Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 12

மாயாவி 12 ::

 

திக்கு தெரியாத காட்டில்… 

தனியாக நீ சிக்கி தவித்த போது!



Advertisement

உன்னை அந்த காட்டில்… 

இருந்து நான் காப்பாற்றாமல்… 

போனதை என் ஆயுள்… 

Advertisement

முழுசுக்கும் நினைத்து… 

Advertisement

என்னையே எனக்கு எதிராக… 

சாட வைக்கிறாயே!

என்னடி மாயாவி  நீ!

Advertisement

 

தனிப்பட்ட மனிதனின் கௌரவமானாலும் சரி ஒரு குடும்பத்தின் கௌரவமானாலும் சரி அது அவர்களின் உன்னத நடத்தையை பொறுத்தே தவிர பணம் மற்றும் ஆடம்பரத்தில் இல்லை என்பதை அறியாதவர்களா தன் பெற்றோர் அல்லது பட்டாலும் உணராதவர்களா என்று அவளால் இன்னமும் கண்டு அறியமுடியவில்லை… ஏனெனில் அந்த கௌரவத்திற்கு பலியானது என்னவோ அவள் வாழ்க்கை தான்…

 

“அப்பா ! நான் ஆர்க்கிடெக்ட் படிக்கலாம்னு இருக்கேன்ப்பா…. இங்க கிருஷ்ணகிரியிலயே பிஎஸ்எம் காலேஜில சேர்த்து விடுங்கப்பா…” என்று மகள் கேட்டதும்,

“ஏன்மா? நீ டாக்டருக்கு படியேன்.. அப்பா உன்னை படிக்க வைக்கிறேன்…” என்று தந்தை சொல்ல, “நாலு பேருக்கு முன்னாடி என் பொண்ணு டாக்டருக்கு படிக்கறான்னு பெருமையா சொல்லிக்கலாம்ல…” என்று தாய் பானுமதி சொன்னது அவளுக்கு அன்று பெரியதாக தெரியவில்லை.   

 

அவர்களின் விருப்பத்தை பெருமையாக நினைத்தவள், “அம்மா ! எனக்கு அது எல்லாம் ஒத்து வராது… ஊசி போட்டுக்கணும்னாலே எனக்கு பயம்… இதுல நான் மத்தவங்களுக்கு ஊசி போட்டு அவங்களை  கஷ்டப்படுத்தணுமா…” என்று கேலியாக வினவியவளைப் பார்த்து, 

 

“சரிம்மா! உன் விருப்பம் போல அதே படி அதுலயும் வேற பிரிவு படியேன்மா… இப்ப சாப்ட்வேர் ரீச்சல இருக்கு…” என்றவரிடம்,

 

“அப்பா ! எனக்கு இது தான் பிடிச்சிருக்கு… நம்மளே பார்த்து பார்த்து டிசைன் பண்ணி கட்டின கட்டிடத்தை பார்த்தா எவ்வளவு நல்லா இருக்கும்… நான் இதே படிக்கிறேன்ப்பா…” என்று ஆர்வத்தோடும் முடிவோடும் சொன்னவளை அவள் விருப்பத்திற்கே விட்டவர்கள் இதே போல அனைத்தையும் அவள் விருப்பத்திற்கே நடத்தி இருக்கலாமோ….

 

பள்ளி படிப்பை முடித்து பதினேழு வயதில் கல்லூரியில் அடியெடுத்து வைத்தவளின் வாழ்க்கை அந்த வயதிற்கே உரிய கொண்டாட்டத்தோடும் சந்தோஷத்தோடும் ஆரம்பித்தது. அப்போது அவளை பார்க்க மாறன் வந்திருக்க, எப்போதும் மனைவியோடு வருபவர் அன்று மகனோடு வந்திருந்தார்.

 

“மாறன் மாமா ! வாங்க வாங்க ! எப்படி இருக்கீங்க?” என்று மாமனை வரவேற்றவள், “வா ! எழில் !” என்று மாமன் மகனையும் அழைத்தவள்,

“மாமா ! நான் முதல் முதல்ல காலேஜ்க்கு போகும் போது உங்களை வர சொன்னேன்ல… ஏன் வரல?” என்று வராத கோபத்தை முகத்தில் தேக்கி உரிமையோடு கேட்டவளைப் பார்த்து சிரித்தவர்,

 

“ஹே கருத்தம்மா ! அன்னைக்கு மாமாவுக்கு ஒரு முக்கியமான வேலைடா அதான் பார்க்க வரல… அதான் இன்னைக்கு பார்க்க வந்திருக்கேன்ல… கோவிச்சிக்காதடா…” என்று புன்னகையோடு சொன்னவரை பார்த்து,

 

“சரி ! சரி ! ஏதோ கெஞ்சி கேட்கறீங்க அதான் மன்னிச்சு விடறேன்…” என்று பெரிய மனுஷியாக பேசியவளைப் பார்த்து பெரிதாக சிரிக்க, அவளும் அவரோடு இணைந்து கொண்டாள்.

 

அவர்களின் சிரிப்பை பார்த்த அமுதனுக்கோ தந்தையை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாமல், அவர் எனக்கு மட்டுமே யாருக்கும் தரமாட்டேன் என்ற மனநிலையில் அவர் அருகே நெருங்கி அமர்ந்தவன்,

 

“அப்பா ! போகலாம்ப்பா…” என்று அழைத்தான்.

 

“கருத்தம்மா ! அம்மா ! அப்பா! எங்க ?” என்று அவர் கேட்கவும் ரங்கனும் பானுமதியும் உள்ளே நுழைந்தனர்.

 

“வாங்க !” என்று ரங்கன் வரவேற்று மாறன் எதிரில் மகளோடு அமர, பானுமதி அருகே நின்றார்.

 

ரங்கனின் வசதி வாய்ப்பெல்லாம் கல்யாணம் குழந்தை என்று ஆன பிறகு தான்… அதற்கு முன்னே நடுத்தர குடும்ப வசதி தான்.. அப்போது அவரின் தந்தை செல்விக்கு பார்த்து மணமுடித்த மாப்பிள்ளை தான் மாறன்… ரங்கனின் வசதி ஏறயேற அவருக்கும் அவர் மனைவிக்கும் உறவுகளின் மதிப்பை விட பணத்தின் மதிப்பு ஏற ஆரம்பித்தது…  

 

தங்கையின் கணவர் என்ற அளவில் மாறனுக்கான மரியாதை எப்போதும் இருக்கும்… உறவுகளாய் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் பிணைப்பு கிடையாது… பெண் குழந்தை இல்லை என்பதால் மாறனிற்கு குழலி பிறந்ததிலிருந்தே அவள் மீது பாசம் அதிகம்… தோணும் போதெல்லாம் அவளை வந்து பார்த்துவிட்டு செல்வார்…  

 

இன்றும் அதே போல வந்திருக்க, அமுதன் மரியாதை நிமித்தமாக மாமனிடம் நலம் விசாரித்ததும், 

 

“ம்ம்ம் ! நல்லா இருக்கேன்… போன வருஷம் தானே காலேஜில சேர்ந்த? எப்படியோ உங்க அப்பா உனக்கு டொனேஷன் கட்டி பெரிய காலேஜில இடம் வாங்கி கொடுத்துட்டாரு… இல்லைன்னா உன் மார்க்குக்கு அதெல்லாம் நீ கனவுல கூட பார்த்திருக்க முடியாது… எப்படி படிக்கற? ஒழுங்கா படிக்கறியா? இல்ல அரியர் எதுவும் வைச்சிருக்கியா?” என்று கேட்ட ரங்கனின் குரலில் எள்ளல் இருந்ததை மாறனோடு அமுதனும் உணர்ந்தான்..

 

“நல்லா படிக்கிறேன் மாமா!” என்றவன் மனதினுள் ஒரு ஐஞ்சு அரியர் இருக்கு என்று சொல்லிக்கொண்டான்.   

“அமுதன் என்ன தான் பணம் கட்டி அந்த இடத்துல படிச்சாலும் நம்ம பொண்ணு அதை விட பெரிய இடத்தில மெரிட்லேயே இடம் வாங்கிட்டா இல்லைங்க…” என்று பானுமதி சொல்ல, குழலியோ

“நான் கூட கிட்டத்தட்ட உன் படிப்பே தான்ல… பேசாம நானும் உன் காலேஜில சேர்ந்திருக்கலாம்.. உன்னோட ஜூனியரா வந்திருப்பேன்… ஆனா கவுன்சிலிங்கில் எனக்கு இங்கயே கிடைச்சுடுச்சு…” என்றவளின் இயல்பான பேச்சை மாறனை தவிர யாருக்கும் ரசிக்கவில்லை… 

 

அவள் உரிமையாக அவனிடம் பேசுவது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றால், “அவங்க அப்பா என்னடான்னா என்னை மட்டம் தட்றாரு, இவள் நிறைய மார்க் வாங்கிட்டேன்னு சொல்றதோடு இல்லாமல், என்னை விட இரண்டு வருஷம் சின்னவ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என்னை வா போன்னு பேசறா… சரியான பெருமை பீத்தலுங்க…” என்று கடுகடுப்போடு அமர்ந்திருந்தான்.

 

யாரேனும் பக்குவமாக அக்கறையாக அறிவுரை சொன்னாலே அவனுக்கு இறங்காது, உண்மையே ஆனாலும் இப்படி குத்தல் பேச்சால்  தான் விமர்சிக்கபடுவதை அவன் விரும்பவில்லை… அன்றிலிருந்து அவர்களையும் அவளையும் கண்டாலே அவனுக்கு ஆகாமல் போனது…

 

மாறன் தான் இரு குடும்பங்களின் இணைப்பே… அதுவும் குழலியால் மட்டுமே… மச்சானின் இது போல குத்தல் பேச்செல்லாம் அவருக்கு ஏற்கனவே பழகி போன ஒன்று… மாமன் மகள் அத்தை பையன் என்று குழலியும் அமுதனும் இதுவரை பேசியது இல்லை ஏனெனில் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை… 

 

குழலி குடும்பம் கிருஷ்ணகிரியில் என்றால் அமுதனின் குடும்பம் காவேரிப்பட்டினம் என்ற கிராமத்தில்… இரு குடும்பத்திற்கும் இடைப்பட்ட உறவு என்பதை ஒரு எல்லையோடு நிறுத்தி தள்ளி நின்று பழகினர்… 

 

நெருங்கி இருந்திருந்தால் இப்போது இருக்கும் அளவிற்கு கூட அவர்களின் பிணைப்பு இருந்திருக்காது… இரு குடும்பங்களும் ஒன்றாக சந்தித்தது எப்போது என்று கேட்டால் விரல் விட்டு எண்ணலாம்… அதனால் பிள்ளைகளின் பிணைப்பும் குறைவு…

 

இப்படியே நாட்கள் நகர வெற்றிகரமாக குழலி தன் முதல் செமெஸ்டரை முடித்து விடுமுறையில் வீட்டில் இருக்க… அப்போது பானுமதி வழியில் நெருங்கிய உறவுக்காரர் வீட்டிற்கு வருகை தர அவரை வரவேற்று உள்ளே சென்ற குழலிக்கு தெரியாது தன் வாழ்க்கையை மாற்றி அமைக்க போற சூத்திரக்காரர் இவர் தான் என்று…

 

“வாங்க மாமா ! எப்படி இருக்கீங்க ? பார்த்து ரொம்ப நாளாச்சு… இப்ப தான் உங்களுக்கு எங்களை எல்லாம் ஞாபகம் வருதா…” என்று ரங்கன் அவரிடம் உரிமையாக கேட்டதும்,

 

“ஹா ஹா ! அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை… ஆமா பானு எங்க?” என்று கேட்டவரைப் பார்த்து,

 

“நம்ம காரும்மா உங்ககிட்ட பேசிட்டு இருக்கும் போதே உங்களுக்கு காபி போட உள்ள போயிட்டா….” என்று சிரித்துக் கொண்டே ரங்கன் சொல்ல, பானுவும் காபியோடு வந்தவர் அவர்களுடன் பேச்சில் இணைந்து கொண்டார். 

“அப்புறம் மாப்பிள்ளை நமக்கு நெருங்கின சொந்தம் ஒருத்தவங்க அவங்க பையனுக்கு வரன் பார்க்கிறாங்க… எங்கயோ வெளியே தேடறதுக்கு நம்ம காரும்மாவுக்கு பொருத்தமா இருக்கும்னு எனக்கு தோணுச்சு அதான் உங்ககிட்ட அதைபத்தி பேசலாம்னு வந்தேன்…” என்று அவர் சொன்னதும், பெற்றவர்கள் அதிர்ந்தனர்.

“மாமா ! அவ சின்ன பொண்ணு .. இப்ப தான் காலேஜ் சேர்ந்து படிச்சிட்டு இருக்கா…” என்று ரங்கன் அதே அதிர்வோடு சொல்ல,

 

“அட ! நீ ஏன்ப்பா இப்படி பதறுற? பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்.. முதல்ல பையன் விவரம் சொல்றேன் இரு.. அதுக்கு அப்புறம் உன் விருப்பம் சொல்லு…” என்றவர்,

 

“பையன் பேரு அரவிந்த்… இப்பலாம் ஏதோ இந்த கம்ப்யூட்டர் படிப்பு தான் மௌசாமே… அந்த படிப்பெல்லாம் படிச்சு வெளிநாட்டுல வேலையில இருக்கான்.. அதுவுமில்லாம அங்கேயே அவனுக்கு ரேஷன் கார்டு எல்லாம் கொடுத்து அந்த நாட்டோட ஆளாக்கிட்டாங்களாம்… ஒரே பையன்…”

 

“சொத்து பத்தெல்லாம் நம்ம விட அதிகம்… நம்ம பொண்ணு கட்டிக்கொடுத்தா வெளிநாட்டிலேயே படிக்க வைப்பான்… ஏன்னா கல்யாணத்துக்கு அப்புறம் அங்க தான்… நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்கும்… நீ கவலைப்பட இதுல ஒண்ணுமே இல்லை…”என்று அவர் சொல்ல சொல்ல, 

 

வெளியுலகம் அதிகம் தெரியாத பானுமதிக்கு வெளிநாடே பெரிய விஷயமாக போய் விட, எதையும் தொழில் மூளையில் யோசிக்கும்  ரங்கனுக்கோ சொத்து பத்து ஒரே பையன் அதுவும் கிரீன் கார்டு வைத்திருக்கிறவன் என்பது யோசிக்க வைத்தது.

 

“என்னப்பா? இவ்வளவு யோசிக்கிறீங்க? பையன் வேற யாரும் இல்லை நம்ம விஜயன் பையன் தான்.. தொழில் முறையில உனக்கு நல்லா தெரியுமே…” என்று அவர் சொன்னதும் ரங்கனுக்கு யோசனையின் அளவு குறைந்தது.

“தொழில் முறையில் பெரிய இடம் தான்… ஆனால் நம்ம அவங்களுக்கு ஈடாக மாட்டோமே மாமா !…” என்று ரங்கன் சொன்னதும்,

 

“அதெல்லாம் நீ கவலையே படவேணாம்… ஏற்கனவே அவங்க கிட்ட நம்ம குடும்பத்தை பத்தியும் நம்ம பொண்ணு பத்தியும் பேசிட்டு அவங்க விருப்பம் அறிஞ்சுட்டு தான் உங்கிட்ட பேச வந்து இருக்கேன்…” என்று அவர் சொன்னாலும் ரங்கன் முகம் இன்னும் தயக்கம் காட்ட,

 

“சரிப்பா! நீ குடும்பமா பேசிட்டு, ஜாதகம் வேணும்னாலும் பார்த்துட்டு உனக்கு எல்லாம் சரின்னு தோணுச்சுன்னா எனக்கு சொல்லிவிடு…” என்றவர் விடைபெற்றார்.

 

இவர்கள் என்ன ஏதென்று முடிவெடுக்க காலஅவகாசம் கொடுக்காமல் மறுநாள் பெண்பார்க்க வந்திருந்தவர்களை பார்த்து அதிர்ந்து தான் போயினர்.

 

இவர்களை விட அதிக சொத்து பத்து இருப்பவர்கள் இவர்களின் முடிவை அறியாமலே எந்தவித முன் அறிவிப்புமின்றி பெண்பார்க்க வந்ததன் காரணம் என்ன? எப்படி இவ்வளவு சீக்கிரம் அரவிந்தனுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்திருக்கும்?

 அதிக பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம்  ஆபத்தானவர்கள் என்றில்லை ஆனால் இந்த  திருமணத்தில் அவர்களிடம் இருக்கும் இந்த அவசரம் ஏன் ?  என்று இதையெல்லாம் இவர்கள் யோசிக்கவில்லையா அல்லது மாப்பிள்ளை வீட்டார் யோசிக்கவிடவில்லையா? 

 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இணங்க சில சமயம் அதீத நல்லது என்று நினைத்து விசாரிக்காமல் செய்யும் செயல்கள் கூட தீதாகி போகுமோ… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!