“கடவுளுக்கு யாரும் எச்சிலைப் படைக்க மாட்டாங்க”, என்று அவள் உணர்ச்சி வேகத்தில் அவளுடைய மன உணர்வை அப்படியே சொல்லி விட அந்த வார்த்தைகளில் அதிர்ந்து விட்டான் ராகவன்.
அவளுடைய மனதில் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவன் உணர்ந்த தருணம் அது தான். அவனுடைய மனதில் இருக்கும் காதலும் பக்தியும் அவனுக்கு புரிந்தது. அவளை ஒருநாளும் விட்டுக் கொடுக்க முடியாது என்று அந்த நிமிடம் முடிவு எடுத்தவன் அதை உறுதிப் படுத்த “ஏய் கொடு டி”, என்று சொல்லி கடுப்புடன் அவளுடைய ஐஸ் கிரிமை வாங்கி உண்ண ஆரம்பித்து விட்டான்.
அவள் திகைப்பும் பரிதவிப்புமாக அவனைப் பார்க்க ரசித்து ருசித்து அந்த ஐஸ்கிரிமை உண்டவன் “இதுக்கு முன்னாடி நான் உன் எச்சியை சாப்பிட்டதே இல்லையா?”, என்று நிறுத்தி நிதானமாக கேட்க படபடத்துப் போனாள்.
முத்தமிட்ட நொடிகளை நினைவு படுத்தியதும் அவள் முகம் செவ்வானமாக சிவந்தது. அவள் முகத்தையே ரசித்துப் பார்த்தவன் “இந்தா எனக்கு போதும். இதை சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு. இல்லை என்னோட எச்சில்னா தூர போட்டுரு”, என்று சொல்லி மீதமிருந்த ஐஸ்கிரிமை நீட்ட அவசரமாக அதை கை பற்றி இருந்தாள்.
சிறு சிரிப்புடன் எந்த தயக்கமும் இல்லாமல் அதை அவள் உண்ண ஆரம்பிக்க “இப்ப என்ன இதை கடவுளுக்கு படைச்ச பிரசாதம்னு சொல்லப் போறியா?”, என்று கேட்டான் ராகவன். அவனுடைய நக்கலைப் புரிந்து கொள்ளாமல் “அது தான் உண்மை”, என்று சொல்லி அவனை பெருமை படுத்தி இருந்தாள்.
அவள் ஐஸ்கிரிமை உண்டு விட்டு கை மற்றும் வாயைத் துடைக்க “எனக்கு துடைச்சு விட மாட்டியா?”, என்று கேட்டான் ராகவன்.
“கடவுளே இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று திகைத்து அவன் அவளை பார்க்க அவளுடைய கையில் இருந்த கர்ச்சிப்பை வாங்கி தன்னுடைய வாயைத் துடைத்தவன் மீண்டும் அந்த கர்ச்சிப்பை அவள் கையிலே கொடுத்தான்.
நடந்து கொண்டிருக்கும் நிகழ்வில் ஸ்ருதிக்கு தியேட்டரில் இருக்கிறோம் என்றும் சுற்றி அனைவரும் இருக்கிறார்கள் என்றும் நினைவிலே இல்லை.
“இந்த கர்ச்சிப்பை பத்திரமா வச்சுக்குவியா? இல்லை தூக்கி போட்டுருவியா?”, என்று கேட்டான் ராகவன்.
“பத்திரமா தான் வச்சிப்பேன்”
“வச்சிக்கோ, என்னோட நினைவா. இது மட்டும் தானே உன் கிட்ட இருக்கும்?”, என்று அவன் கேட்டதும் அவன் போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று புரியவே இல்லை.
“யார் சொன்னா? என் கிட்ட உங்க நினைவா டி ஷார்ட், கூலிங்க் கிளாஸ், உங்க நோட், போட்டோ அப்புறம்…;.”, என்று சொல்லிக் கொண்டே வந்தவள் பேச்சை நிறுத்தி விட்டு அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“இப்படி உளறி விட்டோமே? என்ன செய்வான்?”, என்று அவள் அவனைப் பார்க்க அவனோ அவள் இந்த அளவுக்கு செய்திருப்பாள் என்று தெரியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.
அவன் கோபப் படாததால் அவள் தர்மசங்கடமாக அவனைப் பார்த்தாள்.
அப்போது ராகவன் மற்றும் ஸ்ருதி இருவரும் இணைந்து பாடிய பாடல் படத்தில் வர அனைவருமே அவர்களின் குரலோடு படத்தின் காட்சிகளில் ஒன்றி இருந்தார்கள். அப்போது கூட ஸ்ருதி அதை கவனிக்க வில்லை.
“அங்க பாரு”, என்று சொல்லி அவளை திரை பக்கம் திருப்ப அப்போது தான் அவளது குரல் படத்தில் ஓடிக் கொண்டிருப்பதே அவளுக்கு உரைத்தது.
அவசரமாக அவனைத் திரும்பிப் பார்த்தவள் “இது…. இது…”, என்று திணறினாள்.
“ஆமா, நாம பாடின பாட்டு தான். இது உன் குரல் தான்”, என்று சொல்ல சந்தோசத்தில் ஏங்கி ஏங்கி அழுது விட்டாள்.
அவளுடைய உணர்வுகள் புரிந்தவன் அடுத்த நொடி அவளை இழுத்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான். அவனுடைய தோளில் சாய்ந்திருக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் அழுதாள்.
அவளுடைய சந்தோசத்துடன் கூடிய அழுகை கூட அவனுக்கு பிடித்திருந்தது.
“ஸ்ருதி யாராவது பாக்க போறாங்க”, என்று சொல்ல அவசரமாக அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள். அதில் அவன் மனதில் ஏமாற்றம் சூழ அவனாகவே அவளுடைய கையை பற்றிக் கொண்டான். அதற்கு பின்னர் இருவரின் கரங்களும் சேர்ந்தே இருந்தது.
பாடல் முடிந்ததும் “ராகவன் சார் பாட்டு சூப்பர். கண்டிப்பா அவார்ட் கிடைக்கும். பாருங்க”, என்று வாழ்த்தியவர்கள் மீண்டும் படத்தில் கவனமாக அவளோ மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன ஏதாவது சொல்லனுமா?”, என்று கேட்டான் ராகவன்.
“உங்க குரல் நல்லா இருக்கு”
“குரல் மட்டும் தானா?”, என்று அவன் கேட்க அவளோ வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
அப்போது அவனுடன் வந்தவர்கள் அவன் பக்கம் பார்த்து ஏதோ சொல்வது தெரிய “சரி படத்தைப் பாரு. உனக்கு சர்பிரைஸ் கொடுக்க தான் இங்க கூட்டிட்டு வந்தேன். இதை சொல்ல தான் உன் கிட்ட உக்காரணும்னு ஆசைப் பட்டேன்”, என்று சொல்லி அவன் படத்தில் கவனம் செலுத்தினான்.
“அப்படின்னா இந்த பாட்டை எனக்கு காட்ட தான் என் கூட இப்படி பேசினாங்களா? உண்மையிலே இவங்க மாறலையா?”, என்று எண்ணி சோர்ந்து போனாள் ஸ்ருதி.
படம் முடிந்து அனைவரும் ஹோட்டலுக்குச் செல்ல இப்போது ராகவன் அவள் அருகே அமராமல் ஆண்களுடன் அமர்ந்திருந்தான். அவள் அவனையே ஏக்கத்துடன் பார்க்க அவள் பார்வை புரிந்தாலும் மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டாம் என்று எண்ணி அவள் புறம் திரும்பவே இல்லை.
“ராகவன் சார் நீங்க மட்டும் எப்படி ஆல் இன் ஆளா இருக்கீங்க? கம்பெனி வொர்க்கும் செமையா பண்ணுறீங்க? கோடிங்க்ல என்ன டவுட் கேட்டாலும் சொல்லிக் கொடுக்குறீங்க? பாட்டும் சூப்பரா பாடுறீங்க? நீங்க மியூசிக் போடுற படமும் ஹிட் ஆகுது. எப்படி? அதுவும் இன்னைக்கு கேட்ட பாட்டு இருக்கே? சான்ஸே இல்லை”, என்று புகழ்ந்தான் ரகு.
அனைவரும் “ஆமா சார், நீங்க ஒரு ஜீனியஸ்”, என்று சொல்ல சிறு புன்னகையுடன் அவர்களின் பாராட்டைக் கேட்டவன் “நான் மட்டும் தான் நல்லா பாடினேனா? என் கூட பாடினவங்க நல்லா பாடலையா?”, என்று கேட்டான்.
ஸ்ருதி படபடப்புடன் சொல்லாதே என்னும் விதமாய் அவனைப் பார்க்க அவனோ அவள் புறம் திரும்பாமல் இருந்தான்.
“உங்க கூட பாடினவங்க குரலும் நல்லா இருந்துச்கு சார்? யார் சார் அந்த பாட்டு பாடினது? புது சிங்கரா?”
“எங்களுக்கு தெரியுமா? யார் சார்?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“வேற யார்? உங்க பக்கத்துல இருக்குறவங்க தான்”, என்று சொல்ல அனைவரும் ஸ்ருதியை திரும்பிப் பார்த்தார்கள். அவளோ சங்கடத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“ராகவன் நீ என்ன சொல்ற? ஸ்ருதியா உன் கூட பாடிருக்குறது?”, என்று பிரகாஷ் அதிர்ச்சியாக கேட்க ஆம் என்னும் விதமாய் தலையசைத்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் அனைவரின் பாராட்டு மழையில் நனைந்தாள் ஸ்ருதி.
உணவை முடித்து விட்டு அனைவரும் அலுவலகம் சென்றார்கள். அன்று வேலை அதிகம் இல்லாததால் மாலை வரை கதை பேசியே நேரத்தை தொலைத்தார்கள்.
அன்று மாலை வீட்டுக்குச் செல்லும் முன் அறைக் கதவை தட்டி விட்டு அவனுடைய அறைக்குள் சென்றாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்க்க அவளோ தயங்கிய படியே அவன் எதிரே வந்து நின்றாள்.
“என்ன ஸ்ருதி?”
“தேங்க்ஸ் சொல்லணும்”
“எதுக்கு?”
“நான் சும்மா தான் பாடினேன். ஆனா அது படத்துல எல்லாம் வரும்னு தெரியாது”
“உன் குரல் நல்லா இருக்கும். அதனால தான் உன்னை பாட அழைச்சிட்டு போனேன். இனி படத்துல பாட உனக்கு எந்த தயக்கமும் இல்லையே? இனி ஏதாவது வாய்ப்பு வந்தா நீ பாடுவ தானே?”
“வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்கு”
“உனக்கு என்ன தோணுதுன்னு சொல்லு”
“நீங்க மியூசிக் போட்டா பாடலாம். இல்லைன்னா நீங்க கூடவாது இருக்கணும். இல்லைன்னா நான் பாடலை. சரி சார். நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
வீட்டுக்கு சென்ற ஸ்ருதிக்கு தன்னுடைய பாடல் படத்தில் வந்ததை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது.
இப்போது சொன்னால் பாடப் போன போது ஏன் சொல்ல வில்லை என்ற பேச்சு வரும் என்பதால் அந்த விஷயத்தை அதோடு மறைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.
நாட்கள் எப்போதும் போல நகர அவர்கள் பாடிய பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகி இருந்தது. அந்த பாடல் மிகப் பெரிய விருதுக்கு செலக்ட் ஆகி இருந்தது. சேகர் மூலம் ராகவனுக்கு தான் முதலில் தகவல் வந்தது.
விருது வாங்க அவர்கள் டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதை ஸ்ருதியிடம் எப்படிச் சொல்ல? சொன்னால் வருவாளா? அவர்கள் வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பல கேள்விகள் அவனுக்குள் உதயமானது.
அந்த பரிசு வாங்குவது அவளுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. அது அவளுக்கு கிடைத்தே ஆக வேண்டும் என்று எண்ணியவன் ஆபீஸ் பைலில் இருந்து அவளது வீட்டு அட்ரசை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நவீன் வேலையைப் பற்றி விசாரித்த ராகவன் அவனுடைய வீட்டைப் பற்றி விசாரிக்க வில்லை என்பதால் அது நவீனின் வீடு என்பது அவனுக்கு தெரிய வில்லை.
அவர்களுடைய வீட்டுக்குச் சென்ற போது அவர்களை வரவேற்றது வேணியும் தேவேந்திரனும் தான்.
“தம்பி நீங்க சிங்கர் ராகவன் தானே?”, என்று சந்தோஷமாக கேட்டாள் வேணி.
“ஆமா ஆண்ட்டி”
“நீங்க என்ன இங்க? முதல்ல உள்ள வாங்க. உக்கருங்க. வேணி டீ போடு”, என்று சொன்ன தேவேந்திரன் அவனை அமரச் சொல்லி அவன் அருகே அமர்ந்தார்.
“இதோ போடுறேங்க”, என்று வேணி சொல்ல “அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி. நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வந்தேன்”, என்றான்.
இருவரும் குழப்பமாக அவனைப் பார்க்க “நான் இப்ப ஸ்ருதி கூட தான் வேலை பாக்குறேன்”, என்றான்.
“ஸ்ருதி கூடவா? எங்க மகளை தெரியுமா உங்களுக்கு? அவ ஒரு நாளும் உங்களைப் பத்தி வீட்ல சொல்லலையே?”, என்று கேட்டாள் வேணி.
“அவ மறந்துருப்பா வேணி”, என்று சொன்ன தேவேந்திரன் “சொல்லுங்க தம்பி. என்ன விஷயம்? ஸ்ருதி ஏதாவது தப்பு செஞ்சிட்டாளா?”, என்று கேட்டார்.
“அப்படி எல்லாம் இல்லை. அது வந்து….”, என்று அவன் தயங்கும் போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான் நவீன். அவனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகவன் எழுந்து நிற்க “ராகவன் நீங்களா?”, என்று கேட்டான் நவீன்.
“நீங்க எங்க இங்க?”, என்று ராகவன் கேட்க “இது என்னோட வீடு தான். இவங்க தான் எங்க அம்மா அப்பா”, என்று சொன்ன நவீன் மனதில் “ஒரு வேளை கல்யாண விஷயம் பேச வந்துருக்கானோ?”, என்று எண்ணி சிறு பதட்டம் வந்தது.
நவீன் இது வரை அவனுடைய வீட்டில் தேன்மொழி பற்றி மூச்சு கூட விட வில்லை. அப்படி இருக்க ராகவன் ஏதாவது பேசினால் என்ன செய்ய என்று அவனுக்கு பயமாக இருந்தது.
“அப்படின்னா ஸ்ருதி…?”, என்று ராகவன் குழப்பமாக கேட்க “என்னோட தங்கை தான்”, என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டான்.
“முதல்ல ரெண்டு பேரும் உக்காருங்க. அப்புறம் பேசலாம்”, என்று தேவேந்திரன் சொல்ல இருவரும் அமர்ந்தார்கள்.
“ஸ்ருதியை உங்களுக்கு எப்படித் தெரியும்?”, என்று கேட்டான் நவீன்.
“அவளை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். என் ஸ்கூல்ல தான் படிச்சா. என் தங்கையோட ஃபிரண்ட். இப்ப என்னோட ஆஃபிஸ்ல தான் வேலை பாக்குறா”, என்றான்.
“தேன்மொழியோட அண்ணனா நீங்க? உங்க வீட்டுக்கு கூட முன்னாடி ஸ்ருதி வந்தாளே?”, என்று வேணி கேட்க ஆம் என்று தலையசைத்தான்.