Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 2 1

அத்தியாயம்

கொஞ்சம் கொஞ்சமாக என்னை

நோக்கி நெருங்கித் தான்

வருகிறது உந்தன் இதயம்!!!



Advertisement

அடுத்த நாள் காலையிலே எங்கேயோ போவதற்காக கிளம்பி வெளியே வந்தான் வெற்றி. அப்போது சிறிது நேரம் நடக்கலாம் என்று எண்ணி மாதவனும் வெளியே வந்தான்.

Advertisement

அவனைக் கண்டதும் “குட் மார்னிங் சார்”, என்றான் வெற்றி.

Advertisement

“குட் மார்னிங். காலைலே எங்க கிளம்பிட்டீங்க வெற்றி? இன்னைக்கு சண்டே தானே? ரெஸ்ட் எடுக்கலையா?”, என்று கேட்டான்.

Advertisement

“காட்டுக்குள்ள இருக்குற நமக்கு என்ன சார் ரெஸ்ட். சண்டேனாலும் நாம அப்ப அப்ப காட்டுக்குள்ள ரவுண்ட்ஸ் போய்த் தான் ஆகணும். என்ன யூனிபார்ம் மட்டும் தேவையில்லை. இன்னைக்கு நம்ம ராம் தம்பியோட தங்கச்சி ஊர்ல இருந்து வருதாம். அதான் கூப்பிட போறேன் சார்”

“இங்க வராங்களா? எதுக்கு நம்ம காட்டை சுத்திப் பாக்கவா?”

“இல்லைங்க சார், ராம் தம்பிக்கு அம்மா அப்பா கிடையாது. அவங்க தங்கச்சி பிறக்கும் போதே அவங்க அம்மா இறந்துட்டாங்களாம். அப்புறம் அவங்க அப்பாவும் கொஞ்ச நாள்ல இறந்துட்டாராம். ரெண்டு பேரும் பாட்டி தயவுல தான் வளந்துருக்காங்க. இடைல பாட்டியும் இறந்ததும் அந்த பொண்ணு காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தது. இப்ப படிப்பை முடிச்சிட்டு அண்ணன் கூட இருக்கலாம்னு வருது. நேத்தே அந்த தம்பி தங்கச்சியைக் கூப்பிடப் போகணும்னு சொல்லுச்சு. அதான் கிளம்பி இருக்கேன். அவர் கிளம்பி வந்த உடனே போக வேண்டியது தான். டவுனுக்கு போறேன் சார். உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் வெற்றி. சமையல் அம்மா கிட்ட ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கோங்க. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் மாதவன். அதோடு அந்த விஷயத்தை மறந்தும் விட்டான்.

வெற்றியும் ராமும் பஸ் ஸ்டாண்ட் சென்றதும் அவனது தங்கை வெண்ணிலா வந்த பஸ், பஸ் ஸ்டாண்ட் வரவும் சரியாக இருந்தது.

ராமைக் கண்டதும் “அண்ணா”, என்று ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.

“எப்படி டா இருக்க?”, என்று கேட்ட ராமின் கைகள் அவள் தலையை அன்புடன் வருடி விட்டது.

“நீ இல்லாதது மட்டும் தான் குறை. இப்ப அதுவும் போச்சு”

“சரி அடுத்து என்ன பண்ண போற?”

“ஐயோ அண்ணா வீட்டுக்கு போய் பேசிக்கலாம். பஸ் ஸ்டாண்ட்ல வச்சே கேக்கணுமா?”, என்று அவள் கேட்டதும் அசடு வழிய சிரித்த ராம் வெற்றியையும் அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான். அவளும் அவனிடம் நட்பாக பேசினாள். அனைவரும் ஏறியதும் ஜீப் கிளம்பியது. வரும் வழியில் சலசலத்துக் கொண்டே வந்தாள் வெண்ணிலா.

ஒரு கட்டத்தில் “பாப்பா, கொஞ்ச நேரம் அமைதியா வா. நீ பேசிட்டே வந்தா வெற்றி அண்ணாவோட கவனம் சிதறும். இங்க ரோட் ரொம்ப மோசம் டா. அங்க போய் எல்லாம் பேசிக்கலாம்”, என்று ராம் சொன்னதும் அவன் சொன்னது நியாயம் என்பதால் வாயை மூடிய படியே வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள்.

அந்த மலைப்பாதை அவள் ரசிக்கும் படியாக இருந்தது. அந்த வனாந்தரத்தின் அழகைக் கண்டவளுக்கு காட்டைக் கண்டு ஏன் அனைவரும் பயப்படுகிறார்கள் என்று தோன்றியது. பச்சை பசேலென்ற மரங்களும் புல்வெளிகளும் அவள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தந்தது.

அவள் படித்தது நகரத்தில் என்றாலும் கிராமத்தில் பிறந்தவள் என்பதால் சிறு வயதில் இருந்தே இயற்கை என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

மரங்கள் அடர்ந்து காணப் பட்ட அந்த வனப் பகுதி அவள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்து அளித்தது போல தான் இருந்தது. தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு அங்கே சென்ற போது அங்கே இருட்டியிருந்தது. அதற்கு மேல் யாரையும் தொந்தரவு செய்ய முடியாது என்பதால் அவரவர் வீட்டுக்குள் சென்று முடங்கினார்கள்.

அடுத்த நாள் காலை சீக்கிரம் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது. “அண்ணா கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டா?”, என்று கேட்டாள்.

“விளையாடுறியா? இங்க நம்ம ஊர் சைட்ல இருக்குற காடு மாதிரி இருக்காது. விபரீதமானது”

“வீட்டுக்குள்ளேயே எப்படி அடைஞ்சு கிடக்க? அப்ப நீயாட்டும் வெளிய கூட்டிட்டு போ”

“நான் வரலை”, என்றதும் அவனை முறைத்தாள்.

“சரி சரி நீ போயிட்டு வா. அதுவும் இந்த பக்கம் மட்டும் தான் போகணும். ஏற்கனவே அந்த அருவிக்கு போறதுக்கு பாதை போட்டு வச்சிருக்கோம். அதுலே திரும்பி வந்துரு. ரொம்ப நேரம் நிக்க கூடாது”, என்று எச்சரித்து வைத்தே அவளை அனுப்பினான்.

மெதுவாக அந்த வனாந்தரத்துக்குள் நுழைந்தாள். சுற்றி இருந்த செடி கொடிகளின் வாசனை அவள் நாசியை நிறைத்தது.

“இது தான் இயற்கையின் வாசமா?”, என்று எண்ணி அந்த இயற்க்கை காற்றைச் சுவாசித்தாள். விதவிதமான மரங்களை ரசித்த படி அந்த அருவிக் கரைக்கு வந்து விட்டாள். இங்கே வருவது முதல் முறை என்பதால் அப்படியே சொக்கித் தான் போனாள்.

வெள்ளியை உருக்கி ஊற்றியது போல கொட்டும் தண்ணீரை சுவை பார்த்தாள். அவ்வளவு ருசியைக் கொண்டிருந்தது அந்த தண்ணீர். ஒரு பாறையில் அமர்ந்து அந்த தண்ணீரில் கால் வைத்து அமர்ந்தாள். உள்ளே கிடக்கும் கூலாங்கற்கள் கூட தெளிவாக தெரியும் படி கண்ணாடியாக இருந்தது தண்ணீர். சிறிது நேரத்தில் குளிக்கும் ஆசை வர அப்படியே தண்ணீருக்குள் பாய்ந்தாள். அப்படி ஒரு ஆனந்த குளியல்.

அப்போது சருகுகள் மீதி படும் ஓசையில் தலையை திருப்பி பார்த்தாள். தன்னுடைய வீட்டுக்கு போன் பேசுவதற்காக அந்த பக்கம் வந்தான் மாதவன். அப்போது தான் வெண்ணிலாவைப் பார்த்தான்.

திடீரென்று அந்த நேரம் ஒரு அந்நிய ஆடவனைக் கண்டதும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவசர அவசரமாக தண்ணீரில் இருந்து வெளியே வந்தாள். அவள் முகம் சிவந்து விட்டது.

ஈரம் சொட்ட சொட்ட நனைந்த சுடிதாருடன் நின்றவளின் கண்களில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்தவன் “பயப்படாதீங்க. நான் புது பாரஸ்ட் ஆபிசர். நீங்க இங்க இருக்கீங்கன்னு தெரியாது. இல்லைன்னா வந்துருக்க மாட்டேன். சாரி”, என்று சொல்லி விட்டு திரும்பி நின்று கொண்டான்.

அந்த கோலத்தில் ஒரு அந்நியன் முன்பு அப்படி நின்றது அவளுக்கு சங்கடத்தை தந்தது. கூடவே அவனது பேச்சும் செயலும் அவனுடைய கண்ணியத்தை அவளுக்கு புரிய வைத்தது.

“இவர் தான் மாதவனா?”, என்று எண்ணிக் கொண்டு மேலோட்டமாக சுடிதார் டாப்ஸ் மற்றும் துப்பட்டாவை பிழித்தவள் துப்பட்டாவை சற்று மூடியது போல போர்த்திக் கொண்டாள். ராம் அவனைப் புகழ்ந்து தள்ளியிருந்ததால் இப்போது அவள் பயம் கூட அவளை விட்டுச் சென்றிருந்தது.

மாதவனும் ராமின் தங்கை தான் இந்த பெண் போல என்று எண்ணி தன்னுடைய மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான். பின் சிறிது நேரம் அவளிடம் இருந்து சத்தம் வராததால் அவள் பக்கம் திரும்பினான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.

வெண்ணிலா அனைவரும் பூஜிக்கும் அழகைக் கொண்டவள். நீரில் குளித்ததால் ஒப்பனைகள் எதுவும் இல்லாமல் போனாலும் அழகியாக நின்றாள்.

பார்ப்பவரின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் பேரழகைக் கொண்டவள். கோதுமை நிறத்தில் அவள் முகம் நிலவு போல் ஜொலித்தது. பிறை நெற்றியும் அதில் இருந்த சின்ன கருப்பு பொட்டும் அவ்வளவு அழகாக இருந்தது. வில் போன்ற புருவங்கள், மை தீட்டிய மீன் போன்ற கண்கள், ஆப்பிள் போன்ற கன்னம், ஆரஞ்சு சுளை போல இருந்த அதரங்கள், இருக்கா இல்லையா என்ற கேள்வியை எழுப்பும் இடை என பிரம்மன் படைத்த அழகான ஓவியம் தான் வெண்ணிலா. அவள் முகத்தில் இருந்த பரு கூட அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.

தன்னுடைய கண் முன் தேவதை போல நின்றவளின் அழகு ஒரு நொடி மாதவனையும் கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. அவனை அறியாமலே அவன் கண்கள் அவளை ரசித்தது. அதுவும் அவளின் புன்னகை அவள் மீது சிறு ஈர்ப்பை அவனுக்கு ஏற்படுத்தியது. .

அவளோ அவனுடைய கம்பீரத் தோற்றத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டு அவனுக்கு அவள் மீது சிறு ஈர்ப்பு வந்தது என்றால் அவளுக்கோ அவன் கம்பீரத்தில் மயக்கம் வந்தது. இங்கிருந்து போகலாமா இல்லை இவனிடம் பேசலாமா என்று எண்ணிக் கொண்டு நின்றாள் வெண்ணிலா.

பறவைகளின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்த அந்த சூழ்நிலை இருவருக்கும் தர்மசங்கடத்தைக் கொடுத்தது.

இருவருக்கும் இடையே இருந்த அமைதி என்னவோ போல இருக்க “ராமோட தங்கச்சியா நீங்க?”, என்று கேட்டான் மாதவன்.

“ஆமா, என் பேர் வெண்ணிலா. நேத்து நைட் தான் வந்தேன். நான் வரும் போது லேட் ஆகிருச்சு. இனி தான் எல்லாரையும் மீட் பண்ணி பேசணும். உங்களைப் பத்தியும் அண்ணன் நிறைய சொன்னாங்க”

“ஓ, உங்களுக்கு படிப்பு முடிஞ்சிருச்சுன்னு கேள்வி பட்டேன் என்ன படிச்சிருக்கீங்க? நெக்ஸ்ட் என்ன பண்ண போறீங்க?”

“பி. ஈ ஆர்க்கிடெக்சர் முடிச்சிருக்கேன். பிரைவேட்ல தான் வேலைக்கு போகணும்”

“நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“இல்லை சொல்லுங்க”

“நெக்ஸ்ட் மன்த் உங்க டிப்பார்ட்மெண்ட்க்கு வேகன்சி போட போறாங்க. பேசாம அதுக்கு பிரிப்பேர் பண்ணுங்களேன். இப்ப தான் டிகிரி முடிச்சிருக்கீங்க. உடனே எக்ஸாம் எழுந்துனீங்கன்னா உங்களுக்கு ஈஸியா இருக்கும்”

“அப்படியா? சரி நான் அண்ணா கிட்ட கேட்டு பிரிப்பேர் பண்ணுறேன்.  தேங்க்ஸ்”

“பரவால்ல. அப்புறம் காட்டுக்குள்ள தனியா வர வேண்டாம். வருனோட தங்கை இருக்கா. பேர் வந்தனா. உங்க வயசு தான் இருக்கும். நேரமே போகலைன்னு சொல்லிட்டு இருப்பா.  அவ கூட பிரண்டா ஆகிக்கோங்க”

“சரி யாருன்னு பாத்து பிரண்டாகிறேன். வீட்டுக்கு போகலாமா? அண்ணா தேடுவான்”

“நீங்க கிளம்புங்க வெண்ணிலா. நான் வீட்டுக்கு கால் பண்ணிட்டு வரேன்”, என்று சொன்னதும் அவள் அங்கிருந்து மெதுவாக சென்றாள்.

திரும்பிப் போகும் போது அவள் நினைவுகள் அவனைப் பற்றியே இருந்தது. யாரும் இல்லாத இடத்தில் எப்படி இவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு இவர் மீது நம்பிக்கை வர காரணம் என்ன? அண்ணன் இவரை நல்லவர் என்று சொன்னதாலா? ஆனா அண்ணனுக்கே இவரை இந்த ஒரு வாரம் தானே தெரியும்? ஆனா இவர் ஏன் இவ்வளவு அழகாய் இருந்து தொலைக்கிறார்? எவ்வளவோ பசங்க கிட்ட பேசிருக்கேன். ஆனா இவர் கிட்ட மட்டும் ஏன் பேசிட்டே இருக்கணும்னு தோணுது? என்று நினைத்த படியே நடந்து சென்றாள்.

மாதவன் அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான் என்று அவளுக்கே புரிந்தது. புதிதாக வந்த சலனம் அவள் மனதை சிறகடித்து பறக்க வைத்தது. சந்தோசத்துடனே வீட்டுக்கு சென்றாள். . ’

அந்த பெரிய பாறையில் ஏறி நின்று அன்னையிடம் போன் பேசினான் மாதவன்.

“இன்னைக்கு என்ன டா இவ்வளவு லேட்டா கால் பண்ணிருக்க?”, என்று கேட்டாள் கீதா.

“ராம்னு ஒரு பையன் சொல்லிருக்கேன்ல? அவனோட தங்கச்சி வந்துருக்கா மா. அதான் பேசிட்டு இருந்தேன்”

“பேர் என்ன டா? பொண்ணு அழகா இருக்காளா? பேசி முடிக்கலாமா?”, என்று ஆர்வமாக கேட்டாள் கீதா.

“ஆரம்பிச்சிட்டியா மா?”

“பதில் சொல்லு டா. அழகா இல்லையா?”

“அழகு தான் போதுமா? அஞ்சு நிமிஷம் கூட பாக்கலை. அதுக்குள்ள என்ன எல்லாம் பேசுற மா நீ?”

“உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணினா தான் டா எனக்கு நிம்மதி. சரி சொல்லு அந்த பொண்ணு, உன் அக்கா மாதிரி அழகா இருந்தாளா?”

“அக்கா ஒரு மாதிரி அழகுன்னா இந்த பொண்ணு வேற மாதிரி அழகு மா. நானே சைட் அடிச்சேன்னா பாத்துக்கோயேன்”, என்று புன்னகையுடன் சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!