Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 3 2

“ம்ம்”, என்ற படி அவனிடம் இருந்து விலகி எழுந்து நிற்க பார்த்தான். இவ்வளவு நேரம் காலை அசைக்காமல் இருந்ததால் அது மறுத்துப் போய் இருக்க தடுமாறி விழப் போனான்.  அதை அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் தான் மீண்டும் மயக்கம் போடுகிறான் என்று  எண்ணிய மாதவன் அவனை அப்படியே பிடித்துக் கொண்டு “பாத்து பா, இதுக்கு தான் ஆஸ்பத்திரி போகலாம்னு சொன்னேன்”, என்றான்.

“ஆஸ்பத்திரி வேண்டாம். நாங்க வீட்டுக்கே போறோம்”, என்று மாதவனுடைய முகம் பார்க்காமல் சொன்ன வனமங்கை “வா குச்சி போகலாம்”, என்று சொல்லி அவனிடம் இருந்து தம்பியை தன் பக்கம் இழுத்தாள்.



Advertisement

“ஏய் என்ன பன்ற? நீயே குச்சி மாதிரி இருக்குற, இதுல அவனை குச்சின்னு சொல்ற? உடம்புக்கு முடியாதவனை பிடிச்சு நீ ஓடிஞ்சு விழுந்துறப் போற? வீடு எங்க இருக்குனு சொல்லு. நாங்களே கொண்டு வந்து விடுறோம்”, என்று சொன்ன மாதவன் அடுத்த நொடி அசால்ட்டாக குச்சியை தூக்கிக் கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தான்.

“சார் நீங்க இவங்களை வீட்ல விட்டுட்டு வாங்க. அதுக்குள்ள நான் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். இந்தாங்க சாவி”, என்று சொன்ன வெற்றி அங்கேயே நின்று கொண்டான்.

Advertisement

Advertisement

“சரி வெற்றி, நான் போயிட்டு வரேன். நீங்க லிஸ்ட் செக் பண்ணி  எல்லாம் வாங்கிக்கோங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்து உங்களைக் கூட்டிட்டு போறேன்”, என்று சொன்ன மாதவன் வனமங்கை புறம் திரும்பி “நீ என்ன பராக்கு பாத்துட்டு இருக்க? வா என் கூட”, என்று சொன்னான்.

“இவன் எப்ப நம்மளை வா போன்னு பேச ஆரம்பிச்சான்? அரட்டல் எல்லாம் பலமா தான் இருக்கு. ஆனா அப்படி அரட்டுறது நல்லாவும் இருக்கே?”, என்று எண்ணிய மனதை அடக்கிய படியே அவன் பின்னே சென்றாள்.

Advertisement

ஜீப்பின் பின் பக்கம் குச்சியை அமர வைத்த மாதவன் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான். ஆனால் தம்பியைப் பார்த்த படி வனமங்கை ஏறாமல் நிற்கவும் “என்ன உன்னையும் தூக்கி உக்கார வைக்கணுமா? கண்டிப்பா நீ பஞ்சு மூட்டை மாதிரி தான் இருப்ப? வரவா?”, என்றான்.

“ஐயோ இவன் செஞ்சாலும் செய்வான்”, என்று எண்ணிய படி தம்பியின் அருகே ஏறி அமர்ந்தவள் அந்த ஜீப் கதவை பூட்ட முடியாமல் திணறினாள்.

“ப்ச்”, என்று அவன் சலிப்புடன் குரல் கொடுக்க “நாங்க இப்ப தான் முதல் முறையா இந்த வண்டில ஏறுறோம். அதனால தான் தெரியலை”, என்று பாவமாக முணுமுணுத்தாள்.

அதில் உருகிப் போனவன் சிறு சிரிப்புடன் இறங்கி அவள் பக்கம் வந்து கதவை அடைத்தான். கதவை அடைக்கும் போது அவன் கை தன் மீது பட்டுவிடுமோ என்று பதறிப் போய் அவள் உள் பக்கம் ஒண்ட ரசனையாக அவளது வெட்கத்தைப் உணர்ந்தான். கூடவே அவனுக்கு அந்த வனத்தின் நடுவே பார்த்த தேவதையும் நினைவுக்கு வந்தாள். அவன் அவளையே பார்க்க அவளோ “கண்டு பிடிச்சிட்டானோ? ஒரு மார்கமா பாக்குறானே?”, என்று எண்ணினாள்.

வெகு அருகாமையில் அவனைக் கண்டதால் அவள் முகம் சிவந்து போனது. அவள் கண்கள் படபடவென அடிக்க பட்டாம்பூச்சி போல சிறகடிக்கும் அந்த கண்களில் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் அவளையே பார்த்த படி நின்றான்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த குச்சிக்கு தன்னுடைய அக்காவை கண்டு பிடித்து விடுவானோ என்ற பயம் வந்ததால் “சார், நாங்க வேணும்னா நடந்தே எங்க வீட்டுக்கு போகட்டுமா?”, என்று கேட்டான். அவன் அப்படிக் கேட்ட பிறகு தான் நடப்புக்கு வந்தான் மாதவன்.

தன்னுடைய செய்கையை எண்ணி தன்னுடைய தலையிலே தட்டிக் கொண்டவன் ஜீப்பில் ஏறி அதை இயக்கினான். “மாதவன்னு பேர் வச்சாலும் வச்சாங்க. எல்லா பொண்ணையும் ரசிச்சிட்டு அலையுற? எப்ப இருந்து டா நீ இப்படி மாறின? உன்னைப் போய் அம்மா சாமியார்ன்னு சொல்லுதே?”, என்று அவன் மனதே அவனைக் காரித் துப்பியது. அதை அடக்கி விட்டு ஜீப் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். அந்த மலைப்பாதையில் மெதுவாக அவர்கள் பயணம் ஆரம்பித்தது.

“அக்கா என்ன நடந்தாலும் கிட்ட வராதேன்னு உன் கிட்ட சொன்னேன் தானே? நீ ஏன் அங்க இருந்து வந்த?”, என்று அவள் காதில் முணுமுணுத்தான் குச்சி.

“அப்ப இது நடிப்பா டா? நான் உண்மையிலே கொஞ்சம் பதறிட்டேன் தெரியுமா?”, என்று அவனைப் போலவே அவளும் முணுமுணுத்தவள் அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.

“இவன் கிட்ட பேசினா தானே அந்த மாலையை எடுக்க முடியும்? அதான் அப்படி பண்ணினேன். நல்லதா போச்சு, நீ முகத்தை மறைச்சிக்கிட்ட. இல்லைன்னா அவ்வளவு தான்”

“அவன் இவன்னு எல்லாம் பேசக் கூடாது குச்சி”

“சரி அவர் இவர் போதுமா? இது இப்ப ரொம்ப முக்கியமா? மாலையை எப்படி எடுக்கன்னு யோசிக்கா”

“இவர் மாலையை எங்க வச்சிருக்கார்ன்னு எனக்கு எப்படி டா தெரியும்? அதான் அவர் கிட்டயே கேக்கலாம்னு சொன்னேன்”

“வேற வினையே வேண்டாம். இவங்க எல்லாம் அரசாங்க ஆளுங்க கா. எப்ப என்ன செய்வாங்கன்னு தெரியாது. மாலை கிடைக்கிற வரைக்கும் தான் இவங்க சவகாசம் எல்லாம். அதுக்கப்புறம் இவங்க யாரோ, நாம யாரோ”

“அப்படியா? அதன் பிறகு இவன் யாரோ நான் யாரோவா?”, என்று அவள் மனது எண்ணியது. குச்சி அவள் முகத்தையே பார்க்கவும் “இவரைப் பாக்க மத்தவங்க மாதிரி மோசமா தெரியலை குச்சி”, என்றாள். அப்படிச் சொன்ன அக்காவை வியப்பாக பார்த்தான்.

அவன் பார்வையைக் கண்டு தன்னை சமாளித்துக் கொண்டவள் “இல்லை டா மயங்கின உனக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்கல்ல? அதான் சொன்னேன்”, என்றாள்.

“ஆமா, ஆமா கொஞ்சம் நல்லவர் தான் போல? ஆனா முழுசா இவரைப் பத்தி தெரியாதே? சரி அதை விடு. அவர் எப்படியும் இருந்துட்டு போகட்டும். அடுத்து என்னன்னு பாப்போம். ஒரு வேளை இவர் வீட்ல அந்த மாலை இருந்தா என்னக்கா பண்ணுறது? நான் மட்டும்னா அப்படியே மயங்கின மாதிரியே அவர் வீட்டுக்கு போயிறலாம்னு நினைச்சேன். இப்ப நீயும் வந்து மாட்டிக்கிட்டியே”

“ஆமா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறார்? அடப்போடா. நான் மட்டும் வரலைன்னா இந்நேரம் உன்னை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய் கண்ட மருந்தையும் ஏத்திருப்பாங்க”

“நானே அதுக்கு பயந்து தான் கண்ணு முழிச்சேன். சரி விடு. இப்ப தான் இவர் கூட பழகிட்டோம்ல? எப்படியாவது நைசா பேசி மாலையை வாங்கிறலாம்”

“எனக்கு என்னமோ உண்மையைச் சொல்றது தான் சரின்னு தோணுது குச்சி. மூலிகை பறிக்க தான் அங்க போனேன்னு சொல்லிறேன் டா”

“அந்த மூலிகை பறிக்க போறதை தானே அரசாங்க சொத்தை நாம கொள்ளையடிக்கிறோம்னு சொல்லி நம்மளை அந்த காட்டுல இருந்து விரட்டி வேலி போட்டுக்கிட்டாங்க. நடுவுல ஆறு இருக்குறதுனால வேலியை கொஞ்சமா போட்டாங்க. இல்லைன்னா நம்ம கிராமத்தையும் கொள்ளையடிச்சிருப்பாங்க”

“என்ன அக்காவும் தம்பியும் குசுகுசுன்னு பேசிட்டு வறீங்க? எந்த சொத்தைக் கொள்ளை அடிக்கிறதைப் பத்தி பேசுறீங்க?”, என்று மாதவன் கேட்டதும் அக்காவும் தம்பியும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“அது வந்து சொத்து…. மாலை…”, என்று வனமங்கை உளற அவள் கையைப் பற்றி தடுத்த குச்சி “அது இல்லைங்க சார் நம்மளால சாருக்கு தான் கஷ்டம்ன்னு அக்கா சொல்லுது”, என்றான்.

“அப்படியா? எனக்கு ஒண்ணும் கஷ்டம் எல்லாம் இல்லை. இது சின்ன உதவி அவ்வளவு தான். அப்புறம் உங்க அக்கா ஏதோ மாலைன்னு சொன்ன மாதிரி இருந்தது”, என்று கேட்டான்.

“அது.. அது வந்து… உங்க உதவி செய்ற குணத்துக்கு மாலை மரியாதை செய்யணும்னு சொல்லுச்சு சார்”

“மாலை மரியாதை எல்லாம் வேண்டாம். ஆமா அது என்ன உங்க அக்கா முகத்தை மறைச்சிருக்காங்க. முகத்தை காட்ட மாட்டாங்களோ?”, என்று கேட்டான். அவன் குரலில் அவள் முகத்தை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் இழையோடியதோ?

“கல்யாணத்துக்கு முன்னாடி மத்த ஆள் முன்னாடி முகம் காட்ட மாட்டாங்க சார்”, என்று அவனுக்கு வாய்க்கு வந்ததை உளறினான் குச்சி.

அவனுடைய ஒவ்வொரு கேள்விக்கும் வனமங்கை உடல் பதட்டத்தில் வியர்க்க ஆரம்பிக்க தம்பியின் கை பிடியில் தான் தைரியமாக காட்டிக் கொண்டாள்.

மாதவன் கேள்வியை நிறுத்தாமல் வேறு எதுவோ கேட்க போகவும் “சார், நாங்க நடந்தே போகட்டுமா? ஜீப் ரொம்ப மெதுவா போகுது”, என்றான் குச்சி.

“அசிங்கப் படுத்தீட்டியா? எனக்கு இந்த காட்டு ரோட்ல ரொம்ப ஓட்டத் தெரியாது தம்பி. அதான் மெதுவா போறேன். நான் வழி மாறிப் போக கூட சான்ஸ் இருக்கு. அதனால நீங்க ரெண்டு பேரும் தனியா கதை பேசாம கொஞ்சம் ரோட்டையும் சரி பாத்துக்கோங்க”, என்று மாதவன் சொன்னதும் “வீட்டுக்கு பத்திரமா போயிருவோம் தானே சார்?”, என்று குச்சி பயத்துடன் கேட்டான்.

“ஹா ஹா, அவ்வளவு பயமா உனக்கு? ஆமா உன் பேர் என்ன?”, என்று மாதவன் கேட்டதும் “என் பேர் குச்சி சார்”, என்றான்.

“குச்சின்னு ஒரு பேரா?”

“குலசேகரன் சார். எங்க அக்கா செல்லமா என்னை அப்படிக் கூப்பிடும்”

“அது செல்லப் பேரா? கிண்டல் அடிக்கிற மாதிரி இருக்கு. உங்க அம்மா அப்பா உன்னை அவ அப்படி கூப்பிடுறதுக்கு உங்க அக்காவை திட்ட மாட்டாங்களா?”

“எங்களுக்கு அம்மா இல்லை சார். நான் பிறந்தப்பவே அம்மா செத்துருச்சு. எங்களுக்கு அப்பா மட்டும் தான்”, என்று சொல்லும் போதே குச்சியின் குரல் உள்ளே போக வனமங்கையின் கண்களும் கலங்கிற்று.

ஜீப்பை நிறுத்திய மாதவன் அவர்களை திரும்பிப் பார்த்தான். சிறு குழந்தைகளைப் போல கலங்கி இருந்த இருவரையும் அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் போல் இருந்தது மாதவனுக்கு. அந்த புது விதமான உணர்வில் அவனே ஒரு நொடி திகைத்து தான் போனான்.

“என்ன இது சின்ன பசங்க மாதிரி கண் கலங்கிட்டு? குச்சி, அதான் உனக்கு அம்மாவா உன் அக்கா இருக்காளே அப்புறம் என்ன?”, என்று கேட்டான்.

அக்காவைப் பற்றிச் சொன்னதும் மனக் கவலையில் இருந்து வெளியே வந்த குச்சி “ஆமா சார், இவ எனக்கு அம்மா தான்”, என்றான். அப்படிச் சொல்லும் போது பெருமையில் அவன் முகம் மலர்ந்து சிரித்தது. வனமங்கையும் தம்பியை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!