Skip to content
Post Views: 3,934
அத்தியாயம் 13
ரசிக்கின்ற மனதுக்கு தெரியுமே
அதன் ஜீவன் நீயென்று!!!
Advertisement
மற்றொரு நாள் அலுவலகத்தில் மாடிப் படி ஏறிப் போய்க் கொண்டிருந்தாள் ஸ்ருதி. அவள் பின்னால் வந்து கொண்டிருக்கும் ராகவனை அவள் பார்க்க வில்லை. ஒரு திருப்பத்தில் அவனைக் கண்டவள் ஒழுங்காக நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழப் போனாள். அதை கண்டவன் “ஏய் பாத்து டி”, என்று பதறிய படியே அவளை தாங்கிக் கொண்டான். அவனுடைய கைகள் அவளுடைய இடையை வளைத்துப் பிடித்தது.
ஒருவர் மற்றவர் அணைப்பில் இருக்க இருவர் முகமும் வெகு அருகாமையில் இருந்தது. தனக்கு மிக அருகில் தெரிந்த ராகவனின் முகத்தை கண்களை அகல விரித்து பார்த்தாள் ஸ்ருதி. வெகு நாட்களுக்கு பிறகு கிடைத்த அருகாமை என்பதால் ரசித்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
அவளுடைய கண்களுக்குள் விழத் தோன்றும் உணர்வை அடக்க முடியாமல் “பாத்து வர மாட்டியா?”, என்று எரிந்து விழுந்தான். ஆனால் அவளோ அவனுடைய அருகாமை கிடைத்த சந்தோசத்தில் அவனை பருகு பருகென்று பார்த்து கொண்டிருந்தாள்.
“இவ நிறுத்த மாட்டா. வேற யாராவது பாத்தா ஆபத்து”, என்று எண்ணி அவளை விலக்கி நிறுத்தியவன் மேலே ஏறிச் சென்று விட்டான்.
Advertisement
மற்றொரு நாள் அலுவலக வேனை விட்டதால் பஸ்ஸுக்காக நின்றிருந்தாள். அவளை பார்த்த ராகவன் அவள் அருகே சென்று வண்டியை நிறுத்தினான்.
அவனைக் கண்டு அவள் திகைக்க “வண்டில ஏறு”, என்றான்.
அவனுடன் செல்ல மலையளவு ஆசை இருந்தாலும் “நான் பஸ்ல போய்க்குவேன்”, என்றாள்.
“மணி என்ன தெரியுமா? ஏறு”, என்று அவன் சொல்ல அவள் தயங்கினாள். .
“ஏறு டி”, என்று அவன் கோபமாக கத்திய பிறகு தான் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். அவள் கைகள் பிடிப்புக்காக அவனுடைய தோளைக் தொட முதல் முறை உணர்ந்தது போலவே ஒரு சிலிர்ப்பு நெஞ்சில் ஓடியது அவனுக்கு. தன்னுடைய உணர்வுகளை அவள் ஒருத்தியால் மட்டுமே உயிர்பிக்க முடியும் என்று புரிந்து கொண்டான்.
இந்த நிமிடம் இப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று அவன் மனம் ஏங்க அந்த ஏக்கத்தில் அவனுக்கே அவனை நினைத்து வியப்பு தான் வந்தது.
அவனே அப்படி என்றால் ஸ்ருதியைச் சொல்ல வேண்டுமா? இந்த பயணம் முடியவே கூடாது என்று அவள் நினைக்க அவள் வீடு இருக்கும் தெருவும் வந்தது.
“நிறுத்துங்க, நான் இங்கயே இறங்கிக்கிறேன்”, என்றாள்.
“ஏன்?”, என்று அவன் கேட்க “அம்மா ஏதாவது சொல்வாங்க”, என்றாள்.
“சரி”, என்று அவன் சொன்னதும் அவள் இறங்கிக் கொண்டு அவனையே பார்த்த படி நின்றாள்.
அவள் நிற்கவும் “என்ன போகலையா?”, என்று கேட்டான்.
“தேங்க்ஸ்”
“அதை நீயே வச்சிக்கோ. இப்ப வீட்டுக்கு போ”, என்றதும் திரும்பி நடந்தாள்.
அவன் வண்டியை கிளப்பும் போது “ஒரு நிமிஷம்”, என்றாள் ஸ்ருதி. என்னவென்று அவன் பார்க்க “பாத்து போங்க”, என்றாள்.
“ம்ம்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் தன்னுடைய கண்ணை விட்டு மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
இப்போதெல்லாம் ராகவன் அவளுக்கு புதிராக தான் தெரிந்தான். அவன் நடவடிக்கைகள் எல்லாம் அக்கறையுடன் கூடிய அன்புடன் வருவது போலவே அவளுக்கு தோன்றியது. ஆனால் அதை ஆசை கொண்ட மனதின் கற்பனை என்று எண்ணிக் கொண்டாள்.
போகும் போது அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டு சென்றான் ராகவன். இப்போதெல்லாம் அவன் கண்களுக்கு தனித்து தெரிந்தாள் ஸ்ருதி. அவள் வெகு அழகாக மாறி விட்டது போல அவனுக்குத் தோன்றியது.
அன்று இரவு வானத்தைப் பார்த்த படி அமர்ந்திருந்த ராகவனை வியப்பாக பார்த்தாள் தேன்மொழி. அவளுக்கு ராகவன் காதலித்தால் சந்தோஷம் தான். ஆனால் அது ஸ்ருதியாக இருக்க வேண்டுமே என்று இருந்தது.
“அண்ணா உனக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்ட தேன்மொழி அவனையே ஆராய்ச்சியாக பார்த்தாள். அவள் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திணறினான் ராகவன்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை போ. போய் வேலையைப் பாரு”, என்று சொல்லி விட்டுச் சென்றான். “சரியான லூசு”, என்று சொல்லி விட்டு தேன்மொழியும் சென்று விட்டாள்.
ராகவன் போலவே ஸ்ருதியும் அன்றைய உறக்கத்தை தொலைத்தாள் என்று தான் சொல்ல வேண்டும். சும்மாவே அவன் நினைவில் கிடப்பவளுக்கு இன்று அவனுடன் வண்டியில் அமர்ந்து வந்ததே பெரிய விஷயமாக தோன்றியது.
அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. காலையில் அவன் உணவு உண்ணும் போதே “ராகவா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா”, என்றாள் ராஜி.
தேன்மொழியும் உணவு அருந்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். அமர் மதனின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான். “சின்ன லொல்லை. இந்த வயசுல அப்பா மடில படுத்துருக்குறதைப் பாரு”, என்று தேன்மொழியும் ராகவனும் அமரைக் கிண்டல் செய்து கொண்டிருக்கும் போது தான் ராஜி அப்படிச் சொன்னது.
“என்ன மா? என்ன விஷயம்?”, என்று கேட்டான் ராகவன்.
“நானும் அப்பாவும் தேன்மொழிக்கு கல்யாணம் பண்ணலாம்னு பேசினோம்”, என்று சொன்னதும் தேன்மொழிக்கு புரை ஏறியது.
“பாத்து சாப்பிடு டி”, என்று ராஜி சொல்ல “பாத்து சாப்பிடணுமா? இப்ப நீ என்ன சொன்ன?”, என்று கேட்டாள்.
“சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்”
“மா”, என்று அவள் எரிச்சலுடன் கேட்க “உனக்கு கல்யாணம் பண்ணப் போறோம். அதை தான் உன் அண்ணன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்”, என்றாள் ராஜி.
“இப்ப எதுக்கு என் கல்யாணத்துக்கு அவசரப் படுறீங்க?”
“ஏன் டி, உனக்கு தான் வயசு இருபத்தி அஞ்சு ஆகிருச்சுள்ள? படிச்சு முடிச்சு வேலைக்கும் போய்ட்ட? இப்ப நீ ஒரு மகப்பேறு மருத்துவர். அப்புறம் என்ன? இனி எதுக்கு கல்யாணத்தை தள்ளிப் போடணும்?”
“மா”
“நீ எம்.பி.பி.எஸ் படுக்கும் போதே ஒரு மாப்பிள்ளை வந்துச்சு. படிச்சு முடிக்கணும்னு சொன்ன. அப்புறம் கல்யாணம் பத்தி பேசும் போது மேல்படிப்பு படிக்கணும்னு சொன்ன? அப்புறம் வேலை பாக்கணும்னு சொன்ன. எல்லாம் நடந்துருச்சுல்ல? அதனால இப்ப கொஞ்சம் நேரம் அமைதியா இரு டி”, என்று மகளை அரட்டி விட்டு மகனிடம் திரும்பி “நீ என்ன டா சொல்ற?”, என்று கேட்டாள்.
“நல்ல விஷயம் தான் மா. இதுல என் கிட்ட கேக்க என்ன இருக்கு? மாப்பிள்ளை ஏதாவது வந்துருக்கா? நான் விசாரிக்கணுமா? இல்லை நகை எடுக்க பணம் வேணுமா? வேணும்னா என் அக்கவுண்ட்ல எடுத்துக்கோங்க”, என்றான் ராகவன்.
“ஒரு நல்ல வரன் வந்துருக்கு டா ராகவா”
“அப்படியா? பையன் என்ன பண்ணுறான்? எங்க வேலை பாக்குறான்? என்ன படிச்சிருக்கான்?”
“யு.எஸ்ல டாக்டரா இருக்கார் டா. ஆனா அவர் குடும்பம் எல்லாம் நம்ம ஊர்ல தான் இருக்காங்க”
“நல்ல குடும்பமா மா? உங்களுக்கு தெரியுமா?”
“நல்லா தெரிஞ்சவங்க தான் டா. குடும்பம் நல்ல குடும்பம் தான். பையன் நல்லவனான்னு மட்டும் விசாரிக்கணும்”
“சரி மா, யு.எஸ்ல இருக்குற என் பிரண்ட்ஸ் கிட்ட விசாரிக்கச் சொல்றேன்”
“நீ ஒண்ணும் விசாரிக்க வேண்டாம்”, என்றாள் தேன்மொழி.
“உனக்கு என்ன பிரச்சனை தேனு? கல்யாண வயசு உனக்கு வந்தாச்சு. அது மட்டும் இல்லாம இந்த பையனும் உன்னோட புரபசன் தான். பாரீன்ல இருக்குறதுனால கண்டிப்பா அந்த பையன் பயங்கர அறிவாளியா தான் இருப்பான். உனக்கும் அங்கயே ஜாப் ஆபர் கிடைக்கும். நீ யு.எஸ்லே செட்டில் ஆகிறலாம். அப்புறம் ஏன் சம்மதம் சொல்ல யோசிக்கிற?”, என்று ராகவன் கேட்டதும் விதிர்த்து போனாள்.
“டேய், எனக்கு பாரின் போக பிடிக்கும் தான் டா. ஆனா நான் பாரின் போனா ஒருத்தி உன்னையே நினைச்சு உயிரையே விட்டுருவா. அவளுக்கு ஒரு வழி பண்ணாம நான் என்னைப் பத்தி யோசிக்க மாட்டேன்”, என்று எண்ணிய தேன்மொழி எதுவுமே பேச வில்லை.
“அண்ணன் கேக்குறான்ல டி? பதில் சொல்லு. இப்ப பாத்துருக்குறது மூணாவது வரன். முதல் ரெண்டு வரனையும் நீ தான் வேண்டாம்னு கெடுத்த”, என்று கேட்டாள் ராஜி.
“உன் மனசுல யாராவது இருக்காங்களா தேனு”, என்று கேட்டார் மதன்.
“ஆமானு சொல்லிரு தேனு. அப்படிச் சொன்னா கண்டிப்பா இவங்க வேற மாப்பிள்ளை பாக்க மாட்டாங்க”, என்று எண்ணிக் கொண்டு அவசரமாக “ஆமா”, என்றாள்.
அனைவரும் அதிர்ந்து விழிக்க அமர் கூட தந்தை மடியில் இருந்து அதிர்ச்சியில் எழுந்து கொண்டான்.
“என்ன டி இதெல்லாம்? இதுக்கா உன்னை படிக்க அனுப்பினோம்?”, என்று ராஜி கோபமாக கேட்க “அம்மா, விடுங்க. அவ வாழ்க்கை அவளுக்கு பிடிச்ச மாதிரி அமைய வேண்டாமா?”, என்று கேட்டான் ராகவன்.
ராஜி மதனைப் பார்க்க “ஆமா தேனு. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை தான் நாங்க ஏற்படுத்திக் கொடுப்போம். பையன் யாருன்னு சொல்லு”, என்றார் மதன்.
“ஐயோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?”, என்று எண்ணி அவளுக்கு படபடப்பாக வந்தது.
“யாருன்னு சொல்லு தேனு”, என்றான் ராகவன்.
“அது அது வந்து….”
“சொல்லு டி”, என்றாள் ராஜி.
“வந்து மா. அவர் பேர்”
“பேர் என்ன மா?”, என்றார் மதன்.
“வந்து பா”
“அக்கா சொல்லிரு. இல்லைன்னா எல்லாரும் மனசு மாறிறப் போறாங்க”, என்றான் அமர். ஆனால் அவனுக்கும் தேன்மொழி அப்படிச் சொன்னது குழப்பம் தான்.
எல்லாரும் வற்புறுத்த தேன்மொழிக்கோ இதயம் நெஞ்சுக் குழிக்குள் வந்தது போல ஒரு உணர்வு.,
“யாருன்னு சொல்லித் தொலையேன் டி. அதன் அப்பாவே சொல்லிட்டாங்கல்ல?”, என்று ராஜி கேட்க “அவங்க பேர் நவீன் மா. என் கூட தான் வேலை பாக்குறாங்க”, என்று அவசரமாக சொல்லி முடித்தாள்.
“நல்லதா போச்சு. அவரும் டாக்டர் தானே? எங்களுக்கு சம்மதம்”, என்றார் மதன்.
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகும் போது நானும் வரேன். அவர் கிட்ட பேசணும்”, என்று ராகவன் சொன்னதும் அதிர்ந்து போனாள்.
ஆனால் மறுப்பு சொன்னால் சந்தேகம் வரும் என்பதால் தலையாட்டி வைத்தாள். ஆனாலும் பயமாக தான் இருந்தது. அவளுக்கு தெரிந்த ஒரே ஆண் நண்பன் நவீன் தான். அதனால் அவன் பெயரைச் சொல்லி வைத்தாள். ஆனால் நவீனுடன் உடனேயே பேசுவதற்கு ராகவன் தயாராவான் என்று அவள் நினைக்கவே இல்லை. சொன்னது போல அவளுடனே ஹாஸ்பிட்டல் வந்தான் ராகவன்.
“அவரை கூட்டிட்டு வா தேனு. நான் இங்கயே வெயிட் பண்ணுறேன்”, என்று ராகவன் சொல்ல “சரி”, என்று சொன்னாள் தேன்மொழி.
“கடவுளே நான் இன்னைக்கு செத்தேன்”, என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவளைக் கண்டதும் “ஹாய் தேன்மொழி, குட் மார்னிங்”, என்றான் நவீன்.
“குட் மார்னிங் நவீன்”
“ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரி இல்லையா?”
“அதெல்லாம் இல்லை. எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா?”
“சொல்லு தேன்மொழி. நீ எனக்கு நல்ல ஃபிரண்ட். உனக்கு செய்ய மாட்டேனா?”
“அடேய், நான் சொன்ன அப்புறம் என்னை பிரண்டா நினைப்பியான்னு தான் தெரியலை டா”, என்று அவள் மனதுக்குள் பேசிக் கொண்டிருக்க “சொல்லு தேன்மொழி”, என்றான் நவீன்.
“வெளிய என்னோட அண்ணா நிக்குறான்…“, என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“யார் ராகவனா?”
“ம்ம்”
“உள்ள வரச் சொல்லிருக்க வேண்டியது தானே? சரி வா ஒரு ஹாய் சொல்லிட்டு வரலாம்”
“ஹிம்”
“சரி அவர் எதுக்கு வந்துருக்கார்?”
“அதை அப்புறம் சொல்றேன். இப்ப அவன் உங்க கிட்ட என்னை லவ் பண்ணுறீங்களான்னு கேப்பான். நீங்க ஆமான்னு சொல்லணும்”
“வாட்”
“பிளீஸ் நவீன். எனக்காக. நான் எல்லா விவரமும் அப்புறம் சொல்றேன்”
“என்னத்த டி சொததப்பி வச்சிருக்க? ஓ காட்”
“பிளீஸ் நவீன்”
“சரி வந்து தொலை”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
error: Content is protected !!