Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 2

மாயாவி –2 ::-

 

நீ எந்தன் கனவா!

நீ எந்தன் கற்பனையா!



Advertisement

அல்லது நீ எந்தன் நிழலா!

எதுவென்று நான் அறியுமுன்னே… 

நீ எந்தன் நிஜமாகிப் போனாயே!

Advertisement

என்னடி மாயாவி நீ !

Advertisement

 

“நீ சொல்றது உண்மையா காரு? உனக்கு கல்யாணமாகிடுச்சா? ஐயோ என்னாலே நம்ப முடியலையே…“ என்றபடி அவளை கைகொடுத்து எழுப்பியவன் முற்றிலும் வேறாக மாறியிருந்த தன் தோழியை பார்த்து மகிழ்ந்தான்.

 

Advertisement

“ஐய்! என் காருக்கு கல்யாணமாகிடுச்சு.. என் பூனைக்கு கல்யாணமாகிடுச்சு…” என்றபடி சிறு குழந்தையின் குதூகலத்தோடு அவள் கையை பிடித்துக் கொண்டு சுற்றினான்.

 

இந்த பத்து வருட கால நட்பில் எந்த துன்பமும் அவளை அணுகாமல் போர் வீரனாய் அவன் காவல் காத்தாலும், இருண்ட அவள் வாழ்க்கையை எண்ணி கலங்கி தவித்தவனுக்கு விடி வெள்ளியாக இல்லாமல் இன்று அந்த சந்திரனே அவள் வாழ்க்கைக்கே கிடைத்திருக்கிறது என்பது தெரிந்ததும் அவன் மகிழ்ச்சி எல்லை மீறியது… 

“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…என்று கத்திக் கொண்டே சுற்றியவனின் கையை பட்டென அவள் விட்டதும் எந்த பிடிப்பும் இல்லாமல் கீழே விழுந்தான்.

      

திடீரென கீழே விழுந்த அதிர்ச்சியில் சுற்றம் புரியாமல் குழம்பியவனின் தலை சுற்றலை நிறுத்தியதும் தான், தன் எதிரே கோபத்தோடு நின்றிருந்தவளை பார்த்து,

 

“ஹே பூனை ! எதுக்கு என்னை தள்ளி விட்ட?” என்றவனை பார்த்து, 

 

“எனக்கு கல்யாணம் ஆனதுல உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோசம்… நீயும் மத்தவங்க மாதிரியே கொஞ்சம் கூட என்னை பத்தி யோசிக்கல… நீயாவது என்னை புரிஞ்சிப்பேன்னு நினைச்சேன் ஆனால்…. ச்சே போடா…” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளைப் பார்த்தவாறு பொறுமையாக எழுந்து வந்து அவளுக்கே எதிரே இருந்த சேரில் அமர்ந்தான்.

 

“எதுக்கு இவ்வளவு கோபம்… பத்து நாளா நான் போன் பண்ணா கூட நீ எடுக்கல… என்கிட்ட கூட சொல்லாம நான் இல்லாம நீ கல்யாணம் பண்ணிக்கிட்டத்துக்கு நான் தான் உன்மேல கோபப்படணும்…” என்று மேலும் அவளின் கோபத்தில் எண்ணெய் ஊற்றியவனைப் பார்த்து வெகுவாக அவள் முறைக்க,  

 

“ஹே காரு கூல் ! சரி சொல்லு… என்ன நடந்தது? உன்னை கட்டாயப்படுத்தினாங்களா? இதுல உனக்கு விருப்பம் இல்லையா? முதல்ல உன்னோட மிஸ்டர் யாரு?” 

என்றவனின் குரலில் தோழியின் கல்யாணம் குறித்து மகிழ்விருந்தாலும் அவள் வாழ்க்கையின் பாதுகாப்பை குறித்த அக்கறையே அதிகம் இருப்பதை உணர்ந்து அவனை நன்றியாக பார்க்க,

 

“ஹே பூனை ! உன் திருட்டு முழிய அப்புறம் வைச்சுக்கோ முதல்ல பதிலை சொல்லு…” என்று அவளை சிறிது இயல்பாக்கியவனின் முயற்சி புரிந்து,

 

“ஒரு வாரத்துக்கு முன்னாடி மாறன் மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடலில் சேர்த்திருக்காங்கன்னு போன் வந்துச்சு… நான் பதறியடிச்சுட்டு அங்க போனா….” என்றபடியே அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.     

 

விஷயமறிந்து மருத்துவமனைக்கு சென்றால் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தனர். அதிலும் மாறனின் மனைவி செல்வி, கார்குழலியின் தாய் பானுமதியின் தோளில் சாய்ந்தவாறு அழுது கொண்டிருக்க, அதைப் பார்த்ததும் வேகமாக அவரிடம் சென்றவள், “அத்தை !” என்று அவரை அழைக்க,

 

அவள் குரல் கேட்டதும் வேகமாக எழுந்தவர் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென கதறினார்.

 

மாமாவுக்கு என்னாச்சு அத்தை? ஏன் இப்படி அழறீங்க?” என்று பதற்றத்தோடு அவள் கேட்டதும்,

 

“உங்க மாமாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் குழலி!” என்று அவர் அழுதுக் கொண்டே சொன்னதை அவள் கிரகிக்கவே விநாடியானது.   

தனக்கென இருந்த மிகப் பெரிய நம்பிக்கையான அவரின் இந்த நிலையைக் கேட்டு கலங்கியவளுக்கு திடீரென சுற்றம் ஏதோ பரபரப்பை உணர்த்த திரும்பியவள், அங்கு டாக்டர் வந்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளும் அருகே சென்றாள்.

 

“டாக்டர் என்னாச்சு? இப்ப எப்படி இருக்காரு?” என்று குழலியின் தந்தை ரங்கன் கேட்டதும்,

 

“இன்னும் ட்ரீட்மெண்ட் முழுசா முடியல? நீங்க அவருக்கு என்ன உறவு?…”

 

“என்னோட மச்சான் தான்… ஏன் என்னாச்சு டாக்டர்? எதுவானாலும் சொல்லுங்க…” என்று ரங்கனும் பதட்டமாக கேட்டார்.

 

“அவரோட குடும்பத்துல யாரும் இங்க இல்லைங்களா?” என்று மேலும் கேள்வி கேட்டு அவர்களின் பொறுமையை அவர் சோதித்தார்.

 

“எல்லோரும் இங்க தான் இருக்காங்க… இவங்க அவரோட மனைவி.. இவங்க அவரோட பசங்க….” என்று ரங்கன் காட்டியதும் டாக்டரோடு சேர்ந்து குழலியும் அப்போது தான் அங்கிருந்தவர்களை கவனித்தாள்.

 

அவரின் இத்தனை நேர கேள்விகளைக் கண்டு பதட்டமடைந்த செல்வி,

 

“டாக்டர்! அவருக்கு என்னாச்சு?…” என்று அவர் கேட்டதும்,

 

“அவருக்கு இது முதல் ஹார்ட் அட்டாக் தான் ஆனால் அதுவே கொஞ்சம் சிவியரா வந்து இருக்கு… இப்போதைக்கு ஆஞ்சியோ பண்ணியிருந்தாலும் அவருக்கு கண்டிப்பா ஆபரேஷன் பண்ணனும்… ஆபரேஷன் இப்பவே பண்ணலாம் இல்லைனா ஒரு ரெண்டுநாள் கழிச்சி பண்ணிக்கலாம்… அந்த அளவுக்கு தான் நமக்கு நேரமிருக்கு.. நீங்க என்ன சொல்றீங்க? நீங்க வெளிய வேற டாக்டர்கிட்ட வேணும்னாலும் ஒரு முறை கன்சல்ட் பண்ணிக்கோங்க…” என்று அவர்களின் எண்ணத்தை டாக்டர் கேட்டதும்,

 

இவள் முதலில் அங்கு நின்றிருந்த நெடியவனைப் பார்க்க, அவனோ பயம், பதட்டம், குழப்பம் என்று பல்வேறு மனநிலையில் இருப்பதை உணர்ந்தாலும், “இவங்க ஏன் இப்படி எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்காங்க?” என்றவளின் யோசனையை தடை செய்வது போல ரங்கன் டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

“தம்பி நீங்க என்ன சொல்றீங்க?” என்று அந்த நெடியவனைப் பார்த்து ரங்கன் கேட்க,

 

அவனோ, “எனக்கு எதுவும் தெரியாது மாமா! நீங்களே எதுவானாலும் விசாரிச்சுட்டு சொல்லுங்க…”என்றான். 

 

குழலி முன்னே வந்து, “அப்பா! நீங்க ரிபோர்ட்ஸ் எல்லாம் வாங்கி நம்ப ராம் அங்கிள்கிட்ட விசாரிங்க…”என்று அவள் சொன்னதும் ரங்கன் அவர் நண்பரிடம் போனில் விவரம் கேட்டார்.

 

அவரும் ஆபரேஷனை உறுதி செய்ய ரங்கன் டாக்டரிடம் வந்து  “நீங்க இப்பவே ஆபரேஷன் பண்ணிடுங்க டாக்டர்… “என்று அவர் சொன்னதை செல்வியும் ஆமோதிக்க, 

“நாளை காலையில் ஆபரேஷன்..” என்று டாக்டர் சொல்லி விட்டு நகர்ந்ததும், அந்த நெடியவன் ரங்கன் அருகே வந்தான்.

 

“மாமா! அப்பாவுக்கு ஒன்னுமில்லைல… ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுமே… என்ன பண்றதுன்னு தெரியலையே… அப்பாவுக்கு சரியாகிடும்ல மாமா…” என்று கேட்டவனின் அறியாமையை நினைத்து அழுவதா கோபப்படுவதா என்று மற்றவர்கள் குழம்பியிருக்க அந்த நேரம் வெளியே வந்த நர்சைப் பார்த்துவிட்டு அவரிடம் ஓடிய செல்வி,

 

“நர்சம்மா! நாங்க போய் அவரை ஒரு முறை பார்க்கலாமா?” என்று கேட்க,

“அவரு கண்ணு முழிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்.. இப்போதைக்கு பார்க்க முடியாது..” என்று அவர் சொல்லி விட்டு சென்றதும் குழலி பானுமதி அருகே வந்து,

 

“அம்மா! அத்தையை கூட்டிட்டு போய் எதுவும் சாப்பிட வைங்க…” என்று சொல்ல, செல்வி அதற்கு மறுத்ததும் “அத்தை! மாமாவுக்கு ஒன்னுமில்லை… ஆபரேஷன் பண்ணதும் சரியாகிடும். நீங்க போயிட்டு வாங்க…” என்றவள், 

 

“கண்ணா! அம்மாவை கூட்டிட்டு போ!…” என்று அந்த நெடியவனை தவிர்த்து அவரின் சின்ன மகனை உடன் அனுப்பி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். ரங்கன் வெளியே சென்றிருக்க அவளும் அவனும் மட்டும் அங்கு இருந்தனர்.

 

சிறிது நேரத்தில் வேறு ஒரு நர்ஸ் வந்து, “அவரு கண்ணு முழிச்சிட்டாரு… யாரையோ கூப்பிடறாரு போல… ஆனால் அவர் சொல்றது சரியா புரியல… நீங்க யாரவது ஒருத்தர் உள்ள போய் பாருங்க.. நான் டாக்டர் கிட்ட சொல்லிட்டு வரேன்…” என்று அந்த நர்ஸ் கிளம்ப… குழலி வேகமாக உள்ளே நுழைந்தாள்.

 

எப்போதும் நிமிர்வாக திடமாக பார்த்த மனிதரை இப்படி புயலில் சாய்ந்த மரம் போல பார்த்ததும் அவளுக்கு எப்படியோ இருந்தது. அவரருகே சென்று அவரின் கையை ஆதரவாக பிடித்தபடியே, “மாறன் மாமா!..” என்று அவள் அழைத்ததும் அவர் கண்கள் பளிச்சிட்டது.

 

“ஹே! கருத்தம்மா ! நீ எப்ப வந்த? நீயும் இங்க தான் இருக்கியா?..” என்று அந்த நிலையிலும் மூச்சு வாங்க பொறுமையாக இழுத்து இழுத்து பேசியவாறே அவளை விசாரிக்க,

 

“ஹான்! நீங்க இங்க வந்து படுத்துகிட்டு எல்லோரையும் பயமுறுத்தறீங்கன்னு போன் வந்துச்சு அதான் வந்தேன்…” என்று அவரை கடிந்தவளை கனிவாக பார்த்து, “நீ என்கிட்ட இப்படி பேசி வருஷமாகுது…” என்று நெகிழ்ச்சியோடு கண்கலங்க சொன்னார்.

 

அவர் சொன்ன வருஷங்களில் ஒரு நிமிடம் இறுகினாலும் உடனே சுதாரித்தவளைப் பார்த்து அவருக்குள் மின்னலென ஒரு எண்ணம்…

 

ஏற்கனவே சில வருடங்களாக அவருக்குள் ஓடிக் கொண்டிருந்த அந்த எண்ணம் எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று அவர் இப்போது யோசிக்கவில்லை ஆனால் எப்படியாவது அதை சாதித்து விட வேண்டும் என்ற யுக்தி அவருக்கு உடலளவில் சிறு தொய்வைக் கொடுக்க திடீரென மூச்சு வாங்கினார். 

அவரின் சீரற்ற உடல்நிலையை பார்த்து அவள் பதறியதும், “எனக்கு ஒன்னுமில்லைம்மா…. அவனை கூப்பிடு…” என்று மூச்சு வாங்க சொன்னவரை “யாரை கூப்பிட?” என்ற கேள்வியோடு அவரைப் பார்க்க,

 

“அமுதனை கூப்பிடுமா…” என்று அவர் சொன்னதும் தான் அவளுக்கு வெளியே நின்றிருந்தவனின் நினைப்பே வந்தது.

 

உடனே வெளியே வந்து அவனிடம், “மாமா! உங்களை கூப்பிடறாங்க… சீக்கிரம் வாங்க… ” என்றபடி அவன் வருகிறானா என்று கூட பார்க்காமல் உள்ளே சென்றாள்.

 

ஓரளவிற்கு பேச சிரமப்பட்டாலும் இருவரையும் அருகே அழைத்தார்.

 

“கருத்தம்மா! இந்த மாமா உங்கிட்ட ஒன்னு கேட்பேன்.. இது என்னோட கடைசி ஆசைன்னு நினைச்சு கேட்கிறேன் எனக்காக செய்வியா?” என்று அவர் பேசி முடிக்கவே நிமிடங்கள் ஆனது.

 

அவரின் பேச்சின் பாதியிலே இடையிட்டவள்,மாமா ! உங்களுக்கு ஒண்ணுமில்லை… நீங்க சீக்கிரம் குணமாகி வாங்க… அப்புறம் நீங்க சொல்றது எல்லாம் செய்யறேன்…” என்று அவரின் எண்ணப் போக்கை யூகிக்காமல் சொன்னாள்.     

 

“நீ சொல்றதை பொறுத்து தான் என் உடம்பு சரியாகுமா இல்லையான்னு தெரியும்…” என்று அந்த நேரத்திலும் அவளிடம் வழக்காடியவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு,

 

“சரி மாமா ! உங்க ஆசை எதுவானாலும் நான் செய்யறேன்…. நீங்க கவலைப்படாதீங்க…” என்று பின்னால் வரும் விளைவுகளை யோசிக்காமல் அவள் வாக்கு கொடுத்ததும் தன்னருகே நின்றிருந்தவர்களின் கையை தன் ஒருகையால் பிடித்தவாறு முகம் மலர, 

 

“நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும்மா…” என்று அவர் சொன்னதும் இதில் அதிகம் யார் அதிர்ந்தது என்று பிரித்தறிய முடியவில்லை… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!