Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 3 3

அவர்கள் இயல்பானதும் ஜீப்பைக் கிளப்பியவன் “அக்கான்னா உனக்கு உயிரா குச்சி?”, என்று கேட்டான்.

“ஆமா சார், என் அக்கா தான் எனக்கு எல்லாமே. நான், எங்க அக்கா, என் அப்பா நாங்க மூணு பேரும் ஒரு கூட்டுல இருக்குற பறவை மாதிரி”



Advertisement

“ஒரு கூட்டுக் கிளிகளா நீங்க? சரி சரி உங்க அக்கா பேர் என்ன?”

Advertisement

“வனமங்கை சார். அழகா இருக்குல்ல. என் அக்கா மாதிரியே அவ பேரும் அழகு. இவ்வளவு பெரிய வனத்துக்கே அவ தான் ராணி”, என்று குச்சி சொல்ல வனமங்கைக்கு அவன் அதிகப் படியான பேச்சில் கூச்சம் வந்தது என்றால் மாதவனுக்கோ குச்சிக்கு இருக்கும் அக்காவின் மீதான பாசத்தைக் கண்டு வியப்பு வந்தது. அவன் கூட அவனுடைய அக்கா மீது இந்த அளவு பாசமாக இருக்கிறானா என்பது கேள்விக் குறி தான். அதனால் “இவ்வளவு அன்பான தம்பி கிடைக்க உன் அக்கா கொடுத்து வச்சிருக்கணும் குச்சி”, என்றான்.

Advertisement

“இல்லை சார் அக்கா கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்”

Advertisement

“சரி சரி ரெண்டு பேரும் கொடுத்து வச்சிருக்கீங்க போதுமா?”

“சரிங்க சார்”, என்று சிரித்த குச்சி மாதவன் ஜீப்பை வேறு பாதையில் விடவும் “சார், எங்க வீட்டுக்கு இந்த பக்கம் போகணும் சார்”, என்றான். வனமங்கையும் அவனை திகைப்பாக பார்க்க “தெரியும் தெரியும். தெரிஞ்சு தான் போறேன்”, என்றான் மாதவன்.

அக்கா தம்பி இருவரும் பயந்து போய் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். “என்ன அமைதியாகிட்டீங்க? பயப்படாதீங்க. இப்ப மதியம் சாப்பாட்டு நேரம். அதான் சாப்பிட வச்சு கூட்டிட்டு போகலாம்னு என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”, என்றான் மாதவன்.

அவன் அப்படிச் சொன்னதும் அக்கா தம்பி இருவரின் கண்கள் மின்னியது. வீட்டுக்குச் சென்றால் மாலையை எடுத்து விடலாம் என்று சந்தோஷப் பட்டார்கள்.

ஆனாலும் வெறும் பேச்சுக்காக “உங்களுக்கு எதுக்கு சார் கஷ்டம்? நாங்க எங்க குடுசைக்கு போய் சாப்பிட்டுக்குறோம்”, என்றாள் வனமங்கை.  .

“உங்க வீட்ல கண்டிப்பா திணை அரிசி, கம்பு, சோளம், கேப்பைன்னு சத்தான உணவு தான் இருக்கும். ஆனா ஒரு நாள் நாங்க சாப்பிடுற பட்டை தீட்டின சத்து இல்லாத சாப்பாடை சாப்பிட்டு தான் பாருங்களேன்”, என்றான்.

“சத்து இல்லைன்னு தெரிஞ்சு எதுக்கு சாப்பிடணுமாம்?”, என்று கேட்ட வனமங்கை தான் கொஞ்சம் அதிகம் பேசியது புரிய அமைதியாகி விட்டாள். தவறாக நினைத்து விடுவானோ என்று அவளுக்கு பயமாக இருந்தது.

“என்ன பண்ணுறது மேடம். எங்களுக்கு எல்லாம் வாய்க்கொழுப்பு கூடிருச்சு. சத்து இல்லைன்னு தெரிஞ்சும் அதை தான் சாப்பிடுறோம். அதான் சீக்கிரம் போய் சேந்துட்டு இருக்கோம்”

“உங்க வீட்ல யார் சார் சமைப்பா? உங்க அம்மாவா? உங்க அப்பாவா? ஏன்னா எங்க வீட்ல எங்க அப்பா தான் செய்யும். சில நேரம் தான் அக்கா செய்வா”, என்றான் குச்சி.

“அம்மா தான் செய்வாங்க குச்சி. உங்களுக்கு எப்படி அம்மா இல்லையோ, அது மாதிரி எனக்கு அப்பா இல்லை”, என்று சொன்னதும் இப்போது இவர்கள் மௌனமாகி விட்டார்கள்.

“ஏய் என்ன அமைதியாகிட்டீங்க? அதெல்லாம் இயற்கை.  இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு நாமளே இல்லாம போயிருவோம். அப்பா போனப்ப கஷ்டமா இருந்துச்சு. அவர் நினைவுகள் நம்ம கூடவே தான் இருக்குனு நினைச்சு மனசை தேத்திக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம்”, என்று சொல்லி ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தியவன் “நாம வர வேண்டிய இடத்துக்கு வந்துட்டோம்”, என்று சொல்லி இறங்கினான்.

வனமங்கையும் குச்சியும் கூட இறங்கினார்கள். “இப்ப நான் வெற்றியைக் கூப்பிட போகணும். அதனால ஜீப் வெளிய நிக்கட்டும். நீங்க உள்ள வாங்க”, என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றான்.

இதற்கு முன்பு தாங்கள் வந்தாலே தங்களை ஏதோ தீண்டத் தகாதவர் போல நினைத்து விரட்டி அடிக்கும் கேட்டில் இருந்த செக்யூரிட்டி இன்று அவர்களுக்கு கதவைத் திறந்து விடவும் இருவரும் அவனை மிதப்பாக பார்த்தார்கள். இந்த மரியாதை மாதவனால் தான் என்று எண்ணி மாதவன் மீது அக்கா தம்பி இருவருக்குமே ஒரு வித ஈர்ப்பு உருவானது.

“அன்னம்மா அன்னம்மா….”, என்று அழைத்த வெற்றி சமையல்கார அம்மா வெளியே வரவும் அவளைக் கண்டு புன்னகைத்தான்.

“வாங்க தம்பி, சந்தைக்கு போயிட்டு வந்துட்டீங்களா? சாப்பாடு கொண்டு வரவா?”

“இல்ல அன்னம்மா, வெற்றியை சந்தைல விட்டுட்டு வந்தேன். அப்புறம் நம்ம மாளிகைக்கு விருந்தாளிங்க வந்துருக்காங்க”, என்று சொல்லி இருவரையும் காண்பித்தான்.

அவர்களைக் கண்டு அன்னம்மா புன்னகைக்க அவர்களும் சிரித்தார்கள். “இவங்களுக்கும் சேத்து என் வீட்டுக்கு சாப்பாடு அனுப்புங்க அன்னம்மா. சாப்பாடு இருக்கு தானே? இல்லைன்னா பரவால்ல. எனக்கு வெற்றிக்கு எடுத்து வச்ச சாப்பாடைக் கொடுங்க. நாங்க வெளிய சாப்பிட்டுக்குறோம்”, என்றான் மாதவன்.

தன்னுடைய உணவை தங்களுக்காக பங்கிட்டுக் கொடுக்கும் மாதவனை விழியகல பார்த்தாள் வனமங்கை. அந்த நிமிடம் அவனை அவளுக்கு அதிகம் பிடித்தது.

“இந்த ரெண்டு பச்ச பிள்ளைகளுக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்லுவேனாயா? நம்ம பயலுக நைட்டுக்கும் சோறு கேக்குறாங்கன்னு நிறைய தான் வச்சேன். நைட்டுக்கு வேற செஞ்சிக்கலாம். நீங்க போங்க. நான் எடுத்துட்டு வரேன்”, என்று சொன்னதும் அவர்கள் புறம் திரும்பியவன் “என்ன என்னையே பாத்துட்டு இருக்கீங்க? வாங்க நம்ம வீட்டுக்கு போவோம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

அப்போது அவர்கள் எதிரே வந்தாள் வெண்ணிலா. அவளைப் பார்த்து மென்னகை புரிந்தான் மாதவன். “ஹாய் மாதவன்”, என்று சொல்லி சிரித்த வெண்ணிலா “உங்களைத் தான் அப்ப இருந்து தேடுறேன்”, என்றாள்.

“என்னையா தேடுனீங்க? எதுக்கு வெண்ணிலா?”

“எக்ஸாம்க்கு பிரிப்பேர் பண்ணுறதுக்கு அண்ணா ஓகே சொல்லிட்டான். இன்னைல இருந்தே ஸ்டார்ட் பண்ண போறேன். நாளைக்கு வெற்றி அண்ணா கூட வெளிய போய் புக் வாங்க போறேன். வந்தனாவும் என் கூட வரா. நாங்க பிரண்டா ஆகிட்டோம். தேங்க் யு”, என்றாள்.

“இதுக்கு எல்லாம் எதுக்கு தேங்க்ஸ்? அப்புறம் இவங்க என்னோட கெஸ்ட்”, என்று சொல்லி வனமங்கை மற்றும் குச்சியை காண்பித்தாள்.

“ஹாய்”, என்று சொல்லி சிரித்தாள் வெண்ணிலா. இவர்களும் சிரித்தார்கள். ஆனால் வனமங்கை முகம் மூடியிருந்ததால் அவள் சிரிப்பு யாருக்கும் தெரியாமல் போனது.

“சரி வெண்ணிலா அப்புறம் பாப்போம்”, என்று சொன்ன மாதவன் “நீங்க வாங்க”, என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு செல்ல “என்னையும் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ல?”, என்று எண்ணிய படி வேறு பக்கம் சென்றாள்

கதவை திறந்த மாதவன் “இது தான் என் அரண்மனை. ரெண்டு பேரும் உள்ள வாங்க”, என்று அழைத்தான்.

சிறு கூச்சத்தோடு உள்ளே சென்றார்கள். “உங்க அம்மா இங்க இல்லையா சார்?”, என்று கேட்டான் குச்சி.

“அது அக்காக்கு குழந்தை பிறக்க போகுது. அதனால அவளுக்கு துணைக்கு ஊர்ல இருக்காங்க. என்ன நின்னுட்டே இருக்கீங்க? உக்காருங்க”, என்று சொன்னதும் அவர்கள் அமர்ந்த படி அந்த அறையை வேவு பார்த்தார்கள்.

அப்போது அன்னம்மாள் வந்து உணவைக் கொடுத்து விட்டுச் செல்ல அவர்களை சாப்பிட அமர வைத்தவன் தட்டை எடுத்துக் வைத்து பரிமாறினான். அவன் செய்கை எல்லாம் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எனக்கு ஒரு சந்தேகம் குச்சி, உங்க அக்கா இப்படி முகத்தை மூடிட்டு எப்படி சாப்பிடுவா?”, என்று கேட்ட மாதவன் அவர்கள் இருவரும் திகைத்து விழிக்கவும் “சும்மா கிண்டல் பண்னினேன். சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருங்க. நான் வெற்றியை கூட்டிட்டு வந்துட்டு உங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அப்படியே எனக்கு காட்டையும் கொஞ்சம் சுத்திக் காட்டுங்க. நான் போன அப்புறம் உங்க அக்காவை நல்லா சாப்பிடச் சொல்லு குச்சி. இது எல்லாம் உங்களுக்கு தான். எல்லாத்தையும் ஃபினிஷ் பண்ணிருக்கணும்”, என்றான்.

“அப்படின்னா என்ன சார்?”

“நீங்க படிக்கலையா குச்சி?”

“எங்களுக்கு பள்ளிக் கூடமே இல்லை சார்”

அவர்களை வருத்தமாக பார்த்தவன் “சரி விடு, எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிருக்கணும். சரி நான் பத்து நிமிசத்துல வரேன் சரியா?”, என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

“அப்பாடி போயிட்டாங்க”, என்று சொன்ன வனமங்கை முக்காடை எடுத்து விட்டு அவசரமாக உண்ணப் போக “அக்கா, உனக்கு இப்ப சாப்பாடா முக்கியம்? முதல்ல மாலையை தேடு. யாரும் வரதுக்குள்ள நாம எடுக்கணும்”, என்று சொல்லி அந்த அறையை அலசினான்.

“அவங்க இல்லாதப்ப அவங்க வீட்டை சோதனை போடுறது தப்பு டா குச்சி”

“அக்கா உன் நியாய மனசை கொஞ்சம் மூட்டைக் கட்டிட்டு தேடு. நான் அதோ அந்த ரூம்ல பாக்குறேன்”, என்று சொல்லி உள்ளே சென்றான்.

அவளுக்கு அப்படி சோதனை போட மனதே இல்லாமல் விழித்த படி நின்றாள். அப்போது “அக்கா, இங்க பார் உன் தாவாணி”, என்று குரல் கொடுத்ததும் அங்கே ஓடினாள்.

மாதவன் போட்ட படியே கிடந்தது அந்த தாவணி. அக்கா தம்பி இருவரும் அதை அவசரமாக ஆராய அவள் போட்டிருந்த முடிப்பு அவிழ்ந்து இருந்தது.

“அக்கா அந்த சார் தான் மாலையை எடுத்து வச்சிருக்கணும். கண்டிப்பா தூர போட்டுருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எங்கேன்னு தேடு”, என்றதும் அவள் கண்கள் அந்த அறையை வலம் வந்தது.

அங்கிருந்த சின்ன டேபிளில் சில புத்தகங்கள் இருக்க அங்கே சென்றாள். அங்கே மாதவனின் புகைப்படம் இருக்க அதையே ஒரு நொடி பார்த்தவள் பின் குச்சியை திரும்பி பார்த்து விட்டு அதை எடுத்து தன்னுடைய இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

அப்போது “அக்கா யாரோ வராங்க வா”, என்று குச்சி சொன்னதும் இருவரும் வெளியே சென்று விட்டனர். அன்னம்மா தான் வந்தாள்.

அன்னம்மா உள்ளே வரும் போது இருவரும் சாப்பிட அமர்ந்து விட்டனர். “அப்பளம் கொடுக்க மறந்துட்டேன் கண்ணுகளா”, என்று சொன்ன அன்னம்மா அவர்கள் அருகே அமர்ந்து அவர்கள் எந்தக் ஊர் என்ன எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். வனமங்கை முக்காடை நீக்கியிருந்ததால் அவளுடைய அழகைக் கண்டு வியந்து போய் பேசிக் கொண்டிருந்தாள் அன்னம்மா. அப்போது தான் வனமங்கைக்கு முகத்தை மறைக்காததே நினைவுக்கு வந்தது. அவசரமாக உண்டு முடித்தவள் கையைக் கழுவி விட்டு முகத்தை மறைத்துக் கொண்டாள். நான்கு வாய் உண்ட பிறகு குச்சி உண்ணாமல் அமர்ந்திருந்தான். அதனால் அவன் தட்டை வாங்கி அவனுக்கு உணவை ஊட்டி விட ஆரம்பித்தாள். எப்போதும் அவள் ஊட்டிவிட்டால் கொஞ்சம் அதிகம் சாப்பிடுவான் என்பதால் வனமங்கை சந்தோஷமாகவே செய்வாள்.

வனதேவதை வருவாள்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!