Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 15 3

“அவர் இஷ்டப் படி இருக்கட்டும் டா. அது சரி அடுத்து நீ என்ன பண்ண போற? உனக்கு பொண்ணு பாக்கட்டுமா டா குச்சி?”

“அதெல்லாம் வேண்டாம். சும்மா இருக்கா. கொஞ்ச நாள் ஆகட்டும்”, என்றவன் மாதவன் புறம் திரும்பி “அப்புறம் மாமா வேலை எல்லாம் எப்படி போகுது?”, என்று கேட்டான்.



Advertisement

“நல்லா போகுது மாப்ள. அப்புறம் ஒரு உதவி டா”

Advertisement

“என்னன்னு சொல்லுங்க மாமா”

Advertisement

“என் அக்கா பொண்ணு ஒரு புராஜெக்ட் செய்யணும்னு சொல்லிட்டு இருந்தா. உன் கிட்ட சில டவுட் கேக்கணுமாம். வரச் சொல்லிட்டேன். உனக்கு எதுவும் கஷ்டமா?”

Advertisement

“அட என்ன மாமா நீங்க? இதெல்லாம் ஒரு உதவியா? நம்ம வைஷு குட்டி தானே? தாராளமா வரட்டும் மாமா. எனக்கு தெரிஞ்ச நல்ல விஷயத்தை நாலு பேருக்கு சொல்றது நல்லது தானே?”, என்று சொல்லி புன்னகைத்தான்.

“பழைய குச்சியா டா நீ? அப்ப எல்லாம் பட்டாசா வெடிப்ப. இப்ப சாந்த சொரூபியா இருக்குற?”

“அதெல்லாம் அப்படி தான் மாமா. சரி நீங்க தங்க ஏற்பாடு பண்ணிட்டேன். ஆமா கேக்க மறந்துட்டேன். கீதா அத்தை எங்க மாமா? அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல? பாத்து ரொம்ப நாள் ஆச்சு”

“நாங்க சென்னைல இருந்து பாதி வழி வந்துட்டு இருக்கும் போதே நேரா இங்க வந்துட்டோம் டா. அம்மா ஊர்ல இருக்காங்க”

“கால் வலி எல்லாம் இருக்கா அவங்களுக்கு?”

“நீ கொடுத்த மருந்துல கால் வலி எல்லாம் சரியாப் போச்சு. ஆனா காப்பிய காப்பிய குடிச்சு சுகரை இழுத்து வச்சிருக்காங்க”

“அதெல்லாம் சரி பண்ணிறலாம் மாமா. மருந்து தரேன்”

“அப்படியே எனக்கு இயற்கையா டை இருந்தா சொல்லு டா குச்சி. அப்ப அப்ப வெள்ளை முடி எட்டிப் பாக்குது”, என்று சொல்ல வனமங்கை அவனைப் பார்த்து சிரித்தாள்.

“அதுக்கும் மருந்து தரேன் மாமா. அதோ அப்பா வரார்”, என்று தேனப்பனைக் காட்டினான்.

மதியின் கையைப் பற்றி வந்து கொண்டிருந்தார் தேனப்பன். வயோதிகம் அவர் முகத்தில் நன்கு தெரிந்தது. ஆனாலும் திடகாத்திரமாகவே நடந்து வந்தார்.

“அம்மாடி எப்படி இருக்க கண்ணு?”, என்று மகளிடம் கேட்ட தேனப்பன் “எப்படி இருக்கீங்க தம்பி?”, என்று மாதவனிடமும் கேட்டார்.

“நல்லா இருக்கோம் பா”

“நல்லா இருக்கோம் ஐயா, நீங்க நல்லா இருக்கீங்களா?”, என்று கேட்ட மாதவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார்.

அவர் கையைப் பிடித்து கீழே இறக்கியவம் “என்ன ஐயா இதெல்லாம்?”, என்று சொல்லி அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

“என் பேத்திக்கு உடம்புக்கு முடியலையாமே? என்ன ஆச்சு டா குச்சி?”

“விஷக் காச்சல் பா. மூலிகைப் பத்து போட்டுருக்கேன்”, என்றான் குச்சி.

“நான் போய் பாத்துட்டு வரேன்”, என்றதும் மதியும் அவர் பின்னே சென்றான்.

“இந்த மதியைப் பாருங்க, எப்பவும் போல அப்பா பின்னாடியே அலையுறான்”, என்று சிரித்தாள் வனமங்கை.

“அவனுக்கு தாத்தான்னு அவரை மட்டும் தான் தெரியும். முன்னாடி இருந்தே அவர் கூட ஒட்டிக்கிட்டான். வைத்தியர் ஐயா கிட்டயும் குண்டு தாத்தான்னு பின்னாடியே அலைவான். ஐயா இன்னும் கொஞ்ச நாள் இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும்”, என்று மாதவன் சொல்ல அவர் நினைவில் சிறிது நேரம் மற்றவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

அடுத்த நாள் தேன்மொழிக்கு காச்சல் விட்டிருந்தது. ஆனால் படுத்தே தான் கிடந்தாள். அவளை ஓய்விலே தான் வைத்திருந்தான் குச்சி. அவளுக்கென்று தனியான உணவுகளை அவனே தான் தயாரித்துக் கொடுத்தான். மற்றவர்களுக்கான உணவை வனமங்கை பார்த்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து வைஷ்ணவி குடும்பமும் வந்தது.

அனைவரையும் வரவேற்றார் தேனப்பன். “வாங்க மாமா, வாக்கா”, என்று மாதவனும் அவர்களை வரவேற்றான். மித்ராவை  அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தாள் வைஷ்ணவி.

“மாமா நீங்க என்னை மறந்துட்டீங்க?”, என்று கண்ணன் புகார் வாசிக்க “உன்னை மறப்பேனா மருமகனே. படிப்பு எல்லாம் எப்படி டா போகுது? அடுத்து என்ன பண்ண போற?”, என்று கேட்ட படி அவனை உள்ளே அழைத்துச் சென்றான். அவர்களுடன் மதியும் சேர்ந்து கொண்டான்.

தேன்மொழியைக் காணச் சென்ற கண்ணன் “காச்சல் இப்ப எப்படி இருக்கு டி?”, என்று கேட்டான்.

அவன் அப்படி அக்கறையாக கேட்டதை வியப்பாக பார்த்தாள் தேன்மொழி. ஏனென்றால் இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம் தான்.

“பரவால்ல”, என்று அவள் முணுமுணுக்க “இன்னொரு தடவை தண்ணில அதிகம் ஆட்டம் ஆடின கொன்னுறுவேன் கொன்னு”, என்று  சொல்லி விட்டு அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தான். ஏனோ இன்று அவன் கொட்டியதை விட அவனுடைய அக்கறையான பேச்சே அவள் மனதில் அதிகம் பதிந்தது. அதனால் அவள் அவனையே குழப்பமாக பார்க்க “ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டுச் சென்றான் கண்ணன். “இவன் என்ன இப்படி மாறிட்டான்?”, என்று வியப்பாக பார்த்தாள் தேன்மொழி.

மித்ராவோ குச்சியைத் தான் தேடினாள். அவனோ கண்ணிலே பட வில்லை. மூலிகை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் வெகு நேரம் கழித்து தான் வந்தான்.

வாசலில் நின்று வீட்டுக்கு போன் பேசிக் கொண்டிருந்த மித்ரா போனில் பேசிய படியே வீட்டின் குடிசையின் மீது படர்ந்திருந்த ஒரு கொடியின் இலையை பறிக்க முயன்று கொண்டிருந்தாள்.

அப்போது பேலன்ஸ் தவறி அப்படியே விழப் போக “ஏய் பாத்து”, என்று பதறிய படியே ஓடி வந்த குச்சி அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அவன் கைகளுக்குள் இருந்த மித்ரா அவனையே அதிர்ச்சியாக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க அவளது பார்வையில் இருந்த பொருள் புரியாமல் அப்படியே கட்டுண்டு நின்றான்.

எவ்வளவு நேரம் இப்படியே இருந்தார்களோ “க்கும்”, என்று வைஷ்ணவியின் தொண்டைச் செருமலில் தான் நடப்புக்கு வந்தார்கள். அவனை விட்டு விலகி நின்ற மித்ரா அவனையே பார்க்க குச்சியோ “வைஷு குட்டி எப்படி இருக்க? கண்ணன் வந்துருக்கானா? அண்ணன் அண்ணி வந்துருக்காங்களா?”, என்று கேட்ட படி உள்ளே சென்று விட்டான்.

மித்ரா யார் என்று மட்டும் வைஷ்ணவியிடம் தெரிந்து கொண்டவன் அதன் பின் அவளைப் பற்றி பேசவே இல்லை. ஆனால் மித்ராவோ குச்சி இருக்கும் வீட்டில் இருப்பதையே ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போல எண்ணி மிதந்து கொண்டிருந்தாள்.

அடுத்த நான்கு நாட்கள் அங்கே களை கட்டியது என்று தான் சொல்ல வேண்டும். எல்லாரும் அங்கே சந்தோஷமாக இருக்க  அங்கே தவித்துக் கொண்டிருந்தது இரண்டு ஜீவன்கள் மட்டும் தான். அதில் ஒன்று குச்சி. மித்ராவின் பார்வை அவனை அதிகம் பாதித்தது. அதில் இருந்து எப்படி வெளியே வர என்று தெரியாமல் தவித்தான். அவளை விட்டு தள்ளியே இருந்தான். அவளும் அவன் ஒதுக்கம் புரிந்து விலகி தான் இருந்தாள். ஆனால் அவள் பார்வை மட்டும் அவனை துரத்தி அடித்தது.

மற்றொரு ஆள் தேன்மொழி. கண்ணனின் அக்கறையான பேச்சும், பாசமான செய்கைகளும் அவளை அதிகம் பாதித்தது. அவன் எப்போதும் அப்படி இருந்திருந்தால் அது அவளை பாதித்திருக்காதோ என்னவோ? ஆனால் திடீரென்று நிகழ்ந்த அவனது மாற்றம் அவளை திகைக்க வைத்தது. “என்ன ஆச்சு இவனுக்கு?”, என்ற குழப்பத்திலே இருந்தாள்.

நான்கு நாட்கள் கழித்து அனைவரும் ஊருக்கு கிளம்பினார்கள். போகும் போது மித்ரா பார்த்த பார்வையை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டான் குச்சி. இங்கே வந்ததில் இருந்து மித்ரா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. மருத்துவ சந்தேகத்தை கூட வைஷ்ணவியை வைத்து தான் தெரிந்து கொண்டாள். அப்படி இருந்தாலும் அவனை மொத்தமாக சுழற்றிப் போட்டு விட்டு தான் சென்றிருக்கிறது அந்த புயல்.

அவர்கள் அனைவரும் சென்றதும் குச்சிக்கும் தேனப்பனுக்கும் தனிமையை உணர்வதைப் போல இருந்தது. அவர்களுக்கு இது பழகிய ஒன்று என்றாலும் இன்று என்னவோ போல இருந்தது.

“சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ குச்சி. எனக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேணும்”, என்றார் தேனப்பன்.

“கொஞ்ச நாள் ஆகட்டும் பா”, என்று சொன்ன குச்சிக்கு மித்ரா முகம் மனக் கண்ணில் மின்னி மறைந்தது. அதன் காரணம் என்னவோ?

“வைத்தியர் ஐயா, மூட்டு வலின்னு ஒரு அம்மா உங்களைப் பாக்க வந்துருக்காங்க”, என்று அவனுடைய உதவியாளன் வந்து சொல்ல அவன் அனைத்தையும் மறந்து அங்கே சென்றான். அந்த பெண்மணிக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்ததும் மித்ரா அவன் மனதில் இல்லை. அவன் மனதில் நின்றது மருத்துவம் மட்டுமே அவன் மனதைக் கலைக்க அவள் மீண்டும் வருவாளா?

ஊருக்கு போனதும் கிருஷ்ணன் குடும்பம் எப்போதும் போல் அவர்களின் வேலையைப் பார்க்க வைஷ்ணவி மித்ராவை கிண்டல் செய்தே ஒரு வழி ஆக்கினாள். எதிர்கால மில்லாத காதல் கனவில் மித்ராவும் லயித்தாள்.

மாதவன் எப்போதும் போல அவனுடைய வேலையைத் தொடர்ந்தான். பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

வனமங்கை மாதவனுடன் எப்போதும் போல் சந்தோஸமாக வாழ்ந்தாள். தன்னை அன்னை போல கவனித்துக் கொண்ட மாமியாரை இப்போது அவள் அன்னை போல கவனித்துக் கொண்டாள். அதனால் அவள் மீது மாதவனின் காதல் பல மடங்கு பெருகிக் கொண்டே தான் போனது. தன்னுடைய வனதேவதையையும் அவளால் வந்த இரண்டு பொக்கிசங்களான பிள்ளைகளையும் கண்ணில் வைத்து தாங்கினான் மாதவன்.

….முற்றும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!