால் , இப்படியே பேசி பேசி தானே இத்தனை நாளும் தன்னை முட்டாளாக்கி இருக்கிறான் !
“ இன்னும் எதெல்லாம் உங்க திட்டத்துல நடந்துச்சு !?” விரக்தியுடன் கேட்டாள் .
“ எல்லாமே ! இதுவரை என்ன எல்லாம் நடந்துச்சோ … அது எல்லாமே !!!”
“ எல்லாமே ‘ ன்னா ? ஹாஸ்பிடல்ல அந்த பொண்ணு ?”
“ நான்தான் … பாக்க போனப்போ பிரேஸியிலியன் வாண்டரிங் ஸ்பைடரை பெட் ல போட்டுட்டு வந்தேன் “
“ ஹெல்மெட் ?”
“ விக்கி மேல சந்தேகம் வரனும்ன்னு செஞ்சேன் …”
“ நம்மளை கொல்ல வந்தது ?!”
“ எல்லாம் நான்தான் … இன்னும் உனக்கு என்ன எல்லாம் சந்தேகம் வருதோ அது எல்லாத்துக்கும் நான் தான் காரணம் ” முற்றாய் முடித்தான் .
“ ஏன் ?” அயர்ந்துப்போனது அவள் மனது .
“ ஏன்னா ? சொல்லிட்டேனே எல்லாம் … இன்னும் என்ன ?”
“ ப்ச் ! எதுக்காக இதெல்லாம் ?”
“ ஓ ! அப்படி கேட்குறியா ?” என்றவன் ,
“ பணம் !” என்றான் ஒற்றை சொல்லாய் .
“ பணமா ? கேவலம் பணத்துக்காகவா ? மூணு உயிரை கூட எடுக்குற அளவு அப்படி என்ன பணத்து மேல ஆசை ? என்ன இல்ல உங்கக்கிட்ட ? இவ்ளோ நல்ல வேலை .. கை நிறைய சம்பளம் … போதாதா ?” அவள் ஆத்திரமாய்க் கேட்க , அவளை விட ஆத்திரத்துடன் கத்தினான் அவன் …
“ போதா ….. து ” அவன் குரல் அந்த அந்தகாரத்தில் அலறியது .
“ போதாது … போதவே போதாது !” என்றவன் , “ என்ன சொன்ன ? கேவலம் பணமா ? ஹும் … உனக்கென்னமா அப்பா அம்மா வலுவா சேர்த்து வச்சுட்டு போய்ட்டாங்க ! நோகாம வளர்ந்துட்ட !
ஆனா , நான் …!?
எந்த பணத்தை கேவலம்ன்னு சொல்றியோ அதே பணத்துக்காக என் கண்ணு முன்னாடியே என் அப்பா அம்மாவை வெட்டி கொன்னானுங்க ! அப்ப எனக்கு வயசு வெறும் பதினொன்னு !
வாழ்க்கை பணம் இல்லன்னா ரொம்ப ஈசின்னு நினைச்சியா என்ன ? சாவனும் … நாலு காசு கைல இல்லன்னா சாவனும் ! உயிரோட மட்டும் இருக்கக்கூடாது !
பதினொரு வயசுல சொந்தம்ன்னு இருந்த பெத்தவங்க ரெண்டு பேரையும் இழந்துட்டு , நடுரோட்டுல நான் நின்னப்போ இந்தா நாலு கான்னு எவனும் குடுக்கல ! உனக்கு பசிக்குதா சாப்பிடுறியான்னு ஒருத்தனும் கேட்கல !
ஹோட்டல் வாசல்ல காய்ஞ்சி போய் கிடந்த வயிரோட எத்தனை நாள் நின்னுருக்கேன் தெரியுமா ? எச்சி இலையாவது கிடைக்காதான்னு திங்குறவன் முகத்தை எல்லாம் பார்ப்பேன் ! ஒரு அரை இட்லி மிச்சம் வச்சா போதுமேன்னு ஏங்குவேன் ! கெட்டுபோன சாப்பாடு கிடைச்சா கூட பரவாலன்னு எத்தனையோ நாள் நினைச்சுருக்கேன் !
ஒரு டீ குடிக்க நினைச்சா கூட ரெண்டு ரூவா இருக்கான்னு கேட்பான் என்னை பார்த்ததும் ! இல்லன்னு சொல்லிட்டா போதும் , அடிக்காத குறையா துரத்துவானுங்க !
பசி … பசி … பசி …! அந்த வயசுல பசி மட்டும் தான் ! பசி போகணும்ன்னா சாப்பிடனும் … அந்த சாப்பாட்டுக்கு பணம் வேணும் ! அப்போ முடிவு பண்ணேன் ! என் பதிமூணு வயசுல முடிவு பண்ணேன் ! பணம் தான் என் வாழ்க்கையோட அல்டிமேட் ‘ கோல் ‘!
அப்போ எனக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு இருந்தா வேலை கிடைக்கும் … வேலை கிடைச்சா பணம் கிடைக்கும் ! இதான் !!! என்னை நானே இந்த அளவு உயர்த்திக்க எவ்ளோ சிரமப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும் !
இப்போ என்னோட பிளாஷ்பேக் ‘ எல்லாம் கண்ணீர் வழிய நான் சொல்லிட்டா மட்டும் நான் செஞ்சதெல்லாம் சரின்னு ஆகிடாது ! சோ , நான் பழசி எல்லாம் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ண விரும்பல !” என்றவன் , மேற்கொண்டு போனான் .
“ எப்படியோ கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சு வேலையை வாங்கி , ஒரு இடத்துல வந்து நின்னுட்டு , ‘ சாதிச்சுட்டோம் ‘ ன்னு திரும்பி பார்க்குறேன் … பத்தவே இல்ல !!! எனக்கு போதல ! இன்னும் வேணும் .. இது பத்தலைன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் சொல்லிட்டே இருந்துச்சு !
சரி என்ன செய்யலாம்ன்னு நானும் பல வருஷமா யோசிச்சுட்டே இருக்கும்போது தான் என் காதுக்கு ஒரு விஷயம் வந்துச்சு !
கட்சி பணத்தை தானே திருடி மறைச்சு வச்சுட்டு அது களவு போச்சுன்னு இந்த அமைச்சர் நாடகமாடுறதா !!! அமைச்சரோட அல்லக்கை மூலமா இது தெரிஞ்சுது !
ப்ளான் போட்டேன் ! தூக்கிட்டேன் !”
சொல்லி முடித்தான் அவன் .
“ இதெல்லாம் தப்பு இல்லையா ரகு ?”
“ நான் எப்போ சரின்னு சொன்னேன் ?” உடனே கேட்டான் .
“ தப்பு தான் … நான் செஞ்சது தப்பு தான் ! ஆனா , யாரு தான் தப்பு செய்யல ?” என்றவன் ,
“ மக்களோட வரிபணத்தை கட்சி பணமா மாத்துன அந்த அரசியல்வாதிங்க மேல தப்பு இல்லையா ?
கட்சி பணத்தை திருடி மறைச்சு வச்சு , தான் மட்டுமே அனுபவிக்கனும்ன்னு நினைச்ச மினிஸ்டர் மேல தப்பு இல்லையா ?
மினிஸ்டர் திருடலாம் ! போலிஸ் திருடக்கூடாது ? அப்படியா ஷைலு ?” என்று கேட்டவனிடம் பதில் அற்றுப்போனாள் ஷைலஜா .
“ நான் எவன் வயித்துலயும் அடிக்கல ! எவன் உழைச்சு சம்பாதிச்சதையும் திருடல ! மிதமிஞ்சி கிடக்குற இடத்துல இருந்து கொஞ்சமா கிள்ளி எடுத்தேன் ! என்னை பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை !” என்றான் நிர்தாட்சண்யமாய் .
“ பணத்தை விடுங்க ! அந்த மூணு பேர் ? அவங்க உயிர் ? அது கூட பெருசு இல்லையா ?”
“ அது என் மிஸ்டேக் இல்ல ஷைலுமா ! நான் வார்னிங் கொடுத்தேன் ! அவங்க கேட்கல ! என் முகத்தை பார்த்த பிறகு அவங்களை விட்டு வச்சா அது என் முட்டாள்த்தனம் !” என்றான் வெகு இயல்பாய் .
தலையை தாங்கிக்கொண்டு அமர்ந்தவள் , “ என்னால இதை ஜீரணிக்கவே முடியல ரகு !” என்றாள் .
“ எனக்கு தெரியும் நீ ரொம்ப நியாயவாதின்னு ! அதனால தான் உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்ன்னு இருந்தேன் ! எல்லாத்தையும் பக்காவா செஞ்ச நான் , அசிங்கமா இந்த மோதிரத்துல மாட்டிக்கிட்டேன் ! ஆசை யாரை விட்டுச்சு !” தன்னைத்தானே திட்டிக்கொண்டான் .
ஷைலஜா அப்படியே மரம் போல இருக்க ,
“ ஷைலு … ஒரு பிரச்சனையும் இல்ல ! நீ இங்க நடந்த எல்லாத்தையும் மறந்துடு ! கேஸ் முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் ! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ! லைஃப்ல இனி எப்பவும் உனக்கு பிடிக்காதது எதுவுமே செய்யமாட்டேன் … ஐ ப்ராமிஸ் யூ !” என்றான் .
நிமிர்ந்துப்பார்த்தாள் அவனை .
தீவிரமான முக பாவனையில் அவள் பதிலை எதிர்க்கொண்டு காத்திருப்பவனை பார்த்து ,
“ ரகு … வேண்டாம் ரகு ! இது எதுவும் வேண்டாம் ! சரண்டர் ஆகிடுங்க ” என்று சொல்ல அவன் உடல் விறைத்தது .
“ செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிங்க ! பத்து வருஷமோ , இருபது வருஷமோ … வெளில வந்து நிம்மதியா இருக்கலாம் ! நான் உங்களுக்காக காத்திருக்கேன் ரகு !” இறைஞ்சலாய் அவன் கரம் பற்ற , வெடுக்கென தட்டிவிட்டு எழுந்தவன் ,
“ லூசா நீ ? எவ்ளோ பெரிய விஷயம் இது ! அசால்ட்டா சரண்டர் ஆகுங்குற ? ஜெயில்ல கம்பி எண்ணத்தான் இவ்ளோ கஷ்டப்பட்டேனா நான் ? இல்ல , நான் தான் கொலையாளின்னு தெரிஞ்சா அந்த அமைச்சர் தான் சும்மா இருப்பானா ? உள்ளே போன மறுநாளே ஆளை விட்டு போட்டு தள்ளிடுவான் என்னை !” என்றான் காட்டமாய் .
“ இல்ல ரகு ! நான் உங்களை சேஃப் ‘ பா பாத்துக்குறேன் !” அவசரமாய் சொல்ல , “ புடுங்குவ !” என்று ஆவேசமானான் அவன் .
“ ரகு … சொன்னா கேளுங்க ! காலம் முழுக்க குற்றவுணர்வோட வாழ முடியாது !”
“ எனக்கு குற்றவுணர்வு இருக்குன்னு நான் எப்போ சொன்னேன் ?”
“ என்னால முடியாது ரகு !!! ஒரு போலீசா இருந்துக்கிட்டு இவ்ளோ பெரிய தப்பு செஞ்சவனை என்னால ஏத்துக்க முடியாது !” என்றவள் ,
“ பனிஷ்மென்ட் முடிஞ்சு வாங்க ரகு ! நான் உங்களுக்காக வெயிட் பண்றேன் !” என்றாள் .
“ அய்ய ! உண்மை தெரிஞ்ச ஷாக் ‘ ல பைத்தியமாகிட்டியா நீ ?” என்றவன் ,
“ நமக்கு இப்போ என்ன இளமை ஊஞ்சலாடுதா ? நான் லேட்டர் தர்ட்டீஸ் … நீ இயர்லி தர்ட்டீஸ் ! இருவது வருஷம் ஜெயில்ல இருந்து நான் திரும்பி வந்து என்ன செய்ய சொல்ற ? மூட்டு வலிக்கு மருந்து தேக்க தான் நேரம் இருக்கும் !
முட்டி செத்தவனை கட்டிக்கிட்டு முதிர் கன்னியா இருக்கலாம்ன்னு உத்தேசமோ ?” அப்படி ஒரு எரிச்சல் அவனுக்கு .
“ லுக் ஷைலஜா ! நான் வாழ்க்கையை அனுபவிக்கனும் ! என்ஜாய் பண்ணனும்ன்னு நினைக்குறேன் ! அதுக்கு இந்த பணம் எனக்கு வேணும் ! கூட நீயும் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது ! யோசிச்சு சொல்லு !” என்றான் .
“ ரகு ! ஒய் டோன்ட் யூ கன்சிடர் மை …” அவள் கேட்க ஆரம்பிக்கும்போதே ,
“ எனஃப் ஷைலஜா ! ஒரு விஷயம் செய்ய முன்னாடி தான் யோசிக்கணும் ! செயல்ல இறங்கின பின்னாடி யோசிச்சாலோ , பேக் அடிச்சாலோ அது நமக்கே ரிட்டன் ஆகிடும் !
என் விஷயமும் அதுமாதிரி தான் !
என்னால பேக் அடிக்க முடியாது ! பணம் வேனுங்குறதை விட , செஞ்ச தப்பு வெளில தெரிஞ்சுட்டா என் உயிருக்கே உத்திரவாதம் இல்லை ! சோ , ஐ ஸ்டிக் டு மை பாயின்ட் !” என்றான் பேச்சு முடிந்ததை போல கைகளை மேல உயர்த்திக்கொண்டு .
அதுவரை உணர்ச்சி வேகத்தில் இருந்தவள் சற்றே தெளிந்தாள் .
“ எனக்கு வேற ஆப்ஷன் இல்லை ரகு !” என்றவள் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுக்க , அவசரமாய் அதை பறித்தவன் ,
“ நோ .. நோ !” என்றான் .
“ ஐ ஹேவ் டு !”
“ தப்பு பண்ற ஷைலஜா ! உனக்கு ஓகேன்னா என் கூட வா ! இல்லனா உன் வழில போ ! அதைவிட்டுட்டு தேவையில்லாதது செய்யாத !” அவன் குரலே மாறியிருந்தது .
“ நான் என் வேலையை தான் செய்யுறேன் ! குற்றவாளியை கண்டுப்பிடிச்சு கூண்டுல ஏத்துறது தானே போலிஸ் வேலை ! கண்ணுமுன்ன நிக்குறவனை எப்படி தப்பிக்க விடுவேன் !?” என்று நிமிர்வாய் சொன்னவள் , வந்த வழியே வேக வேகமாய் ஓட ஆரம்பிக்க , இதை எதிர்ப்பாராதவன் பின்னோடு ஓடினான் .
“ ஷைலஜா வேண்டாம் !!! நில்லு !”
“ ஷைலஜா சொன்னா கேளு !!!” ஓடிக்கொண்டே கத்தினான் .
இன்னும் சில அடிகள் ஓடினாலும் தெளிந்த பாதை வந்துடும் ! அடுத்த சில அடி தூரத்தில் சாலை ! ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி !
“ நில்லு ஷைலஜா ! என்னை வேற மாதிரி யோசிக்க வைக்காத !”
அவள் காதில் வாங்காமல் ஓடினாள் .
ரகு தன் ஓட்டத்தை நிறுத்தினான் . ஒரு நொடி இறுக்கமாய் கண்மூடி தன் உணர்வுகளை அடக்கினான் , பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட , இம்முறை அதில் இருந்து வந்தது பொட்டலம் அல்ல … பிஸ்டல் !!!
முன்னே ஓடிக்கொண்டிருந்தவளை குறிவைத்தான் .
ஒன்று … இரண்டு … மூன்று …
“ டமால் !!!!!!”
அதிர வைத்த துப்பாக்கி சத்தத்தில் ஆங்காங்கே இருந்த பறவைகள் எல்லாம் படபடவென சிறகு அடித்து கூட்டமாய் விலகி பறந்தது .
அவள் பின்னங்கழுத்தில் பாய்ந்த புல்லட் கழுத்தைத் துளைத்துக்கொண்டு வெளியேற , அப்படியே தரையில் சரிந்தாள் .
சில நொடிகளில் ரத்தம் ஆறாய் பெருகியது .
அருகே சென்று நின்றான் . அவள் கண்கள் திறந்து இருந்தது .
உயிர் இழுத்துக்கொண்டிருந்தது .
மண்டியிட்டு அமர்ந்தான் .
அவன் முகம் கசங்கி போய்க்கிடந்தது .
“ ஐ லவ் யூ ஷைலுமா !!! லவ் யூ சோ மச் !” இப்படி ஒரு ப்ரோபோசல் இதுவரை எங்குமே நடந்திருக்காது !
“ உன்கிட்ட கடைசி வரைக்கும் ஹீரோவா இருக்கனும்ன்னு நினைச்சேன் ! ஹும் ! ஆன்ட்டி ஹீரோவா மாத்திட்டல்ல !” இளப்பமாய் சொன்னவன் ,
“ பான் வோயேஜ் !” என்றான் அவள் கண்களை மூடிவிட்டு !
பின்னால் எங்கிருந்தோ திபுதிபுவென ஓடிவந்தான் விக்கி . ஷைலஜாவை பார்த்துவிட்டு , “ சார் … கொன்னுட்டீங்களா ?” என்றான் பதட்டமாய் .
நின்றவனை நிமிர்ந்து பார்த்தான் . ஒரு நொடி தான் !
பின்னே மீண்டும் , “ டமால் !!!!!”
பல்லைக்கடித்துக்கொண்டு “ எல்லாம் உன்னால !” என்றவன் ,
“ என் ஷைலுவையே கொன்னுட்டேன் ! நீ எம்மாத்திரம் !” என்றதோடு ‘ உனக்கு கொடுத்த வேண்டிய பணம் மிச்சம் !’ என்று முனகிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து யாருக்கோ தகவல் கொடுக்க ,
மறுநாள் ….
‘ சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த மூவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் !
அமைச்சரின் மகன் மற்றும் உடனிருந்த இருவரிடம் இருந்தும் நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அவர்களை கொலை செய்த துணை காவல்துறை கண்காணிப்பார் ஷைலஜா மற்றும் இளநிலை ஆய்வாளர் விக்னேஸ்வரன் இருவரையும் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளினார் சென்னை மாகாண கமிஷ்னர் திரு . ரகுனந்தபூபதி !’
அவன் பேட்டி …
‘ திருடன் கைல சாவி கொடுத்தது போல கொலை செஞ்சவங்க கைல கேஸை கொடுத்து விசாரிக்க சொல்லிருக்காங்க ! நான் பொறுப்பு எடுத்ததும் கொஞ்சகொஞ்சமா எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு !
இறந்து போன ஜெகனோட குடும்ப மோதிரத்தை ஷைலஜா கைல பார்த்ததும் தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது ! நான் கேட்டப்போ எல்லா உண்மையும் ஒத்துக்கிட்டாங்க ! சரண்டர் ஆக சொன்னேன் … தப்பிச்சு ஓடப் பார்த்தாங்க ! சுட்டுட்டேன் !” என்றவன் ,
“ கூடவே அந்த விக்னேஸ்வரனும் என்னை தாக்க வந்ததால அவனையும் சுட வேண்டியதா போய்டுச்சு ” என்றான் .
‘ காவல்துறை அதிகாரியே இத்தனை பெரிய தவறை செய்ததை கண்டு பலரும் கண்டிக்கத்தக்க விவாதங்களை முன்னிறுத்தும் அதே நேரத்தில் கமிஷ்னரின் இந்த துணிகர செயல் கண்டு பலரும் தங்கள் பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர் ‘
அன்றைய இரவு நேர செய்தி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்க ,
‘ ஓ ஐ லவ் யூ ஷைலஜா … ஷைலஜா …
ஓ ஷைலு .. ஷைலு !!!’ என்ற ரிங்க்டோன் சத்தத்தில் அழைப்பை ஏற்றான் ரகுநந்த பூபதி .
மறுபுறம் அவன் கேட்டிருந்த கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்றும் வேலைகளை பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாக தகவல் வர உற்சாகமானான் !
‘ சீக்கிரமே வேலையை விட்டுட்டு வெளிநாடு ஓடிடணும் !’ என்ற நினைப்போடு விளக்கை நிறுத்திவிட்டு சோபாவில் சரிந்து விழ , காலிங் பெல் சத்தம் !
திடுக்கிட்டான் !
மணி பத்துக்கு மேல் ஆனது !
இப்போது யார் என்ற எண்ணம் எழ , கதவை திறந்தவன் அதிர்ந்தான் .
“ துர்கா ?” அவன் விளிக்க ,
அவனை பேச்சின்றி நிமிர்ந்துப்பார்த்தவளின் கைகளில் டைரி ஒன்று இருந்தது .
மறுகையில் எதையோ வைத்திருந்தாள் .
அவள் அவள் உயர்த்தும் நேரம் அது என்ன என்று அவன் உணர்வதற்குள் ….
அந்த வீட்டில் இருந்து பெரிய துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டது …!!!
@ முற்றும் @
Author note
மிஸ்டர் ராஸ்கலுக்கு தளத்திலோ அல்லது முகநூலிலோ பின்னூட்டம் தர விரும்பும் வாசகர்கள், தங்களுக்கு பின்னே புதிதாய் படிக்க வருபவர்களின் சுவாரஸ்யம் கருதி கிளைமேஸ் திருப்புமுனையை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement
error: Content is protected !!