Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 2 2

“சாமியாரான நீயே சைட் அடிச்சிருக்கேன்னா கண்டிப்பா அந்த பொண்ணு அழகா தான் இருக்கும். அப்படியே பாத்து பேசி லவ் பண்ணு டா”

“அம்மா மாதிரியா பேசுற? போ மா”



Advertisement

“சரி விடு டா. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஆனா அம்மாக்கு உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசையா இருக்கு டா மாதவா”

Advertisement

“கொஞ்ச நாள் பொறு மா”

Advertisement

“இப்படியே சொல்லிட்டு இரு”

Advertisement

“அதை விடுங்க. அக்காக்கு என்னைக்கு டேட் சொல்லிருக்காங்க?”

“இன்னும் இருபது நாள் இருக்கு டா”

“அப்படி மெத்தனமா இருந்துறாத மா? உள்ள இருக்குறது என் மருமகனா இருந்தா சீக்கிரம் வெளிய வந்துருவான். எல்லாத்துக்கும் தயாரா இருங்க”

“நான் பாத்துக்குறேன் டா. உனக்கு அங்க ஒண்ணும் கஷ்டம் இல்லையே”

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை மா. இந்த சூழ்நிலைக்குப் பழகிட்டேன்”

“எதுக்கும் பாத்து கவனமா இரு டா”

“சரி மா வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் மெதுவாக கீழே இறங்கினான்.

அப்போது சருகுகள் மிதிபடும் ஓசை அவனுக்கு வெகு அருகாமையில் கேட்டது. தலையை திருப்பி சுற்றிப் பார்த்தான். ஆனால் ஒருவரும் தெரிந்த பாடில்லை.

ஆனால் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க சத்தம் வந்த திசை நோக்கி நடந்தான். அது அவர்கள் குடியிருப்புக்கு எதிர்ப் பக்கம் என்பதால் குழப்பம் வந்தது. உடன் வேலை செய்பவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்பதால் அவனுக்கு சந்தேகம் வலுத்தது. அதனால் தான் அந்த பக்கம் சென்றான். இதுவே வேறு பக்கம் என்றால் இவர்களின் ஆட்கள் தான் செல்கிறார்கள் என்று விட்டிருப்பான்.

மரங்களின் ஊடே இருந்த கலைச்செடிகளைத் தாண்டி செல்வது கஷ்டமாக இருந்த போதும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றான். கொஞ்சம் தள்ளிச் சென்றதும் தூரத்தில் பாவாடை தாவணி அணிந்த ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருப்பது அவன் கண்ணில் விழுந்தது. அவனுக்கு. அவளுடைய முதுகு பக்கம் தான் தெரிந்தது.

அவளுடைய உடையே வித்தியாசமாக இருக்க நிச்சயமாக அவனுக்கு தெரிந்தவள் இல்லை என்று புரிந்தது. யார் இவள்? இவள் எப்படி முள் வேலிக்குள் வந்தாள் என்று யோசித்தவன் “ஏய் நில்லு, யார் நீ? இங்க எப்படி வந்த?”, என்று நின்ற இடத்தில் இருந்தே கத்தினான்.

அவன் குரல் கேட்டதும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள் அந்த பெண். அவ்வளவு தூரத்தில் அவள் முகம் அவனுக்கு தெரிய வில்லை. அதனால் அவளை நோக்கி நடந்தான். அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு அரண்டு போனவள் போல அந்த அடர்ந்த காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

அவள் அப்படி ஓட ஆரம்பித்ததில் அவள் தவறான நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. வழி மாதிரி வந்திருந்தால் கூட அவனிடம் உதவி கேட்டிருப்பாளே. அதனால் இவனும் அவளை துரத்திக் கொண்டு ஓடினான்.

அவளுக்கு சற்று தொலைவில் முள் வேலி இருக்க அதற்கு மேல் அவளால் ஓட முடியாது என்று உணர்ந்த மாதவன் அப்படியே மூச்சு வாங்க நின்று விட்டான். அதற்கு மேல் அவளால் ஓட முடியாது என்பதால் அவளை எளிதாக பிடித்து விடலாம் என்று எண்ணி பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்ட படி நின்றான்.

“மாட்டிக்கிட்டியா? இனி எப்படி தப்பிப்ப? ஒழுங்கு மரியாதையா நீ யாரு? எப்படி இங்க வந்த? எதுக்கு வந்தன்னு சொல்லு”, என்று மிரட்ட அவளோ அவன் புறம் திரும்பவே இல்லை. அப்படியே ஒரு இடத்தில் அசையாமல் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.

“நீ இதுக்கு மேல எங்கயும் ஓட முடியாது. நீயா உண்மையை ஒத்துக்கிட்டா சேதாரம் கம்மி. இல்லைன்னா உனக்கு பெரிய தண்டனை கிடைக்கும். முதல்ல நீ இங்க வா”, என்றான் மாதவன்.

அவன் பேச்சு காதில் விழுந்தாலும் அவள் தலையைத் திருப்பவே இல்லை. தன்னுடைய இடையில் சொருகியிருந்த தாவணி முந்தானையை இடையில் இருந்து எடுத்தவள் தலையை முக்காடிட்டு கண் மட்டும் தெரியும் படி முகத்தை மூடி விட்டு அவனைத் திரும்பி பார்த்தாள்.

“முகத்தை மறைச்சா உன்னை ஒண்ணும் செய்ய முடியாதா? ஏதோ தப்பு செய்றதுனால தானே முகத்தை மறைக்கிற? நீ திருடி தானே? வரச் சொன்னா வர மாட்டியா? இரு நானே வரேன்”, என்று கேட்டுக் கொண்டே கொஞ்சம் மெதுவாக அவளை நோக்கி முன்னேறினான்.

அவன் தன்னை நோக்கி முன்னேறவும் ஒரு நொடி அவள் கண்கள் அச்சத்தில் விரிந்தது. அடுத்த நொடி முள் வேலியை ஒட்டிப் நகர்ந்தவள் அடியில் இருந்த இடைவெளியில் உடலை நுழைத்து கம்பி வேலிக்கு அந்த பக்கம் போகப் பார்த்தாள்.

திடீரென்று அவள் இப்படிக்க் செய்வாள் என்று எதிர் பார்க்காத மாதவன் இன்னும் வேகம் கூட்டி அவளை நெருங்கினான். கடைசியில் சிக்கியது அவளது தாவணி தான்.

அவள் அந்த பக்கமும் அவன் இந்த பக்கமும் இருக்க அவளது தாவணி அவனுடைய கையிலும் அவளுடைய இடையிலும் இருந்தது.

அவள் முக்காடு அவிழ்ந்ததால் அவனால் அவள் முகத்தை நன்கு பார்க்க முடிந்தது. அவளும் அவனையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவள் மதிமுகம் கண்டு மாதவன் அசந்து தான் போனான். கடவுள் அவளுக்கு அழகை இந்த அளவுக்கு வாரி வழங்குவாரா என்று தோன்றியது அவனுக்கு. செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள். உருண்டையான முகம் அதில் தனித்து தெரிந்த அந்த செப்பு உதடுகள் … நெற்றியில் ஒரு மச்சம் அது அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது. இயற்கையான சூழ்நிலையில் வளர்ந்ததால் முகம் மாசு மரு எதுவும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது.

சிறிது அச்சத்துடன் அசைந்த அவள் கண்களோ காந்த விசையாயைக் கண்டது போல அவனை அதிகம் ஈர்த்தது. மணிகள் வைத்த பாசி கூட அவள் சங்கு கழுத்திற்கு அவ்வளவு அழகைக் கொடுத்தது. எலுமிச்சை நிறத்தில் தேவதை போல இருந்தவளை பார்த்த படியே நின்றான். அவன் பார்வை அவளை எதுவோ செய்ய சட்டென தன்னுடைய இரண்டு கைகளை எடுத்து முன் பக்கம் மறைத்துக் கொண்டு நின்றாள்.

“இன்னைக்கு என்ன எவளைப் பாத்தாலும் சைட் அடிச்சிட்டு நிக்குற?”, என்று அவன் மனசாட்சி அவனைக் கடிய  தன்னை சமாளித்துக் கொண்டு “தப்பிக்கவா பாக்குற? ஒழுங்கு மரியாதையா நீ யாருன்னு சொல்லு”, என்று மிரட்டினான்.

அவள் அமைதியாக அவனைப் பார்த்த படி இருக்கவும் “இப்ப சொல்லப் போறியா இல்லையா?”, என்று மிரட்டிக் கொண்டே அவள் தாவணியை தன்னை நோக்கி இழுத்தான். அப்போது அவள் இடையில் சொருகியிருந்த ஒரு பை கீழே விழுந்தது.

“ஏய் என்ன அது? என்னன்னு சொல்லு”, என்று அவன் மிரட்ட அடுத்த நொடி தன்னுடைய இடைக்கு கையைக் கொண்டு சென்றாள்.

அவன் பார்வையும் அங்கே சென்றது. துப்பாக்கி கிப்பாக்கி வச்சிருப்பாளோ என்று ஒரு நொடி அச்சப்பட்டாலும் அவன் கண்களில் அந்த எலுமிச்சை நிற இடுப்பு மின்னத் தான் செய்தது. முதல் முறையாக அவன் உணர்வுகள் அவளுடைய இடையைக் கண்டு அந்த கலவர நேரத்திலும் உயிர்ப்பது போல ஒரு பிரம்மை அவனுக்குள் உருவானது. தலையை உலுக்கிக் கொண்டான்.

அவளோ சொருகியிருந்த தாவணியை தன்னுடைய இடையில் இருந்து எடுத்தவள் அந்த தாவணியை அவன் கையில் விட்டுவிட்டு கீழே விழுந்த பையை மட்டும் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடி மறைந்து போனாள். அவள் இப்படி சிட்டாக பறந்து போவாள் என்று தெரியாமல் ஆவென்று அதிர்ச்சியாக அவள் போன பாதையை பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

சிறிது நேரம் கழித்து தன்னுடைய வீட்டுக்கு வந்தவன் மற்றவர்களை அழைத்து நடந்ததைச் சொன்னான். முதலில் அவர்கள் அதை நம்ப மறுக்க அங்கே கூட்டிச் சென்று அந்த இடத்தைக் காண்பித்தான்.

ஒரு ஆள் போகும் அளவுக்கு கம்பி வேலிக்கு அடியில் பள்ளம் தோண்டியிருந்ததைக் கண்டு அவர்களுக்கு வியப்பாக இருந்தது. கூடவே இது ஒரு நாள் வேலை இல்லை என்றும் தொடர்ந்து யாரோ உள்ளே வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்றும் புரிந்தது. .

“வந்தது யாரா இருக்கும்?”, என்று அனைவருக்கும் யோசனையாக இருந்தது. கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டு அங்கிருந்து நகன்றார்கள். மாதவனும் அவனுடைய அறைக்குள் வந்து அந்த தாவணியை அங்கிருந்த சேரில் போட்டான்.

அப்போது தட் என்று சத்தம் கேட்க அவசரமாக அதை எடுத்துப் பார்த்தான்.

தாவணியின் ஒரு முனையில் முடிச்சிட்டு இருந்தது. குழப்பத்துடன் அதை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் ஒரு பழைய கருகமணி மாலை இருந்தது.

அதை கையில் எடுத்து குழப்பமாக பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான். அதே நேரம் “டேய் குச்சி எனக்கு அது வேணும் டா”, என்று சொல்லிக் கொண்டே உதட்டைப் பிதுக்கி அழத் தயாராக நின்று கொண்டிருந்தாள் வனமங்கை.

“சொல்ல சொல்ல கேக்காம அங்க போனதும் இல்லாம இப்படி தாவணியை அவன் கையில் விட்டுட்டு வந்துருக்க? இனி எப்படி அந்த மாலை உனக்கு கிடைக்கும்?”, என்று கேட்டான் அவளது ஆருயிர் தம்பி குச்சி என்ற குலசேகரன்.

“இந்த நேரம் எவனும் வர மாட்டாணுங்கன்னு நினைச்சு தான் டா போனேன். ஆத்துக்கு அந்த பக்கம் தான் நம்ம வைத்தியர் ஐயா கேட்ட மூலிகை இருக்கு. அதை எடுக்க வாசல் பக்கமா போனா என்னமோ அவங்க சொத்தைக் கொள்ளை அடிக்க வந்த மாதிரி விரட்டுராணுங்க. மூலிகை பறிக்க கவர்ன்மெண்ட் கிட்ட கையெழுத்து வாங்கணும்னு எல்லாம் சொல்லிருக்காங்க. வைத்தியர் ஐயா ரொம்ப வருத்தப் பட்டாங்க. நம்ம புழங்கிக்கிட்டு இருந்த இடத்தை வேலி போட்டு மறைச்சு ஆக்கிரமிச்சதும் இல்லாம நம்மளையே உள்ள விட மாட்டிக்காங்கன்னு புலம்பினாங்க.. அதான் கொஞ்சம் மூலிகை எடுக்கலாம்னு போனேன். ஆனா அந்த ஆள் கிட்ட என் தாவணி சிக்கும்னு நான் கனவா கண்டேன். என் மாலை எனக்கு வேணும். அது அம்மாவோட ஞாபகார்த்தம் டா குச்சி”

“சரி விடுக்கா, எப்பயாவது அதை அந்த ஆள் கிட்ட இருந்து எடுப்போம். கண்டிப்பா அந்த ஆள் அதை அங்க தான் போட்டுருப்பான். அவங்களை பொறுத்த வரை அது வெறும் பாசி. தூரத் தான் போட்டுருப்பாங்க. நாம போய் தேடலாம்”, என்று சொன்னதும் அவள் கண்களில் ஒளி வந்தது. பின் முகம் சோர்ந்து போனவள் “நாம உள்ள நுழையிற இடத்தை அவனுங்க மறைச்சிருப்பானுங்களே டா”, என்று கேட்டாள்

“ஏதாவது பண்ணலாம்ங்கா விடு. நானும் என் கூட்டாளிகளும் சேந்து தானே உனக்காக அந்த பள்ளம் பறிச்சு தந்தோம். வேற ஏதாவது செய்ய மாட்டோமா? சரி எனக்கு பசிக்குது. கூல் காச்சித் தா”, என்று சொன்னதும் தம்பியின் பசி பெரியதாக தெரிய உடனே சமைக்க ஆரம்பித்தாள்.

அப்போது “கண்ணுங்களா”, என்று அழைத்த படி உள்ளே வந்தார் அவர்களின் தந்தை தேனப்பன்.

தந்தையை கண்டதும் இருவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவர்களுக்கு தாயுமானவன் ஆயிற்றே. “இப்ப தான் செய்யப் போறேன் ஐயா. நீங்க முகம் கழுவிட்டு செத்த உக்காருங்க. நான் ஆடுகளை எல்லாம் பட்டியில அடைச்சிட்டு உங்களுக்கு கஞ்சி எடுத்து வைக்கிறேன்”, என்றாள் வனமங்கை.

“சரித்தா”, என்றவர் குச்சியின் தலையை பாசமாக வருடி விட்டு பின் பக்கம் சென்றார். ஆடுகளை பட்டியில் அடைத்தவள் அதுகளுக்கு தண்ணீர் எடுத்து வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று கஞ்சி காய்க்க ஆரம்பித்தாள்.

வனதேவதை வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!